பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

31.3.09

கவிதையும் உருளைக்கிழங்கும் - ஸில்வியா ப்ளாத்

வரையறுக்கும் சொல்
வாயடைக்கும்.
கிழித்த கோடு,

பனி நன்மூடிய
முன்னோடி பலரை
வெளியேற்றும்
பின் கொலைஞனாய்ப் பரவும்

நிறுவனம் பலதில்
கற்பிதக்கோடு பல
பேயாய் அலைவதைத்தான்
செய்யும்.

திரண்ட உருளைக்கிழங்காய்
கல்லாய்
மனச்சாட்சியின்றி
சொல்லும் கோடும்

உழற்றும்
தாம் பெற்ற
விரற்கடை அளவிலும்.
இவை பெரிதோ

இல்லையெனினும்
பின் யோசித்தால்
சுவைமாறும்
பதவிசாகும்
இவையோ என்னை

தொடர்ந்து ஏமாற்றும்.
மேலுமாய் மற்றதாய்
இன்னும்
அதிருப்தி தரும்.

கவிதை ஆகாமல்
ஒவியம் ஆகாமல்
முடிச்சுடன்
பழுப்பாய்

உருளைக்கிழங்கு
கொத்தாய் அமரும்
தன்னிலும் உயர்ந்த
பக்கத்தில். அருகில்
முனை மழுங்கிய கல்லும்.

-- Sylvia Plath, Poems, Potatoes, 1958

படம் - ஸில்வியா ப்ளாத் சிகிச்சை பெற்ற லண்டன் புனித பங்குராசு மருத்துவமனை.

30.3.09

பதிவுகளும் நானும் - 8

நண்பர்களுக்கு

ஐந்துவார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

பணிநிமித்தம் டில்லி, புவனேஷ்வர், ஒரிஸ்ஸாவின் தென்பகுதிக்காடுகள், ஆந்திரம், மீண்டும் டில்லி என நீண்ட பயணம். பயணத்தின்போது வாசிக்கப் புத்தகங்கள் எப்போதும் இருக்கும். இருந்தபோதும் வாசிக்க முதலில் நேரமிருக்கவில்லை... இடையில் சில நாட்கள் விடுப்பில் சென்னையை அடைந்தபோது காய்ச்சல்-பருவம் தொடங்கியது! விட்டுவிட்டு அடித்ததால் மலேரியாவாக இருக்கலாம் என்று தந்தையார் கூறிவிட்டார்! ஐம்பதாண்டுகள் முன்பு நீலகிரியில் மருத்துவராகப் பணியாற்றியவர் அவர். ஆனால் பரிசோதனைகள் பல செய்தும் மலேரியாதானா எனத் தெரியாத நிலை. இப்படிக் காய்ச்சல் தீவிரமாக ஆக, அன்னையார் வீட்டில் வாங்கி வைத்திருந்த தி. ஜானகிராமனின் அன்பே ஆரமுதே, உயிர்த்தேன் நாவல்களை, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வாசிக்க முடிந்தது...

காய்ச்சலின்போதே சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் எஸ். சண்முகத்தின் கதைமொழி புத்தக விமர்சன அரங்கு நடந்து, அதில் எப்படியோ உரையாற்றவும் முடிந்தது ஆச்சர்யம்தான். ஆனால் துணைவியார் கைத்தாங்கலாக அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. பெரும் விளம்பரமின்றி நடந்த இந்த நிகழ்வில் பலரும் பங்கேற்றனர். உடன் உரையாற்றியவர்கள் - தமிழவன், எஸ். ராமகிருஷ்ணன், இந்திரன். நண்பர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். நிகழ்வின் முடிவில் எஸ். சண்முகம் ஏற்புரை ஆற்றினார்.

நண்பர்கள், எழுத்தாளர்கள் பலரை இந்த அரங்கில் சந்திக்க முடிந்தது. திலீப்குமார், அம்ஷன்குமார், வெளி ரங்கராஜன், அழகிய சிங்கர், சிவக்குமார், வளர்மதி, ராஜகோபால், அஜயன் பாலா, முரளி அரூபன், நேசன், ஸ்ரீகுமார், கடற்கரை, செந்தில்நாதன், அய்யப்ப மாதவன் எனப்பலரும் வந்திருந்தனர்.. அன்று சிலர் இந்த வலைப்பக்கத்தைச் சிலாகித்தும் விமர்சித்தும் பேசினர்.. ஆனால் அடுத்த நாட்களில் உடல்நிலை இன்னும் மோசமானதால், யாரையும் தொடர்ந்து சந்தித்துப் பேச முடியவில்லை... கடும் உடல்வலியால் மேலும் கட்டாய ஓய்வு. ஆக, இனம்தெரியாக் காய்ச்சலால் நிறைவேற முடியாது போனவை பல... கோவில்பட்டியிலிருந்து கவிஞர் அப்பாஸின் மரணச்செய்தியும் வந்தது... ஒருவழியாகக் காய்ச்சல் குறைந்த அடுத்த நாளே விடுப்பு முடிந்து மீண்டும் ஒரிஸ்ஸா பயணிக்க வேண்டி வந்துவிட்டது. ஒரிஸ்ஸாவில் இருந்தபோது, அங்கே சென்ற ஆண்டு மலேரியா மூளைக்காய்ச்சலுக்குப் பலியான இடதுசாரி ஆர்வலர் ராஜேந்திர சாரங்கியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன்... டில்லி வருவதற்கு இருநாட்கள் முன்பு அங்கே பணியாற்றும் அறிஞர்-ஆர்வலர் ஸ்மித்து கோத்தாரியின் மரணச்செய்தியும் வந்தது.

இப்படியாக ஐந்து வாரங்கள் கழிந்து நேற்று டில்லி வழியாக லண்டன் திரும்பிய போது வாசித்தவை, தமிழவனின் ஜி.கே. எழுதிய மர்ம நாவல் மற்றும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் ரேமான் கெனூ (Raymond Queneau) எழுதிய நாவல், Exercises du style... இவை பற்றி எழுத வேண்டும்.

காய்ச்சல் வரும்போது அது மலேரியாதானா என்று தெரியாத நாட்கள் முக்கியமானவை... பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை, கொல்கொத்தா, பெங்களூர், நீலகிரி மற்றும் செக்கந்திராபாத் நகர்களில் பணியாற்றிய பிரிட்டிஷ் மருத்துவர் ரொனால்ட் ராஸ், இந்த நிலையைக் கடந்தே மலேரியா பரவுவது கொசுக்கடியால்தான் என்ற முக்கியக் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இதையடுத்துப் புகழடைந்த மருத்துவர் ராஸ், மலேரியாப் பரவல் பற்றிய ஆய்வுகளைத் தொடரும்வகையில் உயர்கணித-மாதிரியொன்றை உருவாக்கியிருக்கிறார்... என்ன ஒரு வாழ்க்கை! ஆக, விஞ்ஞானி, இசைக்கலைஞர், கவிஞர், எழுத்தாளர், ஓவியர்.. எனப் பிரித்துக் காண இயலாதபடி இயங்கிய ராஸின் அறிவுப்புலம் பற்றி விரிவாக எழுத வேண்டும்!

சென்னை தண்டையார்பேட்டையில் இருப்பதுபோன்ற தொற்றுநோய்த் தடுப்பு மருத்துவமனை ஹைதராபாத்திலும் உண்டு. கொரன்டி (quarantine hospital) என மக்கள் அழைக்கும் அதற்கு ராஸ் பெயரை வைத்திருக்கிறார்கள். கொல்கொத்தா நகரின் பிரதான மருத்துவ மனைக்குச் செல்லும் சாலைக்கும் ராஸ் பெயர்தான். தமிழ்நாட்டில் எதற்காவது ராஸ் பெயர் இருக்கிறதா தெரியவில்லை...

இப்போதைக்கு மலேரியா பற்றி ராஸ் எழுதிய ஒரு கவிதை மாத்திரம்:

கோடிக்கொலைகள் செய்யும்
சாவே!
உன் தந்திர விதைகளைக்
காணத்தான்
இந்தக் கண்ணீருடன்..
இரைக்கும் மூச்சுடன்..

கடந்த ஒருமாதம் இந்த வலைப்பக்கத்தில் தமிழவனின் மூன்று கட்டுரைகளைத் தவிர ஏதும் வெளியாகவில்லை என்றபோதும் நிறையப்பேர் வாசித்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. இனி தொடர்ந்து பதிவுகள் வரும். வாசிக்கலாம்.

நாகார்ஜுனன்

இனி ஒரு கேள்வி: மேற்கண்ட பதிவில் வரவே வராத முக்கிய சொல் எது?

படம் - ரத்தக்குழாயில் மலேரியா

ரொனால்ட் ராஸ் பற்றி மேலும்
லண்டனில் இயங்கும் ரொனால்ட் ராஸ் ஆராய்ச்சி நிலையம்

29.3.09

சொற்கள் - ஸில்வியா ப்ளாத்

கோடரிகள்.
அவை வீழும்
மரத்தில் தொடங்கும்
வட்டங்கள்.
மையத்தினின்றும்
குதிரைகளாய்ப் பாயும்
எதிரொலிகள்.

கண்ணீராய்ப் பொங்கும்
மரச்சாறு.
பாறைதனில்
தன் கண்ணாடி
மீண்டும் நிறுவ
முயலும் நீராய்.

பசிய களையுமுண்ட
வெண்கபாலம்
வீழச் சுழலும்.
ஆண்டுபல கழிந்து
சாலையில் எதிர்கொண்டேன்
இவற்றை.

ஓட்டியற்று
வறண்ட சொற்கள்.
அயர்வறாக் குளம்படிகள்.
குளத்தடியினின்று
வாழ்வொன்றை ஆளும்
அசையா விண்மீன்கள்.

-- Sylvia Plath, Words, 1960.

ஸில்வியா ப்ளாத்தின் பிற கவிதைகள் தமிழில்

28.3.09

நஞ்சு - ஷார்ல் போதலேர்

திராட்சை ரஸம்.
தரித்திரச் சிறுகுரம்பை எனினும்
செழிப்பாய் விநோதமாய்
மறைக்கும்.
செக்கரிக்கும் வண்ணம் கொண்டு
படுகதிர் புகைவானைத் தீட்டும்.

கஞ்சா.
கடலாய் எல்லையற்று விரியும்.
காலம் ஆழமாகும்.
தருணம் மணியாய் நீளும்.
இன்பம் பல நிற்கும்
ஆன்மாக்கள் உழன்று
சோம்பலெனும்
கரும்பாதாளத்தில் அமிழும்.

அதனினும் சாலக்கொடிது
கண்ணில்,
உன் பசுங்கண்ணில் வடியும்
நஞ்செனும் ஊற்று.
என் ஆன்மா குலுக்கி
எண்ணற்று வரும்
என் கனாப்பல கவிழ்த்து
கசந்த குடாக்களில்
தன் தாகம் தீர்க்கும்.

அவற்றினும் சாலக்கொடிது
தேளெனக் கொட்டும்
தோல் பட்டெரியும்
உன் எச்சில்.
பித்தாகி,
தவறென வருந்தா
என் ஆன்மாவை
மறதியெனும் பிலத்தில்
பாய்ச்சி
மரணத்தின் கரை நோக்கிக்
கிறுகிறுக்கப் புரட்டும்
அந்த மாயம்.

Le Poison

L’opium agrandit ce qui n’a pas de bornes,
Allonge l’illimité,
Approfondit le temps, creuse la volupté,
Et de plaisirs noirs et mornes
Remplit l’âme au delà de sa capacité.
Tout cela ne vaut pas le poison qui découle
De tes yeux, de tes yeux verts,
Lacs où mon âme tremble et se voit à l’envers…
Mes songes viennent en foule
Pour se désaltérer à ces gouffres amers.
Tout cela ne vaut pas le terrible prodige
De ta salive qui mord,
Qui plonge dans l’oubli mon âme sans remord,
Et, charriant le vertige,
La roule défaillante aux rives de la mort!

- Charles Baudelaire, Les Fleurs du mal, 1857.

11.3.09

இன்றைய சிங்கள சமூகம் பற்றி சிவத்தம்பி - தமிழவன்

1965-இல் நடந்த இந்தி எதிர்ப்பில் கலந்துகொண்ட, ஊர்வலங்களில் கலந்துகொண்ட, தமிழர்களில் சிலர் தமிழைப்படிக்க விரும்பினார்கள். அப்படித் தமிழ்ச் சிறப்புப்பாடம் படிக்கப் போனவர்களில் நானும் ஒருவன். இளங்கலையில் அறிவியல் படித்துவிட்டு முதுகலையில் தமிழ் படிக்கப்போனேன். அப்போதிலிருந்தே தமிழை வேறு கோணத்தில் படிக்க விரும்பினேன். அப்படி வேறு கோணத்தில் படிக்க உந்துதல் கொடுத்தவர்கள் வெகு சிலர்.

நான் தமிழ் எம்.ஏ. படித்தபோது, ஆச்சரியத்துடன் படித்தது தொல்காப்பியமோ, சங்க இலக்கியமோ அல்ல. கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம். அதைப்படித்தபோதுதான் கைலாசபதியைப் போல தமிழைப் படிக்க வேண்டும் என்ற நினைப்பு வந்தது. தொடர்ந்து அவரைப்போல் புதிய முறையில் தமிழைப்பற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தேடியபோது சிவத்தம்பியின் பெயரைக் கண்டுபிடித்தேன். மு.வ.-வும் வ.சுப.-வும் உயிரோடு இருந்த காலம். எங்களுக்குப் பாடம் எடுத்தவர்கள், இந்த இரண்டு பெயரையும் மதித்தபோது நான் மதித்த பெயர்கள் வேறு. கைலாசபதியும் சிவத்தம்பியும்.

இப்படித்தான் தமிழைப் புதிதாய்ப் படிக்கும் ஆசை என்னிடம் துளிர்விட்டது.

அதன் பின்னர் தமிழைப் புதிதாய்ப் படித்த வேறு பலரை அறிந்தேன். ஆனால் எல்லோரையும் நான் கைலாசபதி மூலமும் சிவத்தம்பி மூலமுமே படித்தேன். இதற்கர்த்தம் இவர்கள் இருவரையும் பூஜித்தேன் என்பதோ இவர்களுக்கு அடிமை ஆனேன் என்பதோ அல்ல. இவர்களை மதித்த, பூஜித்த அதே நேரம் அவர்களை விமரிசித்தேன். நானாகவும் இதைச் செய்தேன்; பிறருக்காகவும், சூழ்நிலை கொடுத்த உந்துதலுக்காகவும் செய்தேன். கைலாசபதியைப்பற்றி அதிகமான விமரிசனங்கள் செய்தேன். பாசிட்டிவிசமும் பட்டுக்குஞ்சமும் என்று அவருடைய மார்க்சியம் பிரிட்டிஷ் மார்க்சியத்தின் மரபில் வந்தது என்று விமரிசித்தேன். விளக்குமாற்றுக்குப் பட்டுக்குஞ்சம் என்ற பழமொழியின் கடுமொழியைப் பயன்படுத்தினேன். இதற்கான சூழ்நிலை அழுத்தம் கோவை ஞானி, நாகராஜன் போன்றோரின் மாற்று மார்க்சியப் பார்வையிலிருந்து எனக்குக் கிடைத்தது. இளமையின் கல்லா உன்மத்தம் வேறு. இப்போது சுமார் முப்பது ஆண்டுகளுக்குப்பின் யோசித்துப் பார்க்கும்போது நடந்தது எல்லாம் தவிர்க்க இயலாதது என்றே படுகிறது.

நம் சூழலில் அறிவுச்செயல்துறையில் முன்மாதிரிகள் இல்லை. என்னைப்பொறுத்தவரையில் எனக்குக் கற்றுக்கொடுத்தவர், பயிற்சி கொடுத்தவர் என்று நான் அன்றும் என்றும் நினைப்பது நா.வானமாமலையைத்தான். அவர்மீது அன்று ஏற்பட்ட ஆச்சரியம் எனக்கு இன்றுவரை தீரவில்லை. அவரையும் தாண்டி வந்துவிடவேண்டிய காரணங்கள் இருந்தன. இது இன்னொரு சந்தர்ப்பத்தில்.

நான் கைலாசபதியின் ஒவ்வொரு நூலையும் எழுத்தெண்ணிப் படித்தேன். அவரது அடிமையானேன். அதன் பிரதிபலன்தான் அவரை விமரிசித்தது என்று கருதுகிறேன். ஆனால் நான் கைலாசபதியைச் சந்தித்தது இல்லை. மதுரை உலகத்தமிழ் மாநாட்டுக்கு வந்திருந்தார். நினைத்தால் சந்தித்திருக்கலாம்; ஒரு கோபம். சந்திக்கவில்லை.

இந்த மாதிரி எங்களுடைய உண்மையான அறிவுலகக் குருமார்களை எல்லாம் நாங்கள் விமரிசித்தே உள்வாங்கினோம். இது ஒருவகையான குருவழிபாடு.

கைலாசபதியைத் தொடர்ந்து சிவத்தம்பியை, அவருடைய சிந்தனைகளை, உள்பார்வைத் தொடர்ச்சிகளை, இன்றுவரை பின்பற்றுகிறேன். எப்படி இவருடைய ஒவ்வொரு வரியையும் படிக்க முடிந்தது? அவர் ஆங்கிலத்தில் எழுதினால் ஆங்கிலத்திலும், தமிழில் எழுதினால் தமிழிலும் அவர் எழுத்து ஒவ்வொன்றையும் கற்றுள்ளேன். அப்படித்தான் அவரை உள்வாங்கினேன். சமீப நாட்களில் நூல் வெளியீட்டுக்கு அழைக்கப்பட்டவர்கூட அந்த நூலைப் படிக்காமல் வருவதைக் கண்டுள்ளேன். எப்படி கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலை நூல்களை நாங்கள் எல்லாம் ஒரு வரி விடாமல் கற்றோம்? கற்கும் வெறி எப்படி ஏற்பட்டது?

இப்படித்தான் இவர்கள் பின்பற்றும் மார்க்சியத் தத்துவத்தைக் கற்றோம். இதன் ஒரு பகுதியாகவே இவர்களின் கருத்துகளைச் செரித்துக் கொண்டோம். அதனாலேயே அக்கருத்துகளைத்தாண்டிச் சென்றோம். இது இவர்களுக்கு அவமானம் அல்ல. பெருமை. இனி மார்க்சியக் கவர்ச்சி, அக்காலத்திலிருந்ததுபோல் தொடருமா எனத் தெரியவில்லை. சோவியத் யூனியன் மறைந்தபிறகு அத்தத்துவத்தின் மீதான பொதுக்கவர்ச்சி மறைந்துவிட்டது. எனவே எங்கள் தலைமுறையைப்போல் மீண்டும் ஒரு தலைமுறை கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலையை வெறியோடு படிக்குமா? படிக்காதென்றே தோன்றுகிறது.

சுமார் ஒரு ஆண்டுக்குமுன் நான் வேலைபார்த்த இடத்திற்கு மாணவர்கள் தூக்கிச் சுமந்தபடி சிவத்தம்பியை அழைத்துவந்தபோது என் ஆனந்தத்துக்கு அளவில்லை. உலகப்புகழ்பெற்ற பல சங்க இலக்கிய அறிஞர்கள் மத்தியில் தலைமை தாங்கி கருத்தரங்கின் ஓர் அமர்வை நடத்திக் கொடுத்தார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவரைச் சந்திக்க வந்தபோது நான் தமிழவனுக்காகத்தான் இப்படிப்பட்ட உடல்நிலையிலும் வந்தேன் என்றார்.

இப்போது சிவத்தம்பியை நான் நினைத்துக் கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. ஈழத்தில் தமிழர்கள் படும் அவஸ்தையைப்பற்றி நினைக்கும்போது சிவத்தம்பி நினைவும் அவ்வப்போது வரும்.

இன்றைய நிலையில் அகில உலகத் தமிழ் ஆய்வின் ஒரே தலைவர் அந்த மனிதர்தான். கமில் ஸ்வலபில சமீபத்தில் மறைந்தார். ஜார்ஜ் ஹார்ட் தொடர்ந்து எழுதுகிறார். சங்க இலக்கியம் பற்றி எழுதும் ரஷ்யாவின் துப்பியான்ஸ்கியின் எழுத்தையும் அவரையும் தெரியும். இவர்களின் எழுத்துகளின் முக்கியத்துவம் வேறுமுறை சார்ந்தது. கைலாசபதியின் வீரயுகப்பாடல்கள் பற்றிய நூலும் சிவத்தம்பி சமீபத்தில் சங்க இலக்கியக் கவிதையியல் பற்றி எழுதுவதும் வேறு வகையில் முக்கியத்துவம் பெற்றவையாகும்.

ஈழம்பற்றி இன்றுள்ள நிலைமையின் பின்னணியில் சிவத்தம்பி என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருந்தது. இலண்டனில் இருக்கும் பத்மநாப ஐயர் மூலமாக ஏ.ஜே. கனகரட்னா என்ற தமிழரின் நினைவு நூல் (ஆங்கிலத்தில்) எனக்கு வந்துள்ளது. அதில் ஏ.ஜே. அவர்கள் எழுதிய சில மதிப்புரைகளும் கட்டுரைகளும் இரண்டாம் பாகத்தில் உள்ளன. அதில் ஒரு நூல் மதிப்புரை, ஏ.ஜே. மற்றும் சிவத்தம்பி ஆகிய இருவரும் போர்ச்சூழல் பற்றி எத்தகைய கருத்துக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குகிறது.

இலங்கையில் தமிழனாக வாழ்தல் என்ற பேராசிரியர் சிவத்தம்பியின் நூலுக்கு ஏ.ஜே. கனகரட்னா மதிப்புரை எழுதியுள்ளார்கள். அந்த மதிப்புரையின் ஆங்கிலத்தலைப்பு: இலங்கைத்தன்மையும் தமிழ்த்தன்மையும் (Srilankanness and Tamilness) என்பதாகும். மூல நூலைப் படிக்கவேண்டும் என்னும் ஆசையை இந்த மதிப்புரை ஏற்படுத்துகிறது. ஓரிடத்தில் இப்படி வருகிறது இந்த மதிப்புரையில்:

‘பேரா.சிவத்தம்பியைப்போல நானும் கூட ஒரு இலங்கையனாகவும் அதே நேரத்தில் தமிழனாகவும் இருக்கவே விரும்புகிறேன். நான் ஒரு இரண்டாம்தர குடிமகனாக வாழ விரும்பவில்லை; பல தமிழர்களைப்போல.’

இத்தகைய எண்ணமுடைய ஏ.ஜே. அவர்கள், சிவத்தம்பியின் நூலின் முக்கியமான சில கருத்துகளை விளக்குகிறார்.

இலங்கையில் அமைதி திரும்பவேண்டும் என்று சிங்களவர்களும் தமிழர்களும் விரும்புகிறார்கள். ஆனால் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இந்த ‘அமைதி’ என்பது வேறுவேறு. சிங்களவர்கள் வடகிழக்கிலிருந்து பிணப்பெட்டிகள் வரவில்லை என்றால் அமைதி திரும்பியுள்ளது என்பார்கள். அவர்களின் நடமாட்டத்தை யாரும் தடுக்கவில்லை என்றால் அமைதி நிலவுகிறது என்பார்கள். விலைவாசிகள் குறைந்தால் அமைதியான காலத்தை அறிவார்கள். கொழும்புவில் குண்டுகள் வெடிக்காதது அமைதி என்று அர்த்தம்.

ஆனால் தமிழர்களுக்கு அமைதி என்றால் வேறு அர்த்தம். தமிழர்களாகிய நாங்கள் வீடுகளை இழந்துள்ளோம். அவற்றை மீண்டும் கட்டவேண்டும்; அல்லது புதிதாக்க வேண்டும். எங்கள் நிலம் சார்ந்த ஆவணங்கள் அழிந்துள்ளன. அல்லது காணாமல் போயுள்ளன. எங்கள் கல்விநிலையங்கள், கோயில்கள், சந்தைகள், பொதுக்கட்டடங்கள் நாசமாகியுள்ளன. தமிழர்கள் யாராவது மீண்டும் தங்கள் ஊருக்குப் போய்க் குடியிருக்கலாமென்றால் அங்கு எதை நம்பி வாழ்வார்கள்? கீரிமலைக்குப்போய்க் குளிக்கலாமென்றால் படைவீரர்கள் பாதுகாப்புக்கு வரவேண்டும். தமிழர்களாகிய எங்களைப் பொறுத்தவரையில் அமைதி என்பது இங்குக் குறிப்பிட்ட அழிவுகள் இனி நடக்காது என்ற உத்திரவாதமாகும். எங்கள் மக்களுக்குக் கல்வியிலிருந்து விவசாயம்வரை எல்லாம் முடிந்துவிட்டன. யார் இனி உத்தரவாதம் தரமுடியும்? அவை எங்களுக்குக் கிடைக்க வாய்ப்புண்டா? யார் உறுதி கூற முடியும்? இந்த உறுதியைத் தரமுடியாதபோது அமைதியான காலம் இனி எங்களுக்கு இல்லை என்றுதான் அர்த்தம்.

இவ்வளவும் பேரா.சிவத்தம்பி அவர்கள் இலங்கையருக்கும் தமிழர்களுக்கும் உள்ள வித்தியாசங்களாய்ப் பார்க்கிறார். இரு மக்கள் கூட்டமும் இரு பாதைகளில் எவ்வளவுதூரம் சென்றுவிட்டார்கள் என்பதை வேதனையோடும் ஒரு ஆய்வாளருக்குள்ள வரலாற்றறிவோடும் கூறுகிறார். ராஜபக்ஷ இந்த இரு வரலாறுகொண்ட மக்களை முள்கம்பியால் வளைத்துக்கட்டி ஆண்டுவிடமுடியும் என்று கருதுகிறார்.

இந்தியாவில் உள்ள நம்மில் பலர் புத்தனின் தத்துவத்துக்கு ஏதோ ஆகிவிட்டது என்று விசனப்படுகிறோம். பேரா.சிவத்தம்பி குறள் கருத்துக்கும் பௌத்த சிந்தனைக்கும் உள்ள வேறுபாடுகளை ஒப்பிடுகிறார். அவருடைய வேதனையின் ஆழம் தெரிகிறது. அவரது வாழ்க்கையில் வாழ்நாள் பூராவும் பரவியிருந்த தமிழிலக்கியத்தில் நிம்மதியைத்தேடுகிறார். அவர் கருத்துகள் இவை:

தமிழர், பௌத்த சமயச் சிந்தனைக்குள்ளேயே தங்கள் வேதனைக்கான காரணங்கள் உள்ளன என நினைக்கிறார்கள். பௌத்த சங்கம் முக்கியமான நிறுவனமாகும். சிங்கள பௌத்த சமூகத்தின் பாதுகாவலன் இந்தச் சங்கம். ஒரு பௌத்த பிக்கு பற்றி அறிய தமிழர்கள் திருக்குறளில் வரும் துறவறம் பற்றிப் படித்துப் பார்க்கவேண்டும். துறவி என்பவன் சமூகத்தின் எந்த அழுத்தமும் இல்லாமல் வெளியில் வாழ்பவன். துறவில் எவ்வளவு உறுதியாக இருக்கிறானோ அந்தளவு அவனுக்கு சமூக மதிப்பு கிடைக்கும். இந்து மதத்தின் சந்நியாசம் என்பது வேறு. பிக்கு, தனது சொற்பொழிவுகள் மூலம், போதனை மூலம், சமூகத்தை உருவாக்குகிறான். சமூகம் எப்படி மாறி உருவாகிறதென்று பின்பு அவன் மேற்பார்வையும் செய்ய வேண்டும். இத்தகைய பிக்கு, சமூகத்தில் முக்கியமாகிறான். இது அரசியலில் பௌத்தபிக்குவின் இருப்பிடத்தை உறுதிசெய்கிறது. இவ்வாறு ஒரு பிக்கு சமூகத்தின் கருத்துப் பரவலையும் பண்பாட்டையும் தீர்மானிக்கிறான். பிக்கு தான் அரச அதிகாரத்தை நிலைநிறுத்தியவனாகவும் இருந்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பௌத்தம் அரசியலில் புதிய தன்மையை உருவாக்கியது. எல்லா அறிஞர்களும் இன்று ஒத்துக் கொள்வதுபோல் பௌத்தம் இலங்கையில் இன்று ஒரு அரசியல் சக்தி. புதிய சிங்கள தேசியவாதத்துக்கும் அரசியலுக்கும் பிரிக்கமுடியாத உறவு உள்ளது.

இவ்வாறு பேராசிரியர் சிவத்தம்பி சிங்கள சமூகம் பற்றிய தன் விவரிப்பை வழங்குகிறார். இந்த விளக்கம்பற்றி ஏ.ஜே. கனரட்னா, இது ஒரு லட்சியபரமான விளக்கம் என்று கூறுகிறார்.

ஏ.ஜே.கனகரட்னா, தென்னிந்தியாவின் திராவிட அரசியல்பற்றிய சிவத்தம்பியின் கருத்துகளையும், கருணா பற்றிய கருத்துகளையும் சுட்டுகிறார். அந்நூலில் இரு கட்டுரைகள் இச்சிந்தனை சார்பாக உள்ளன என்கிறார். விரிவாக ஏதும் சொல்லாததால் நாம் ஏதும் கூறமுடியாது.

சிவத்தம்பியின் (2005-இல் வெளியான நூல்) இந்நூல் தமிழிலும் சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்படவேண்டும் என்கிறார் ஏ.ஜே. இவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் என்ன நினைப்பார் எனத் தெரியவில்லை.

சிவத்தம்பி வெறும் தமிழ்ப் பேராசிரியர் மட்டுமல்ல; மார்க்சிய ஈடுபாடுள்ள பலரைப்போல வரலாறு, சமூகவியல், மார்க்சியம், திரைப்படம், நாடகம், மானுடவியல், பொருளியல் என்று பல்துறை அறிவு வெளிச்சத்தில் சிந்திப்பவர்.

தற்சமயமுள்ள இலங்கையைப்பற்றி ஒரு தமிழராகச் சிந்திப்பதைவிட ஒரு அறிவுத்துறை செயல்பாட்டாளராகச் சிந்திக்கிறார். சிங்களவர்களும் இவரது பார்வையிலிருந்து பயன்பெறமுடியும். இந்தப் பன்மைத்துவத்தை இலங்கையின் ராஜபக்ஷ அரசு அழிப்பதைத்தான் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் சோசலிஸ்டு கட்சியைச் சார்ந்த ஜெயசூரியா போன்றோர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

லசந்தவும் ஜெயசூரியாவும் சிங்கள பௌத்த மரபிலிருந்து வருகிறார்களா அல்லது மேற்கத்திய ஜனநாயக மரபிலிருந்து வருகிறார்களா? கலாச்சாரத்துறையில் பணியாற்றும் நாம் இந்தக் கேள்விக்கு விடை காணவேண்டும். அது நம் கடமை.

9.3.09

தென்கிழக்காசியாவில் வன்முறையும் பின்-நவீனத்துவமும் - தமிழவன்

பின்-நவீனத்துவம் என்ற சொல் தமிழில் பலரால் பயன்படுத்தப்படுகிறது. சிலர் பின்-நவீனத்துவ விளக்கம் மார்க்சியத்திற்கு எதிரானது என்று கூறிப் பரிகசிப்பார்கள். இது ஓரளவுதான் சரி. லையோத்தார் என்ற ஃப்ரெஞ்ச் அறிவுஜீவி தனது புத்தகம் ஒன்றில் இப்படி ஒரு விளக்கம் கொடுக்கிறார். உண்மைதான். ஆனால் அமெரிக்காவில் வாழும் மார்க்சிய இலக்கிய ஆய்வாளரான பேராசிரியர் ஃப்ரெடெரிக் ஜேம்சன், பின்-நவீனத்துவத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்குவார்.

ஆக பின்-நவீனத்துவத்தை மார்க்சியம் ஏற்கவேண்டும் என்றும் சொல்லலாம்; எதிர்க்க வேண்டும் என்றும் சொல்லலாம். நீங்கள் கொடுக்கும் விளக்கத்தைப் பொறுத்தது அது.

லையோத்தாரின் விளக்கத்துக்கு வருகிறேன். அவர் ‘உன்னதக்கதை’ என்று ஒரு கருத்தாக்கத்தைக் கண்டு பிடித்தார். அதாவது ஏழை, பணக்காரன் வேறுபாடு போய்விடும் என்று சொன்னால் அது ஒரு உன்னதக் கதை. வரலாறு முன்னோக்கி வளர்கிறது என்று சொன்னால் அது ஒரு உன்னதக்கதை. நாளைய சமூகம் நல்லதாக இருக்கும் என்றால் அது ஒரு உன்னதக்கதை. மார்க்சியம் இந்தவிதமான நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் தொடர்புடையது. எனவே மார்க்சியத்தை ஒரு உன்னதக்கதை என்று அடையாளம் காட்டினார் லையோத்தார். வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாடும் இயங்கியல் பொருள்முதல்வாதக் கோட்பாடும் உன்னதக்கதைகள்.

அமெரிக்காவில் வாழும் பிரான்ஸிஸ் புக்கயாமா என்பவர் இக்கருத்தை ஆதரித்து வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது என்றார். இதன் தொடர்சிதான் உலகம் முன்னேறவில்லை என்ற கோட்பாடும்.

புத்தொளிக்காலம் என்ற என்லைட்டன்மெண்ட், முன்னேற்றத்தையும் அறிவுவாதத்தையும் நம்பியது. பின்-நவீனத்துவம் இதற்கு நேர்மாறானது.

சமீபத்தில் தென்கிழக்காசியாவில் நடந்துகொண்டிருக்கிற காரியங்கள் பின்-நவீனத்துவத்தின் எல்லாப் பண்புகளையும் கொண்டது.

கிளிநொச்சி வீழ்ந்த ஓரிரு நாளில் தாம்பரத்திலிருந்து ரகசியமான ’ஏர் சர்வைலன்ஸ்’ விமானம் ஒன்று புறப்பட்டது. மிக ரகசியமான விமானப்பயணம் அது. அதனை ஓட்டியவர்கள் இந்திய விமானப்படையைச் சார்ந்தவர்கள் அல்ல. அந்த விமானம் எந்த உயரத்திலிருந்தும் மேகத்தைத் தாண்டி பூமியை மிக அருகில் புகைப்படம் எடுக்கும் மிக அரிதான கருவிகள் பொருத்தப்பட்டது. இலங்கையின் எல்லையைப் பற்றிக் கவலைப்படாமல் இலங்கைக்குள் நுழைந்தது அந்த ரகசிய விமானம். ‘ரா’ அனுப்பிய விமானம் அது.

இந்த ரகசிய விமானம் பற்றி உலகறிய வைத்தவர் ஜே.வி.பி. கட்சியைச்சார்ந்த ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர். இலங்கை இறையாண்மையை மதிக்காமல் இந்திய உளவு விமானம் எப்படி இலங்கைக்குள் நுழைந்தது எனக் கேள்விகேட்டார். இந்தியா மீது பகை பாராட்டும், இந்தியாவின் விஸ்தரிப்பு நோக்கத்தை ஏற்காத இடதுசாரிக்கட்சி, ஜே.வி.பி. கட்சியாகும். சற்று நேரத்தில் அந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்குப் புரிந்து போனது, இலங்கை அரசாங்கத்துக்கு அந்த உளவு விமானம் போன விஷயம் தெரியும் என்பது. இங்கு சிலர் இந்திய இறையாண்மை, ஈழ இறையாண்மை மதிக்கிற விஷயத்தை நிறைய பேசுகிறார்கள்.

இன்னொரு விஷயமும் இங்கு முக்கியம் - 2005-ஆம் ஆண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் இந்தத் தென்கிழக்கு ஆசிய பிராந்தியப் பாதுகாப்புக்கான பல ஆவணங்களில் கையெழுத்திட்டன. மொத்தத்தில் இந்திய-அமெரிக்க நலன்கள் இப்போது, அணுசார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு - பின்னிப்பிணைந்துள்ளன.

வன்னியில் உள்ள மக்களை, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பலவந்தமாகக் கப்பலில் ஏற்றி இலங்கைப்படைகளால் முள் கம்பிவேலிகளிட்டுப் பாதுகாக்கப்படும் பாதுகாப்பு வளையங்களுக்குள் கொண்டு போவார்களாம். இந்தச் செய்தி வருவது எதிர்பார்க்கக்கூடியதுதான்.

டில்லிப் பத்திரிகையாளர் சத்யா சிவராமன் கூறுவது சரியானதென்றால், சிவசங்கர மேனன் இலங்கைக்குப்போனபோது பிரபாகரனைப் பிடிக்கக்கூடாது என்று கூறிவந்தாராம். ஏனெனில் தமிழக மக்கள் வரப்போகிற தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்களாம். இது இந்தியா, இலங்கை இறையாண்மையை மதிக்கும் லட்சணம் போலும்.

காந்தி பிறந்த நமது இந்தியா இதை மட்டுமா செய்கிறது? தயான்சந்த கார் என்ற இலங்கைப் பிரச்னை பற்றிய அறிஞர் கூறுவது இன்னும் பயங்கரமாகத் தெரிகிறது. கருணா எட்டப்பனாக மாற கோடிக்கணக்கான பணத்தை ‘ரா’ என்ற இந்திய உளவுத்துறை செலவு செய்ததாம். (பார்க்க: சத்யா சிவராமனின் Big Brother’s conundrum).

இப்போது இலங்கையின் ராஜபக்ஷவின் இருமுகங்களில் ஒன்று, புனித கங்கை ஓடும் நம் பூமி என்பதும், இன்னொன்று, கறுப்புத் தங்கரத்தினத்தால் ஆளப்படப்போகிற அமெரிக்க சுதந்திர பூமி என்பதும் விளங்குகிறது.

பின்-நவீனத்துவம் சோசலிசம், அல்லது கம்யூனிசம் போல ஒரு கூட்டம் சிந்தனைகள் அல்ல. யாரும் அதனைப் பயன்படுத்த முடியாது. சோசலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சில சிந்தனைகளை முன்வைத்து சமூகத்தில் அக்கருத்துள் பரவுவதன்மூலம் நன்மை விளையும் என்று நம்புகிறார்கள். பின்-நவீனத்துவம் சோசலிசம் போன்றதோ கம்யூனிசம் போன்றதோ அல்ல. இன்றைய சமூகப்போக்கு பற்றிய ஒரு அவதானிப்பு அது. உலகம் நடைபெறும்முறை பற்றிய விவரிப்பு அது. இனி உலகம் வளர்ச்சியை நோக்கிப் போகாது என்கிறது இந்த விவரிப்பு. வலிமை, ஆற்றல் போன்றவை இங்கே முக்கிய சிந்தனைகள் ஆகின்றன. எந்தக் கூட்டத்திடம் வலிமை இருக்கிறதோ அந்தக் கூட்டம் உண்மையுடையதாகிறது.

இன்று இலங்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் கொடூரமானவை. ஆனால் பின்-நவீனத்துவம், இதற்கு பரிகாரம் அழுகையல்ல, பிரலாபிப்பு அல்ல பிரார்த்தனை அல்ல என்று கூறுகிறது. ஆனால் அழுகையும் பிரலாபிப்பும் பிரார்த்தனையும் வலிமையையும் ஆற்றலையும் தரமுடியுமானால் மட்டும் அவை முக்கியமாகும். ஐரோப்பாவில் இருக்கும் ஈழத்தமிழர்கள் தங்கள் உறவினர்கள் செத்துக் கொண்டிருப்பதற்காக அழுதாலோ, வேதனைபட்டாலோ அது அவரவர்கள் மனநோயைப் பொறுத்தது. ஆனால் அவர்கள் ஐ.நா.சபையின் முன்பு கூடும்போது வலிமையாகிறது; ஆற்றலாகிறது.

எனவே ராட்சதர்களின் உலகில் வலிமையும் ஆற்றலும் பற்றிய முக்கியத்துவத்தைப் பற்றி பறைசாற்றுவதே பின்-நவீனத்துவம். அதனால்தான் நீட்ஷ முக்கியமான பின்நவீனத்துவ வாதியாகிறார்.

நான் இப்படிக்கூறும்போது பழைய தமிழ்முற்போக்கு நண்பர்கள் நீட்ஷ பாஸிஸ சடாமுனியாயிற்றே என்று பழைய பாடத்தை ஒப்பிக்க வருவார்கள். இதற்கு என் பதில்:

ஐயா, நீட்ஷவி்டம் வலதுசாரிகளுக்கும் கருத்துகள் உண்டு; இடதுசாரிகளுக்கும் கருத்துகள் உண்டு. அதனால்தான் உலக முற்போக்குவாதிகள் யாரும் நிராகரிக்காத ழான்-பௌல் சார்த்தர் நீட்ஷவிடமிருந்து கருத்துகளை எடுத்துக் கொள்கிறார். நீட்ஷவிடமிருந்து இடதுசாரிகள் கற்றுக்கொள்ளவேண்டிய கட்டம் இது. தென்கிழக்காசியாவில் ரத்தக்காட்டேரிகள் புகுந்துவிட்டார்கள். புத்தமதத்தைக் களங்கப்படுத்தும் ரத்தக்காட்டேரிகள் பற்றி பின்-நவீனத்துவத்தின் ஒரு பக்கத்துக்குள் மறைந்துள்ள ரத்தக்காட்டேரித்தத்துவம்தான் விளக்கம் தரும் என்று தோன்றுகிறது. தத்துவம் வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் ஒளி காட்டுவது இப்படித்தான்.

இவை அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் கூட்டமாகிய தமிழர்களோடு எப்படித் தொடர்பு கொண்டவை என்று கேட்கலாம்.

தமிழர்களின் விதியை நிர்ணயிக்கும் ஒரு கட்சியின் தலைவி, தன் கட்சியின் ஆட்டுமந்தைகளை, தான் விரும்புவதுபோல் நடத்தமுடியும் என்று கருதுகிறார். இவர் ஏன் புலிகள் பற்றி இப்படிக் கடுமையாக நடந்துகொள்கிறார்? புலிகளும் வன்னித் தமிழர்களும் ஒன்றாகியுள்ளனர் என்று ஐ.நா. வின் ஜான் ஹோம்ஸ் கூறுகிறபோது புலிகளைத் தனிமைப்படுத்திப் பேசும் தமிழகத்தலைவரின் உள்நோக்கம் புரிகிறது. ராஜபக்ஷ வெற்றி பெறவேண்டும். அவ்வளவுதான். ஏன் இந்தத் தமிழகக் கட்சியின் தலைவிக்குப் புலிகள் மீது வெறுப்பு?

பத்திரிகையாளர் சத்யா சிவராமன் ஒரு காரணம் சொல்கிறார். 1990-இல் புலிகள் இந்தக் கட்சித்தலைவியைத் தீர்த்துக் கட்ட முயன்றனராம். அதை அவர் மறக்கக்கூடியவர் அல்ல. இதுதான் இந்தப் பத்திரிகையாளரின் அவதானிப்பு. தனிப்பட்ட காரணங்கள் ஒரு மக்கள் கூட்டத்தின் காரணமாகிறது. வரலாற்றினுள் தனிப்பட்ட காரணங்களுக்கு இடமில்லை என்பார்கள். ஆனால் இங்குக் கதை வேறு.

பின்-நவீனத்துவம் கண்ணீர்விட்டபடி இரத்தக்களரியை எப்படிப் பார்க்கவேண்டும் என்று கூறும்போது சுப்பிரமணிய சுவாமியை வழக்கறிஞர்கள் முட்டை வீசி அவமானப்படுத்திய சம்பவம் செய்தியாய் வருகிறது. சுப்பிரமணிய சுவாமியின் வன்முறையைத் தூண்டும் பேச்சும் போலீஸ் மற்றும் வழக்கறிஞர்கள் மோதலும் செய்தியாய் வருகின்றன. அடுத்த நாள் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாநிலை இருக்கப்போவதாய் செய்தி வருகிறது. இவை எல்லாம் ஒரு சமூகத்தின் வன்முறைசார்ந்த முகங்கள்தான். சந்தேகமேயில்லை.

நேற்று ஒரு நண்பர் வந்தார். இவ்வளவு தூரம் எல்லா தரப்பினரும் சலனத்துக்கு ஆட்பட்ட தமிழகத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை என்றார். டில்லியில் இருக்கும் சில அரசியல்வாதிகளும் அவர்கள்மூலம் லாபம் பெறும் சில தமிழர்களும் இந்தச் சலனத்தைத் தேர்தலுக்குரிய ஓட்டுகளாய் மாற்றிப் பார்க்கிறார்கள்.

எனக்கென்னவோ இந்தச் சலனம் ஒரு பழமையான சமூகத்தின் தூக்கம் கலைந்த விழிப்பாகத் தெரிகிறது. இந்த மாதிரி கணங்கள் வரலாற்றில் எப்போதும் தென்படுவதில்லை. எனவே நாம் அபூர்வமான கணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தக் கணத்தை நுட்பமாக நாம் ஆராயவேண்டும் என்று எனக்குப்படுகிறது.

பின்-நவீனத்துவம் என்ற சுமார் 15 ஆண்டுகளே வயதான இந்தச் சொல் ஓரளவுக்காவது தெளிவைத் தரும். பின்நவீனத்துவம், இடப்பரப்பு உலகில் அழிந்துவருவதை ஒரு கோட்பாடாகக் கூறுகிறது. இன்டர்நெட் வேறென்ன? இன்னொரு கோணத்தில் இலங்கை, தமிழகம், ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா என்று இடப்பரப்பு அழிந்த ஓருலகத் தமிழுணர்வு எழுந்துள்ளது. ஒத்த தன்மையில் உயிர் அழிப்பு ஏற்பட்டுள்ளது. தன்னை எரிக்கும் எதிர்ப்பு, கட்சிகளைத் தூண்டி தமிழனின் அடியுணர்வைத் தீவிரமாய்த் தொட்டுள்ளது. புற எதிர்ப்பும் உள்-எதிர்ப்பும் இணையும் இடம் கவனிக்கத்தக்கது.

பின்-நவீனத்துவம் கிழக்கத்திய சமூகங்களில் தனிப்பண்பு கொண்டது. கிழக்கத்திய குணங்கள் இந்த வரலாற்றுக் கட்டத்தில் வெளிப்படாமல் போகாது.

இனியுள்ள படைப்பு எழுத்துகள் வேறுபட்டவையாக இருக்கும் என்று கருதுகிறேன். பின்-நவீனத்துவத்தின் அசுர முகத்தை மட்டும் அடையாளப்படுத்திவிட்டேன் என்ற ஆதங்கமும் எழுகிறது. பின்-நவீனத்துவத்தின் ஆரோக்கியமான வேறு குணங்கள்பற்றி என்னால் கூறமுடியும். அது வேறு ஒரு சந்தர்ப்பத்தில்.

8.3.09

யார் இந்த காஸ்மாபாலிட்டன் அறிவுஜீவி ரோகிகள்? - தமிழவன்

நோம் சாம்ஸ்கி என்ற அமெரிக்க நாட்டு மொழியியல் அறிஞர் உலகின் மனச்சாட்சி என்று அறியப்பட்டவர். நான் தொடர்ந்து இவர் நூல்களைப் படிப்பவன். மொழியியலையும் தத்துவத்தையும் இணைத்து எழுதி உலகப்புகழடைந்தவர் சாம்ஸ்கி.

அமெரிக்காவின் ஒற்றை வல்லரசுத்தன்மையை அந்த நாட்டால் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுக்கு விளக்கியவர். 'எனது அமெரிக்கா' எனப் புலம்பாதவர்.

சமீபத்தில் நண்பர் நாகார்ஜுனன், லங்கா கார்டியன் பத்திரிகையின் வாஷிங்டன் பிரதிநிதி, சாம்ஸ்கியிடம் கேட்ட கேள்விகளையும் அவற்றிற்கு சாம்ஸ்கி சொன்ன மறுமொழியையும் என் கவனத்துக்குக் கொண்டுவந்தார். சாம்ஸ்கி தமக்கு இலங்கை பிரச்னை பற்றி போதிய அறிவு இல்லை என்று கூறியுள்ளார். எனினும் லங்கா கார்டியன் பிரதிநிதி சாம்ஸ்கியை விடவில்லை. புலிகளை நியுரன்பர்க் விசாரணை போன்ற ஒன்றின் மூலம் தண்டனை கொடுப்பது பற்றி சாம்ஸ்கி என்ன நினைக்கிறார் என்று மடத்தனமாகக் கேட்கிறார். சாம்ஸ்கி மீண்டும் மீண்டும் வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களும் போர்க்குற்றவாளிகளும் கண்டிக்கத்தக்கவர்கள் என்கிறார். ஓரளவு இலங்கை அரசில் பல போர்க்குற்றவாளிகள் இருக்க முடியும் என்ற தொனி சாம்ஸ்கியின் பதிலில் உள்ளது. ஆனால் ராஜபக்ஷவின் ஆதரவில் ஐ.நா.-வில் வேலைபார்க்கும் லங்கா கார்டியன் ஆசிரியரைத் திருப்திப்படுத்த முனைந்து நிற்கிறார் லங்கா கார்டியன் பிரதிநிதி. இந்த மாதிரி லும்பன்களிடத்தில் சாம்ஸ்கி பேச ஒத்துக்கொண்டிருப்பதே அவரது பெயருக்குக் களங்கம்.

சாம்ஸ்கி பற்றித் தொடர்ந்து உலகின் பல பாகங்களிலும் அக்கறை காட்டுகிறார்கள். இந்தியாவில் சாம்ஸ்கியை அழைத்து அவரது சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்பவர் சென்னையைச் சார்ந்த, இந்து என். ராம். லங்கா கார்டியனும் இந்து பத்திரிகையும் கைகோர்த்து அகில உலக இடதுசாரி மனோபாவத்தை உற்பத்தி செய்ய முயல்கிறார்கள் போல. இந்தியாவின் சி.பி.எம். என்ற இடதுசாரி நிறுவனமும் இந்து ராமும் இலங்கையின் ஜே.வி.பி.-யும் லங்கா கார்டியன் போன்றனவும் ஓரணியில் வர முடியும், இந்த 'வேரில்லா' நிறுவனத்தன்மைகொண்ட இடதுசாரிகள் பற்றி தனியான ஒரு சொல்லாடலை உருவாக்கி இவர்களின் சுய ரூபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சி.பி.ஐ. கட்சியின் தமிழ்சார் நிலைப்பாட்டை இந்த ஆய்வில் முக்கிய உரைகல்லாக நாம் எடுக்க முடியும்.

முத்துக்குமார் மரணத்தருவாயில் எழுதிய கடிதத்தின் மேற்கோளான திருக்குறள் மீண்டும் இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது.

அறத்திற்கே அன்பு சார்பென்பர் அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

என்ற கருத்து மீண்டும் மீண்டும் புதுப்புது அர்த்தங்களைப் படைத்துக்கொண்டே போகமுடியும். அரசு என்பது மறம். அத்தகைய மறம் பல்வேறுமுறையில் வேறு மறத்தை உற்பத்தி செய்கிறது. புலிகளின் மறம், இலங்கை அரசின் ஒற்றைமுகமாக்கலை நோக்கிய கிரமமான வளர்ச்சிக்கான ஒரு தர்க்கரீதியான எதிர்வினை. அவ்வளவுதான். வன்முறைபற்றி சாம்ஸ்கி கூறும்போது அது தீர்வாகாது என்ற தொனியில் பேசுகிறார். ஐ.நா.-சபை போரை நிறுத்தச் சொன்னாலும் தான் கேட்கப் போவதில்லை என்று கூறும் அரசின் மறத்தை இன்னொரு மறம்தான் தடுக்கமுடியும்.

மெதுமெதுவாக உலகமெங்கும் அதிகாரம் என்ற மறம் கோலோச்சுகிறது. அங்கு மறம் புதிய வடிவத்தை மேற்கொள்கிறது. மறத்திலிருந்து பயங்கரவாதம் தோன்றுகிறது. அகில உலகத்தின் வெளிவிவகார நடவடிக்கைகள் எப்போதும் ஒழுக்கக்கோட்பாட்டைப் பின்பற்றாதவை. அமோரல் (amoral) தன்மை கொண்டவை. இதனுடன் சம்பந்தப்பட்டவைதான் பயங்கரவாதம். பயங்கரவாதத் தன்மை அரசுகளின் ஒழுக்கத்துக்கப்பாற்பட்ட நடவடிக்கையோடு சம்பந்தமுள்ள காரியம்தான்.

ஜோசப் கான்ராட் நாவல் ஒன்றில் வெளிநாட்டுத் தூதுவர் இன்னொரு நாட்டில் குண்டுவெடிப்பதற்குச் செய்யும் நடவடிக்கைகள் வரும். பிற நாடுகளை அழிப்பதற்கு உளவு பார்ப்பது, லஞ்சமாகப் பெண், பணம், பதவிகள், விருந்துகள் தருவதுதான் தூதுவர்களின் பணி.

பெண்கள், பிராமணர்கள், பசுக்களை யுத்தம் நடக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தும் நீதியின் காலம் மலை ஏறிவிட்டது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள படைகள்தான் மனித ஒழுக்கத்தைக் கேள்விகேட்கும் நிறுவனங்கள். நீதி, நியாயம், அன்பு, பாசம் எதுவும் செயல்படாத நிறுவனம் இது. இதனைப் புரிந்த சில தெய்வத்தன்மை கொண்ட மனிதர்கள் சேர்ந்து ஓருலகம் என்ற (one world) கோட்பாட்டைச் சிந்தித்தார்கள். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பெயர் இந்த இடத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது.

இப்போது என் மேசைமீது சாமஸ்கியின் அறிவு மற்றும் விடுதலை பற்றிய பிரச்னைகள் என்ற நூல் இருக்கிறது. இரண்டு கட்டுரைகள் இந்தச் சிறிய நூலில் உள்ளன. இரண்டும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கியால் சொற்பொழிவுகளாகக் கொடுக்கப்பட்ட கட்டுரைகள். லண்டன் டிரினிடி கல்லூரியில் 1971-ஆம் ஆண்டு பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் நினைவுச்சொற்பொழிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. சாம்ஸ்கியும் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் இரண்டு மகாமனிதர்கள். அரசுகளைத்தாண்டி மனித நியாயத்தை யோசித்தவர்கள். அரசுகளின் கையில் இருக்கும் அணுக்குண்டுகள், படைகள், சட்டதிட்டங்கள், ஆள்பலம் இவற்றை மீறிக் கருத்துககளால் செயல்படமுடியும் என்பதை நம்பியவர்கள். யுத்தங்களைவிட கருத்துகள் வலிமையானவை எனக் கூறியவர்கள். ஏனெனில் கருத்துகள் மொழியில் உருவாக்கப்படுபவை என்ற தத்துவச்சிந்தனையை இருவரும் ஏற்கிறார்கள்.

சாம்ஸ்கியின் சிந்தனையான இயல்புக் கொள்யை (Innate Principle) இன்று பலருக்குப் பரிச்சயமானது. மொழியானது அகில உலக மனிதர்களின் ‘உறைந்த இயல்பு’ என்பது போன்ற சிந்தனைஇது. மொழியும் மனிதச் சிந்தனையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. எல்லா மனிதர்களும், சாதி, இன, மத, மொழி வேறுபாடற்று உயர்ந்தவர்கள் என்ற சிந்தனையைக் கூறுகிறது இக்கோட்பாடு.

முதல் கட்டுரையில் இயல்புக் கோட்பாட்டோடு உலகின் முக்கியமான தத்துவவாதிகள் சிலரின் சிந்தனைகளை ஒப்பிடுகிறார். கூட்மன், லாக், லெப்னிஸ், கான்ட், ஹ்யும், ரஸ்ஸல் போன்றோரின் சிந்தனைகளை சாம்ஸ்கி தன் சிந்தனைக்கருகில் கொண்டு வந்து ஒப்பிடுகிறார்.

விஞ்ஞானத்தின் அடிப்படை உண்மைகள் பரஸ்பர அனுபவத்திற்கு உட்பட்டவை. இன்னொருவருக்கு எடுத்துக்காட்டி விளக்கலாம். அந்த எடுத்துக்காட்டி விளக்கும் பண்பையும் எடுத்துக்காட்டி விளக்கமுடியாத தன்மையையும் ஒப்பிடுகிறார் ரஸ்ஸல். அப்படிப்பட்ட எடுத்துக்காட்டி விளக்கமுடியாத பண்போடு, மொழியியல் மூலம் தான் கண்டுபிடித்த இயல்புக் கோட்பாட்டை ஒப்பிடுகிறார் சாம்ஸ்கி.

எனக்கு இந்த இடத்தில் ழான்-பவுல் சார்த்தரின் சிந்தனை ஞாபகத்துக்கு வந்தது. அவர் முன்-அறிவுத்தளம் (Pre-Cognitive) ஒன்றைப்பற்றிக் கூறுகிறார்.

இந்தச்சிந்தனைகள், அமைப்பியலில் நிராகரிக்கப்படுகின்றன என்பது வேறு விஷயம். மொத்தத்தில் தீவிரமான அரசியல், செயல்பாடு, தத்துவம் எல்லாம் மனித வாழ்வு தீவிரமாகும்போது ஒன்றிணைகின்றன. நோம் சாம்ஸ்கி இத்தகைய ஒன்றிணைவின் அரிதான உதாரணம். அவர் ஒரு அறிவுஜீவி என்பது மட்டுமல்ல அவரை நாம் புகழ்வதற்கான காரணம்.

இத்தகைய நோக்கில்தான் அவரைப் புரிந்து கொள்ளவேண்டும். இத்தகைய நோக்கில் புரிந்துகொள்ளாத இந்து இதழின் வெளியீடான ஃப்ரன்ட்லைனின் வலைத்தளம் சாம்ஸ்கியை சொந்தம் கொண்டாடுவது அபத்தம். இந்து, சாம்ஸ்கியுடன் தன்னை இணைப்பது கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தனது வாலை ஆட்டுவது போன்றது. லங்கா கார்டியனும் இந்து வரிசையில் இணைவது அபத்தத்தின் உச்சம் என்பதுதான் எனது கணிப்பு.

இன்னொரு கோணத்திலும் யோசிக்கவேண்டியுள்ளது. சாம்ஸ்கியை லங்கா கார்டியனும் (1983இல் இப்பத்திரிகை நடுநிலையாக இருந்தபோது பல நல்ல கட்டுரைகளை வெளியிட்டது) இந்து குழுமமும் ஏன் தங்கள் சொத்தாக மாற்றப் பார்க்கின்றன? தங்களுக்கு காஸ்மாபாலிட்டன் புத்திஜீவி என்ற பெயர் வேண்டியிருக்கிறது. காஸ்மாபாலிட்டனிசத்தில் தமிழ் சேரமுடியுமா என்ன? எல்லை தாண்டிய பிரச்னைகளில் கவனம் செலுத்துவது இதன் முக்கிய குணம். ஈழப்பிரச்னை பற்றிப் பேசாமல் பாலஸ்தீனிய பிரச்சினை பற்றிப் பேச வேண்டியது இதன் முக்கியத் தேவைகளில் ஒன்று. இந்து ராம், அருந்ததிராய், வேறு சில அரைகுறைகள் எல்லாம் இங்கே அணிவகுத்து நிற்கும். இன்னொரு கூட்டம் உண்டு. "சீ, தேசிய இனவாதி ஆகிவிட்டானய்யா" என்று லேபல் குத்துபவர்கள் அடிப்படையில் காஸ்மாபாலிட்டனிசத்தின் மீதான மோக வியாதிதான் இதற்கெல்லாம் காரணம். இந்த காஸ்மாபாலிட்டன் அறிவுஜீவி அந்தஸ்துக்காக ஆசைப்படும் உளவியல் ரோகிகளுக்கும் சி.பி.எம்-மின் மேல்தட்டு கட்சித் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால்தான் சோம்நாத் சட்டர்ஜி பாராளுமன்ற அவைத்தலைவரானவுடன் சி.பி.எம்.மிலிருந்து தப்பிவிட்டார். இவர்களெல்லாம் தங்கள் அசிங்கங்களை மறைக்க ஒரு சாம்ஸ்கியைப் பிடித்துவந்து தங்கள் சொத்தாக்க முயலுகிறார்கள். கடைசியாக இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பது லங்கா கார்டியன்.

ஆனால் சமீபத்தில் ஒரு புதுச்சிந்தனை இந்தியவியல் ஆய்வில் தலைகாட்டியுள்ளது. இதனை முன்னெடுப்பவர் ஷெல்டன் போல்லக் என்ற சமஸ்கிருதப் பேராசிரியர். இந்திய ஆய்வில் சமஸ்கிருதம் பிராந்திய மொழியோடு (உதாரணம் கன்னடம்) தொடர்பு கொள்கையில் ஒரு காஸ்மாபாலிட்டன் வெர்னாக்குலர் தோன்றுகிறது என்கிறார் ஷெல்டன் போல்லக். தமிழ் பற்றிய கணிப்பில் இவர் தோற்றாலும் சமஸ்கிருதத்தின் அரசியலைச் சரியாகக் (இவரது சமஸ்கிருதத்தின் சாவு என்ற கட்டுரையைப் பார்க்க) கணிக்கிறார்.

இந்தியாவில் நடமாடும் காஸ்மாபாலிட்டன் அறிவுஜீவிகளுக்கு போலக்கின் தர்க்கம் தெரியாது. அதாவது பிராந்திய மொழி அல்லது பிரச்சினையில் ஈடுபடும்போதுதான் உண்மையான காஸ்மாபாலிட்டானிசம் உருவாகிறது. இந்தப்பார்வையை எனக்குத் தந்ததற்கான அடிப்படை போலக் கட்டுரைகளில் உள்ளன. சாம்ஸ்கியை, போலக்கோடு இணைக்கவேண்டும். இந்தியச் சூழலில் சரியான அரசியல் பார்வை என்பது பிராந்திய மொழி சார்ந்த பார்வைதான். ஜார்ஜ் ஹார்ட் என்ற பெர்க்லி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் எழுத்துகளிலும் இந்த அழுத்தம் உண்டு. எனவே தமிழின் தனித் தன்மையைப் பற்றி ஹார்ட் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்த வழியில் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி செய்த கிரேக்க இலக்கியத்தோடான ஒப்பீடு முக்கியமான ஆய்வு நடவடிக்கைகளாகும்.

சாம்ஸ்கியைப் போலக் கோடு இணைக்கத் தெரியாத ‘இந்து’த்தனமான காஸ்மாபாலிட்டன் அறிவுஜீவித்தனம் போலியானது. சாம்ஸ்கியை அழைத்துச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தால் மட்டும் போதாது. சிருஷ்டிபரமாக சாம்ஸ்கியை அணுகத் தெரியாதவர்கள் தங்கள் ரோகத்துக்கான புனுகாக மட்டுமே சாம்ஸ்கியைப் பயன்படுத்தமுடியும்.

பதிந்தவை