17.8.10

க்ஹஸர் இனத்தின் அழிவு

இவ்வகராதி, க்ஹஸர் இனத்தாரும் இவர்தம் அரசும் வரலாற்றுக்களத்திலிருந்தே மறைந்துபோனதற்குக் காரணமான நிகழ்வில் கவனங் கொள்கிறது. அதாவது, க்ஹஸர் இனத்தார், இன்னதென இன்று யாமறியாத் தம் மத-மார்க்கத்திலிருந்து யூதம், கிறித்தவம், இஸ்லாம் என இந்த மூன்றில் ஏதோவொன்றுக்கு மாறியதே இந்நிகழ்வு. க்ஹஸர் இனத்தார்தம் மாற்றம் நிகழ்ந்தவுடனே வீழ்ச்சி கண்டது க்ஹஸர் பேரரசு. கி. பி. பத்தாம் நூற்றாண்டில் க்ஹஸர் பேரரசைத் தாக்கிய ருஷ்யப்படையின் தளபதி இளவரசர் ஸ்வெத்தோஸ்யாவ், தம் பரியினின்று கீழிறங்கவும் தேவையின்றி, இப்பேரரசையே, ஓர் ஆப்பிளைப் போல விழுங்கிவிட்டார். கி. பி. 943-ஆம் ஆண்டில் வோல்கா ஆற்று முகத்துவாரத்தில் அமைந்திருந்த க்ஹஸர் தலைநகரை எட்டு இரவுகளாய் உறக்கம் விழித்துத் தாக்கிய ருஷ்யப்படையினர், இதைக் கஸ்பியன் கடலுள் இடித்துத் தள்ளியே விட்டனர். பிற்பாடு 965-ஆம் ஆண்டுக்கும் 970-ஆம் ஆண்டுக்குமிடையே க்ஹஸர் இனத்தாரின் முழுப்பேரரசையும் ருஷ்யர்கள் அழித்தொழித்தனர். இப்படித் தலைநகரின் கட்டிடங்கள் அழிந்து பலகாலம் ஆன பிற்பாடும் ஆங்கே வீடுகளின் நிழற்கோடுகள் ஆண்டுக்கணக்கில் நீடித்தன என்பதற்குத் தரவுகள் பல உண்டு. வோல்கா ஆற்றுநீரிலும் காற்றிலுமென நின்றெஞ்சிய தரவுகள் இவை. பிற்பாடு பன்னிரண்டாம் நூற்றாண்டின் ருஷ்யப் பரம்பரைக்கதையொன்றின் படி, 1083-ஆம் ஆண்டில் ருஷ்ய இளவரசர் ஒலெக், க்ஹஸர் அரசின் தலைமைப்பீடத்தை எய்திவிட்டிருந்தார். இதே பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் க்ஹஸார் பேரரசு இருந்த நிலப்பரப்பில் குமாஒன் என்ற இன்னோர் இனத்தாரைக் கண்ட தகவலும் பிறகுண்டு.

க்ஹஸர்ப் பண்பாட்டின் எஞ்சின பொருட்களும் மிகச்சில. கல்வெட்டுக்களோவெனில் ஒன்றுகூட க்ஹஸர் இனத்தாரின் தனிமனிதரையோ பொதுப்பண்பாட்டையோ குறிப்பதாய் எஞ்சவில்லை! க்ஹஸர் நூல்கள் என யூத ஹலேவியானவர் பட்டியலிடுவனவற்றில் ஒன்றின் தடயமும் எஞ்சவில்லை! க்ஹஸர்கள் இன்ன மொழியில் தொழுகை நடத்தினரென சிரில் புனிதர் குறிப்பிடுகிற இம்மொழியின் எச்சமேதும் இல்லை! இதுவரை நிகழ்ந்திருக்கும் அகழ்வாய்வைப் பொறுத்தவரை, ஆய்வாளர்கள் ஸூவார் என்ற நகரில் மீளெழுப்பிய பொதுப்பயன்பாட்டுக் கட்டிடம், க்ஹஸர் இனத்தாருடையதல்ல; மாறாக புல்கார் இனத்தாருடையதாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள்; ஸார்க்கெல் எனும் பகுதியில் புதையுண்டுபோய் மீண்டவற்றிலும் க்ஹஸர் இனத்தாருக்கென்று பெஸ்ஸாந்தியர் கட்டியவையென ஏடுகள் கூறும் கோட்டைகளோ, குறிப்பிடுமாறு வேறேதோ தேறவில்லை! க்ஹஸர் அரசு அழிந்த பிற்பாடு க்ஸஹர் இனத்தார் பற்றி யாரும் அவ்வளவாகப் பதியவில்லை. பத்தாம் நூற்றாண்டுக்காலத்தில் ஹங்கேரிய இனத்தலைவர் ஒருவர், தம்முடைய ஆட்சிப்பகுதியில் க்ஹஸர் இனத்தார் தங்கலாமென அனுமதி வழங்கியிருந்தார். 1117-ஆம் ஆண்டில் வ்ளாடிமிர் மோனோமக் எனும் ருஷ்ய இளவரசரைச் சந்திக்க வேண்டி ஒரு குழுவாக கியவ் நகர் வரை க்ஹஸர் இனத்தார் சென்றிருக்கின்றனர். 1309-ஆம் ஆண்டில் ப்ரஸ்புர்க் நகரில் கத்தோலிக்கர் க்ஹஸர் இனத்தாருடன் மண உறவு கொள்ளக் கூடாதெனத் தடை விதிக்கப்பெற்றது. பின்னர் 1346-ஆம் ஆண்டில் க்ஷ தடையைப் போப்பாண்டகை உறுதியும்செய்தார். ஆக, க்ஹஸர் இனத்தார் பற்றிக் கிட்டியவை இவ்வளவே.

க்ஹஸர் இனத்தாரின் தலைவிதி இப்படியாக முடிந்துபோனதற்குக் காரணமான மத மார்க்க-மாற்றம் நடந்த விதம் இதோ: க்ஹஸர் அரசர் காஹ்ன், கனாவொன்று கண்டாரென்றும் அந்தக் கனாத்திறம் விளக்க வேண்டி ஞானியர் மூவரைத் தம்மிடம் அழைத்தாரென்றும் பழங்கதைகள் கூறும். மூவரில் எவர் கூறும் கனாத்திறம் தமக்குச் சரியென்று திருப்தியளிக்கிறதோ அன்னார்தம் மத-மார்க்கத்தையே தாமும் தம் குடிமக்களும் பின்பற்றப் போவதாகக் காஹ்ன் அரசர் முடிவெடுத்தார் என்பதால் இவர் கண்ட கனா, க்ஹஸர் அரசு குறித்த பிரச்னையுமாகிவிட்டது. இவ்வாறு முடிவெடுத்த இதே நாள் காஹ்ன் அரசரின் தலைமுடி இறந்துவிட்டது என்றும் இந்தச்சாவுணர்த்தும் ஏதோவொரு சக்திதான் அரசரை இம்முடிவு நோக்கித் தள்ளியது என்றும் தகவல்கள் சில உண்டு. ஆக, அரசரின் கோடை மாளிகைக்கு ஓர் இஸ்லாமியத் தர்வேஷ், ஒரு யூத ராப்பி, ஒரு கிறித்துவத்துறவி என ஞானியர் மூவர் வந்ததும் இப்படித்தான். இன்னார் மூவரும் ஆளுக்கொரு உப்புக்கத்தியை காஹ்ன் அரசரிடமிருந்து பரிசாகப் பெற்று தம்மிடை வாதுசெய்யத் தொடங்கினர். மூவரின் நிலைப்பாடுகளும் மத-மார்க்க அடிப்படைகளும் அவ்வடிப்படைகள் மீதமைந்த வாதும் இதில் பங்களித்த பிற நபர்களும் இதன் முடிவையும் விளைவுகளையும் அதில் வென்றவர் யார்-தோற்றவர் யார் என்பது குறித்த நேரெதிர்க் கருத்துக்களையும் எழுப்பி, அடுத்துவந்த நூற்றாண்டுகளில் எபிரேய, கிறித்துவ, இஸ்லாமிய வட்டாரங்களில் மறுபடி மறுபடியென வாதின் பிரச்னைகளையும் கிளப்பின. க்ஹஸர் இனத்தார் என்றோ மறைந்தொழிந்துவிட்டபோதும் இத்தகைய வாதும் தொடர்கிறது இன்றுவரை. பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் திடீரென்று க்ஹஸர் விவகாரங்களில் ஈடுபாடு மீண்டுமெழ, க்ஹஸர்கள் குறித்த ஏராளமான ஆய்வுகள் ஒழுங்கமைக்கப்பெற்று, இவை, போருஷ்யா என்கிற ப்ருஷ்யாவில் 1691-ஆம் ஆண்டு வெளியாகின. க்ஹஸர் இனத்தார் பற்றிய ஆய்வுக்கான பொருட்களில் அடங்கியவை, முக்கோண வடிவக் காசுகளும் பழங்கால மோதிரங்களில் செதுக்கிய பெயர்களும் உப்பாலான குடுவை மீது வரைந்த கோலங்களும் ராஜாங்கக் கடிதப் போக்குவரத்தும் எழுத்தாளர் உருவப்படங்களும் அந்தப்படங்கள் ஒவ்வொன்றின் பின்புலமாகப் பொறித்த நூற்பட்டியலை எடுத்தெழுதிய பட்டியலும் உளவறிக்கைகளும் உயில்களும் க்ஹஸர் இன மொழியெனக் கருதப்பெற்ற கருங்கடற் கிளிகளின் கீச்சுப்பேரரவமும் இசையுருவாக்க ஓவியங்களும் அந்த ஓவியங்கள் அடையாளம் காட்டிய தொல்லிசை நூற்களின் குறியீட்டுப்புதிர்களும் ஏன் பச்சைகுத்திய மனிதத்தோலொன்றும் பின்னர் ஏராளமான பெஸ்ஸாந்திய, எபிரேய, அரபுமொழி ஆவணங்களும்... பதினேழாம் நூற்றாண்டு மனிதர்தம் கற்பனையிலகப்பட்டு அன்னாருக்குப் பயன்தரவல்ல யாவும் அகராதியொன்றின் மேலட்டை-கீழட்டைக்குள் சிக்கியதும் இப்படித்தான். க்ஹஸர் வாதும் ஒருவழியாக ஓய்ந்து ஆண்டு ஆயிரமான பிறகு இதில் மீண்டும் ஆர்வம் தோன்றியதை விளக்கும் வகையில் கதைக்காரனொருவன் சொன்ன மர்ம வாசகமும் இதோ:

‘நம்மில் ஒவ்வொருவரும் தத்தம் சிந்தனையைக் கயிற்றில் பிணைத்த குரங்கென அழைத்துச் செல்கிறோம். அதுவும் வாசிப்பில் நாம் ஈடுபடும்போதெல்லாம் நம் குரங்கும் இன்னொரு நபரில் குரங்குமென இரண்டு குரங்குகள் இயங்கும். ஏன், இவை குரங்கும் கழுதைப்புலியுமாக இருக்கும் வாய்ப்புமுண்டு. அப்போது அவற்றுக்குணவாக என்னதான் தர முடியும்! கழுதைப்புலியானது குரங்கின் உணவைப் புசிக்காதல்லவா...’

எது எப்படியிருப்பினும் போலிஷ் மொழியில் அகராதியொன்றை அச்சேற்றிய யோவான் டோப்மான்னஸ் என்பாரோ இவர் வழிவந்த யாரோ, க்ஷ 1691-ஆம் ஆண்டில் க்ஹஸர் பிரச்னை பற்றிய தரவுகள் யாவற்றையும் தொகுத்து ஒரே வடிவமைப்பில் வெளியிட்டார்கள். அந்தச்செயல் கைகூடியதால், குழைக்காதில் இறகணிந்து வாயை மைக்கூடாக்கி எழுதிய எத்தனையோ பேர் நூற்றாண்டுகளெனத் தொகுத்தும் தொலைத்தும் வைத்த சில்லறைத்தரவுகள் ஒருசேர அமையப்பெற்றன. அப்பதிப்பும் க்ஹஸர் இனத்தார் குறித்த லெக்ஸிக்கன் கோஸ்ரி என்ற லத்தீன் மொழி அகராதியாக வெளியானது. நிஜத்தில் தியோக்டிஸ்ட் நிக்கோல்ஸ்கி என்ற பாதிரித்துறவியார், க்ஹஸர் இனத்தார் பற்றிய ஏராளம் தரவுகளை ஆஸ்த்ரியரும் துருக்கியரும் போர்புரிந்த களத்தில் வைத்துக் கண்டெடுத்து மனனம் செய்துகொண்டாரென்றும் பிற்பாடு இவர் சொல்லக்கேட்டுத்தான் யோவான் டோப்மான்னஸ் எழுதிக்கொண்டுபோய் அச்சேற்றினாரென்றும் இவ்வகராதி குறித்த கிறித்துவத்தகவல்கள் கூறுவதுண்டு.

இப்படியாக யோவான் டோப்மான்னஸ் அச்சேற்றிய இப்பதிப்பில் இருந்த நூல்களும் மூன்று: க்ஹஸர் பிரச்னை குறித்த இஸ்லாமியத் தரவுகளிலிருந்து கிட்டிய சொற்களின் பட்டியல்; க்ஹஸர் பிரச்னை குறித்த எபிரேயக் கதைநூல்கள் வழி கிட்டிய தரவுகளின் அகரமுதலி மற்றும் க்ஹஸர் பிரச்னை குறித்த கிறித்துவத் தரவுகளின் அடிப்படையில் அமைந்த மூன்றாம் அகராதி. ஆக, க்ஹஸர் பேரரசு பற்றிய அகராதிகளின் அகராதியாக விளங்கியது டோப்மான்னஸ்ஸின் இப்பதிப்பே. ஆனால் இதற்கு நேர்ந்த கதியோ அலாதி.

இந்த முதல் பதிப்பின் ஐந்நூறு படிகளில் ஒன்றை மாத்திரம் நச்சுச் சாய மை கொண்டு அச்சேற்றியிருந்தார் டோப்மான்னஸ். நஞ்சேறிய இந்தப்படிக்குத் தங்க முலாமிட்ட பூட்டுண்டு என்றும் வெள்ளிப்பூட்டு கொண்டதும் முலாம் பூசியதுமான துணைப்படியொன்றுமுண்டு என்றும் தெரிகிறது.

டோப்மான்னஸ் அச்சேற்றிப் பதிப்பித்ததை அடுத்த 1692-ஆம் ஆண்டே, படிகள் யாவற்றையும் வத்திக்கான் கத்தோலிக்கத் திருச்சபையின் விசாரணைக்குழு தேடி அழித்தொழித்துவிட்டது. ஆனால் நஞ்சேறிய படியும் வெள்ளிப்பூட்டு கொண்ட துணைப்படியும் மாத்திரம் தணிக்கை அதிகாரிகளின் கண்காணிப்பினின்றும் தப்பி வாசிப்புக்கெனப் புழக்கத்தில் எஞ்சின. ஆக, அவிசுவாசியரும் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிய மறுத்தோரும் தடையான அகராதியின் எஞ்சின படியை வாசிக்கத்துணிந்தால் சாவெனும் அபாயத்தையும் எதிர்நோக்க வேண்டிய நிலை! நூலைத் திறக்கும் வாசகரின் இதயம் உடன் தன்னை ஊசிபோலக் கவ்விக்கொள்ளும்; இதன் ஒன்பதாம் பக்கத்திலே, ‘சொல்லோ மெய்யானது - அதாவது உடலின் கதையானது’ என்ற லத்தீன் வாசகத்தை அடையும் கட்டத்திலே, வாசகர் செத்துவிழுவார். நஞ்சேறிய படியுடன் துணைப்படியை வைத்து வாசித்தால் சாவு வாய்க்கும் இவ்விடத்தைத் துல்லியமாய் அறியவும் முடியும். துணைப்படியில் காணும் குறிப்பானது கூறுவதும் இதோ: ‘நீ விழிப்ப வலியறியாமல் போக, உயிர்களிடை இல்லை என்றறிவாய் நீ.’

பதினெட்டாம் நூற்றாண்டில் டோர்ஃப்மெர் குடும்ப நிலை மற்றும் அதன் உயில் குறித்து நடந்த வழக்கு ஆகியவற்றை வைத்து அந்தக்குடும்பத்தில் பரம்பரைச்சொத்தாக தங்க முலாம் பூசிய, பூட்டிட்ட இவ்வகராதிப்படி இருந்ததை அறிய முடிகிறது. ஆக, டோர்ஃப்மெர் குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையிலுமென மூத்த மகன் அரைவாசி நூலையும் பிற பிள்ளைகள் கால்வாசி நூலையும் அதிகம் பேரிருந்தால் கால்வாசிக்கும் குறைவான நூலையும் தம்முடைய பரம்பரைச்சொத்தாகப் பெற்றுவந்தார்கள் என்று தெரிகிறது. இவ்வகராதியின் பகுதிகளுக்கு ஏற்ப, டோர்ஃப்மெர் குடும்பச்சொத்துக்களான பழச்சாலைகள், புல்வெளிகள், நீரூற்றுக்கள், கால்நடைகளும் பிரித்தே வழங்கப்பெற்றன. எனும்போதும் குடும்பத்தில் நிகழ்ந்த துர்ச்சாவுகளுக்கும் அகராதிக்கும் எவ்வித உறவும் இருக்கக்கூடும் என ரொம்பக்காலம்வரை யாரும் கருதவில்லை. குடும்பத்தாரின் கால்நடைகளைக் கொள்ளைநோய் வாரிக்கொண்டுபோய்ப் பஞ்சம் கவிந்துவிட்ட ஒரு சமயம் அன்னாரிடம் யாரோ, ‘எந்தவொரு நூலும் ஒரு பெண்ணைப் போல மோரினா என்ற பெயர்கொண்ட சூன்யக்காரியாக மாறிவிடக்கூடும்; மோரினாவின் ஆவி அலைந்து சுற்றியிருக்கும் யாவரையும் பீடித்துக் கொல்லவும் கூடும்; எனவே வீடும் வெளியும் அழிந்துபடாமலிருக்க, க்ஷ சூன்யக்காரியாக மாறும் பெண்ணின் வாயில் வைப்பது போன்ற சிறிய மரக்குருசு ஒன்றைச் செய்து அதை இந்த அகராதியின் பூட்டில் இட்டுவிடலாம்’ எனக் கூறிவிட, இதைச் செவிமடுத்த குடும்பத்தாரும் அஃதே போலச் செய்து அதை க்ஹஸார் அகராதியின் பூட்டின் மேல் இட்டார்கள். உடன் நிலைமை இன்னும் மோசமாகி, குடும்ப அங்கத்தவர்கள் உறக்கத்தில் மூச்சுமூட்டி இறக்கத் தொடங்கினார்கள். பீதியடைந்த பிற குடும்பத்தார் ஆங்கே ஒரு பாதிரியிடம் சென்று நிலைமையை விளக்க, பாதிரியோ டோர்ஃப்மெர் இல்லம் வரை வந்து அகராதி மீதிருந்த அந்தச் சிறிய மரக்குருசை அகற்றினார். அதே நாளில் அந்த விநோதக் கொள்ளைநோயும் காணாமல் போனது. ‘அகராதிக்கு வெளியே ஆவி வசிக்கும்போது குருசை இப்படிப் பூட்டின்மீது வைத்துவிடாதீர்கள். குருசுக்குப் பயந்த ஆவி உள்ளே போக அஞ்சி சுற்றிலும் விநாசம் விளைவிக்கிறது’ என்று டோர்ஃப்மெர் குடும்பத்தாரை எச்சரித்தார் பாதிரி.

தங்க முலாம் பூசிய, பூட்டிட்ட க்ஹஸர் அகராதி டோர்ஃப்மெர் குடும்ப இல்ல அலமாரியில் பல ஆண்டுகள் வரை பயன்பாடின்றிக் கிடந்ததும் இப்படியாகத்தான். அலமாரியிலிருந்து இரவில் விநோதமாய் வந்த சரசரப்புச் சத்தமும் டோப்மான்னஸ் அகராதியிலிருந்தே கிளம்பியிருக்க வேண்டும். அகராதியுடன் ஒரு மணற்கடிகையும் இணைந்திருந்தது என்றும் ஃஸோஹர் என்ற யூத வரலாற்றுக்கதை சொல்லும் புனித நூலை நன்கறிந்தவரும் ஒரே சமயம் பேசவும் எழுதவும் அறிந்த நெஹாமா என்பாரே இக்கடிகையை நூலுள் வைத்துக்கட்டியவர் என்றும் ல்வாவ் நகரிலிருந்த கையேட்டுக்குறிப்புக்கள் சில தெரிவிக்கின்றன. இவர் தாள்களை ஒட்டி அகராதியை உருவாக்கியபோது அந்த மணற்கடிகையை இணைத்துக் கட்டிவிட்டிருந்தார் என்பதால் கடிகை கண்ணுக்குத் தெரியாமல் போனதெனினும் வாசிக்குங்கால் இம்மௌனத்தின் ஊடே சரியும் மணலின் சத்தம் துல்லியமாய்க் கேட்டது. சத்தம் நின்றவுடன் அகராதியைத் தலைகீழாய்த் திருப்பி வாசிக்க வேண்டுமென்றும் இத்தகைய வாசிப்பின்போதே இதன் பொருட்புதிர் விடுபடும் என்றும் அக்குறிப்புக்கள் கூறின.

க்ஹஸர் அகராதியில் யூத நெஹாமா காட்டிய சிரத்தையை யூத ராப்பிமார் பிறர் ஏற்கவில்லை. தவிர, யூத அறிஞர் பலரும் அவ்வப்போது அகராதியைக் கடுமையாகத் தாக்கி வந்தனர். இவர்களில் யாரும் அகராதிக்கான எபிரேயத் தரவுகளின் அடிப்படையை மறுக்கவில்லை என்றாலும் மத-மார்க்கங்கள் பிற அளித்த தரவுகளை ஏற்கவுமில்லை. லெக்ஸிக்கன் கோஸ்ரி என்ற அகராதி இஸ்பாஞ்ஞ நாட்டிலும் தோல்வியே கண்டது என்பதைக் கூறியாக வேண்டும். அகராதியின் வெள்ளிமுலாம் பூசிய படியை அங்குள்ள இஸ்லாமிய மூர்கள் எவரும் வாசிக்க எண்ணூறாண்டு வரை தடை விதிக்கப்பெற்றது. குறித்த காலம் இன்னும் முடியாததால் தொடர்கிறது தடை! க்ஹஸர் பேரரசிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பத்தார் சிலர் அக்கால இஸ்பாஞ்ஞ நாட்டில் காணப்பட்டதை வைத்து இத்தடைக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும். க்ஹஸர் இனத்தாரின் இறுதிநபர்களாம் இவர்களுக்கு விநோத வழக்கமொன்றும் இருந்தது. தாம் மோத நேர்கிற நபர் உறங்கும்போது மிக்க முயற்சியுடன் அன்னாரைச் சபிப்பதும் இதே வேளை தம் சாபங்களால் அன்னார் உறக்கங்கலைந்து விழிக்காமல் பார்த்துக்கொள்வதும்தான் இவ்வழக்கம். எதிரி உறங்கும் வேளை தம் சாபங்கள் விரைந்தியங்கி மேலதிகப்பயன் தரும் என்பது க்ஹஸர் இனத்தாரின் நம்பிக்கை. க்ஹஸர் பெண்களோவெனில் மாஸிடோனிய மாவீரர் அலெக்ஸாந்தரைக்கூட சபித்தார்களென டோப்மான்னஸ் உறுதிசெய்கிற விஷயம், பேரரசர் அலெக்ஸாந்தரிடம் போரிட்டுத் தோற்றோரில் க்ஹஸர் இனத்தாரும் அடங்குவர் என நகல்-கெலிஸ்தான் என்ற பெயர்கொண்ட கிரேக்கு மொழி நூலாசிரியர் கூறுவதுடன் ஒத்துப்போவதைக் காணலாம்.

--- Milorad Pavic, Hazarski Recnik, Beograd, 1984; Dictionary of the Khazars: A lexicon-novel in 100,000 words, Translated by Christina Pribićevic-Zorić, New York, 1988.

3 கருத்துகள்:

டிசே த‌மிழ‌ன் said...
This comment has been removed by a blog administrator.
எஸ்.கே said...
This comment has been removed by a blog administrator.
கலையரசன் said...
This comment has been removed by a blog administrator.