17.4.10

ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 6

ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 1
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 2
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 3
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 4
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 5


பொறுப்பு, அரசுக்கும் நிறுவனங்களுக்கும்
வர்த்தக நிறுவனங்கள் மனித உரிமைகளை மீறுவதான அச்சுறுத்தல் நிகழும்போதெல்லாம் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசுகளுக்குண்டு. அதே நேரம் அரசுகள் இந்தக்கடமையைச் செய்யத் தவறுகின்றன என்பதால் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட முடியாது. தங்கள் செயற்பாடுகள் மக்களின் மனித உரிமைகளைப் பாதிக்கின்றன என்பதால் அந்தப் பொறுப்பை ஏற்றாக வேண்டும்; குறைந்த பட்சம் மனித உரிமைகளை மதித்து நடந்தாக வேண்டும் என்பது கருத்திசைவு தற்போது ஏற்பட்டு வருகிறது. வர்த்தகம் மனித உரிமைகளைப் பாதிக்கும் விஷயத்தில் ஐ. நா. பொதுச்செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றிவரும் ஜான் ரக்கீ என்ற பேராசிரியர், 2008-ஆம் ஆண்டு ஐ. நா. மனித உரிமைக்குழுவுக்கு அளித்த அறிக்கையில் இதை விவரித்துக் கூறியுள்ளார்.

ஒரிஸ்ஸாவைப் பொறுத்தவரை, வேதாந்தா அலுமினியம் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலை ஏற்படுத்தும் மாசு, அங்குள்ள மக்களுக்கு உடல்நலம், நீர் மற்றும் ஆரோக்கியமான சூழல் குறித்துள்ள உரிமைகளைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. தன் செயற்பாடுகள் குறித்து மக்கள் அறியவும் அவை மக்களின் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைக் கையாண்டு தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த நிறுவனம் தவறியிருக்கிறது. இயற்கை மற்றும் சமுதாயச்சூழலின் மீதான தாக்கம், தவிர மனித உரிமைகள் மீதான தாக்கத்தைக் கையாள்வதற்கான பன்னாட்டு அளவுகோல்களை ஏற்றுச் செயல்பட இந்த நிறுவனம் தவறியிருக்கிறது. இந்தப் பிரச்னைகளைக் கையாள்வதை விட்டுவிட்டு இந்தச் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கும் எந்த ஒரு முயற்சியும் மனித உரிமைகளைப் படுமோசமாக மீறுவதாகும்.

தவிர, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் இந்தியா மற்றும் ஒரிஸ்ஸா கனிம வள நிறுவனம் இரண்டும் இணைந்து செயலாக்க விழையும் பாக்ஸைட் சுரங்கத்திட்டம், பாதுகாக்கப்பட்ட டோங்க்ரியா கோண்ட் என்ற பழங்குடி இனத்தின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகிவிட்டிருக்கிறது. குறிப்பாக, இந்தச் சுரங்கத்திட்டம் இந்த இனத்தாரின் நிலம்-நீர்-உணவு-உடல்நலம்-வாழ்வாதார மரபுரிமைகள் யாவும் படுமோசமாகப் பாதிக்கக்கூடும். ஆனால் இந்த அபாயங்கள் பற்றியெல்லாம் அக்கறை காட்டப்பெறவில்லை. இவை பற்றிய விபரமேதும் இந்த மக்களுக்குத் தெரிவிக்கப்பெறவில்லை. இவர்களைக் கலந்தாலோசிப்பது என்பது நடக்கவே இல்லை.

பரிந்துரைகள்
மேற்கண்ட சூழலில் வேதாந்தா குழுமம் லாஞ்சிகர் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்குவதை இந்திய அரசும் ஒரிஸ்ஸா மாநில அரசும் முதற்கண் நிறுத்த வேண்டும்; இருக்கும் ஆலையின் மாசுத்தாக்கத்தை முதற்கண் மதிப்பிட்டு அதனால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிச் செயல்பட வேண்டும்.

வேதாந்தா நிறுவனம் தன் ஆலையின் மாசுத்தாக்கத்தை முதலில் களைய வேண்டும் என இந்த அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். பிறகு ஆலையால் தாக்குண்ட மக்களின் மனித உரிமைகளுக்கு ஏற்பட்ட கடும் பாதிப்புக்களை மதிப்பிட்டு அவற்றுக்கான நியாயமான இழப்பீடை வழங்க வேண்டும். இந்த மக்கள் நீதிமன்றத்தை விரைந்து அணுக ஏதுவாக இவர்களுக்கு அரசுகள் உதவ வேண்டும்.

இந்திய அரசும் ஒரிஸ்ஸா அரசும் முதற்கண் நியமகிரி பாக்ஸைட் சுரங்கத் திட்டம் பற்றிய விபரங்கள் யாவற்றையும் டோங்க்ரியா கோண்ட் இனத்தாருக்கு அளித்து இவர்கள் அந்தத் திட்டத்தை விரும்புகிறார்களா, இல்லையா எனக் கருத்தறிந்து அந்தக் கருத்தை மதித்துச் செயலாற்ற வேண்டும். இதற்கென ஒரு அமைப்பை உருவாகக் வேண்டும்.

பிறகு சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கமும் பாக்ஸைட் சுரங்கத்திட்டமும் சரி, அங்குள்ள சூழல் மீதும் மக்கள்மீதும் எந்தெந்த வகையில் தாக்கங்களை ஏற்படுத்தும், மனித உரிமைகளை எந்தெந்த வகையில் பாதிக்கும் என முழுமையாக மதிப்பிட வேண்டும். இதற்கென அங்குள்ள மக்களை முழுமையாகக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

லாஞ்சிகரில் தற்போது செயல்படும் சுத்திகரிப்பு ஆலையால் தாக்குண்ட மக்களின் உடல்நலத்தை முழுமையாகக் கண்காணித்து நோய்கள், உடல்உபாதைகளுக்கு சிகிச்சை நல்க வேண்டும்.

இந்த மனித உரிமைப் பிரச்னைகள் தீரும் வரை வேதாந்தா குழுமம் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் மற்றும் சுரங்கத்திட்டம் இரண்டையும் நிறுத்திவைக்க வேண்டும்.

வேதாந்தா குழுமம் நியமகிரி பாக்ஸைட் சுரங்கத் திட்டம் பற்றிய விபரங்கள் யாவற்றையும் டோங்க்ரியா கோண்ட் இனத்தாருக்கு அளித்து இவர்கள் இந்தத் திட்டத்தை விரும்புகிறார்களா, இல்லையா என அரசு கருத்தறியும் போது அத்துடன் ஒத்துழைக்க வேண்டும். திட்டம் வேண்டாம் என இவர்கள் முடிவெடுத்தால் அதை மதித்துச் செயலாற்ற வேண்டும்.

வேதாந்தா குழுமம் லாஞ்சிகரில் தற்போது செயல்படும் தன் சுத்திகரிப்பு ஆலை அங்குள்ள மக்களின் சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் பிற மனித உரிமைகளைத் தாக்கியிருப்பதை உடனடியாக ஏற்று, இதுபற்றி அவர்களுடனும் ஒரிஸ்ஸா மாநில அரசுடனும் கலந்து ஆலோசித்து இந்தத் தாக்கத்தைக் களைய முன்வர வேண்டும்.

வேதாந்தா குழுமத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள், இந்த நிறுவனத்திடம் மேற்கண்ட பரிந்துரைகளை ஏற்றுச் செயல்படுத்த வேண்டி நிர்ப்பந்திக்க வேண்டும்.

வேதாந்தா குழுமத்தின் தலைமையகம் லண்டன் மாநகரில் அமைந்திருப்பதால், பிரிட்டிஷ் அரசு வேதாந்தா உள்ளிட்ட பிற பிரிட்டிஷ் நிறுவனங்கள், உலகெங்குமுள்ள தங்கள் நடவடிக்கைகள் அந்தந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளை மதித்து நடக்கும் வகையில் அமைய வேண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(அம்னெஸ்டி அறிக்கையின் சுருக்கம் நிறைவுற்றது. இன்னும் வரும்)

படங்கள் - மாஜி கோண்ட் தலைவர் குமுட்டி மாஜியுடன், அம்னெஸ்டி குழு வருகையைக் கண்காணிக்க ஒரு குழு!

1 கருத்துகள்:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமையான எழுத்து நடை . மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்