
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 1
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 2
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 3
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 4
ஆலை விரிவாக்கம்: இன்னும் எதுவுண்டு மீற?
தற்போது செயல்பட்டுவரும் சுத்திகரிப்பு ஆலையில் இத்தனை பிரச்னைகள் நீடிக்கும் நிலையில், இந்த ஆலையின் திறனை ஆறு மடங்கு பெருக்க வேண்டும் என 2007-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்திலேயே வேதாந்தா அலுமினியம் திட்டமிட்டு அதற்கான அனுமதியையும் இந்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளது. ஆனால், ஒரிஸ்ஸா மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முன்வைத்துள்ள அறிக்கைகளையும் இந்த ஆலை இந்தப்பகுதி மக்கள்மீது ஏற்கனவே செலுத்தும் மோசமான தாக்கங்களையும் வைத்துப் பார்க்கும்போது இத்தகைய விரிவாக்கம் இப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாரிய அபாயத்தைக் கொண்டுவரலாம் என்று தெரிகிறது. அதேவேளை விரிவாக்கத்தால் சுற்றுச்சூழல் மீதான தாக்கம் எத்தகையது என்று வேதாந்தா அலுமினியம் சார்பில் செய்யப்பெற்ற மதிப்பீட்டு அறிக்கையோ, ஆலையிலிருந்து வெளியாகும் மாசுப்பொருட்கள் பற்றி மேற்கண்ட வாரியத்தின் அறிக்கைகள் கூறியிருப்பவை பற்றியோ, இப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கும் கவலைகள் பற்றியோ குறிப்பிடவே இல்லை.
2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரிஸ்ஸா மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், ஆலை விரிவாக்கத் திட்டம் குறித்த பொதுவிசாரணை அமர்வொன்றை நடத்தினார்கள். ஆனால் ஆலையிலிருந்து தற்போது வெளிவரும் மாசு குறித்த வாரியத்தின் கண்டுபிடிப்புக்களையும் பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் இப்பகுதி மக்கள் அறியத்தரவில்லை. இந்த அமர்வு குறித்த வீடியோ படக்காட்சியை அம்னெஸ்டி அமைப்பு பெற்று நோக்கியபோது, அங்கே தற்போதைய மாசுபாட்டுப் பிரச்னைகள் குறித்து மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அங்கிருந்த வாரியத்தின் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்பது தெரிகிறது. இப்போது ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பம் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
அரசுக்குப் பொறுப்பு உண்டா, இல்லையா?
சுரங்கத் தொழில் மற்றும் சுத்திகரிப்பு ஆலையின் தாக்கத்திலிருந்து டோங்க்ரியா கோண்ட் மற்றும் பிற சமுதாயத்தினரைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து இந்திய அரசு வழுவியிருக்கிறது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கை, பொருளியல், சமுதாய, கலாச்சார உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கை, இன ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சத்தைக் களையும் பன்னாட்டு உடன்படிக்கை மற்றும் பழங்குடினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஐ.நா. பிரகடனத்தில் உள்ள வரையறைகள் ஆகியவற்றை மீறும் வகையில், டோங்க்ரியா கோண்ட் இனத்தவர் புனிதமாகக் கருதும் மரபுநிலங்களில் சுரங்கம் வெட்டுவ்தற்கான உரிமத்தை இந்த நிறுவனங்களுக்கு அளிக்குமுன்பாக அதுபற்றிய விபரங்கள் யாவற்றையும் ஒளிவுமறைவின்றி
டோங்க்ரியா கோண்ட் இனத்தவர் அறியத் தரவில்லை, அவர்களுடைய ஒப்புதலைக் கோரவுமில்லை, பெறவுமில்லை. இந்த சுரங்கத்திட்டத்துக்கு அனுமதி வழங்குமுன்பாக அப்படியொரு வழிமுறையை அமைக்கவேயில்லை. இந்தத்திட்டங்கள் குறித்த போதுமான விபரங்களை இந்தச் சமுதாயங்களிடம் அளிக்காததுமன்றி, இந்த சமுதாயங்களின் உரிமைகள் மீது இந்தத்திட்டங்களின் தாக்கம் எவ்வகையில் அமையும் என்பதை மதிப்பிடவும் தவறிவிட்டிருக்கிறது. இதுபற்றி இந்தச் சமுதாயத்தினரிடம் கலந்தாலோசிக்கவுமில்லை. ஆக, இந்தத்திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களின் நடவடிக்கைகள் இங்குள்ள மக்களின் உரிமைகளைப் பாதிக்காத வண்ணம் அமைவதை உறுதிசெய்யவும் இந்திய அரசு
தவறிவிட்டிருக்கிறது.
இப்போது இயங்கும் சுத்திகரிப்பு ஆலையை ஒரிஸ்ஸா மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது கண்காணித்து வந்திருக்கிறது என்றாலும் அருகிலுள்ள நீர்நிலைகளும் இப்பகுதிக் காற்றும் மாசுபடாத வண்ணம் மாசுப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிகளைச் செயல்படுத்த வாரியம் தவறியிருக்கிறது. இதையடுத்து இந்தச் சமுதாயத்தினரின் நீர் ஆதாரங்கள், மற்றும் உடல்நலம் குறித்த உரிமைகள் மீறப்பெற்றுவிட்டன. தவிர, இப்பகுதி மக்கள் தங்கள் உடல்நலம் குறித்த கவலைகளைத் தெரிவித்து வந்தபோதும் மத்திய-மாநில அரசுத்தரப்பில் யாரும் இப்பகுதி மக்களின் உடல்நலத்தைக் கண்காணிக்கவில்லை. எனவே இப்பகுதியில் தாக்கம் பெற்ற மக்களின் நீருக்கான, உடல்நலத்துக்கான உரிமைகளைக் காக்க இந்திய அரசு தவறிவிட்டது. இது பொருளியல், சமுதாய, பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் பன்னாடடு
உடன்படிக்கையை மீறும் செயல்.
(இன்னும் வரும்)
படங்கள் - புவனேஷ்வர் விமான நிலையம் சாமான்கள் வருமிடத்து வேதாந்தாவின் விளம்பரம், எங்கும் தூசு - விரையும் பாக்ஸைட் லாரிகள்
12.4.10
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 5
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment