ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 1
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 2
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 3
சுத்திகரிப்பு ஆலை:
தகவல்-பொய்யும் மோசமான தாக்கமும்
“இந்த ஆலைக்கென நிலம் விற்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கம்பெனி பணியிடம் தரும். இந்தப் பகுதிக்கு மின்சாரமும் தண்ணீரும் வரும்.. மும்பை, டில்லி, ஏன் துபாய் போல இந்த இடமும் மாறிவிடும்."
- 2002-ஆம் ஆண்டில் நிலம் கையகப்படுத்துமுன் தாம் நடத்திய கிராமப்பஞ்சாயத்துக் கூட்டங்களில் காலஹண்டி மாவட்ட நிர்வாகத்தினர்.
வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான வேதாந்தா அலுமினியம் நிறுவனம் லாஞ்சிகர் பகுதியில் அமைத்துள்ள சுத்திகரிப்பு ஆலை, அப்பகுதி நீர்நிலைகள் மற்றும் காற்றைக் கடுமையான மாசுபடுத்தியுள்ளது. இது இங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உடல்நலத்தையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. இவர்களில் சிலர் சுத்திகரிப்பு ஆலையின் சுற்றுச்சுவர்களுக்குச் சில நூறு மீட்டர் தூரத்தில் வசிப்போர். இந்த ஆலை 2006-ஆம் ஆண்டில் பரிசோதனை முறையில் செயல்படத்தொடங்கியது. ஆலை வந்தால் ஒளிமயமான எதிர்காலம் உண்டு, இப்பகுதியே அபிவிருத்தி அடையும் என, ஆலைக்கென கம்பெனிக்குத் தத்தம் நிலத்தை விற்றோருக்கு கம்பெனி நிர்வாகத்தினரும் ஆட்சியாளர்களும் தந்திருந்த உறுதிமொழிகளுக்கு முற்றிலும் மாறாக இங்குள்ள எதார்த்த நிலைமை அப்போதிருந்தே உருவாகத் தொடங்கிவிட்டது.
லாஞ்சிகர் பகுதியில் சுத்திகரிப்பு ஆலைக்கு வேண்டி சுமார் எழுநூறு ஹெக்டேர் பயிர்நிலங்கள் வரை கட்டாயமாகக் கையகப்படுத்த வேண்டி ஒரிஸ்ஸா அரசு 2003-ஆம் ஆண்டில் ஆணையிட்டது. ஆலைக்கு நிலம் கையகப்படுத்திய போது ஆலையால் இப்பகுதியே பயனடையும் என உறுதிமொழி வழங்கினர். இந்த ஆலை அமைவதால் இந்தப்பகுதியே மும்பை, டில்லி ஏன் துபாய் போல மாறிவிடும் எனக் கூறினர். ஆனால் நிஜத்தில் இந்த ஆலைக்கு நிலம் கையகப்படுத்தியபோது தங்கள் பயிர்நிலங்களை மட்டுமின்றி வீடுவாசல்களையும் இழந்தோருக்கு மாத்திரமே குடும்பத்துக்குத் தலா ஒரு பணி எனப் பணிகள் கிட்டின. பிறருக்கு பணிவாய்ப்பில் முன்னுரிமையும், நிவாரணக் கொள்கையின் அடிப்படையில் ஒருசில உதவிகள் மாத்திரமே கிட்டின.
பாக்ஸைட் தாதுப்பொருளிலிருந்து அலுமினாப் பொடியைத் தயாரிக்கும் வழிமுறை, பல்வேறு மாசுப்பொருட்களை உருவாக்கும் என்பதால் அதைக் கவனத்துடன் கையாள வேண்டும். குறிப்பாக, கார உலோகக் கலவைகள் கொண்ட சிகப்புச்சேறு, மாசுபட்ட நீர் மற்றும் பாக்ஸைட்டிலிருந்து வரும் தூசி, கரி மற்றும் சுண்ணாம்புப்பொருட்கள், பிறகு கொதிகலனிலிருந்து வரும் சுடுசாம்பல் ஆகியவை ஒவ்வொன்றையும் கவனத்துடன் கையாள வேண்டும். 
ஆனால் இந்தப் பிரச்னைகள் குறித்த விபரங்கள எவையும் இந்தத்திட்ட நிறைவேற்றலுக்கு முன் இந்திய சுற்றுச்சூழல் விதிகளின்படி நடந்த பொது விசாரணை அமர்வில் பங்கேற்ற மக்கள் யாரும் அறியவில்லை, இந்த விபரங்களை அதிகாரிகள் மக்களிடம் அளிக்கவில்லை. ஆக, தங்கள் கிராமங்களுக்கு மிக அருகில் அமைந்த இந்தச் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து எந்தெந்த வகை மாசுகள் வர இருந்தன, இவற்றைக் கட்டுப்படுத்தும் திட்ட்ங்கள் யாவை என்ற விபரங்கள் யாவும் இவர்கள் அறியவில்லை; இவற்றை யாரும் இவர்களிடம் அளிக்கவில்லை. அதேபோல, இந்தச் சுத்திகரிப்பு ஆலையால் விளையவல்ல அபாயங்கள் யாவை, சுற்றுச்சூழல் மற்றும் மனித உடல்நலம் மீது இதன் தாக்கம் எப்படி அமையும் என்பது பற்றிய விபரங்களையும் யாரும் இவர்களிடம் அளிக்கவில்லை.
ஆலையால் அழிவு, நீரில் காற்றில்
ஒரிஸ்ஸாவின் தென்மேற்குப் பகுதியின் முக்கிய ஆறுகளில் ஒன்று வம்சதாரா. இந்த ஆற்றின் கரை போன்ற ஓரிடத்தில் வைத்து இந்தச் சுத்திகரிப்பு ஆலையைக் கட்டியிருக்கிறார்கள் என்பது கவலைதரும் விஷயம். இந்தப்பகுதி மக்கள் யாவரும் பிரதானமாக நம்பியிருப்பது வம்சதாரா ஆற்றைத்தான். குடிநீர் தவிர, குளிப்பதற்கும் கால்நடைகளைக் குளிப்பாட்டுவதற்கும் பாத்திரம் கழுவுவதற்கும் பாசனத்துக்கும் என யாவற்றுக்கும் இந்த ஆற்றை நம்பி வாழ்வோர் இந்த மக்கள். ஆலையைத் தாண்டி இந்த ஆறு பாயுமிடங்களில் மேலதிகக் கிராமங்கள் உண்டு.
இந்த ஆலையிலிருந்து எவ்வித மாசுப்பொருட்களும் வெளியேற்றுவதில்லை என்ற உறுதிப்பாட்டை வேதாந்தா அலுமினியம் நிறுவனம் வழங்கிய பிறகு இந்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இதற்கான அனுமதியை வழங்கியது. ஆனால் இந்த நிறுவனம் மீண்டும் மீண்டும் இந்த உறுதிப்பாட்டைப் பின்பற்றி நடக்கத் தவறிவிட்டது என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 2006-2009 காலகட்டத்தில் இங்கே மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் இந்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் ஒரிஸ்ஸா மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றவும் இந்த நிறுவனம் பல முறை தவறியிருப்பதை மேற்கண்ட வாரியம் தன் அறிக்கைகளில் ஆவணப்படுத்தியிருக்கிறது.
மாசுக் கட்டுப்பாட்டுக்குத் தேவையான செயல்பாடுகளை ஏற்படுத்தாமலும் மாசுப்பொருட்களை முறைப்படிக் கட்டுப்பட்டுத்தாமலும் இந்த நிறுவனம் ஆலையை இயக்கத் தொடங்கிவிட்டது என மேற்கண்ட வாரியத்தின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதை அடுத்து ஆலையிலிருந்து கார-உலோகக் கலவை அடங்கிய மாசுநீர் வம்சதாரா ஆற்றிலும் ஆலையின் சுற்றுச்சுவரைத் தாண்டியும் சென்று பலமுறை கலந்துவிட்டது என்றும் இப்பகுதிக் காற்றும் மாசுபட்டுவிட்டது என்றும் தெரிகிறது. தவிர மேற்கண்ட வாரியத்தின் ஆணையின்படி ஆலையைப் பழுதுபார்க்கும் பணியைச் செயல்படுத்தவும் பல முறை இந்த நிறுவனம் தவறிவிட்டது என்றும் தெரிகிறது. இதனால் இப்பகுதி நீரும் காற்றும் இன்னும் மாசுபடும் சாத்தியம் பெருகியது.
அம்னெஸ்டி அமைப்பின் ஆய்வாளர்கள் நேர்கண்டு உரையாடிய மக்கள் யாவரும் ஆலையிலிருந்து வரும் உலோக-காரக் கலவை வம்சதாரா ஆற்றில் கலப்பது பற்றிக் கவலை தெரிவித்தனர். இந்தப் பகுதிக்கே ஜீவாதாரமாக விளங்குவது இந்த ஆறு. ஆனால் ஒரிஸ்ஸா மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் சரி, வேதாந்தா அலுமினியம் நிறுவனமும் சரி, ஆலையிலிருந்து வெளிவரும் மாசுப்பொருட்கள் எத்தகையவை, ஆலையைச் சுற்றியுள்ள பகுதி எந்த அளவு பாழ்பட்டுப் போயிருக்கிறது என்ற விபரங்களை அதன் அருகே வசிக்கும் மக்களிடம் தெரிவிக்கவேயில்லை. இந்த விபரங்கள் யாவற்றையும் சேகரித்து ஆவணப்படுத்தியிருக்கும் வாரியம் இதுபற்றி வாய்திறக்கவில்லை. ஆலையிலிருந்து வரும் மாசானது, இப்பகுதி மக்களிடையே கணிசமான அச்சத்தையும் நிச்சயமற்ற நிலையையும் வளர்க்கிறது. இவர்களில் ஆற்றில் குளிப்போரில் சிலருக்குத் தோல்நோய்கள் வருகின்றன, சிலர் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார்கள். ஆற்றில் குளிக்கும் கால்நடைகள் சாகின்றன என்றெல்லாம் வரும் செய்திகள், இப்பகுதி மக்களின் அச்சத்தையும் நிச்சயமற்ற நிலையையும் மிகைப்படுத்திவிட்டன. ஆற்றை நம்பி முன்பு அதில் குடிநீர் எடுத்தும் குளித்தும் தங்கள் கால்நடைகளைக் குளிப்பாட்டியும் வந்த மக்கள் இனி இந்த ஆற்றுநீர் பாதுகாப்பானது அல்ல என்கிறார்கள். இதையடுத்து இந்தப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்துவிட்டது, குறிப்பாக வேனில் மாதங்களில் இது பெரும் பிரச்னையாகி விட்டது.
2007-ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் இந்தச் சுத்திகரிப்பு ஆலை முழுமையாகச் செயல்படத் தொடங்கியதை அடுத்து பல்வேறு உடல் உபாதைகள் இப்பகுதி மக்களைத் தாக்கத் தொடங்கிவிட்டன. இவற்றில் தோல்நோய்களும் கொப்புளங்களும் ஆற்றில் குளிப்பதால் வருகின்றன என்றும் மூச்சுத்திணறல், இருமல், மூச்சிரைப்பு எனப் பல்வேறு பிரச்னைகள் ஆலையின் மாசுப்பொருள் கலப்பதால் வருகின்றன என்றும் இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
இப்பகுதி மக்களின் உடல்நல உரிமையைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. அதற்கேற்ப மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை அரசு கடைப்பிடிக்க வேண்டும், விதிமீறல்களை விசாரிக்க வேண்டும், மாசுப்பரவலால் விளையும் உடல்நலப்பிரச்னைகளைக் கண்காணித்து விசாரிக்க வேண்டும். ஆனால், ஆலையிலிருந்து வரும் மாசுப்பொருட்கள் ஏற்படுத்தும் உடல்நலக் கோளாறுகள் பற்றி இப்பகுதி மக்கள் பரவலாகக் கவலை தெரிவித்த போதும் இப்படித் தாக்கம் பெற்ற கிராமங்களில் மக்களின் உடல்நலம் பற்றிய சுற்றாய்வோ கண்காணிப்போ ஏதும் நடைபெறவில்லை. இதையடுத்து இப்பகுதி மக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை, குறிப்பாக நெடுங்காலத் தாக்கம் கொண்ட உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்கிற படுமோசமான நிலையில் சிக்கியிருக்கிறார்கள்.
(இன்னும் வரும்)
படங்கள் - வெட்டினால் வருவது மகிழ்ச்சியும்தானே! - புவனேஷவர் விமான நிலையம் அருகே வேதாந்தா குழுமத்தின் மஹா விளம்பரம்,
ஆலை அருகே இளைஞர்களின் போராட்டம்,
நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராகப் போராடும் மாஜி கோண்ட் பழங்குடியின விவசாயி (முகப்பில் தம்முடைய படம் கொண்ட அம்னெஸ்டி அறிக்கையைப் பெற்ற பின்)
12.4.10
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 4
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment