ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 1
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 2
சுரங்கம் வெட்டுவோம், உரிமைகளைக் கருவறுப்போம்!
நியமகிரி மலையின் வடமேற்குப்பகுதி உச்சியில் சுமார் எழுநூறு ஹெக்டேர் பரப்பில் சுமார் முப்பதடியிலிருந்து தொடங்கி அமைய இருப்பதே பாக்ஸைட் சுரங்கம். இதற்கென, ஒரிஸ்ஸா கனிம வள நிறுவனமும் இங்கே லண்டனிலிருந்து செயல்படும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் இந்தியா நிறுவனமும் இணைந்து தென்மேற்கு ஒரிஸ்ஸா பாக்ஸைட் சுரங்க நிறுவனத்தை அமைத்திருக்கின்றன.
இதே நியமகிரியில் பன்னெடுங்காலமாக வசித்துவரும் டோங்க்ரிய கோண்ட் பழங்குடியினர், இந்த மலையையே நியமராஜா என்ற பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்; இவர்களின் பண்பாடும் மரபும் வாழ்வாதாரங்களும் இந்த மலையைத்தான் அடிப்படையாகக் கொண்டு இயங்குவன.
கடந்த ஆண்டு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில், அம்னெஸ்டி இன்டர்நாஷனன் அமைப்பின் ஆய்வாளர்கள், டோங்க்ரியா கோண்ட் இனத்தார் வசிக்கும் இடங்களில் பத்தொன்பது குக்கிராமங்களுக்குச் சென்றனர். இவற்றில் சில சுரங்கம் அமைய இருக்கும் மலையுச்சிக்கு வெகு அருகில் இருப்பவை. டோங்க்ரியா கோண்ட் இனத்தார் அம்னெஸ்டி அமைப்பின் ஆய்வாளர்களிடம் கூறியவற்றை வைத்து நோக்கும்போது, இவர்களின் நில உரிமை மரபுகள், வழிபாட்டு அடிப்படைகள் ஆகிய்வற்றை வேரறுப்பதாக இந்த்ச் சுரங்கத்திட்டம் அமைந்திருக்கிறது என்று ஆதாரப்பூர்வமாகத் தெரிகிறது. தவிர, இந்தச் சுரங்கத்திட்டம் இவர்களின் நீர், உணவு மற்றும் பணிக்கான உரிமை, போதுமான வாழ்க்கைத்தரம் மற்றும் பண்பாட்டு உரிமைகளுக்கு அபாயம் விளைவிப்பதாக அமைந்திருக்கிறது. மேலும் இந்தச் சுரங்கத்திட்டம், நியமகிரி மலைப்பகுதியின் ஒரே நீர் ஆதாரமாக விளங்குகிற, வற்றாத ஓடைகளின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடுமென்றும் சுரங்கத்திட்டத்துக்கென புறத்திலிருந்து வர உள்ள பணியாளர்களும் தொழிற்கருவிகளும் தங்கள் வாழ்க்கைமுறையின் மீது தீராத தாக்கத்தை ஏற்படுத்திவிடுமென்றும் இவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சுரங்கம்: மதிப்பீடுமில்லை, ஒப்புதலுமில்லை
இந்தியாவின் பழங்குடிச் சமுதாயத்தினரை நாட்டின் அரசியல் யாப்பு பட்டியல் வகுப்பினராக’க் கண்டு, சமுதாய அநீதி மற்றும் சுரண்டலிலிருந்து இவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்குண்டு எனக் கூறுகிறது. ஆனால் இந்திய மத்திய-மாநில அரசுகள் ஒரிஸ்ஸாவில் டோங்க்ரியா கோண்ட் இனத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையில் கடுமையாகத் தவறியிருப்பது எப்படி என அம்னெஸ்டி இன்டர்நாஷனல் அமைப்பின் இந்த அறிக்கை விவரிக்கிறது.
முதற்கண் அரசுகளும் சரி, இந்தச் சுரங்கத்திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் சரி, இந்தத் திட்டம் டோங்க்ரியா கோண்ட் இனத்தாரின் மனித உரிமைகளின் மீது விளைவிக்க இருக்கும் தாக்கம் குறித்துப் போதுமான அளவில் மதிப்பீடு செய்யவில்லை. ஸ்டெர்லைட் நிறுவனம் 2002-ஆம் ஆண்டிலும் ஒரிஸ்ஸா கனிம வள நிறுவனம் 2005-ஆம் ஆண்டிலும் செய்த மதிப்பீட்டு அறிக்கைகளை எடுத்துக்கொண்டால், சுரங்கமத்தின் வெகுஅருகில் வசிக்கும் மக்கள் தங்கள் நீர் மற்றும் உணவுத்தேவைகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் இந்த மலையையே நம்பியிருக்கிறார்கள் என்றபோதும் இந்தச் சுரங்கத்திட்டம் இவர்கள்மீது எத்தகைய தாக்கத்தை விளைவிக்கும் என இந்த அறிக்கைகள் ஆராயவேயில்லை. 
பன்னாட்டு மனித உரிமை வரையறைகளின் படி, இந்தத்திட்டத்துக்கு ஒப்புதல் வழ்ங்கும் முன்பாக இந்திய மத்திய-மாநில அரசும் அதிகாரிகளும் இந்தத்திட்டத்தின் முழு விபரங்களை முதற்கண் டோங்க்ரியா கோண்ட் இனத்தாருக்குத் தெரிவித்திருக்க வேண்டும், இதை இவர்கள் ஏற்கிறார்களா என்பதை அறிய முயன்றிருக்க வேண்டும்; இவர்களின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். இதன் பிறகே இந்தத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இயங்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை. 2003-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் இந்தச் சுரங்கத்திட்டம் மற்றும் சுத்திகரிப்பு ஆலை குறித்த பொது விசாரணை அமர்வு ஒன்றையும் மார்ச் மாதம் சுரங்கத்திட்டம் குறித்த பொது விசாரணை அமர்பு ஒன்றையும் இந்திய சுற்றுச்சூழல் விதிகளின் படி நடத்தினர். ஆனால் இந்தச் சுரங்கம் அமைய இருக்கும் நியமகிரி மலைப்பகுதியில் வசிக்கும் டோங்க்ரியா கோண்ட் இனத்தாருக்கு இந்த அமர்வுகள் பற்றிய எந்தத்தகவலும் அழைப்பும் இல்லை.
நியமகிரியின் பாதுகாக்கப்பெற்ற வனப்பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக ஆர்வலர் மூவர் தொடுத்த வழக்கு குறித்த தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கியது. சுரங்கத்திட்டம் வனப்பகுதி மீது ஏற்படுத்த்வல்ல தாக்கம் குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கும் நோக்கில், இந்தத் தீர்ப்பு ஆணையொன்றைப் பிறப்பித்தது, அதன்படி, ஒரிஸ்ஸா அரசு, ஒரிஸ்ஸா கனிம வள நிறுவனம் மற்றும் ஸ்டெர்லைட் இந்தியா நிறுவனம் மூன்றும் இணைந்து இந்தப்பகுதியின் அபிவிருத்திக்கென சிறப்பு நோக்குத் திட்டமொன்றை வடிவமைக்க வேண்டும். இதன்படி இவை மூன்றும் இணைந்து டோங்க்ரியா கோண்ட் மற்றும் பிற பழங்குடியினரின் அபிவிருத்தி மற்றும் வனப்பாதுகாப்புக்கான சிறப்பு நோக்குத் திட்டத்தின் பகுதியாக ஆலோசனைகளை முன்வைத்ததாகவும் தெரிகிறது. ஆனால் இந்த அமைப்புக்கள் யாரும் இவற்றின் விபரங்கள் எதையும் இந்தப் பழங்குடியினருக்கு அறிவிக்கவில்லை. இந்தத் திட்டத்தின் வடிவமைப்பின் இவர்களுக்கு எவ்விதப் பங்குமில்லை.
(இன்னும் வரும்)
படம்: லாஞ்சிகர் சுத்திகரிப்பு ஆலையும் சுரங்கம் அமையவுள்ள நியமகிரி மலைப்பகுதியும், கூகிள் வரைபடத்தில் கிராமங்களுடன் (க்ளிக் செய்து நோக்கவும்).
11.4.10
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 3
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment