ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 1
அம்னெஸ்டி இன்டர்நாஷனல் அமைப்பு ஃபிப்ரவரி ஒன்பதாம் நாள் வெளியிட்ட Don’t Mine Us out of Existence: Bauxite Mine and Refinery Devastate Lives in India அறிக்கையின் சுருக்கம் இதோ:
"எம்முடைய மலையை எம்மிடமிருந்து பறித்து நாங்கள் பட்டினி கிடக்க நேரிட்டால், அதற்கு நீங்கள் எல்லோரும் பொறுப்பு."
-- நியமகிரி மலையில் வர உள்ள பாக்ஸைட் சுரங்கத்தின் மிக அருகில் உள்ள பழங்குடிக் கிராமத்தில் ஒரு பெண்மணி.
ஒரிஸ்ஸா மாநிலத்தின் தென்மேற்குப்பகுதி, ஏற்கனவே அதிக வறுமை நிலவும் பிரதேசம். இப்போது வேதாந்தா குழுமத்தினர் இங்கே லாஞ்சிகர் என்ற இடத்தில் செயல்படுத்தும் லான்அலுமினா சுத்திகரிப்பு ஆலை, அடுத்துள்ள நியமகிரி மலைப்பகுதியில் செயல்படுத்த விழையும் பாக்ஸைட் தாதுச் சுரங்கம் இரண்டும் இங்குள்ள மக்களை அச்சுறுத்தத் தொடங்கிவிட்டன. இந்த வேதாந்தா குழுமம், பிரிட்டனில் வைத்து இயங்கும் இந்தியப் பன்னாட்டு நிறுவனம். இந்த இரண்டு திட்டங்களால் உண்டாகியிருக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி அம்னெஸ்டி இன்டர்நாஷனல் அமைப்பு கொணர்ந்திருக்கும் புதிய அறிக்கையே Don’t Mine Us out of Existence: Bauxite Mine and Refinery Devastate Lives in India என்பது. இந்தத் திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் செயலிலிருந்து இப்பகுதி மக்கள் எவ்வாறும் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இந்த அறிக்கை விளக்குகிறது. இப்பகுதி மக்களின் மண்ணும் வனமும் பிறர் லாபமீட்டப் பயன்பட்டுவிடும் நிலை உருவாகியிருக்கிறது.
லாஞ்சிகர் சுத்திரிப்பு ஆலையை அடுத்துள்ள மக்களின் மனித உரிமைகள், குறிப்பாக இவர்களின் நீர், மருத்துவத்தேவைகள், சுகாதாரமான சுற்றுச்சூழல் போன்றவற்றுக்கான உரிமைகள் ஏற்கனவே மீறப்பட்டுவிட்டன. சுத்திகரிப்பு ஆலையிலிருந்து உற்பத்தியாகும் மாசுபாட்டின் அளவு கூடியிருக்கிறது, அதைக் கையாளும் வழிமுறை தெரியாத நிலை. இந்த சுத்திகரிப்பு ஆலையால் ஏகப்பட்ட பிரச்னைகள். இது பலரும் பயன்படுத்தும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, அருகில் பல கிராமங்கள் உள்ளன, என்றபோதும் இந்த ஆலையை ஆறுமடங்கு பெரிதாக்க அனுமதி வழங்கலாமா என்று யோசித்து வருகிறது.
பாக்ஸைட் தாதுப் பொருளைப் பொறுத்தவரை, டோங்க்ரியா கோண்ட் எனும் பழங்குடியினர் தம்முடையது எனக் கூறிவரும் நிலங்களில் அமைய இருக்கிறது. ஏற்கனவெ இந்தப் பழங்குடியினர் சமுதாயம் எந்த நிமிடமும் அழிந்துவிடலாம் என்ற நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் தாம் வணங்கும் நியமகிரி மலை, தங்கள் வாழ்க்கைமுறை, தங்கள் நீர், உணவு, வாழ்வாதாரங்கள் மற்றும் பண்பாட்டு அடையாளத்துக்கான உரிமைகள் யாவும் கருவறுக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இவர்கள் தொடர்ந்து வசித்துவருகிறார்கள்.
2008-ஆம் ஆண்டு டிஸம்பர் மாதம் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நியமகிரி பாக்ஸைட் சுரங்கத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல்-அனுமதியை அளித்துவிட்டது; இனி திட்ட நிறைவேறுவதற்கு வனத்துறை-அனுமதி மாத்திரமே பாக்கி. ஆனால், இந்தத் திட்டம் அங்கு வசிக்கும் மக்கள்மீது என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறியும் முறைமைகள் குறைபாடுகள் கொண்டவை. தவிர, மத்திய-மாநில அரசுகள், பன்னாட்டுச்சட்டப்படி இங்குள்ள பழங்குடியினரின் மனித உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியுள்ளன. இங்கு செயல்பட உள்ள ஒரிஸ்ஸா கனிமவள நிறுவனமும் சரி, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நிறுவனமும் சரி, பழங்குடியினரின் கவலைக்ளைக் கண்டுகொள்ளாமல் செயல்படுகின்றன; மாநில-மத்திய அரசுகளின் விதிகள்-சட்டங்களை மீறியுள்ளன, வர்த்தகச் செயல்பாடுகள் மனித உரிமைகளை மீறக்கூடாது என்று பன்னாட்டு அளவில் ஏற்கப்பட்ட நியமங்களைப் பின்பற்றத் தவறியுள்ளன.
எனவே, மேற்கண்ட பிரச்னைகளைத் தீர்க்கும்வரை, இந்திய அரசும் சரி, வேதாந்தா குழுமமும் சரி, லாஞ்சிகர் சுத்திரிகப்பு ஆலையை விரிவாக்கக் கூடாது, நியமகிரியில் சுரங்கம் வெட்டக்கூடாது என அம்னெஸ்டி இன்டர்நாஷனம் அமைப்பு கோருகிறது. அதே நேரத்தில் இந்திய அரசு, இந்தத் திட்ட நிறைவேற்றம் பற்றிச் சிந்திக்கும் முன்பாக இவை பற்றிய முழுமையான தகவல்களை இங்குள்ள மக்களுக்கு ஒளிவுமறைவின்றி அளித்து, உண்மையில் இவர்கள் இந்தத்திட்டங்களை விரும்புகிறார்களா என்பதைக் கண்டறிய ஒரு வழிமுறையை நிறுவ வேண்டும் என்றும் (free, prior, informed consent) கோருகிறது.
கறைபடிந்த வரலாறு
நியமகிரி பாக்ஸைட் தாதுச் சுரங்கமும் சரி, லாஞ்சிகர் சுத்திகரிப்பு ஆலையும் சரி, பத்தாண்டுக்கால, கறைபடிந்த வரலாறு கொண்டவை. இவையிரண்டும் தொடக்கத்திலிருந்தே ஒரே திட்டமாக வடிவமைப்புப் பெற்றவை. அதாவது நியமகிரியில் பாக்ஸைட் வெட்டியெடுத்து அதை லாஞ்சிகரில் சுத்திகரிப்பது எனத்திட்டம். ஆனால் இந்தத்திட்டம் 2004-ஆம் ஆண்டுவாக்கில் சுரங்கம், சுத்திகரிப்பு என இரு திட்டங்களாகச் செயல்பாடு பெற்றது. இப்படிப் பிரிப்பதைச் சூழியல்-ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இப்படிப்பிரித்தால் இந்த முழுத்திட்டம் சூழலுக்கு எந்தெந்த வகையில் தாக்கம் விளைவிக்கும் என்பதை முறையாக ஆராய் வழியின்றிப் போய்விடும் என்பதே இவர்களின் விமர்சனத்துக்குக் காரணம். தவிர, தனித்தனித் திட்டங்கள் என்றாகிவிட்டால் இருக்கும் விதிகளின் நெளிவுசுழிவுகள் சிலவற்றைப் பயன்படுத்தி இவை அமைச்சக அனுமதிகளைப் பெற்றுவிடும் என்றும் இவர்கள் அஞ்சினார்கள்.
நியமகிரி மலை வனப்பகுதி நிலத்தில் சுரங்கம் வெட்ட அனுமதிப்பதை எதிர்த்து ஆர்வலர் மூவர் வழக்குத்தொடுத்ததை அடுத்து வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குச் சென்றது. சுற்றுச்சூழல் பிரச்னைகளில் தனக்கு ஆலோசனை கூறுவதற்கென இந்திய உச்ச நீதிமன்றம் அமைத்த மத்திய அதிகாரக் குழு, இந்த வழக்கில் சில அம்சங்களின்மீது விசாரணை நடத்தியது. இந்தக்குழு 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையில், இந்தத் திட்டத்தைச் சுரங்கம்-சுத்திகரிப்பு ஆலை என இருதிட்டங்களாகப் பிரிப்பதை விமர்சித்தது. "இந்தப்பிரசனையில் சுத்திகரிப்பு ஆலைக்குச் சுற்றுச்சூழல் மற்றும் வனச்சட்ட அனுமதிகளில் தேவையற்ற சலுகையிருப்பது நன்றாகவே தெரிகிறது, இத்தகைய பிரச்னைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் மாநில அரசும் பொதுநலன் மற்றும் தேசிய நலன் என்ற அறுதிலட்சியங்களை வைத்துக் கையாள விரும்புகின்றன, அவற்றுக்கு அந்த உறுதி உண்டு என நம்பிக்கை தோன்றவில்லை" என இந்தக்குழு தன் அறிக்கையில் கூறிவிட்டது.
(இன்னும் வரும்)
படங்கள் - போராடும் டோங்க்ரியா கோண்ட் இன மக்களிடம் அம்னெஸ்டி அறிக்கையைத் தந்தபோது, லாஞ்சிகர் ஆலையும் அடுத்துள்ள ஒரு கிராமமும்
10.4.10
ஒரிஸ்ஸாவில் என் ஆய்வுப்பணி - 2
Subscribe to:
Post Comments (Atom)
5 கருத்துகள்:
உங்கள் கட்டுரையை ஆங்கிலத்தில் வாசித்தேன். ஒரு முக்கிய ஆய்வுபூர்வமான template. கொல்கத்தாவில் சாதாரண இரும்பு வியாபாரியான வேதாந்தாவின் promoter அகர்வால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய கோடிஸ்வராக ஆனது தற்செயல் அல்ல. வேதாந்தாவின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரசின் பல முக்கிய பிரமுகர்களூக்கும் பங்கு உண்டு. மேலும் வேதாந்தாவின் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு பல முறை பணி நிமித்தமாக பல உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியிருக்கிறேன். அபாயகாரமான இவ்வாலையில் மாதத்திற்கு குறைந்தபட்சம் 2 அல்லது 3 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி இறப்பதை என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியும் இருக்கிறார்கள். தூத்துக்குடியின் நிலத்தடி நீர் மாசு அடைந்ததற்கு ஸ்டெர்லைட் முதற் காரணம். முன்னேறிய மேற்கத்திய நாடுகள் ஒதுக்கிய தொழில்களும்/தொழில்நுட்பங்களும் ( copper refining and bauxite refining) அகர்வால் போன்றவர்களை திடீர் கோடிஸ்வரர்களாக ஆக்கியிருக்கிறது.நீங்கள் ஆய்வு செய்த பகுதியில் மாவோயிசம் தாக்கம் இருக்கிறதா?
1. ரியலைன்ஸ், வேதாந்தா உள்ளிட்ட பல்வேறு இந்தியக்குழுமங்களின் திடீர் வளர்ச்சியில் ஆளும் கட்சிகள் யாவற்றுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை பல்வேறு ஆய்வாளர்கள், பத்திரிக்கைக்காரர்கள் ஆதாரத்துடன் முன்வைத்திருக்கிறார்கள்.
2. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட வேதாந்தா குழுமத்தின் இந்திய ஆலைகளின் முறைகேடுகள் பற்றி 2005-ஆம் ஆண்டே வெளியான அறிக்கை இதோ:
http://www.indiaresource.org/issues/globalization/2005/RavagesThroughIndia28.pdf
3. நான் ஆய்வுசெய்த பகுதியில் லாஞ்சிகர்-நியமகிரிப் பகுதியில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்குப் பொதுவாக செல்வாக்கு அதிகம். பழங்குடியினர், தலித் மக்களில் பெரும்பாலானோர் சிலகாலம் முன்புவரை காங்கிரஸை ஆதரித்தவர்கள். இப்போது எந்தக் கட்சியையும் அவ்வளவாக ஆதரிப்பதில்லை. ஆனால் எல்லாக்கட்சிக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
எடுத்துக்காட்டாக, இடைவிடாத போராட்டத்தில் இருப்போரில் பலர் காங்கிரஸ் கட்சியினருடன் பேசுவோர்தாம். இங்கெல்லாம் பொதுவாகவே இடதுசாரி அமைப்புக்களின் தாக்கம் சற்றுக் குறைவு. தற்போது ஆயுதப்போராட்டத்தை முதன்மையாக ஏற்காத ஜனசக்தி, லிபரேஷன் முதலான் தீவிர இடதுசாரி அமைப்புக்கள் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கே ஆயுதம் தாங்கிய் மாவோயிசப் போராளிகள் அறவே இல்லை.
ஆனால் அடுத்த ராயகடா, கோராப்பூட் மாவட்டங்களில் பழங்குடியினர் பகுதிகளில் மாவோயிஸத் தாக்கம் நிறைய உண்டு.
நாகார்ஜூனன்,
விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் காட்டிய சுட்டியை வாசிக்கிறேன்.
அம்பானியின் லீலைகளை விலாவாரியாக விவரிக்கும் புத்தகம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. Hamish mcdonald எழுதிய polyster prince கீழ்க்காணும் சுட்டியில்.
http://www.scribd.com/doc/3924530/Polyester-PrinceThe-Real-Story-of-Dhirubhai-AmbaniBanned-in-India
Collective Sin......இதில் முக்கியமானது அதுவே.
Post a Comment