ஓரான் என்பது அல்ஜீரியா நாட்டின் துறைமுக நகரம். ஆல்பெர் காம்யுவின் கட்டுரைகளில், கொள்ளைநோய் (La Peste) நாவலில்தான் இந்த நகர் பற்றி முதலில் வாசித்தேன். குறிப்பாக, கொள்ளைநோய் நாவலில். அல்ஜீரியாவில் பிறந்த ஃப்ரெஞ்சு நாட்டவரான காம்யு, 1941-ஆம் ஆண்டு பாரீஸ் நகர் வந்து நாஃஸி ஆக்கிரமிப்பை எதிர்க்கும் Combat குழுவில் இணையுமுன்பாக இளைஞராக வசித்திருக்கிறார், ஓரான் நகரில்.
அதற்கு ஆறாண்டுகள் கழித்து, அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகே, காம்யு இந்த நாவலை வெளியிட்டார். நகரைத் தாக்கும் கொள்ளை நோய்க்கு முகம் கொடுக்கிறார்கள், ரியு என்ற மருத்துவரும் சக மருத்துவப் பணியாளர்களும். இங்கே கொள்ளைநோய் என்பது கொள்ளைநோயைத் தாண்டி எதைக் குறிப்பது என்ற கேள்வி எழுந்தது, இதை அந்தக் காலகட்டத்தில் நாஃஸிஸத்தின் ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டு எழுதினார்கள் என்றாலும் இந்தக் கொள்ளைநோயின் தாக்கம் என்பதற்கு ஒரு நிரந்தரத்தன்மை உண்டு என்றே நினைக்கிறேன். அதாவது நகரம் என்ற புலத்தை ஒருவிதத் திணை என்று கொண்டால் அதன் அழிவு என்ற சாத்தியமான உள்ளுறையின் விரிவாக்கம்தான் கொள்ளைநோய். இதன் தாக்கம் ஓர் எதிர்விதி, மனித வாழ்வின் ஓர் எல்லை என்ற அபத்தம். ஆக, மனித இனத்தின் தற்கால நிலை பற்றிய, அதன் அபத்தமான விதி அல்லது எதிர்-விதி பற்றிய தீவிர அலசல் இந்த நாவல் எனலாம்.
சார்த்தரின் உள்ளுமையும் இன்மையும் (L'Être et le néant) தத்துவ நூலின் அதே கோட்பாட்டுப்பிரச்னைகளை காம்யு இந்த நாவலில் கையாண்டு எழுதியிருக்கிறார். இரண்டையும் ஒருசேர வாசித்தபோது நான் அடைந்த ஆச்சர்யத்தை அளவிடவே முடியவில்லை!
இன்னொரு காலகட்டத்தில் நான் வாசித்ததெல்லாம் மறந்து வஸந்தம் தவறிய வேற்றுகிரக வருஷம் என்ற ஸர்ரியலிஸச் சாய்வு கொண்ட கதையை எழுதினேன் - அதில் கொள்ளைநோய் ஒரு நகரத்தைத் தாக்குகிறது. கனாநிலையில் நான் எழுதின இந்தக்கதையை நவீன விருட்சம் வெளியிட்டபோது சூரத் நகரைக் கொள்ளை நோய் தாக்கிவிட்டது!
ஓரான் நகரைக் காம்யுவின் நாவலில் கொள்ளைநோய் தாக்குவது, இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில்தான். அதேவேளை நகரம் என்பதன் வரலாற்றிலிருந்தே காம்யு மிக ஆதாரமாக ஒன்றை எடுக்கிறார். பதினேழாம் நூற்றாண்டில் லண்டன் நகரைத் தாக்கிய கொள்ளைநோய், வரலாற்றில் மிகப் பிரபலமானது. சிரியா நாட்டின் தலைநகராக விளங்கும் தமஸ்கஸ்தான், மிகப் பண்டைய காலத்திலிருந்து நகரமாகத் தொடரும் இடம் என்கிறார்கள், அங்கும் கொள்ளைநோய் தாக்கியிருக்கிறது. ஓரான் நகரின் வரலாற்றைக் காணும்போது, இந்த நகரத்தை ஸ்பானியர், துருக்கியர், ஃப்ரெஞ்சுக்காரர் எனப் பலரும் ஆண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. குறிப்பாக, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃப்ரெஞ்சு நாட்டவர் ஆக்கிரமித்த உடனாகவே கொள்ளை நோய் பெரிய அளவில் தாக்கியிருக்கிறது - அதாவது 1849-ஆம் ஆண்டில். ஆனால் அதற்கும் முன்பாக, பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுகளிலும் ஓரான் நகரைக் கொள்ளைநோய் தாக்கியிருக்கிறது. இப்படிப் பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தார்கள்...
காம்யுவின் கொள்ளைநோய் நாவலுக்கு முன்பாகவே தம்முடைய விசாரணை (Der Prozess) நாவலை காஃப்கா எழுதிவிட்டார். கொள்ளைநோய் போன்ற ஏதும் வராமலேயே இதே அபத்தம் என்ற எதிர்-விதியைக் கையாண்டு எழுதியிருக்கிறார் என்பதில் இன்னும் ஆச்சர்யம்! காம்யு, தம்முடைய நாவலின் ஓரத்தில் காஃப்காவின் விசாரணை (Der Prozess) நாவலை வைக்கிறார். விசாரணை நாவலை ஒரு மர்ம நாவலாக பேதையொருவன் வாசிப்பதை விவரித்துச் செல்கிறார் காம்யு. காஃப்காவுக்கு இதைவிட அருமையாக அஞ்சலி செலுத்த முடியாது!
கிழக்கும் மேற்கும் சந்திக்கும் நகரான ஓரானிலிருந்து வெளியேறி வசித்த சிலரை அண்மையில் இங்கே லண்டனில் சந்தித்தேன். இப்போது சொந்த ஊர் திரும்ப முடியும் என்ற பரவசத்தில் இருந்தார்கள். இவர்களில் சிலர் ஃப்ரெஞ்சு அல்ஜீரியர்கள். சிலர் அராபியர். கொள்ளைநோய் நாவலில் வரும் ஓரான் பற்றிப் பேச்சு வந்தபோது அதை ஆன்மாவே அற்ற ஓர் நகராக, மரங்களோ புறாக்களோ இல்லாத நகராக காம்யு சித்தரித்திருக்கிறார், வேறு எவ்வாறும் அதைச் செய்திருக்க முடியாது என்றார்கள்.
ஓரான் நகர் உலகுக்கு அளித்திருப்பதில் முக்கியமானவை காம்யுவின் நாவலும் ரெய் என்ற இசைவடிவமும். ரெய் இசை, உடலின்பத்தை, பரவசத்தை நாடும் உன்மத்த நிலையைத் தூண்டுவதாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக இந்த இசைவாணர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் வைத்த தடைகள், அச்சுறுத்தல்கள் நிறைய. இதனால் ஓரான் இசைவாணர்கள் பலர் வெளியேறி வாழ்ந்தார்கள். ஊருக்கும் நாட்டுக்கும் திரும்ப முடியாத நிலை. ரெய் இசையின் பெயர்பெற்ற பாடகர் காலித்துக்கும் அதே நிலை இருந்தது. ஆனால் இப்போது அவர் ஊர் திரும்ப முடிகிறது.
என்னுடன் பேசிய ஓரான் வாசிகள் யாவரும் ஒரு பாடலைப் பாடினார்கள். காலித் அங்கே செல்ல முடியாத் நிலையில் ஓரான் பற்றிப் பாடிய பாடல் - அஹ்மத் வஹ்பி என்ற பிரமாதமான பாடகர் முதலில் பாடிய பாடல்தான் என்றாலும் இதைக் காலித் மேடையில் ஆலாபனை செய்து பாடும்போது அபாரமாகச் செல்கிறது. இதே பாடலை மொரோக்கா நாட்டைச் சார்ந்த பாடகி அஸ்மா எல் முனவர் மாற்றிப்பாடும்போது அப்படியே லயித்துவிட்டேன்.
தென்னாட்டு இசை அறிந்தோர், இந்தப்பாடல் அமைவது வகுளாபரணம் ராகத்தில் என்று எளிதில் கூறிவிடுவர், வடநாட்டுச் செவ்வியல் இசை அறிந்தோர் இதை பஸந்த் முகாரி அல்லது ஹிஜாஸ் என்பர் - என்றாலும் பாடகரையும் இசைக்குழுவையும் கேட்டு ரசிப்போரையும் அரபு மொழியினர் தரப் என்று விவரிக்கும் உடற்பரவசத்தில் ஆழ்த்தும் உணர்வை எப்படி விவரிப்பது! குறிப்பாக, இந்தப்பாடலில் எல்-கோர்பா (el-Ghorba - الغربة) என்ற இடம் வரும்போதெல்லாம் பாடகர்களும் ரசிகர்களும் உருகுவதைக் கேட்கலாம். எல்-கோர்பா என்றால் ஊர்திரும்ப முடியாத ஒருவித ஏக்கம், அந்நியத்தன்மை என்று பொருள் என என்னிடம் பேசியோர் சாதித்தார்கள் - என்றாலும் அதற்கும் கொள்ளைநோயின் தாக்கத்துக்கும் தொடர்புண்டு என்றே எனக்குப்பட்டது.
ஷெப் காலித் பாடும் வஹ்ரன், வஹ்ரன், நரகமும் காண்பாய் நீ! - 1
ஷெப் காலித் பாடும் வஹ்ரன், வஹ்ரன், நரகமும் காண்பாய் நீ! - 2
அஸ்மா முனவர் பாடும் வஹ்ரன், வஹ்ரன், நரகமும் காண்பாய் நீ! - 1
அஸ்மா முனவர் பாடும் வஹ்ரன், வஹ்ரன், நரகமும் காண்பாய் நீ! - 2
இன்னும் எத்தனையோ காலம் நாடுதிரும்ப முடியாத என் மொழி பேசுவோருக்காக, இந்தப்பாடலைத் தமிழில் தருகிறேன். காலித் மற்றும் அஸ்மா பாடும் முழுவரிகளும் இந்தத் தமிழாக்கத்தில் இல்லை. இன்னொரு விஷயம் - ஓரான் என்பது ஃப்ரெஞ்சுத் திரிபு. நகரத்தின் அரபுமொழிப் பெயர், வஹ்ரன். சிங்கத்துக்கு அரபு மொழியில் ஒரு பெயர் விஹ்ர். வஹ்ரன் என்றால் இணைபிரியாத சிங்கங்கள் என்று பொருள்.
வஹ்ரன், வஹ்ரன், நரகமும் காண்பாய் நீ!
உன்னை விட்டகன்றார் அறிஞர்!
உன்னை விட்டகன்ற ஏக்கத்தில், குழப்பத்தில்
அவர்!
ஏக்கம் தருவதோ சோகமும் துரோகமும்!
வஹ்ரனின் ஹம்ரி (பகுதி)ச் சிறாருடன்
விளையாடிக் களித்தேன்
ஸிடி எல் ஹூரிச் சிறாருடன்
இளைமையைக் கழித்தேன்
என் வாழ்க்கை முழுதும்
என் கலையும் இவருக்கே.
என் மண்ணின்
இரவு யாவும் அழகு.
எம் குழலின், முழவின்
எதிரொலியும் அழகு.
அந்த மண்ணுக்குச் செல்லும்
எவரிடமும்
அதைக் கைவிடாதீர்
என்பேன்.
ஆயுள் முழுதும் மறவேன்
எம் மண்ணை,
எம் மூதாதையரை.
நீரும் மறவாதீர் என
எம் உறவுகளிடம் கேட்பேன்
அவரோ
மார்க்கம் துறந்து
கோப்பையில் குடியிருப்பார்.
கோப்பைகள் மேஜையில்
ஒரு டஸன்.
அவரோ
அவற்றில் பத்தையும்
டக்கென்று குடிப்பார்.
குடித்து வருந்துவார்,
கோப்பையின் சூன்யம் கண்டு.
அதன் அழகோ
கொள்ளைநோயின் அழகு.
என் இதயம் பெற்ற
சோகத்தில்
வருந்தி உன்னை அழைப்பேன் -
வஹ்ரன், வஹ்ரன், நரகமும் கண்டாய் நீ!
وهران وهران رحتي خساره
هجروا منك ناس شطارى
قعدوا في الغربه حيارى
و الغربه صعيبه و غداره
يا فرحي على اولاد الحمري
اولاد مدينه و سيدي الهواري
عديت معاهم صغري
لهم فني طول عمري
ما احلى صهريات بلادي
القصبه و القلالي صادي
يا اللي ماشين ليها غادي
وصوا يتهلوا في بلادي
عمري ما ننسى بلادي
أرضي و أرض اجدادي
وصيت اهلي على الناس
تركوا دينهم و تبعوا الكاس
يا الزينه بالكاس و المايده
راه عشره بلا فايده
وعدي على الطحطحه وعدي
كان زينها زين الودادي
رجعت غمه في فؤادي
وليت نبكي و ننادي
18 கருத்துகள்:
இப்பதிவு பல நினைவுகளையும், இயலாமைகளையும் கிளர்த்திவிட்டுச் செல்கின்றது; பாடலும் கூட.
.....
சார்த்தரின் Being & Nothingness ஐ குறிப்பிடுகின்றீர்களா? Being - 'இருத்தலிற்கு'ப் பதிலாய் 'உள்ளுமை' தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் விசேட காரணங்களுண்டா?
இருத்தல் - இருப்பு - Existence (English) - existence ( L'Être) - existenz (Deutsch)
உள்ளுமை என்ற சொல்லைக் கட-உள் என்ற இடத்திலிருந்து எடுக்க முடியும். எஸ். வி. ஆர். எழுதிய எக்ஸிஸ்டென்ஷியலிசம் ஓர் அறிமுகம் இரண்டாம் பதிப்பின் போதான உரையாடலில் நான் கற்றுக்கொண்ட சொல் இது.
உள்ளுமை - Being (English) - L'Être (L'Être et le néant : Essai d'ontologie phénoménologique, J.-P. Sartre) - Sein oder Dasein (Sein und Zeit) (Deutsch, Heidegger).
கட-உள் என்பதில் உள் என்பது immanence ஐ சுட்டுவதாகவே நான் சிந்திக்கிறேன். Being என்பதற்கு இருப்பு என்பதே பொருத்தமான சொல் என்பது எனது துணிபு. ஏனெனில் negation என்பதின் சாத்தியங்களை இரு என்ற வேர்ச்சொல்லுடன் அழகுற பயன்படுத்த முடியும். இல்லாமலிரு என்பது போல. உள்ளுமை என்ற பதம் அதற்கான சாத்தியங்களை அளிப்பதில்லை. தமிழிலில் தத்துவ சிந்தனையை வளர்த்தெடுக்க நாமனைவரும் being என்பதை இருப்பு என்றே குறிப்பிடுவது நலம் பயக்கும் என்று நினைக்கிறேன்.
கடவுள் என்ற பதத்தை பிறித்து கடக்கும் உள்ளுறை என்ற தர்க்க வகைமையை "இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்" என்ற கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இதை transcendental immanance ஆக மட்டும் பாவிக்காமல், தமிழுக்கேயுரிய ஒரு தத்துவ சொல்லாக்கமாக நான் எழுத முனைந்திருக்கும் நூலில் பயன்படுத்த எண்ணியுள்ளேன்.
சும்மா இருக்க வைத்தான் சூத்திரத்தை நானறியேன் அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி
என்கிறார் பட்டினத்தார்.
செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளன்றும் அறிந்திலனே!
என்கிறார் அருணகிரியார்.
சொல்லால் முழக்கிலோ சுகமில்லை. மெளனியாய்ச் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்ஜோதியே சுக வாசியே.
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம்
என்றெல்லாம் உரைக்கிறார் தாயுமானவர்.
இரு என்ற சொல்லை இந்த வம்சாவழிப்பொருளில் வைத்து நோக்கும்போது, (சொல்லுடன்/சொல்லற்ற) இருப்பு என்பது existence-க்குத்தான் அருகில் வருகிறது.
தெர்ரிதா சிலாகிக்கும் ஹைடெக்கர், லெவினாஸ் வழியில் Being என்பதைப் பரம்பொருளான கடவுளுடன் (The Great Chain of Being) தொடர்பின்றிக் காண இயலாது. இங்கே Being என்பதை transcendence சார்ந்து மட்டும் சிந்திக்கத் தேவையில்லை. immanence-உடன் வைத்துச் சிந்திக்கும் போது கட-உள் என்பதிலிருந்து நவீனப்பொருளாக எளிதில் உள்-(ளு)-மை வந்துவிடுகிறது.
தவிர, இன்மை என்பது இருத்தலுக்கும் சரி, உள்ளுமைக்கும் சரி. negation-ஐத் தரும் நிலையில் இயங்கவல்லது. மாறாக, இருப்பை நீங்கள் Being-ஆக விவரிக்க, அதை வாசிப்பவர் existence-ஆகப் பொருள்கொண்டு போகலாம். ஆக. இருப்பு-இருத்தல் ஆகிய பிரயோகங்கள், existence என்ற பொருளைத் தாண்டி இயங்க முடியாமல் போகலாம்.
Negation தேவைதான்; ஆனால் அது ஒரு பெரும்பிரச்னையல்ல என்பதை, அற என்ற சொல்லைச் சொல்லுக்குப் பின் வைத்துப் பொருளை - அதாவது பரம்பொருளை நோக்கிப் பாடி பட்டினத்தாரும் அருணகிரியரும் காட்டுகின்றனர். தாயுமானவரும் பரம்பொருளை நோக்கிச் செல்கிறார்.
இன்று அற என்ற சொல செந்தமிழில் மாத்திரம் negation-ஆக இருக்க, அறது என்ற சொல் மலையாளத்தில் பேச்சில் negation-ஆகத் தொடர்வதையும் நோக்கலாம்.
ஏற்கனவே தென்னாட்டிலுள்ள இந்த மொழி- தத்துவச்சிந்தனையைக் கைக்கொண்டு, சற்றே நவீனமாக்கி இயங்கலாம் என்று படுகிறது. எனவே அதை "வளர்த்தெடுக்க நாமெல்லாம்" என்பதில் என்னைச் சேர்க்காமலிருந்தால் எனக்குப் பிரச்னையில்லை!
நாமனைவரும் என்பது ஒரு பரிந்துரைதான் (suggestion). அதில் வற்புறுத்தல் ஏதும் கிடையாது. தமிழில் சமகால சிந்தனைகளை/ தத்துவத்தை எழுதுபவர்கள் நிறையப் பேர் கிடையாது என்பதால்,சொற்பிரயோகங்கள் குறித்த இத்தகு விவாதங்கள் அவசியம் என்று நினைக்கிறேன். அதுவும் being போன்ற மிக முக்கியமான சொல்லைக் குறித்து விவாதம் இன்றியமையாதது.
என்னனப் பொருத்தவரை Existence என்பதை வேறுபடுத்திக்காட்ட வேண்டும் தருணத்து இருத்தல் என்ற சொல்லையும் அதன் மாற்று வடிவங்களையும் பிரயோகிக்கலாம். அதாவது சாரம் மற்றும் இருத்தல் ஆகிய இரண்டுமே இருப்பின் பரிமாணங்கள் என்று இருமைவாத நோக்கில் சொல்லலாம். இதுதவிரவும் உள்ளுமைக்கும், இருப்பிற்குமான பிரயோக சாத்தியங்களின் வேறுபாட்டை குறித்து ஒரு கட்டுரையே எழுதலாம் என்று தோன்றுகிறது. எழுதியவுடன் தெரிவிக்கிறேன். எனக்கும் அத்தகைய முயற்சி ஒரு தெளிவைக் கொடுக்கும்.
பயனுள்ள விவாதம். existence, being இரு சொற்களுக்குமான அர்த்த வித்யாசம் முக்கியம். அதே நேரத்தில் இன்மையையும் உள்ளீடாக சுட்டப்பட்டாக வேண்டும். “உளதாதல்” என்ற சொல் being என்பதற்குப் பொருத்தமாக இருக்குமோ? உள்ளுமையின் (கட)உள் தொனிக்க “இலதாதலின்” negation என்பதைக் குறிக்கும் சாத்தியமும் கொண்டதாக இருக்கிறது. மேலும், being-ன் "-ing" விகுதியின் முக்கியத்துவமும் நிலைபெறுகிறது இச்சொல்லில். கருத்துகளை எதிர்பார்க்கிறேன். பெருந்தேவி
second thought: ”உளதாதல்” என்பதைவிடவும் “உளல்” இன்னும் பொருத்தமான சொல்லாக இருக்கும் எனக் கருதுகிறேன். நம்மாழ்வாரின் 'உளன் எனில் உளன், உளன் அலன் எனில் அலன்' நினைவுக்கு வருகிறது.
ஹைடெக்கரைத் தீவிரமாக
வாசிப்போர்க்கு Sein (Being) என்ற சொல் இருத்தலை, மனித-இருத்தலைத் தாண்டிச் செல்வது என்பது புரியும். தவிர பெயரா (Dasein - being-there), வினையா (there-being) என்ற ஊடாட்டம் அவரில் இயங்குவதும் தெரியும். ஆக, சொற்கள் பெயரும் வினையும் இன்ன பிறவுமாக இணைவதுபோல Being என்பதும் கணணி, இணைவு என ஹைடெக்கரின் பயன்பாட்டிலிருந்து கொள்ள முடியும்.
தமிழை எடுத்துத்கொண்டால் உளல் என்ற வினைச்சொல், உள் எனக் குறுகும் நிலையில் கட- என்ற வினையுடன் சேர்ந்துகொண்டது. இந்த வினையாக்கத்தை விவரிக்கப்புகும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம்தான் நீங்கள் குறிப்பிடுவது.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே.
நம்மாழ்வாரின் முதற்பாசுரமே இது பற்றியதுதான். ஒருகாலம் சொல்லறுத்து ஒடுங்கியிருந்த அவர் பிறகு பாசுரம் பாடத் தொடங்கும்போதே,
உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வெற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழன் மனனே
என்கிறார். இதில் இணைத்துக் கடக்கும், கடந்து இணைக்கும் ஊடாட்டம் தொடங்குகிறது. அடுத்து மொழியில் பொதுப்பெயர்களாக இயங்கும் சுட்டுப்பெயர்களை, குணங்களை உள்ளிணைத்துக் கடக்கிறார்:
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு-அவை
ஆம் அவை ஆயவை ஆய் நின்ற அவரே
பிறகுதான் நீங்கள் கூறும் பாசுரம் வருகிறது. பெயரும் வினையும் ஊடாடிக் கடக்கும், கடந்து ஊடாடும் நிலையாக இதைக் கொள்ளலாம். இதே போல கந்தர் அனுபூதியை முடிக்கும் அருணகிரியாரும்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய்
விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
என்கிறார். ஆக, தமிழ் மரபில் உரு-அரு என்ற பெயர்கள், உளல்-இலல் என்ற வினைகள் இணைவதைக் கவனித்து இந்த இணைவை நவீனமாக
நவீனமாக எப்படி எழுதுவது என்பதைத்தான் இன்றைய பிரச்னைப்பாடாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் உள்ளுமை என்பது என்னைப் பொறுத்தவரை ஓர் இடைக்கால ஏற்பாடு மாத்திரமே..
பெருந்தேவியின் பரிந்துரையில் ஏன் இருப்பு/இருத்தல் வேறுபாடு செயல்படாது என்பதற்கு காரணங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. என் தரப்பை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
Being - இருப்பு
Existence - இருத்தல்
Dasien - அங்கிருத்தல்
மேலும் இது ஏதோ ஒரு வார்த்தையில் தீரும் பிரச்சினையில்லை. நாம் பல்வேறு நுட்பமான பிரச்சினைகளை இந்த சொல்லினடிப்படையில் கையாளவேண்டும். "உளல்""உள்ளுதல்" "உளதாதல்" ஆகிய சாத்தியங்கள் "உள்" என்பதை வினைச்சொல்லாக பாவிக்கின்றன. சமகாலத் தமிழில் "உள்" வினைச்சொல்லாக பயன்படுத்துப்படுவதில்லை. நான் சென்னையில் சில மாதங்கள் உள்ளினேன் அல்லது உள்ளுவேன் என்று இன்றைக்கு எழுத முடியாது. இதனால் விளையக்கூடிய சிக்கல்கள் பல. Being ஐ existence இலிருந்து எப்போதுமே வேறுபடுத்துவது துவைதமாகும். நான் பரிந்துரைக்கும் இருப்பு/இருத்தல் வித்தியாசம் இந்த வேறுபாட்டை மென்மையாகக் கையாளும் என்று நினைக்கிறேன்.
நன்றி நாகார்ஜுனன். என்னைப்பொறுத்தவரை, “உளல்” மனித இருத்தலைத் தாண்டிச்செல்வதாகவே இருக்கிறது. மேலும், ”உளல்” என்பதில் உரு/அரு இரண்டுக்குமான இடம் உள்ளது என்று தோன்றுகிறது. மேலும் “உள்-” என்ற சொல்லில் “மெய்ம்மை” என்ற அர்த்தமும் ஒரு கண்ணியில் இணைகிறது. எனக்கு “உள்ளுமை”யில் இருக்கும் பிரச்சினை--”மை” விகுதி, being-இன் "-ing"-யை விட்டுவிலகி நிலைத்தன்மையோடு தென்படுவதே.
இது நாகார்ஜுனனின் பெருந்தேவிக்கான எதிர்வினையை பார்த்துவிட்டு எழுதுவது. முதலில் ஹைடக்கெரையோ, தெரிதாவையோ தீவிரமாக எப்படிப் படித்து புரிந்துகொள்கிறோம் என்பது முக்கியம். இப்போதைக்கு நான் அதைப்பற்றி எதுவும் சொல்வது தேவையும் சாத்தியமுமற்றது என்று நினைக்கிறேன். ஏனெனில் ஹைடக்கெரின் மானுடவாதம் எப்படிபட்டதென்பதை நாம் தெரிதாவுடன் சேர்ந்து கூர்ந்து அவதானிக்க வேண்டும்.
நாகார்ஜுனன் சொல்கின்ற எல்லா காரணங்களையும் உள்ளடக்கிதான் நான் இருப்பு என்பதை பரிந்துரை செய்கிறேன். இருப்பு என்பது பெயர்ச்சொல் - அது இரு என்ற வினைச்சொல்லுக்கு மிக அருகில் இருக்கிறது. அதேசமயம் இருத்தல் என்ற வினையிலிருந்து வேறுபட்டுமிருக்கிறது. இருப்பு என்பது எந்த ஒரு தனி இருப்பையும் (மானுட, அமானுட) இருத்தல்களையும் உள்ளடக்கியது. இப்படிச்சொல்லும்போது உள்ளல் இருப்பினுள் இருப்பதைக் காணலாம். தனி இருத்தல் தனி இருப்பாக "கட"ந்தேறும் மாயமும் உள்-கொண்டதே இருப்பெனவும் காணலாம். "Trancendentants abound" என்று லதூர் குறிப்பிடும் அர்த்தத்தையும் இங்கு பரிசீலிக்க முடியும்.
நீங்கள் மேற்கோள் காட்டிய "சும்மா இரு" வரிகருடன் பின்வருவற்றையும் சேற்றுக்கொல்ள்ளலாம்:
"சும்மாயிரு சொல்லற என்றலுமே அம்மா பொருள் ஏதும் அறிந்திலமே .." (Tirumoolar)
"சும்மாயிரு, ஒரு பொல்லாப்பும் இல்லை" (Yogar)
1. ராஜன், உங்கள் பதிலில்தான் எத்தனை செயப்பாட்டுவினைகள்! அவையின்றி எழுத முடியாது என்றா நினைக்கிறீர்கள்!
2. Da-Sein என்பது Being-there, There-being என்ற ஊடாடட்டத்தில் இயங்குவது. இதை ராஜன் முன்வைப்பது போல "அங்கிருப்பது" என ஆக்க இயலாது.
3. ஹைடெக்கரை எடுத்துக்கொண்டால் சார்த்தரின் மானுடவாதத்தை விமர்சிக்கிறார். பிறகு ஹைடெக்கரிடம் மானுடவாதத்தின் எச்சம் இருப்பதாக தெர்ரிதா ஓரிடத்தில் வாதிடுகிறார்; ஆனால் அதே வாதத்தில் தாமும் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதை தெர்ரிதா உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. தெர்ரிதாவின் Le fins de l'homme கட்டுரையை வாசித்தவன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன். இதுபற்றி நிறையப் பேசலாம்.
4. ஹைடெக்கரும் தெர்ரிதாவும் எந்த அளவு கிரேக்க மொழியில் நிலைகொண்டு பேசுகிறார்கள் என்பதற்காகவாவது இவர்களை வாசிக்க வேண்டும்.
5. ஆக, மரபான தமிழ் எளிதாக உளர்(ல்)-இலர்(ல்) என்ற வகையில் கடவுளை அடைந்துவிட்டிருக்கிறது என்பதை நம்மாழ்வார், பட்டினத்தார், அருணகிரியார், தாயுமானவர் வழி விளக்கினேன். அதை எதிர்கொள்ள வேண்டிய அவசியமுண்டு.
6. உளல் என்பது வினைச்சொல்லாக இருப்பினும் உள் எனக்குறுகும் போது பெயர்-வினை இரண்டும் தொக்கிநிற்பதை தமிழிலக்கணம் தெரிந்தோர் உணர்வர். தவிர, உளல் என்பது சமகால மொழியில் புழக்கத்தில் இல்லை என்பது வைக்கத்தக்க வாதமல்ல. அப்படிப்பார்த்தால் தத்துவக்களத்துக்கான சொற்கள் பல தமிழிலும் சரி, வேறு மொழிகளிலும் வந்திருக்கவே முடியாது - ஹைடெக்கர், தெர்ரிதா உள்ளிட்ட யாரும் எழுதியிருக்கவே முடியாது!
7. இங்கே வருவது த்வைதமல்ல, இணைவும் கண்ணியும்தாம். ஆக, இருப்பு/இருத்தல்/உளல்/உள்ளுமையை விரிக்குமுகமாக Being என்பது என்ன என்பதே கேள்வி. இதை உட்கடக்க அன்றைய தமிழ் கட-உள் என்ற சொல்லை அடைந்தது. ஆனால் இன்றைய உலகம் கட-உளைக் கொன்றுவிட்டது (tragedy) அல்லது புறத்தே இழுத்துவந்துவிட்டது (farce) என்பதை அறிகிற-உணர்கிற நிலையில் இன்று எதை, எப்படி ஏகுகிறோம் என்பது முக்கியம். ஆக, இங்கே துணிபுகள் அவசியமில்லை, கற்றலே அவசியம்.
சுருக்கமாக ராஜனுக்கு: //சமகாலத் தமிழில் "உள்" வினைச்சொல்லாக பயன்படுத்துப்படுவதில்லை. நான் சென்னையில் சில மாதங்கள் உள்ளினேன் அல்லது உள்ளுவேன் என்று இன்றைக்கு எழுத முடியாது.//
“உள்ளேன் ஐயா” என்பது நடைமுறையில் பாவிக்கப்படுகிறதுதானே. “உள்” என்பது புழக்கத்தில் இருப்பதே.
//பெருந்தேவியின் பரிந்துரையில் ஏன் இருப்பு/இருத்தல் வேறுபாடு செயல்படாது என்பதற்கு காரணங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. //
ஆமாம். இப்படிச்சொல்லலாம் என்று நினைக்கிறேன். ””Sein (Being) என்ற சொல் இருத்தலை, மனித-இருத்தலைத் தாண்டிச் செல்வது” என்கிற அடிப்படையிலேயே இருப்பு/இருத்தலை விட காத்திரமாக எனக்குத் தொனித்த ”உளல்” என்பதைத் தெரிவுசெய்தேன். (நம்மாழ்வாரின் பாசுரம் இதற்கு உதவியது)
பெருந்தேவி,
மிகச் சுருக்கமாக:
1. "உள்ளேன் ஐயா" அற்புதமான உதாரணம். பிரசன்னத்தை உறுதிப்படுத்துவது. "நேற்று உள்ளினேன் ஐயா"என்று கூற முடியாது. இதுவே absence என்ற negation பற்றிய என் கவலை.
2. இருப்பு (being)/ இருத்தல் (existence) என்று ஏன் வேறுபடுத்த முடியாது என்பதே என் கேள்வி.
என்னைப்பொறுத்தவரை இது மிக முக்கியமான பிரச்சினை. மேற்கொண்டு விரிவான கட்டுரையாகத்தான் எழுத வேண்டும். எழுதியவுடன் அதற்கான சுட்டியை இதே இடத்தில் தருகிறேன்.
நன்றி ராஜன். உன் கட்டுரையை எதிர்பார்க்கிறேன். உள்ளினேன், உள்ளுவேன் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். தமிழில் இச்சொற்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவற்றின் அர்த்தம் விழைவு சார்ந்ததாக, நினைப்பை ஒட்டி இருக்கின்றன (குறிப்பாக, புலவி நுணுக்கம், நாணுத் துறவுரைத்தல் அதிகாரங்களில் இருக்கும் குறள்கள் உதாரணத்துக்கு). தமிழில் being என்பதை “மேற்கத்திய” சிந்தனைகளை ஒட்டி மொழிபெயர்க்கும் அதே நேரத்தில், உளல் என்பது பற்றியும் அச்சொல்லின் வேரையும் தமிழ் அறிவுப்புலம் சார்ந்த்தும் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போலத்தான் உணர்கிறேன்.
ராஜன், “இருப்பு/இருத்தல்” குறித்து: நான் பிரச்சினை என்று நினைப்பது ஒரே வேரடியிலிருந்து (”இரு”) being, existence இரண்டையும் முன்வைக்க முடியுமா என்பதே.
மேற்கண்ட விவாதத்தின்/உரையாடலின் விளைவாக நான் எழுதிய "இருப்பில் அடங்கும் உண்மையும் இன்மையும்" என்ற கட்டுரையை இந்தச்சுட்டியில் காணலாம்: http://www.lumpini.in/ethiraadal-001.html
Post a Comment