பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

30.6.09

மீண்டும் சாரு நிவேதிதாவுக்குக் கடிதம்

எழுத்தாளர் சாரு நிவேதிதா இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதி இன்று - ஜூன் 30-ஆம் நாள் தம்முடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் மம்மி ரிட்டர்ன்ஸ்-1 கட்டுரையை வாசித்தேன். 2007 செப்டம்பர் தீராநதி இதழில் கடற்கரய் என்னுடன் நிகழ்த்திய நேர்காணலை முன்வைத்து என்னை விமர்சித்து சாரு நிவேதிதா எழுதிய கட்டுரை இது. என்னைப்பற்றி நிறைய hyperbole-களுடன் எழுதப்பெற்ற இதற்குப் பதில் எழுத வேண்டாம், என் பணி என்னைப்ப்ற்றிக் கூறும் என அப்போது எண்ணிக்கொண்டேன். இப்போதும் அதே எண்ணம்தான்.

அத்துடன், "இப்போது நாகார்ஜுனன் பைத்தியக்காரன் என்ற ஆள் பெயரில் ஒளிந்துகொண்டு என்னைப் பற்றிய ஒரு ஆபாசக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்கான எதிர்வினை நாளை வெளிவரும்" என்று எழுதியிருக்கிறார் சாரு நிவேதிதா.

ஜூன் 27-ஆம் நாள் சனிக்கிழமையன்று பைத்தியக்காரன் என்ற பதிவர் சாரு நிவேதிதா குறித்து எழுதிய சாரு: ஹி்ட்லர் ரிட்டர்ன்ஸ் என்ற பதிவுக்கும் எனக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை.

சாரு நிவேதிதாவின் எழுத்துமீது எனக்கு வியப்பும் உண்டு, விமர்சனமும் உண்டு, அதை சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் நாள் தொடங்கி எழுதியுமிருக்கிறேன். ஆனால் பைத்தியக்காரன் பதிவில் உள்ள சாரு குறித்த கருத்துக்கள், அவற்றைச் சொல்லும் முறைமைகள் எனப் பலதுடன் எனக்கு உடன்பாடு இல்லை.

ஜூன் 28-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்றே பைத்தியக்காரனுக்கு நான் எழுதிய அஞ்சலில், "சாரு நிவேதிதாவுக்கு நான் பதில் எழுதின பிறகு, அதை அவர் பிரசுரித்த பிறகு, இப்படி ஒரு பதிவை நீங்கள் எழுதியிருக்க வேண்டாம்" எனவும் "சாரு நிறைய வாசிக்கக்கூடியவர். எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை என்னுடன் நெருங்கிப் பழகியவர். ஒரே தலைமுறையைச் சார்ந்த பலரும் பரஸ்பரம் பலரின் எழுத்துக்களை அறிமுகம் செய்துகொண்டோம். அது அருமையான காலகட்டம், இடைநிலை-இதழ்களின் கை ஓங்காத காலகட்டம், அப்போது யாருக்கு யார் யாரை அறிமுகம் செய்தோம் என்பது அவ்சியமற்றதல்லவா.." என்றும் எழுதியிருக்கிறேன்.

இப்போது பின்வரும் மின்-அஞ்சலை சாரு நிவேதிதாவுக்கு அனுப்பியிருக்கிறேன்.

அன்புள்ள சாரு,

(தமிழாக்கமும் ஆங்கில ஆக்கமும் பற்றி ஜூன் 25-ஆம் நாள் தேதியிட்ட) என் பதிலை (அடுத்த நாளே) வெளியிட்டதற்கு நன்றி. இத்துடன் இந்த விஷயம் முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்தேன்.

தற்போது மம்மி ரிட்டர்ன்ஸ்-1 பதிவில் என்னைப் பற்றி இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதியதை வெளியிருட்டிருக்கிறீர்கள். பரவாயில்லை. அதில் "இப்போது நாகார்ஜுனன் பைத்தியக்காரன் என்ற ஆள் பெயரில் ஒளிந்து கொண்டு என்னைப் பற்றிய ஒரு ஆபாசக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்கான எதிர்வினை நாளை வெளிவரும்" என்கிறீர்கள்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை! பைத்தியக்காரன் என்பவர் எழுதிய பதிவுக்கும் எனக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை. அதில் வந்த பல விஷயங்களுடன் எனக்கு எவ்வித ஒப்புதலும் இல்லை. என்னை நோக்கிய உங்கள் எதிர்வினை அவசியமற்றது.

இதற்குமேல் நேரில்தான் பேசவேண்டும்.

தங்கள்
நாகார்ஜுனன்

இந்தப்பதிவை முன்வைத்து உரையாடல் அவசியமற்றது என்பதால் மறுமொழிகள் வேண்டாம். ஏற்கனவே மறுமொழிகள் எழுதியவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு - இன்று - ஜூலை முதல் நாள் சாரு நிவேதிதாவின் மேற்கண்ட பதிவில் என் மீதான குற்றச்சாட்டு காணப்படவில்லை. என் கடிதத்தை அடுத்து அதை நீக்கியிருக்கிறார். நன்றி. - நாகார்ஜுனன்

நெஞ்சத்து அவலம் இலர் - 2

நெஞ்சத்து அவலம் இலர் - 1 பதிவின் தொடர்ச்சி

2. விசேட அமர்வின் போது ஐரோப்பிய நாடுகள் கொணர்ந்த தீர்மானம் விவாதத்துக்கு வருமா என்ற நிலையில் இந்தியப்பிரதிநிதிகள் அரங்கைவிட்டு வெளியேறிவிட்டனர். போதிய ஆதரவு இல்லாமல்போன இந்தத் தீர்மானத்தை, ஸ்விட்ஸர்லாந்து மே 19-ஆம் நாளன்று கையளித்திருந்தது. இதற்கு எதிரான இலங்கை அரசின் தீர்மானத்தை, இலங்கையின் விசேட தூதர் தயன் ஜயதிலக, மே 22-ஆம் நாளன்று கையளித்திருந்தார். இதை ஆதரித்து இந்தியத்தூதர் ஏ. கோபிநாதன் கையொப்பமும் இட்டிருந்தார், இதைத்தான் தமிழக அரசியல்வாதிகள் வாசிக்க வேண்டும் என என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். நான் கட்டுரை எழுதிப் பதிவாக இட்டது, மே 24-ஆம் நாள். சில மணி நேரத்தில் அதை வாசித்த அமெரிக்காவில் உள்ள சில தமிழ்-ஆர்வலர்கள் அதைக் காலச்சுவடு இதழுக்கும் தமிழக அரசியல்வாதிகள் பலருக்கும் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார்கள்.

எது எப்படியோ, அடுத்த நாள், தாம் வெளியிட்ட அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "இலங்கையின் மாற்றுத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக கையெழுத்திட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இலங்கையின் துரோகத்திற்கு துணைபோயிருப்பது கண்டிக்கத்தக்கது" எனக் குறிப்பிட்டார். இந்தக் கடைசி நேரத்திலாவது இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா கைவிட வேண்டும் என்று தமிழ்க முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்றுக் கூறினார்.

அடுத்த நாள் ஜெனிவாவில் விசேட அமர்வு தொடங்கிய தருணத்தில் - அதாவது இந்திய நேரம் மதியம் ஒரு மணியளவில் - தமிழக அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டது. 'இலங்கை அரசு கொண்டுவந்திருக்கும் வரைவுத்தீர்மானம் தமிழ்மக்களின் நலன்களுக்குப் பெரிதும் எதிராக இருக்கிறது என்ற கருத்து உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே இருக்கிறது. எனவே அந்த நலன்களைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என்ற பொருளில் தமிழக முதல்வர் இந்தியப்பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக அந்த அறிக்கை கூறியது. ஆனால் அந்தக்கடிதம் இந்திய அரசு ஏற்கனவே இந்த வரைவுத் தீர்மானத்தை வழிமொழிந்து ஆதரித்திருப்பது, கையொப்பமிட்டிருப்பது பற்றி ஒரு வார்த்தையும் கூறவில்லை. நிஜத்தில் இந்த அறிக்கை வெளியான நேரத்தில் ஜெனிவாவிலிருந்த இந்தியப்பிரதிநிதிகள் ஸ்விட்ஸர்லாந்து தீர்மானம் விவாதத்துக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் வெளிநடப்பு செய்துகொண்டிருந்தார்கள்! பிறகு அங்கே தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அம்மையார், இலங்கைப்படுகொலைகள் பற்றிய ஒரு பன்னாட்டு விசாரணை, நம்பகத்தன்மை கொண்டதாக, சுயாதீனமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்திய போதும் இந்திய அரசின் நிலைப்பாடு அசையவேயில்லை.

3. அதற்கும் அடுத்த நாள் விசேட அமர்வு தொடர்ந்த காலையில் இலங்கை கொணர்ந்த வரைவுத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் துரைசாமி ராஜா பேசிய செய்தியையும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இரா. அன்பரசு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்து இதே விஷயத்தை வலியுறுத்திய செய்தியையும் உடனுக்குடன் வாசித்தேன். தமிழக முதல்வரைப் போலவே இந்தியா ஏற்கனவே இலங்கையின் வரைவு தீர்மானத்தில் வழிமொழிந்து கையொப்பமிட்டிருப்பது பற்றி இந்த இருவரும் வாய்திறக்கவில்லை. ஆக, ராமதாஸைப் போலன்றி எதார்த்த நிலவரத்தைப் பேச் இவர்கள் தயங்குகிறார்கள், இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டிலுள்ள தவறைச் சொல்லி விமர்சிக்காமல், அப்படிச்செய்தால் அது அந்தத் தவறைக் களையும் சாத்தியம் குறைந்துவிடுமோ என்ற சங்கடத்தில், அச்சத்தில் இயங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். அதாவது அடிப்படைத்தவறு இந்திய அரசின்மீது இருந்தாலும் அதைச் சுட்டிக்காட்ட முடியாத நிலை. குறிப்பாக தமிழ்க அரசு என்பது, அதை யார் வழிநடத்துகிறார்கள் என்பதைத் தாண்டி, இத்தகைய அமைப்புரீதியான ஒரு சங்கடத்தில், சிக்கலில் மாட்டியிருக்கிறது, அதாவது தமிழக அரசியலின் எல்லை இதுவரைதான் என்பதை அறியச் சரியான வாய்ப்பு இது என்று பட்டது எனக்கு.

4. இலங்கைத்தீர்மானத்தை நிறைய நாடுகள் ஆதரிக்கும் நிலையில் அதன் மீதான விவாதத்தை க்யூபா தடுத்துவிட்டது. வாக்கெடுப்புக்குச் சற்று முன்பாக இலங்கைத்தூதர் தயன் ஜெயதிலக பேசுகையில், மேற்குலகம் கொணர்ந்த தீர்மானம், காலனியத்தில் ஈடுபட்ட நாடுகள் சார்பில் வரும் தீர்மானம் என்றார்; எமக்குப் ப்ரந்த பன்னாட்டு ஆதரவு உண்டு, இலங்கையில் போர்-படுகொலைகள் நின்றுவிட்டன, இனி விசாரணை எதற்கு என்று இவர் வாதிட்டார். நடந்துமுடிந்தவை பற்றிப் பேசி என்ன பயன், போரிலிருந்து மீண்டுவர இலங்கையில் யாவர்க்கும் நிவாரண உதவி கிட்ட வேண்டும் என்ற ரீதியில் இந்தியத்தூதரும் பேசினார். பிறகு இலங்கை அரசு கொணர்ந்த தீர்மானமே ஒருசில சிறு திருத்தங்களுடன் நிறைவேறியது. இதை ஆதரித்தவை சீனா, ருஷ்யா ஆகிய வல்லரசுகள், இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், வளைகுடாப்பகுதி அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் க்யூபா, பொலிவியா, நிக்கரகுவா போன்ற இடதுசாரிச்சார்பு நாடுகள் உள்ளிட்ட 29 நாடுகள். தீர்மானத்தை எதிர்த்த நாடுகள் 12. ஆறு நாடுகள் வாக்களிக்கவில்லை. இதையடுத்து போரின்போதான மனித உரிமை மீறல்கள் பற்றி பக்கச்சார்பற்ற, காத்திரமான பன்னாட்டு விசாரணை ஏதும் நடக்கத் தேவையில்லை, முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சுமார் இரண்டரை லட்சம் பேருக்கான நிவாரண உதவி கிட்டவேண்டி ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கு தங்குதடையற்ற அனுமதி கிட்டாது என்றாகி விட்டது.

5. வாக்கெடுப்பின்போது இலங்கைக்குச் சாதகமான நிலை ஏற்பட்டதன் பின்னணியில் இருந்த நாடுகள் இந்தியா, ருஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் என்பது தெளிவாகிவிட்டது. குறிப்பாக, நவநீதம் பிள்ளை அம்மையாரின் சொந்த நாடாகிய தென்னாப்பிரிக்காவும் இலங்கையை ஆதரித்தே வாக்களித்ததிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம். தவிர, நவநீதம் பிள்ளை அம்மையார் மீண்டும் ஒருமுறை பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி உரையாற்றினார். அதற்கு மற்ற நாட்டுத் தூதர்கள் பதிலளிக்காத நிலையில், ஜூன் நான்காம் நாளன்று இந்தியத்தூதர் கோபிநாதன் காட்டமாகவே எதிர்வினையாற்றினார். இவர் வெளியிட்ட அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் விதிமுறைகளின்படி அரசுகள் இடையில் (inter-governmental) உருவாகும் முடிவுகளை ஏற்பதே நியாயம், அவற்றை நவநீதம் பிள்ளை மீறுவது சரியல்ல, எனவே விசேட அமர்வின் வாக்கெடுப்பு-முடிவை நவநீதம் பிள்ளை ஏற்கவேண்டும், இலங்கை சென்றிருந்த பன்-கி-மூனிடம் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களுக்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறியத் தான் தயாரென்று வாக்குறுதி அளித்திருக்கிறது, அது போதுமல்லவா எனக் கூறினார் கோபிநாதன்.

இதிலிருந்து, இலங்கைக்கான ஆதரவைத் திரட்டியதில் இந்தியாவின் பங்கு எத்தகையது என்பதையும் தமிழக அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் பற்றி இந்திய அரசு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பதையும் தெரிந்துகொள்ளலாம்; ராமதாஸைப் பொறுத்தவரை அவர் ஜூன் மூன்றாம் நாள் இந்தியப்பிரதமருக்கு எழுதிய கடிதத்திலேயே கோபிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்! கோபிநாதன் என்ற அதிகாரி முடிவுசெய்கிற விஷயமா இது! இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கையின் திசையை ஆராய்ந்து மாற்றுவதில் தமிழக அரசியல்வாதிகள் வெகுதூரம் செல்ல வேண்டும் என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு மே மாதம் ஐ.நா. மனித உரிமைக் குழுவுக்குத் தேர்தல் நடைபெற்ற்து. சுழற்சி அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்வுசெய்யும் முறையில் நான்கு இடங்களுக்கு திமோர் லெஸ்டே, ஜப்பான், தென் கொரியா, பஹ்ரைன், பாகிஸ்தான், இலங்கை என ஆறு நாடுகள் போட்டியிட்டன. இலங்கையை ஆதரிக்க வேண்டாம் என, பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்கள் கேட்டுக்கொண்டன. அப்போது போர் இந்த அளவு உக்கிரமடையவில்லை, என்றாலும் முந்தைய பல மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கை அரசு உருப்படியான விசாரணையேதும் நடத்தவேயில்லை, பன்னாட்டு அளவில் ஒரு குழு அமைந்து அதை இலங்கை அதிபர் ஏற்றிருந்தார். ஆனால் அந்தக்குழுவால் ஏதும் செய்ய இயலவில்லை. இந்தியாவைச் சார்ந்த முன்னாள் நீதிபதிகளும் அதில் இருந்தார்கள். அந்தக்குழுவே செயலிழந்து போனது. யுத்தம் தொடங்க இருந்தது. இருந்தபோதும் இதையெல்லாம் இந்தியா பொருட்படுத்தவேயில்லை. அந்தத்தேர்தலில் இலங்கை வெல்லப்போவதில்லை எனத் தெரிந்தபோதும் அதையே ஆதரித்து வாக்களித்தது இந்தியா. அதன் தொடர்ச்சிதான் இன்றைய ஆதரவும் என்பதைத் தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

6. ஆக, இலங்கைக்கான விசேட அமர்வில் மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்த விவாதம்கூட நடக்காமல் போயிருக்கிறது. இலங்கை அரசு மீது பன்னாட்டு விசாரணை இப்போதைக்கு இல்லை என்பதைத் தவிர, விடுதலைப்புலிகளின் தலைமை அழிந்ததை அடுத்து அவர்கள் மீதும் விசாரணை கிடையாது என்ற நிலை.

தொண்ணூறுகளில் ருவாண்டாவில் நடந்த மோசமான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் பற்றி ஹூட்டு-டுட்ஸி இருதரப்பு மீதும் விசாரணைகளை மேற்கொண்டு ஊடகங்களுக்கு என்ன பொறுப்பு என்பதுவரை கண்டறிந்து இந்தப்பாதையில் தடம் பதித்த நவநீதம் பிள்ளையின் உரையை அறிவுநாணயத்துடன் எதிர்கொள்ள இந்த அமர்வில் யாருமிருக்கவில்லை. மாறாக, "மனித உரிமை மீறலா, நீ மட்டும் என்ன கிழிச்ச" என்ற அளவில் அணி-அரசியல் (bloc politics) மாத்திரமே சாத்தியமாகியிருக்கிறது.

7. இத்தகைய அணி-அரசியலில் மூழ்கியிருக்கும் இருதரப்பிலும் பல நாடுகள் இந்தப்போரில் இலங்கைக்கு ராணுவ உதவி அளித்திருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். சீனா, ருஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், மலேஷியா, ஈரான், லிபியா எனப் பலரிடமிருந்தும் இலங்கை அரசு ராணுவ தளவாடங்களைப் பெரும்பாலும் கடனுக்கே வாங்கியிருக்கிறது. இந்தப்போருக்கு சற்றுமுன்பு பிரிட்டன், ஸ்லோவாக்கியா, பல்கேரியா ஆகிய நாடுகளில் இயங்கும் கம்பெனிகளும் இலங்கைக்கு ராணுவ தளவாடங்களை விற்றிருக்கின்றன என லண்டன் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆயுத விற்பனையை ஊக்குவிக்கும் மேற்குலக அரசுகள் பல, ஆயுதம் வாங்கும் நாடுகளின் அரசுகள் அங்கே மனித உரிமைகளை மீறுவது பற்றிக் குரலெழுப்புவதை யார்தாம் நம்புவார்கள்!

8. இலங்கைக்கு இருதரப்பு உதவியும் கிட்டிய நிலைதான். ஒருபுறம் மேற்குலகத்திலிருந்து கொஞ்சமாகக் கிட்டிய ஆயுத உதவி, மேற்குலகம் முன்வைத்து சற்றே களைத்திருக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற மந்திர ஸ்லோகத்தையும் வெகுவாகப் பயன்படுத்த முடிந்திருக்கிறது. மறுபுறம், ஆசிய வல்லரசுகள்-அரபு நாடுகளிலிருந்து பலத்த ராணுவ உதவி, லத்தீன் அமெரிக்க-தென்னமெரிக்க நாடுகளிடம் மேற்குலகை எதிர்க்கிறோம் என்ற முஸ்தீபுகள் என இலங்கையின் நிலை வலுத்திருக்கிறது.

தவிர, இந்த இருதரப்பையும் பரஸ்பரம் போட்டியிட விடும் நோக்கில் அமைந்திருக்கும் புவிசார்-அமைப்பும் இலங்கைக்குச் சாதகமான நிலைதான். இலங்கையில் இந்த இருதரப்புக்கும் வேண்டிய எண்ணெய் வளங்கள் பெரிதாக இல்லையென்றாலும் தன் புவிசார்-நிலையை வைத்துத் தன்னை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என இலங்கை நினைப்பதாகத் தெரிகிறது. அதாவது மேற்குலகு-வளைகுடாப்பகுதி ஒருபுறம் சீனா-பசிஃபிக் கடல் மறுபுறம் என கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதையில் தான் அமைந்திருப்பதை முன்வைத்து இலங்கை இயங்குகிறது. இதேநிலையில் தான் சீனாவை நெருங்குவோம் என்று கூறி இந்திய அரசிடமிருந்து பெரும்பாலான உதவிகளைக் கறந்திருக்கிறது, இலங்கை.

ஈழத்தமிழர்கள் போரில் தாக்குண்டு பெருமளவில் இறந்ததன் பின்னணியையும் அது குறித்து நெஞ்சத்தில் அவலம் இலராக நாடுகள் பல நடமாடுவதையும் அதற்கான ஐ.நா. மன்றத்தின் பங்களிப்பையும் ஆராயும்போது இன்னும் சில விஷயங்கள் புரிகின்றன - புதிய அணிகள் உருவாகிவருகின்றன. பழைய மேற்குலக அணியை விட மோசமான ஒடுக்குமுறைகள், மனித உரிமை மீறல்களை இவர்களிடம் எதிர்பார்க்கலாம். இந்த அணிகளில் இருப்போர் தவிர, ஐ.நா. மன்ற அமைப்புக்களும் ஓர் புதிய அணியாக இயங்க முற்படுவதாகக் கூறலாம். பேரரசைக் கட்ட வேண்டும் என நாடுகளுக்கு இருந்த ஆசைகள் இப்போது ஐ.நா. போன்ற பன்னாட்டு அமைப்புக்களுக்கும் தொற்றிக்கொண்டு விட்டனவோ என்னவோ...

29.6.09

கனாப்புலிகள் - ஜோர்ஜ் லூயி போர்ஹெ

புலி வழிபாட்டில் மிகுந்த உணர்வுடன் ஈடுபடுவோனாக என் சிறுபிராயத்தில் இருந்தேன். புலி என்றால் இங்கே அமேஸான் பகுதிப் பச்சைக்காடுகளில், பரானா நதியில் மிதந்துவரும் தாவரங்களில் உறைகிற, புள்ளிகொண்ட ஜாகுவார் சிறுத்தையல்ல. மாறாக, அது ஆசியக்கண்டத்தில் காணப்படும் அரசமிடுக்கு கொண்ட வரிவிலங்கு. ஆனை அம்பாரி மீதமர்ந்த ஒரு போர்வீரன்தான் இதைத் தேடிக் கண்டறிய முடியும்...

அப்போதெல்லாம் மிருகக்காட்சிசாலையில் கூண்டொன்றில் இருந்த இதன்முன்னே முடிவற்றுத் தறுகி நின்றதும் என் வழக்கம். பெரும் கலைக்களஞ்சியங்களை, இயற்கை-வரலாறு குறித்த புத்தகங்களை நாம் மதிப்பீடு செய்ததும் அவற்றில் புலிகள் பற்றி என்ன போட்டிருக்கிறது என்பதை வைத்துத்தான். ஒரு பெண்ணின் புன்னகையையோ புருவத்தையோ சரிவர நினைவுகொள்ள முடியாத எனக்கு இன்னும் நினைவிருப்பவை, அவற்றில் இருந்த புலிப்படங்கள்.

என் சிறுபிராயமும் கழிந்தது. புலிகளும் அவை குறித்த என் மோகமும் மூப்படைந்தன. என்றாலும் என் கனாக்களில் வருபவை அவை. ஆழ்மனதோ அதன் குழப்பமோவென அந்த மட்டத்தில் தொடர்பவை அவை. ஆக உறங்கும் என்னில் ஏதோ கனா வசீகரிக்க, திடீரென கனாக்காண்பதை அறிகிறேன். ஓ, இது கனா, என் மனோலயம் போடும் ஆட்டம்தான் என எண்ணி, எனக்கிருக்கும் எல்லையற்ற இந்த சக்திகொண்டு ஒரு புலியையே படைப்பேன் என நினைத்துக்கொள்வேன்.

ஓ, நான் மோகிக்கும் அந்தக் காட்டுவிலங்கை ஒருபோதும் மெய்யாக்கப்போவதில்லை என் கனாக்கள். அந்தத் திறன் எனக்கிருக்கிறதா என்ன.. புலியென்னவோ இன்னும் வரத்தான் செய்கிறது கனாவில். ஆனால் அந்தப்புலி இருப்பதும் பஞ்சடைத்தோ உடைவதாகவோ.. அதன் உருவமிருப்பதும் மாறியோ குலைந்தோ சாத்தியமற்றோ, கணத்தில் தோன்றிமறைவதாகவோ.. அது தீண்டுவதென்னவோ ஒரு பறவையை, நாயைப் போலத்தான்.

-- Jorge Luis Borges, Dreamtigers, 1960.

28.6.09

இலங்கை அரசை ஆதரிக்கும் க்யூபா, பொலிவியாவுக்குக் கண்டனம்

இந்தக்கடிதம், லத்தீன் அமெரிக்க நட்புறவுக்கழகம் சார்பில் ஜூன் 25 அன்று எழுத்தாளர் அமரந்த்தா, இந்தியாவில் இயங்கும் க்யூபத் தூதரகம் மற்றும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதத்தின் தமிழாக்கம்.

அம்ரந்த்தா, லத்தீன் அமெரிக்க எழுத்துக்களை, க்யூபா குறித்த எழுத்துக்களைத் தமிழாக்கியவர். இந்தக்கடிதத்தை மறுவெளியீடு செய்யவேண்டி அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தேன். இதுவரை இயலவில்லை. இருந்தாலும் இந்தக்கடிதம் முக்கியமான ஒன்று என்பதால் அவர் அனுமதி கிட்டும் என்ற நம்பிக்கையில் இதையும் இதுதொடர்பாக அவருக்கு வந்த கடிதங்களையும் வெளியிட்டிருக்கிறேன். இந்தக்கடிதம் பற்றி என் கருத்துக்கள் பின்னர். - நாகார்ஜுனன்.

அன்பார்ந்த தோழருக்கு,

இலங்கைத் தீவு நாட்டில் வாழும் தமிழர்களை முழுமையாக துடைத்தழிக்கும் இலங்கை அரசுக்கு ஆதரவாக, ஐ.நா. மனித உரிமைக்குழுவில் க்யூபா, நிக்கரகுவா, பொலீவியா ஆகிய நாடுகளும் வாக்களித்திருப்பதை அறிந்து தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்ற முறையிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலைப்போராட்ட இயக்கங்களின் ஆதரவாளர் என்ற முறையிலும் நான் மிகுந்த வேதனைக்கும் விரக்திக்கும் ஆளாகியிருக்கிறேன். வீரஞ்செறிந்த க்யூபப் புரட்சி, நிக்கரகுவா புரட்சி குறித்தும் இன்றைய கேள்விமுறையற்ற ஒற்றையாதிக்க உலகில் வெனிசுவேலா, பொலிவியா, சிலே போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக–ஜனநாயக இயக்கங்கள் குறித்தும் எழுதியும் மொழிபெயர்த்தும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டில் செய்திகளைப் பரப்பிவருகிறேன் நான். பத்து புத்தகங்களுக்கு மேல் எழுதியும் மொழிபெயர்த்தும் வெளியிட்டிருக்கிறேன், வேறு பல நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்திருக்கிறேன்.

உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம் ஆகியவற்றின் உதவியோடு உலகை விழுங்க முற்படும் வட அமெரிக்க ஒற்றை வல்லரசு ஆதிக்கத்திற்கு சவாலாக உருவாக்கப்பட்டிருக்கும் லத்தீன் அமெரிக்காவிற்கான பொலிவேரிய மாற்றுத்திட்டம், தென்னமெரிக்க வங்கி வெனிசுவேலாவின் ஒன்றுபட்ட சோசலிசக் கட்சி ஆகியவற்றால் உலகின் இப்பகுதி முழுவதும் சோசலிச மாற்றத்திற்கு ஆளாகி விடும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இச்செய்திகளைத் தொடர்ந்து தமிழில் பரப்பிவருகிற சக எழுத்தாளர்களும் நண்பர்களும் தமிழ்நாட்டில் இந்தியாவில் நான் பிறந்திருந்தாலும் எனது உயிரும் இதயமும் கியூபாவிலோ வெனிசுவேலாவிலோ அலைந்து கொண்டிருக்கின்றன என்றென்னைக் கேலி செய்வதுண்டு. ஆனால் இன்று இலங்கைத்தமிழர் வாழ்வுரிமைக்கு எதிராக க்யூபாவும் நிகராகுவாவும் பொலிவியாவும் கையெழுத்திட்டபிறகு உண்மையிலேயே எனக்கு நிற்க நிலமில்லாது ஆகிவிட்டது…

இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு ஆதரவாக, இலங்கைப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக மேற்குறிப்பிட்ட நாடுகள் ஐ.நா. மனித உரிமைக்குழுவில் கையெழுத்திடக்கூடும் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை.

ஆம். மார்த்தியும் சாந்தினோவும், பொலிவாரும் நடமாடிய பூமியில் தோன்றிய ரவுல் காஸ்த்ரோவும் தானியேல் ஆர்த்தேகாவும் ஈவோ மொரேல்சும் விடுதலை இயக்கமொன்று அழித்தொழிக்கப்படுவதை எவ்வாறு ஆதரிக்க முடியும்?

இச்செயல் க்யூபாவின் ஜூலை 26 இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றழைப்பதற்குச் சமமல்லவா? இச்செயல் நிக்கரகுவாவின் சாந்தினிஸ்தா இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று சொல்வதற்குச் சமமல்லவா? பொலிவியாவில் 2001-ஆம் ஆண்டு நிலத்தடிநீர் உரிமை காக்கப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என்றழைப்பது முறையாகுமா? வெனிசுவேலாவில் 2002-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகை முன்னே வட அமெரிக்க கைக்குலிகளிடமிருந்து ஹூகோ சாவேசைக் காப்பாற்றக் குழுமிய மக்களை பயங்கரவாதிகள் என்றழைக்க நாம் சம்மதிப்போமா? லத்தீனீன் அமெரிக்க மார்க்சிய அறிஞரான ஹொலய மாரியாதெருய் “ஒவ்வொரு நாடும் தம் மண்ணுக்கேற்ற விடுதலைப்போராட்டத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்” என்று கூறியதை நாம் அனைவரும் மறந்துவிட்டோமா?

தமிழீழ விடுதலைப்புலிகளை மிகச்சுலபமாக பயங்கரவாதிகள் என்று எவ்வாறு முடிவு செய்ய முடிந்தது? ஒரு பயங்கரவாத அமைப்பினால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லாணா இழப்புகளைத் தாங்கி இடையறாது போராட இயலுமா? தங்கள் நியாயமான வாழ்வுரிமைக்காக இலங்கை அரசுடன் நேர்மையான வழியில் தீர்வுகாண பல்லாண்டுகளாக முயன்று தோற்றுப்போனது விடுதலைப்புலிகள் இயக்கம். இறுதியாக வேறு வழியின்றி கெரில்லாப்போர் முறையைத் தேர்ந்தெடுத்த விடுதலைப்புலிகள், சமீப காலம் வரை இலங்கை இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்ததை உலகறியும்.

இன்று இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கப்பல் கப்பலாக ஆயுதங்களை இலங்கை அரசுக்கு வழங்கி, இலங்கைவாழ் தமிழினத்தை பூண்டோடு அழிக்க வழிசெய்துவிட்டன. வர்த்தகம், இந்தியப்பெருங்கடல் பகுதியில் இராணுவ மேலாண்மைப் பெறுவது ஆகிய காரணங்களுக்காக திருகோணமலை துறைமுகத்தின் மீது உரிமை கொண்டாடும் நோக்கில் இலங்கை அரசுடன் இந்நாடுகள் தமிழின அழிப்பில் பங்கேற்கின்றன. ஆனால் லத்தீன் அமெரிக்க நாடுகள் அவற்றுக்கு ஏன் துணைபோகின்றன? தற்போது சீனா லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் வர்த்தக உறவு கொண்டிருப்பதாலா? ஆனால் இது கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சோசலிச க்யூபாவில் பல்துறை சாதனைகளையும், கல்வி-மருத்துவம்-மனித உரிமைகள் ஆகிய துறைகளில் க்யூபாவின் கொடையையும் விளக்கும் எட்டு நூல்களை வெளியிட்டு தமிழ்நாட்டில் தமிழர்கள் நாங்கள் தோழர் ஃபிதெல் காஸ்த்ரோவின் எண்பதாம் பிறந்தநாள் கொண்டாடினோம். தற்போது க்யூபப் புரட்சியின் ஐம்பதாண்டு நிறைவையும் சே குவேராவின் எண்பதாண்டு ஆண்டு நிறைவையும் முன்னிட்டு இன்றைய சூழலில் பொலிவார் கனவு கண்ட தென்னமெரிக்க ஒருங்கிணைவுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளை மதிப்பீடு செய்யும் நிகழ்ச்சிக்காக பத்து நூல்களை வெளியிடும் முயற்சியில் உள்ளோம். இந்நிலையில்தான் ஐ.நா. மனித உரிமைக்குழுவில் க்யூபா, நிக்கரகுவா, பொலிவியா ஆகிய நாடுகள் இலங்கைத்தமிழர் அழித்தொழிப்புக்கு ஆதரவாக கையொப்பமிட்டிருக்கும் செய்தி நஞ்சுதோய்ந்த கத்தியாக எங்கள் இதயத்தைத் தாக்கியது. இனி மேற்கொண்டு நாங்கள் எவ்விதம் செயற்படுவது?

எதிர்காலத்தில் இருபத்தொன்றாம் நூற்றாண்டு சோசலிசத்தை நிறுவப்போதாக எந்த லத்தீன் அமெரிக்க நாடுகளை நம்பினோமோ அவை செய்த இத்தகைய செயலால் நம்பிக்கையிழந்து நாங்கள் ஊமையாகிவிட்டோம். தமிழருக்குச் சொந்தமான இலங்கை மண்ணில் தமிழினம் துடைத்தழிக்கப்பட வேண்டும் என இந்நாடுகள் விரும்பக் காரணமென்ன? தமிழினத்துக்கு எதிராகவும் இலங்கைப் பேரினவாத அரசுக்கு ஆதரவாகவும் ஐ.நா. மனித உரிமைக்குழுவில் குரல் கொடுக்கும் கொடூரமான முடிவை எடுக்கும்படி இவர்களுக்கு இப்பிரச்சினை குறித்து பிழையான வரலாற்றுத் தகவல்களை அளித்தது யார்?

தமிழ்நாட்டில் நாங்கள் ஆறரைக்கோடி மக்கள் இருக்கிறோம் - எங்களிடம் கேளுங்கள் நாங்கள் சொல்கிறோம் உண்மைகளை…

விடுதலைப்புலிகளை வேட்டையாடுவதான போர்வையில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்களை கொடூரமாகக் கொலை செய்கிறது, முடமாக்குகிறது இலங்கை அரசு. ‘பாதுகாப்புப்பகுதி’ என்ற பெயரில் முள்கம்பி வேலிக்குள் ஆடுமாடுகளைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 3.2 லட்சம் தமிழ் மக்களில் பலரும் பட்டினியாலும் மருத்துவ உதவியின்மையாலும் கூட்டங்கூட்டமாக மடிகிறார்கள். ஆதரவற்ற இம்மக்களை இலங்கை இராணுவம் ரசாயண ஆயுதங்களும் கொத்து வெடிகுண்டுகளும் கொண்டு அழிக்கின்றது, முடமாக்குகின்றது, நிரந்தர பீதியில் ஆழ்த்துகின்றது. பாதுகாப்புப் பகுதி எனப்படும் படுகொலை முகாம்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற யாருமே அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறுதான் தமிழினப்படுகொலை சாட்சியின்றி நடைபெற்றது.

2009 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 11 வரை மட்டுமே தமிழ் மக்களில் 15,000 பேர் கொல்லப்பட்டனர், 10,000 பேர் கைகால்களை இழந்துள்ளனர். இதுவரை ரத்தவெறி கொண்ட இலங்கை இராணுவத்திற்குப் பயந்து பத்து லட்சம் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உலகெங்கும் அதிகளாகக் காலந்தள்ளி விடுகின்றனர். தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் உங்கள் தவறான செயல்பாட்டின் காரணமாக ஆழ்ந்த விரக்திக்கு ஆட்பட்டுள்ளோம்.

இவ்வுலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான சர்வதேசியவாதியான மாவீரன் சே குவேராவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம் முன்னெப்போதைக் காட்டிலும் இக்கணத்தில் எம்மைத் திணறச் செய்கிறது.

அமரந்த்தா
லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம், ஈரோடு

அமரந்த்தாவுக்கு தோழர் ரான் ரெட்னூர் அனுப்பிய பதில் - இவர் வட அமெரிக்காவில் பிறந்து, போர் எதிர்ப்பு இயக்கங்களில் பணியாற்றியவர். தற்போது கியூபாவில் இருக்கும் மார்க்சிய எழுத்தாளர்.

உங்கள் விமர்சனத்தை எனக்கு அனுப்பியதற்கு நன்றி. நமது ஆயுதப்போராளி நண்பர் ஆயுதப் போராட்டத்தில் சோர்வுற்றுப்போய் தற்போது நடைபெறுகின்ற பூர்சுவா-ஜனநாயகப் போராட்டங்களால் சாதகமான விளைவுகளை சந்தித்துவரும் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளின் கதகதப்பான நட்புறவில் இளைப்பாற முயல்கின்றார். ஆயுதப்போராட்டமென்னவோ கைக்கெட்டிய தொலைவில்தான் இருக்கிறது - காரணம் பெரும்பான்மையான மக்கள் ஜனநாயகத்தையும் அமைதியையும் நலவாழ்வையும் விரும்புவதால் மட்டுமே பூர்சுவாக்களோ, வட அமெரிக்க ஏகாதிபத்தியமோ ஒருபோதும் மாறப்போவதில்லை.

மார்ச் மாதத்தில் கொலம்பிய ஆயுதப் போராட்டக் குழுவின் பின்னடைவுக்கு ஃபிடெலும் சாவேசும் என்ன எதிர்வினையாற்றினார்கள் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இன்றைய லத்தீன் அமெரிக்காவில் மீதியிருக்கும் ஒரே ஆயுதப்போராட்ட இயக்கம் இது மட்டுமே. இந்நாளில் கியூபாவும் அதன் நேசநாடுகளும் இரத்தம் சிந்தாமல் வெற்றி பெறுவதையே விரும்புகிறார்கள். அதுபோன்ற தியாகங்களுக்கு மக்கள் தயாராக இல்லாதபோது அவ்வாறு முடிவு செய்வது சரியே.

உங்கள் (ஆசிய) கண்டத்தில் பெரும்பான்மை மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்குமான சாத்தியபாடுகள் முற்றிலும் வேறானவை. க்யூபாவின் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்பவாதமானது என்று வருத்தத்துடன் தெரிவிக்கும் இவ்வேளையில், அதன் சில உள்நாட்டுக்கொள்கைகளும் கூட அவ்வாறானவை என்பதைத் தெரிவிக்கிறேன். இதில் நாமென்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை.

உங்கள் விமர்சனத்தை இதுவரை ஜேம்ஸ் பெட்ராஸ் அவர்களுக்கு அனுப்பவில்லை யென்றால் இப்போது அனுப்புங்கள். நேர்மையான உறுதியான அவரது குரல் பரவலாக ஒலிக்கவல்லது. எனது குரல் நேர்மையான உறுதியான குரலாயினும் எனது குரல் செய்தியாக வெகுதொலைவு ஒலிக்கக்கூடியதல்ல. தமிழர் நிலைமை தொடர்ந்து கவனித்து வருவேன்.

போராட்டத்தில் என்றும் துணையாக,
ரான் ரெட்னூர்.

க்யூபாவும் இலங்கையும் - க்ரிஸ் ஸ்லீ
(இவர் ஆஸ்திரேலியாவின் சோசலிச கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனநாயக சோசலிச கண்ணோட்டம் எனும் அமைப்ப்பின் உறுப்ப்பினர்)

க்யூபாவுக்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவாளன் என்றளவில் நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால் இதில் ஆச்சரியமடையவில்லை. இயன்றளவு பல நாடுகளுடன் நட்புறவு கொள்ள எண்ணும் க்யூப வெளியுறவுக் கொள்கை, இந்த நாடுகளிலுள்ள அரசின் தன்மையை கணக்கில் கொள்வதில்லை.

வட அமெரிக்காவின் தடைகளை எதிர்கொண்டு தாக்குப்பிடிக்க கியூபா மேற்கொள்ளும் வழி இது. இதன் வெற்றியை ஐ.நா. மன்றத்தில் க்யூபா மீதான வட அமெரிக்காவின் தடைகளை நீக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்நாடுகள் தமது மக்களை ஒடுக்குவதைக்கூட க்யூபா விமர்சிக்காமல் இருப்பதே இதன் மறுபக்கம். க்யூபாவில் வெளியுறவுக் கொள்கை பொதுமக்கள் விவாதத்திற்கு உட்படுவது கிடையாது.

புரட்சியின் தொடக்க ஆண்டுகளில் வட அமெரிக்க ஏகாதிபத்தியதத்தின் பகைமையினால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தனது மிகச்சில ஆதரவாளர்களுக்கு கோபமூட்டி விடாதிருப்பதற்காக (குறிப்பாக சோவியத் யூனியனை) க்யூபா ஊடகங்களில் பொது விவாதத்தை அனுமதிக்கவில்லை. நாம் க்யூபாவை தொடர்ந்து ஆதரிக்கவேண்டும். ஆனால் விமர்சனங்களோடு ஆதரிக்க வேண்டுமென்று கருதுகிறேன். தமிழர் போராட்டம் போன்ற பிரச்னைகள் குறித்த நமது கருத்தை க்யூபா அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

க்யூபா ஓரினப்பாலுறவு உரிமைகள் போன்றவற்றில் தனது முந்தைய தவறுகளைத் திருத்திக்கொண்டிருக்கிறது; எனவே வெளியுறவுக் கொள்கையிலும் அவ்வாறு திருத்திக்கொள்வார்களென எதிர்பார்க்கிறேன். பொலிவியா, நிகராகுவா அரசுகளின் நோக்கம் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவைகூட க்யூபா போன்றே இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளுடன் நட்புறவை விரும்புகிறார்களென்று நினைக்கிறேன். அவர்களும் தமது நிலையை மாற்றிக்கொள்ளும்படி நாம் அறிவுறுத்த வேண்டும்.

நன்றி - கீற்று, இனியொரு இணைய தளங்கள்.

25.6.09

தமிழாக்கமும் ஆங்கில ஆக்கமும் - கடிதம்

எழுத்தாளர் சாரு நிவேதிதா தம்முடைய வலைப்பக்கத்தில் நளிர் என்ற என் புத்தகம் குறித்தும் என்னைக் குறித்தும் எழுதியிருப்பதைச் சற்று முன்பு வாசித்தேன். அதை நீங்களும் இங்கே வாசிக்கலாம்....

"...தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களான நகுலன், அசோகமித்திரன் போன்றவர்களின் பெயர் கூட கேரளத்தில் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்த இரண்டே பெயர்கள் சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதா. ஆனால் ஒரு தமிழ் வாசகனுக்கு மலையாளத்தில் எழுதும் அத்தனை பேரும் பரிச்சயம். இதேதான் ஐரோப்பாவுக்கும் நமக்குமான இலக்கியத்தொடர்பிலும் நடக்கிறது. ஐரோப்பிய ஊடகங்களில் மிகப் பெரிய பொறுப்புகளில் அமர்ந்திருக்கும் ஆங்கிலம் தெரிந்த நம் தமிழ் புத்திஜீவிகள் தமிழ் இலக்கியத்தை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பாலமாக இருப்பதை விட்டுவிட்டு ஏதோ தமிழ் இலக்கியம் கற்காலத்தில் இருப்பதாக பாவனை செய்து கொண்டு தலையணை தலையணையாக ஐரோப்பிய சமாச்சாரங்களை இங்கே இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஒரு இறக்குமதி சமாச்சாரத்தை சமீபத்தில் வாசித்தேன். நாகார்ச்சுனன் எழுதிய நளிர் என்ற புத்தகம் அது. இது போன்ற புத்தகங்களை ஒரு வரி கூடப் படிக்காமல் நாம் புறக்கணிக்க வேண்டும். இந்தப் புத்தகத்தில் அவர் Dorris Lessing (ப்ரிட்டிஷ் எழுத்தாளர்), அமெரிக்கப் பெண் கவிஞரான மரியான் மூர் (Marianne Moore), வர்ஜீனியா வுல்ஃபே சொந்தக் கையொப்பமிட்ட அவரது ஒர்லாண்டோ என்ற நாவல், விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளரான ஜே.ஜி. பல்லார்ட் (J.G. Ballard), ஃப்ரெஞ்ச் கவிஞர்கள் ரெனே ஷர் (Rene Char), கிய்யாம் அப்போல்லிநேர் (Guillaume Apollinaire), ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் மிஷெல் தூர்னியே (Michel Tournier) என்று சுமார் 300 ஐரோப்பிய எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகப்படுத்திப் படுத்தியெடுத்திருக்கிறார் நாகார்ச்சுனன். வெறும் 56 பக்கத்தில் இவ்வளவு அறிமுகங்கள். அந்தப் புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 530. எவ்வளவு பெரிய அராஜகம் இது!

எத்தனை காலத்துக்கு வெள்ளைக்காரன் எழுதியதை நாம் படித்துக் கொண்டிருப்பது? நாம் எழுதியதை அவன் படிக்க வேண்டும் ஐயா...

பாரதியின் சமகாலத்தவரான கிய்யாம் அப்போல்லிநேரை இங்கே தமிழனுக்கு அறிமுகம் செய்வதை நிறுத்தி விட்டு பாரதியை அங்கே உள்ளவனுக்கு அறிமுகப் படுத்துங்களேன்? பாரதி கவிதை எழுதி நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாரதியை ஃப்ரெஞ்சுக்காரன் தெரிந்து கொள்வது? உடனே பாரதியின் ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்புப் பட்டியலை என் முகத்துக்கு நேராக நீட்டக் கூடாது. நான் சொல்வதில் உள்ள விபரப் பிழைகளை நீக்கி விட்டு என்ன சொல்ல வருகிறேன் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். 530 பக்கங்களில் 300 ஐரோப்பிய எழுத்தாளர்களை இங்கே தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிமுகப் படுத்துவதை விட அங்கே உள்ள ஐரோப்பியர்களுக்கு ஒரு 50 தமிழ் இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தினால்தான் உங்களை ஒரு தமிழன் என்று பாராட்டுவேன். இல்லாவிட்டால் காலனி ஆதிக்கத்தின் அடிமை என்றும், தமிழனின் துரோகி என்றும்தான் சொல்ல வேண்டியிருக்கும்.

நகுலன், தர்மு சிவராமு, தேவதேவன், தேவதச்சன், கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், ஆதவன், அசோகமித்திரன், தஞ்சை ப்ரகாஷ், எஸ். ராமகிருஷ்ணன், ப. சிங்காரம், மனுஷ்ய புத்திரன், சுகுமாரன், பிரம்ம ராஜன், ஷோபா சக்தி, அழகிய பெரியவன் என்று இங்கே எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? இவர்களையெல்லாம் ஃப்ரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் அறிந்து கொள்ளட்டுமே? அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

எனக்கு ஒரு வார்த்தை கூடத் தெரியாத மலையாளத்தில் இதை நான் கடந்த ஆறு ஆண்டுகளில் செய்து விட்டேன். ஆங்கிலமும் ஃப்ரெஞ்சும் நன்கு அறிந்த, மிகப் பிரபலமான ஊடகத்துறையில் பணியாற்றும்/பணியாற்றிய என் நண்பர் நாகார்ச்சுனன் என்ன செய்தார்? இவ்வளவுக்கும் நீங்கள் கடந்த 15 ஆண்டுகளாக லண்டனில் வசிக்கிறீர்கள். இது என்னுடைய நேரடியான கேள்வி.

தயவு செய்து எனக்கு பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணடித்துக் கொள்ளாமல் நீங்களே கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.."


இதற்கு என் பதில்.

அன்புள்ள சாரு நிவேதிதா,

உங்களுக்குப் பதில் எழுதுவதில் என்ன நேரம் வீணாகிப் போய்விடும்!

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் பற்றி -

1. நான் லண்டன் வந்து இன்னும் பத்தாண்டுகள் ஆகவில்லை.

2. லண்டன் வந்த சமயத்துக்கு இரண்டு-மூன்று ஆண்டுகள் முன்பு சென்னையில் இருந்த போதே தமிழில் எழுதுவதை நிறுத்திவிட்டிருந்தேன். ஆங்கிலத்தில் வெளியிட்டது ஒரே ஒரு கட்டுரை. லண்டன் வருமுன்பு - 1998-ஆம் ஆண்டில் எழுதியது. ஆக, சுமார் பத்தாண்டுக்காலத் தனிமைவாசத்தில் அவ்வப்போது எழுதினாலும் எழுதியதை மீண்டும் வெளியிடத் தொடங்கியது 2007-ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான். இது நீங்களும் அறிந்ததே.

3. இந்தக்காலகட்டத்தில் ஃப்ரெஞ்சு மொழி பயில்வதில் தீவிரக்கவனமெடுத்தேன். ஃப்ரெஞ்சிலிருந்து செய்த தமிழாக்கங்கள் பல, பயிற்சிக்காகச் செய்தவை. சில, சுவாரசியத்துக்காகச் செய்தவை. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யும் திறன் உண்டுதான். ஆனால் தமிழிலிருந்து ஃப்ரெஞ்சுமொழிக்குச் செய்ய முடியுமா என்பதில் தயக்கமும் பயமும் உண்டு.

4. இந்த வலைப்பக்கத்திலும் நளிர் புத்தகத்திலும் இந்த விஷயங்கள் யாவும் இருக்கின்றன. புத்தகத்தை வாசிப்பதைப் புறக்கணிக்க வேண்டும் என்கிறீர்கள். சரி, புறக்கணித்தால் இவற்றைத் தெரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.

5. நீங்கள் கூறுவது போல ஐரோப்பிய ஊடகங்களில் மிகப்பெரும்பொறுப்பில் நானிருக்கவில்லை! இருந்த பிபிசி வானொலியில் பணியை விட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அங்கிருந்த சூழலில் எனக்கு ஏற்பட்ட உச்சமும் விபத்தும் பற்றி எழுதியிரு்க்கிறேன். விருப்பமில்லாத சில விஷயங்களில் ஈடுபடவேண்டி வந்தது. இலக்கியத்தைப் பொறுத்தவரை அதில் ஈழத்தமிழ் எழுத்தாளர்களைச் சரிவர அறிமுகப்படுத்த முடியாத விரக்தி ஏற்பட்டது.

6. தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்துவது என்பதைவிட அதில் என்னைக் கவர்ந்தனவற்றை ஆங்கிலத்தில் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் உண்டு. ஃப்ரெஞ்சிலும் முயல்வேன். ஆக, உங்கள் இந்தக்கேள்வி நியாயமானதே. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. எனக்குப் பணிப்பளு அதிகம்தான் என்றாலும் இயன்றவரை செய்கிறேன்.

தங்கள்
நாகார்ஜுனன்

நளிர் புத்தக முன்னுரை
உயிரும் எழுத்தும் - ஆர்தர் ரைம்போ கவிதைகள் தமிழாக்க முன்னுரை
என் பிற ஆக்கங்கள் பற்றி

நெஞ்சத்து அவலம் இலர் - 1

ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலை நிகழ்வுகள், போர்க்குற்றங்கள், தொடரும் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் பன்னாட்டு அளவில் விசாரணை நடக்கும் சாத்தியமுண்டா என்று கேட்டு நான் எழுதிய பதிவு, இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன். பிறகு காலச்சுவடு ஜூன் மாத இதழில் இது வெளியானது. அப்போது அதிலிருந்த சில விஷயங்களையொட்டி நடந்த விபரங்களை என்னால் சேர்க்க முடிந்திருக்கவில்லை. காரணம், அந்தக்கட்டுரையை எழுதிமுடித்த பிறகுதான் மே 26-27 நாட்களில் இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் விசேட அமர்வு ஜெனிவா நகரில் நடைபெற்றது.

மனித உரிமைக்குழு தன் முடிவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பரிந்துரைக்கு அனுப்ப முடியும், ஆனால் நேரடி விசாரணையில் ஈடுபட முடியாது என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தக்குழுவில் மொத்த உறுப்பினர்கள், 47 நாடுகள். இங்கே ஒரு தீர்மானம் விவாதத்துக்கு வரவேண்டுமானால் அதை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆதரிக்க வேண்டும் என்ற நிலை.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த பன்னாட்டு விசாரணை வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் சார்பில் ஸ்விட்ஸர்லாந்து கொணர்ந்திருந்த தீர்மானத்தைப் பன்னிரண்டு நாடுகள் வரை ஆதரித்திருந்தன. இலங்கை அரசு கொணர்ந்த தீர்மானத்தை இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேஷியா, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகள், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து ஆகிய அரபு நாடுகள், க்யூபா, நிகராகுவா, பொலிவியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளும் எனப் பன்னிரண்டு நாடுகள் வழிமொழிந்திருந்தன.

விசேட அமர்வின் இறுதியில், இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற பிரச்னை பின்னுக்குப் போய், உலகமே மேற்குலகச்சார்பு அணி, அதற்கு மாற்று-எதிர்நிலை அணி எனக் கறாராக இரண்டாகப் பிரிந்து செயல்பட்ட விநோதத்தைப் பார்க்க முடிந்தது. இறுதியில் ஐரோப்பிய நாடுகள் கொணர்ந்த தீர்மானம் விவாதத்துக்கே வராமல் போய், இலங்கை, தான் கொணர்ந்த தீர்மானத்தைப் பெரிய விவாதமின்றி நிறைவேற்றியது. இப்படி இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்திருக்கும் பெரும் துயரங்களில் ஒன்றான ஈழத்தமிழர் போர்ப்படுகொலைகளின் அவலத்தை நெஞ்சில் சுமக்காதோராய் உலக நாடுகள் பல சிறுத்துப் போயிருக்கின்றன. இவற்றில் இந்தியாவும் அடக்கம்.

நான் பணிபுரியும் அம்னெஸ்டி இன்டர்நாஷனல் அமைப்பின் சார்பில் ஜெனிவா சென்று திரும்பிய முக்கிய மனித உரிமை ஆய்வாளர் ஒருவர், இலங்கை அரசு கொணர்ந்த தீர்மானம் நிறைவேறியதை ஒரு நிஹிலிஸ நிகழ்வு என்று சோகத்துடன் விவரித்தார். ருவாண்டா, சூடான், ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஜார்ஜியா, காஸா பகுதி என உலகின் பல பகுதிகளிலும் போரின்போது நடந்துவரும் குற்றங்கள் பற்றிய விசாரணைச்சாத்தியங்களை முன்னெடுத்துவருபவர் இவர். ஏன் என்று இவரைக் கேட்டபோது இவர் கூறினார்:

"ஐ.நா. மன்றச் செயலாளர்-நாயகம் பன் கி மூன், மற்றும் விஜய் நம்பியார் உள்ளிட்ட அதிகாரிகள், இலங்கையில் பலியான தமிழ்மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே பலமடங்கு குறைத்துக் கூறிவந்தார்கள் என ஆதாரப்பூர்வமான செய்தியும் இதே வாரம் வரத் தொடங்கிவிட்டது. ஆக, போர் நடக்கும் மற்ற இடங்களைப் போலன்றி இலங்கையைப் பொறுத்தவரை ஐ.நா. மன்ற அமைப்பின் செயல்பாடுகள் மீதே பலத்த ஐயங்கள்-கேள்விகள் எழும்பியுள்ளன என்பதைப் பார்க்கிறோம். இந்த நிலையில் இதே வாரம் இலங்கை சென்ற பன்-கி-மூன் இலங்கை அதிபருடன் இணைந்து சுமுகமான கூட்டறிக்கையை வெளியிடுகிறார், அதில் விசாரணை பற்றி மழுப்புகிறார். இதிலிருந்தே இவரும் மற்ற் அதிகாரிகளும் பன்னாட்டு விசாரணை குறித்து எவ்வித ஆர்வமும் காட்டாமல் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது."

ஜெனிவா நிகழ்வுகள் தெரிவிக்கும் வேறுசில உட்செய்திகளை ஒவ்வொன்றாக நோக்கலாம்.

1. இலங்கைப்போர் குறித்த் விசேட அமர்வு வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் இரு மாதங்களாகவே முயன்று வந்தன. ஆனால் அதற்கான தயாரிப்புக்களை முழுமையாகச் செய்துமுடித்திருக்கவில்லை. இதேவேளை மே 16-17 நாட்களில் இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாயின, இதே நாட்களில் இலங்கைப்போரில் அரசபடையினர், தாங்கள் விடுதலைப்புலிகளின் தலைமையை அழித்து, போரில் வெற்றி ஈட்டிவிட்டதாக அறிவித்தார்கள். இந்த நிலையில், போர்க்குற்றங்கள் மீதான பன்னாட்டு விசாரணை என்பது, போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசு மீதுதான் பிரதானமாக நடைபெறும். அப்போது போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற நிலையில் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்தவர்களின் பட்டியலும் வெளியில் வரும், அதற்கு யாருமே தயாரில்லை என்பது தெரிந்துவிட்டது. ஆக, இந்த விசேட அமர்வுக்கு சடங்கைப்போன்ற களை தோன்றிவிட்டது.

(இன்னும் வரும்)


படங்கள் - வன்னி முகாமில், கண்ணிவெடியில் சிக்கியோரின் நினைவாக ஜெனிவாவில் சின்னம்.

23.6.09

பூத சதுக்கம் புக்கனர் மயங்கி - 2

பூத சதுக்கம் புக்கனர் மயங்கி - 1

பெய்ஜிங் கோமா நாவலின் நாயகன், முகாமில் சிறைப்பட்ட காலத்தில், அங்கு தன் தந்தையாரின் நாட்குறிப்புக்களை அடையாளங்கண்டு வாசிக்கிறான். இவற்றில், நவீன சீன வரலாற்றின் பயங்கரம் ஊடுபாவாகச் செல்கிறது - சக கைதிகளின் மலத்தில் உணவைத் தேடும் ஒருவர், தம் தந்தையாரை உயிருடன் புதைத்த ஒருவர், வர்க்க எதிரியின் மகளை வன்புணரும் கட்சியின் குடிப்படை, பிறகு அவள் மார்புகளை, ஈரலை வறுத்து உண்ணும் குடிப்படை என்பதாக, பயங்கரமாக விரிகிறது வரலாறு.. "போதும், போதும், என்னால் இனிக் கேட்க முடியாது" எனக் கதறுகிறாள் நாயகனின் தோழி...

ஆனால் நாயகன் பேச்சை நிறுத்தவேயில்லை. இந்த உச்ச வன்முறைச் சடங்கிலும் பங்கேற்கிறான். சீனாவின் தேசிய தினத்தன்று அரசியல்-கைதி ஒருவரைச் சுட்டுக் கொல்கிறார்கள். அந்தப் பிணத்தை நாயகனின் உயிரியல் வகுப்புச்சகாக்கள் பகுத்துக் கூறுபோடுகிறார்கள். அந்த அரசியல்கைதியைச் சுட்ட பிறகும் சற்று நேரம் உயிருடன் வைத்திருக்கிறார்ர்கள் - முக்கிய உடலுறுப்புக்களை நீக்கி ஹாங்காங் பெருவணிகர் ஒருவரின் உடலில் பொருத்தும்வரை.

அடுத்த முறையாக, நாயகனையே உயிருடன் பகுத்துக் கூறுபோடுகிறார்கள். ஒருபுறம் சீனா ஒளிர்கிறது, மறுபுறம் இந்த நவ சீனத்தில் பைத்தியமாய் அலையும் தன் தாயைக் காக்க வேண்டி, தன் சிறுநீரகத்தை விற்கத் துணிந்துவிட்டான் நாயகன். அதைத்தான் கூறுபோட்டு எடுக்கிறார்கள்... வில்லிவாக்கத்திலிருந்து டில்லிவரை பரவிவிட்டதால் சிறுநீரக விற்பனை என்பது நமக்குப் புதிதல்ல. என்றாலும் எதை உண்டு இயங்குகிறது சீனத்தின் நுண்-அரசியல் என்பதைக் காட்ட அவசியமாகிறது இந்த விற்பனை... பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலின் நேரெதிர் நிலையில், பல்லுயிர் மாத்திரமின்றித் தன்னுயிரையும் புசிக்க வேண்டிப் பகுக்கிற செயலில் நாவலின் நாயகன் வரை யாவரும் ஈடுபட்டாக வேண்டும் என்ற நிலை...

Politics in a way parallels eating and its manners and, at some stage, all political ideologies and structures necessarily descend to a zero-state where they confront themselves as dissection and cannibalism. மேற்கண்ட வாக்கியத்தைத் தமிழில் எழுதுவது கடினம் என்பதால் இப்போதைக்கு பகுத்துண்டு என்று தொடங்கும் இந்தக்குறளுடன் விட்டுவிடுகிறேன்.

1989-ஆம் ஆண்டில் தியானென்மென் சதுக்கத்தில் நடந்த கலகத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்-மாணவர்களையும் நாவல் விட்டுவைக்கவில்லை. இவர்களுக்கு ரொமான்டிக் கனாத்தன்மை எதையும் நாவல் தருவதில்லை. மாறாக, இவர்களைச் சாதாரண மனித எத்தனம், பயம், சண்டை-சச்சரவு கொண்ட உருக்களாக நாவல் வார்க்கிறது. எடுத்துக்காட்டாக, தியானென்மென் சதுக்கத்தில் கூடிய இளைஞர்களுக்கு ஓர் கடைக்காரர் இலவச உணவு பரிமாற் முன்வருகிறபோது, அங்கிருந்த ஒரு தலைவர் மாத்திரம் சீனக் கலாச்சாரப்புரட்சி காலத்திலும் இதேபோல இலவச உணவு கிட்டிதை நினைவுகூர்கிறார்! ஆக, கலாச்சாரப்புரட்சியும் தியானென்மென் சதுக்கக் கலகமும் கருத்துருவ அடிப்படையில் எதிரெதிரே அமைந்தாலும் இவ்விரு விழைவுகளிலும் மேலதிக-அதிகாரம் என்பது எதிர்மறையாகத் தொக்கி நிற்கிறது என்பதை நாவல் சொல்லாமலே விளக்குகிறது.

நிரந்தரமாக மயங்கிக்கிடக்கும் நாயகனின் உடலை ஆராயப்புகும் உயிரியல் மாணவர்கள், ஒரு கட்டத்தில் அவன் மூத்திரம் மாத்திரம் தொடர்ந்து பெய்வதை வியப்புடன் நோக்குகிறார்கள். அந்த அற்புத நீர் மூத்திரம்தானா என்று சிலருக்கு ஐயம் ஏற்பட்டு அதைச் சுவைத்தும் பார்க்கிறார்கள். இது முற்றிப்போய் மாணவன் ஓருவன் ஆராய்ச்சி நோக்கில் அந்தக் குறியைச் சுவைத்துக்கொண்டேயிருக்கிறான். அதேவேளை தொலைக்காட்சியில் சீனப் பிரதமர் ஜியாங் ஸெமின் மாணவர்களை நோக்கி உரையாற்றுவது போய்க்கொண்டேயிருக்கிறது - சீனாவில் யாவருக்கும் சுயமரியாதை மீண்டும் கிட்டப்போகிறது என்கிறார் பிரதமர்... சில நாட்களிலேயே தியானென்மென் சதுக்கக் கலகத்தை மக்கள் விடுதலை ராணுவம் ஒடுக்கிவிடுகிறது. ஜியாங் ஸெமின்னின் பதவியைப் பறித்தவர்கள் அவரை வீட்டுக்காவலில் வைக்கிறார்கள். அவர் நிலையும் ஓருவிதத்தில் மயக்க நிலைதான். ஆக, இந்த மயக்க நிலை, சாதாரண மாணவனிலிருந்து பிரதமர் வரை பரவுகிறது. இதிலிருந்து சாவுமாத்திரமே விடுதலையாக அமைகிறது - ஜியாங் மரணம் அடைவது பதினேழு ஆண்டுகள் கழித்து.

2000-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் பந்தயங்களை நடத்த சீனா முன்வந்ததைக் குறிப்பாகச் சொல்லிச்செல்கிறது நாவல். கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங் நகரில் நடந்தபோதும் சீனா தூக்கம் விழிக்காது இருந்ததை இப்படியாகக் குறிப்பிடுகிறார் போலும், நாவலை எழுதிய மா ஜியான்.

தியானென்மென் சதுக்கக் கலகம் நடந்தபோது இந்தியாவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் குழம்பிப்போனார்கள். டில்லியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் பல அலைவரிசைகளில் பேசினார்கள். இறுதியாக, மேற்குலக முதலாளித்துவ அணியின் சதி எனத் தீர்ப்பு சொல்லி ஆசுவாசப்பட்டுக்கொண்டார்கள்... இப்போது தியானென்மென் சதுக்கக் கலகத்தின் இருபதாண்டு நினைவுநாளை ஒட்டிய இந்த மாதமும், இந்தக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குச் சோதனைக்காலமாக அமைந்திருக்கிறது. ஓருபுறம், தாங்கள் ஆள்கிற மாநிலங்களான கேரளத்தில், மேற்கு வங்கத்தில் தேர்தல் தோல்வி. மறுபுறம், கேரளத்தில் ஆளும் முன்னணிக்குத் தலைமை வகிக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சியில் உச்சகட்ட உட்பூசல், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்கள் மற்றும் பழங்குடியினரின் கலகம் இன்னொருபுறம்.. இதற்கிடையில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் நூற்றாண்டு ஆகோஷங்ஙள்... பன்னாட்டு அரங்கில் இலங்கை அரசுக்கு ஆதரவாகப் போய்விட்ட சீனா, க்யூபா, பொலிவியா பற்றி எங்கே என்ன பேசுவது என்ற குழப்பம்..

இதில் தியானென்மென்னை எங்கே நினைவில் வைப்பது..

படங்கள் - தியானென்மென் சதுக்கத்தில் இன்று. இலையுதிர்காலத்தில் புசித்தல் - ஸால்வடோர் டாலியின் ஓவியம்

22.6.09

நிலவின் உருமாற்றம் - ஸில்வியா ப்ளாத்


விதி தொடங்கும் புலம்
தாக்க வேண்டி
வானதன் கெடுதி யாவற்றுக்கும்
சவால் விடும் விமானியவரை
எதிர்கொள்ளத் தயங்கிப் பின்வாங்கும்
தண்ணிலவு பலவும்
வெளியதில்
விமானமதன் மேல்
வெள்ளிவாளும் வீசி
திருப்திநாடும் எனினும்
பொருதல் நிகழாமல்
மெலியும் ஊமைக்காற்றும்.

இதைக்காட்டிலும்
அருகில் வாராத வானும்
முற்றாகத்தான்
தூக்கிப்பிடிக்கும்
திரைகொண்டதொரு வான்குடையை -
வீழும் மனிதனினின்றும்
எப்போதும் அதே தூரத்தில்.
கண்டறியும் நம்பிக்கையைக்
கேட்பதைத் தவிர்க்காத
அவனும் சவால்விடுவான்
வீணே
அந்த மௌனக்கலசம் நோக்கி.

மீறலல்ல இது.
ஆயின் மெதுவான பேரழிவின்
பங்கும் தரும்.
கடித்த ஆப்பிளும்
நாட்டுப்புற ஆதித்தோட்ட
மாலையில் முடியும்.
கபால ஓட்டை
உடைத்துப் பாயும்
புரிதலும்
பசித்துத் துயருறும்
அப்பாவி வானம்பாடியை
தவிக்கச்செய்யும்
கூட்டுக்குயிலாய்.

கோப்பை ஒளிரத்தான்
பால்வாளியாய் மாறி
அதைப் பற்றிய
இளவரசரும் யாரோ?
தேடும் ரகசியம்
ஒவ்வொன்றும்
அம்பலமான போலியென
உறுதியாகும்,
ஊர்வேசியினின்றும்
க்ளியோபாத்ராவை
வேறுபடுத்தும்
வண்ணப்பூச்சின் கைத்தொழிலாக.

அதியழகிய உண்மை
யாவும்
தீயின் பனிக்கட்டியின்
சட்டகத்தில் உருவான
துறைப்புனைவே.
அவை மறைக்கும்
ஒத்திராத பொருளும்
அழுக்குக் காலுறை
பழைய ரொட்டித்துண்டு
முட்டைக்கரு படிந்த தட்டு
எனப்பல.
ஒருக்கில்
இக்குதர்க்கமே
எமக்குத் திருப்தி தரும்.

இருந்தும் உள்ளிருக்கும்
வக்கிரப்பேயும்தான்
ஆவலில் மயங்கி
விலக்குண்ட அங்கியின்
விளிம்பின்கீழ்
தேடிப்பார்க்கும்,
அதிருப்தியில்
விழிகள் நமதும்
விக்கிரகப் புனிதத்தைக் குலைக்கும்
களிமண் பெருவிரலில்
சிறுகப்பைக்காலில்
பெருகும்வரை.

நிலவொளியின் மைக்கா மாயமா
தொலைநோக்கியில் துல்லியமாய்க் காணும்
அதன் குழியுண்ட முகமா
எது வேண்டும்
எனத் தேர்வும்
எப்போதுமுண்டு.
நிஷ்களங்கமோ
தேவதைக் கதை.
தன் கயிற்றில்
தான் தொங்கும்
அறிவார்த்தம்.

இரண்டிலும் தேர்வுண்டு.
எது எனப் பகர்ந்தால்
மாயத்தாள் கோபத்தில்
நம்மைத் தண்டிப்பாள்.
விதிவசம் தவறும் சமன்பாட்டில்
நம்மை உறையச்செய்யும்
அபாயத் துருவமிரண்டில்,
ஐயத்தின் நிஜத்தில்
கனாவின் நம்பிக்கையில்
என ஊடாடி,
அறுகி நாம் நிற்க

-- Sylvia Plath, Metamorphoses of the Moon, 1958

13.6.09

சாவாளும் புலம் அறுக - டிலன் தோமஸ்

சாவாளும் புலம் அறுக.
ஆங்கே செற்றாரும் அம்மணமாய்
காற்றில்
மேற்றிசைத் திங்களில்
ஒருவருடன் இணைக.
நன்றே பொறுக்கி
வெள்ளென்பும் போனபின்
அவர் காலில்
முழங்கையில்
விண்மீனும் உறைக.
பித்தாகிப்போயினும்
அவர் தெளிவாய் அமைக,
ஆழக்கடல் அமிழ்ந்தும்
அவர் மீளெழுக,
காதலர் தொலைந்தாலும்
காதல்
தொலையாது உறைகவென
சாவாளும் புலம் அறுக.

சாவாளும் புலம் அறுக,
அலையின் சுரிவளைகீழ்
தாழ வீழ்ந்தவர்
காற்றாய்ச் சாதல் அறுக,
தசைநார்பல முறிந்தாலும்
பல்-அடுக்கில் சுழன்றும்
வளையில் பிணைந்தும்
அறுகாமல் உறைக,
அவர்கை நம்பிக்கை
இரண்டாய் அறுந்தாலும்
ஊடே
முளைகுதிரைத் தீய்மையும்
ஓட
முனையாவும் பிளந்தாலும்
உடையாமல் உறைகவென
சாவாளும் புலம் அறுக.

சாவாளும் புலம் அறுக.
அவர்தம் செவிப்பறையில்
கதறாதினிக் கடற்புறா,
கடலலையும் கரைசேரா.
மலர்வீசும் தனியிடத்தில்
மலராதினி மழையடித்தும்.
பித்தாகி
ஆணியெனச் செற்றாயினும்
டெய்ஸி மலர்தம் ஊடே
பாத்திரம்பல தாமடித்தும்
தன்னில் உடையும்
ஞாயிறுதனைத் தாமுடைத்துமென
சாவாளும் புலம் அறுக.

--- Dylan Thomas, And death shall have no dominion, 1933.

சுமார் முக்கால் நூற்றாண்டு முன்பு - அதாவது 1933-ஆம் ஆண்டு வாக்கில் - டிலன் தோமஸ் கடவுளை, இயற்கையை உள்ளுறையாக வைத்து எழுதிய கவிதை இது. இளைஞனாக இருந்தபோது வாசித்திருக்கிறேன்.

ஸ்டீவன் ஸோடர்பர்க் இயக்கத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் முன்பு வெளியான Solaris திரைப்படத்தைப் பார்த்தபோது அதில் இதே கவிதை வருவதைக் கண்டு சட்டென அயர்ந்துபோனேன். போலிஷ் மொழி அறிபுனை எழுத்தாளர் ஸ்தானிஸ்லாவ் லெம் எழுதிய Solaris நாவலை முப்பத்தேழு ஆண்டுகள் முன்பு ருஷ்ய இயக்குநர் ஆந்த்ரே தார்க்காவ்ஸ்கி படமாக எடுத்திருந்தார். பிரமாதமான அந்தப்படத்தைப் பலமுறை கண்டிருக்கிறேன். அதில் இந்தக்கவிதை வரவில்லை!

பிறகு ஒரு திரைப்பட இயக்குநருடன் பேசிக்கொண்டிருந்தபோது The Weight of Water, Omega Doom படங்களிலும் இதே கவிதை வருகிறது என்றார்.

உள்ளுறை, இறைச்சி என்ற வகையில் கெல்டிக், வெல்ஷ் மரபில் வரும் டிலன் தோமஸின் கவிதைகள் தமிழுக்கு நெருங்கியவை. பசிப்பிணி அறுக, உழந்துழந் துள்நீர் அறுக என்ற சொல்லாக்கத்தின் வழி டிலன் தோமஸின் இந்தக்கவிதையைத் தமிழாக்கியிருக்கிறேன் - கடல்-காற்றுடன், ஞாயிறு-திங்களுடன் சாவுநோக்கிய தீரா உறவுகொண்ட தமிழ்மக்களின் இன்றைய சோதனையான காலகட்டத்தில்.

7.6.09

பூத சதுக்கம் புக்கனர் மயங்கி - 1

அரவிந்த அடிகா என்ற இளைஞர் எழுதிக் கடந்த ஆண்டு வெளியான வெள்ளைப்புலி ஆங்கில நாவல், பல்ராம் ஹல்வாய் என்ற நபர் இந்தியாவுக்கு விஜயம் செய்ய இருக்கும் சீனப் பிரதமர் வென் ஜியாபாவுக்கு எழுதிய கடிதமாக அமைந்திருப்பது. ஆக, நாவல் முழுதும் நவீன இந்தியா என்பதே ஒரு வன்முறைக்களமாக அமைந்திருப்பதைப் பற்றியது. ஆனால் சீனா பற்றி - சீன அதிபர்களின் பதவி பறிபோகலாம் என்பதைப்பற்றி அப்போது என்ன நடப்பது வழக்கம் என்பதைப்பற்றி இந்த நாவல் கண்டுகொள்வதில்லை!

சீனத்தலைநகர் பெய்ஜிங்கின் தியானென்மென் சதுக்கத்தில் நடந்த கடும் ஒடுக்குமுறையின் இருபதாம் ஆண்டு நினைவுநாள் - கடந்த ஜூன் மூன்று. 1989-ஆம் ஆண்டு நடந்த இந்த விஷயம் அன்றைய இந்தியாவைத் தாக்கிய அளவு இன்று இந்த நினைவுநாள் இந்தியாவைத் தாக்கவில்லை என்று நினைக்கிறேன்... அப்போது கோயம்புத்தூர் சென்றிருந்த நான், சென்னை திரும்புவதற்குள் யாவும் முடிந்துவிட்டதை இன்னும் மறக்க முடியவில்லை... இந்தியாவில் இயங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடதுசாரி இயக்கங்களும் அன்று அதிர்ந்து போனதைப் பார்த்தேன். இன்றும் இவை இதுபற்றி என்ன பேச முடியும் என்பது கேள்விக்குறிதான்.

சீனாவைப் பொறுத்தவரை தியானென்மென் சதுக்கம் பற்றி நினைவுகூராத நிலையே இன்றும் தொடர்கிறது. அங்கே இருபதாண்டு முன்பு நடந்த மாணவர்-எதிர்ப்பை, மேற்குலகின் சதி எனக் கூறிவிடுவது எளிதான விஷயம். இன்றோ நிலைமை தலைகீழ். சீனா உற்பத்தி செய்யும் பல்வகைப்பண்டங்களுக்கான பிரதான சந்தையே மேற்குலகம்தான். சீனாவின் செல்வாக்கு இந்துமாக்கடல், ஆப்பிரிக்கா மற்றும் தென்னமெரிக்காவரை எதிரொலிக்கிறது. ஆக, இந்த நிலையில் சீன அரசை யார்தாம் பகைத்துக்கொள்ள விரும்புவார்கள்! விண்வெளியில் சீனர் ஒருவர் போய்விட்டு வந்தாயிற்று. கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இதே பெய்ஜிங்கில் கோலாகலமாக நடந்தேறின.. பன்னாட்டு அரங்கில் சீனாவின் சக்தி என்ன என்பதை அண்மையில் ஐக்கிய நாடுகள் மன்ற மனித உரிமைக்குழு வாக்கெடுப்பில் பார்த்தோம் - அங்கே சீனாவும் இந்தியாவும் இன்னும் பல நாடுகளும் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன அல்லவா..

மேற்குலகைப் பொறுத்தவரை சீனாவின் செல்வாக்கு எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்ள எடுத்துக்காட்டாய் ஒரு விஷயம் - சீன அரசுக்குப் பணிந்து கூகுல் போன்ற பெரும் மேற்குலக நிறுவனமும் சீனாவுக்கான தன் தேடுதளத்தில் தியானென்மென் பற்றிய படங்களைப் பல ஆண்டுகளாகவே தணிக்கை செய்துவைத்திருக்கிறது. இவற்றை யாரும் பார்க்கக்கூடாதாம். நம்ப இயலாதவர்கள் கீழ்க்கண்ட இணைய தளங்களைப் பார்த்து இதை உறுதிசெய்து கொள்ளலாம்.

தியானென்மென் படங்கள் - ஆங்கில கூகுலில்

தியானென்மென் படங்கள் - சீன கூகுலில்


இதேபோல யாஹூ மற்றும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்களும் பலவகையில் சீன அரசுடன் ஒத்துழைக்கின்றன. சீன அரசை விமர்சித்து அங்கே எழுதிவரும் பலருடைய இணையதள முகவரிகளை அரசுக்கே தந்து அதன் ஒற்றர்களின் பணியை எளிமையாக்கியிருக்கின்றன.

தியானென்மென் சதுக்கத்தில் நடந்த மாணவர்-எதிர்ப்பபு பற்றிய ஒரு நாவலைக் கடந்த ஆண்டே வாசித்திருந்தேன். நாவலின் பெயர், பெய்ஜிங் கோமா. எழுதியவர், இங்கே லண்டனில் வசிக்கும் சீன எழுத்தாளர் மா ஜியான். ஆங்கில ஆக்கத்தைச் செய்தவர், இவருடைய துணைவி ஃப்ளோரா ட்ரூ. ஏற்கனவே திபெத் நிலைமை குறித்து நாக்கை நீட்டு (Stick out Your Tongue) என்ற நாவலை எழுதிப் பெயர்பெற்றவர் மா ஜியான்.

இந்த நாவலின் களம், தியானென்மென் என்ற வரலாற்று நிகழ்வின் singularity. Singularity என்றால் கணித நிபுணர்களுக்குச் சட்டென்று புரிந்துவிடும் - இயல்கணிதத்தில் குறிப்பிட்ட ஒரு சார்பியத்தில் (function) எதிர்பாராது அமைந்துவிடும் ஒருவித பிரத்தியேகத் தன்மை இது. இதை வரலாற்றுக்கும் இப்படி விரிக்கலாம் - தியானென்மென் சதுக்கத்தில் தாங்கள் நடத்திய எதிர்ப்பு எந்தத்திசையில் போகும் என்பதை மாணவர்களும் அறிந்திருக்கவில்லை, அதை ஒடுக்கிய சீன அரசும் அறிந்திருக்கவில்லை என்பதுதான் இந்த singularity என விளக்கலாம்.

பெரும் மக்கள்கூட்டங்கள் பங்கேற்கிற இத்தகைய singular நிகழ்வுகள் அவ்வப்போது வரலாற்றில் நிகழும், இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையாக அமையும், வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகளைப் பதிலிசெய்ய முடிவதில்லை என்பதாலேயே இவற்றின் singular தன்மை முக்கியமாகிவிடுகிறது என்கிறார், மறைந்த ஃப்ரெஞ்சு அறிஞர் ழான் போத்ரியார் (Jean Baudrillard). ஆக, வரலாற்றை யாந்திரிக நிகழ்வுகளாகவோ, சதிகளாகவோ மாத்திரம் காணும் வழக்கம் கொண்டவர்கள், இந்த நாவ்லையும் இந்தப் பதிவையும் வாசிக்கச் சிரமப்படுவார்கள் என்பதால் இந்த இடத்தில் விலகிவிடலாம் என்று தோன்றுகிறது. நன்றி, மீண்டும் சந்திப்போம்.

இன்னும் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு -

தியானென்மென் எதிர்ப்பும் சரி, அதை ராணுவம் ஒடுக்கிய அந்த நிகழ்வும் சரி, இருதரப்புக்கும் பெரும் அதிர்ச்சியாகப் போய் முடிந்தன, அந்த அளவுக்கு அந்த இடமும் காலமும் singular தன்மை கொண்டிருந்தன என்கிறது, மா ஜியான் நாவல். சீனாவில் முதலீட்டியப் பொருளாதார மாற்றங்களை விரைவாக்கிய சீனத்தலைவர் ஹூ யாபங் மாரடைப்பில் மறைந்ததை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தொடங்கிய தியானென்மென் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டத்தில் போய் முடிந்தன. உண்ணாநிலைப்போராட்டங்கள், உள்மோதல்கள், போராட்டத்துக்கு அரசு அணுக்கமாக இருக்கிறதா என்ற ஐயங்கள், வதந்திகள், உரையாடல்கள் எனப் பலவும் நடக்க, சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ழாவ் ஸியாங் மாணவர்களைச் சந்தித்து உரையாற்றினார். சீனாவில் என்னதான் நடக்கிறது, என்ன மாற்றம் வரப்போகிறது என்று உலகம் கவனித்துக்கொண்டிருந்தது, ஆனால் தியானென்மென் சதுக்கத்தில் புகுந்ததென்னவோ சீன மக்கள் விடுதலை ராணுவம்தான். அதே நேரம், ழாவ் ஸியாங்குக்குக் கிடைத்தவை, பதவிநீக்கமும் வீட்டுக்காவலும். அதற்குப் பதினாறு ஆண்டுகள் கழித்து - அதாவது 2005-ஆம் ஆண்டில் மரணமடைந்தார் ழாவ். அதற்கு முன்பு இவர் தம்முடைய வாழ்க்கைக்குறிப்புகளைப் பதிவுசெய்து வைத்தார். அது இவ்வாண்டு ஹாங்காங் நகரில் வைத்து Prisoner of the State: The Secret Journal of Premier Zhao Ziyang என்ற புத்தகமாக வெளியாகியிருக்கிறது.

மா ஜியான் நாவலின் தலைப்பு, பெய்ஜிங் கோமா - தியானென்மென்னுக்குப் பிறகு நினைவுதவறிப்போன ஓர் உலகைச் சுட்டுகிறது, அதாவது சீனாவின் அரசியல் தலைமைத்துவம் தியானென்மென் குறித்த நினைவுகள் யாவற்றையும் திட்டவட்டமாக அழித்துக்கொண்டதைச் சுட்டுகிறது. அந்தப்போராட்டங்களில் பங்கேற்ற பலர் நாட்டைவிட்டுத் தப்பினார்கள், பலர் சிறைவாசம் அனுபவித்தார்கள், அவர்களுடைய குடும்பங்களை அரசமைப்பு பழிவாங்கியது, சிலருக்கு மயங்கும்வரை அடி-உதை. ஆயுதமேதும் ஏந்தாத எத்தனையோ பேரை மக்கள் விடுதலை ராணுவம் கொன்றது என்றாலும் அந்தப்படுகொலைகள் பற்றி யாரும் மூச்சுப்பேச்சு காட்டக்கூடாது. அரசமைப்பு கூறுவதன்றி வேறு எந்தவகையிலும் தியானென்மென் பற்றிப் பேச முடியாத நிலை... ஆக, இப்போதைய சீன இளைய தலைமுறையினரில் பெரும்பாலோர்க்கு தியானென்மென் சதுக்கத்தில் என்ன நடந்தது என்றே தெரியாது... ராணுவ டாங்கிகள் அணிவகுத்துச் சதுக்கத்துக்கு வந்த போது எதிர்த்த இளைஞரின் மேற்கண்ட பெயர்பெற்ற அநத் புகைப்படம் கூட அவர்களில் பலரும் கண்டிராத ஒன்றே... சீனாவில் புதிதாய்த் தோன்றியிருக்கும் செல்வந்த வர்க்கத்தினர்க்கு இதுபற்றி கவலையேதும் இல்லை என்பதை மா ஜியான் நாவல் பிரமாதமாகச் சொல்கிறது.

தியானென்மென் சதுக்கத்துக்குப் பிறகான சீனாவின் வரலாற்றை பிரத்தியேகமான அரசியல்-உடலாகக் காண்கிறது, நாவல். அதாவது இங்கே வரலாறெனும் உடலுக்கு மாத்திரமே இயக்கம், உள்ளத்துக்கில்லை. நாவலின் நாயகனும் இப்படி உயிரியல் மாணவன்தான். ஆனால் தியானென்மென் சதுக்கத்தில் குண்டடிபட்ட இவன் நிலைமையோ தலைகீழாகிவிடுகிறது. தன் தாயின் இடுங்கிய குடியிருப்பில் கிடக்கும் இவன் உடலில் அசைவேதுமில்லை. உள்ளமோ எப்போதும் விழித்திருக்கிறது.

இவனுக்கும் சேர்த்து இவன் தந்தையார் ஏற்கனவே உடலுழைப்பைச் செய்திருப்பவர். அதாவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அவரை வலதுசாரி என முத்திரை குத்தி இருபத்திரண்டு ஆண்டுகள் உடலுழைப்பில் ஈடுபட வேண்டும் என தண்டித்திருந்தது. அதையடுத்து இவன் சிறுவயதிலிலேயே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை வெறுக்கத் தொடங்குகிறான். கட்சியின் சுவரொட்டியைக் கிழித்துத் தன் குண்டியைத் துடைக்கிறான். பள்ளிக்குப் போகாமல் காமக்களியாட்டச் சித்திரங்கள் கொண்ட சீட்டுக்கட்டுகளைக் கள்ளச்சந்தையில் விற்கிறான். நிலைமை மோசமாக ஆக, திடீரெனக் கட்சியும் அரசும் தம் நிலைப்பாட்டைத் தளர்த்துகின்றன - மீண்டும் இவனுக்குக் கல்வி, பல்கலைக்கழகம் செல்ல அனுமதியும் கிட்டுகிறது. அங்கே போய்த்தான், தந்தையார் தம் சிறைவாசம் மற்றும் முகாம்வாசம் குறித்து எழுதிய நாட்குறிப்புகளை வாசிக்கிறான். அப்போது நவீன சீன வரலாறு பற்றிப் புதிய கோணத்தில் அறிந்துகொள்கிறான்.

இன்னும் வரும்

6.6.09

எங்கு? - பௌல் ஸெலான்

இரவில்
நொறுங்கும் கனப்பாறையில்
துயரின் கரட்டில் ஜல்லியில்
மெதுவான கொந்தளிப்பில்
ஒருபோதுமன்றி எனப்பெயர்கொண்ட
ஞானக்குழி.
நீரூசி பல
தைக்கும்
பிளவுண்ட நிழலும்
இன்னும் போராடிச்செல்லும்
ஆழத் தன்வழி
விடுதலையாய்.

-- Paul Celan, Wo?, Atemwende.
படம் - ஆஸ்விட்ஸ் வதைமுகாம். இன்று.

பௌல் ஸெலான் தற்கொலை செய்த எழுத்தாளர். தற்கொலை செய்த எழுத்தாளர்களின் பட்டியலும் சரி, சாலைவிபத்தில் மறையும் எழுத்தாளர்களின் பட்டியலும் சரி, நீண்டவைதான்.

கவிஞர்-விமர்சகர், கொல்லிப்பாவை இதழை நடத்திய ராஜமார்த்தாண்டன், நேற்று காலை நாகர்கோவிலில் சாலை விபத்தில் அகப்பட்டு மறைந்த செய்தது கேட்டு அதிர்ச்சியும் துயரும் அடைந்தேன். சென்னையில் இருந்த காலத்தில் இவரை நன்கு அறிந்திருந்தேன். பழகுவதற்கு மிக இனியவர். கொல்லிப்பாவை இதழ்களை இவர் அறைவரை சென்று வாசித்திருக்கிறேன்.

தமிழவன் மற்றும் என்னைப்போன்றவர்கள் அறிமுகம் செய்த கோட்பாட்டுப்புலங்களை, அவற்றை வைத்துச் செய்த ஆய்வுகளை, ராஜமார்த்தாண்டன் என்னைச் சந்திக்கும்போதெல்லாம் மறுத்துக்கொண்டேயிருப்பார். ஆனால் அவை யாவற்றையும் படித்திருந்தார். குறிப்பாக, பிரம்மராஜனின் ஞாபகச்சிற்பம் தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரையை வாசித்திருந்தார். இவரை எதிர்மறையாகத் தாக்கிய கட்டுரை அது. தமிழவன் முன்வைத்த 'நீ-நான் மொழிதல் கோட்பாட்டு'க்கு அருகில்தான் இவர் கவிதைகளும் இருக்கின்றன என்பதை ஒருமுறை இவரிடம் கூறியது நினைவுக்கு வருகிறது. சண்டை போடவே வந்துவிட்டார்!

அகால மரணமடைந்த ராஜமார்த்தாண்டனுக்கு அஞ்சலியாக மேற்கண்ட பௌல் ஸெலான் கவிதை. சாவைப் பற்றியதுதான்.

5.6.09

இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போன உரை - 2

நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போன உரை - 1

போரில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்துவிட்டோம், விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் போரில் கொல்லப்பட்டார்கள் என்று கூறியது இலங்கை அரசு. விடுதலைப்புலிகள் பல ஆண்டுகளாக நடத்திய வன்முறைத்தாக்குதல்கள் இலங்கையைச் சார்ந்த அனைத்து சமுதாயங்களை அச்சுறுத்தி வந்தன, சுயாதீனமாகச் சிந்தித்த தமிழ்மக்களைக் கொடூரமாகக் கொல்லவும் அவர்கள் துணிந்தனர். இத்தகைய செயல்களிலிருந்து மக்களைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதை முழுமையாக அங்கீகரிக்கும் அதே நேரம், இத்தகைய நிலைமை எங்கு இருந்தாலும் அங்கு பன்னாட்டு மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் எக்காலத்திலும் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். இலக்கை அடையவேண்டும், அதற்காக எப்படியும் செயல்படலாம் என்ற வழிமுறையை எவ்விதச்சூழலும் நியாயப்படுத்த முடியாது.

போரின்போது சாதாரண மக்களைத் தாக்கக் கூடாது என்ற அடிப்படைக்கோட்பாட்டை இருதரப்பும் பாரிய அளவில் மீறியிருக்கின்றன என்று கூறுவதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. இந்த அண்மைச்சம்பவங்கள் குறித்த சுயாதீனமான, நம்பகத்தன்மை கொண்ட பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். அது எந்தெந்த பன்னாட்டு மனித உரிமை, மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் எங்கெங்கே, எந்த அளவு மீறப்பட்டிருக்கின்றன என்பதை விசாரிக்க வேண்டும், இவற்றுக்கான பொறுப்பு யார்யாருக்கு என்று நிறுவ வேண்டும்.

போர்ப்பகுதியிலிருந்து வெளியேறினால் பெரும் அபாயங்களையும் துயரையும் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்றிருந்தபோதும் அப்படி வெளியேற முயன்ற சாமானிய மக்களை விடுதலைப்புலிகள் வேண்டுமென்றே தடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டுகளைக் கவனமாக விசாரிக்க வேண்டும். அதாவது, விடுதலைப்புலிகள் தம் ராணுவ அணிகளுக்கென கட்டாய ஆளெடுப்பில் ஈடுபட்டார்கள், போரின்போது தம்முடைய ராணுவத் தளவாடங்களை சாமானிய மக்களின் இடையே நிறுவினார்கள், மக்களை மனிதக்கேடங்களாகப் பாவித்தார்கள், ஏன் போரிலிருந்து தப்பமுயன்ற சாமானிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள், அப்படித் தப்பியோடி இடம்பெயர்ந்த மக்கள் ராணுவ சோதனைச்சாவடிகளில் காத்திருந்தபோது அங்கே தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்.

இலங்கை அரசைப் பொறுத்தவரை, போர்க்களப்பகுதியில் சாமானிய மக்கள் பெரிதும் குழுமியிருந்த நிலையில் அவர்களைப் பாதுகாப்பதாகக் கூறியவாறே அதன்மீது கனரக ஆர்டிலறி ஆயுதங்களைப் பாவித்துத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது, போரின் இறுதி வாரங்களின்போது குறிப்பிட்ட மருத்துவமனை ஒன்றின்மீது பல முறை ஷெல்லடித்திருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவை உறுதிசெய்யப்பட்டால் இது பெரிதும் கவலை தரும் விடயமாகும். தவிர, சரணடைய முன்வந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை போரிலிருந்து விலகுவோராகக் காணவேண்டிய ஏதுநிலையில் அவர்களை ராணுவத்தினர் கொன்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டால், அது போரின் விதிகளைத் தீவிரமாக மீறியதாகக் கருதப்படும்.

ஆக, போரில் இருதரப்பும் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்ற உண்மையை அறிய வேண்டுமானால் அதற்கான ஆதாரங்களை நிறுவ வேண்டிய அவசியம் உண்டு.

போரில் தாக்குண்டு பலியான சாமானிய மக்களின் சார்பில் அவர் சுற்றத்தார் போரிலிருந்து தப்பிப்பிழைத்த சாமானிய மக்கள் என யாவர்க்கும் நீதிகேட்கும் உரிமை உண்டு. விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொறுத்தவரை அதன் அடித்தள மற்றும் இடைநிலை உறுப்பினர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பெறும் என்றும் மூத்த தலைவர்கள் மீது மாத்திரம் வழக்குவிசாரணை நடத்த இருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவிக்கிறது. இந்த இடத்தில் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதாபிமானத்தை மீறும் குற்றங்கள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்க வல்ல தனிநபர்களை இந்தக்குற்றங்களிலிருந்து விடுவிப்பதான பொதுமன்னிப்பு நடவடிக்கைகள், பாரிய மனித உரிமை மீறல்களாகும், அவற்றை அனுமதிக்க முடியாது என்பதை வலியுறுத்துக் கூற விரும்புகிறேன்.

இன்று மே 25-ஆம் நாள் என் உரையைப் பதிவு செய்கிற இந்த நேரத்தில், ஐ. நா. மன்றச் செயலாளர்-நாயகம் பன்-கி-மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறார். இந்தப்போரின் அடிப்படைக் காரணங்களை இலங்கை அரசு பரிசீலிக்க வேண்டும், அங்கே நீண்ட காலமாக நிலவிவரும் மனித உரிமை மீறல்களுக்கு முகங்கொடுக்க வேண்டும், அனைத்துத்தரப்பும் செய்திருக்கும் மனித உரிமை மீறல்களுக்கு யார்யார் பொறுப்பு என்பது குறித்தும் அவர்களை முறையாக விசாரணை செய்து தண்டிப்பது குறித்தும் தீர்க்கமான வழிமுறையொன்றை உறுதிசெய்ய வேண்டும் என இலங்கை அரசை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தக் கோரிக்கைகளுடன் நானும் என்னை இணைத்துக்கொள்ள விரும்புகிறேன். இலங்கைக்கு ஒரு புதிய எதிர்காலம் வேண்டும், சமுதாயங்களிடையே பொருள்பொதிந்த இணக்கப்பாடும் நிலைத்த சமாதானமும் வேண்டும், யாவரின் மனித உரிமைகளும் மதிக்கப்பெற்று அடிப்படை சுதந்திரம் எதார்த்தமாக வேண்டும் என்றால்- இவை எல்லாமே இத்தகைய ஆழமிக்க, தீர்க்கமான அணுகுமுறை கைக்கொள்ளப்படுமா என்பதில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

ஆக, இலங்கை போரிலிருந்து மீள வேண்டிய, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய சவால்களைச் சந்திக்கிறது. போர் நடந்த பகுதியைத் தவிர, ஒட்டுமொத்தமான நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய நிறுவனங்களுமே இந்தச் சவால்களைச் சந்திக்கின்றன என்பது தெளிவு. மூன்று பத்தாண்டுகளாக நடந்த போரின் விளைவாக, நாட்டின் பொதுவாழ்வும் சட்டத்தின் ஆட்சியும் அரிக்கப்பட்டிருக்கின்றன. மனித உரிமைப் பாதுகாவலர்களும் ஊடகவியலாளர்களும் தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் ஏன் சாவையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். நாட்டின் தேசிய மனித உரிமை ஆணையம் போன்ற முக்கிய நிறுவனங்களின் சுயாதீனப்போக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே போர் நடந்த மற்ற பல நாடுகளில் நடந்ததைப் போல இலங்கையில் மனித உரிமைகளுக்கான கலாச்சாரத்துக்குப் புத்துயிர் ஊட்டவேண்டிய கடப்பாடு உள்ளது. அதன் மூலமே அங்கே சமுதாயங்கள் இடையே பரவலான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கும் அதை ஊக்குவிப்பதற்கும் செயல்பாடுகளுக்காக அங்கே மனித உரிமைகள் ஆணையத்தின் பிரத்தியேக அலுவலகம் ஒன்றை அமைத்தால் அது அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதில் முக்கியப் பங்காற்ற முடியும், இலங்கையின் மீட்சியில் பங்கேற்க வேண்டிய அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப முடியும் என நான் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருக்கிறேன். இலங்கையின் வரலாற்றில் இத்தகைய முக்கிய கட்டத்தில் பன்னாட்டுச்சமுதாயம் இந்தச் செயல்பாடுகளுக்கு ஆதரவாக நடக்க வேண்டும் என மனித உரிமைகள் குழுவை வலியுறுத்துக் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு - இலங்கைப்படுகொலைகள், தொடரும் மனித உரிமை மீறல்கள் மீதான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்ற முயற்சிகளை, கடந்தவாரம் ஜெனிவா நகரில் இதற்காக நடந்த ஐ. நா. மனித உரிமைகள் குழுவின் விசேட அமர்வு, வாக்கெடுப்பின் மூலம் தோற்கடித்தது. மாறாக, இலங்கை தன்னையே பாராட்டிக்கொள்ளும் தீர்மானம் இந்தக்குழுவில் நிறைவேறியது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, க்யூபா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உறுதுணையாக வாக்களித்தன. அதற்கு முன்பாக ஐ. நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அம்மையார் ஆற்றிய உரையின் இரண்டாம், இறுதிப்பகுதி.

4.6.09

கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு...

இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே;
சுடுபிணக்காடு பதியாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்று மாய்ந்தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு.
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப் புழுக்கல்
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது,
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று,
நிலங்கலனாக, இலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.

கடந்த மே மாதம் பதினெட்டாம் நாளிலிருந்து தொடர்ந்து புறநானூறு வாசித்துவந்திருக்கிறேன். தினமும் ரயிலில் வைத்து வாசிப்பு. குதித்துவிடலாமோ என்று பல முறை நினைக்குமளவு தமிழ்ப்பாடல்கள் என்னைத் தள்ளின. இப்பாடல்கள் பலவும் சிறுவயது முதலே வாசித்தவைதாம். இருந்தும் இப்போதைய பொருள் வேறாகவே தொனிக்கிறது. ஒரு பாடல். இழிபிறப்பினோன் என்ற சொல்லை விட்டுவிட்டு வாசிக்கலாம் என்றும் தோன்றுகிறது.

பாடல் எண்: 363. பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார். திணை: பொதுவியல். துறை: பெருங்காஞ்சி.

பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் இதை ஆங்கிலத்தில் ஆக்கியிருக்கிறார். அதை வாசிக்கலாம்:

Benevolent kings who have ruled this vast earth
surrounded by the black sea
so that not even a part of the centre of one utai leaf
belonged to another -
even they have gone to the ground of burned corpses
as their final home,
more of them than there is sand heaped by the waves.
All have gone,
others taking their land,
and perished.
Therefore you too hear:
there is no life that stays with an undying body.
Death is true, no illusion.
Before the ugly day
when on the wide burning ground
spread with milkhedge and thorns
and marked with rising biers,
a man of despised birth takes boiled, saltless rice
and gives it, not looking around,
so you eat a sacrifice undesired
whose vessel is the earth,
do the things you intend
and utterly renounce the place whose limit is the sea (earth).

-- Translated by George L. Hart, The Poems of Ancient Tamil, p. 82.

ஃப்ரெஞ்சு அறிந்தவர்கள் என் ஆக்கத்தை வாசிக்கலாம்:

Rois bienveillants qui ont ordonné cette vaste terre
entouré par la mer noire
de sorte que pas même une partie du centre d'une feuille d'utai appartenu à l'autre -
même ils sont allés à la terre des cadavres brûlés
comme leur maison finale,
plus de eux que là est sable gros par les vagues.
Tous ont disparu,
d'autres prenant leur terre,
et péri.
Par conséquent tu entends aussi:
il n'y a aucune vie qui reste avec un corps impérissable.
La mort est vraie, aucune illusion.
Avant le jour laid
quand au sol brûlant large écartez avec l'euphorbe et les épines
et identifié par les civières en hausse,
un homme de naissance dédaignée prend le riz bouilli et sans sel
et le donne, ne regardant pas autour,
ainsi tu manges un sacrifice peu désiré
à qui navire est la terre,
faites les choses que tu prévois
et renonces tout à fait à l'endroit dont la limite est la mer (la terre).

குறிப்பு: இங்கே எஸ்ஸெக்ஸ் பகுதியில் இருக்கும் எங்கள் இல்லத்திலிருந்து சுமார் ஆறுமைல் தொலைவில் உள்ல சிங்ஃபோர்ட் என்ற பகுதியைச் சார்ந்த பிரிட்டிஷ் இளம் தமிழ்ப்பெண் தமிழ்வாணி ஞானக்குமார் என்பவர் கடந்த ஆறுமாதங்களாக வன்னிப்பகுதிக்குச் சென்று அங்கே இலங்கைப்படையினரின் தாக்குதலில் காயம்பட்டோர்க்குச் சிகிச்சை செய்துவந்த மருத்துவர்களுக்கு உதவியாக இருந்து இப்போது இலங்கைப்படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது. இவரை விடுவிக்கப் பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களும் இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளும் முயன்று வருவதாக அறிகிறேன். இன்று இவர் பற்றி நிறைய யோசித்தேன். இருபதாண்டுகள் முன்பு தியனன்மான் சதுக்கத்தில் உயிர்நீத்த சீன இளைஞர்கள் குறித்தும் வாசித்தேன்.

3.6.09

நிலப்பரப்பு - பௌல் ஸெலான்

தாழியுள்ளுமை பலதுடன்
நிலப்பரப்பும்
புகைமுகம் முதல்
புகைமுகம் வரை
உரையாடல் பலதும்.

பித்தப்பூஞ்சணமும்
புதைபடாக் கவித்துவப் பகுதியும்
கண்டெடுத்த நாக்கும் பல்லுமென
அவர் உண்ண
உருண்டுறையும்
தன் கண்ணுள்
கண்ணீரும்.

யாத்திரிகக் கூண்டின்
அனாதை இடப்பாகமதை
அவர் உமக்களித்துப் பின்
உம்மைத் தூக்கியெறிந்தார்.

அது
வெளி ஓளிர்வித்துக் கேட்கும்
சாவெதிரே
ஆட்டமும்
கிணுகிணுத்துத் தொடங்குவதை.

-- Paul Celan, Landschaft, Atemwende.

2.6.09

குற்றமே போலாகும் காலம் - ப்ரெக்ஹ்டும் ஸெலானும்

..Was sind das für Zeiten, wo
Ein Gespräch über Bäume fast ein Verbrechen ist
Weil es ein Schweigen über so viele Untaten einschließt!..

மரம்பற்றிப் பேசுவதும்
கொடூரம் பற்பல கொள்ளும்
உஷ்ஷெனும் மௌனத்தின்
குற்றமே போலாகும்
காலமிதை என்னென்ப

-- Bertolt Brecht, An die Nachgeborenen, 1939.

Ein Blatt, baumlos
für Bertolt Brecht


Was sind das für Zeiten, wo
ein Gespräch beinah ein Verbrechen ist,
weil es so viel Gesagtes mit einschließt.

இலையொன்று, மரமற்று -
பெர்டோல்ட் ப்ரெக்ஹ்ட்டுக்கு


சற்றே பேசுவதும்
ஏற்கனவே சொன்ன சேதி
எத்தனையோ கொள்ளும்
குற்றமே போலாகும்
காலமிதை என்னென்ப

-- Paul Celan, Ein Blatt, baumlos für Bertolt Brecht,

ப்ரெஹ்க்ட்டின் கவிதைக்குப் பதிலாக பௌல் ஸெலான் எழுதியதைத்தான் வாசிக்கிறீர்கள். மரம் பற்றிப் 'பேசுவது’ என்ற ப்ரெக்ஹ்ட்டின் வரியில் தன்னிலைகள் தமக்குள் பேசுவதைத் தம் கவிதையில் மாற்றிப்பார்க்கிறார் ஸெலான். இங்கே Gespräch என்பது சாதாரணப் பேச்சோ, பகிர்வோ அல்ல, மாறாக சூக்கும தளத்தில் நடக்கும் ஒன்று. இந்தச் சூக்கும தளத்தில் நடக்கும் மரம் பற்றிப் பேசுவதை மரமே அற்ற இலை கேட்பதாக ஆக்குகிறார் ஸெலான். அதாவது, தானாகிய இலை தன் தனிமைவாசத்தில் சற்றே ’பேசு’வதாக’க் காட்டுகிறார். இங்கே மரமற்ற இலை எனும்போது செத்த மரம் அதாவது காகிதம் என்ற பொருளுமுண்டு, அதாவது 'பேச்சை' எழுத்தாக மாற்றும் செயலுமுண்டு.

எதைப் 'பேசு'கிறது இலை? கொடூரம் பற்பல என ஒருகாலம் கண்டவற்றை அதனால் 'பேச' முடியுமா.. அவையெல்லாம் ஏற்கனவே சொன்ன சேதி எத்தனையோ கொள்வனவாகி விட்டனவே.. ஆக, முன்பு ப்ரெக்ஹ்ட்டுக்குக் கிடைத்த பருண்மையைக் கூறவல்ல மொழி தமக்கினி இல்லை என்கிறார் ஸெலான். பகிர்ந்து 'பேசு'வதற்கான புலமினி இல்லை, பேச்சின்-எழுத்தின் புலம் தனிமைவாசம், ஆனால் பிறிதான தன்னிலையை விளிம்பிலாவது வைத்திருக்கும் சாத்தியம் என்பது ஸெலான் கவிதையின் இறைச்சிப்பொருள்.

ஆக, போர்க்காலத்தின் ஊடே வாழ்வதாலேயே வருவதான, அதைப் பொறுத்து-ஒத்துழைப்பதான குற்றத்தை, அதனால் வரும் உணர்வை, ப்ரெக்ஹ்ட்டின் கவிதை பெரிதும் முயல்வதைப் போல, இனி கடக்க முடியுமா என்பது ஸெலான் எழுப்பும் கேள்வி.

1.6.09

கறுப்பாய் - பௌல் ஸெலான்

கறுப்பாய்
நினைவின் காயமாய்
கண்கள்
தோண்டும் உன்னை நோக்கி
இதயத்தின் பல் பல
கடித்த முடிப்புலத்தில் -
நம் படுக்கையில் தங்குமது:
தண்டிதன் ஊடே
நீ
வர வேண்டும்.
வாராய்.
விதையதன் பொருளில்
கடல்
உன்னைத் தாரகைத்து முடிக்கும்
அகமகத்தில் எற்றைக்குமாய்.
பெயர் வழங்குவதற்கொரு முடிவு.
என் விதியும் இடுவேன்
உன்னில்.

- பௌல் ஸெலான், மறுமூச்சு, 1967.
- Paul Celan, Schwarz, Atemwende, 1967.

பதிந்தவை