பருவ மழை சற்றே நிற்க, கேரளத்தைத் தாக்கியிருப்பது வேறொரு விஷயம். அசாதாரண வாழ்க்கை கொண்ட மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டி என்ற கமலா தாஸ் என்ற கமலா சுரையாவின் மரணம்தான் அது. இன்று அதிகாலை புனே நகரில் நடந்திருக்கிறது. இவருக்கு வயது எழுபத்தைந்து என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நாளை மறுநாள் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் என்றது செய்தி. 'சேச்சி'-யின் மரணத்துக்கு எழுத்தாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை ஆதராஞ்சலிகள் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
செய்தி கேட்ட சற்று நேரத்தில் நன்றாகத் தண்ணீர் விட்டுக் குளித்தேன். கேரளத்தில் என் துணைவியாரின் வீட்டில் இருந்திருந்தால் மீனச்சில் ஆற்றுக்குச் சென்று குளித்திருப்பேன்.... குளிர்நீர் என் உடலெங்கும் ஊர்ந்து வழிய, மெலிதாகச் சிலிர்த்தேன். ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸவின் மரணத்தைக் கேள்விப்பட்ட திருலோக சீதாராம் கிணற்றுக்குச் சென்று குளியல் போட்டதும் நினைவுக்கு வந்தது. ஆம், நிஜத்தில் நம் சுற்றத்தார், எழுத்தாளர்களும் கலைஞர்களும்தாம் அல்லவா..
எனக்குப் பதின்மூன்று-பதினான்கு வயதில் கமலா தாஸ் எழுதிய ஆங்கிலக்கதைகள் மற்றும் கட்டுரைகளைத்தான் முதலில் வாசித்திருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா வார இதழில் வெளியானவை. அப்போது புரியவில்லை. அந்த வயதுக்கேற்ப புரிந்தவை போலக் கிளர்ச்சியாக இருந்தன. இப்படியும் எழுத முடியுமா என்று பயமாக இருந்தது... இன்று திரும்பிப்பார்க்கும்போது மாதவிக்குட்டியின்மீது ஆண்டாளின் நிழல் பட்டுக்கொண்டே இருப்பது தெரிகிறது. உண்மையில் இவர் காதலன் கண்ணன்தான் எனத் தோன்றுகிறது.
திருச்சூர் அருகே நாலாப்பாட்டு தறவாட்டின் பெயர்பெற்ற எழுத்தாளர் பாலாமணியம்மாவின் மகளாகப் பிறந்த மாதவிக்குட்டியின் வாழ்வு, இஸ்லாமியக் கபரடக்கத்தில் சென்று முடிந்திரு்கிறது. தந்தையார் வி.எம். நாயர், மாத்ருபூமி நாளேட்டின் ஆசிரியராக இருந்தவர். மகன் மோனு தாஸ் நாலாப்பாட் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆசிரியர் குழுவில் இருப்பவர். இப்படிக் குடும்பமே எழுதும் நிலையில் இருக்க, 'மான்குட்டிக்குப் பிறந்த குரங்கு' என்று தம்மை விவரித்துக்கொள்கிறார் மாதவிக்குட்டி.
மாதவிக்குட்டியின் வாழ்வில் எத்தனையோ மனிதர்கள், காதலர்கள், நண்பர்கள், மார்க்கங்கள்.. ஆக, இவர் எழுத்தைக் காட்டிலும் விசித்திரமானது இவர் வாழ்வு. இதுபற்றி விமர்சித்து எழுதாதவரே இல்லை.. என்றாலும் இவர் பேசுவதைக் கேட்கும்போது பிறிதோர் உலகத்தில் வாழ்பவர் என்ற உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவேயில்லை. இதுதான் இவருடைய பலமோ என்று ஒருகணம் தோன்றும்...
இதற்குச் சரியான எடுத்துக்காட்டு இதோ - கேரளத்தில் தூக்குத்தண்டனை பெற்ற ஒரு கைதி, சிறையில் இவருடைய எழுத்தை வாசித்தார். பிறகு தண்டனைக்குறைவு பெற்று விடுதலையாகி மாதவிக்குட்டியின் வீட்டுக்கு வந்து 'அம்மயுட மடியில் தலைவைத்துக் கிடக்கணும்' எனக் கோரினார். அது நிறைவேறியது.
இருபதாண்டுகளுக்கும் முன்பு நானும் மாதவிக்குட்டியைக் கண்டிருக்கிறேன். சென்னையில் வைத்து. அப்போது இலங்கைக்குச் சென்றிருந்த இந்தியப்படையினருக்கும் அங்கு விடுதலைப்புலிகளுக்கும் மோதல்கள் தொடர்ந்து அதை நான் கடுமையாக விமர்சித்துப் பொதுக்கூட்டமொன்றில் பேசியிருந்தேன். அதையடுத்து ஒருநாள் காலை இந்திய உளவுத்துறையினர் என் அலுவலகம் வந்து என்னைப்பற்றி விசாரித்துச் சென்றிருந்தார்கள். மாலை டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு அகஸ்மாத்தாக நான் சென்றபோது அங்கே காரில் இவர் ஏறிக்கொண்டிருந்தார். உளவுத்துறை விசாரணை பற்றிய யோசனையிலேயே நான் சென்றதால் என் மோட்டார் சைக்கிள் இவர் காரை உரசிவிட்டது. ஓட்டுநர் என்னை ஏதும் சொல்வதற்குள் 'எந்தா மோனே..' என்று வந்து என் தோளைத் தட்டிச் சிரித்தார். நிறைய நகை அணிந்திருந்தார். கைவளை ஒலி காதுவரை சென்று மீண்டும் சிலிர்த்தேன். அப்போதுதான் தொட்டது மாதவிக்குட்டி என உணர்ந்தேன்.
"ஓ, என் தப்புதான்.. ஸாரி.... உங்கள் கதைகளை வாசித்திருக்கிறேன்..."
"எந்தினா ஸாரி மோனே, என் கதைகளை வாசித்ததற்காகவா.." என் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு ச்ட்டென்று காரில் ஏறிச் சென்றார்...
இவருடைய கதைகளில் ஒன்று, நெய்ப்பாயசம். இதுதான் கண்ணனுக்குப் பிடித்தது. பாவை பாடும் ஆண்டாளும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்றழைத்துக் கூறுவாள்:
.......... உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
மாதவிக்குட்டியைச் சந்தித்த அன்றைய நாள் என் ஆசையின் நினைவாக இந்தக் கதையை இங்கே தமிழாக்கியிருக்கிறேன். ஆண்டாளில் பிரசாதமாக வரும் அக்கார அடிசில் மாதவிக்குட்டியின் எழுத்தில் சாவின் சுவையாகிறது, இன்மையின் சுவையாகிறது. வாசியுங்கள்.
நெய்ப்பாயசம் - மாதவிக்குட்டி
சட்டென்று முடிந்த சவ தகனம் அது. உடன் இருந்தோருக்கு நன்றிசொல்லி, அகால நேரமதில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த இவரை அச்சன் என்றே நாம் அழைப்போம்.
இவரை இந்தப்பட்டினத்தில் மூன்று சிறுபிள்ளைகள் மாத்திரமே அப்படி அறிவார்கள். ஆம், இவரை ‘அச்சா!’ என்றே அழைப்பவர்கள் அவர்கள்தாம்.
அந்நியர்களுடன் பஸ்சில் அமர்ந்து, அன்று ஒவ்வொரு நொடியையும் அசைபோட்டார் இவர்.
காலை இவர் துயிலெழுந்ததே அவள் குரல் கேட்டுத்தான்.
"உண்ணியே, இப்படி இழுத்துப்போர்த்திக்கிட்டு உறங்கினா எப்பிடிடா. திங்களாழ்ச்ச இல்லியா இன்னிக்கி?". மூத்த பிள்ளையை எழுப்பிக்கொண்டிருந்தாள். கசங்கிய தன் வெண்நிறப் புடவையில் அடுப்படியில் பிறகு நுழைந்தாள். பெரிய கோப்பை நிறைய இவருக்குக் காப்பியும் கொணர்ந்தாள். பிற்பாடு. என்னதான் நடந்தது? மறக்கவியலாதபடி ஏதும் சொன்னாளா? அதற்கப்புறம் அவள் சொன்ன ஏதும் எவ்வளவோ முயன்றும் நினைவில் இல்லை.
"இப்படி இழுத்திப்போர்த்திக்கிட்டு உறங்கினா எப்பிடிடா. திங்களாழ்ச்ச இல்லியா இன்னிக்கு?" இந்த வாக்கியம் மாத்திரம் திரும்பத்திரும்ப வந்து நினைவாக நின்றது. மந்திரம்போல இதை உச்சாடனம் செய்தார். மறந்தாரெனில் தோன்றும் துயரைத் தாங்க முடியாது போய்விடும் என்பதைப் போல.
காலை அலுவலகம் கிளம்பியபோது பிள்ளைகள் மூவரும் வந்தது இவருடன்தான். அவர்களுக்கு மதிய உணவை சிறிய அலுமினிய டப்பாக்களில் வைத்துக் கொணர்ந்த அவள் வலதுகரத்தில் சற்றே தீற்றியிருந்தது மஞ்சள் பொடி.
தம் அலுவலகப்பணியின் போது அவளை நினைக்கும் வழக்கம் இவருக்கில்லை.
ஓரிரண்டு ஆண்டுகள் நீண்ட காதலுக்குப் பிறகு நடந்தது, அவர்கள் திருமணம். பெற்றோர் சம்மதமின்றி. அது குறித்துப் பிற்பாடு வருந்தியதில்லை அவர்கள். பணப்பற்றாக்குறை, சிலவேளை பிள்ளைகளின் உடல்நலக்கேடு என அடி்க்கடி அவர்களுக்கு சோதனையும் தளர்ச்சியும்தாம். தன் உடை-தோற்றம் குறித்து கவனம் செலுத்துவதைக் குறைத்திருந்தாள் அவள். சிரிக்க ஓரளவு மறந்துபோயிருந்தார் இவரும்.
இன்னும் பரஸ்பரம் காதலிக்கவே செய்தார்கள். மூன்று பிள்ளைகளுக்கும் அச்சன்-அம்மா என்றால் உயிர். ஆண்பிள்ளைகள் மூவரும். உண்ணிக்கு வயது பத்து, பாலனுக்கு ஏழு, ராஜனுக்கு ஐந்து. எப்போதும் மூவர் முகத்திலும் அழுக்கு அப்பியிருக்கும். அழகோ புத்திசாலித்தனமோ அற்ற பிள்ளைகள். ஆனால் அம்மாவும் அச்சனும் பேசிக்கொள்வதென்னவோ இப்படித்தான்:
"உண்ணியப் பாருங்க. ஏதாவது வைச்சிட்டு செஞ்சுகிட்டே இருக்கான். எஞ்சினியரிங்லதான் ரொம்ப ஆர்வம்."
"பாலனை எப்படியாவது டாக்டராக்கிடணும். நெத்தியைப் பாரு.. ரொம்ப அகலம். புத்திக்கு அடையாளமில்லியா அது."
"இருட்டில போனா ராஜனுக்கு பயமேயில்லை. கெட்டிக்காரன். பட்டாளத்தில சேரணும் இவன்."
இந்தப் பட்டணத்தில் அவர்கள் வாழ்ந்தது நடுத்தர வர்க்கத்தினர் வசித்த தெருவொன்றில்தான். மூன்று அறைகள் கொண்ட முதல் மாடி ஃப்ளாட் அது. இருவர் மாத்திரம் நெருக்கி நிற்கும்படி வராந்தா. அம்மா தொட்டியில் நீருற்றி வளர்க்கும் ஒரு பன்னீர்ச்செடி. பூக்கவில்லை இதுவரை.
அடுப்படிச்சுவரில் அடித்த கொக்கிகளில் பித்தளைக்கரண்டிகளும் சாரணிகளும் தொங்கிக் கொண்டிருக்கும். ஸ்டவ் அருகே ஒரு தேய்ந்த மரப்பலகை. அச்சன் அலுவலகத்திலிருந்து திரும்பி வீட்டை அடையும் நேரம் அவள் அதில்தான் அமர்ந்து சப்பாத்தி இடுவாள்.
பஸ் நிற்க இறங்கினார் இவர். முட்டிக்கால் வலி தெறிக்க உணர்ந்தார். மூட்டுவாதமாக இருக்குமோ? நான் படுத்துவிட்டால் பிள்ளைகளை இனி கவனிப்பது யார்? சட்டெனக் கண்ணீர் பெருகியது. அழுக்குக் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டார். நடையை எட்டிப் போட்டார்.
பிள்ளைகள் உறங்கிப்போயிருக்குமோ? உணவு ஏதும் கழித்திருக்குமோ? இல்லை அழுதழுது உறங்கியிருக்குமோ? நடந்ததைப் புரியவியலாத சிறுபிள்ளைகளல்லவா.. அவளை இவர் டாக்ஸியில் ஏற்றியபோது உண்ணி பார்த்துக்கொண்டே நின்றானே. சின்னஞ்சிறியவன் மாத்திரம் அழுதான். டாக்ஸியில் ஏறிக்கொள்ளவேண்டும் என்ற அழுகைதான். சாவின் பொருள் அவர்களுக்குத் தெரியாது என்பது நிச்சயம்.
எனக்காவது தெரிந்ததா? யாரிடமும் விடைபெறாமல் சட்டென ஒரு மாலைப்பொழுதில் வீழ்ந்து சாவாள் என்று நான் எப்போதாவது கற்பனையும் செய்திருப்பேனா..
அலுவலத்திலிருந்து திரும்பியவுடன் இவர் அடுப்படி ஜன்னல் ஊடே பார்த்தார். அவள் இல்லை. வீட்டின் முகப்பில் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கும் சத்தம். உச்சத்தில் கேட்டது உண்ணியின் குரல்தான்.
தன் சாவியால் வீட்டின் முன்வாசலைத் திறந்தபோதுதான் அவளைப் பார்த்தார். தரையில் வீழ்ந்திருந்தாள். திறந்த உதடுகள். வழுக்கி விழுந்திருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் ஆஸ்பத்திரியில் மருத்துவர், "ஒண்ணரை மணி நேரமாச்சு செத்துப்போய். மாரடைப்பு" என்றார் இவரிடம்.
சுழலாய் என்னென்னவோ உணர்ச்சிகள். காரணமே இன்றிக் கோபம் வந்தது அவள்மீது. இப்படி எச்சரிக்கையின்றி பொறுப்புகள் யாவற்றையும் என் மீதே சுமத்திவிட்டு எப்படிப் போகலாம் அவள்?
இனிமேல் பிள்ளைகளைக் குளிப்பாட்டுவது யார்? உணவு சமைப்பது யார்? உடல்நலம் கெடும்போது கவனிக்கப்போவதும் யார்?
"என் மனைவி செத்துப்போயிட்டா." தமக்குள் முணுமுணுத்தார். "என் மனைவி இன்னிக்கி சட்டுனு போயிட்டா. அதனால ரெண்டு நாள் லீவு வேணும்."
விடுப்பு விண்ணப்பம் புதுமையானது. மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்பதாலன்றி மனைவி செத்துவிட்டாள் என்பதால் இவர் விடுப்பு கோரும்போது, மேலதிகாரி தம் அறைக்கு அழைக்கலாம், துக்கம் விசாரிக்கலாம். அவருடைய துக்கம்! யாருக்கு வேண்டும் அது! அவருக்கு அவளைத்தான் தெரியுமா. அவள்தம் சுருள்நுனி கொண்ட முடியும் அயர்ச்சியான புன்சிரிப்பும் அதிர்வற்ற நடையும் என இழப்புகள் யாவும் இவருடைய இழப்புகளல்லவா..
இவர் வாசலைத் திறந்தவுடன் சின்னஞ்சிறியவன் ஓடி வந்தான். "அம்மா வரல்லியா?"
இவ்வளவு விரைவில் மறந்துவிட்டானோ? டாக்ஸியில் ஏற்றிவைத்த உடல் தானாக வீடுதிரும்பும் என எண்ணியிருப்பானோ
மகனின் கை பற்றி அடுப்படிக்கு நடந்தார்.
"உண்ணீ..." கூப்பிட்டார்.
"என்ன அச்சா?" உண்ணி அடுப்படிக்கு வந்தான்.
"பாலன் உறங்கிட்டான்."
"சரி. நீங்க ஏதாவது கழித்தாச்சா?"
"இல்ல."
அடுப்படி மேடைமீது மூடி வைத்திருந்த பாத்திரங்களின் தட்டுகளை நீக்கிப் பார்த்தார். சப்பாத்தி, சோறு, உருளைப்பொரியல், வறுவல், தயிர் என்று அவள் தயார் செய்துவைத்திருந்த சாப்பாடு. கண்ணாடிப்பாத்திரமதில் அவள் பிள்ளைகளுக்காக அவ்வப்போது செய்யும் நெய்ப்பாயசமும்.
வேண்டாம். இதைக் கழிக்கக்கூடாது. சாவு தீண்டியது. 
"ஆறிப்போச்சில்ல இது. கொஞ்சமா உப்புமா வைச்சுத் தர்றேன்." என்றார்.
"அச்சா." உண்ணியின் குரல்தான்.
"ம்."
"அம்மா எப்ப வருவாங்க? அம்மாவுக்கு இன்னும் சரியாகல்லியா?"
உண்மை இன்னும் ஒருநாள் பொறுக்கட்டும் என நினைத்தார். இன்றிரவு இந்தப்பிள்ளையை அழ வைப்பதில் பொருளில்லை...
"அம்மா வருவாங்க" என்றார்.
கழுவிய கிண்ணங்களைத் தரையில் வைத்தார். இரண்டு கிண்ணங்கள்.
"பாலனை எழுப்பவேண்டாம். உறங்கட்டும்." என்றார்.
"அச்சா, நெய்ப்பாயாசம்!" என்றான் ராஜன் பரபரப்புடன். தன் சுட்டுவிரலை அதற்குள் அமிழ்த்தினான்.
இவர் மனைவி எப்போதும் அமரும் மரப்பலகையில் அமர்ந்தான்.
"உண்ணி, நீயே ஊத்திக்கொடேன். அச்சனுக்கு முடியல. தலைவலி."
கழிக்கட்டும் அவர்கள். அவள் கைச்சமையல் அவர்களுக்கு இனி எப்போதும் கிடைக்காதல்லவா.
பிள்ளைகள் பாயசம் அருந்தினர். அசையாமல் அவர்களைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தார்.
கொஞ்ச நேரமான பிறகு கேட்டார்.
"சோறு வேண்டாமோ உண்ணி?"
"வேணாம். பாயாசம்தான் வேணும். ரொம்ப நல்லாருக்கு."
சந்தோஷத்துடன் கூறினான் ராஜன். "ஆமாப்பா. அம்மா நெய்ப்பாயாசம் பிரமாதமா செஞ்சிருக்காங்க."
எழுந்து சட்டெனச் சென்றார் குளியலறை நோக்கி.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
31.5.09
மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு அஞ்சலி
30.5.09
இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போன உரை - 1
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் விசேட அமர்வு சென்ற வாரம் மே 26-27 நாட்களில் ஜெனிவா நகரில் நடந்தேறியது. இதில் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அம்மையார், இலங்கைப்படுகொலைகள் பற்றிய ஒரு பன்னாட்டு விசாரணை, காத்திரமானதாக, நம்பகத்தன்மை கொண்டதாக, பக்கச்சார்பற்றதாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த, இந்திய-தமிழ் வம்சாவழியினரான இந்த அம்மையாரின் உரையில் உள்ள முக்கியக்கோரிக்கைகளைத் தோற்கடிக்கும்வகையில் மனித உரிமைகள் குழு இலங்கை அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நிறைவேற்றியது.
தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் - இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள், செனகல், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, அங்கோலா, பர்க்கினா ஃபாஸோ, காமரூன், மடகாஸ்கர், ஜாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள், எகிப்து, பஹ்ரைன், கத்தார், சௌதி அரேபியா, ஜோர்தான், அஸர்பைஜான் ஆகிய மேற்காசிய நாடுகள், ருஷ்யா, தவிர க்யூபா, நிக்கரகுவா, பிரேஸில், பொலிவியா, உருகுவே ஆகிய மத்திய-தென்னமெரிக்க நாடுகள். எதிர்த்து வாக்களித்த நாடுகள் - கனடா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஒல்லாந்து, ஸ்விட்ஸர்லாந்து, போஸ்னியா, ஸ்லோவாக்கியா, சிலி, மெக்ஸிக்கோ. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நாடுகள் - ஜப்பான், கொரியா, மௌரிஷியஸ், அர்ஜென்டினா, உக்ரைன், காபோன்.
நவநீதம் பிள்ளையின் உரை இதோ:
இலங்கையில் மனித உரிமைகள் நிலை பற்றி இன்று நடக்கும் மனித உரிமைகள் குழுவின் விசேட அமர்வில் என்னால் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். மனித உரிமைகள் பாதுகாப்புக்கான முதன்மையான அமைப்பு என்ற வகையில் ஐ.நா.-வின் இந்த மனித உரிமைகள் குழு, இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மற்றும் போரின் சோக விளைவுகள் குறித்துப் பேச வேண்டியது மிகமிக அவசியம்.
இலங்கையின் போர்ப்பகுதியிலிருந்து பெண்களும் ஆண்களும் சிறாரும் பெரிதும் மிரண்டும் பசிப்பிணியுற்றும் தப்பிவந்த சித்திரங்கள் எம் கூட்டுநினைவில் என்றென்றும் தங்கியிருக்கும். எம்மை உடன் செயல்படுமாறு இவை தூண்ட வேண்டும்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் இப்போது கடைசியாக நடந்திருக்கும் கடும்போரில் பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்கள் பலியாகியிருக்கிறார்கள், காயம்பட்டிருக்கிறார்கள், இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களுடைய சொத்துக்களும் வாழ்வாதாரங்களும் நொறுக்கப்பட்டுவிட்டன. போரின்போது பன்னாட்டு மனித உரிமைகளும் மனிதாபிமானச் சட்டங்களும் இவ்வாறு மீண்டும் மீண்டும் கடுமையாக மீறப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டி இந்தப்பகுதிகளுக்குச் செல்ல பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் தங்குதடையற்ற அனுமதி வேண்டும்.
இதுதவிர, போர்ப்பகுதியிலும் போர்ப்பகுதியிலிருந்து தப்பி முகாம்களுக்குச் செல்லும் வழியிலும் இருந்த ஆயிரக்கணக்கான சாமானிய மக்களின் கதி பற்றி முழுமையான செய்திகள் இன்னமும் தெரியவில்லை. இவர்களுக்கு உணவு, நீர், மருத்துவ உதவி மற்றும் பிற அடிப்படைச்சேவைகள் உடன் கிடைத்தாக வேண்டும். இவர்கள் முகாம்களில் திரளாகக் குவித்து வைக்கப்பட்டிருப்பதும் பெரும் பிரச்னைகளைக் கிளப்பும் என்றே தெரிகிறது. இங்கே ஊட்டச்சத்தற்ற நிலைமை தொடர்வதும் பெரிதும் கவலையளிப்பதாக இருக்கிறது; தொற்றுநோய்கள் ஏற்கனவே பரவியிருக்கின்றன என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இப்படிப் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தங்குதடையற்ற மனிதாபிமான உதவி உடன் கிடைத்தாக வேண்டும். இவர்களில் பலர் வாழ்வா, சாவா, நோயா என்ற நிலையிலிருந்து மீள்வதற்கு இந்த உதவி மிகமிக அவசியம். இருந்தபோதும் இவர்கள் இருக்கும் முகாம்களுக்குச் செல்ல ஐ. நா. மன்ற அமைப்புகளுக்கும் அரசு-சாரா நிறுவனங்களுக்கும் அனுமதி கிட்டுவதில் தடைகள் நீடிக்கவே செய்கின்றன. இந்த மக்களுக்குத் தங்குதடையற்ற உதவி உடன் கிட்ட வேண்டும், இதை உறுதிசெய்ய வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தவிர, சாமானியத் தமிழ்மக்களிடமிருந்து விடுதலைப்புலிகளைப் பிரித்து விசாரிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு செயல்படுத்திவருகிறது. இதிலுள்ள பிழைகளைக் களைந்து இதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசை வலியுறுத்துகிறேன். இப்படித் தடுத்துவைக்கப்ப்ட்டோரை மனிதாபிமானம் மிக்க முறையில் நடத்த வேண்டும், இவர்கள் மீதான விசாரணை சட்டப்படி நடக்க வேண்டும் என்பதற்கு பக்கச்சார்பற்ற கண்காணிப்பாளர்களுக்கு முழு அனுமதி இருந்தாக வேண்டும். தவிர, போரால் இடம்பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பாலோரால் பாதுகாப்பு-அச்சுறுத்தல் ஏதுமில்லை என்ற நிலையில் இவர்களுக்கு சுதந்திரமாக நடமாடும் உரிமையை இலங்கை அரசு எத்தனை விரைவில் அளிக்க முடியுமோ அளித்தாக வேண்டும்.
ஏப்ரல் மாதத்தில் தப்பிவரும் தமிழர்கள்.
29.5.09
இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்டன் டைம்ஸ் ஏடு
கீழ்க்கண்டவை இங்கே லண்டனில் இன்று காலை வெளியாகியிருக்கும் செய்திகள். நேற்றிரவே இணையத்தில் வாசித்துவிட்டேன். உறக்கமே இன்றி வெதும்பினேன்... மிக மிக அடிப்படையான கேள்விகளை இனி எமக்குள் கேட்டாக வேண்டும் என்பது இந்தப்படங்கள் கூறும் செய்தி. இவற்றில் டைம்ஸ் ஏட்டின் தலையங்கத்தை மட்டும் தமிழாக்கியிருக்கிறேன்.
இலங்கைப்படுகொலைகள் - உண்மை அம்பலமாக வேண்டும்
டைம்ஸ் ஏடு தீட்டியிருக்கும் தலையங்கம்
நேற்று ஐக்கிய நாடுகள் மன்ற மனித உரிமைக்குழுவில் நடந்த வாக்கெடுப்பில், விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு நடத்திய போரில் அதற்குக் கிட்டிய வெற்றியைப் புகழ்ந்து தீர்மானம் நிறைவேறியிருப்பதைக் கண்டு மனம் வெறுத்துப்போன மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தாம் கடும் விரக்தி அடைந்ததாகக் கூறினார். ரொம்ப குறைத்துக் கூறியிருக்கிறார். உண்மையில் இந்தத் தீர்மானம், பாரிய அவமானமாகும்.
முன்பிருந்த ஐக்கிய நாடுகள் மன்ற மனித உரிமை ஆணையம் ஊழல் நிறைந்த அமைப்பாகிவிட்டது, செயல்படத் தவறிவிட்டது என்பதால் அதற்கு மாற்றாக 2006-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மன்ற மனித உரிமைக்குழு கட்டமைக்கப்பெற்றது. இதில் 47 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இலங்கையில் நடந்த போரின்போது நிகழ்ந்த பாரிய மனித உரிமை மீறல்கள்தாம், இந்தக்குழு முதலில் எதிர்கொண்ட அதிமுக்கிய சவால். அதை நேர்மையாக எதிர்கொள்வதில் இந்தக்குழு தோல்வி கண்டிருக்கிறது.
இலங்கைப்போரின் இறுதி வாரங்களில் அரச படையினர் மற்றும் விடுதலைப்புலிகள் இருதரப்பும் நிகழ்த்திய கொடூரச்செயல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிப் பரவலாக வெளியான செய்திகளை இந்தக்குழு விசாரிக்க வேண்டும் என இதில் உறுப்பினராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் கேட்டுக்கொண்டன. ஆனால், இந்தக்குழுவோ இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக, உண்மைக்குப்புறம்பாக, தன்னையே பாராட்டிக்கொள்ள வேண்டிக் கொணர்ந்த ஒரு தீர்மானத்தை விவாதிக்க முடிவுசெய்தது. இந்தத் தீர்மானம், இலங்கை அரசு பல்லாயிரக்கணக்கான மக்களை விடுதலை செய்ததை வரவேற்பதாகக் கூறுகிறது, போரில் தோல்வியுற்ற விடுதலைப்புலிகளுக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது, சாமானியத் தமிழ் மக்கள் மீது நடந்த ஷெல்லடித்தாக்குதல்கள் பற்றி வாய்திறக்கவில்லை, சுமார் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் சாமானியத் தமிழ் மக்களைத் தற்போது இலங்கைப் படையினர் தடுத்து வைத்திருக்கும் முகாம்களுக்கு செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் பிற நிவாரண அமைப்புகளுக்கு அனுமதி இல்லை என்பது குறித்தும் வாய்திறக்கவில்லை.
பிழைகள் மலிந்த இந்தத் தீர்மானத்தை ஆதரித்த நாடுகள், வழக்கமாக இத்தகைய தவறுகளைச் செய்யக்கூடிய அதே சீனா, இந்தியா, ருஷ்யா, பாகிஸ்தான் மற்றும் சில ஆசிய- மற்றும் இஸ்லாமிய-நாடுகள்தாம். தம்முடைய நாட்டிலும் ஏன் எந்த நாட்டிலும் நடக்கும் பாரிய மனித உரிமை மீறல்கள் பற்றி இந்தக்குழு எப்போதும் விசாரணை செய்துவிடக்கூடாது என்பதை உறுதிசெய்ய விரும்பும் நாடுகள் இவை.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அம்மையார் மாத்திரம் இந்தப்போரில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கின்றன, இவை குறித்து காத்திரமான, பக்கச்சார்பற்ற பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார். இலங்கையில் நடந்திருக்கும் இந்த மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் வெளியுலகம் கற்பனை செய்திருந்ததைவிட மிகமிக மோசமானவை என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. இந்தப் போரில் இவ்வாண்டு தொடங்கி ஏப்ரல் மாத முடிவுவரை சுமார் ஏழாயிரம் சாமானிய மக்கள் பலியாகியிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் மன்ற அலுவலர்கள் கணித்திருந்தனர். மாறாக இப்படி இருபதாயிரம் பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று இப்போது தெரிகிறது. குறிப்பாக, ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கைப்படையினர் நடத்திய ஷெல்லடித்தாக்குதலில் அடிபட்டு உயிர்விட்டிருக்கலாம், இவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் தம்முடைய இறுதி எதிர்ப்பைக் காட்டிய முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் அவர்களுடன் இருந்ததால் போரில் சிக்கியவர்கள் என்று தெரிகிறது.
தொண்ணூறுகளின் இடைப்பகுதியில் பால்கன் வட்டகையில் ஸெரப்னிட்ஸா என்ற இடத்தில் இஸ்லாமிய மக்கள் ஏழாயிரம் பேர் வரை செர்பியக்குடிப்படையால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். மூன்றாண்டுகள் முன்பு சூடானின் டார்ஃபுர் பகுதியில் கறுப்பின மக்கள் மூன்று லட்சம் பேர் வரை அரபுக்குடிப்படையால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இப்படி இந்தப் படுகொலைகளுடன் ஒப்பிடவல்ல மோசமான கொடூரம் இலஙகையிலும் நடந்திருக்கிறது. இது டைம்ஸ் ஏடு இப்போது எடுத்திருக்கும் புகைப்படங்கள், விடியோ படங்களிலிருந்து தெரிகிறது.
இலங்கை அரசு ஒரு மணற்பகுதியை பாதுகாப்புப்பகுதி என அறிவித்தது, அரச படையினரின் கொடூர ஷெல்லடியிலிருந்து தப்பி்ப்பிழைக்க வேணடுமென்றால் அங்கே போக வேண்டும் என்று போரில் சிக்கிய சாமானியத் தமிழ் மக்களுக்குக் கூறப்பட்டது. இதே பகுதியில் நூற்றுக்கணக்கான புதிய சவக்குழிகள் தோண்டப்பட்டதற்கான அடையாளங்களை, ஷெல்தாக்கி விளைந்த குழிகளை, ஷெல்லடியால் யாவும் சின்னாபின்னமானதன் அடையாளங்களை இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன. இங்கேதான் சாமானிய மக்கள் கூடாரமடித்துத் தங்கியிருந்தார்கள். இந்தப்பகுதி பாதுகாப்பான பகுதியாக இருக்கவில்லை. இந்தப்போரில் கனரக ஆயுதங்களை இனி பாவிக்கப்போவதில்லை என இலங்கை அரசு அறிவித்த அதே கடந்த ஏப்ரல் இருபத்தேழாம் நாளுக்குப் பிறகாக இந்தப்பகுதியை ஷெல்கள் கடுமைபாகத் தாக்கின, குலைநடுங்கிப்போயிருந்த மக்கள் பலர் இறக்க, தப்பித்தவர்கள் இறந்தவர்களை இங்குதாம் புதைத்திருக்கிறார்கள்.
இந்தப்போரின்போது சாமானிய மக்களில் சிலர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனக் கூறலாம். கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் கைக்கொண்ட கொடூரமும் தாட்சணியமற்ற அடக்குமுறையும் பயங்கரவாதிகள் என்ற அவர்களைப் பிறர் வர்ணிப்பதை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. அதே நேரம் இந்தப்போரில் என்னதான் நடந்தது என்பதை முற்றாகக் கண்டறிவது சாத்தியமில்லாமல் போயிருக்கிறது என்றே கூற வேண்டும். போர்ப்பகுதியில் வெளியார் யாரும் செல்ல இலங்கை அரச படையினர் தடை விதித்திருந்தனர். உணவுப்பற்றாக்குறை நீடித்தது. சுகாதார வசதிகள் இருக்கவில்லை. போரில் சிக்கிக் குலைநடுங்கிப்போன, அதில் காயம்பட்ட மக்களுக்கு உடனடி உதவி தேவைப்பட்டது. இதையெல்லாம் அங்கிருந்து தப்பியோடி வர முடிந்தவர்கள் தெளிவாகவே தெரிவிக்கிறார்கள்.
இதைவிடப் பயங்கரமான செய்திகள் இப்போது வந்துகொண்டிருக்கின்றன. படிப்படியாகப் பலர் காணாமல் போயிருக்கிறார்கள், குடும்பத்தார் பிரிக்கப்படுகிறார்கள், இளைஞர்கள் எங்கோ அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள். இந்தப்பகுதிகளுக்கும் தடுப்பு முகாம்களுக்கும் நிவாரண அமைப்புக்கள் சுதந்திரமாகச் சென்றுவர இலங்கை அரசு அனுமதி வழங்காத வரை, அங்கே என்னதான் நடக்கிறது என்பதை யாரும் காணக்கூடாது, கேட்கக்கூடாது என்று அது முடிவு செய்திருப்பதாக்வே கருத வேண்டும்.
விடுதலைப்புலிகளைத் தான் தோற்கடித்த இறுதிப்போரின் போதும் இலங்கை அரச படை இதே உத்தியைத்தான் கையாண்டது. இந்தப்போருக்கு சாட்சிகள் யாரும் தேவையில்லை, பத்திரிகைக்காரர்கள் யாருக்கும் அனுமதியில்லை, மனித உரிமை மீறல்கள் பற்றி வெளியுலகுக்கு யாரும் செய்தியனுப்பி எச்சரித்துவிடக் கூடாது, மக்கள் அனுபவிக்கும் துயரை யாரும் புகைப்படம் பிடித்துவிடக் கூடாது என்று அரச படையினர் உறுதியாக இருந்தார்கள்.
இப்போது வெற்றியில் திளைத்துக்கொண்டிருக்கும் இலங்கை, ஆயுதக்கிளர்ச்சிகளை ஒடுக்கத் துடிக்கும் பிற நாடுகளுக்கான முன்னுதாரணமாக அமையலாம, இவர்களைப் பொறுத்தவரை போரில் வெற்றி ஒனறே குறிக்கோள்.
இலங்கையை ரத்தக்களரியாக்கிய உள்நாட்டுப்போர் முடிவதில் அங்குள்ள பலரும் மகிழ்ச்சியடைகிறார்கள், இருக்கலாம். ஆனால் அதற்கு என்ன விலை தந்தார்கள் என்பது குறித்த ஆதாரங்களை மறைப்பதில் இலங்கையுடன் ஐக்கிய நாடுகள் மன்றமும் கள்ளக்கூட்டணி அமைக்க முடியாது. போரில் என்ன நடந்தது என்ற உண்மை அம்பலமாக வேண்டும்.
டைம்ஸ் ஏட்டில் வெளியான செய்திகள்
இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் -
யாருக்கு எத்தனைப் பொறுப்பு? - லண்டன் டைம்ஸ் ஏட்டின் செய்தியும் ஆய்வும்
இலங்கை அரசின் பொய்களும் டைம்ஸ் ஏடு பிடித்திருக்கும் படமும்
நந்திக்கடல்-முல்லைத்தீவு நிலை பற்றிய டைம்ஸ் ஏட்டின் வான்-படங்கள்
மேலும் படங்கள்
இலங்கையின் போர்க்கள வரைபடங்கள் - லண்டன் டைம்ஸ் ஏட்டில்
போர்க்குற்றங்களுக்கான விசாரணை வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி - செல்லாக்காசாகி விட்டதா ஐ.நா. மன்றம்? - டைம்ஸ் ஏடு ஆய்வு
ஃப்ரெஞ்சு லெ மாந்த் ஏட்டில் வெளியான செய்திகள்
படுகொலை எண்ணிக்கையை ஐ.நா. சிறப்புத்தூதுவர் விஜய் நம்பியார் வேண்டுமென்றே குறைக்கச்சொன்னார் -
ஐ.நா. வட்டாரத்தை ஆதாரம் காட்டி லெ மாந்த் கட்டுரை
லெ மாந்த் ஃப்ரெஞ்சு ஏட்டில் வந்த படங்கள்
27.5.09
ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
கடந்த சில மாதங்களில் பேரிழப்புக்களைச் சந்தித்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த வருத்தமும் அனுதாபமும் உரித்தாகட்டும்.
குர்து இனத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எண்பதுகளின் இடைப்பகுதியிலிருந்து எம் மக்களின் போராட்டத்தைப் போலவே இலங்கைவாழ் தமிழர்களின் தனி-அரசு விழைகிற விடுதலைப்போராட்டம் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன். அப்போது விடுதலைப்புலிகளின் யாழ் பிரிவில் இருந்த பெண் போராளிகளின் படங்களைப் பார்த்து அவர்கள்மீது காதலும் கொண்டேன்!
விடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வியைச் சந்தித்தபோதும் தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய ஒன்றாகததான் அதைக் காண்கிறேன். எத்தகைய மறப்போரின் பின்பு வந்திருக்கும் தோல்வி இது! எம் மக்களும் பல முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள் - 1925, 1938, 1946, 1975, 1988, 1991 மற்றும் 1999 என்று பல முறை தோல்வியை நாங்கள் தழுவியிருக்கிறோம். ஆனால் விடுதலைப்புலிகள் தத்தம் உயிரையே தியாகம் செய்து அழியாப்புகழ் எய்திய இத்தகைய வீரம் செறிந்த போரை நாங்கள் இதுவரை கண்டதில்லை. உள்ளபடியே மிகப்பெரும் சக்திகள் எதிரணியில் இருந்த இந்தப்போர் உங்கள் தலைவர்களின் உயிர்த்தியாகத்தில் சென்று முடிந்தாலும் அந்தப் போராட்ட நினைவுகளும் உங்கள் தமிழ்மொழியின் பாடல்களிலும் கதைகளிலும் என்றென்றும் நீடித்திருக்கும்.
விடுதலைப்புலிகள், தம்மை விட படைப்பலம் மிகுந்த ராணுவம் நடத்திய இந்தத்தாக்குதலின் இறுதிநாள் வரை - ஏன் இறுதிச்சமர் வரை - தங்கள் தலைவரின் உயிரையும் மூத்த பொறுப்பாளர்களின் உயிர்களையும் பாதுகாத்திருக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. இது ஒன்றே விடுதலைப்புலிகளின் அறிவுத்திறன், வலிமை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான சிறந்த சான்றாகும். பிரபாகரனும் விடுதலைப்புலிகளின் தலைமையும் பிற போராளிகள் அனைவரையும் ஆயுதங்களைக் களையச்செய்து, தாம் மட்டும் மூன்றாவதான ஒரு நாட்டுக்குத் தப்பிச்சென்றிருக்கலாம். ஆனால் தலைமையும் சரி, அவர்தம் குடும்பத்தாரும் சரி, போர்க்களத்திலிருந்து தப்பிச்செல்லவில்லை, தமக்கு முன்பு வீரச்சாவடைந்த பல்லாயிரம் போராளிகளைப் போலவே தாமும் சரணடையாமல் இறுதிவ்ரை போர்புரிந்து வீரச்சாவை எய்தியிருக்கிறார்கள்.
இந்தத்தியாகம், உலகெங்கும் தாம் வரித்துக்கொண்ட ஒரு லட்சியத்துக்காக பிறரை உயிர்த்தியாகம் செய்யச்சொல்லும் தலைவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும். என்னைப் பொறுத்தவரை, கிளர்ச்சியில் ஈடுபட விரும்பும் குர்து தலைவர்கள் உள்ளிட்ட பிற தலைவர்கள் இத்தகைய உயிர்த்தியாகத்தைச் செய்ய முன்வருவார்களா என்பது சந்தேகம்தான்.
ஆயுதம் தாங்கிப் போராடும் குர்து அமைப்புகளுடன் ஒப்பிடும்போது விடுதலைப்புலிகள் அமைப்புக்கென பலங்களும் பலவீனங்களும் உண்டு. பலங்கள் எண்ணில் அடங்காதவை. பலவீனங்களும் தவறுகளும் சில என்றாலும் அவை நீண்டகால நோக்கில் விடுதலைப்புலிகளை அழிப்பதாக அமைந்துவிட்டன என்றே கருதுகிறேன். என் பார்வையில், விடுதலைப்புலிகள் அமைப்புரீதியாக இரு பொதுவான பலவீனங்களைக் கொண்டிருந்தார்கள், குறிப்பிட்ட சில தவறுகளையும் செய்தார்கள்.
முதல் பலவீனம் - விடுதலைப்புலிகளின் அரசியல்-எதிர்பார்ப்புகள் மிக இறுக்கமானவை என்பேன். தங்கள் தமிழீழத் தாயகக் கோரிக்கைக்குப் பரந்துபட்ட பன்னாட்டு ஆதரவு திரளாத நிலையில் இலங்கையில் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்ப்ந்தத்தை ஏற்பதே எதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும். அதே சமயம் இலங்கை அரசானது தொடந்து தமிழ்மக்களின் ஆதார உரிமைகளை மீறும்பட்சத்தில் இந்தப்போராட்டத்தைத் தமிழ்மக்களின் அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கவும் வழிவகுத்திருக்கும். அந்தக்கட்டத்தில் கூட்டாட்சி அடிப்படையில் அமைந்த தமிழர்களின் சுயாட்சி-அரசுக்கு மேலதிக பன்னாட்டு அங்கீகாரம் கிட்டியிருக்க முடியும். தவிர, விடுதலைப்புலிகள் போல 'பயங்கரவாத அமைப்பு' என்ற முத்திரையுடன் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போகாமல் இருந்திருக்கலாம்.
தமிழீழத் தாயகம் என்ற லட்சியத்திலிருந்து தாம் விலகும் பட்சத்தில் விடுதலைப்புலிகளில் தம்முடைய பாதுகாவலர்களே தம்மைச் சுட்டுக்கொல்லலாம் என்று பிரபாகரன் அறிவித்திருந்தார் என்பதும் விடுதலைப்புலிகள் எத்தனை இறுக்கமாக அமைப்பாக இயங்கினர் என்பதைக் காட்டுகிறது.
விடுதலைப்புலிகளின் இரண்டாவது பலவீனம் - பழிதீர்த்தல், திரும்பத்தாக்குதல் ஆகியவற்றுக்கு தேவையே இன்றி முக்கியத்துவம் வழங்கியதாகும். இங்கே "அரசியல் என்பதன் வேறுவித நீட்சிதான் போர்" என்று க்ளாஸ்விட்ஸ் என்ற அறிஞர் கூறியிருக்கும் பெயர்பெற்ற வாசகத்தை நினைவில் கொள்ள வேண்டும். அரசியலிலும் சரி, போரிலும் சரி, பழிவாங்குதலும் திரும்பத்தாக்குதலும் அடிப்படை லட்சியத்துக்குக் கீழடங்கியவையே. ஆக, எந்த ஒரு செயலையும் அதன் விளைவை வைத்தே மதிப்பிட வேண்டும் - அது அடிப்படை லட்சியத்தை அடையும் வழியில் நாம் முன்னேற வழிவகுக்குமா, இல்லையா என்று ஆராய வேண்டுமே ஒழிய, முன்பு எப்போதோ நடந்த ஏதோ ஓர் அநீதிக்காகப் பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு இனக்குழுவினர் பாணியில் செயல்படுவதில் பொருளில்லை. ராஜீவ் காந்தியின் படுகொலை மற்றும் சிங்களத்தலைவர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை இத்தகைய பழிவாங்கும் செயல்களே. மாறாக, இந்தத்தலைவர்களில் சிலர் ஒருகட்டத்தில் தமிழ்மக்களின் போராட்டத்துக்குப் பயன்பட்டிருக்கவும் கூடும் என்று நினைக்கிறேன்.
விடுதலைப்புலிகளின் தவறுகளைப் பொறுத்தவரை - 1999-2000-ஆம் ஆண்டுகளில் ஆனையிறவுப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு எப்படியாவது யாழ்நகரையும் கைப்பற்றி விடுவித்திருக்க வேண்டும். வேறு பகுதிகளைக் கைவிட நேர்ந்தாலும் பரவாயில்லை என இதைச் சாதித்திருக்க வேண்டும். அந்தக்கட்டத்தில் யாழ் குடாநாட்டில் இலங்கை ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள், எனவே பாரிய உயிர்த்தியாகத்துக்குப் பிறகே இது சாத்தியமாகியிருக்கும். என்றாலும் அப்போது இலங்கையின் அரசியல் மற்றும் ராணுவ சக்திகள் நிலைகுலைந்து போயிருந்தனர் என்பது முக்கியம். அந்த வாய்ப்பு நழுவிப்போன பிறகு இறுதியில் விடுதலைப்புலிகள் பல முனைகளில் சமரிட வேண்டி வந்தது எனபதையும் கவனிக்க வேண்டும்.
2001 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களை அடுத்து இலங்கையில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டே தீரும் என்பதற்கொப்ப 2002-ஆம் ஆண்டில் அத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதே வேளை, 2004-ஆம் ஆண்டின் இறுதியில் இந்துமாக்கடலில் நிகழ்ந்த சுனாமித்தாக்குதலும் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் அது ஏற்படுத்திய பாரிய அழிவும் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அடங்கச்செய்திருக்க வேண்டும். இலங்கை அரசுடன் அரைகுறை சமாதானத்தை, சமரசத்தைச் செய்யத் தூண்டியிருக்க வேண்டும். சுனாமி அழிவை அடுத்து, இந்தோனேஷியாவின் அச்சே பகுதி விடுதலை அமைப்பு இத்தகைய சமரசத்துக்குச் சென்றது. ஆக, விடுதலைப்புலிகளும் சுனாமியை உட்கொண்டு தம்முடைய அரசியல் கணக்குகளைப் போ்ட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.
விடுதலைப்புலிகளின் அடுத்த பாரிய தவறு, 2005-ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடந்த பொதுத்தேர்தல்களைப் புறக்கணித்ததாகும். இந்தத் தேர்தலில் சிங்களக் கடும்போக்குவாதிகள் வெற்றி கண்டனர். தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என மக்களைக் கேட்கக்கூடாது என்பதை எப்போதும் ஒரு பொதுவிதியாகவே கடைப்பிடிக்க வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதன் வழி நம் அதிருப்தியை வெளிக்காட்டலாம், நமக்குள் ஒற்றுமையைப் பேணுவதாக எண்ணிக்கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் சாதாரண விடயங்களே. இத்தகைய தேர்தல் புறக்கணிப்பு என்பது நம் எதிரிகளில் மிக மோசமான பகுதியினரிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிடும் நிஜ அபாயத்தில், நீண்ட கால அபாயத்தில் போய் முடியலாம். இவையெல்லாம் மீள முடியாத சிக்கலில் நம்மை ஆழ்த்தலாம்.
விடுதலைப்புலிகளின் அடுத்த தவறு - கருணா செய்த கிளர்ச்சியைக் கையாண்ட விதம். இதை முன்கூட்டியே உணர்ந்து உடனடியாக, நேர்மையாகக் கையாண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளாக நடந்த வன்முறை, என்னைப்போல தூரத்திலிருந்து அவதானிக்கும் ஒருவருக்கே மிகுந்த வருத்தத்தை அளித்தது எனும்போது அதைக்கண்ட, அனுபவித்த தமிழ்மக்கள் அனைவரும் எவ்வாறு வருத்தப்பட்டு உற்சாகமிழந்து போயிருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது. குர்து இனத்தவன் என்ற முறையில் நானும் எங்கள் அரசியல் அமைப்புகளுக்கிடையில் நடந்த வன்முறையை அறிந்தவன்தான். ஆனால, குர்து இனத்தவரின் எந்த ஒரு ராணுவ அமைப்பும் தன் மீதே துப்பாக்கியைத் திருப்பியதில்லை.
ஒருவேளை பிரபாகரனின் இறுக்கமும் சுனாமிப்பேரழிவும் கருணா மீதும் தாக்கம் செலுத்தியிருக்கலாம். அதே வேளை வடக்கை முன்வைக்கும் குறுந்தேசியவாதத்தைக் கைக்கொண்ட தவறைப் பிரபாகரன் செய்தார் என்று வைத்துக்கொண்டால் இந்தப்பிரச்னையை முன்வைத்துக் கிளர்ச்சி செய்த கருணா இதை இன்னமும் குழப்பிவிட்டார் என்றே கூற முடியும் - இத்தகைய குறுந்தேசியவாதம் மேலோங்குவதைக் குர்து அமைப்புகள் பெரும் தவறாகக் கணிக்கின்றன என்பதை மனத்தில் இருத்தி இதைச் சொல்கிறேன். ஆக, கிழக்குவாழ் தமிழ்மக்களின் தலைவர் என்ற அங்கீகாரம் கருணாவின் தலைக்கேறிவிட்டது என்று நினைக்க இடமுண்டு. பிரபாகரனைவிட தாமே பெரும் தலைவர் என்று கருணா கருதியிருக்கவும் இடமுண்டு. எது எப்படியிருந்தபோதும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு துரோகம் செய்து அமைப்பின் தலைவருக்கு எதிராக துப்பாக்கியைத் திருப்பிய கருணாவை வரலாறு மன்னிக்காது என்றே கூறுவேன். என்ன காரணங்கள் இருந்தாலும் சரி, அவற்றைத் தனிப்பட்ட முறையில் முன்வைத்துவிட்டு அவர் அமைப்பிலிருந்து விலகியிருக்கலாம், அப்படி விலகியதற்காகச் சாவையும் எதிர்கொண்டிருக்கலாம். இவ்விரண்டையும் செய்யாமல் துரோகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதன்வழி தமிழ்மக்கள், சிங்களப்பகுதியினர் இருதரப்பும் நம்பாத, மரியாதை செலுத்தாத, நேசிக்காத தலைவராக மாறியிருக்கிறார். இந்தவழியில் அவருக்கு மோசமான முடிவே காத்திருக்கிறது, அப்படியொரு முடிவு ஏற்படும்பட்சத்தில் அந்த முடிவுக்கு இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்வார்கள், ஆனால் அதற்காக வருந்த மாட்டார்கள்.
அறிவும் திறமையும் ஆற்றலும் கொண்ட ஈழத்தமிழ் மக்களே, இந்தச் தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம்! உம் கனவுகள் உயிரோட்டத்துடன் இருக்கட்டும், அப்போது துப்பாக்கித்தோட்டாக்களோ, வாக்குச்சீட்டுகளோ கொண்டு நீங்கள் ஈழத்தை அடைவதும் நிச்சயம்!
26.5.09
மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் வைத்து, தடைசெய்யப்பெற்ற மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர், அவர்களுடைய வன்முறையை ஊக்குவித்தவர் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு ஆண்டுகள் ராய்ப்பூரில் சிறைவாசம் அனுபவித்த மருத்துவர் பினாயக் ஸென் அவர்களை நேற்று இந்திய உச்சநீதி மன்றம் பிணையில் விடுவித்தது. இதையடுத்து இன்று மருத்துவர் ஸென் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான மருத்துவர் ஸென்னுடன் சற்றுமுன் தொலைபேசியில் உரையாடினேன். தம்முடைய விடுதலைக்காகக் குரல்கொடுத்த அனைத்துலகப் பொதுமன்னிப்பு ஸ்தாபனம் மற்றும் பிற அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். சத்தீஸ்கர் அரசாங்கம் தொடர்ந்து அவர் மீதான வழக்கை நடத்தும் என்று கூறியிருப்பது பற்றிக் கேட்டதற்கு, தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் இதுவரை அரசு முன்வைக்கவில்லை, தாம் குற்றமற்றவர் என்பது விரைவில் உறுதியாகிவிடும் என்று தெரிவித்தார். மருத்துவர் ஸென் இருதய நோய் சிகிச்சைக்காக தாம் மருத்துவம் படித்த அதே வேலூர் கிறித்தவ மருத்துவக்கல்லூரிக்குச் செல்வார் என்றும் தெரிந்தது.
மருத்துவர் ஸென் வன்முறை-அரசியலில் நம்பிக்கையற்றவர் என்பதால் அவரை மனச்சாட்சிரீதியான கைதி (Prisoner of Conscience) என அனைத்துலக்ப் பொதுமன்னிப்பு ஸ்தாபனம் வரையறுத்து அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தது. அவரை விடுதலை செய்யக்கோரி கடந்த மே பதினான்காம் நாள் - அதாவது அவர் கைதான இரு ஆண்டு நிறைவை ஒட்டி - இந்தியா நெடுகிலும் உலகெங்கும் போராட்டங்கள் நடந்தன். இங்கே லண்டனில் இந்தியததூதரகத்தின் முன் நடந்த போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.
மருத்துவர் ஸென் அவர்களை நான் முதலில் சந்தித்தது, கால் நூற்றாண்டுக்கும் முன்பு. அப்போது மும்பை நகரில் வசித்த நான், அன்றைய மத்தியப்பிரதேசத்தின் தல்லி-ராஜ்ஹரா பகுதிகளில் ஒப்பந்தத்தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தலைவராக உழைத்துவந்த சங்கர் குஹா நியோகி அழைத்ததன் பேரில் அங்கு சென்று அவர்கள் நிலை பற்றி எழுதினேன்.
எட்டாண்டுகளுக்குப் பிறகு சுரங்க முதலாளிகளின் அடியாட்கள், நியோகி அவர்களைச் சுட்டுக்கொன்றனர். அதையடுத்து மருத்துவர் ஸென் அவர்களை சென்னையிலும் பெங்களூரிலும் வைத்துச் சந்தித்தேன். அப்போது அவர் ஷஹீத் (மாவீரர்) மருத்துவ மனையை எழுப்புவதில் மும்முரமாக இருந்தார். ஆதிவாசிகள், ஒப்பந்தத்தொழிலாளர்களின் உடல்நலம் பேணுவதற்காகவே உருவான மருத்துவ மனை இது.
நான் லண்டன் வந்த பிறகு, மாவோயிஸ்ட அமைப்புக்கும் ஆந்திர மாநில அரசுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியதை அடுத்து, வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான கே.ஜி. கண்ணபிரான் மற்றும் மருத்துவர் ஸென் ஆகியோரை பிபிசி சார்பில் பேட்டி கண்டு ஒலிபரப்ப முடிந்தது. பிறகு மருத்துவர் ஸென்னுடன் அவ்வப்போது எனக்குத் தொடர்பு இருந்தது. சத்தீஸ்கர் அரசு-மாவோயிஸ்ட் அமைப்புக்கு இடையில் நடைபெறும் மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்ற நோக்கமும் ஆதங்கமும் அவருக்கு உண்டு. தவிர, சங்கர் குஹா நியோகி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பெற்றவர்களில் ஒரே ஒரு அடியாள் தவிர முதலாளிகள் அனைவரையும் இந்திய உச்சநீதி மன்றம் விடுதலை செய்தபோதும் மருத்துவர் ஸென்னுடன் தொடர்புகொண்டு பேசினேன்.
ஸென் விடுதலை சாத்தியமானதற்கு அவர் பெயர்பெற்ற மருத்துவர், மனித உரிமை ஆர்வலர் என்பதும் பன்னாட்டு அளவில் மருத்துவர்கள், மனித உரிமை அமைப்புகள் பிரச்சாரம் நடத்தியதும் முக்கியக்காரணம். ஆனால் அவரைப்போல விடுதலையாகாமல் இருப்பவர்கள் எத்தனையோ பேர். இவர்களில் பலர் பொய்க்குற்றச்சாட்டுகள் மற்றும் போலி வழக்குகளைச் சந்தித்தவாறு இந்தியச்சிறைகளில் வாடுகிறார்கள் என்பதை யார்தான் மறுக்க முடியும்!
படம் - லண்டன் இந்தியத்தூதரகம் முன்பு நடந்த போராட்டம்.
முந்தைய பதிவுகள்
இந்தியாவின் அரசியல்-கைதிகள்
மருத்துவர் ஸென் - சிறை தேடி வரும் விருது
அரசியல்-கைதிகள் யார் என்பதும் மேலும் - 1
அரசியல்-கைதிகள் யார் என்பதும் மேலும் - 2
24.5.09
சரண்-பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகள் என்னிடம் கோரினார்கள் - மேரி கொல்வின்
குறிப்பு: இலங்கைப்படுகொலைகள் குறித்து இங்கே லண்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் இதழில் அந்த நாளிதழின் நிருபர் மேரி கொல்வின் இன்று எழுதியிருக்கும் ஆங்கிலக்கட்டுரை, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எனவே இங்கே அதைத் தமிழாக்கித் தந்திருக்கிறேன்.
2001-ஆம் ஆண்டு வன்னிப்பகுதிக்கு ரகசியமாய்ச் சென்ற மேரி கொல்வின் இலங்கை ராணுவத்தின் கிரனேட் தாக்குதலுக்கு ஆட்பட்டு ஒரு கண்ணை இழந்தவர். ஈராக் உள்ளிட்ட போர்க்களங்களுக்கு நிருபராகச் சென்றவர்:
----------------------------------------------------------------------------------------
கடந்த ஞாயிற்றுக்கிழமை - மே பதினேழாம் நாள் இரவு எனக்கு வந்தது, அந்தத் தொலைபேசி அழைப்பு. இறுதிக்கட்டத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரின் அழைப்பு. ஆனால் குரலை வைத்துப் பார்க்கும்போது அடுத்த சில மணி நேரத்தில் சாகப்போகிற ஒருவர் செய்த அழைப்பாகத் தெரியவில்லை.
பேசியவர், விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன். இவர் வேறேதும் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவே எனக்குப் பட்டது. இவர் என்னிடம் கூறினார்:
"எம் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்."
இலங்கையின் வடகிழக்கில் காடும் கடற்கரையும் சந்திக்கும் இடத்தில் நடக்கும் இறுதிக்கட்டப்போரில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இறுதித் துண்டுநிலத்திலிருந்து தம்முடைய செய்மதித் தொலைபேசி மூலம் என்னிடம் இதைத் தெரிவித்தார் நடேசன்.
பின்னணியில் எந்திரத்துப்பாக்கி வேட்டுச்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் கலவரமேதும் அடையாமல் நடேசன் தொடர்ந்து கூறினார்.
எங்கள் பாதுகாப்பு தொடர்பான உத்திரவாதத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் மற்றும் பிரிட்டிஷ் அரசிடமிருந்து பெற விழைகிறோம். அத்தகைய உத்திரவாதம் கிட்டுமா?
இலங்கையில் சிங்கள ராணுவம்-விடுதலைப்புலிகள் இடையே இருபத்தாறு ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப்போரில் வெற்றியடைய இருக்கும் ராணுவத்திடம் சரண் அடைவது அந்தப்போரிலேயே மிக அபாயமான கட்டமாக இருக்கும் என்பதை நன்கறிந்தவராக இருந்தார் நடேசன்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு எட்டாண்டுகள் முன்பு நான் ரகசியமாய்க் கூட்டிச்செல்லப்பட்ட காலத்திலிருந்து நடேசன் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் சமாதானத்துறைப் பொறுப்பாளர் புலித்தேவன் இருவரையும் அறிவேன். அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு இவர்கள் வசமிருந்தது. ஆனால் இப்போதோ, எஞ்சியிருக்கும் சுமார் முன்னூறு போராளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் உயிர்களைக் காப்பாற்ற இவர்கள் முயல்கிறார்கள்! இவர்கள் பலர் காயமடைந்தோர். இவர்களுடன் பல ஆயிரக்கணக்கான மக்களும் இந்தப்போரில் சிக்கியிருக்கிறார்கள். தொடர்ந்த குண்டுவீச்சைத் தாங்க வேண்டி, கையால் தோண்டப்பட்ட பதுங்குகுழிகளில் மறைந்து இப்படிச் சிக்கியிருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பைத் தோற்கடிக்கும் நோக்கில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றுவரும் இந்நேரத்தில், இறுதித்துண்டுநிலத்தின் மீது ராணுவம் தாக்குதல் நடத்தும்போது, விடுதலைப்புலிகள் தலைமை-ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கிடையில் பேச்சுவார்த்தை பரிமாறிக்கொள்ளும் பணியைப் பல நாட்களாகவே நான் செய்துவந்தேன்.
ஐக்கிய நாடுகள் மன்றத்திடம் மூன்று விடயங்களைத் தெரிவிக்குமாறு நடேசன் என்னிடம் கேட்டுக்கொண்டார்:
1. ஆயுதங்களைக் கீழே வைக்கத் தாங்கள் தயார்;
2. தங்கள் பாதுகாப்புக்கென அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசுகளிடமிருந்து உத்திரவாதம் தேவை;
3. இலங்கை அரசு தமிழ்ச்சிறுபான்மையினருக்கான உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கில் ஒரு அரசியல் பாதையை ஏற்கும் என்ற உறுதிமொழியும் தேவை.
பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் வழி, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் செயலாளர்-நாயகம் பன்-கி-மூன் அலுவலகத்தின் தலைமை அதிகாரியும் அவருடைய விசேடத்தூதராகக் கொழும்பு சென்றிருப்பவருமான விஜய் நம்பியாரைத் தொடர்புகொண்டேன். விடுதலைப்புலிகள் ஆயுதக்களைவு பற்றி முன்வைத்த நிபந்தனைகளை அவரிடம் தெரிவித்தேன். அவற்றை இலங்கை அரசிடம் தெரிவிப்பதாக விஜய் நம்பியார் என்னிடம் கூறினார்.
ஆக, சமாதானம் ஏற்படலாம் என்ற நம்பிக்கை பிறக்கத்தொடங்கியது. கண்ணாடி அணிந்தவரும் எப்போதும் நகைச்சுவையாகக் கதைக்கக்கூடியவருமான புலித்தேவன், பங்கரில் இருந்தவாறே தாம் சிரிக்கிற ஒரு புகைப்படத்தை என் கைத்தொலைபேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தார்.
ஆனால் ஞாயிறு பின்னிரவு ராணுவத்தாக்குதல் உக்கிரமடையத் தொடங்கியது. அதற்குப் பிறகு விடுதலைப்புலிகள் தரப்பிடமிருந்து அரசியல் கோரிக்கைகள் ஏதுமில்லை. புகைப்படங்கள் வரவுமில்லை. நடேசன் என்னை அழைத்தபோது சரண் என்ற சொல்லைப் பாவிக்க மறுத்துவிட்டார், ஆனால் அவர் முன்வைத்தது அதைத்தான். விடுதலைப்புலிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய விஜய் நம்பியார் அங்கு களத்தில் இருக்க வேண்டும் என்றார்.
நியூயார்க் நகரில் நாள் முழுதும் ஓய்வற்று இயங்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அலுவலகத்தை மீண்டும் தொடர்பு கொண்டேன். அந்த அலுவலகம் மீண்டும் விஜய் நம்பியாரிடம் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது. கொழும்பில் உறக்கத்தில் இருந்த விஜய் நம்பியாரைக் அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுப்பிப் பேசினேன்.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன். இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சே தம்மிடம் உறுதிகூறியிருக்கிறார், நடேசனும் புலித்தேவனும் பாதுகாப்பாக சரணடையலாம் என்று தம்மிடம் உறுதிகூறியிருக்கிறார் என்று என்னிடம் தெரிவித்தார் விஜய் நம்பியார். அவர்கள் வெள்ளைக்கொடியை உயரே ஏந்திவந்தால் போதும் என்று என்னிடம் மேலும் கூறினார்.
"சரணடைவதைக் காண நீங்கள் அங்கே போக வேண்டாமா?" என்று விஜய் நம்பியாரிடம் கேட்டேன். அவர், "தேவையில்லை, இலங்கை அதிபரின் உறுதிமொழிகள் போதும்" என்று என்னிடம் கூறினார்.
இங்கே லண்டனில் அப்போது ஞாயிறு பின்னிரவு இன்னும் கழியவில்லை. நடேசனின் செய்மதித் தொலைபேசியை அழைக்க முயற்சித்தேன். பிறகு தென்னாப்பிரிக்காவில் உள்ள விடுதலைப்புலிகள் தொடர்பாளரை அழைத்து விஜய் நம்பியாரின் இந்தச்செய்தியை விடுதலைப்புலிகளிடம் தெரிவிக்குமாறு கூறினேன். வெள்ளைக்கொடியை உயர ஏந்திச்செல்லுங்கள் என்பதுதான் அந்தச்செய்தி.
அதிகாலை ஐந்துமணிக்கு தொலைபேசி அழைத்து எழுந்தேன். தென்கிழக்காசியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் இன்னொரு தொடர்பாளர் என்னிடம் பேசினார். நடேசனிடம் பேச முடியவில்லை. எல்லாம் முடிந்து விட்டது. அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள் என்றார்.
அன்று மாலை அவர்கள் உடல்களை இலங்கை ராணுவம் காட்டியது. சரணடையும் முயற்சி எங்கே, எப்படி, ஏன் தவறிப்போனது? இந்தக்கேள்விக்கான விடை எனக்கு உடன் கிட்டியது.
நடேசன் என்னை அழைத்த அதே ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன் சந்திரநேருவையும் அழைத்திருக்கிறார். அவர் இலங்கை அதிபர் ராஜபட்சேவிடம் தொடர்புகொண்டிருக்கிறார். அடுத்த சில மணி நேரத்தில் நடந்தவை பற்றி ரோஹன் என்னிடம் தெரிவித்தார்:
"நடேசன் மற்றும் அவர் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பை நான் உறுதிசெய்கிறேன் என்று இலங்கை அதிபர் என்னிடம் கூறினார். தம்முடன் சுமார் முன்னூறு பேர் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் காயம்பட்டவர்கள் என்று நடேசன் என்னிடம் தெரிவித்தார். சரி, நான் அங்கே சென்று அந்தச் சரண் நடவடிக்கையை எதிர்கொள்கிறேன் என்று இலங்கை அதிபரிடம் தெரிவித்தேன். இலங்கை அதிபர், மாறாக, என்னிடம், 'நம் ராணுவம் கட்டுப்பாடு கொண்டது, கண்ணியமானது. போர்க்களத்துக்கு நீங்கள் செல்ல வேண்டாம். நீங்கள் அபாயத்தில் சிக்க வேண்டாம்’ என்றார்."
இலங்கை அதிபரின் சகோதரர் பாசில் ராஜபட்சேவும் தம்மிடம் தொலைபேசியதாக ரோஹன் தெரிவித்தார்: "‘அவர்கள் பாதுகாப்பு நிச்சயம். வெள்ளைக்கொடி ஏந்திவந்தால் போதும்’ என்ற பாசில் அவர்கள் வரவேண்டிய வழியையும் என்னிடம் தெரிவித்தார்."
ரோஹன் நடேசனைத் தொடர்புகொண்டபோது திங்கட்கிழமை அதிகாலை மணி ஆறு இருபது. துப்பாக்கிச்சத்தம் மேலும் பலமாகக் கேட்டது.
"’நாங்க தயார். வெளியே வந்து வெள்ளைக்கொடியை ஏந்தப்போறன் நான்’ என்றார் நடேசன்.
’அண்ணை, உயர ஏந்திப்போங்கோ, அவர்கள் அதைப் பாக்கோணுமாம். சாயங்காலம் நான் வந்து உங்களைப் பார்க்கறன்’ என்றேன் நான்."
கொலைக்களத்திலிருந்து எப்படியோ தப்பிய தமிழர் ஒருவர் அங்கே என்ன நடந்தது என்பதைத் தெரிவித்திருக்கிறார். நிவாரணப்பணியாளர் ஒருவரிடம் இவர் பேசியிருக்கிறார். நடேசனும் புலித்தேவனும் வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கை ராணுவத்தின் முன் அரண்களை நோக்கி நடந்தனர். அவர்களுடன் சுமார் பத்துப்பன்னிரண்டு பேர் ஆண்களும் பெண்களுமாகச் சென்றனர். ராணுவம் அவர்களை நோக்கி எந்திரத்துப்பாக்கியால் சுடத் தொடங்கியது என்கிறார் இவர்.
நடேசனின் மனைவி (விஜிதா) சிங்களப்பெண்மணி. சிங்கள மொழியில் அவர் படையினரைப் பார்த்துக் கூக்குரலிட்டார். "சரணடைய வரும் இவர்களை நீங்கள் சுடக்கூடாது" என்று ஓலமிட்டார். இவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தக்குழுவில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டார்கள். இந்தச்செய்தியைத் தெரிவித்த தமிழர் தலைமறைவாக இருக்கிறார். இவர் உயிருக்குப் பேரபாயம். அதேபோல ரோஹன் சந்திரநேருவின் உயிருக்கும் அச்சுறுத்தல். இலங்கை அதிபரும் அவர் சகோதரரும்தாம் அச்சுறுத்தலை விடுத்திருக்கிறார்கள். ரோஹன் நாட்டைவிட்டுத் தப்பிவிட்டார்.
தவிர, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் விசேடத்தூதராகப் பணியாற்றும் விஜய் நம்பியார் குறித்தும் ஐயங்கள் கடந்த சில நாட்களாக எழுந்தவண்ணம் உள்ளன. இவர் சகோதரர், சதீஷ் நம்பியார், 2002-ஆம் ஆண்டு முதல் இலங்கை ராணுவத்திடம் ஊதியம் வாங்கும் ஆலோசகராகப் பணியாற்றுபவர்; தவிர, இலங்கை ராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பெரும் ராணுவத்தலைவர் என்று பாராட்டையும் வழங்கி எழுதியிருப்பவர்.
விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொறுத்தவரை, தற்கொலைக்குண்டுவீச்சு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அமைப்பு என்பதால் அந்த அமைப்பைப் பல நாடுகள் தடை செய்திருக்கின்றன. அதேவேளை நடேசனும் புலித்தேவனும் அரசியல் தீர்வை விழைந்தவர்கள். அவர்கள் உயிரோடிருந்தால், தமிழ்ச்சிறுபான்மையினரில் அரசியல் தலைமையை ஏற்போராக இருந்திருப்பார்கள்.
படங்கள்: ஈராக்கில் மேரி கொல்வின், எரிக் சொல்ஹைமுடன் நடேசன்.
குறிப்பு: வெள்ளைக்கொடி ஏந்திச்சென்று சுடப்பட்டவர்களான நடேசன், புலித்தேவன் இருவரையும் நடேசன் மனைவி விஜிதா அவர்களையும் பத்திரிகைக்காரன் என்ற முறையில் அறிந்தவன் நான். எண்பதுகளின் இடைப்பகுதியில் சென்னையில் வசித்த பல்வேறு ஈழப்போராளிக்குழுத் தலைவர்களைப் போல நடேசனும் என் இல்லத்துக்கு வந்திருக்கிறார். மருத்துவரான என் தந்தையாரிடம் அப்போது கண் பார்வைப் பரிசோதனை செய்துகொண்டார். இந்தவகையில் நடேசன், புலித்தேவன் ஆகியோர் எத்தனையோ தவறுகளைச் செய்திருந்தாலும் அவர்களுக்கு என் அஞ்சலி. - நாகார்ஜுனன்.
இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்..
கடந்த எட்டு மாதக்காலமாக நம்மைச் சூழ்ந்துவந்த அச்சம் நிஜமாகும் பயங்கரச் சூழலை, நெருக்கடியை இன்று சந்திக்கிறோம்.
தெற்காசியப் பிராந்தியத்தின் அண்மை வரலாற்றில் மிகப்பெரும் மனித-இனப்படுகொலையை நடத்தியிருப்பது இலங்கை அரசு. மொத்த மனித இனமும் நின்று காணக்காண, இந்தப் பாதகச்செயலை நடத்தியிருக்கிறது இலங்கை அரசு. நடந்தவற்றைப் பார்க்கும்போது தமிழ்மக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்பில் பதினைந்தாயிரம் பேர் வரை பலியாகியிருக்கலாம் என்றும் பதினைந்தாயிரம் பேர் வரை காயம், படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. தவிர, ஆறாயிரம் இலங்கைப்படையினர் வரை பலியாகியிருக்கலாம், காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
இந்தப்போரை நேரில் கண்ட சாட்சிகள், அதில் சொல்லொணாத்துன்பத்தை எதிர்கொண்ட வன்னித் தமிழ்மக்களும் அவர்களுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் குழாமும்தாம். இவர்களில் பெரும்பாலோர் இப்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பது முகாம்களில். விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருப்போர் எழுபதாயிரம் பேர் மாத்திரம் என்று ஜனவரி மாதம் தொடங்கி இலங்கை அரசு கூறிவந்தது, அதை இந்திய அரசும் ஊடகங்களும் அப்படியே எதிரொலித்தன. இந்தச் செய்திப்பொய்கள் இப்போது ஓய்ந்துவிட்டன. மாறாக, இப்போது இந்த முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை லட்சம் பேர் என்று இலங்கை அரசு ஒப்புக்கொண்டு, இவர்களை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து விடுவித்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்துவருகிறது. இவர்கள் இருக்கும் முகாம்களுக்கு சர்வதேச நிவாரண அமைப்புக்கள் சென்றுவர அனுமதி வேண்டும், இங்கெல்லாம் தடுப்புக்காவல் கூடாது, முகாம்களில் இருக்கும் மக்கள் வெளியே சென்றுவர அனுமதி வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மன்றமும் பிற அமைப்புக்களும் கூறியிருக்கின்றன.
இந்தப்போரில் கொலையுண்டவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியத்தலைவர்கள், போராளிகள், அவர்களுடைய குடும்பத்தினர், யுத்தப்பிரதேசத்திலிருந்து வெளிவர இயலாமல் அவர்களுடன் சிக்கிய மக்கள் எனப்பலர். இவர்களில் ஒவ்வொரு வகையினர் பற்றியும் நிறைய எழுதமுடியும்... இப்படிக் கொலையுண்டவர்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் குடும்பத்தார், உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற்புலிகள் பொறுப்பாளர் சூசை உள்ளிட்டோரும் இருக்கிறார்களா, இல்லையா என்ற குழப்பம் தொடர்கிறது. இதுகுறித்து மாறுபட்ட செய்திகள், ஹேஷ்யங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம் - இப்போது இலங்கை அரசு விடுதலைப்புலிகளை ராணுவரீதியாகத் தோற்கடித்த நிலையில் ஈழத்தமிழ்மக்களின் அரசியல்-அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலைத் தொடங்க அதற்குப் பெரிதும் தடையிருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த வார நிகழ்வுகளை, செய்திகளைச் சங்கேதமாக வைத்து வாசிக்கும்போது விடுதலைப்புலிகளின் முக்கியத்தலைவர்கள், பிராந்திய-சர்வதேச அரசியல் சக்திகளின் பேச்சைக் கேட்டு வேறுவழியின்றி ஆயுதக்களைவுக்குத் தயாரான சமயத்தில் அவர்களை இலங்கை அரசு கொலைசெய்து முடித்திருப்பதாகவே கூற வேண்டும். தவிர, தற்போது இலங்கை அரசு இந்த கோரப்படுகொலைகளுக்கான தடயங்களையும் அழித்துவருவதாகத் தெரிகிறது. இலங்கை அரசின் இந்தத் தாக்குதலுக்கு நேரடியாகவும் திரைமறைவிலும் ராணுவ உதவி, தளவாட உதவி, நிதியுதவி என வழங்கிய நாடுகள் இந்தியா, ருஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா, சௌதி அரேபியா ஆகிய நாடுகள் ஒருபுறம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை மறுபுறம், தவிர கண்டும் காணாமல் நின்றதற்காக ஐக்கிய நாடுகள் மன்றமும் பொறுப்பு என்றே கூறவேண்டும். இதில் ஒவ்வொரு தரப்பின் பொறுப்பும் ஒவ்வொருவகையில் மோசமானது என்பதில் மறுகருத்துக்கே இடமில்லை.
விடுதலைப்புலிகள் அமைப்பிடம் எத்தனையோ அறப்பிறழ்வுகள், தவறுகள், கொடூரங்கள் உண்டு. இருந்த போதும் போரின் இறுதிக்கட்டத்தில் இந்த அமைப்பு, இலங்கை அரசு அற்ற சர்வதேச, மூன்றாம் தரப்பிடம் ஆயுதங்களைக் கையளிக்கத் தயார் என்று அறிவிக்கிறது. இந்த மூன்றாம் தரப்பு, இந்திய அரசா, நார்வேயா, அமெரிக்காவா, பிரிட்டனா இவையெல்லாம் கலந்த ஒன்றா என்பதில் குழப்பமுண்டு. பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் வெளியே வந்த அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன், நடேசனின் துணைவியார் விஜிதா, சமாதானச்செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன், சிறப்புக்கட்டளைத் தளபதி ரமேஷ் உள்ளிட்ட குழுவினரை இலங்கைப்படையினர் கொன்றுவிட்டுப் பழியை விடுதலைப்புலிகள் மீது போட முயற்சி செய்திருக்கிறார்கள். நடேசனும் புலித்தேவனும் நார்வேயிடம், இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் மன்றச் செயலாளர்-நாயகத்தின் விசேட தூதுவர் விஜய் நம்பியாரிடம் இன்னும் பிறரிடம் பேசியிருக்கிறார்கள், பேசிய பிறகே சரணடைய முன்வந்திருக்கிறார்கள் என்று எல்லாத்தரப்பு செய்திகளின் ஊடாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது.
அதற்கும் முன்பாக விடுதலைப்புலிகள், சூசையின் குடும்பத்தாரையும் தாங்கள் பிடித்துவைத்திருந்த இலங்கை ராணுவத்தினர் ஏழு பேரையும் விடுவித்திருக்கிறார்கள். சூசையின் குடும்பத்தாரைக் கைது செய்துவிட்டதாகவும் ஏழு இலங்கை ராணுவத்தினரைத் தாங்கள் மீட்டதாகவும் இலங்கைப்படையினர் அறிவித்ததையும் ஒரு சங்கேத செய்தி எனக் கூறலாம். அடுத்த கட்டமாக நடேசன்-புலித்தேவன் குழுவினர் வெளியே வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் இவர்கள் கொல்லப்பட்டதைப் பார்க்கும்போது, சூசை குடும்பத்தாரைத் தவிர கௌரவமாக யாரும் தப்பவில்லை என்றே தெரிகிறது.
போரின்போது ஆயுதம் தாங்காதோரைக் கொல்வது போர்க்குற்றம், அதைப் போல இப்படிச் சரணடைய முன்வருவோரையும் போர்க்கைதிகளையும் கொல்வதும் போர்க்குற்றமே. இத்தகைய போர்க்குற்றங்களைச் செய்யாத அரசுகளோ, ராணுவங்களோ இல்லை என்பது முக்கிய உண்மை. இருந்தபோதும் இந்தப் போர்க்குற்றங்களைத் தவிர்க்க முயல்கிற தளபதிகளும் ஆங்காங்கே இருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசின் தரப்பில் அப்படி யாரும் இல்லை, அதற்கான அறிகுறியே இல்லை போலும்.
இந்தப்போரின்போது இலங்கை அரசு-விடுதலைப்புலிகள் தரப்பில் நடந்தேறிய போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் எழுப்பியுள்ளன. இதுகுறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை - மே 26-ஆம் நாள் - ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் விசேட அமர்வில் தீர்மானமொன்றைக் கொண்டுவந்திருக்கின்றன. இந்தத் தீர்மானத்தை ஸ்விட்ஸர்லாந்து, போஸ்னியா, மௌரிஷியஸ், ஆர்ஜெண்டினா, சிலி, மெக்ஸிக்கோ, உருகுவே மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் ஆதரித்திருக்கின்றன. இதற்கு மாற்றாக, இலங்கை அரசு, பயங்கரவாதத்தை வென்றதற்காகத் தன்னையே பாராட்டிக்கொள்வதான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கின்றது. இதை ஆதரிக்கும் நாடுகள் இந்தியா, சீனா, க்யூபா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா, சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் பிலிப்பைன்ஸ் - அதாவது இலங்கை அரசின் இன்றைய நெருங்கிய நண்பர்கள் இவர்கள்தாம்.
கடந்த பல பத்தாண்டுகளில் இலங்கையில் நடந்த அரசியல்-படுகொலைகள், இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்காக யாரும் பெரிதாகத் தண்டிக்கப்பட்டதில்லை, எவ்வித பன்னாட்டு விசாரணைக்கும் இலங்கை அரசு தயாராக இருந்ததுமில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த நிலையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பில் விசாரணை ஏதும் நடப்பதற்கான சாத்தியமுண்டா என்பது அடுத்த ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
இலங்கை அரசு முன்மொழிந்திருக்கும் தீர்மானத்தில் இந்திய அரசின் சார்பில் கையொப்பமிட்டிருப்பவர், ஏ. கோபிநாதன் என்ற வெளியுறவுத்துறை அதிகாரி. இந்தத் தீர்மானத்தைத் தமிழக அரசியல் கட்சிகளும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமுறையாவது வாசித்துப் பார்க்க வேண்டும். இந்திய அரசின், வெளியுறவுத்துறையின், ஊடக உலகின் முகங்கள் எத்தகைய கொடூரம் வாய்ந்தவை, இவற்றை எதிர்கொள்ள வேண்டிய தாங்கள் எங்கு நிற்கிறோம் என்பது இவர்களுக்கு இனிமேலாவது புரியட்டும்.
இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற முறையில் இந்திய அரசின் இந்தக்கொடூர முகம் எனக்குப் புதிய ஒன்றல்ல. பத்திரிகைக்காரன், ஆர்வலன் என்ற வகையில் இந்த முகத்தை ஏற்கனவே பல முறை கண்டவன் நான். இருந்தபோதும் உள்ளபடியே இந்த முகம் இன்று மீண்டும் வெளிவந்திருக்கிறது, அம்பலப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற முறையில் பெரிதும் வெட்கித் தலைகுனிகிறேன், என் ஈழச்சகோதரர்கள் என்னை மன்னிக்கப்போவதில்லை என்பதை உணர்கிறேன், தமிழ்பேசும் மக்களில் ஒருவன் என்பதால் கடும் கொதிப்படைகிறேன்...
19.5.09
உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்
தடிப்பொதியாய் என்னைச் சுற்றும்
தொடுவான் பலவும்
சாய்ந்து வேறாகி
எற்றைக்கும் நிலைதவற
தீக்குச்சி தொட்டு
இழைக்கோடு பல
என்னைச் சூடாக்கி
காற்றை ஆரஞ்சாக்கி
வாட்டும்,
வெளிர்வான்தனைச் சிப்பாயின் நிறமாய்
பாரித்துத்
தான் குத்தும் தூரம் பல
ஆவியாகுமுன்பே.
ஆயின்
கரையும் கரையும்
உறுதிமொழியின் வரிசையாய்
யான் முன்னே வர.
மலையுச்சிப் புல்வெளியினின்றும்
செம்மறியாடுகளின் இதயத்தினின்றும்
உயர்ந்த உயிரும் ஏது!
விதியாயப் பொழியும் வளியும்
யாவற்றையும் ஓரேதிசையில் சாய்த்து.
என் சூட்டைப் புனலாக்க
முயலுமதை உணர்வேன்.
ஹெதர்ச்செடியின் வேர்பலதை
நன்றாய்க் கவனித்தால்
என்பிலெனதும்
தம்மிடை வெளுக்க
எனையழைக்கும் இவை.
செம்மறியாட்டு மந்தையும்
தாமெங்கே என அறியும்,
வானிலை போல் சிமிட்டிநிறமாம்
தம் அழுக்குக் கம்பளி-முகிலில்
மேய்ந்து.
கண்மணி இவற்றின்
கருந்துளியும்
எனையழைக்கும்.
மெல்லிய சில்லறைச்செய்தியாய்
விண்வெளியில் அனுப்பிய அஞ்சலாய்
உணர்வேன்.
பாட்டிவேடத்தில்
நிற்கும் கூட்டம்
முடிச்சுருளும் மஞ்சள்பல்லும்
கடும்பளிங்குக் குரலுமாய்.
தேய்பாதையில் வளையம்
உருட்ட வந்தேன்.
என் விரல் வழி
நீரென வீழும்
தெளிந்த தனிமைவாசம் பலதும்.
புல்முதல் புல்வரை
உட்துளையான வாயிற்படிதான்.
விட்டமும் நிலையும் கழன்றுவிடும்.
வளியில் மனிதரில்
ஒற்றையசை ஒருசில மட்டும்
நினைக்குமிது,
இவற்றை
முனகி ஒத்திகை பார்க்கும்
கருங்கல் கருங்கல்லென.
கிடந்தவை யாவற்றிடை
தனித்தே நிற்கும்
என்மேல்
வானும் சாயும்.
எங்கோ கவனம் அலையும்
புல்லும் தலையசைக்கும்.
உடன் இவைதான்
எனில்
உடைந்தே போகும்
வாழ்வும்.
இருள் அதைப் பயமுறுத்தும்.
இப்போது
தாழக் குறும்பள்ளம் பலதில்
பர்ஸ் போல் கறுப்பாய்
சில்லறை நாணயமென
ஓளிரும் வீட்டு விளக்கும்.
-- Sylvia Plath, Wuthering Heights, 1959.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் எமிலி ப்ரான்ட எழுதிய நாவலின் அதே தலைப்பில் ஸில்வியா ப்ளாத் எழுதிய கவிதை. இங்கே பிரிட்டனின் யார்க்ஷயர் பகுதியில் எமிலி-ஷார்லட் ப்ரான்ட சகோதரிகளின் இல்லத்துக்குச் சென்று எழுதிய கவிதை.
கொலை, தற்கொலை, சாவு குறித்த ஸில்வியா ப்ளாத்தின் கவிதைகள், நிலப்பரப்பில் தன்னை எற்றைக்குமாய் வரையும் ஸில்வியா ப்ளாத்தின் கவிதைகள் பல, கடந்த ஃபிப்ரவரி மாதம் தொடங்கித் தமிழில் இந்த இணைய தளத்தில் வெளியாகியிருக்கின்றன. இதுவரை வெளியான கவிதைகள், முப்பத்தைந்து.
படம் - தமிழ்மக்களின் இன்றைய நிலையைக் குறிக்கும் விதமாக மரண முகம் கொண்ட தம்பலப்பூச்சி.
12.5.09
கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
தீக்கல்லாய்
தன் கால்பட்டுக் கேட்பாள் -
எஃகுத்தெருவினின்று இரையும்
இத்தனை எதிரொலியும்
கறுப்பினின்று தொடுக்கும்
நிலாநீலமடித்த வளைவில்
கல்லெழுப்பும் நகரமதன்
கட்டையதில் தீமூட்டி விரையும்
வாடையும் ஆட்டும்
சிறுகுடிலின்
இருளின்
சுவர்முதல் சுவர்வரை கேட்ட
வெடிவாண எதிரொலியும்
ஆயின்
இவள் பின்னே இறக்க,
சுவர் மறையத் தோன்றும்
விளைநிலமும்
விடாமல் சீறும் புல்லும்
முழுநிலவில் ஏறும்
வாடைக்குப் பிடரி தந்து
ஓயாமல்
நிலவெய்தும் கடலாய்
தன் வேரிலாட.
பிளவுண்ட பிலமதில்
எழும்பும் பனிபூதம்
முன்னே தோள்வரை
தொங்கினும் வீங்கும்.
இவள் நடந்த வெற்றுணர்வும்
சுற்றத்தார் கதைக்கும்
பூதத்துக்கல்ல,
பெயர் கொண்ட
எழுத்துரு எதற்குமல்ல.
கனாமாந்தர் கிடந்த
புலமிதும் தாண்டியுடன்
தன் கண் காணாள்
கனாவும் மணலான தூசியும்.
தொலைந்த ஒளி
இவள் அடித்தாற்றின் அடியில்.
நெடுநல்வாடையும்
அழல்துளியாய் வாரிக்கிடத்தும்
இவளுடல்.
தன் பாரிய சீழ்க்கையுமடிக்கும்
இவள் செவிப்பிடரியில்.
கலந்த ஒலியும்
கிள்ளியெடுத்த பூசணிமுடியாய்
அள்ளும்
இவள் தலை.
இவள் பேருடல் எனும்
போதாப்பரிசுக்கும்
விரையும்
இதயத்துடிப்புக்கும்
பதிலென இவ்விரவும் தந்ததோ
தன் மலையின்
திமிலான
பாராமுக இரும்பே,
கரும்பாறையில் தொடும்
கரும்பாறையென அமைந்த
புல்வெளியே.
களஞ்சியம் பல.
மூடிய கதவின் பின்
அடைகாப்பும் பொரிப்பும் பல.
கறவைப்பசுக்கூட்டம்
புல்வெளியில்
மௌனப்பாறையாய் முழந்தாளிட
செம்மறியாட்டு மந்தையும்
தம் கம்பளிப்பற்றையுடன்
கல்நோக்கிக் கண்மயங்கும்
வளார் கூட்டி ஓயும்
பறவைக்கூட்டம் அணியும்
கருங்கற்பாறை பல.
இவற்றின் நிழலும்
இலைபோல் வேடமிட
நிலப்பரப்பு யாவும்
கண்கண்டும் மாறாமல்
ஒருகாலம்
மரச்சாறும் பாலும்
முன்னாண்ட
முற்றான
பழம்-உலகாய்
இவள்தன்
சிறுசூட்டின் விரைவை
உறிஞ்சிடப் போதுமாய்.
ஆயின்
திரும்புவாள்
பாரிய மலைதன் பாறையும்
கல்லொளியில் தன்னை
ஸ்படிகமாய் நொய்யாய்
நொறுக்கும் முன்.
-- Sylvia Plath, Hardcastle Crags, 1956.
இங்கே பிரிட்டனில் நான் இன்னும் போகாத இடம், யார்க்ஷயர் மேற்குப்பகுதியில் உள்ள பெயர்பெற்ற Hardcastle Crags.
இங்கே ஸில்வியா ப்ளாத் முதன்முதல் சென்றபோது எழுதிய கவிதை இது. தொல்காப்பியம் கூறும் திணைமரபில் வருவது போல, நிலப்பரப்பின் உள்ளுறை மற்றும் இறைச்சியாக ஒன்றை முன்வைத்து ஸில்வியா ப்ளாத் எழுதிய முக்கியக்கவிதை இது எனத் தெரிகிறது. அதேவேளை, மனிதரற்ற இயற்கை என்ற பழம்உலகை ஒருகணம் தொட்டுத் திரும்பும் ரொமான்டிக் அலகும் வருவதைக் குறித்துக்கொள்ளலாம்.
மீண்டும் இதே பகுதிக்கு ஸில்வியா திரும்பி எமிலி-ஷார்லட் ப்ரான்ட சகோதரிகளின் இல்லம் செல்கிறார். அப்போது எழுதிய கவிதைக்கு எமிலி ப்ரான்ட எழுதிய பெயர்பெற்ற Wuthering Heights நாவலின் பெயரையே சூட்டுகிறார். அந்தக்கவிதையைப் பிறகு முயல்கிறேன்.
குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
இன்றைக்கு ஈழச்சிக்கல் சார்ந்த தமிழ்மக்களின் துயரம் எல்லையில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஏதும் செய்யமுடியாதபடி கட்சிகளாகப் பிரிந்திருக்கிற இந்தியத்தமிழர்கள் ஒற்றுமையாகப் போராடச் சக்தியற்றவர்கள் என்பது விளங்குகிறது. தமிழ்-நிலைப்பாடு என்பது சக்திமிக்க தமிழர்களின் அடையாளம். இது மெதுமெதுவாக பலவீனப்பட்டுக் கொண்டே போகிறது. பெரியாரிடமிருந்து அண்ணாதுரை தலைமையில் உருவான திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தமிழ்-நிலைப்பாட்டுக் கட்சி மெதுமெதுவாக ஒரு சாதாரண அரசியல் கட்சியாக மாறுகிறது. ஈழச்சிக்கலில் அக்கட்சியின் குணநலன்கள் வெகுவாக மாறியுள்ளது தெரிகிறது. அக்கட்சியின் அடுத்த தலைமுறை வரும்போது முற்றிலும் அக்கட்சி மாறிவிடும். ஆனால் அகில உலக தமிழ்-நிலைப்பாடு திராவிடக்கட்சிகளுக்கப்பால் மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்களால் முன்னெடுக்கப்படும். ஈழத்தமிழர்கள் அதன் முன்னணியில் நிற்பார்கள்.
இதில் கலாச்சார நிலைப்பாடு முக்கியமானதாகும். அப்போது ஈழம் மற்றும் தமிழக மக்களின் மனம், கற்பனைகள், கலைகள், ஞாபகங்கள் வரலாறுகள், பழக்க வழக்கங்கள், மண்ணோடுள்ள உறவுகள் முக்கியமானவையாகும். தேச எல்லைகளுக்கப்பால் நிறுவனங்கள் தோன்றும். தோன்ற வேண்டும்.
இனி என்றும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும் என்று தோன்றவில்லை. 1937-ஆம் ஆண்டில் பெரியார் தனித்தமிழ்நாடு வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்தியாவில் அது நடைமுறை சாத்தியமில்லை. எனவே ‘தேசமற்ற-கலாச்சார-தேசங்களை’ உருவாக்குவது பற்றி அகில உலகத் தமிழர்கள் யோசிக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. குவலயமாதல் (Globalization) என்பது இன்று அகில உலக ஒருமை பற்றிச் சிந்திப்பவர்கள் மத்தியில் முக்கியமான சிந்தனையாகியுள்ளது. குவலயமயமாதலில் பொருளாதாரம், இலக்கியம் எல்லாம் இணைகின்றன.
எனக்குத் தமிழிலக்கிய வரலாறும் படைப்பு நெறிமுறைகளும் எப்போதும் முக்கியமாகப் படுவதால் ஈழத் தமிழிலக்கியம், ஈழக்கவிதை வரலாறு, ஈழத்தில் உரைநடை வளர்ச்சி, கற்பனை செல்லும் நெறி போன்றவையும் இவற்றை இந்தியத்தமிழோடு இணைத்து ஒப்பிட்டு ஆராய்தல், திறனாய்தல் போன்றன முக்கியமாகப்படுகின்றன.
ஈழத்தமிழில் தோன்றும் நீள்புனைவுகள் தமிழகத்தின் உரைநடைப் புனைவுகளைவிட வித்தியாசமாக அல்லது படிநிலை-குறைந்தவையாக அமைந்துள்ளன. தமிழகத்தோடு ஒப்பிடும்போது நாவல் எழுத்து முயற்சிகள் மிகமிகக் குறைவாக ஈழத்திலிருந்து வந்துள்ளன.
திறனாய்வில் பல முக்கியமான ஆளுமைகள் ஈழத்திலிருந்து வந்துள்ளனர். திறனாய்வில், இயல்பாகவே, இருக்கும் தத்துவ அழுத்தம்தான் ஈழ நாவல் எழுத்து முயற்சிகளை அழித்துவிட்டன என்பது முட்டாள்தனமான வாதம். கேள்விகள் இந்த முறைகளில் உருவாகக்கூடாது. ஏன் நாவல் திறனாய்வு உச்சபட்ச நிலையில் ஈழத்திலிருந்து வந்தாலும் நாவல் படைப்பு அங்கிருந்து தோன்றவில்லை என்று கேள்வி வரவேண்டும். இந்தக் கேள்விதான் பயனுள்ள கேள்வி. ஏனென்றால் பயனில்லாத கேள்வி பிரயோஜனமில்லாத வழியில் சர்ச்சையைக் கொண்டு செல்லும். ஒரு பிரச்னையை ஆழமாகச் சிந்திக்கக் கேட்கப்படும் கேள்விகளின் நோக்கமும் முக்கியம்.
அறுபதுகள் வாக்கில் எழுத்து இதழ் ஒரு புது இயக்கத்தைத் தமிழுக்குத் தந்தது. ஓரளவு இக்காலகட்டத்தை தமிழக-ஈழ படைப்பாளிகளின் கூட்டியக்கமாகப் பார்த்திருக்க வேண்டும். இதை இப்படி இரு மக்கள் கூட்டத்தின் ஒத்த இயக்கமாக சி.சு. செல்லப்பா ஏனோ விளக்கவில்லை. கைலாசபதி, முருகையன், சில்லையூர் செல்வராஜன், கே.எஸ். சிவகுமாரன், சிவத்தம்பி, எஸ். பொன்னுத்துரை என்று ஈழத்திலிருந்து பலர் சேர்ந்து எழுத்து பத்திரிகை மூலமாக ஒரு இலக்கிய இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தருமு சிவராமு அப்போது இலங்கையராக இருந்து பல கருத்துகளைக் கொண்டு வந்திருக்கிறார். பின்னால் இவர் ஈழ அடையாளம் அற்றவராகப் புதுக்கவிதையை அறிமுகப்படுத்த முனைகிறார். புதுக்கவிதை எழுபதுளைத் தொடும்போது சி.சு.செ. எப்படியோ ஒரு பெரிய அம்னெஷியாவுக்கு ஆட்பட்டு ஈழ அடையாளத்தை எழுத்து இதழ் உருவாக்கிய இயக்கத்திலிருந்து துண்டித்து விட்டிருக்கிறார். எழுத்து பத்திரிகையின் 25-ஆம் இதழிலிருந்து 45-ஆம் இதழ் வரை படித்துப் பார்த்தால் ஈழத்தவர்களின் சிந்தனைப் பங்களிப்பு இதழின் உள்ளாற்றலாய்ப் பரிணமித்திருப்பது தெரியும். இலக்கிய வரலாற்றுக்கு இச்செய்தி மிக முக்கியமானதாகும்.
இன்னொரு முக்கியமான சிந்தனையையும் சொல்ல வேண்டும். ஈழ எழுத்துகளையும் தமிழக எழுத்துகளையும் ஒப்பிடும்போது - அதாவது கடந்த முப்பது ஆண்டுகளில் - தமிழகத்தில் மிக அதிகமான கற்பனை உரைநடையும் திறனாய்வு இயக்கங்களும் தோன்றியுள்ளன. ஆனால் ஈழத்தில் கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜெ. கனகரெட்னா சேர்ந்து மார்க்சியத்திறனாய்வை அழுத்திப் பேசியது ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டம். அதற்குப் பிறகுள்ள திறனாய்வுப்போக்கு பற்றியும் ஈழத்தில் ஏதும் இல்லை.
இன்னொரு முக்கிய விஷயம். ஈழத்தமிழ் எழுத்தில் ஆங்கிலப் படிப்பு, ஏனோ, கடந்த முப்பது ஆண்டுகளில் உரமாகப் போய்ச் சேரவில்லை. இக்காலத்தில் தமிழகத்தில் ஆங்கிலத்திலிருந்து நடந்த மொழிபெயர்ப்புகள் பற்றி விரிவாக எழுதப்பெற வேண்டும். ரஷ்ய, ஸ்பானிஷ், ஆங்கில, ஃப்ரெஞ்சு எழுத்துகள் ஆங்கிலம் மூலமாக மிகப்பெரிய அளவில் தமிழுக்குக் கொண்டுவரப்பட்டன. ஈழத்தில் இப்படி ஏதும் நடக்கவில்லை.
ஆனால் 1983-இலிருந்து ஈழப்போராட்டம் புதிய கட்டத்தை எட்டியபோது அது கவிதையைப் புதுத்தளத்தில் கொண்டு சேர்த்தது. புதிய ஈழக்கவிதை என்று புது அடையாளத்துடன் உருவானது. பழைய கவிஞர்களான மஹாகவி, நீலாவாணன், சண்முகம் சிவலிங்கம், தா. ராமலிங்கம் போன்றோரின் மொழிநடை மரபிலிருந்து விலகிய ஒரு தனியான குரல் வெளிப்பட்டதுதான் 20-ஆம் நூற்றாண்டின் ஈழக்கவிதையின் உச்சக்கட்டம். இதில் இன்றெழுதும் பலர் புதிய ஆளுமையுடன் வெளிப்பட்டனர். (பார்க்க : ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதை, காவ்யா வெளியீடு. இந்தத் தொகுப்பு கன்னட மொழியில் தனித் தேசிய இனப் பிரச்சினையை அழுத்திப் பேசிய ஒரு இயக்கத்தால் அதிகம் பிரச்சாரப்படுத்தப்பட்டது என்பதும், தமிழில் வரும் முன்பே கன்னடத்தில் இத்தொகுப்பு வந்தது என்பதும் ஆவணப்படுத்த வேண்டிய செய்திகள்)
இந்தப் புதுவிதக்கவிதைகள் ஈழக்கவிதையின் முந்தைய தடத்திலிருந்து வந்தவை அல்ல. மஹாகவியின் கவிதை போன்றன அல்ல அவரது மகனான சேரனின் கவிதைகள். மஹாகவியிடம் அவர் கவித்துவ உருவாக்கத்தில் ஒருவகை ஆங்கிலத்தொனி இருந்ததால், ஆங்கிலத்திலிருந்து விடுபட்ட தொனியைத் தேடிக் கண்டடைந்தன, சேரன், ஜெயபாலன், சோலைக்கிளி, நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள். ஈழத் தமிழ்க்கவிதை பற்றிய வரலாற்றை அறிய இது ஒரு பிரயோஜனமான குறிப்பு என்று நினைக்கிறேன்.
ஈழ எழுத்தையும் தமிழக எழுத்தையும் திறனாய்வு நோக்கில் பார்த்து எழுதப்பட்ட அதிகமான கட்டுரைகளோ, நூல்களோ அதிகம் கிடையாது. தமிழகத்தில் எழுதப்பட்டுள்ள நாவல்கள் பற்றியோ, கவிதைகளின் போக்குகள் பற்றியோ ஈழக் கல்வியாளர்களோ, விமரிசகர்களோ அதிகம் எழுதவில்லை.
தமிழக எழுத்தில் இன்று ஒருவித அனைத்துலகப் போக்குகளை சுவீகரிக்கும், உள்வாங்கும் தன்மை உள்ளது. இது சிறப்பாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம். தமிழ் நாவல் எழுத்துச்சூழலில் ஒருவித வட்டாரத்தன்மையின் மாய்மாலம் உள்ளது. ஸல்மான் ரஷ்டி, இந்தியாவில் நாவல்கள் எழுதப்படவில்லை என்ற வாசகத்தை இந்தச்சூழலின் பின்னணியில் யாரும் பார்த்ததாய்த் தெரியவில்லை. குவலயமயமாக்கச் சூழலில் புதிய இலக்கியப் போக்குகள் உருவாகின்றன. நாடுகளின் எல்லைகள் இரண்டு விதமாக உடைய ஆரம்பித்துள்ளன. இறையாண்மை என்பது புத்திபர தளத்தில் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் நான் The White Tiger (வெள்ளைப்புலி) நாவலை அணுகுகிறேன். சமீபத்திய நாவல்களில் வரும் இடம் என்பது முக்கியமான சிந்தனை. ‘உலக இடம்’ (World Space) என்பது புனைகதைகளில் உருவாக ஆரம்பித்துள்ளது. இது பிராந்திய, மரபான நாவலாசியர்களுக்கு அறிய முடியாத விஷயம். இத்தகைய ‘பிராந்திய நாவலாசிரியர்கள்’ இந்திய மொழிகள் பலவற்றிலும் உள்ளனர். அவர்களுக்கு வெள்ளைப்புலி நாவலின் புதுத் தோரணை எரிச்சலூட்டும். ஸல்மான் ரஷ்டியின் கூற்று எரிச்சலூட்டியது. வெள்ளைப்புலி நாவலில் அரவிந்த் அடிகா, புதிய நாவலாசிரியராக இருப்பதால், மரபான பிராந்திய நாவல் மனோபாவத்தைக் கடந்துவிடுகிறார். வட இந்திய கிராமத்தை ஆசிரியர் போய்ப் பார்த்திருப்பாரா என்று நம்மவர்களைக் கேள்வி கேட்கவைக்கும் முறையில் பிராந்தியம் உலக நாவல் வாசகனின் களமாக மாறுகிறது. வட இந்தியக் கிராமத்தைப் போய்ப் பார்க்கத் தேவையில்லை. நைப்பாலின் சில நாவல்களிலும் இப்படிப்பட்ட தன்மையைக் காணமுடியும். குவலயமயமாதல் இலக்கியத்தையும் தேசத்தையும் பொருளாதாரத்தையும் சந்தையையும் ‘உலக இடமாக’ (World Space) மாற்றுவது இப்படித்தான். இதனால்தான் அரவிந்த் அடிகாவின் நாவலான வெள்ளைப்புலி, உலகின் எல்லாப் பெரும்பான்மை பத்திரிகைகளாலும் அங்கீகரிக்கப்பட்டது. இப்படித்தான் அந்த நாவல் இனி எழுதப்படும் பிராந்திய நாவல்கள் உள்வாங்க வேண்டிய எழுத்தை முன்வைக்கிறது. அதாவது பிராந்திய மொழி நாவல்கள் தம்மை தற்காலத்தன்மை கொண்ட நாவலாக ஆக்குவது இப்படித்தான். இலக்கிய சனாதனிகளுக்குத் தங்கள் சாதனையே எல்லாம் என்ற இறுமாப்பு இருப்பதால் பூனைக்கண் திறக்காமல் போகிறது.
இப்படியான ஒரு சூழலின் பின்னணியில் இனி நாம், தமிழக-ஈழ எழுத்துகளை வைத்துப் பார்க்க வேண்டும். மிகப் பிந்திய அகில உலகப் போக்குகளோடு ஒப்பிடவேண்டும். குவலயமயமாக்கம் பற்றிப் பேசும் அறிஞர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத பிராந்தியம் (Region beyond representation) பற்றிக் கூறுவார்கள். தேச-அரசுகள் அதன் வணிக மையங்களை மையப்படுத்துவதால் (குடிசைவாசி நாய் மில்லினியர் படம் மும்பையை மையப்படுத்துவது எதேச்சையானதல்ல.) வேறுசில பிராந்தியங்கள் கவனிக்கப்படாது. இந்தியா பொருளாதார ரீதியாக ‘வளர்கிற’ அதே நேரத்தில் அதன் விவசாயிகள் தற்கொலை செய்வது இதனால்தான். விவசாயிகள் கவனிக்கப்படாத பிராந்தியங்களாவர். இந்த வளர்ச்சியுடன் எதிர்மறையாக இணைந்ததுதான் நக்ஸல் இயக்கமும். 
எனக்கு ஈழக்கவிதையின் தந்தை மஹாகவியின் நீண்ட கவிதையான ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், தமிழகப் புதுக்கவிதையின் பின்னணியில், முதலில் பிடிக்கவில்லை. ஆனால் அந்நாவலுக்கு நுஃமான் எழுதியுள்ள முன்னுரையையும் சண்முகம் சிவலிங்கம் எழுதியுள்ள பின்னுரையையும் படித்தபோது யோசிக்க வேண்டும் என்று தோன்றியது (என்றைக்கும் தமிழ் விமரிசனம் பாதுகாக்க வேண்டிய ஒரு கட்டுரையாக சண்முகம் சிவலிங்கத்தின் பின்னுரை அமையும் என்பது என் கணிப்பு.) தமிழகப் புதுக்கவிதை யாப்பு சார்ந்த சந்தத்தை முற்றாக இன்று ஒதுக்கியிருப்பதால் ஆரம்பக்கட்ட ஈழக் கவிஞர்கள் இன்றைய தமிழகக் கவிதை வாசகர்களை ஈர்க்க மாட்டார்கள். எனினும் சிவலிங்கத்தின் தற்கால காவியம் பற்றிய விளக்கமும் ‘கருத்து பிம்பம்’ பற்றிய கருத்துகளும் ஈழ தற்கால இலக்கியத்தின் ஆரம்பக்கட்டத்தைக் கவனிக்க வைக்கின்றன. ‘மேனாட்டாரின் தற்காலக்கருத்து பிம்பம்’ என்று இமேஜரியைச் சொல்கிறார் என்று கருதுகிறேன். இது மேனாட்டரின் இலக்கிய அம்சங்கள் பிராந்தியங்களில் பாய்வதை விளக்குகிறது.
மொத்தத்தில் இன்றைய அகில உலகத் தமிழர்களின் தோல்வி ஒரு பாடமாக அமைய வேண்டும். இந்த மொழியால் ஏற்பட்ட அனைத்துலக அடையாளம் குவலயமாதலின் பண்புகளை ஊன்றிக் கற்க வேண்டும். தமிழினத்தின் அடிமைத்தனமும் அதுபோல் அதன் வெற்றியும் பிற வல்லாதிக்க சக்திகளோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அந்த வல்லாதிக்கச் சக்திகள் சிங்கள இனத்தை ஆதரிக்க அதனிடம் ஒரு நாடு இருக்கிறது. நாடில்லாத தமிழர்கள் எப்படி தங்களை இனித் தகவமைத்துக் கொள்வது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். எரிந்த கட்சியாக புலிகளா, புலிகளில்லையா என்று பட்டிமன்ற பாணியில் சிந்திப்பதை விட்டுவிட வேண்டும்.
நன்றி - உயிரோசை
படங்கள் - யாழ்ப்பாணத்தின் கல்வி, முகாம்களாக தேசம்
11.5.09
ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா
காளைவிரட்டு வீரர் இஞ்ஞாசி சாஞ்செஸ் மெயாஸ் சாவுக்கு ஒப்பாரி
1. கொந்திய சாவு
மாலை மணி ஐந்து.
சட்டென வெண்போர்வை
கொணர்ந்தான் சிறுவன்.
கூடை எலுமிச்சையும் தயார்.
மாலை மணி ஐந்து.
மீதம் சாவு
சாவு மட்டுமென
மாலை மணி ஐந்து.
காற்றில் அகலும் பஞ்சும்
ஸ்படிகம் நிக்கல்
உலோகமென மேலும்
சிதறிடும் ஆக்ஸைடும்.
புறாவுடன் சிறுத்தை பொருத,
விரக்தியின் கொம்பாய்த்
தொடையும் வர,
கித்தாரின் கீழ்க்கம்பி இசைக்க,
அர்ஸெனிக் மணியுடன்
புகையும் கலக்க
மாலை மணி ஐந்து.
மூலை பலதில்
குழுக்கள் மௌனம் காக்க,
நெஞ்சம் நிமிர்த்தி்ய
காளை மட்டும் சுற்ற,
பனியின் வியர்வை வர,
களத்தில் அயோடின் மணக்க,
காயத்தில்
சாவும் முட்டையிட
மாலை மணி ஐந்து.
சக்கரப்படுக்கையில்
இவன் சவப்பெட்டி தயாரென,
எலும்பும் பலகுழலு மிசைக்க,
நெற்றியூடே காளையும்
துளைத்துச்செல்ல
மாலை மணி ஐந்து.
வலியில் அறையும்
பல்நிறமாய் மிளிர,
தூரத்தே அழுகும் விரணம்
பச்சை அரையின் ஊடே
பாலை-லில்லியாய் இனி வர,
காயம் பலவும்
ஒளிஞாயிறாய் எரிய
மாலை மணி ஐந்து.
கடிகாரங்கள் யாவிலும்
விதியாய்
மாலை மணி ஐந்து.
மாலை மணி ஐந்தின்
நிழல்.
2. சிந்திய குருதி
காணேன்!
மணலில்
இஞ்ஞாசியின் குருதி
காண விழையேன்
நிலவை
நீ
வரச்சொல்.
அதைக் காணேன்!
நன்கு திறந்த நிலவு.
நின்ற மேகம் பலதின்
குதிரை.
கனவு பலதின்
காளை பொருதரங்கும்
ஆற்றுப்பாலைமர
இடைச்சுவருடன்.
இதைக் காணேன்!
என் நினைவும்
மீளட்டும்,
நுண்வெண்மை
இத்தனை கொண்ட
முல்லை மலரை
நீ
வெதுவெதுப்பாக்கு!
இதைக் காணேன்!
பழம் உலகின் பசு
தன் சோக நாக்கை
மணற்சிந்திய
மூக்கிலான குருதியை
நக்க,
பகுதி சாவும்
பகுதி கல்லுமாய்
கிஸாண்டோவின் காளை பல
இரு நூற்றாண்டெனக்
கனைக்கும்
புவியை இழையாக்குவதில்
தெவிட்டி.
வேண்டாம்.
இதையும் காணேன்!
தன் தோளில் சாவையும்
ஏந்திப் படியேறும்
இஞ்ஞாசி.
இவன் விழைந்த
அதிகாலையும்
இல்லை இனி.
வீரப்புகழ் தேடுமவன்
கனவும் தன்னை வெருட்ட
அழகுடல் விழையுமவன்
எதிர்கொள்வதும் குருதி!
கேட்காதே.
இதைக் காணேன்.
அடுத்தடுத்து வலுக்குறைய
குருதி பீறிடக் கேட்கிலேன்.
அரங்கப் படியிருக்கையும்
ஒளிர வைத்து
என்னை அருகில் வா
என்று கதறிக் குரலெழுப்பும்
தாகமுற்ற திரள்தன்
பட்டுத்துணியும் தோல்வாரும்
தாண்டிச் சிந்தும்
குருதி பீறிடக் கேட்கிலேன்.
வேண்டாம்.
இதைக் காணேன்.
கொம்பும் அருகில் வர
மூடவில்லை இவன் கண்ணும்.
பயமுற்ற தாய்மாரோ
தம் தலை தூக்க,
பண்ணை பல தாண்டி
காற்றாய் ரகசியக்குரல் பல
விண்காளை பல நோக்கி எழும்.
வெளிறி மூடிய பனியில்
மேய்ப்போர் இவர்.
ஸெவில் இளவரசனாய்
இவனொப்ப
யாருமில்லை.
இவன் வாளொப்ப,
நிஜமாய்
இவன் இதயமொப்ப
வேறில்லை.
சிங்கம் பல நீந்தும்
ஆறுபோல்
இவன்
பொலிவும் வலிவும்.
பளிங்குச்சிலையாய்
இவன் எடுத்த
நடுநிலையும்.
அந்துலேசியப்பரப்பில்
ரோமாபுரிக்காற்று வருடும்
தலையுடையான்.
அறிவில், நுட்பத்தில்
செம்பஞ்சாய்ப் புன்னகைப்பான்.
வேல்வீச்சில் வலிவுடையான்.
தெண்பனியில் மெல்லியல்பான்.
பொருதரங்கில் பெருவீரன்.
விளைநிலத்தின் தோழன்.
விழாவில் ஒளிர்பவன்.
இருளின் இறுதியெனும்
வேல்வீச்சில் வெல்வான்! 
ஆனால் இப்போதோ
முடிவற்று உறங்கும்
இவன் கபால மலர் திறக்கும்
பாசியும் புல்லும்
தம் நிச்சய விரல் கொண்டு.
இவன் குருதி பாயும்
சதுப்புநிலம் புல்வெளியென
வழி நெடுகப் பாடி
உறைகொம்பின் ஊடே வழுக்கி
ஆன்மாவின்றிப் பனியில் நடுங்கி
ஆயிரம் குளம்பும் தடுக்கி
கறுத்த நீள்சோக நாக்காய் நீண்டு
கடுந்துயர்க் குளம் அமைக்கும்
விண்மீன் பல ஒளிரும்
குடால்குவிவர் ஆற்றின் அருகில்.
ஓ, ஸ்பெயினின் வெண்சுவரே!
துயரின் கரும்காளையே!
இவனின் கடும்குருதியே!
நாளத்தின் வானம்பாடியே!
வேண்டாம்.
இதைக் காணேன்.
பூசைப்பாத்திரம் எதிலும் அடங்காமல்
மிடக்கெதிலும் விழுங்கப்பெறாமல்
உறையொளி எதிலும் குளிராமல்
பாட்டென்றி
வெண்-அல்லிதம் வெள்ளமின்றி
வெண் ஆடியேதும்
வெள்ளியில் மூட முடியாமல்
பாயும் இவன் குருதி.
வேண்டாம்!
இதைக் காணேன்.
3. கிடத்திய உடல்
வளைநீரும் உறையூசியுமன்றிக்
கனவும் துயருறும் நெற்றியே கல்.
கண்ணீர் வளைவால் கிரகம்பிறி்தால் வந்த
மரத்தால் காலம் தாங்கும் தோளே கல்.
அலையும் நோக்கிப் பாயும் வெளிர்நீர்
தம் மெல்லிய புதிராய்க் கரமும் நீட்டும்
கிடக்கும் கல்லில் விழாமல் தவிர்க்கும்
குருதியும் படாமல் கரமும் விரிக்கும்.
விதையும் முகிலும்
எலும்புக்கூட்டில்
வானம்பாடியும்
பிறைநிழல் காணும்
இரவில் ஓநாயும்
சேர்க்கும் கல்லோ
ஒலியும் பளிங்கும்
தீயும் தராமல்
தருமோ தருமோ
சுவரில்லா அரங்கம்
காளையுடன்
பொருதப் பொருத.
யாவும் முடிய,
கல்மீது கிடப்பான்
நற்பிறப்பாம் இஞ்ஞாசி.
சாவும்
வெளிர் கந்தகம்
முகத்தில் பூசக்காண்!
மினோட்டார் கருவிலங்கை
தலையில் வைக்கக்காண்!
யாவும் முடிய,
வாய் நுழையும்
மழை.
வீழ்ந்த மார்பினில்
விலகும்
பித்தங்கொண்ட காற்று.
உச்சியில் வெதுவெதுக்கும்
பனியின் கண்ணீர்
கழுவிய காதல்.
இவை கூறுவதும் யாது?
இங்கே
துர்நாற்ற மௌனம்
கவியக் கிடந்து
மெலிதாய் மறையும்
இவனுடலின்
வானம்பாடிய வடிவத்தூயதை
ஆழம்காணாத் துளையும்
நிரப்பக் காண்போம்.
முகத்துணி இடுவதும் யார்?
நிஜமல்ல இவர் கூற்றும்.
யாரும்
இங்கே பாடார்.
மூலையமர்ந்து அழார்.
போர்முள் பிடுங்கார்.
படநாகமும் பயமுறுத்தார்.
காத்திருக்கும் வாய்ப்பின்றி
இவனுடல்
காண
வேண்டும் கண்ணிரண்டும்.
வேண்டாம் வேறேதும்.
கறார்க்குரலார் எங்கே?
காண வேண்டும்.
குதிரையடக்கி
ஆறும் ஒடுக்குவோர் எங்கே?
காண வேண்டும்.
ஞாயிறும் எரிகல்லும் கொண்ட
வாயால் இசைக்கும்
எலும்புக்கூட்டாரையும்
காண வேண்டும்.
கல்முன்னே
நரம்புநாளமும் அறுந்த
இவனுடல் முன்னே
காண வேண்டும்
இவரைக் கண்டு
சாவு கழற்றியிட்ட
இத்தலைவனுக்கு
வழி யாதென்று
கேட்கவும் வேண்டும்.
இனிதே மூடுபனியும்
ஆழ்கரையும் கொண்ட
ஆறுபோல் ஒப்பாரியும்
காட்டட்டும் இவரெனக்கு.
ஆங்கே
காளையின் இருமூச்சும்
கேளாமல் தனையிழக்க
எடுத்தும் செல்வேன்
இஞ்ஞாசியின் உடலை.
இளமைப்பருவமதில்
சோகம் மௌனமும்
காட்டிய காளையெனும்
வட்ட நிலவொன்றின்
காளைப் பொருதரங்கில்
கேளாமல் தனையிழக்க
எடுத்தும் செல்வேன்
இஞ்ஞாசியின் உடல்.
மீன்பாடல் நிறையாத
இரவுப்பொழுதெனில்
உறைபுகை வெண்புதரில்
கேளாமல் தனையிழக்க
எடுத்தும் செல்வேன்
இஞ்ஞாசியின் உடல்.
கைக்குட்டை வைத்தும் யான்
மறைக்கிலேன் இவன் முகம்.
தன் உறக்கத்தில்
கடலும் சாகும்!
இஞ்ஞாசி!
நீ விழைந்தெடுத்த சாவில்
நீ பழகப்போகாயோ!
வன் சூட்டுறக்கம் உணருமுன்னே
நீ உறங்காயோ, பறக்காயோ!
4. அற்ற ஆன்மா
எந்நாளும் செத்தாய் நீ.
காளையும் ஃபிக் மரமும்
இல்லத்தில் செல்லெறும்பும்
குழவியும் மதியமும்
குதிரையும் யாருமறியார்
எந்நாளும் செத்தாய் நீ.
கல்லான தோளறியார்
எந்நாளும் செத்தாய் நீ.
கறுப்புப்பட்டு தானறியார்
மூடிவிட்ட இடத்தில் நீ.
நினைவின் மௌனமறியார்
எந்நாளும் செத்தாய் நீ.
சிறுவெண் நத்தையுடன்
பனிமூட்டத் திராட்சையுடன்
கூட்டாய்ப் பன்மலையுடன்
இலையுதிரும் காலத்தினும்
யாருமுன் கண்நோக்கார்
எந்நாளும் செத்தாய் நீ.
செத்தோர் புவியின் யாவர்
உயிர்போய்க் குவியும் நாயென
செத்தும் யாம் மறந்தோர்
எந்நாளும் செத்தாய் நீ.
யாருமறியார் எனினும்
வருங்காலம் கண்டேனென்
பாட்டுடைத்தலைவன் நீ.
பாடுவேன் எந்நாளும்
உன் புகழும் உன் அருளும்
அறிவுனதும் பெருமுதிர்வும்
சாவென்ப உன் பசியும்
வாயென்ப அதன் சுவையும்
ஒருகாலம் நீ பயின்ற
வீரநடையின் சோகமும்.
இத்தனையும் நிஜமாய்
சாகசத்தில் வளமாய்
உன்னையும் போலுமோர்
அந்துலேசியன் பிறக்கவும்
இனியுண்டு எக்காலம்.
முணங்கும் சொல்கொண்டு
இவனிசையும் பாடுவேன்
ஒலிவ மரம்பல ஊடே
துயர்காற்றும் நினைவெனதாய்.
- Federico Garcia-Lorca, Llanto por Ignacio Sanchez Mejias.
ஸ்பானிஷ் மொழியிலிருந்து தமிழாக்கம் - நாகார்ஜுனன்,
பாப்லோ பிக்காஸ்ஸோவின் காளைவிரட்டுப் படங்களுடன்.
ஸ்பானிஷ் செம்புலத்தில் உறங்கும் கவிஞர் - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா பற்றி
அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
10.5.09
எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
இன்று மே மாதம் பத்தாம் நாள் பாரீஸ் நகரில் அமரர் உயிர்நிழல் கலைச்செல்வன் அவர்களின் நினைவு நாளை ஒட்டிய நிகழ்வில் இடம்பெறும் என் கட்டுரை.
அன்புமிக்க நண்பர்களுக்கு,
வணக்கம். புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் சார்பில் தீவிரமாக இயங்கிய அமரர் கலைச்செல்வனின் நான்காம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி நீங்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். மனிதகுல வரலாற்றில் அறிஞர்களும் வெகுமக்களும் இணையும் விடுதலைக்கான சந்தர்ப்பங்கள் வெகு அரிதாகவே நடப்பவை. இரண்டு நூற்றாண்டுகளுக்கும் முந்தைய ஒரு காலகட்டத்தில் இப்படி அறிஞர்களும் வெகுமக்களும் இணைந்திருக்கிறார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் ஆகிய முழக்கங்களை முன்வைத்து மனிதகுல வரலாற்றில் பெரும் மாற்றத்துக்கு அடிகோலியிருக்கிறார்கள். தன் புதல்வர்களின் குருதியையும் இப்படி வரலாற்றில் படியவிட்ட நகரமான பாரீஸில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள்.
ஆனால், நானோ, இந்தக்கூட்டத்தில் நேரே வந்து உரையாற்ற முடியாத நிலையில் இருக்கிறேன். காரணம், என்னுடையது இந்தியக் கடவுச்சீட்டு. நான் வசிக்கும் லண்டனிலிருந்து கடல்தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்கு வரவேண்டுமென்றால் அதற்கு ஒருமாதம் முன்பிலிருந்தே திட்டமிட்டுச் செயல்பட்டாக வேண்டும். அப்போதுதான் எனக்கு நுழைவு அனுமதி கிட்டும். அது உடனே சாத்தியமற்ற நிலையில் - நான் உங்களிடையே வர இயலாத நிலையில் - இப்போது தமிழ்-எழுத்தாக மாத்திரம் உங்களைச் சந்திக்கிறேன்.
ஒருவேளை இந்தக்கூட்டத்துக்கு நான் வர முடிந்திருந்தாலும் நீங்கள் அனைவரும் பேசுவதைக் கேட்கும் நிலையில் இதோ இந்த அரங்கின் இறுதிவரிசையில் அமர்ந்து, அடையாளம் ஏதுமில்லாமல் காணாமல் போவதையே விரும்பியிருப்பேன். இன்று துயர் சூழ்ந்திருக்கிற நேரத்தில் நீங்கள் யாவரும் நிறையப் பேச வேண்டும், அதை என்னைப் போன்றவர்கள் அமர்ந்து கேட்க வேண்டும். அப்படித் தொடர்ந்து செய்ய இயலவில்லையென்றால் நாமிரு தரப்பும் சரி, நம்மை ஒத்தவர்களும் சரி, நம்முடன் தொடர்பு கொண்டவரான தமிழ்பேசும் மக்களின் துயர நிலையை மனத்தில் இருத்தி முதலில் ஓங்கி அழ வேண்டும் என்றே தோன்றுகிறது. தமிழ்பேசும் மக்களின் நிலையில், அகத்திலும் சரி, புறத்திலும் சரி, இவர்கள் உயிராற்றல் முடக்கப்பெற்றும் கொலையையும் தற்கொலையையும் எதிர்கொண்டும் நிற்கிறார்கள். நம்முடைய கனவுகள் யாவையும் தாண்டி இந்தக் கொலையும் தற்கொலையும் நம்முடைய எதிர்-கனவுகளாக நனவாகிக் கொண்டிருக்கும் காலத்தில்தான் இன்று நாம் சந்திக்கிறோம்.
தென்னகத்தோர் என்ற வகையில் கடல்கோள் என்ற இயற்கையின் சீற்றமென்பது நமக்குப் புதிதா? புதிதல்ல. ஓராயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை என வந்தாலும் நம் கூட்டுநினைவில் தொன்மமாகத் தங்கிவிட்ட ஒன்று, கடலின் சீற்றம். இன்றுள்ள சித்திரை நிலவும் எத்தனையோ காலத்துக்கு முன்பாக முழுதாக எழுந்தபோது, மருத-நெய்தல் புலத்தில் வாழ்ந்த மக்கள் மழை வேண்டித் தனக்கு விழா எடுக்காமல் இருந்தார்களே எனச் சீற்றங்கொண்டு தாக்கினான் இந்திரன் என்பது, ஒரு தொன்மம். அதேபோல, போர் என்ற வரலாற்றின் பித்தமும் அதன் வழி தோன்றும் புலக்குலைவும்கூட பலருக்கும் புதிதல்ல. உங்களுக்கு மாத்திரமல்ல, ஈழம் என்ற இலங்கைத்தீவுக்கும் அங்கு வாழும் மக்கட்தொகுதிகளுக்கும் இவை புதிதல்ல. ஏன், தமிழ், சிங்கள, இஸ்லாமிய, இன்னபிற சமுதாயத்தினர் யாவர்க்குமே இவை புதிதல்ல.
இருந்தாலும் இந்தப் புதிய நூற்றாண்டில், இயற்கையின் சீற்றமும் போரெனும் பித்தமும் மீண்டும் நம்மைப் புதிதாகத் தாக்கியிருக்கின்றன. நான்காண்டுக்கும் முன்பு நத்தார் நாள் கழிந்த நிலவற்ற இரவில் கீழ்த்திசை எரிமலையும் வெடித்துச் சீறிய கடலில், அந்த இழப்பில், ஒன்றானோம். அந்தத் தாக்குதல் கழிய, போரென்னும் பித்தமோ இன்னும் நம்மைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. ஆக, சாவின் முந்தைய சகாப்தங்களிலிருந்து ஏதும் கற்காத நிலை நமக்குத் தோன்றியிருக்கிறது. சாவு என்ற கொடூரமான சடங்கில் மீண்டும் அழியும் நிலையில், நம் மக்களின் வாழ்வையும் சாவையும் யார்யாரோ தீர்மானிக்கும் அவல நிலையில் - இன்று தற்கால நிகழ்வுகளை வரலாற்றின் நிழலில் வைத்து ஆராய்கிற மோசமான, சோகமான செயலில் ஈடுபடும் அவல நிலையில் - நின்றுகொண்டிருக்கிறோம்.
சென்ற இருபதாம் நூற்றாண்டு என்பதன் அதீதத்தன்மை என்ன? அது, முன்னெப்போதையும் விட, உலகுதழுவும்-பொருட்கள் (objets du monde) பலதை - குறிப்பிட்ட சில பண்புகளுடன் - புதிதாக உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது. சென்ற நூற்றாண்டை அப்படித்தான் ஃப்ரெஞ்சு அறிஞர் மிஷெல் ஸெர் (Michel Serres) காண்கிறார். குறிப்பாக வேகத்துக்காக ஏவுகணையும் செய்மதியும், அழிவுக்கென அணுகுண்டு போன்றவையும், விரியும் வெளிக்காக இணையமும், அழிவான வருங்காலத்துக்கு என அணுக்கழிவும் என்று இந்த உலகுதழுவிய-பொருட்கள் பலதை முன்வைத்துக் காட்டுகிறார் மிஷெல் ஸெர். இவற்றுடன் இன்னொரு பொருளையும் குறிப்பிட்டுக் கூறுகிறார். அது, குறிப்பிட்ட சிந்தனை என்ற பொருள் - அப்படியே தொடரும் பொருள். ஆக, சென்ற நூற்றாண்டின் புதுப்பொருட்கள் பலவும் புதிய உலகுதழுவும் பண்புகளைக் கொண்டிருக்கையில், சிந்தனை என்ற பொருள் மாத்திரம் உலகுதழுவும் நிலையிருந்தாலும் அதற்கு முந்தைய காலகட்டத்தையே சார்ந்திருக்கிறது, அதாவது பண்டைய பகுதிசார்ந்த தத்துவங்களின் வரையறையில் அமைந்தே தொடர்கிறது என்கிறார் மிஷெல் ஸெர்.
குறிப்பாக, உயிரையும் சாவையும் பிரிக்க விழையும் இந்தச்சிந்தனை அதில் வெற்றி கண்டிருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இன்று நம்முடைய உயிர்மீதான உரிமை நமக்கிருக்க வேண்டும், சாவு மீதான அதிகாரம் அரசுக்கும் ஆயுதம் தாங்கிப் போராடும் இயக்கங்களுக்கும் இருக்கிறது என்ற பழக்கத்தில் நாம் சிந்திக்கிறோம். இந்தச் சிந்தனையை சற்றே மாற்றி, கேள்வியையும் பதிலையும் புதிதாகப் போடலாம். அதாவது, உயிர்மீதான அதிகாரம் என்பது யாருக்கு? சாவு மீதான உரிமை என்பது யாருக்கு? என்று இந்தக் கேள்வியை மாற்றிப் போட்டுப் பார்க்கலாம். 
ஃப்ரெஞ்சுப்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில், இந்த உயிர்மீதான அதிகாரமும் சாவு மீதான உரிமையும் இருந்தது அரசனுக்கே எனறு தெளிவாகச் சொல்லிவிடலாம். அதாவது குடிமக்களின் உயிர்மீதான அதிகாரமும் சாவைக் கோருகிற உரிமையும் அரசனுடையவையாக இருந்தன. ஃப்ரெஞ்சுப் புரட்சி கொணர்ந்த அந்த மாற்றத்தின்படி, அரசன் என்பவன் கொலை செய்யப்பெற்றான், வரலாற்றுக்குப் பலியாகி வரலாற்றிலிருந்தே துடைத்தழிக்கப்பட்டான். மனித உரிமைகள், குடிமக்களின் உரிமைகள் (Les droits de l'homme et du citoyen) என்பன வரையறுக்கப்பட்டன. அரசனுக்கு முன்பிருந்த உயிர்மீதான அதிகாரம் என்பது, மனிதனின் இயல்பான உரிமையாக, குடிமக்களின் உயிர்வாழும் உரிமையாக மாறியது, அரசன் முன்பு வைத்திருந்த சாவைக்கோரும் உரிமை என்பது உருமாறி, நவீன அரசு என்பது தோன்றியது. அது, தன்னுடைய குடிமக்கள் உயிர்வாழ்வதற்கு வேண்டி பிறரைக் கொல்வதற்கான ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் உரிமையைத் தனக்கு வழங்கிக்கொண்டது. இதுதான் நவீன தேச அரசின் தோற்ற அலகுகள் தொடர்பான அடிப்படை-முரண்பாட்டின் முக்கிய அலகு. இந்த முரண்பாட்டு-அலகின் அடிப்படையாக இயங்குவதை, ஒருவித மறைமுக அணி (a hidden matrix) எனலாம். இதைத்தான் மிஷெல் ஃபூக்கோ (Michel Foucault), ஜியோர்ஜியோ அகம்பென் (Giorgio Agamben) போன்ற முக்கிய அறிஞர்கள், தம்முடைய ஆய்வுகளில், விளக்கி எழுதுகிறார்கள்.
நாம் மேலே கண்ட விடுதலை என்ற சந்தர்ப்பம், அதற்கான உணர்வு, வரலாறு ஆகியவையும் இவற்றின் பாற்பட்டவையே. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் அன்றி, இதே சிந்தனைதான் இன்றும் அரசியல் அரங்கில் இன்றும் தொடர்கிறது, இது போதாது என்பதே மிஷெல் ஸெர் முன்வைக்கும் வாதம். இதற்கான உக்கிர நிகழ்வுகளாக சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் பிற கண்டங்களிலும் நடந்தேறிய போர்களும் அழிவுகளும் ஏன் புரட்சிகளும் கூட நம்முன் நிற்கின்றன. இவற்றின் அழியாச்சுவடுகளாக இன-அழிப்பின், புலக்குலைவின் மற்றும் வதைமுகாம்களின் வரலாறுகள் நம் கண்முன் புலமாக விரிந்துகொண்டேயிருக்கின்றன. இரண்டு உலகப்போர்கள் தவிர பால்கன் வட்டகையில் பத்தாண்டுகள் முன்பு நடந்துமுடிந்த போர்களையும் சேர்த்துத்தான் இங்கே கூறுகிறேன்.
இந்தப் பிரச்னையை சற்றே விரிவாகப் பார்க்கலாம்: தேசம் அல்லது நாடு என்பதற்கான நேரடியாகத் தெரியும் அலகுகள் யாவை? Nation என்ற சொல்லுக்கான வினையின் வேரைத் தேடினால், nascere என்ற லத்தீன் சொல்லை அடைகிறோம். அதாவது பிறத்தல் என்ற வினை. (ஏசுநாதர் அவதரித்த கிறிஸ்துமஸ் நாளை நத்தார் திருநாள் என்று அழைப்பதிலும் இந்த வினை தொக்கி நிற்கிறது). ஆக, பிறப்பு, வழங்கும் மொழி அல்லது வழக்குகள்-வெளிப்பாடுகள், வாழும் புலம் ஆகியவற்றை வரையறுக்கும் ஒழுங்குதான் இது. இந்த ஒழுங்கு குறிப்பிட்ட ஒரு புலம் சார்ந்த மனிதர்களுக்கான - அதாவது தன் குடிமக்களுக்கான - உயிர்வாழும் உரிமையை உறுதிசெய்ய வேண்டும், அதற்காக தானற்ற பிறரைக் கொல்வதற்கான அதிகாரத்தை, ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் உரிமையைக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் பிரிக்க முடியாமல் வைத்திருப்பதுதான், இந்த நவீன தேச-அரசு என்பதை உணரவேண்டும்.
அதாவது, குறிப்பிட்ட புலம் என்ற தீர்மானமான வரையறுப்புக்கும் அரசு என்ற தீர்மானமான ஒழுங்குக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் இயங்குவது நவீன தேச-அரசு. இந்த தேச-அரசு என்பது, தான் தோன்றிய காலகட்டத்திலிருந்து ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே, இப்படியான ஒரு நிரந்தரமான நெருக்கடியைச் சந்திக்கிறது என்கிறார் ஜோர்ஜியோ அகம்பென் என்ற அறிஞர். இதை இவர் ஓர் அசாதாரண-அரசுநிலை (State of Exception) என்கிறார். அதாவது, உயிர்வாழ்தல் என்பதன் முகாமைத்துவத்தை அரசே தன் நேரடிப்பணியாக எடுக்கும் நிலையில், அரசானது தான் வைத்திருக்கும் அசாதாரணக்கால அதிகாரங்களை இயல்பானவையாக மாற்றுவதே இது. அப்போது, பிறத்தல், வழங்கும் மொழி அல்லது வழக்குகள்-வெளிப்பாடுகள், வாழும் புலம் ஆகிய மூன்று அலகுகளைத் தாண்டி இன்னோர் அலகும் இங்கே மறைமுகமாகத் தோன்றிவிடுகிறது: அதுதான் முகாம் என்ற களம் என்கிறார் ஜோர்ஜியோ அகம்பென். அதாவது நவீன தேசிய-அரசு என்பதன் நான்காம் அலகாக இயங்குவதே இந்த முகாம்; இந்த முகாம்களின் வாழ்வோர்மீது கொடுமைகள் நடப்பதற்கான அரசியல்-நீதிபரிபாலன அடிப்படையை அரசு என்பது இப்படித்தான் எழுப்புகிறது. அதாவது, இவர்கள் அம்மண-உயிர்நிலையில் இருப்பவர்கள் என்கிறார் அகம்பென் (அகம்பெனின் nuda vita என்ற இத்தாலிய மொழிப் பிரயோகத்தை அம்மண-உயிர்நிலை என்றே இங்கே தமிழாக்குகிறேன்). இவர்களுக்கு வெற்று மனிதாபிமானம் தவிர வேறேதும் கிட்டாத நிலை தோன்றுகிறது, இவர்கள் மீது கொடுமை நடப்பதும் நடக்காததும் ஆங்காங்கே உள்ள அதிகாரிகளைப் பொறுத்தது, ஆனால் பிரச்னை மனிதாபிமானம் இருக்கிறதா, இல்லையா என்பதல்ல, மாறாக, உலகுதழுவிய புலங்குலைந்த களமாக முகாம் என்பது இயங்கிவருகிறது, இதுவே தேச-அரசு என்பதன் மறைமுக நான்காம் அலகு என்கிறார் அகம்பென்.
இலங்கைத்தீவில் தமிழ்மக்களின் ஒருகாலக்கனவாக முகிழ இருந்த விஷயம், இன்று எதிர்-கனவான முகாமாக, புலக்குலைவாக, உலகெங்குமுள்ள தமிழ்பேசும் மக்களின் அகக்குலைவாக மாறியிருக்கிறது என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதாவது நவீன தேசம் என்பது முகிழாப்பிறப்பு (birth which is arrested, la naissance (s)arrêtée). அதன் நான்காம் அலகாகிய அகதி-முகாம் என்பதாக, தடுப்பு-முகாம் என்பதாக, ராணுவ-முகாம் கையகப்படுத்தல் என்பதாக, இன்னும் பலதாக, தான் முகிழாமலேயே, பிறந்திருக்கிறது. இதைத்தான் இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் இன்னும் சில இடங்களிலும் காண்கிறோம். இதன் தீவிர வடிவம், தடுப்பு-முகாம். இந்த எதிர்கனவுக்கான வழி போர், போருக்கான வழி தற்கொலைச்சடங்கு அல்லது கொலைச்சடங்கு, இத்தகைய சடங்குக்கான வழி மறம், மறத்துக்கான வழி எதிர்ப்பக்கத்தின் கொடூர அழிப்பு அல்லது தன்பக்க அறப்பிறழ்வு என ஒரு நெடும்பாதையை, ஏன் நெடுஞ்சாலையையே இங்கே காண்கிறோம், இதில் யார்யார் எங்கெங்கே எந்தெந்த அளவில் எப்படியெப்படிப் பங்குபற்றினர் என்பதையே நீண்ட உரையாடலாகப் நம்மில் பலர் செய்துகொண்டேயிருக்கிறோம். குறிப்பாக, தமிழ்மக்களின் வாழ்வைக் காப்பாற்றுவதும் அவர்களின் சாவைக் கோருவதுமான உரிமை தமக்குத்தான் எனக் கூறும் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தார், இவற்றைச் சாத்தியப்படுத்த தற்கொலை மற்றும் கொலை இரண்டையும் நிகழ்த்தினார்கள் - அதாவது பழங்காலத்திலிருந்து தம்மையும் பிறரையும் பலி, தியாகமாகத் தொடரும் சடங்கான ஒன்றுடன் நவீனத்துவப் போர்முறையின் திடீர்த்தன்மையையும் கலந்து புதியதொரு சடங்காக்கம் ஒன்றை நிகழ்த்தினார்கள். எனவே அவர்களைச் சுற்றித்தான் அதிகம் பேசுகிறோம். ஆனால் அப்படிச் செய்துகொண்டேயிருப்பதன் மூலம் இந்த நெடும்பாதையில் எல்லை பற்றிய ஆய்வை இந்தத் தென்னாசிய அளவில் வைத்துக் காணத் தவறிவிடுகிறோம்.
இப்போது இந்தப்பிரச்னையைத் தென்னாசிய அளவில் விரித்து நோக்கலாம்: தென்னாசியப் புலங்களுக்கென பிரத்தியேக அலகுகள் சில உண்டு. எடுத்துக்காட்டாக, மொழியிலும் சமூகச்செயல்பாட்டிலும் தொடர்வது, பலதள வழக்கு அல்லது பலதள வெளிப்பாடு. தவிர, இன்னொரு பிரத்தியேக அலகு, இந்த முகிழாப்பிறப்புக்கான விரிந்த களம்.
எடுத்துக்காட்டாக, இந்தியா-பாகிஸ்தான் எனப் பிரிந்த காலத்தில் இதே களமுண்டு; அதாவது அறிஞர்களும் அரசியல்-சமூக ஆர்வலர்களும் பங்கேற்ற அரசியல்-நிர்ணய சபை என்ற மன்றம் பிரிவினைக்கு முன்பு அரசியல்-சட்டத்தை வரைந்துவிட்டது எனினும் பிரிவினைக்குப் பிறகே அதை அரசியல்-சட்டமாக ஏற்றது. அப்படி ஏற்ற சட்டத்தில் பிரிவினைக்காலத்தின் கொடூரங்கள் மற்றும் புலக்குலைவு பற்றிய அசாதாரண மௌனம் நிலவுவதைக் கவனிக்கலாம். அதேபோல தென்னாசிய அளவில் காலனியக்காலத்தில் நடந்தேறிய புலக்குலைவு பற்றியோ காலனிய-எதிர்ப்புப் போராட்டத்தின் போதான இழப்புக்கள் பற்றியோ அரசியல்-சட்டம் அசாதாரண மௌனத்தைக் கடைப்பிடிப்பதைக் கவனிக்கலாம். அரசியல் நிர்ணய-சபையின் விவாதங்களில் இவை ஓரளவு இடம்பெற்றிருக்கக்கூடும் என்றாலும் அதன் இறுதி வடிவத்தில் இதற்கான அறிகுறி இருப்பதில்லை. சொல்லப்போனால், இன்னும் நிறையப் பிரச்னைகளை எடுத்துக்காட்ட முடியும்: அன்றே அரசியல்-களத்தில் முக்கியத்துவம் பெற்ற தாழ்த்தப்பட்டோர், ஹரிஜன் (தலித்) போன்ற சொற்கள் காணப்படுவதில்லை. இந்தச்சொற்களுக்குப் பின்புலமான வரலாற்றை அரசியல் சட்ட வரைவுகள், கள-நீக்கம் செய்கின்றன - அதாவது, இவற்றை அரசியல் அரங்குக்கு மாத்திரமே உரித்தானவையாக ஆக்குகின்றன எனலாம். இப்படி நிறையச் சொல்லலாம்: இந்திய அரசியல்-சட்டத்துக்குப் பிறகு தோன்றிய வங்கதேசத்தின் அரசியல் சட்டத்திலும் இதே பிரச்னை நீடிக்கிறது. அந்த நாட்டை உருவாக்கிய போராட்டத்தை முன்னெடுத்த முக்கியத் தலைவரின் படுகொலையை விசாரிப்பதற்கான இடம் கூட அங்கே இல்லை... பாகிஸ்தானில் இதேபோல நிறைய பிரச்னைகள்... நேபாளத்தில் அரசியல்-சட்டமே எழுத இயலாத நிலை தொடர்வதைக் கவனிக்க வேண்டும். இன்றுவரை இந்த மௌனத்தின் விளைவுகளே அரசியலில் பங்காற்றி வருகின்றன.
இதையெல்லாம் இங்கே ஏன் கூறவேண்டும்? தேச-அரசு என்பதன் முகிழாப்பிறப்புகான அலகுகள் என்பது இலங்கைத்தீவுக்கோ, ஈழத்துக்கோ மாத்திரம் பிரத்தியேகமானவையல்ல. தென்னாசியப்பரப்பில் வசிக்கும் பல்வேறு மொழிபேசும் மக்கட்தொகுதிகள் தம்முடைய கூட்டு வரலாற்றை மாற்றி எழுத முற்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது நடக்கத்தான் செய்கிறது என்பதைச் சுட்டத்தான் இதைக் கூறுகிறேன். அதாவது, இவை யாவற்றுக்கும் இந்த எதிர்-கனவாக்கமும் முகிழாப்பிறப்பும் சாத்தியப்பாடுகள்தாம். அடிக்கடி தலைமைத்துவம் பிறரைப் பலியெடுப்பதும் அல்லது அதனைப் பிறர் பலிகொடுக்கும் சடங்காக்கத்தை நிகழ்த்துவதும் இதே முகிழாப்பிறப்பின் அறிகுறிகள்தாம்.
இன்று எதிர்-கனவாம் துயர் நம்மைச் சூழும் இந்நேரத்தில் என்னதான் நடக்கிறது? இந்துமாக்கடலின் ஊடாக நடக்கும் புவிசார்-வர்த்தக அரசியலில் பங்கேற்கும் வல்லரசுகள், அதேவேளை அங்கே நேரடியாக மோத விழையாத, மோத முடியாத நிலையில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும், இலங்கை அரசில் தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி வருகின்றன. இதில் நிதியுதவி, ராணுவ உதவி, தளவாட உதவி யாவும் அடக்கம். இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா, அமெரிக்கா, மேற்குலக நாடுகள், பன்னாட்டு நிதி அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் உதவி இருப்பதாகவே கூறலாம்.
இந்த நிலையில், தமிழ்மக்களின் உயிர்மீதான அதிகாரத்தை, இவர்களின் வாழ்வையும் சாவையும் ஒருங்கே தீர்மானிக்கும் உரிமையில் தனக்கிருந்த பங்கை, இன்று இலங்கை அரசு முற்றான ஒன்றாக (absolute) மாற்றும் நிலையை எய்திவிட்டிருக்கிறது. வன்னிப்பகுதியில் இயங்கும் முகாம்கள் தவிர, யாழ்குடாநாட்டின் திறந்தவெளி சிறைச்சாலைகள், கிழக்கு மாகாணத்தில் கடத்தல்கள்-கொலைகள், கொழும்பு நகரக் கெடுபிடிகள் என இந்த அதிகாரத்தையும் உரிமையையும் பலவாறாக வகைப்படுத்த முடியும். இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, இந்திய அரசின் பங்கு. கடந்த கால்நூற்றாண்டாகத் தமிழ்மக்கள் அனுபவித்துவரும் சோகம் இந்திய அரசுக்கும் அரசியல் அரங்குக்கும் பெரும் பொருட்டல்ல, இந்த மக்களின் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கவல்ல சக்தியென்பது, அறுதியாக, இலங்கை அரசு மாத்திரமே என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதியாகக் காட்டியிருக்கிறது இந்திய அரசு. அதாவது, இலங்கை அரச-அமைப்புடன் எதிர்காலச்சமன்பாட்டுக்கு வரவல்ல சக்திகள் மாத்திரமே இந்தப்பிராந்தியத்தில் நிலவ முடியும் என்பது இந்திய நிலைப்பாட்டின், ராணுவ உதவியின் ஆழமான அடிப்படை. 
ஆக, தான் எத்தனை மனிதாபிமான உதவிகளைச் செய்தாலும் சரி, இலங்கை அரசுக்குத் தான் அளித்துவந்துள்ள கதுவிகள் (ராடார்கள்), கடற்படைக் கண்காணிப்பு, விமானிகளுக்குப் பயிற்சி உள்ளிட்ட எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கும் இந்திய அரசு இவற்றையெல்லாம் இனியும் மறுத்துக்கொண்டிருக்க முடியாது. அதேவேளை இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையைக் குலைத்து மாற்றும் சக்தி தமிழ்நாட்டின் அரசியல் அமைப்புக்கு இருந்திருக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் பிரச்னைகளென்ன, கடந்த கால்நூற்றாண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் ஐநூறு பேர் வரை இலங்கைக் கப்பற்பட்டையின் தாக்குதல்களுக்கு ஆளாகி உயிர்விட்டிருப்பதைக்கூட முன்வைத்து இந்திய அரசின் உத்திகளை மாற்ற முடியாத நிலையில் இருந்துவருகிறது, தமிழ்நாட்டின் அரசியல்-அமைப்பு.
இந்த நிலையில் இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டின் மீதான தமிழ்நாட்டு மக்களின் தற்போதைய சீற்றத்தையெல்லாம் போராட்டங்கள், தேர்தல்-முறை, ஆட்சி மாற்றம் என்று சடங்காக்கம் செய்ய வேண்டிய இக்கட்டில்தான் தமிழ்நாட்டு அரசியலார் மற்றும் திரைத்துறையினர் சிக்கியிருக்கிறார்கள். அதாவது, இந்திய அரசின் வல்லரசு முஸ்தீபுகளுக்கான தண்டனையையும் பரிசையும் மாறிமாறிப் பெற வேண்டிய நிலையில் நிற்பது இவர்களுடைய அதிகாரத்தின் எல்லை எனலாம். ஆனால், இதன் விளைவாக, ஒருபுறம் இலங்கை அரசின் சாவு-எந்திரத்தின் தீவிரம் மட்டுப்படவில்லை, தமிழ்மக்களின் வாழ்வு மீதான அதன் அதிகாரமும் மட்டுப்படவில்லை.
ஆக, குண்டுகளின் சப்தம் இன்னும் ஓயவில்லை, ஒருக்கால் அது ஓயும்போது புலக்குலைவும் கண்காணிப்பின் தீவிரமும் குறையும் வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவுமில்லை என்று வருந்திக்கூறி உங்கள் சோகத்தில் பங்கேற்க என்னை அனுமதிக்குமாறு விழைகிறேன்.
நாகார்ஜுனன்
படங்கள்
ஃப்ரெஞ்சுப் புரட்சியாளர் ராபெஸ்பியருக்கு மரணதண்டனை
கொலை நிகழ்ந்த சித்திரையின் முழுநிலவு
கொலைப்புலமாம் முல்லைத்தீவின் கடற்கரை.
4.5.09
இன்றைய கொடூரத்திலிருந்து உருவாகும் தமிழ்-உண்மை - தமிழவன்
ஈழம் பற்றிய அக்கறை இந்தியத்தமிழர்களிடம் வெளிப்படும் முறை பல்வேறு சிந்தனைகளுக்கு இடமளிக்கின்றது. அதுபோலவே ஈழத்தமிழர்களின் மத்தியில் ஈழச்சிக்கல் வெளிப்படும் முறையையும் அவதானிக்க வேண்டும். இந்தியத்தமிழர்களைப் போல் ஆப்பிரிக்க நாட்டுத் தமிழர்கள், மலேசியா, சிங்கப்பூர்த் தமிழர்கள் காட்டும் எதிர்வினையையும் புறக்கணிக்கக்கூடாது. அவை தரும் செய்தி யாது என்று அறியவேண்டும்.
இந்த எதிர்வினைகள் - துக்கங்களாக, கையறு நிலையாக, புரியாத விஷயமாக, கோபமாக, தீக்குளிப்பாக, ஓட்டுவாங்கும் தந்திரமாக - இப்படிப் பல முறைகளில் அமைந்துள்ளன. கருணாநிதி, ராமதாஸ், பழ. நெடுமாறன், திருமாவளவன், கொளத்தூர் மணி, ஜெயலலிதா, வைகோ இவர்களின் வரலாற்றைத் தமிழர்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பை இவை ஏற்படுத்தின; ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.
அண்ணாதுரை வாழ்ந்த காலத்தில் அவர் செய்த காரியங்கள் மூலம் அவர் வரலாறு - சத்தியமான வரலாறு - எதிர்காலத்தில் எழுதப்படும்; உடனடியாக ஒரு நல்ல வரலாறு எழுதுவதற்கு - நடுநிலையுடன் குறைகளையும் நிறைகளையும் தராசில் நிறுத்துக்கூறுவதற்கு - தமிழக சமூகம் சம்மதிக்காத முதிர்ச்சியற்ற சமூகம் என்பது என் கருத்து. ஜீவானந்தம் பற்றி எழுதும் போது சுந்தர ராமசாமி, ஜீவாவுக்கு பெண் சபலம் உண்டு என்று எழுதியதை சமூகம் ஏற்கவில்லை. தன் புதல்வர்களை தர்ம/அதர்மத்துக்கு அப்பால் வைத்துப் பூஜிக்கும் புராதனத்தன்மையிலிருந்து நம் தமிழ்ச்சமூகம் இன்னும் மாறவில்லை; இது ஒரு வகை நடுகல் எழுப்பும் மனோபாவம்; நடுகல்லில் எழுதும் புகழ்மொழியே (Epitaph) வரலாறாகக் கருதப்படுகிறது. திருவள்ளுவரை, இரு ஏழைக்கீழ்குலத் தம்பதியர்களின் மகன் என்ற கூற்றைத் தமிழ்ச்சமூகம் ஏற்கவில்லை; பூணூல் போட்டு அவருக்கு உருவம் ஏற்படுத்தியது. தொல்காப்பியர் யார் என்று வரலாறு இல்லை. தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட (பிற்காலத்திய) பதிகத்தில் தொல்காப்பியரை வடநாட்டு மரபின் தொடர்ச்சி என்று பொய்யான நடுகல்மொழி எழுதப்படுகிறது.
மொத்தத்தில் வரலாறு பற்றிய சிந்தனை தமிழர்களுக்கு வேறானது என்பது உறுதி. மேற்கிலிருந்தோ, இஸ்லாமியக் கலாச்சாரத்திலிருந்தோ வந்த ‘வரலாறெழுதுதல்’ (Historiography) அல்ல நம்முடைய வரலாற்றுச் சிந்தனை. மேற்கத்தியர்களின் வரலாறு, காலத்தை ஒரு பிரவாகமாக, நீரோட்டமாகப் பார்க்கிறது. ஒரு புள்ளியிலோ, பல புள்ளிகளிலோ தோன்றி நிகழ்காலத்தை நோக்கி, காலம் பாய்கிறது என்ற கற்பனை இது. இதனை வரலாற்றுவாதத் (Historicism) தவறு என்பார்கள். ஹெகல் என்ற தத்துவவாதி மூலம் அகில உலக மார்க்சிய மரபில் இந்த வரலாற்றுச் சிந்தனை புகுந்தது.
தொல்காப்பியத்தின் அகத்திணையியல் என்ற பகுதி தமிழர்கள் அன்று கண்டுபிடித்த ‘காலம்’ பற்றிக் கூறுகிறது. ஒரு வருடத்தை ஆறு பெரும்பிரிவுகளாக அமைக்கிறது அச்சிந்தனை. அந்தக் காலம் இயற்கையோடு கலந்தது. மரம், செடி, விலங்கு, பூமி, மனிதர்கள் என்று பின்னிப் பிணைந்தது. தமிழகத்தில் மார்க்சிய வரலாற்று அறிஞர்கள் யாருமில்லை. கேரளத்தில், மகாராஷ்டிரத்தில், மேற்கு வங்காளத்தில் உண்டு. ஏன் வரலாற்றாசிரியர்கள் அனைத்துலக முறைகளுடன் தமிழில் தோன்றவில்லை? நான் கல்லூரியில் படித்த போது ‘வரலாறு’ ஒரு முக்கிய துறையாக இல்லை. இதற்கிடையில் ஒரு நீலகண்ட சாஸ்திரியைக் கூறுகிறார்கள். இவர் வடமொழி மரபில் வந்தவர் என்பதற்கு மேல் ஏதும் கூறமுடியுமா, தெரியவில்லை.
இன்று வரலாறு எழுதுதல் என்பது புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஈழப்பிரச்சினை வரலாற்றுத்துறைக்கு முக்கியமானது. வரலாற்றுத்துறையாளர்கள் இந்தப் பிரச்சினை பற்றி ஆய்வுகள் நிகழ்த்த வேண்டும்.
ஈழம் பற்றிய தமிழ்க்கலாச்சாரவாதிகளின் எதிர்வினை வெறும் அரசியல் எதிர்வினையாக மட்டும் அமையத் தேவையில்லை. அரசியல் நிகழ்ச்சிகள் கலாச்சாரத்தோடும் அதுபோலக் கலாச்சார நிகழ்வுகள் அரசியலோடும் தொடர்புடையனவாகும். அரசியல், ஈழத்தில் யுத்தத்தோடும், பெருவாரி மக்களின் தினசரி வாழ்நிலையோடும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களின் மண்ணோடுள்ள தொடர்பு, பலவந்தமாக நீக்கப்பட்டுள்ளது. இரும்புக்கம்பிகளுக்கிடையில் கட்டாந்தரையில் வாழ்வு மலஜல உபாதைகள் தீர்க்க முடியாத முறையில் சிங்களப் படையினரின் மேற்பார்வையில் நடத்தப்பெறுகிறது. மன்மோகன் சிங்குக்கு இது உறுத்தாது. சோனியா காந்திக்கும் உறுத்தாது. எங்கோ இருக்கின்ற பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளருக்கும் ஃப்ரான்ஸின் வெளிவிவகார அதிகாரிகளுக்கும் உறுத்தும் அளவு கூட வெளிவிவகாரத்துறைச் செயலர் சிவசங்கர மேனனுக்கோ பிரதமரின் ராணுவ ஆலோசகர் எம்.கே. நாராயணனுக்கோ உறுத்தவில்லை. இந்த மனிதர்களை ஆட்டிவைக்கும் சக்தி தமிழர்களுக்கு இல்லை என்றாகிவிட்டிருக்கிறது. தமிழர்களுக்கென மிக அதிகமான எண்ணிக்கையில் காபினெட் அமைச்சர்கள் இருந்து என்ன பயன்? 
பிரிட்டனுக்கு இது உறுத்தியதால் முகாம்களைப் பார்வையிட வேண்டும் என்கிறார், அதன் வெளிவிவகாரச் செயலர். முடியாதென்கிறார் ராஜபட்க்ஷ என்று ஏப்ரல் 30-ஆம் தேதி செய்தி வந்துள்ளது. இதைப் போலவே ஃப்ரான்ஸின் வெளிவிவகாரத்துறைக்கும் முடியாது என பதில் அளித்துள்ளார் ராஜபட்க்ஷ. ஆனால் சிவசங்கர மேனனையும் எம்.கே. நாராயணனையும் அனுப்பியவர்கள் முகாம்களைப் பார்த்துவிட்டு வா, என்று கூறவில்லை. அவ்வளவு அக்கறை அங்கு ஆடுமாடுகள் போல் அடைக்கப்பட்டிருக்கும் மக்கள்மீது.
இலங்கையில் இன்று முகாம் என்றும் நாடு என்றும் இரு பிரிவினைகள் ஏற்பட்டுள்ளன. தமிழர்களுக்கு முகாம் என்றும் சிங்களவர்களுக்கு நாடு என்றும் சங்கேதமாக பிரிவினை செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் ‘ஒழுங்காக’ வாழும் தமிழர்களுக்கு ‘நாடு’ கிடைக்கும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் பற்றியோ முகாம்கள் பற்றியோ, சென்னையைத் தலைமையிடமாக வைத்து பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிற ‘இந்து’ நாளிதழின் நிருபர் முரளிதர் ரெட்டிக்கு அக்கறையில்லை. அந்த இதழின் நிர்வாகமும் தமிழெதிர்ப்பு நிர்வாகம்தான். ஓருதாரணத்திற்கு ஏப்ரல் 30 அன்று வந்துள்ள ஆசிரியர் கடிதங்களைப் பார்ப்போம். வெளியிடப்பட்டுள்ள ஆறு கடிதங்களும் ஒன்றில் ஈழப்பிரச்சினையை அரசியல் கட்சிகள் தங்கள் லாபத்துக்காகப் பயன்படுத்துகின்றன என்றோ, புலிகள் மோசமானவர்கள் என்றோ கூறுகின்றன. ’இந்து’ நாளிதழின் தலையங்கங்கள், ஆசிரியர் பகுதி கட்டுரைகள் எல்லாம் ஈழப்பிரச்சினையை நடுநிலையாகப் பார்க்கவில்லை. ராஜபட்க்ஷவின் கொள்கைகளை ஆதரிப்பதற்காகத் தமிழகத் தலைநகரிலிருந்து ஒரு நாளேடு வருகிறது. இந்த ஏடுதான் உண்ணாவிரதம் இருக்கும் கருணாநிதியின் கையிலும் இருக்கிறது.
இன்று 21-ஆம் நூற்றாண்டில் சிந்தனைகள், எந்தத் துறையிலும் நிறைந்து குவிந்துள்ளன. அரசியல் சிந்தனைகளும் கலாச்சாரச் சிந்தனைகளும் நிறையப் பெருகியுள்ளன. இவையிரண்டும் தனித்தனிச்சிந்தனைகளாகவும் இணைந்த சிந்தனைகளாகவும் உள்ளன. முகாம்கள் பற்றிய சிந்தனைகள் சார்ந்த சிந்தனைகள் என்கிறார் இத்தாலிய சிந்தனையாளர் ஜோர்ஜியோ அகம்பென். அரசு என்பது புறனடைகளாலும் உருவாக்கப்பட்டது. எப்படி பாராளுமன்றத்திலிருந்து பஞ்சாயத்து ஆட்சிமுறைவரை அரசின் கட்டுப்பாட்டில் வருகிறதோ அதுபோல் முகாம்கள் அரசின்கீழ் வருகின்றன என்கிறார், இன்று மிகச்சிறந்த அரசியல் சிந்தனையாளர் என்று கருதப்படும் அகம்பென். முகாம்களில் இருக்கும் மக்கள் இலங்கை மக்களில் ஒரு பகுதியினரான தமிழ் மக்கள். அவர்களின் சிந்தனைகளுக்கும் பிற பகுதிகளில் இருக்கும் மக்களின் சிந்தனைகளுக்கும் தொடர்புண்டு. இந்த வகையில் ஈழ அரசியலும் சிந்தனையும் கலாச்சாரமும் தொடர்புற்றிருக்கின்றன.
அனைத்துலக தமிழ்ச்சமூகம் என்ற ஓரடையாளம், உலகினர் விரும்பியோ விரும்பாமலோ உருவாகிவிட்டது. இந்தியத்தமிழர்களிடம் உள்ள சாதாரணத்துறைகள் (அல்லது பிரிவுகள்) என்று கணிக்கப்பட்ட திரைப்படத்துறையினர், பெண்கள், மாணவர்கள் ஈழப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய ‘தமிழ்-உண்மையின்’ குணங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டும். இன்று அப்படி ஒரு ’தமிழ்-உண்மை’ உண்டா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். அகில உலக மட்டத்தில், தேச வரம்புகளைத் தாண்டி ஓர் தமிழ்-உண்மை இன்றைய ஈழப்பிரச்சினையின் சந்தர்ப்பத்தில் உருவாகியுள்ளது என்றுதான் தோன்றுகிறது.
என் போன்றோர் சிற்றிதழ்கள் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்ச்சமூகத்தளம் ஒன்றைப்பற்றி அக்கறை கொண்டவர்கள். ஆனால் சிற்றிதழ் உலகம் என்பது அறிவுத்திறமை அதிகம் கொண்டதாக இருப்பதால் தமிழ்த்திரைப்படத்துறைபோல் வெளிப்படையாகத் தன் எதிர்வினையைத் தெரிவிக்கவில்லைபோலும்... தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு உறுப்புகள், அந்த உறுப்புகளின் வினைப்பாடுகள், பற்றி எல்லாம் இந்த மாதிரி நெருக்கடி ஏற்படும் காலங்களில் சிந்திக்க வேண்டும்.
அதுபோல் அகில உலகின் பல நாடுகளின் பெரிய நகர்களில் - லண்டன், நியூயார்க், டோரண்டோ, ஜெனிவா, ஓஸ்லோ என்றெல்லாம் தமிழர்கள் தங்கள் இன ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் இச்செயல்கள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறும். வெளிநாடுகளில் பிறந்த இந்தத் தமிழ் இளைஞர்கள் எதிர்காலங்களில் புதிய தமிழுண்மை ஒன்றைக் கண்டடைவார்கள். இவர்களில் ஃப்ரெஞ்சு, ஜெர்மன், போலிஷ், ருஷ்ய மொழி போன்ற பலவித மொழிகள் பேசும் இளைஞர்களும் இளம்பெண்களும் சிறுவர்களும் இருக்கின்றனர். இவர்களில் சிலர் ஈழத்தை - அவர்களின் உறவினர்கள், வாழும் அல்லது சாகும் ஈழத்தை - பார்த்திருக்கக் கூட இயலாது. எனினும் இவர்கள் புதுவிதமாக, எதிர்காலத்தில் தமிழ்மனதின் மூலம் சிந்திப்பார்கள். அவர்களின் மனதில் தமிழ்சினிமாவின் - அதன் அடையாளங்களின் பாதிப்பு இருக்குமா, இருக்காதா என்று தெரியவில்லை. இருந்தாலும் இருக்காவிட்டாலும் ‘தமிழ்’ என்ற சொல் ஒரு புது உணர்வை அவர்களின் மனதில் எழுப்பும். 
அந்த நேரத்தில் இந்தியாவில் கீழ்மூலையிலும் அதே தமிழை, சற்று வேறுவிதமாகப் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் என்ற ஓர்மை எழும். அந்தத் தமிழர்களுக்கும் ஓர் நீண்ட பரம்பரை - கலையிலும் இலக்கியத்திலும் இருந்தது என்று ஞாபகம் வரும். சில இளைஞர்களும், இளம்பெண்களும் அது தங்களுடையது என்ற அந்த ஓர்மை வழிப் பயணப்படுவார்கள். ஒரு காலத்தில் தங்கள் உறவினர்கள் ரத்தம் சிந்திய இடங்களை எல்லாம் வந்து பார்ப்பார்கள். தங்கள் உறவுகள் விமானங்களால் தாக்கிக் கொல்லப்படுமுன், விரட்டப்படுமுன், பதுங்குகுழிகளில் அவர்கள் கண்ட கனவு எதுவாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அவர்கள் வெளிநாடுகளிலிருந்து பல ஆண்டுகளுக்கப்புறம் வரும்போது ஒருவேளை காற்றில் அழுகுரல் இல்லாமல் இருக்கலாம்; பனைமரங்கள் அசையும்போது சிங்கள சேனைகளின் நிழலோ அவை என்று பயப்படாத சூழ்நிலை இருக்கலாம்; காலம் மிகவும் மாறிப்போயிருக்கலாம். ஆனால் அவர்கள் மறக்கமாட்டார்கள். மறக்கமுடியாத ஒரு நினைவும் மூளையும் அவர்தம் உடல்களுக்குள் இருக்கும்.
அந்த ஞாபகத்தின் பல்வேறு இழைகளோடும் எழும் சக்தியின் பெயர்தான் ‘தமிழ்-உண்மை.’
நன்றி - உயிரோசை.
அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
ஆழ்நீல இந்நாட்களும் மழலைப்பருவ இஞ்ஞாயிறும்
விண்மீன் பலதின் நீள்வட்டம்.
மேல்வானில் வீனஸ்.
தாமதமாய் இலைக்கும்
அடுத்தோரின் மரம் தாண்டி
சுதை உதிரும் சுவர்.
பதின்பருவப் பெண்டிர்
காற்றில் கையுயர்த்தி
சற்றே நயப்பிக்கும்
ஆதிவாசி நடனத்தின்
வடிவம்பல மீளெழினும்
இவரில் எவரும் தம்
விரல் கிணி பற்றினும்
இசைக்கவும் மாட்டார்.
உயிரெழுத்தோ அசைந்து
குலவைக் குரலிடும்.
மாலையுடன் வரும்
தனிமைத்துயரில்
எல்லைதாண்டி விடுதி
அதில்
இருமும் கவிஞன்
எழுதும் இறுதிவரி -
ஸ்பானிஷ் கிரேக்கம்
அரபும் உருவெழுத்தில்.
எழுதும் வினைப்பித்தும்
மூளை நரம்பின்
உணர்வில் சுருண்டு
புறங்கையில்
தான் எழுதும் சிதறல்.
முட்கம்பி நெடுக
வளரும் பைங்கொடி.
கையெழுதி அழைப்பு.
பாயும் நீர்ச்சொல்.
ஸோப் நுரையில்
கரண்டி கழுவும்
எத்தனை நிமிடமோ
ஆண்டாக?
பிணங்கும் மாறுடன்
முகப்புக் கூட்டும்
மேஜை துடைக்கும்
எத்தனை நிமிடமோ
ஆண்டாண்டாக?
கை உயர்த்தும் பாதிரியும்
தியாகம் பற்றிக் கதைத்தாலும்
வரிசையிதன் விடாமுயற்சிக்கு
இல்லை இணை.
-- Antonio Machado, Estos días azules y este sol de la infancia, 1939.
நேற்று முகாம் என்பது யாது? - 2 என்ற ஜோர்ஜியோ அகம்பென் கட்டுரையைத் தமிழாக்கிய போது சென்ற நூற்றாண்டின் ஸ்பானிஷ் பெருங்கவிஞர் அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதையைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் ஸ்பானிஷ்-ஃப்ரெஞ்சு எல்லையில் தடுப்பு முகாமொன்றின் வைத்து மரணமடைந்த கவிஞரின் கோட்டுப்பையில் இருந்தது மேற்கண்ட இறுதிக்கவிதை. ஆழ்நீல இந்நாட்களும் மழலைப்பருவ இஞ்ஞாயிறும் என ஸ்பானிஷ் மொழியிலிருந்து நேரடித் தமிழாக்கம். - நாகார்ஜுனன்.
3.5.09
முகாம் என்பது யாது? - 2 - அகம்பென்
ஈழம் இனி தடுப்பு முகாம், அகதி முகாம் வடிவத்தில்
முகாம் என்பது யாது? - 1 - அகம்பென்
மேற்கண்டவை சரியென்ற பட்சத்தில், அதாவது முகாம் என்பதன் சாரம், அசாதாரண-அரசுநிலை பருண்மையாவதிலும் அதன் விளைவாக அம்மண உயிர்-நிலைக்கென களமொன்று உருவாக்கப்பெறுவதிலும் இருக்கிறது என்ற பட்சத்தில், அத்தகையதோர் அமைப்பு உருவாக்கப்பெறும் ஒவ்வொருமுறையும் அதன் பிரத்தியேக அமைப்பு, வகை, பரப்பு போன்றவை எத்தகையவை, அங்கே வைத்து இழைக்கப்படவல்ல குற்றங்கள் எத்தகையவை என்பனவற்றைத் தாண்டிய ஒரு கேள்வியை நாம் எதிர்கொண்டாக வேண்டும் - அதாவது இங்கெல்லாம் உருவாவது முகாம் என்ற பிரத்யேகமான வடிவமே என்பதை நாம் எதிர்கொண்டாக வேண்டும்...
ஆக, 1991-ஆம் ஆண்டு இத்தாலியில் சட்டவிரோதமாகக் குடியேற வந்த அல்பேனியர்களைத் திரும்ப அனுப்புவதற்கு முன்பாக இத்தாலியப் போலீசார் இவர்களை அடைத்துவைத்த பாரி என்ற இடத்திலுள்ள கால்பந்து மைதானமாகட்டும், இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் ஃப்ரான்ஸின் விஷி அரசாங்கம் அந்நாட்டு யூதர்களை நாஃஸிகளிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக அடைத்துவைத்த சைக்கிள் பந்தய அரங்காகட்டும், அதே காலகட்டத்தில் - அதாவது 1939-ஆம் ஆண்டில் - ஃப்ரெஞ்சு எல்லையில் அகப்பட்ட ஸ்பானிஷ் கவிஞர் அந்தோனியோ மச்சாது (3) உடல்நிலை மோசமாகி மரணமடைந்த அகதி-முகாமாகட்டும், இன்று அகதி அந்தஸ்து கேட்டு வருவோர் எவரும் ஃப்ரான்ஸின் பன்னாட்டு விமான நிலையங்களில் தடுத்துவைக்கப்படும் காத்திருப்புப் பகுதிகளாகட்டும் (zone d'attente), இவை யாவும் - ஏன் இவை போலன்றி பாரீஸ் விமான நிலையம் அருகே ஆசுவாசம் தருவதான தோற்றமளிக்கும் ஆர்க்கேத் என்ற ஹோட்டலும் ஆகட்டும் - அறுதியிட்டுக் காட்டுவது, இத்தகைய ஒரு களத்தையே. அதாவது, இந்தக்களத்தைப் பொறுத்தவரை சட்டத்தின் இயல்பான ஆட்சி என்பது இடைநிறுத்தப்பட்டிருக்கிறது எனலாம். அதாவது இங்கே சிக்கியோர் வன்செயலுக்கு உள்ளாவாரா, இல்லையா என்பது சட்டத்தைப் பொறுத்து அமையும் விஷயமல்ல; மாறாக, அது, இங்கெல்லாம் இறையாண்மையாகத் தற்காலிகமாகச் செயல்படும் போலீசாருக்கு தயவுணர்வோ, அற-உணர்வோ உண்டா என்பதில் தங்கியிருக்கிறது. ஃப்ரான்ஸுக்கு வரும் அந்நியர்களை அங்கே நான்கு நாட்கள் தடுத்துவைக்கலாம் என்றிருந்ததை இங்குள்ள நீதிபரிபாலன-அமைப்பு மாற்றும் வரை இதே நிலைமைதான். இந்த மட்டத்தில் காணும்போது, தொழில்மயத்துக்குப் பிறகான பெருநகரங்கள் பலவும் சரி, அமெரிக்காவில் கதவடைத்து அமைந்திருக்கும் சமுதாயங்களும் சரி, முகாம்களைப் போலத் தோற்றமளிக்கத் தொடங்கிவிட்டன. இங்கெல்லாம் அரசியல்-வாழ்வும் அம்மண-உயிர்நிலையும், சில நிச்சய தருணங்களிலாவது, முற்றாக-நிச்சயமற்ற களமொன்றைச் சென்றடைகின்றன.
இந்தக்கோணத்தில் காணும்போது, முகாம் என்பதன் தோற்றத்தை நம் காலத்திய முக்கிய நிகழ்வு; அதாவது, நவீனத்துவ அரசியல்-களத்தின் தோற்றத்தையே நிச்சயமாக வழியில் குறிப்பது முகாம் என்ற வடிவம் எனலாம்.
இதை இன்னும் விரிவாகப் பார்க்கலாம்: புலம் என்ற நிர்ணயமான வரையறுப்புக்கும் அரசு என்ற நிர்ணயமான ஒழுங்குக்கும் உள்ள உறவின் அடிப்படையில் இயங்குவது நவீன தேசிய-அரசு என்ற அரசியல்-அமைப்பு. ஆக, தன்னியக்கமான நியமங்களைக் கொண்டது, இந்த உறவு. இவை, பிறப்பு அல்லது தேசம் என்பதில் உயிர்-வாழ்வுக்கான வரைதலை நோக்கமாகக் கொண்டவை. இத்தகைய உறவும் நியமங்களும் கொண்ட அரசியல்-அமைப்பு ஒரு நிரந்தர நெருக்கடிக்காலத்தில் நுழையும்போது தோன்றுவதே முகாம் என்ற வடிவம். அதாவது, உயிரியல்-வாழ்வின் முகாமைத்துவத்தை அரசே தன் நேரடிப்பணியாக ஏற்கத் தீர்மானிக்கும்போது தோன்றுவதே முகாம் என்ற வடிவம் எனலாம்.
இதையே வேறு சொற்களில் இப்படிக் கூறலாம்: தேசிய-அரசு என்பது, குறிப்பிட்ட புலம் (territory, Ortung), குறிப்பிட்ட ஒழுங்கு (order, Ordnung) மற்றும் பிறப்பு (birth) ஆகிய மூன்று அலகுகளால் வரையறுக்கப்படும் ஒன்று. இந்த மூன்றில் புலம், ஒழுங்கு ஆகிய இரண்டு அலகுகள், தேசிய-அரசின் களத்தை உருவாக்குவதாக கார்ல் ஷ்மிட் (4) கருதினார். இப்படி முன்பு இயங்கிய அனுபவப்புலம் (nomos) (5), தற்போது இவ்விரண்டு அலகுகளில் வைத்து உடையாமல், இவற்றில் அம்மண-உயிர்நிலை என்பது வரையப்படும் இடத்தில் - அதாவது பிறப்பு என்பது தேசமாக மாறும் இடத்தில் - வைத்தே உடைகிறது எனலாம். அதாவது, இந்த வரைவைக் கட்டுப்படுத்திவந்த, நியமப்படுத்திவந்த ஏதோ ஒரு விஷயம் இனியும் இயங்கப்போவதில்லை எனலாம். ஆக, முகாம் என்பது, உயிரை-வாழ்வை ஒழுங்கில் வைத்து வரைகிற மறைமுக நியமம் எனலாம். இன்னும் சொல்லப்போனால், தன்னை ஒரு கொலை-எந்திரமாக மாற்றிக்கொள்ளாமல் இந்த அமைப்பு இயங்க முடியாது என்பதற்கான அறிகுறியே முகாம் எனலாம்.
1933-ஆம் ஆண்டில் ஜெர்மனி, (யூத இனத்தோரின் குடியுரிமையைப் பறிக்கும்) நூரம்பர்க் புதிய குடியுரிமைச் சட்டத்தைப் பிறப்பித்தது. தவிர, 1915-1933 காலகட்டத்தில்தான் ஃப்ரான்ஸ் உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய அரசுகளும் குடியுரிமை-நீக்கச் சட்டங்களைப் பிறப்பித்தன. இதே காலகட்டத்தில்தான் முகாம்கள் முதலில் தோன்றின என்பதை முக்கியமாகக் கவனித்தாக வேண்டும். இதையொட்டியே, அரசு-ஒழுங்கமைப்பை இடைநிறுத்துவதாக மாத்திரமே இயங்கிய அசாதாரண-அரசுநிலை என்பது, ஸ்திரமான புதிய கள-அமைப்பாக உருக்கொள்கிறது; இந்த ஒழுங்கமைப்பில் வரைய இயலாத அம்மண-உயிர்நிலை என்பதும் இந்தக் கள-அமைப்பில் வசிப்பதாகிறது. ஆக, பிறப்பு என்பதான அம்மண-உயிர்நிலைக்கும் தேசிய-அரசுக்கும் இடையில் விரிவடைந்துவரும் இந்தப்பிளவு, நம் காலத்திய அரசியலின் புதிய உண்மையாகும். நாம் முகாம் என்று அழைப்பது இந்த மாறுபாட்டைத்தான்.
அதாவது, ஒருபுறம், சட்டம் என்பது இடைநிறுத்தப்பெற்ற அசாதாரண-அரசுநிலையில், குறிப்பிட்ட புலம் என்ற வரையறை ஏதுமற்ற ஓர் ஒழுங்கு; மறுபுறம் நிரந்தர அசாதாரண-அரசுநிலையாக, குறிப்பிட்ட ஒழுங்கு ஏதுமற்ற ஓர் புலம். இந்த இரண்டும் இணைவது முகாம் என்ற வடிவத்தில். ஆக, நிலவும் அரசியல்-அமைப்பால் உயிர்-வடிவங்களையும் நீதிபரிபாலன நியமங்களையும் இனியுமொரு நிச்சயக்களத்தில் வைத்து ஒழுங்கமைக்க முடியாமல் போகிறது; மாறாக, தன்னை மீறுகிற, உயிரினங்கள் யாவும் பிடிபடவல்ல, புலங்குலைந்த புலமொன்றைத் தன்னகத்தே கொண்டதாக மாறுகிறது இந்த அரசியல்-அமைப்பு. இந்தப் புலங்குலைந்த புலமே, மறைமுகமாக நம் வாழ்வைக் கட்டமைக்கும் அணி; இதன் உருமாற்றங்கள் யாவற்றிலும் இந்தப் புலங்குலைந்த புலம் என்ற வடிவத்தை இனங்காணும் செயலை நாம் கற்க வேண்டும். ஆக, தேசம் (பிறப்பு), அரசு, புலம் ஆகிய முந்திய முப்பட்டை உலகை உடைக்கிற, அந்த முப்பரிமாணங்களுடன் இணைகிற, அவற்றிலிருந்து பிரிக்கவியலாத நான்காம் அலகாக உருவாகியிருக்கிறது, முகாம்.
கடந்த சில ஆண்டுகளில் முன்னாள் யூகோஸ்லாவியப் புலங்களில் இந்த முகாம் என்ற வடிவம் ஒருக்கில் இன்னும் தீவிர வடிவத்தில் மீண்டும் தோன்றியிருப்பதை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காணவேண்டும். ஐரோப்பாவில் முன்பு தேசிய-இன-அரசுகளின் சென்று முடிந்த அதே போக்கான அரசியல்-அமைப்பே இங்கு அப்படியே தன்னை மறுவரையறை செய்துகொள்வதாக, ஆர்வக்கோளாறு கொண்ட சிலர் அறிவித்திருக்கிறார்கள். அது அஃதல்ல உண்மை. மாறாக, முந்தைய அனுபவப்புலம் சீர்திருத்த இயலாத படி உடைந்திருப்பதையும் மனித உயிர்களும் மக்கள்கூட்டங்களும் புதுப்புதுக்கோடுகள் வழி புலங்குலைந்திருப்பதையும் இங்கே நாம் கவனித்தாக வேண்டும்.
இந்த இடத்தில்தான் இன-அடிப்படையில் பாலியல்-வல்லுறவு செய்வதற்கான இடமாக முகாம் என்பது அமைந்திருப்பதையும் முக்கியமாகக் கவனித்தாக வேண்டும்: யூத-இனத்தோர்க்கென நாஃஸிகள் வகுத்த ‘இறுதித்தீர்வில்’ யூதப்பெண்களுடன் வல்லுறவு கொண்டு அவர்களைக் கருத்தரிக்கச் செய்கிற எவ்வித முயற்சியும் இருக்கவில்லை. காரணம், தேசிய-அரசு என்ற ஒழுங்கமைப்பில் உயிரை வரையும் செயலாக பிறப்புக்கோட்பாடு என்பது, தன்னளவில் மாறிக்கொண்டிருந்தாலும், இன்னும் செயல்பாட்டில் இருந்ததுதான். இப்போதோ வெட்டுண்டு மிதக்கிறது இந்தக்கோட்பாடு; தன் செயல்பாடே அசாத்தியமாகிவிட்ட நிலையில் புலக்குலைவின்வழி செல்லத்தொடங்கிவிட்டது; இதன்வழி மேலும் முகாம்கள் பல தோன்றுமெனவும் எதிர்பார்க்கலாம்; தவிர, நவீன நகரம் என்ற களத்தில் மேன்மேலும் வாழ்வின், உயிரின் நியம வரையறைகள் பல புதிதாய்த் தோன்றுவதையும் எதிர்பார்க்கலாம்.
ஆக, இந்தப் புவிக்கிரகத்தின் உள்ளார்ந்து அதன் உயிர்-அரசியலின் புதிய அனுபவப்புலமாக உறுதியாக நிறுவப்பட்டுவிட்ட ஒன்றே, முகாம்.
அடிக்குறிப்புகள்:
3. அந்தோனியோ மச்சாது (1875–1939) - ஸ்பானிஷ் பெருங்கவிஞர். ஃப்ரெஞ்சு நவீனத்துவக் கவிஞர்கள், ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்காவுடன் நட்புக்கொண்டிருந்தவர். இவர் மரித்தபோது இவர் கோட்டுப்பையில் இருந்த இறுதிக்கவிதை - ஆழ்நீல இந்நாட்களும் மழலைப்பருவ இஞ்ஞாயிறும் (Estos días azules y este sol de la infancia).
4. கார்ல் ஷ்மிட் (1888-1985) - ஜெர்மன் அரசியல், சட்டவியல் அறிஞர். நாஃஸிக்கட்சியை ஆதரித்த பேராசிரியர். அசாதாரண-அரசுநிலையை பிரகடனம் செய்வது பற்றி விரிவாக எழுதியவர். வால்ட்டர் பெஞ்சமின், ஹன்னா அரெண்ட், ழாக் தெர்ரிதா மற்றும் அகம்பென் உள்ளிட்ட பலர், இவர் புத்தகங்களை முன்வைத்து எழுதியோர்.
5. அகம்பென் கூறும் nomos என்பததை அனுபவப்புலம் எனத் தமிழாக்குகிறேன். இங்கே அனுபவம் என்பதை சமுதாயரீதியில் ஒழுங்கமைக்கப்படும் ஒன்றாகக் காண வேண்டும் (socially constructed ordering of experience). கிரேக்க மொழியில் νόμος என்ற சொல் குறிப்பது வெளிப்படையான சட்டங்களை மாத்திரமல்ல, தினசரி வாழ்வின் உருவாகும் நியமங்களையும் ஆகும்.
இத்தாலிய மூலம் மற்றும் ஆங்கில ஆக்கத்திலிருந்து தமிழாக்கம் - நாகார்ஜுனன்.
Giorgio Agamben, Che cos'è un campo?, Mezzi senza fine: note sulla politica, Turin, 1996, p. 35-41.
Giorgio Agamben, What is a Camp? Means without End: Notes on Politics, Translated by Vincenzo Binetti and Cesare Casarino, Minneapolis, 2000, p 37-45.
சென்ற மார்ச் மாதம் கொழும்பு தினகரனில் வெளியான செய்தியிலேயே - இலங்கை அரசுத்துருப்புகள் நடத்திவரும் தாக்குதலையடுத்து விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து தப்பிவரும் தமிழ்மக்களுக்கென நான்கு நிவாரணக் கிராமங்களை, ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், இலங்கை அரசு அமைத்துவருகிறது என்றார் மீள்குடியேற்ற-அனர்த்த-நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பத்யுத்தீன். ஏற்கனவே வவுனியாவில் இயங்கும் முகாம்கள் தவிர, இந்த முகாம்களுக்கு பொன்னம்பலம் அருணாச்சலம்-ராமநாதன் சகோதரர்கள், ஆனந்த (கென்டிஷ்) குமாரசாமி மற்றும் (லட்சுமண்) கதிர்காமர் ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன, தற்போது வன்னியில் இந்த முகாம்களிலும் இவற்றுக்குப் புறத்தும் குறைந்த பட்சம் 200,000 தமிழ்மக்கள் இருக்கின்றனர் என்றும் தெரிகிறது.
2.5.09
பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்
புறங்குதிக்கும்
முட்டாள் பறவை.
குடிமயக்கத்தில்
எட்டிப்பார்க்கும்
உடைந்த
பிரபஞ்சக் கடிகார உச்சியில்.
மணி பதின்மூன்றென
நேரம் மீண்டும் கூவும்.
யாவர் நடிகரும் சாவாய் அதிர
புறங்குதிக்கும்
முட்டாள் பறவை.
குடிமயக்கத்தில்
எட்டிப்பார்க்கும்.
பேரழிவில் நகர
அடுக்கடுக்கும் நொறுங்க
தெருப்பல
மலையிடுக்காய்ப் பிளக்க
மணி பதின்மூன்றென
நேரம் மீண்டும் கூவும்.
உடைந்த கண்ணாடி
சில்லு நூறாய்ப் பறக்கும்.
அதிர்ஷ்டத்தில் தப்பிய
எச்சம் எமதும் முடக்கப்பெறும்.
புறங்குதிக்கும்
முட்டாள் பறவை.
குடிமயக்கத்தில்
எட்டிப்பார்க்கும்.
குரங்கின் குறடும்
எந்திரம் பலதை
வெடித்துவிடும்.
மணி பதின்மூன்றென
நேரம் மீண்டும் கூவும்
புனிதச் சேவலைக் கேட்போமென
எண்ணவுமில்லை யாம்.
முடிவிதை அடையும் வழி
சரியெனவோ கேட்கத் தாமதம்.
குப்புற வீழும்
கடிகாரத்தைக் கணக்கிடவும்
தாமதம்.
புறங்குதிக்கும்
முட்டாள் பறவை.
குடிமயக்கத்தில்
எட்டிப்பார்க்கும்.
மணி பதின்மூன்றென
நேரம் மீண்டும் கூவும்.
-- Sylvia Plath, Doomsday, 1954.
1.5.09
தூதுவர் - ஸில்வியா ப்ளாத்
நத்தையின் சொல்
இலைத்தட்டிலா,
ஏற்காதே,
எனதல்ல அது.
பூட்டிய டப்பியில்
அஸிட்டிக் அமிலமா,
ஏற்காதே,
அசலல்ல அது.
தன்னில்
கதிரவன் வரைந்த
கணையாழியா,
பொய், மேலும் பொய்,
துயர்.
இலையில் உறைபனி,
பேசும், புகுபுகுத்தெரியும்
மாசற்ற கொப்பரை
யாவும் தமக்கே என
ஆல்ப்ஸ் கருமலை
ஒன்பதில்
ஒவ்வொன்றின் மேலும்.
ஆடிதமில் அலந்தலைய
தன் சிமெட்டிநிறம் நொறுக்கும்
கடல்.
காதல்
காதலே என் பருவம்.
-- Sylvia Plath, The Couriers, 1962.
பதிந்தவை
-
▼
2009
(258)
-
►
12
(8)
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 2
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 1
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 2
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 1
- கண்ணாடியில் தெறிக்கும் கொலைச்செயல்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 3 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- போபால்: கால் நூற்றாண்டுக்காலக் குற்றம்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 2 - ஆர்தர் ஸி. க்ளர்க்
-
►
11
(8)
- அகர முதல எழுத்தெல்லாம்? - 1 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- கிழவியின் விரக்தி - ஷார்ல் போதலேர்
- அந்நியன் - ஷார்ல் போதலேர்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 5 - மரிலின் க்ரிஸ்ல்
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- ஃப்ரெஞ்சு அறிஞர் க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ் மறைவு!
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
►
08
(35)
- 108 - 14: லா. ச. ராமாமிருதம்
- எழுத்தை வெட்டும் கல் - 13 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 12 - சிவத்தம்பி
- 108: 13 - வசனகவிதை
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 1 - ழார் பத்தாய்
- எழுத்தை வெட்டும் கல் - 11 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 10 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 9 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 8 - சிவத்தம்பி
- ஒளிப்பதிவும் காலமும் - 3 - மணி கௌல்
-
▼
05
(17)
- மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு ...
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்ட...
- ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
- மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை
- சரண்-பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகள் என்னிடம் கோ...
- இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்.....
- உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்
- கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
- குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
- ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா
- எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
- இன்றைய கொடூரத்திலிருந்து உருவாகும் தமிழ்-உண்மை - த...
- அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
- முகாம் என்பது யாது? - 2 - அகம்பென்
- பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்
- தூதுவர் - ஸில்வியா ப்ளாத்
-
►
12
(8)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (180)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (25)
- அணுசக்தி (10)
- அறிவியல் (45)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (56)
- உரைமொழி (9)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (170)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (175)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழியல் (21)
- செயல் (86)
- ஜெர்மன் (9)
- திரை (27)
- தீராநதியில் (15)
- தெர்