பரியில் சிறுபரியிலென
ஏறும் இருபண்பும்
அரைக்கும்
எம் கத்தியும் கத்தரியும்.
லாந்தர்-தாடையுடன் அறிவார்த்தம்
தரையமர்ந்த பொதுப்புத்தி
இவற்றில்
ஒன்று பல்வித மருத்துவரை அணுகும்.
பிறிதோ அணைக்கும்
மனையாள் பலரை
கடைக்காரரை.
சாணைக்கல் தமதையே
கூரற்ற விளிம்பில் பொருத்தி
ஆங்கே
குறுக்கிடும் சாத்தானும் துண்டாக்கிப் பின்
மரக்கிளை பல ஒடித்து
நாய்க்குட்டிதன் முடிவெட்டி
தொழிலாளர்தம் நகம்
சமமாய்ச் சீவும்
அதிகாரி அவ்விருவரின்
கானகக்கரடெனும் கூகைக்கண்ணும்
தாய்மார்தம் கருக்கலைய பயமுறுத்தும்.
நாய்கள் உறுமி ஊளையிட விரட்டும்.
வயற்பிள்ளையின் சினத்தில்
ஓநாயைக் கொணரும்.
மனையாளின் மனமும் மட்டாக்கும்.
-- Sylvia Plath, The Death of Myth-making, 1958.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
30.4.09
தொன்மம் இயற்றலின் மரணம் - ஸில்வியா ப்ளாத்
29.4.09
எற்றையும் நிலவும் திங்கள் - ஸில்வியா ப்ளாத்
எற்றையும் நிலவும் திங்கள்
பெற்று
நிற்பீர் நிலவில்.
நிலவின் மனிதன் நிற்பதும்
தன் ஓட்டில்.
ஒருகட்டுத்தடிக் கீழ் மடங்கி.
எம் கட்டில்விரிப்பின் மேல்
சாக்குக்கட்டியென
விழுமதன் தண்ணொளி.
அதன்
குன்ம முகடு பலதின்
ஒழிந்த எரிமலைக்குழி பலதின்
இடையே
கிடுகிடுக்கும் அவன் பல்.
கருங்காட்டை எதிர்கொண்டு
தடி பொறுக்குமவன்
நிற்கிலான்
தன் அறை
ஞாயிறுபூதமதைத் தாண்டி
ஒளிரும் வரை.
ஈண்டு
தன் திங்களின் நரகமும்
நிலவுப்பந்தில் நிலைபெற நிறுவுவான்
தீயற்று
ஏழ்தண் கடலும்
சங்கிலியாய்
தன் கணைக்கால் பிணைக்க.
-- Sylvia Plath, The Everlasting Monday, 1957.
குறிப்பு - ஸில்வியா ப்ளாத், அவர் மகன் நிக்கலஸ் ப்ளாத் இருவரும் தற்கொலை செய்தது திங்களில்தான். முன்னவர் முழுத்திங்களுக்கு மூன்று நாட்கள் பின். பின்னவர் அமாவாசைக்கு மூன்று நாட்கள் முன்.
28.4.09
பின்னிரவின் தனிமொழி - ஸில்வியா ப்ளாத்
இழை ஒவ்வொன்றும் வெடித்து
சீற்றம் தலையெடுத்து
மஞ்சம், விரிப்பு, தரை,
படநாகப் பஞ்சாங்கமென
குருதி விரியத் தோய்த்து,
இங்கிருந்து
கோடிப் பைம்புலம் தாண்டி
நீ!
என உறுதியிடுவதே
சுணைக்கும் விண்மீன்கீழ்
மூகாத்து அமர்ந்து
விடைத்து
நேரம் கருக்கும் சாபத்தில்
வெறித்து
விடைபகர்ந்து
ரயில்பல போக விடும்
எனதொரு ராச்சியத்தினின்றும்
திருகியெறிந்த
உதாரப் பிச்சி
நான்!
என்பதிலும் சரி.
-- Sylvia Plath, Monologue at 3 AM, 1956.
இந்தக்கவிதையின் தமிழாக்கம், நேற்றிரவின் தனிமையில் நிறைவேறியது. நாளை வர இருப்பதுடன் சேர்த்து இதுவரை தமிழாக்கிய ப்ளாத்தின் கவிதைகள் முப்பது - இந்த மாதம் மட்டும் இருபதுக்கும் மேல் இங்கே வந்திருக்கின்றன. இவற்றுக்கான மறுமொழிகள் இரண்டு. இதேபோல ஷார்ல் போதலேர் கவிதைகள் ஐந்தும் பௌல் ஸெலான் கவிதைகள் மூன்றும் வந்திருக்கின்றன. இவற்றுக்கான மறுமொழிகள் மூன்று. அரசியல் நிகழ்வுகள் குறித்து இந்த வலைப்பக்கத்தில் நடந்த நீண்ட உரையாடல்களை ஒருகணம் நினைத்துக்கொண்டால் தெளிவாகும் விஷயம் இதோ - நிஜ இலக்கியம் தனிமைவாசத்தில் சாத்தியம். - நாகார்ஜுனன்.
27.4.09
இன்மையின் சுவை - ஷார்ல் போதலேர்
ஒருகாலம் போரை நேசித்த
என் ஏக்கமிகு ஆன்மா
நீ.
உன்னில்
அழல் ஏற்றிய
நம்பிக்கை ஒளி
உன்னில்
ஏறவில்லை இனியும்.
அடி யாவும் இடறும்
பழம்பரி
நீ.
வெட்கமின்றிப் படு.
என் இதயமே,
விலகிச்செல்.
கொடூரமாய் உறங்கு.
தோற்றுத் தவறிய என் ஆன்மா
நீ.
பழம் மரகதமெனும்
உனக்கோ
போரினும் சுவையில்லை
காதலினி.
செம்பு ட்ரம்பெட்டின், குழலின்
பாடல்களே,
எனக்கு விடை தாரும்.
சுகமே,
இருள் உருகும் இதயத்தினும்
என்னைச் சஞ்சலப்படுத்தாதே.
இசைபடும் வசந்தம்
இழக்கும் தன் மணமும்.
பெரும்பனியில் விறைக்கும்
பிணமென
துளித்துளியாய்
நேரமென்னைச் சூழும்.
புவிமீதமர்ந்து
யாவும் கண்ட யான்
பின் ஆங்கோர் குடிலில்
தஞ்சம் தேடேனினி.
வரும் பனிப்புயலே,
என்னையும்
நீ வீழ
எடுத்துச்செல்லாயோ?
Morne esprit, autrefois amoureux de la lutte,
L'Espoir, dont l'éperon attisait ton ardeur,
Ne veut plus t'enfourcher! Couche-toi sans pudeur,
Vieux cheval dont le pied à chaque obstacle butte.
Résigne-toi, mon coeur; dors ton sommeil de brute.
Esprit vaincu, fourbu! Pour toi, vieux maraudeur,
L'amour n'a plus de goût, non plus que la dispute;
Adieu donc, chants du cuivre et soupirs de la flûte!
Plaisirs, ne tentez plus un coeur sombre et boudeur!
Le Printemps adorable a perdu son odeur!
Et le Temps m'engloutit minute par minute,
Comme la neige immense un corps pris de roideur;
— Je contemple d'en haut le globe en sa rondeur
Et je n'y cherche plus l'abri d'une cahute.
Avalanche, veux-tu m'emporter dans ta chute?
-- Charles Baudelaire, Le Goût du néant, Fleurs du Mal, 1868.
26.4.09
அழிவு - ஷார்ல் போதலேர்
Sans cesse à mes côtés s'agite le Démon;
II nage autour de moi comme un air impalpable;
Je l'avale et le sens qui brûle mon poumon
Et l'emplit d'un désir éternel et coupable.
Parfois il prend, sachant mon grand amour de l'Art,
La forme de la plus séduisante des femmes,
Et, sous de spécieux prétextes de cafard,
Accoutume ma lèvre à des philtres infâmes.
II me conduit ainsi, loin du regard de Dieu,
Haletant et brisé de fatigue, au milieu
Des plaines de l'Ennui, profondes et désertes,
Et jette dans mes yeux pleins de confusion
Des vêtements souillés, des blessures ouvertes,
Et l'appareil sanglant de la Destruction!
— Charles Baudelaire, La Destruction, Fleurs du Mal, 1857.
என்னருகே எப்போதும்
அலையும் ராட்சதன்
புலப்படா வளியென
என்னில் மிதப்போனை
யான் விழுங்க,
அவன்
என் நுரையீரல்
எரிக்க உணர்வேன்.
அதில்
நித்திய தீயவா ஒன்றை
நிறைக்கவும் உணர்வேன்.
கலையில்
என் பெருவிருப்பம்
அறிந்த அவனும்
மிக மயக்குமோர் மகளாக
ஒருக்கில் வேடமிட்டு
போலிக்குதர்க்கம் வைத்து
இகழ்வான மதுரஸத்தில்
உதடெனதைப் பழக்குவான்.
களைத்தும் மூச்சிரைத்தும்
உடைந்த என்னை
கடவுளும் காணாத
தூரத்தே அழைத்து
எல்லையற்ற பாலையின்
மிக அயர்ச்சியிடை இடுவான்.
மிகமருண்ட என் கண்முன்
அசுத்த அழுக்காடை பல
அண்ணாந்து பிளந்த புண்பல
என் அழிவின் குருதிக்கருவியென
யாவும் பாய்ச்சுவான்.
25.4.09
மாயத்தாள் என்னை எரித்தல் - ஸில்வியா ப்ளாத்
அங்காடித்தெருவில்
கூட்டுவர் எரிகம்பும்.
யான் அணியும் அங்கி
நிழல் பலதின் புதர்.
மெழுகுப்பிம்பமெனதில்
உறையும் எனக்கு
பொம்மையின் உடல்.
ஈண்டு நோயும் தொடங்கும்.
மாயத்தோர்க்கென
சதுரங்கப்பலகை யான்.
சாத்தானை விழுங்கவோர்
சாத்தான் வேண்டுமென்ப
தீக்கிடக்கையில் ஏறுவேன்.
செவ்விலை வரும் இம்மாதம்
கதவின் வாய்
நிலவறையின் வயிறென
இருளே பொறுப்பென்பது எளிது.
கிளிக்கூண்டில் என்னை வைப்பாள்
கறுப்பின் ஓடுடைப் பெண்ணும்.
இறந்தோரின் கண்தான் எத்தனை பெரிது!
முடியுடை ஆன்மாவுடன்
அந்தரங்கம் கொள்ளும் யான்.
காலி ஜாடியிதன் மூக்கினின்றும்
உருளும் புகை.
சிறியோளெனில் செய்யேன் கெடுதி,
அசையேனெனில் வீழாது ஏதும் என்ப
மட்குட மூடியின் கீழ்
அரிசிமணியென
சின்னஞ்சிறிதாய் ஜடமாய்
அமர்ந்தும் சொல்வேன்,
அடுப்பின் சுடர் பல
வளையம் வளையமாய்
இவர் ஏற்ற:
என் சிறுவெண் மனிதரே!
கஞ்சியும் எம்மில் நிறைய.
வளர வளர
சற்றே முதலில் எரியும்.
செந்நாக்கு பல
உண்மையும் அடையும்.
வண்டினத் தாயே!
உன் முஷ்டியை மட்டும் மடக்கு.
மெழுகுவர்த்திகளின்
வாய்வழிப் பறப்பேன்
வதங்காத விட்டிற்பூச்சியாய்.
வடிவமெனதை மீளத்தா!
கல்நிழற்தூசியைப் புணர்ந்த
நாளவற்றை நினைக்கவும்
யான் தயார்.
ஒளிரும் கணைக்கால் எனதும்.
ஒளியும் தொடையில் ஏறும்.
ஒளியின் தரங்கம் வரவும்
தொலைந்தேன் தொலைந்தேன்
யானே.
- Sylvia Plath, Witch burning, 1959.
இறந்தோர் - ஸில்வியா ப்ளாத்
ஒளிஞாயிறதன் வேகத்தில்
நீள்வட்டமாய்ச் சுழலும்
புனித ஆடை போல
களிமண் சவ்வில் ஒளியும்
முழுதாய்க் கவிழ்ந்த புவியின்
கருவறை பெரிதின்
தாலாட்டில் அடங்கும்
இறந்த மனிதர்
காதலில் போரில் கவனம் செலுத்தார்.
ஆன்ம சீஸரும் அல்லரிவர்.
தந்தையரின் பெருமித நாடும்
மீள வேண்டார்.
இறுதிக்கிடக்கைதனில்
இடறிவிழும் இவர்
உலகுச்சேதம் கண்டு
தாம் மறந்துபட விழைவர்.
மிகுசெம்மண் சுற்றி
ஆழத் தாலாட்டுக் காணும்
எலும்புக்கட்டை இவை
எழா,
நிர்மலமாய் எழா,
பேரழிவுபடும் நாளின்
அதிகாலை எக்காளத்தில்.
இவை அமிழும்
பிரம்மாண்ட உறக்கத்தில்.
கடவுளின் கறாரான
அதிர்ச்சிகொண்ட
தேவதை பலவும்
கதறி
எழுப்பவும் முடியாது
இவரை
இவர் விழையும்
இறுதி
இகழ்வான
அழுகலினின்று.
-- Sylvia Plath, The Dead, 1954.
22.4.09
இறுதிச்சொற்கள் - ஸில்வியா ப்ளாத்
வெறும் பெட்டி வேண்டாம்
பெரும் கற்தாழி வேண்டும்
யான் காண.
புலிவரியும்
வட்டநிலா முகமும் கூட.
ஊமைக்கனிமம் வேர் பலதுடன்
இவர்வர,
காணவும் விருப்பம்.
காணவும் காண்கிறேன்.
வெளிறும்
விண்மீன் தூரத்து
முகம் பல.
இப்போதிவர் ஏதுமில்லை.
குழவியரெனவும் இல்லை.
தாய்தந்தையரின்றி
முதற்கடவுளர் போல்.
முக்கியமோ யானென
நினைப்பாரிவர்.
என் நாள் பலதை
இனிதாக்கி
பழமாய்ப் பாதுகாக்கவும்
வேண்டுமென
நினைத்தேன்.
ஆடியெனதில் புகைபடிய
இன்னும் சில மூச்சுவிட
அதில் ஏதும்
பட்டுத்தெறிக்காது.
மலர்முகம் பலதும்
காகிதம் போல்
வெளிறும்.
நம்பவில்லை ஆன்மாவை யான்.
நீராவியாய் வெளியேறுமது
கனவெனதில்
என் வாயும் கண்ணும் திறக்க.
நிறுத்த முடியவில்லை அதை.
திரும்பாது ஒருநாள் அது.
தங்கும் அவை,
சிறப்பான தம் சிற்றொளி சில
கைபட்டுத்தான் கதகதக்க.
புறுபுறுக்குமோ அவை.
காலடியெனதும்
சில்லிட்டுச்செல்ல
என் பேரோசனைக்கல்லின்
நீலக்கண்ணும்
என்னை ஆசுவாசப்படுத்தும்.
என் செம்புச் சமையல்பாத்திரம்
எனக்குக் கிட்டட்டும்.
என் சிகப்புக்குடம்
என்மீது இரவுப்பூவாய்
மணத்துடன்
மலரட்டும்.
காயக்கட்டுகளாய்
என்னைக் கட்டட்டும்.
இதயமெனதை
நன்கு மடித்து
பொட்டலமாய்
என் காலடியில்
சேமித்து வைக்கட்டும்.
யானும் யார்? அறிகிலேன்.
சூழ்ந்து இருளும் வரும்.
சூலுறும் கடவுளர் முகத்தில்
இனிதாய் ஒளிரும்
இந்தச் சிறுபொருளும்.
--- Sylvia Plath, Final Words, 1961
20.4.09
பேரழிவு இலக்கியத்தின் களம் - ஜே. ஜி. பல்லார்ட் மறைவு
நேற்று மரணம் குறித்த பௌல் ஸெலான் ஜெர்மன் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்த போது இங்கே பிரிட்டனில் எழுத்தாளர் ஜே. ஜி. பல்லார்ட் மறைவு குறித்த செய்தி வந்தது.
பல்லார்ட் பற்றி நானறிந்தது முப்பதாண்டுகள் முன்பு. கணினி உலகம் உதித்துவிட்டிருந்த காலம் அது. பல்லார்டின் சிறுகதைகள், நாவல்களை மாறுபட்ட அறிபுனை-எழுத்தாக வாசித்துக்கொண்டிருந்த காலமும் கூட. ஆனால் இவற்றை எதிர்கால மனத்தின் ஆய்வாக இன்று எளிதில் வாசித்துவிட முடியும்.
குறிப்பாக, சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு இவர் எழுதிய நாவல், Empire of the Sun, இவ்வழி வாசிப்பை நமக்குக் காட்டும். இரண்டாம் உலகப்போரின் முடிவை ஷாங்காய் நகரில் சிறைபட்ட ஒரு சிறுவனின் பார்வையில் காணும் நாவல். இதிலிருந்து வரிகள் சில.
'Jim ... ! Stop thinking ... !' Mrs Philips, one of the missionary widows, caught him as he swayed forward, almost swooning before the image of this archangelic figure fallen among the paddies. Jim stood to attention, pretending to be weak with hunger, and trying to avoid the suspicious stare of the Japanese sentry at the dispensary door. He waited for the roll-call to end, reflecting on the likely booty attached to a dead American pilot. Soon enough, one of the Americans would be shot down into Lunghua Camp. Jim tried to decide which of the ruined buildings would best conceal his body. Carefully eked out, the kit and equipment could be bartered with Basie for extra sweet potatoes for months to come, and even perhaps a warm coat for the winter. There would be sweet potatoes for Dr Ransome, whom Jim was determined to keep alive. He rocked on his heels and listened to an old woman crying in the nearby ward. Through the window was the pagoda at Lunghua Airfield. Already the flak tower appeared in a new light. For another hour Jim stood in line with the missionary widows, watched by the sentry. Dr Ransome and Dr Bowen had set off with Sergeant Nagata to the commandant's office, perhaps to be interrogated. The guards moved around the silent camp with their roster boards, carrying out repeated roll-calls. The war was about to end and yet the Japanese were obsessed with knowing exactly how many prisoners they held. Jim closed his eyes to calm his mind, but the sentry barked at him, suspecting that Jim was about to play some private game of which Sergeant Nagata would disapprove."
இரண்டாம் உலகப்போரின் முடிவிலிருந்து எழுதிய பல்லார்டின் எழுத்தில் உயிரின், பொருளின் அழிவு என்பது முக்கியமாகிறது. அழிந்த எந்திரங்கள், உடைந்த கட்டிடங்கள், காலியான கடற்கரைகள் என இவர் எழுத்து விரிந்துகொண்டே போகிறது. அதாவது எழுத்தை அழிவு என்ற புலத்தில் வைத்து நடக்கும் பரிசோதனையாகக் காண்கிறார் பல்லார்ட் எனலாம். 1962-ஆம் ஆண்டில் வெளியான The Drowned World மற்றும் 1973-ஆம் ஆண்டு வெளியான Crash இரண்டு ஆக்கங்களும் இந்தப்பாதையில் செல்வன.
1984-ஆம் ஆண்டு வெளியான Empire of the Sun நாவல், இரண்டாம் உலகப்போரின் முடிவில் நடக்கும் அழிவை, சுயசரிதையாகச் சொல்லிச் செல்கிறது. அதாவது நாற்பதாண்டுக்காலம் கழிந்த பிறகே, இந்த அழிவை எழுதுகிறார் பல்லார்ட். "இருபதாண்டு மறக்க, இருபதாண்டு நினைவூட்ட" என்கிறார், இதுபற்றிக் கேட்கும்போது. இன்னும் சொல்லப்போனால், தடுப்புமுகாம் என்ற நிறுவனத்தின் வரலாற்றில் சிறார்கள் அதை எதிர்கொண்ட விதத்தை விசேடமாகச் சொல்வதாக இந்த நாவலைக் காணலாம்.
அறிபுனை என்பது எங்கோ எதிர்காலத்தில் வரப்போகும் விண்வெளிக்கப்பல்கள் நிரம்பிய உலகமல்ல, மாறாக இதோ, இங்கே, ஏற்கனவே வந்துவிட்ட ஊடகங்கள், அவற்றை வழிநடத்தும் தொழில்நுட்பக்காரர்கள், சுற்றுலாத்துறையினர், தொலைக்காட்சிப் பெட்டிகள் நிரம்பிய புறநகர்வாழ் கட்டுப்பெட்டி மனிதர்கள் என்பவைதாம் நிஜமான அறிபுனைக்களம் என்கிறார் பல்லார்ட்.
நான் லண்டன் வந்த பிறகு பல்லார்டின் மூன்று நாவல்களை வாசித்தேன். Super Cannes நாவல், தற்போது நடக்கும் கார்ப்பரேட் வீழ்ச்சியை எதிர்நோக்கியது எனலாம். Millennium People நாவல், மத்தியதர வர்க்கத்தினர் பெருகும் பயங்கரத்தைக் கூறுவது - இதுதான் தற்போது இந்தியாவில் நடக்கிறது எனலாம். Kingdom Come நாவல், தீவிர நுகர்வுக்கலாச்சாரத்தின் ஃபாஸிஸத்தை விவரிப்பது - இனி வரப்போகும் உலகம் இப்படி அமையும் வாய்ப்புண்டு.
ஐந்தாண்டுகள் முன்பு பிரிட்டிஷ் அரசு அளித்த CBE என்ற விருதை நிராகரித்த பல்லார்ட், முடியாட்சி என்ற அசட்டுத்தனத்தைத் தொடர்கிற கேலிக்கூத்து, இந்த விருது இருப்பதே அவமானம் என்று கூறிவிட்டார்.
பல்லார்ட்டைப் புகழ்ந்து எழுதியவர்களில் முக்கியமானவர் - இரு ஆண்டுகள் முன்பு மறைந்த ஃப்ரெஞ்சு விமர்சகர் ழான் போத்ரியார்.
பல்லார்டின் சுயசரிதை, The Miracles of Life. கடந்த ஆண்டு இதை வாசித்து முடித்தேன். சரியாக ஓராண்டில் புற்றுநோய் முற்றி மறைந்திருக்கிறார்.
பல்லார்ட் பற்றி இன்னும் விரிவாக நிச்சயம் எழுதுவேன்.
ஜே.ஜி. பல்லார்ட் பற்றி சரியாக ஓராண்டு முன் எழுதிய பதிவு - புனைவும் எதார்த்தமும் குழம்பிய சுயசரிதை
மாறுபடும் சாவியுடன் - பௌல் ஸெலான்
மாறுபடும் சாவிகொண்டு
நீ திறக்கும்
வீட்டில் படரும்
பேசாமல் நீங்கியதன் பனி.
உன் கண் வாய் செவியினின்றோ
கெழுமும்
குருதியில் தங்கும்
உன் சாவியின் தேர்வு.
சாவியை மாற்றி
பனித்துகள் பலதுடன்
படரும் சுதந்திரம் கொண்ட
சொல்லை மாற்றுவாய்.
சொல்லுடன் உண்டாகும்
பனிப்பந்தும் யாது?
உன்னை மறுக்கும்
வளியில் தங்குமது.
Mit wechselndem Schlüssel
schleiβt du das Haus auf, darin
der Schnee de Verschewigenen treibt.
Je nach dem Blut, das dir quillt
aus Aug oder Mud ode Ohr,
wechselt dein Schlüssel.
Wechselt dein Schlüssel, wechselt das Wort,
das treiben darf mit den Flocken.
Je nach dem Wind, der dich fortstöβt,
ballt um das Wort sich der Schnee.
-- Paul Celan, Mit wechselndem Schlüssel, 1950?
18.4.09
அழுங்கல் - பௌல் ஸெலான்
Nah sind wir, Herr,
nahe und greifbar.
Gegriffen schon, Herr,
ineinander verkrallt, als wär
der Leib eines jeden von uns
dein Leib, Herr.
Bete, Herr,
bete zun uns,
wir sind nah.
Windschief gingen wir hin,
gingen wir hin, uns zu bücken
nach Mulde und Maar.
Zur Tränke gingen wir, Herr.
Es war Blut, es war,
was du vergossen, Herr.
Es glänzte.
Es warf uns dein Bild in die Augen, Herr.
Augen und Mund stehn so offen und leer, Herr.
Wir haben getrunken, Herr.
Das Blut und das Bild, das im Blut war, Herr.
Bete, Herr.
Wir sind nah.
-- Paul Celan, Tenebrae, 1960.
உமதருகில்
உமைப்பற்றும் நிலையில்
யாம்.
சிக்கெனப் பற்றினோம் உமை.
எம்மில் யாவரும்
தம்முள் பிறாண்டியதில்
எம்முடல் யாவையும்
உம்முடல் போல.
உமதருகில் யாம்.
பிரார்த்தியும் நீர்
எமை நோக்கி.
வளியெமை
வளைத்தழிக்கச் சென்றோம்
அங்கே.
குழி குனிந்து நோக்க
கிரகக்கல் தாக்கிய
குழி குனிந்து நோக்கச் சென்றோம்.
நீர்த்தொட்டி அங்கே
நோக்கச் சென்றோம்.
யாம் கண்டதும் குருதி.
நீர் சிந்திய குருதி.
ஒளிரும் குருதி.
எம் கண்ணிலது
நிழலாய்
உமை வார்த்து
எம் கண்ணும் வாயும்
திறந்தன
வெறித்து.
பருகினோம்
குருதியும்
குருதியில் கண்ட வார்ப்புமென.
பிரார்த்தியும் நீர்.
உமதருகில் யாம்.
-- மேற்கண்ட ஜெர்மன் கவிதையின் நேரடித் தமிழாக்கம், சென்ற வாரம் உயிர்த்தெழுந்த மூன்று நாட்களில் செய்தது - நாகார்ஜுனன்.
17.4.09
காதல் பிசாசின் கண்ணும் நோக்க - ஸில்வியா ப்ளாத்
காணும் எவரையும்
முடமாக்கும்
கருநிலவுக் கண்மணியர்
இருவரும்.
உள்நோக்கி,
தேரையின் உடலாவர்
அழகி இருவரில்
எவரும்.
ஆடியாம் இவருள்
உலகும் தான் கவிழும்:
இனிதாய்ப் புகழ்வோரின்
எரியம்பு பலவும்
திரும்பி,
தாம் விட்ட கை தாக்கும்.
தாக்கி
வெளிர்செம்புண் அபாயமதை
வீங்கவும் வைக்க
மாயம்பல கூட்டும்
மாயத்தாள் எந்தன்
முகமழிக்குமோ தீயும்?
பிம்பமதைத் தேடினேன்
வெதுப்பும் ஆடியில்.
அழகுபல கரிக்கும்
உலையவரை
வெறித்தும் யான்காண
தெறித்தும் பட்டாங்கே
வீனஸே ஒளிர..
Sylvia Plath, On Looking into the Eyes of a Demon Lover, 1955
ஓவியம் - பிக்காஸ்ஸோவின் மினோட்டார்
16.4.09
18 ஏப்ரல் - ஸில்வியா ப்ளாத்
என் நேற்றைய நாள் யாவின்
குழைசேறும்
என் கபாலக்குழியில் அழுக
கருத்தரிப்போ குடற்சிக்கலோ
சட்டென விளங்கும் யாதோ
என் வயிறும் சுருங்க
நினைக்கிலேன்
உனையல்லால் அதை.
பசும்பாலாடைக்கட்டி நிலவென
எப்போதோ வரும் உறக்கமும்
வயலட் இலை பலதாய்
சத்துள்ள உணவும் -
இவையே காரணம்.
புல்வெளியில்
ஊழென உறுத்துவைக்கும் அடி சிலதில்
வானம் மர உச்சியென இடம் சிலதில்
எளிதில் மீளாமல்
நேற்றுத் தொலைந்ததுமோர் எதிர்காலம்
மருள்மாலையிலோர் டென்னிஸ் பந்தென.
15.4.09
துயருறுதலும் திரிதலும் - ஷார்ல் போதலேர்
Dis-moi ton coeur parfois s'envole-t-il, Agathe,
Loin du noir océan de l'immonde cité
Vers un autre océan où la splendeur éclate,
Bleu, clair, profond, ainsi que la virginité?
Dis-moi, ton coeur parfois s'envole-t-il, Agathe?
La mer la vaste mer, console nos labeurs!
Quel démon a doté la mer, rauque chanteuse
Qu'accompagne l'immense orgue des vents grondeurs,
De cette fonction sublime de berceuse?
La mer, la vaste mer, console nos labeurs!
Emporte-moi wagon! enlève-moi, frégate!
Loin! loin! ici la boue est faite de nos pleurs!
— Est-il vrai que parfois le triste coeur d'Agathe
Dise: Loin des remords, des crimes, des douleurs,
Emporte-moi, wagon, enlève-moi, frégate?
Comme vous êtes loin, paradis parfumé,
Où sous un clair azur tout n'est qu'amour et joie,
Où tout ce que l'on aime est digne d'être aimé,
Où dans la volupté pure le coeur se noie!
Comme vous êtes loin, paradis parfumé!
Mais le vert paradis des amours enfantines,
Les courses, les chansons, les baisers, les bouquets,
Les violons vibrant derrière les collines,
Avec les brocs de vin, le soir, dans les bosquets,
— Mais le vert paradis des amours enfantines,
L'innocent paradis, plein de plaisirs furtifs,
Est-il déjà plus loin que l'Inde et que la Chine?
Peut-on le rappeler avec des cris plaintifs,
Et l'animer encor d'une voix argentine,
L'innocent paradis plein de plaisirs furtifs?
—- Charles Baudelaire, Moesta et errabunda, Fleurs du mal, 1857
சொல், அகதா!
ஒருக்கில்
தூரம் பறக்குமோ
உன் இதயம்?
அசிங்க நகரமெனும்
கரும் ஆழியினின்றும்
தூரம் பறக்குமோ
திகழ்வொளிர்ந்து
கன்னிமையெனத் தெளியுமோர்
நீல ஆழி நோக்கி?
எம் உழைப்பாற்றும்
கடலே!
எல்லைகாணாக் கடலே!
திமிதமிடி நீ பாட
சக்திதரும் ராட்சதரும்
யார்?
தாலாட்டும் உன்னதமாய்
உறுமும் வளியை
உன் உடன் வாசிப்பதும்
யார்?
ரயிலே,
என்னைத் தூக்கிச்செல்!
கப்பலே,
இன்னும் கடத்திச்செல்!
மண்ணும் இங்கானது
நம் கண்ணீரால்.
சொல், அகதா!
’குற்றம் கழிவிரக்கம்
துயரினின்றும்
தூர தூரம்
ரயிலே,
என்னைத் தூக்கிச்செல்!
கப்பலே,
இன்னும் கடத்திச்செல்!’
எனக் கேட்டிலையோ
உன் இதயம்!
நறுமண வானுலகே!
தெளிநீல வான்கீழ்
களிகாதல் கொண்டு
காதல்கண்ட யாவும்
காதல் பெறவென
களிமிகு இதயம் மூழ்கும்
நறுமண வானுலகே!
இன்னும் நீ தூரமோ?
எம் காதலிளம்பருவமதன்
பசிய வானுலகே!
பயணம் பாடலும்
முத்தம் மலர்ச்செண்டும்
மலைப்புறம் பின்னே
வயலின் வாசிப்பின் அதிர்வும்
திராட்சைரஸக் குடம் பலதுடன்
வன மாலையும்
எனக் கழிந்த
எம் காதலிளம்பருவமதன்
பசிய வானுலகே!
நீ
இந்தியா சீனாவிலும்
இன்னும் தூரமோ?
மாசிலா வானுலகே!
களவின்பம் காணுலகே!
வழக்கிட்டுக் கதறியுனை
அழைக்கவும் ஆகுமோ?
வெள்ளிக்குரலால் உனை
உயிர்ப்பிக்கவும் கூடுமோ?
குறிப்பு
1. உலக-வழக்கு, செய்யுள்-வழக்கு என்ற diglossia-வுக்கு தமிழில் நெடிய வரலாறு உண்டு. நாட்டுப்புறங்களில் பாடப்பெற்றவை உலக-வழக்கு எனில், சங்கக்கவிதை என்று இன்று நாமழைக்கும் கவிதைகளாக எழுதப்பெற்றவை செய்யுள்-வழக்கு. ஆக, அந்தக்காலத்திலிருந்து இந்த வரலாறு உண்டு... புதுக்கவிதை என்பதை உலக வழக்கு என்று கருதுவோர், தற்காலப் பேச்சுமொழியில் இந்தக்கவிதைகளை ஆக்குங்கள் என்று எனக்குக் கோரிக்கைகள் வைப்பதுமுண்டு. மாறாக, ’செய்யுள்-வழக்கு’ என்பதைப் புதுக்கவிதைக்கு முந்திய கட்டமாகக் காணாமல், அதன் உள்-கட்டமைப்பாகக் காண வேண்டுகிறேன்.
2. மேற்கண்ட போதலேர் கவிதை, ஃப்ரெஞ்சுப்பாடல் வடிவில் இருப்பதாகக் கொண்டாலும் தமிழில் அதைப் பாடலாக ஆக்காமல் புதுக்கவிதை வடிவத்தில்தான் செய்திருக்கிறேன்.
14.4.09
தயை - ஸில்வியா ப்ளாத்
வீடெனதில் மிதப்பதும்
தயை.
ஆம், தயை எனும் நல்லாள்.
ஆழியிவளின்
செந்நீலக்கல் பல
ஜன்னலில் புகையும்.
ஆடி பல
புன்னகையில் நிரம்பும்.
குழவிக்கதறலொப்ப
நிஜமானதும் யாது?
இதனினும் கதறும் காட்டுமுயல்
எனினும்
அதற்கில்லை ஆன்மா.
நோயேதும் ஆற்றும் சர்க்கரை
என்பது தயைவாக்கு.
ஆயினும் சர்க்கரை ஒரு திரவம்.
அதன் ஸ்படிகங்கள் பிசுபிசுக்கும்.
தயையே, தயையே
இனிதாய் இனி
துண்டுபல
நீ பொறுக்கலாம்.
எனதான
ஜப்பான் பட்டும்
நம்பிக்கையற்ற பட்டாம்பூச்சிகளும்
பிணைக்கப்பெறலாம்,
மயக்கம் தரப்படலாம்
எப்போதும்.
இப்போதோ
நீ வருவாய்
நீராவியணைக்க
தேநீர்க்கோப்பையுடன்.
குருதித்தாரையே கவிதை.
நிறுத்த முடியாது அதை.
நீ எனக்களித்த
குழவியரும்
இரு ரோஜாக்கள்.
-- Sylvia Plath, Kindness, 1963.
நீரைக் கடத்தல் - ஸில்வியா ப்ளாத்
கரும் ஏரி, கரும் படகு,
வெட்டுண்ட-காகித மனிதர்
கருப்பாய் இருவர்.
இங்கே நீரருந்தும்
கருமரம் பல போவதெங்கே?
இவற்றின் நிழலோ
கனடாவைப் போர்த்தும்
நிச்சயம்.
சிற்றொளியும் எஞ்சும்
நீர்மலர் பலதினின்றும்.
பரபரக்க வேண்டாம் நாம்
என்னும்
இவற்றின் இலைபலதும்
சுழித்தும் தட்டையாயும்
கரு அறிமொழி நிறைந்தும்.
துடுப்பினின்றும் அலங்கும்
குளிர் பல்-உலகம்.
கருமையின் ஆன்மா
நம்மில்
மீன்களில்.
வெளிறும்
விடைபெறும்
தடங்கலும்
கை உயர்த்தும்.
அல்லி மலரிடை
திறக்கும் விண்மீன் பல.
வெளிப்பாடும் அற்று
மயக்குமிப் பேரழகால்
குருடும் ஆகாயோ நீ?
இது
வியந்துபட்ட ஆன்மா பலதின்
மௌனம்.
-- Sylvia Plath, Crossing the Water, 1962.
13.4.09
தமிழ்நாட்டில் இலக்கியம் பரவுவது கஷ்டம் - தமிழவன்
சமீப காலமாகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றின் அழைப்பை ஏற்க ஆரம்பித்துள்ளேன். நான் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்தபோது அழைப்புகளை ஏற்க முடிந்ததில்லை. காரணம் படித்துக் கட்டுரை தயார்செய்ய நேரம் கிடைத்ததில்லை. இப்போது அப்படியல்ல. எனக்குப் படிக்கவும் எழுதவும் நேரம் கிடைத்து வருகிறது.
சமீபத்தில் கோழிக்கோட்டுப் பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரையும் தமிழ்ச்சூழலையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வாசித்தேன். அதற்குச் சில நாட்கள் முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அழைத்தது. அதற்கிடையில் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பேசினேன். நோயல் ஜோஸஃப் இருதயராஜ் அழைத்த பாரதிதாசன் பல்கலைக்கழகக் கருத்தரங்குக்கு இரண்டாம் முறையாகவும் போகமுடியவில்லை.
கோழிக்கோடு பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அங்கு நான் எதிர்பார்த்ததுபோல் தோப்பில் முகம்மது மீரான் வந்திருந்தார். என் கட்டுரை முதல்நாள் மதியம் படிக்கப்படவேண்டும். என்னுடன் மேடையில் அமர்ந்திருந்தவர் ராஜீவன். திருவனந்தபுரத்திலிருந்து வந்திருந்தார். கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதைக் கூறினார். நான் அவருடைய மாவோயிஸ்ட் காலகட்டத்தில் அவர் வெளியிட்ட கல்லூரி மலர் எப்படிப் புரட்சித்தீயை கேரளத்தில் மட்டுமன்றி, தமிழர்கள் மத்தியிலும் பரப்பியது என்பதைச் சொன்னேன். நாங்கள் பலமுறை சந்தித்துள்ளதை அவர் நினைவூட்டினார்.
ராஜீவன் சமீபத்திய அனைத்திந்தியப் போக்கை கேரளத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் சீரிய இலக்கிய விமரிசகர். மிகப் பிந்திய கோட்பாடுகள் பற்றிய அறிவுடன் மலையாளத்தின் தனித்தன்மையை வடிவப்படுத்தும் விமரிசகர் என்று அறிந்துள்ளேன்.
நான் தமிழ் மாடர்னிசம் பஷீர் போன்ற நெகிழ்ச்சியான கதைசொல்லியை ஏன் ஏற்காது என்பதுபோல் கட்டுரை அமைத்திருந்தேன். என் கட்டுரையை நான் வாசித்து முடிந்த பின்பு மலையாள இணைப்பேராசிரியரான முனைவர் உமர் கருத்துரைப்பவராய் வந்து என் கட்டுரை அவரைக் கவர்ந்ததாகக் கூறினார். பின்னர் தோமஸ் குட்டி, முனைவரும் பேராசிரியருமான பவித்திரன், பஷீர் மாடர்னிஸ்ட் எழுத்தாளர்தான் என்றனர். உடனே நான் இடையீடு செய்து நான் ’மாடர்ன்’, ’மாடர்னிஸ’, ’மாடர்னிட்டி’ என்ற மூன்று வார்த்தைகளையும் எப்படி வேறுபடுத்துகிறவன் என்று விளக்கி மலையாளத்தில் ஐயப்ப பணிக்கர் போன்ற ஒருவரால் கவிதையில் மாடர்னிசம் தொடங்கப்பட்டாலும் காக்கநாடன் போன்றோ, முகுந்தன் போன்றோர் பஷீர் ஒரு மாடர்னிஸ்ட் என்று கூறமாட்டேன் என்று கூறினேன். தொடர்ந்து, குருக்ஷேத்திரம் என்ற நீள்கவிதை எழுதிய ஐயப்ப பணிக்கரும் கன்னடத்தில் கோபாலகிருஷ்ண அடிகாவும் தொடங்கிவைத்த மாடர்னிஸம் வேறு, கடம்மநிட்ட ராமகிருஷ்ணனிடம் காணப்படும் மாடர்னிஸத்துக்கு எதிரான பண்புகள் வேறு; இவை பிரித்தறியப்பட வேண்டும்; இந்தச் சிந்தனைப்பின்னணியில் பஷீர் மாடர்னிஸப் பிரதிநிதியல்ல என்றேன். பல பேராசிரியர்கள் எங்கள் விவாதத்தில் கலந்துகொண்டனர். பேராசிரியர் அச்சுதன் உண்ணி, அய்யப்ப பணிக்கருக்கு முன்பே அக்கித்தம் மலையாளத்தில் மாடர்னிஸக் கவிதைகளை எழுதினார் என்றார். ஆந்திரத்திலிருந்து வந்த விமரிசகர், என்னுடைய மாடர்ன், மாடர்னிஸம், மாடர்னிட்டி பற்றிய விளக்கம் அவருக்கும் ஏற்க முடிந்ததுதான் என்றார்.
விவாதத்துக்கு இடையில், எழுத்தாளர் சாரு நிவேதிதா தம்மை சுந்தர ராமசாயின் தத்துவ எதிரி என்று கூறும் விஷயத்தை ஒருவர் தெரிவித்தார். (வெளியில் தனியாகப் பேசும்போது `தயிர்வடை` ஸாகித்தியம் என்றால் என்ன என்று இவர் என்னிடம் கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கேரளத்தில் இப்படித் தமிழ்மொழியைப் பரப்பும் பணி பற்றி தமிழகத்தில் யாரிடமும் கூறாமல் அடக்க ஒடுக்கமாக இருக்கிறாரே சாரு என்று).
மறுநாள் காலை இரண்டு மூன்று கட்டுரைகள் குறிப்பிடும்படியாக இருந்தன. ஒன்று மலையாளப் பெண்ணிய விமரிசகரான சாரதா என்பவர் வாசித்தது. பலர் கவனத்தைக் கவரும்படி முன்னணிக்கு வரும் பெண்ணிய விமரிசகர் என்று என்னிடம் சொன்னார்கள். இவர், ஒரு பெண் காதலியாகவோ, தங்கையாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ இருக்கலாம். ஆனால் ஒரு பெண் இவற்றுக்கு அப்பால் ஒரு பெண்ணாகத் தன்னை உணர்வதுதான் தமக்கு முக்கியம் என்றார். உலகிலேயே ரோசுக்குட்டி என்ற பாத்திரத்தைப்போல் பார்க்கமுடியாது. ஏனெனில் பஷீரின் ரோசுக்குட்டி வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றி யோசிக்காமல் தனக்கு டாக்டர் வந்து பேறு பார்க்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறாள் என்றார்.
தமிழ் நாவலாசிரியர் தோப்பில் முகம்மது மீரான் மலையாளத்தில் பேசினார். ஆரம்பத்தில் தம் சுயவரலாற்றைக் கூறினார். ஆரம்பத்தில் மலையாளம் மட்டுமே படித்ததாகவும், பிறகு தமிழைச் சுயமாய்க் கற்றதாகவும் சொன்னார் மீரான். தம்முடைய மலையாளம் ’சின்ன மலையாளம்’ என்றார். அவருக்குச் சரியான பிறந்த தேதியை அவரது தாயாரால் சொல்லமுடியவில்லை என்றார். ஒரு ’அங்ஙத்தை’ மூலம் கிராம நூலகத்திலிருந்து ஒரு கதைப்புத்தகம் கிடைத்ததாகவும் அதைப் படித்தபோது நாமும் ஏன் அந்த நூலை எழுதிய பஷீர் போன்று முஸ்லீம் சமூகம் பற்றி எழுதக்கூடாது என்று தோன்றியது என்றும் கூறினார் மீரான். ஆக, மீரான் தமிழில் கொண்டுவந்த இலக்கியம் இன்னொரு மொழியில் பரவிய இலக்கிய மாதிரியிலிருந்து வந்தது என்பது இலக்கிய வரலாற்றுக்கு மிகவும் உபயோகமான தகவலாகும்.
இந்த மாதிரி பஷீர் மலையாளத்தில் கதையை நீக்குப்போக்காக எழுதிய காலகட்டத்தில் ஜெயகாந்தன், அகிலன் போன்றோர் தமிழில் எழுதினார்கள். கம்யூனிசம் பரவிய கேரளத்தில், ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, அகிலன் போன்றோரிடம் காணப்பட்ட நீதி சொல்லும் முனைப்பு பஷீரிடம் இல்லாமலிருந்தது ஆச்சர்யமான விஷயமாகும். தமிழில் நீதி இலக்கியம் என்பது தமிழ்த் தேசிய உளவியலில் நீக்கமற நிறைந்ததாகும். ஸ்டூவர்ட் ப்ளாக்பர்ன் என்ற அமெரிக்காவில் பிறந்த தமிழ் நாட்டுப்புறவியல் ஆய்வாளர், தமிழ் நாட்டுப்புறக்கதைகளின் அடிப்படை நீதிசொல்வதாகும் என்று கூறுகிறார் (இவருடைய Moral Fictions என்ற நூலில் இதைப் பார்க்கலாம்). தமிழர்களின் பழமையான சமூகம் சிதைவுண்டதைப் பார்த்து நீதி என்ற ஆலமரத்தைத் தமிழர்கள் பற்றிப் பிடித்திருக்கலாம். அகிலனையும் மு. வரதராசனையும் தாக்கி இலக்கியத்துக்கு நீதி சொல்லும் நோக்கமில்லை என்று ஸ்தாபித்தவர் க.நா. சுப்பிரமணியம் என்று நினைக்கிறேன்.
களப்பிரர்களும் பல்லவர்களும் முஸ்லீம்களும் விஜயநகர தெலுங்கர்-கன்னடர்களும் மராட்டியர்களும் தமிழகத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் ஒரு பழைய சமூகம், நீதிவாக்கியத்தை-தாயாகவும் தந்தையாகவும் பற்றிப் பிடித்திருக்கிறது. எனவேதான் இலக்கியம் தமிழ்த்துறைகளில் இவ்வளவு நாட்களாகியும் வேர் பிடிக்காமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். இலக்கியத்தைக் கருத்துத்தொகுப்பாகத்தான் தமிழ்க்குடி பார்க்கிறது. பெரியார் தன் சிந்தனையை உறுதியான கருத்துகளாய்த்தான் பரப்பினார். பெரியாருக்குப் புதிய சிந்தனையான இலக்கியத்தில் நாட்டமில்லை. பெரியாருக்கு மட்டுமல்ல; திரு.வி. க., அயோத்திதாசர் போன்ற தமிழ்ச்சமூகத்தின் முக்கியமான சிந்தனையாளர்கள் யாருக்கும் இலக்கியத்தின் சூட்சுமம் தெரியாது. முதன்முதலாக இலக்கியம் என்ற ’சிந்தனையற்ற சிந்தனை’ பற்றிக் கவலைப்பட்டவர் க.நா. சுப்பிரமணியம்தான் என்றே தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் இல்லாத சூட்சுமம் வேறு எங்கும் இல்லை. தொல்காப்பியம் சூட்சுமமான பல கருத்துகளைச் செய்யுள், கவிதை பற்றிச் சொல்கிறது. ஆனால் தமிழ்ச்சமூகம் நீதிபோதனையை அங்கீகரித்த அளவு, நீதிபோதனைக்கு எதிர்ப்பான இலக்கியத்தை அங்கீகரிக்கவில்லை. தமிழ்ச்சமூகத்தின் மனதில் அதன்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆழத்தில் வடுவாகப் பதிந்துள்ளன. பிற கலாச்சார, பிற ஆட்சியாளர்களின் தாக்குதல்கள் கண்டு பீதியுற்றுள்ளது தமிழ்ச்சமூகம். அதனை இன்றைய சினிமாவில் வரும் நீதிபோதனையாய்ப் பார்க்கிறது தமிழ்ச்சமூகம். வில்லனை அடித்து உதைக்காத தமிழ்சினிமா ஏன் வெற்றி பெறுவதில்லை என்றால் இதுதான் காரணம். கன்னடத்திற்கு ஏழு ஞானபீட பரிசுகள் வந்துள்ளன; கேரளத்தில் இலக்கியவாதிக்கு அதிகமான மதிப்புள்ளது. தமிழில் எந்தப் படைப்பாளி செத்தாலும் செய்தித்தாளில் செய்திகூட வருவதில்லையே ஏன் என்று கேட்டால் இதுதான் காரணம். 
தமிழ்ச்சமூகம் நீதிபோதனையால் இறுகிப்போன சமூகம். அதனால்தான் வன்முறையான சமூகமாகவும் இருக்கிறது. ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நீதிபோதனையால்தான் பிராமணர்களின் பூணூலையும் குடுமியையும் அறுக்கலாம் என்ற கருத்து அங்கீகரிக்கப்பட்டது. எதிலும் தமிழ்ச்சமூகத்துக்குச் சந்தேகங்கள் இல்லை. கற்பு பிறழ்ந்த மகளின், மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு போலீஸிடம் சரண்புகும் சமூகம் இது. சினிமாவில் நியாயத்துக்காகப் போராடுபவன் உண்மையிலும் நியாயத்துக்காகப் போராடுவான் என்ற கருத்து எப்படி வருகிறது? நீதி, நியாயம் என்ற நீதிகள் சமூகத்தின் பிடிவாதம். அல்லது நீதி என்று கருதப்படுவதன்மீதான பிடிவாதம். விட்டுக்கொடுத்தல், அதுவும் சரி இதுவும் சரி என்ற நெளிவுசுளிவு போன்றன வேறு ஒரு சமூகக்குழுவின் குணம், நாம் ’வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு’ என்று பேசும் சாதி, பேசும் மாவட்டத்தவர் என்று பெருமை அடித்துக் கொள்வதுகூட நீதிசார் மனோநிலையின் விளைவுதான்.
இவற்றின் அடிப்படையால்தான் இலக்கிய உணர்வு தமிழின் ஒரு நிறுவனமாக வரவில்லை. தி.மு.க. இலக்கியவாதிகள் தோற்றுப்போனார்கள் என்று கூறுகிறோமே அது இந்த அடிப்படை சமூக அமைப்பால் ஏற்பட்ட விளைவு. அவர்கள் ஆரியர்களை வில்லன்களாக, மேல்தட்டினரை வில்லன்களாகக் காண்பதற்கான காரணம் நம் சமூகம் நீதிபோதனைச் சமூகம் என்பதால்தான்.
தோல்வியைத் திறமையாய்க் கையாளத் தெரியாத சமூகம் பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டி வரும். சமீபத்திய வரலாற்றில் இதற்கான அறிகுறி முத்துக்குமார் என்ற இளைஞர் தன் சாவைக் கையாண்ட விதம். நிறைய யோசிக்க வைப்பது இந்தச் சாவு. தமிழ்ச்சமூகம், அதன் தலைவர்கள், இலக்கியம், தியாகம், இலட்சியம், வரலாறு என்று.
மீரான் நாவல்கள் பஷீர் நாவல்களால் உந்துதல் பெற்றாலும் மீரான் நாவல்கள் தமிழின் நீதிபோதனை மனோநிலையை திறமையாகக் கையாள்கின்றன என்பதால்தான் அவை பிரபலமாகியுள்ளன.
கோழிக்கோட்டுப் பல்கலைக்கழக முன்னாள் மலையாளப் பேராசிரியர் வேணுகோபாலப் பணிக்கர், தமிழ்நாட்டில் படித்தவர். மீரானின் ஒரு நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து அதற்காக சாகித்திய அக்காதமியின் மொழிபெயர்ப்புக்கான பரிசைப் பெற்றவர். அவருடைய அழகிய கேரளப்பாணியில் கட்டப்பட்ட வீட்டில் வைத்து, மீரான், தம் நாவல்களில் மூன்று மலையாளத்தில் வந்துள்ள விபரத்தைச் சொன்னார். டி.சி. புக்ஸ் வெளியிட்டுள்ளதாய்க் கூறினார். டி.சி. புக்ஸ் என்ற பதிப்பகம் எல்லோருக்கும் பணம் கொடுப்பதில்லை என்றும் பணம் கொடுக்கும் ஆசிரியர் பட்டியலில் தம் பெயர் இருப்பதையும் சொன்னார்.
மேலும் பேசும்போது பல இலக்கிய ஆசிரியர்களைப் பற்றி மனந்திறந்து பேசினார். நகுலனை உயர்ந்த படைப்பாளி என்றார். கலில் ஜிப்ரானின் தீர்க்கதரிசி என்ற நூலை தனக்கு நகுலன் தந்ததை நினைவுகூர்ந்தார். நான் ’நகுலன் படைப்புகளைப் படித்துள்ளீர்களா’ என்று கேட்டேன். இல்லை, ஒரே ஒரு புத்தகம் படித்தேன், புரியவில்லை என்றார். பின் ’சுரா’ என்பவர் பஷீரின் நாவல்களைப் படித்து மூடிவைத்துவிட்டு மொழிபெயர்ப்பதாகக் கருத்தரங்கில் கூறினீர்களே என்று கேட்டேன். ’ஆமாம், உண்மைதான்’ என்றார்.
தமிழ்நாட்டில் இலக்கியம் பரவுவது கஷ்டம்தான் என்று நினைத்தேன்.
நன்றி - உயிரோசை
படங்கள் - வரலாற்றில் கோழிக்கோடு - பெயர்பெற்ற குட்டிச்சிறா மசூதி, மன்னர் சாமுத்ரியைச் சந்திக்கும் வாஸ்கோ ட காமா
இருந்ததும் இவருள் மண் - பௌல் ஸெலான்
இருந்ததும் இவருள் மண்.
இவர் தோண்டத் தோண்ட
இவர்தம் நாளும் போனது
இரவும்தான்.
தம்மவர் கடவுள்
இனியும் போற்றார்
யாவுமிவை விழைந்தார் கடவுள்
யாவுமிவை கண்டார் கடவுள்
எனக் கேட்டவர்
தோண்டினர்
இனி ஏதும் கேளார்
ஞானம் பெறார்
கானம் காணார்
தமதெனப் புதுமொழி ஏதும்
வரையறுக்காதவர்
தோண்ட
வந்ததோர் அமைதி
பிற்பாடு புயலும்
அத்துடன் ஆழிபல.
நான் தோண்ட
நீ தோண்ட
புழுவும் தோண்ட
ஆங்கோர் பாடல் சொல்லும்:
தோண்டுவரில்
ஆரோ நீ?
இலரோ நீ?
ஆரும் இலரோ
உனக்கு?
எங்குமற்ற இடம்
நீ செல்வதும்
என்னானது?
நீ தோண்ட
நான் தோண்ட
நம் விரலாழியும் விழிப்ப
உன் வரை
நான் தோண்ட..
Es war erde in Ihnen
und sie gruben.
Sie gruben und gruben,
so ging ihr Tag dahin,
ihre Nacht.
Und sie lobten nicht Gott
der,
so hörten sie,
alles dies wollte,
der,
so hörten sie,
alles dies wusste.
Sie gruben und hörten nichts mehr;
sie wurden nicht weise,
erfanden kein Lied,
erdachten sich keinerlei Sprache.
Sie gruben.
Es kam eine Stille,
es kam auch ein Sturm,
es kamen die Meere alle.
Ich grabe,
du gräbst,
und es gräbt auch der Wurm,
und das Singende dort sagt:
Sie graben.
O einer, o keiner, o niemand, o du:
Wohin gings, da's nirgendhin ging?
O du gräbst und ich grab,
und ich grab mich dir zu,
und am Finger erwacht uns der Ring.
-- Paul Celan, Es war Erde in ihnen, 1950.
ஜெர்மனிலிருந்து தமிழாக்கம் - நாகார்ஜுனன். படம் - முல்லைத்தீவுப் போர்க்களப்பகுதி.
12.4.09
ஆடி - ஸில்வியா ப்ளாத்
வெள்ளியும் துல்லியமும்
நான்.
காணும்முன் கருத்தில்லை
எனக்கு.
நீ காணும்
ஏதும் உடன் விழுங்கும்
நான்.
ஏதும் அப்படியே
காதலோ வெறுப்போ
பனியாய் மூடாமல்.
கொடூரனல்லன்
நான்
மெய்யானவன்.
நான்மூலை கொண்ட
சிறுதெய்வமதின் கண்
நான்.
என் பெரும்பொழுது
த்யானமும்
எதிர்ச்சுவரில்தான்.
காலமெலாம் கண்ட
வெளிர்சிகப்பு நிறமும்
சிறுபொட்டும் கொண்ட
எதிர்ச்சுவரும் இனி
என் இதயத்தின் பகுதி.
இருந்துமது ஒளிரும்.
முகம் பலவும் இருளும்
எம்மையும் பிரிக்கும்
மீண்டும் மீண்டும்.
இப்போதோர் ஏரி
நான்.
பெண்ணொருத்தி
என்னில் குனிந்து
தான் யாரென்ப
என்னில் ஆழத்தேடி
பின் மெழுகுவர்த்தியும் நிலவுமெனும்
பொய்யரவர் புறம் திரும்ப,
கண்ட அவள் புறமும்
காட்டுவேன் விசுவாசமாய்.
கண்ணீரும் கையசைவும்
எனக்கவள் தரும் பரிசு.
வரும் போகும்
அவளுக்கு
நிச்சயம் வேண்டும்
நான்.
நிதம் காலை
இருளை இடமாற்றும்
அவள் முகம்.
என்னில்
அவள் மூழ்கடிப்பதும்
ஓரிளம்பெண்.
என்னில்
அவள் நோக்கி எழுவதும்
முதியோள்,
நாள்தோறும்
பயங்கர மீனாய்.
-- Sylvia Plath, Mirror, 1961.
படியிறங்கும் ஈவாவுக்கு - ஸில்வியா ப்ளாத்
கதறும் பல கடிகாரம்.
என் அன்பே!
மௌனமும் பொய்.
சக்கரம்பல சுழல
இயங்கும் பிரபஞ்சம்,
சுரிவளையும் படிக்கட்டில்
நீ
நிற்கப் பெருமிதம் கொண்டு.
காற்றில் துரோகியாகும்
சிறுகோள்பல.
நீள்வட்டப் பழம்தந்திரமாய்
சதிசெய்யும் கோளும்பல.
கதறும் பல கடிகாரம், என் அன்பே,
மௌனமும் பொய்.
பிரிபடும் ரோஜாவெனும்
சிகப்பும்
பாடும் உன் முடியில்.
இதயம் எரிந்தால்
குருதியும் பீறிடும் நித்தியமாய்,
சுரிவளையும் படிக்கட்டில்
நீ
நிற்கப் பெருமிதம் கொண்டு.
புதிரான விண்மீன் பல
வளிமண்டலம் சுருட்டும்.
தலைப்பிட்ட பல்ஞாயிறும்
தம் திட்டம் பலதில் சுழலும்.
கதறும் பல கடிகாரம்.
என் அன்பே!
மௌனமும் பொய்.
ஊனும் விரும்பின்
அழலும் காதல்
என்றென்றுமென
தேன்சிட்டெனும் அமரர்
உரக்கச் சொல்வர்,
சுரிவளையும் படிக்கட்டில்
நீ
நிற்கப் பெருமிதம் கொண்டு.
சுழலும் ராசி ஈறாறும்
ஆண்டை விரட்டும்.
சகிப்பற்ற அழகும்
கற்றல் தவிர்க்கும்.
சுரிவளையும் படிக்கட்டில்
நீ
நிற்கப் பெருமிதம் கொண்டு,
கதறும் பல கடிகாரம்.
என் அன்பே!
மௌனமும் பொய்.
--- Sylvia Plath, To Eva Descending the Stair, 1954.
உருவகங்கள் - ஸில்வியா ப்ளாத்
அசைநவப் புதிராய் நான்.
ஆனையும்
இல்லமாய்ச் சிந்தனையும்
இருபற்றிழையில் நடைபயிலும்
முலாம்பழமும் நான்.
செம்பழமே, தந்தமே, மென்மரமே
இதோ புளிநொதித்தெழ்ப பெரிதாய் ரொட்டியும்
தடிக்கும் பையில் புதிதடித்த நாணயமும்.
ஒரு வழி, ஓர் அரங்கம்,
பசுவில் கன்றும் நான்.
பசும் ஆப்பிள் பைநிறையப் புசித்து
ரயிலேறும் நான்.
இறங்கவும் போவதில்லை நான்.
-- Sylvia Plath, Metaphors, 1959.
11.4.09
புலம் பிரிந்தோர் அழிவிதி - ஸில்வியா ப்ளாத்
ஈண்டு
அதிபேருறக்கம் எமதின்
வணர் கும்மட்டம் பலதினின்றும்
வீடு திரும்பக் காண்போம்,
மனம் எமதின்
குறுவழி பலதினூடே
எழும்பிச் சுருங்கைநிறை
பேருயர் நகரம்.
அன்று
யாம் களியாட்டமிட்ட
பசும் நடைவழி பல,
ஈண்டு
அபாய ராட்சதர்
நடமாடும் நரகம்.
யூதத்தேவதை, வயலின் பல
இரண்டும் ஊமையாக,
நாள் மீட்கப் பின்செல்வோம்
ஐகாரஸெனக் கழன்று வீழுமுன்.
பாழ்பட்ட பலிபீடம் பல,
ஒளிஞாயிறதன் குறுக்கே
கறுப்பாய்க் கிறுக்கிய
கெட்ட வார்த்தை பல
மாத்திரம்
காணும் யாம்.
இருந்தும்
எம் இனமெனும்
புதிர்க்காய் மூடும்
ஓடுடைக்கப் பிடிவாதமாய்
முயலும் யாம்.
--- Sylvia Plath, The Doom of Exiles, 1954.
9.4.09
நீர்யாமம் - ஸில்வியா ப்ளாத்
ஆழித் திரவமதில்
ஒளி நீர்க்க
மாயநீலத் திரி
பலவும்
விசைத்தாரை
மீதொளிரும்
தகர இலை கொண்ட
மென்கீற்றாய்த் துவளும்.
பின்
வெளிறித் தோற்றுழலும்.
வெள்ளி சாய்த்துத்
தடுமாறும்.
ஆழத்தில் அன்றி
விறுவிறுக்கும் மீன்குஞ்சும்
முலாமாய் மின்னும்.
திராட்சைநீல
கிளிஞ்சலதன்
நெகிழும் மென்கதவும்
தானே புடைக்கும்.
மங்கிய நிலாக்கோளமாய்
நீலக்கோள இழுதுமீன்
பால்பசியப் பிரகாசிக்கும்.
விலாங்கு பல
தம் சிக்காத திருகுவாலில்
தந்திரமாய் முறுகும்.
சாதுர்ய நண்டுபல
சமர்த்தக் கால் கொண்டு
கரும் ஒலிவ நிறத்தில்
நடைபயிலும்.
கீழமிழ்ந்த மணியின்
வெண்கலத் தொனியாய்
மங்கிக் கூர்மழுங்கி
ஒலியும் வரும்.
--- Sylvia Plath, Aquatic Nocturne, 1958.
குழவியற்ற பெண்டிர் - ஸில்வியா ப்ளாத்
கருப்பை
கிலுகிலுக்கும்
தன் கோதான
நிலவும்தான்
மரத்தினின்றும்
கசியும்
போக்கிடம் ஏதுமின்றி.
ரேகையற்ற கையென
என் நிலப்பரப்பில்
முடிச்சாய்க் குவிந்த
சாலை பலதின்
முடிச்சும்
நானாக.
உடலிதுவும்
தந்தமிதுவும்
நீ சாதிக்கும்
ரோஜாவும்
நானாக.
குழவியின்
கடவுளொப்பாக் கதறலாக.
ஆடிபலதை
என் பிம்பத்தை விசுவசித்துப் பின்னும்
சிலந்தியென
நானாக.
இயம்ப நான்
வேறேதுமற்ற
குருதியை,
கரும் செங்குருதியை
நீ சுவைக்க,
காடெனதும்
இழவெனதும்
மலையதுவும்
பிணம்பலதின்
வாயொளிர்வும்
மற்றாங்கே.
--- Sylvia Plath, Childless Women, 1963.
ஸில்வியா ப்ளாத் கடைசியாக எழுதிய கவிதைகளில் ஒன்று. மலடியர் என்ற சொல்லை நான் பாவிக்கவில்லை.
8.4.09
நீயாய் - ஸில்வியா ப்ளாத்
கோமாளியாய்க் கையூன்ற
காலும் விண்மீன் நோக்க
மகிழ்ச்சி மிகக் கண்டாய்.
நிலவான கபாலமும்
மீனான செதிலும் கொண்டாய்.
பொதுப்புத்தியில்
டோடோ பறவையாயுன்
கட்டைவிரல் குவித்துத் தோற்க
சுழல்நாடாவாய்ச் சுருண்டு
கூகையாய் இருள் பின்சென்று
நாளும்
நான்காம் ஜூலை முதல்
முட்டாள் ஏப்ரல் வரை
செங்கிழங்கின் ஊமையாய்
ஓ, மேலெழும்
என் சிறு ரொட்டித்துண்டே!
மூடுபனியாய் மூட்டமுற்று
கடிதமாய் எதிர்நோக்கப்பெற்று
ஆஸ்திரேலியாவிலும் தூரத்தே
புவிப்படமாய் அனுப்பப்பெற்று
பயணித்த எம் செம்மீனே!
மெல்லுறங்கும் மொ்ட்டாய்
வீட்டின் ஊறுகாய் ஜாடித் துளியாய்
கூடை விலாங்குமீனாய்
யாவும் அதிர்வலையாய்
குதிக்கும் மெக்ஸிக்க-அவரையாய்
ஓ
துலங்கிவிட்ட கணிதப்புதிராய்
எழுதாக் கரும்பலகையதில்
உண்டு
உன் முகம் மாத்திரம்.
--- Sylvia Plath, You're, 1960.
திணை இசை சமிக்ஞையில் கடந்த இரண்டு மாதங்களாக ஸில்வியா ப்ளாத் கவிதைகளின் தமிழாக்கப் பதிவுகள் தொடர்ந்து வருகின்றன. இதுவரை பதினைந்து கவிதைகள் வந்திருக்கின்றன. இதற்கிடையில், சென்ற மாதம் நான் டில்லி வந்து சேர்ந்த மார்ச் 24 அன்று, ஸில்வியா ப்ளாத்தின் ஒரே மகனின் தற்கொலை குறித்து வாசித்தேன். மார்ச் 16 அன்று நடந்தது சம்பவம்.
அமெரிக்க நாட்டின் அலாஸ்கா மாநிலம் ஃபார்பாங்க்ஸ் பல்கலைக்கழகத்தில் மீன்-கடல்வளத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய நிக்கலஸ் ஹ்யூஸ், தூக்கில் தொங்கி மரணமடைந்தார் என்று அவருடைய சகோதரி ஃப்ரீடா ஹ்யூஸ் வருத்தத்துடன் தெரிவித்தார்.
1963-ஆம் ஆண்டு இங்கே லண்டனில் ஸில்வியா ப்ளாத் காஸ் அடுப்பில் தலைவைத்துத் தற்கொலை செய்துகொண்ட போது, மகன் நிக்கலஸுக்கு வயது ஒன்றரை, ஃப்ரீடாவுக்கு வயது நான்கு. குழந்தைகள் இருவரும் உறங்கிய அறையில் காஸ் புகாதபடி துணியால் அடைத்து அவர்கள் கட்டிலருகே ஜன்னலைத் திறந்துவைத்திருந்தார் ஸில்வியா.
இங்கே மேலிருக்கும் கவிதை, ஃப்ரீடாவின் பிறப்பின்போது ஸில்வியா எழுதியது. நிக்கலஸின் பிறப்பின்போது எழுதிய கவிதை -
This great, bluish, glistening boy shot out onto the bed in a wave of tidal water that drenched all four of us to the skin, howling lustily...
ஃப்ரீடாவும் நிக்கலஸும் ஸில்வியா ப்ளாத்-டெட் ஹ்யூஸ் தம்பதியினருக்குப் பிறந்தவர்கள். டெட் ஹ்யூஸும் பெயர்பெற்ற கவிஞர். நிக்கலஸுக்கு ஒரு வயதானபோது தம்பதியினர் பிரிந்துவிட்டார்கள். ஸில்வியாவின் தற்கொலைக்குப் பிறகு அவருடைய முக்கிய நாட்குறிப்புக்களை டெட் ஹ்யூஸ் அழித்துவிட்டார் என்பதால் அவர்மீது ஸில்வியாவின் வாசகர்கள் பெரும்கோபம் கொண்டார்கள்.
டெட் ஹ்யூஸுடன் பிறகு ஆறாண்டுகள் வாழ்ந்த கவிஞர் ஆஸ்ஸியா வேவில், தமக்கும் டெட் ஹ்யூஸுக்கும் பிறந்த ஷூரா என்ற பெண் குழந்தையையும் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நிக்கலஸ், நண்பர்களிடம் தம் பெற்றோர், அவர்தம் இலக்கியம் பற்றிப் பேசுபவராக இருக்கவில்லை. கண்காணாத அலாஸ்காவில் யாருமறியாமல் பேராசிரியராகப் பணியாற்றினார். பத்தாண்டு முன்பு டெட் ஹ்யூஸ் புற்றுநோயால் மரணமடைந்தார், தந்தையாரிடம் நெருக்கமாக இருந்த நிக்கலஸை அது தாக்கியது, அதிலிருந்து இவரால் வெளியேற முடியவில்லை என்கிறார்கள் நண்பர்கள்.
7.4.09
நச்சினார்க்கினியர், அண்ணாதுரை, ஷெல்டன் - தமிழவன்
சில வாரங்கள் முன்பு ஷெல்டன் பொல்லாக் (Sheldon Pollock) என்ற பெயரில் அறியப்படும் அமெரிக்க வடமொழி அறிஞர் பெங்களூர் வந்தார். பெங்களூர் பல்கலைக்கழகத்தின் கன்னடத்துறை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசினார்.
பெங்களூர் பல்கலைக்கழகத்தின் பழைய மையத்தில் அமைந்திருக்கும் செனட் ஹால் பல கன்னட இலக்கியக் கூட்டங்களை நடத்திப் புகழ் பெற்றது. பல வரலாற்றுப் புகழ்பெற்ற சம்பவங்கள் இந்த ஹாலில் நடந்துள்ளன. 1971-ஆம் ஆண்டிலிருந்து, நான் பெங்களூர் வந்த நாளிலிருந்து, நடந்த பெரும்பான்மையான எல்லா கூட்டங்களுக்கும் போயுள்ளேன்.
ஷெல்டனுடனோடு கடந்த சுமார் பத்தாண்டுகளாக எனக்குக் கடிதத்தொடர்பும் மின்னஞ்சல் தொடர்பும் உள்ளது. ஆரம்பத்தில் அவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இருந்தார். சமீபமாய் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.
உலகில் எத்தனையோ வடமொழிப் பேராசிரியர்கள் உள்ளனர். அவர்களிடம் ஒவ்வொரு சிறப்பு இருக்கலாம். ஆனால் ஷெல்டனிடம் காணப்படும் சிறப்பு வேறு - வடமொழியைப் பிராந்திய மொழிகளோடு இணைத்து, அந்த இணைவை வரலாறு, இலக்கியம், அறிவியல், கலாச்சாரம் என்று ஆராய்கிறார். இந்த ஆராய்ச்சிப்போக்கு பிறரிடம் காணப்படவில்லை. வடமொழி சார்ந்த ஆய்வை ஒரு குறிப்பிட்ட மொழி ஆய்வாய்ப் பார்க்காது பண்பாட்டு ஆய்வாக உயர்த்துவதற்கு இந்தப் பார்வை வகை செய்கிறது.
நான் ஷெல்டனை இதுவரை சந்தித்ததில்லை. எப்படி இருப்பார் என்று தெரியாது. முதலில் இவரை, என்னிடம் முனைவர் பட்டம் பெற்று இன்று கன்னடத்துறைத் தலைவியாக இருக்கும் மாணவியுடன் மேடையில் பார்த்தேன். உயர்ந்த தோற்றம். பலமான தோள்கள். விளையாட்டுவீரர் போல் காட்சி தந்தார்.
இவருடைய முக்கியத்துவம் இன்றைய இந்தியாவிற்குப் பயன்படும். இன்றைய இந்தியா என்பது வடமொழிப் பண்பாட்டால் உருவானது மட்டுமல்ல; அம்மொழியும் பிராந்திய மக்கள் மொழிகளும் இணைவதில்தான் உள்ளது என்கிறார் இவர்.
தத்துவ நோக்கில் தமிழ் நாகரிகம் வேறொன்றாகும். தமிழ்ச்சமூகம், வடமொழிக்கு மாறாக ஒரு நாகரிகம், பண்பாடு உண்டு என்று பறையறைகிறது. சங்க இலக்கியம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்த அறிவு முழுமையடைகிறது. இதுபோல் இந்தியாவின் Other Backward Classes மற்றும் இன்றைக்குத் தீண்டப்படாதார் என்று கணிக்கப்படுகிற பெருவாரி மக்கள் வடமொழிக் கலாச்சாரத்தின் வெளியே வாழ்பவர்கள். ஆனால் தமிழ்மொழி போல, தமிழ்ச்சமூகத்தைப் போல, தனித்தன்மையைத் திராவிட மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு கூட பாதுகாக்கவில்லை. கன்னட இலக்கியம் முழுதும் வடமொழியாகிவிட்டது - மொழியில் வடமொழி புகுந்துவிட்டது.
தமிழில் உள்ள சிறப்பு ழகரம் ஆரம்பத்தில் கன்னடத்தில் இருந்து பின்னர் வழக்கிழந்தது. கழுதை என்ற சொல் கழுதெ என்று மாறுகிறது. கடைசி எழுத்து தை என்பது கன்னடத்தில் தெ என்று மாறும் என்பது விதி. மலை என்ற தமிழ்ச்சொல் மலெ என்றும் கொலை என்பது கொலெ என்றும் கன்னடத்தில் மாறும். அதன்படி கழுதெ அமைகிறது. பின்பு ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் கன்னட மொழியில் சிறப்பு ழகரம் மறைகிறது. ஒலிகள் புதிதாய்த் தோன்றுவதற்கும் மறைவதற்கும் இதுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் கழுதெ என்ற பழைய கன்னடச் சொல் கத்தெ என்று இன்று உச்சரிக்கப்படுகிறது.
இதுபோல் தமிழில் இன்றில்லாத அற்புதமான பழைய தமிழ்ச்சொற்கள் பல கன்னடத்தில் உள்ளன. நான் சில வாரங்களுக்கு முன்பு சென்னைப்பல்கலைக்கழகத்தின் கன்னடத்துறையில் நடந்த கன்னட மொழி பற்றிய கருத்தரங்கில் கூறிய ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
1971-ஆம் ஆண்டில் நான் முதன்முதல் பெங்களூர் வந்தபோது எனக்குக் கன்னடம் தெரியாது. வாழ்நாளில் நான் கன்னட மொழியை யாரும் பேசியதைக் கேட்டதில்லை. அந்த மொழி முதன்முதலாக என் காதில் விழுந்தபோது ஓரிரு தமிழ் ஒலிகள் அம்மொழியில் உள்ளன என்றும் சில மலையாளச்சொற்கள் உள்ளன என்று மட்டுமே அறிந்தேன். பின்பு மெதுமெதுவாக அம்மொழியைக் கற்க ஆரம்பித்தேன். அப்போது ஒருநாள் நான் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்த கல்லூரியிலிருந்து பெங்களூர் சிட்டி பஸ்ஸில் கூட்டத்தில் பயணம் செய்தேன். வகுப்பில் நான் கம்பராமாயணம் கற்பித்த சூட்டோடு பஸ் பயணம். வில்சன் கார்டன் என்ற இடம் வந்ததும் பஸ் கதவை அடைத்தபடி நின்றவர்களை மேலிருந்தவர்கள் இறங்கச்சொன்னார்கள்.
அவர்கள் கன்னடத்தில் பயன்படுத்திய சொல், இளி-றி என்பது. றி என்பது மதிப்புத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தும் இறுதி-ஒலி. அப்போது திடீரென வகுப்பில் நான் மாணவர்களுக்குச் சொன்ன கம்பராமாயணச்சொல் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
இழி-ந்தனன். ராமன் தேரிலிருந்து இழிந்தனன் என்ற சந்தர்ப்பம்.
அப்போது புரிந்தது கம்பராமாயணத்தில் வழங்கப்படும் ஒரு சொல் இன்றும் கர்னாடகத்தில் பயன்படுத்தப்படுகிறதென்று. ழி என்பது ளி ஆவது இரு மொழிக்கும் உள்ள மாற்றத்தில் இயல்பு. ஆனால் தமிழில், சென்னையில் இச்சொல் இன்று உச்சரிக்கப்பட்டால் யாருக்கும் புரியாது. கன்னடத்திற்கும் தமிழுக்கும் இவ்வளவு உறவு உள்ளது. இதுபோல் ஆயிரக்கணக்கான சொற்கள் உள்ளன.
ஷெல்டன் தம் ஆய்வுக்களமாக வடமொழிக்கும் பிராந்திய மொழிகளுக்கும் உள்ள உறவைப் பற்றி ஆராய்வதால் இங்கு நான் கூறிய விஷயத்தில் ஈடுபாடு காட்டமாட்டார். இவருடைய ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கையில் மொழி ஆராய்ச்சி பயன்பாட்டு ஆராய்ச்சியாக அமையும் நோக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். ஆல் இந்தியா ரேடியோ போன்ற நிறுவனங்களும் பல்வேறு பயிலரங்குகளும் வடமொழியை உயிரூட்ட, பேச்சுமொழியாக்க முயற்சிகள் நடப்பதை இவர் ஏற்கவில்லை. வடமொழியின் சாவு என்ற தம்முடைய கட்டுரையில் இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்.
பழைய மொழி ஒன்றைப் பற்றி ஆய்வு இன்றைய பிரச்னைகள்மீது ஒளிபாய்ச்ச முடியும் என்ற சுட்டுதல் இவருடைய அக்கறையாக உள்ளது. அந்த நோக்கில் வடமொழி மூலம் ஏக-இந்தியா என்ற செயற்கை அடையாளத்தைக் கட்டுவதைவிட இந்தியாவின் சமஷ்டிப் பண்பாட்டுத்தன்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது சிறப்பு. அதுதான் ஷெல்டன் ஆய்வின் உட்கிடையாகத் தெரிகிறது.
அன்று ஜவஹர்லால் நேரு இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டார் என்பதை, பிரிவினைக்கான நியாயத்தை எடுத்துச்சொல்லும் அண்ணாதுரையின் புகழ்பெற்ற பாராளுமன்ற உரையின் தொடர்ச்சியாக வந்த சொற்பொழிவுகளில் காணலாம். இந்தியா ஒரு தேசமல்ல; ஒரு தேசமாக்குவோம் என்று நேரு கூறியதாக அண்ணாதுரை குறிப்பிடும் இடம் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடமாகும்.
அண்ணாதுரை நூற்றாண்டு நடக்கும் இந்த காலகட்டத்தில் மீண்டும் அண்ணாவின் புகழ்பெற்ற பாராளுமன்ற உரையை ஒரு விமர்சனாரீதியான மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். மறுவாசிப்பு நேர்மையாக நடந்தால் இன்றைய தி.மு.க. அண்ணாவின் பாதையில் போகிறதா, காங்கிரஸின் பாதையில் போகிறதா என்று புரியும்.
ஷெல்டன் அண்ணாதுரை கண்ட இந்தியாவை முற்றுமுழுதாக அறிந்தாரோ என்னவோ, ஆனால் அண்ணாதுரையின் பார்வையை ஷெல்டனின் பார்வையில் நான் காணாமலில்லை. அண்ணாதுரை அன்று ஏன் திராவிடஸ்தான் கேட்டாரென்றால் இன்றைய இலங்கையாக எதிர்கால இந்தியா மாறிவிடலாம் என்ற பயத்தால்தான். இப்போது புரிகிறதா ஷெல்டன் வடமொழி பற்றி ஆராய்வதும் அண்ணாதுரை தம் வாழ்நாளையெல்லாம் செலவுசெய்து இந்தியாவுக்கு உகந்த அரசியல் அதன் பிராந்தியங்களின் பண்பாட்டில்தான் என்று கூறியதும் ஒன்றுதானென்று.
அண்ணாதுரை வடமொழி வேதங்களையெல்லாம் படித்திருக்கமாட்டார். ஆனால் வடமொழி படித்த எல்லா மேற்கத்திய ஆய்வாளர்களையும் படித்தார். வேதகால மரபு ஒன்றுதான் இந்திய மரபு, வரலாறு, பண்பாடு என்று அவர்கள் கூறியதை தமிழராகப் பிறந்த அண்ணா ஏற்கவில்லை. அவர்காலத்தில்தான் சங்க இலக்கியம் என்ற, வேதத்துக்கு மாற்றான இலக்கியம் கண்டு பிடிக்கப்பட்டுப்பரவியது. அந்தக் கண்டுபிடிப்பால் வடமொழிவாதிகள் பயங்கொண்டனர். அதனால்தான் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய நச்சினார்க்கினியருக்கு அடுத்தபடி சங்க இலக்கியத்தைப் புரிந்தவர் அண்ணாதுரை மட்டுமே. நச்சினார்க்கினியர் பல சங்க நூல்களை மக்கள் மத்தியில் பரப்ப உரை எழுதினார். அண்ணாதுரை, ஒரு புதிய பண்பாட்டு அரசியலாக மாற்றினார். இந்த இருவரோடு ஷெல்டனும் இப்போது இணைகிறார்.
ஆனால் அண்ணாதுரையின் வாரிசுகள் இதனைப் புரிந்துள்ளார்களா? ஷெல்டனைத் தமிழகத்தில் ஓரிடத்தில் சொற்பொழிவாற்றுவதற்குக்கூட அழைக்கமாட்டார்கள். இன்றைய திராவிடத்தலைமையின் அறியாமையிலேயே அடங்கியிருக்கிறது அதனுடைய வீழ்ச்சியும். இந்தக்கோணத்திலிருந்து பார்க்கும்போதுதான் பாரதிதாசனின் கவிதைகளின் பண்பாட்டு வீச்சும் அரசியல் அடிப்படைகளும் தெளிவாகின்றன. நான்கூட ஒரு காலத்தில் பாரதிதாசனின் கவிதைகளை வெறும் அழகியல் நோக்கில் பார்த்து அல்லல்பட்டேன்.
அண்ணாதுரையும் பாரதிதாசனும் ஒரு அணைத்திந்திய மாற்றுச் சொல்லாடலை (Alternate Discourse) உருவாக்கியவர்கள். அண்ணாதுரையின் சங்க இலக்கிய அறிவும் பாரதிதாசனின் சங்க இலக்கிய அக்கறையும் தமிழ் அடையாளத்தை இந்தியாவுக்குள் மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகள். தமிழ்மக்களுக்கான மாற்று அரசியல். எந்தக் காலத்திலும் அண்ணாதுரை காங்கிரஸ்காரர்களோடு அரசியல் செய்யாதது இதனால்தான். அண்ணாதுரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசனின் படத்தைத் திறந்துவைத்து சொற்பொழியாற்றியபோதுதான் இந்த கலாச்சார ரகசியம் வெளிப்பட்டது.
இன்றைய அகில உலக இலக்கிய விமரிசன நோக்குகளை உட்செரித்துக் கொண்டவர்கள், அண்ணாதுரையின் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேருரையில், அனைந்திந்தியாவின் எல்லா மொழிகளும், பின்பற்ற வேண்டிய இலக்கிய நோக்குமுறை அமைந்திருப்பதைக் காணலாம். பிராந்தியங்களின் வரலாறும் பண்பாடும்தான் அனைந்திந்தியா. பிராந்தியங்கள் இல்லாத அனைத்திந்தியா இல்லை. அப்படியிருந்தால் அது வெறும் அதிகார வர்க்கத்தில் உருவாக்கப்படும் எந்திரத்தனமான இந்தியா. இந்த ஆழமான அறிவு, அண்ணாதுரையின் பாரதிதாசன் பற்றிய அணுகலில் பார்த்து நான் அசந்துபோனேன்.
ஷெல்டனின் இன்னொரு கட்டுரையின் பெயர், Cosmopolitan Vernacular என்பது. மொத்த தென்- மற்றும் தென்கிழக்காசியாவிலும் கடந்துசெல்லும் பண்பாடுகளும் வேரடித்து நிற்கும் பிரதேச பண்பாடுகளும் எப்படி உறவு கொண்டுள்ளன என்பதே இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. வடமொழியும் நான்காம் நூற்றாண்டிலிருந்து உருவப்படுத்தப்படும் கன்னடமும் வெளிப்படுத்தும் குணங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.
இவ்வாறு இந்தியச்சூழலில் முக்கியமாகக் கருதப்படும் பல சிந்தனைகள் ஷெல்டன் கட்டுரைகளில் சர்ச்சிக்கப்படுகின்றன. இந்தப் பரிமாணத்தில் - முக்கியமாய் தற்கால அரசியல் பிரக்ஞையுடன் இந்திய மொழி ஆய்வைச் செய்பவர்கள் யாரும் இல்லை. தமிழாய்விலும் இதுபோல் பார்க்க வழியுண்டு. யாரும் அவ்வாய்வைச் செய்யவில்லை. ஷெல்டனுடைய கட்டுரைகள் அத்தகைய பரிமாணத்தைத் தமிழுக்குத் தரமுடியும்.
ஷெல்டனின் மேற்கண்ட கட்டுரைகள்
Sheldon Pollock, The Death of Sanskrit, Comparative Studies in History and Society, 43.2, 2001, 392-426.
Sheldon Pollock, Cosmopolitan and Vernacular in History, Public Culture, 12:3, Fall 2000, 591-625.
Sheldon Pollock, Is there an Indian intellectual history: Introduction to "Theory and Method in Indian Intellectual History", Journal of Indian Philosophy, 36:5-6, 2008.
ஷெல்டனின் புத்தகம் - தேவபாஷை, மனிதருலகில்: முன்-நவீன இந்தியாவில் வடமொழி, கலாச்சாரம், அதிகார்ம், 2006.
Sheldon Pollock, Language of the Gods in the World of Men: Sanskrit, Culture, and Power in Premodern India, 2006.
பர்தா - ஸில்வியா ப்ளாத்
மரகதம் -
பக்கத்தின் கல்,
பசும்-ஆதாமின்
எதிரியான பக்கம்,
சப்பணமிட்டு நான்
புதிராய்ப் புன்சிரித்து
தெளிவுபல எனதை
மாற்ற,
தோளிதை
ஞாயிறும்
ஒளிர்விக்கும்.
என் அயர்வுறாச் சகோதரி
நிலவும்
புற்றுநோயால் வெளிறிய
தன் தோலுடன்
எழுந்து
சாற்றின் திசுகொண்ட
சிறுபுதர் மரமிழுக்க,
சிறுவலைகாள்!
என் புலப்பாடுபல
மறைய,
ஒளிர்வேன் ஆடியென.
இப்புறங்கண்டு
வருவான் மணாளன்,
ஆடிபல கொண்ட அரசன்!
இவனே காட்டும் வழி
பட்டுத்திரை பல
உடன் கரகரக்கும்
பொருள் பல
நடுவே
மூச்செனதும்
வாயில்
மூடிச் சரசரக்கும் திரை.
விழியெனதில்
வானவி்ல் பல
கோர்த்த தொடர்.
இவனுடையவள் நான்.
இவனின் இன்மையிலும்
சாத்தியமின்மை பல
கொண்ட
என் உறையில்
சுழல்வேன்
விலைமீறி அமைதியாய்.
சலசலக்கும்
பஞ்சவர்ணக்கிளிகாள்,
மக்காவ் மந்திகாள்!
இமைமுடியின் காவலரே!
மயிலென ஓரிறகும்
உதிர்ப்பேன்
உதட்டின் காவலரே!
ஸ்வரமொன்றும்
உதிர்ப்பேன்
நாள்முழுதும்
ஸ்படிகம் பலதாய்ப் பறக்கும்
சரவிளக்கும்
கோடி அறியாராய்
வெடித்துச் சிதற.
காவலரே!
அடுத்தடுத்து இவன்
அடிவைக்க
இதயமென இவன்
காக்கும்
சிறுநகைப் பாவையினின்றும்
விலக்குவேன்
பெண்சிங்கமதை,
குளியலிதன் உறுமலை,
ஓட்டை பல கொண்ட
அங்கியை.
--- Sylvia Plath, Purdah, 1962.
லண்டன் திரும்பியதிலிருந்து இன்றுவரை கவிதை பற்றிய பதிவுகள்தாம். கவிதைகள் தமிழாக்கம் மற்றும் சி. மணி மறைவு குறித்து எழுதியவை. இவற்றை வாசிப்போர் நிறைய என்றாலும் அரசியல்-பதிவுகளுக்கு வருவதுபோல மறுமொழிகள் வரவில்லை, வரா என்பதிலோர் ஆசுவாசம். விதிவிலக்குகள் சில உண்டு. ஸில்வியா ப்ளாத்தின் இரண்டு கவிதைகளின் தமிழாக்கத்தை நவீன விருட்சம் ஆசிரியர்-கவிஞர் அழகிய சிங்கர் வெளியிட்டிருக்கிறார். ஸில்வியா ப்ளாத் கவிதைகளின் தமிழாக்கம் அலாதியாக வந்திருப்பதாகக் குறிப்பிட்டு கவிஞர்-விமர்சகர் எஸ். சண்முகம் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். சண்முகம் கேட்டுக்கொண்டபடி பர்தா கவிதையின் தமிழாக்கம் மேலே.
6.4.09
நரகம் வரும் போகும் - சி. மணிக்கு அஞ்சலி
பல ஆண்டு முன்பு வாசித்தபோது என்னை வியக்க வைத்த ஒரு கவிதை:
கண்மூடிப் படைத்துவிட்டு
கண்திறக்கப் பயந்து சாகும்
அவசரக்குடுக்கைக் கடவுள்
கண்டோ கேட்டோ வியந்த மற்ற
எத்தனையோ எடுத்துக்காட்டுகள்...
எழுதியவர் சி. மணி. முக்கோணம் என்பது தாம் எழுதிய முதல் புதுக்கவிதை என, க்ரியா பதிப்பகத்தில் இவரைச் சந்தித்தபோது கூறினார்.
தவிர, வே. மாலி, செல்வம் என்ற பெயரிலும் எழுதியவர், சி. மணி என்கிற சேலத்து ஆங்கிலப் பேராசிரியர் எஸ். பழனிச்சாமி. அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் நாவலின் பின்னுரையும் யாப்பும் கவிதையும் என்று நடை இதழில் வெளியான கட்டுரையும் செல்வம் என்ற பெயரில் வந்ததாகத்தான் நினைவு. கரைந்த நிழல்கள் எனக்குப் பிடித்த நாவல் என்பதால் அந்தப் பின்னுரையை ஏற்கனவே வாசித்திருந்தேன். யாப்பும் கவிதையும் கட்டுரையை வாசித்திருக்கவில்லை. தமிழவன் என்னிடம் கூறியதை அடுத்து தேடிப்பிடித்து வாசித்தேன். புதுக்கவிதையின் உள்ளமைப்பைப் பிரமாதமாக நிறுவிய கட்டுரை அது.
ந. பிச்சமூர்த்தி காலத்தில் தொடங்கி சி.சு. செல்லப்பாவின் எழுத்து இதழ் வளர்த்த புதுக்கவிதை இயக்கம் சார்ந்தவர்களில் தமிழின் மரபறிந்து, அதைத் தாண்டிக் கவிதை எழுதியவர்களில் பிரதானமானவர்கள் சி. மணி, நகுலன் இருவரும். அப்போது எழுதிக்கொண்டிருந்தவர்கள் - மயன் (க.நா. சுப்பிரமணியம்), தி.சோ.வேணுகோபாலன், எஸ். வைத்தீஸ்வரன், தருமு சிவராமு (பிரமிள்), பசுவய்யா (சுந்தர ராமசாமி), வல்லிக்கண்ணன், ஈழத்தைச் சேர்ந்த முருகையன் ஆகியோர்.
ஆக, ஆங்கிலம் பயின்று தமிழின் மரபும் அறிந்து எழுதியோரில் சி. மணி, நகுலன் இருவரும் முக்கியமானவர்கள் எனலாம் (சி. மணி போல தமிழின் மரபறிந்து தமக்கான புதுக்கவிதைப் பாதையைத் தேர்ந்தவர் ஞானக்கூத்தன்; ஆனால் ஆங்கிலப் பேராசிரியர் அல்லர்). சி. மணி, நகுலன் வரிசையில் ஆங்கில ஆசிரியராக இருந்து தமிழின் நவீன கவிதைக்கு வளம் சேர்ப்பவராக பிரம்மராஜனைச் சொல்ல முடியும்.
சி. மணி நேற்றிரவு சேலத்தில் இயற்கை எய்தினார் என்பது தற்போது வந்திருக்கும் செய்தி. ஆக, நகுலன், சி. மணி மறைவுடன் ஒரு கவிதாயுகமே முடிவுக்கு வந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது... கவிதையிலும் தத்துவத்திலும் ஒருமிக்க ஈடுபாட்டைத் தொடங்கிவைத்த தலைமுறைகள் இவர்களுடையவை.
எழுபதுகளில் நவீன இலக்கியம் வாசிக்கும் ஆர்வத்தில் எழுத்து இதழ்களைத் தேடிய போது, சி. மணியின் நரகம் என்ற நெடுங்கவிதையால் தாக்கப்பெற்றேன். 1962-ஆம் ஆண்டு வந்த இதழ். இந்த நரகம் கவிதையை டி.எஸ். இலியட் எழுதிய ஜே. ஆல்ஃப்ரட் ப்ரூஃப்ராக்கின் காதல் கீதம், பாழ்நிலம் பாணியில் தமிழில் வெளிவருகிற முதல் நீண்ட கவிதை அல்லது குறுங்காவியம் என்கிறார் சி.சு. செல்லப்பா... இதை ஒட்டி நடந்த உரையாடல்கள் தமிழின் நவீன வரலாற்றில் அதிமுக்கியமானவை.
இன்று எழுதும் இளம் கவிஞர்கள் சி. மணியைத் தேடி வாசிக்க வேண்டும். இன்றைய பதிப்பு யுகத்தில் அது, சி. மணியின் வரும் போகும், ஒளிச்சேர்க்கை உள்ளிட்ட கவிதைகளைப் புத்தகங்களாக வாசிப்பது என்று பொருள்கொள்ளப்பட்டுவிடலாம்! நான் கூற வருவது, அதுவல்ல. இந்தக்கவிதைகளை, இவை வெளியான சிற்றிதழ்களை, தேடி வாசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேனஅ. தமிழில் புதுக்கவிதை எப்படித் தோன்றி நிலைபெற்றது என்ற நீண்ட வரலாற்றைப் புரிந்துகொள்வது அப்படித்தான் சாத்தியம்.
சி. மணியின் கவிதையொன்றிலிருந்து சில வரிகள் - நினைவிலிருந்தே எழுதுகிறேன்.
..அருங்கல்லொன்று கிடைத்த போது
அகத்திலூறிச் சுழல்கின்ற
நிழலைச் செதுக்க வந்தேன்.
ஒற்றைக்கண் நிலவு
ஒற்றையடித்து வெள்ளைபூசி
ஒளியாக்கிய வானில்
வலிந்தோ மெலிந்தோ
எழுகின்ற காற்றில்
தானாய் இசைந்தரும்பும்
முகிற்கோலம் போட வந்தேன்.
நிறைந்த அனலாவியை
விழைந்த கோளமாக்கும்
விரிந்த பாழ்வெளியில்
பால்வெளியாய்ப் படைக்க வந்தேன்..
5.4.09
தென்புல எழுஞாயிறு - ஸில்வியா ப்ளாத்
எலுமிச்சை, மா, ’பீச்’ பழ
நிறமென்ப
கதைப்புத்தக வீடும்
இன்னும் பின்காணும்
கனாவில் மூடும்
ஜன்னலும் உப்பரிகையும் பல,
கைவேலை ’லேஸா’ய்
மைதீட்டிய இலைப்பூவாய்.
அம்பொத்த தன் தண்டில்
அன்னாசி முட்தோலில்
பனையின் பசும்பிறையில்
காற்றுடன் சாய்ந்து
தன் பேரிலையைக் கவர்பட
மேற்செலுத்தும்
படபடவென வெடித்து.
பளிங்கான காலை
அடியடியாய் ஒளிர்ந்து
நம் நிழற்சாலையை
முலாமிட,
தேவதைக்குடாவின்
திரைநீலத்தினின்றும்
செம்பூசணியென வட்டமாய்
எழும்
ஞாயிறு.
-- Sylvia Plath, Southern Sunrise, 1956.
படம் - அடையாறில் எழுஞாயிறு
4.4.09
விசாரணை - ஸில்வியா ப்ளாத்
விதிக்காலையதைக் கொணர்ந்த
சாமான்யப் பால்காரன்,
மூடிய சதுர போத்தல் பலதைக் கதவிலிட,
தரையில்
பேரழிவின் ஆணை பிறப்பிக்கும்
கதிர்.
காலைத்தாள்
தலைப்பின் மணியறைய,
மூலத்தீவினையென
காஃபி அருந்தும் நீ
எழுந்து,
பதவிசான நீலக்காவலரை
வரச்சொல்ல,
ஏறும்
இறையிரைச்சலின்
ஜெட் விமானக் கோபம்.
தேவதையின்
கடுத்த விழிப்பில்
கழுவேறிய நீ
சட்ட எல்லையில் சேவித்து
உன் நியான் நரகத்துள் எரியட்டும்
எனத்தான் சாபம்.
கறார் மூதாதையரின்
நாற்காலியில்
கட்டுண்டு அமர்வாய் நீ
நிஜம் விழிப்ப,
வாயிலெடுக்க,
உன் கபாலத்திலோ
மின்தகடாய்
எதிர்காலம்.
--- Sylvia Plath, The Trial of Man, 1955.
படம் - ஃப்ரான்ஸ் காஃப்காவின் விசாரணை நாவலின் நாடக ஆக்கத்திலிருந்து.
தூக்குமரத்தார் - ஸில்வியா ப்ளாத்
தலையின் மயிர்க்கால்
எனதும் பற்றித் தூக்கும்
கடவுள் எவரோ
அவர்தம் மின்சார நீலத்தில்
பளபளக்கும்
பாலைத் தரிசனத் தீர்க்கராய்
யான்..
பல்லியின் இமையாய்
பல்லிரவும் அணைய
இனி
மூடியற்ற
வெண்வழுக்கை குளசில்
பலநாளாய்
உலகம்..
கழுகாய் அயர்வும்
மரமிதில் என்னைத் துகைக்க,
அவரும் யானெனில்
செயலெனதே செய்வார்
அவரும்..
- Sylvia Plath, The Hanging Man, 1960
3.4.09
தூரத்தில் வெகுதூரத்தில் - ஷார்ல் போதலேர்
சலனமின்றி
எப்போதும் தயாராய்
நிற்பவளின்
புனித அறை
இது.
மெத்தையில் முழங்கை பதிய,
கையும் முலை விசிற,
செவிமடுப்பாள்
அழும்புனல்
பல.
டோரதியின் அறை
இது.
தூரத்தில் காற்றும் படபடக்க்,
நீர் பல பாட,
விம்மித் துண்டாகும்
அப்பாடலும் தாலாட்டும்
செல்லக்குழவியொன்று
உறங்கும்
வரை.
பரிமளத்தைலத்தில்
தூபவர்க்கத்தில்
மெல்லியலாள்
தன் தலைமுதல் கால்வரை
கவனமாய் மூழ்க
மயங்கும்
மூலையில் மலர்
பல.
— Charles Baudelaire, Bien loin d'ici, Fleurs du Mal, 1857.
2.4.09
துயரின் ரசவாதம் - ஷார்ல் போதலேர்
உன்னை
அழல்கொண்டு ஏற்றுவ தொருவன்,
உன்னை
இரங்கலில் வைப்பதோ மற்றவன்.
இயற்கையே!
கல்லறை என
ஒருபுறம்
எச்சரிக்குமது
மறுபுறம்
புகழும்
வாழ்வே என.
எனக்குதவும்
ஆனால்
என்னைப் பயப்படுத்தும்
பெயரற்ற ஹெர்மஸ்! (1)
என்னை நீ
மாற்றுகிறாய்
மைதாஸாய்!
ரசவாதியரில்
கவலை மிகுந்தோனாய்!
உன்னைக் கொண்டு
இரும்பைப் பொன்னாக்கி
நரக்மும் ஸ்வர்க்கமாக்கி
திரையோடும் முகில்தனில்
காண்பேன் அரியதோர்
பிணம்.
வான்கரைதனில் எழுப்புவேன்
உயிருடன்
பெருங்கற்தாழி.
— Charles Baudelaire, Alchimie de la douleur, Fleurs du Mal, 1857
1. ஹெர்மஸ் - கிரேக்கக் கடவுளரில் ஒருவர்
1.4.09
ஊமைக்காயம் - ஸில்வியா ப்ளாத்
பதிந்தவை
-
▼
2009
(246)
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
►
08
(35)
- 108 - 14: லா. ச. ராமாமிருதம்
- எழுத்தை வெட்டும் கல் - 13 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 12 - சிவத்தம்பி
- 108: 13 - வசனகவிதை
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 1 - ழார் பத்தாய்
- எழுத்தை வெட்டும் கல் - 11 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 10 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 9 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 8 - சிவத்தம்பி
- ஒளிப்பதிவும் காலமும் - 3 - மணி கௌல்
- விழியின் கதை - 3
- விழியின் கதை - திரை
- ஒளிப்பதிவும் காலமும் - 2 - மணி கௌல்
- வன்னி முகாம்களைத் திறக்க வேண்டிப் பிரச்சாரம்
- ஒளிப்பதிவும் காலமும் - 1 - மணி கௌல்
- எழுத்தை வெட்டும் கல் - 7 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 6 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 5 - சிவத்தம்பி
- காணாக்காட்சி அல்ல என் சினிமா - கோதார்
- 108: 12 - ஹைக்கூ
- 108: 11 - பிற்போக்கு
- 108: 10 - தர்க்க அலசல்
-
▼
04
(34)
- தொன்மம் இயற்றலின் மரணம் - ஸில்வியா ப்ளாத்
- எற்றையும் நிலவும் திங்கள் - ஸில்வியா ப்ளாத்
- பின்னிரவின் தனிமொழி - ஸில்வியா ப்ளாத்
- இன்மையின் சுவை - ஷார்ல் போதலேர்
- அழிவு - ஷார்ல் போதலேர்
- மாயத்தாள் என்னை எரித்தல் - ஸில்வியா ப்ளாத்
- இறந்தோர் - ஸில்வியா ப்ளாத்
- இறுதிச்சொற்கள் - ஸில்வியா ப்ளாத்
- பேரழிவு இலக்கியத்தின் களம் - ஜே. ஜி. பல்லார்ட் மறை...
- மாறுபடும் சாவியுடன் - பௌல் ஸெலான்
- அழுங்கல் - பௌல் ஸெலான்
- காதல் பிசாசின் கண்ணும் நோக்க - ஸில்வியா ப்ளாத்
- 18 ஏப்ரல் - ஸில்வியா ப்ளாத்
- துயருறுதலும் திரிதலும் - ஷார்ல் போதலேர்
- தயை - ஸில்வியா ப்ளாத்
- நீரைக் கடத்தல் - ஸில்வியா ப்ளாத்
- தமிழ்நாட்டில் இலக்கியம் பரவுவது கஷ்டம் - தமிழவன்
- இருந்ததும் இவருள் மண் - பௌல் ஸெலான்
- ஆடி - ஸில்வியா ப்ளாத்
- படியிறங்கும் ஈவாவுக்கு - ஸில்வியா ப்ளாத்
- உருவகங்கள் - ஸில்வியா ப்ளாத்
- புலம் பிரிந்தோர் அழிவிதி - ஸில்வியா ப்ளாத்
- நீர்யாமம் - ஸில்வியா ப்ளாத்
- குழவியற்ற பெண்டிர் - ஸில்வியா ப்ளாத்
- நீயாய் - ஸில்வியா ப்ளாத்
- நச்சினார்க்கினியர், அண்ணாதுரை, ஷெல்டன் - தமிழவன்
- பர்தா - ஸில்வியா ப்ளாத்
- நரகம் வரும் போகும் - சி. மணிக்கு அஞ்சலி
- தென்புல எழுஞாயிறு - ஸில்வியா ப்ளாத்
- விசாரணை - ஸில்வியா ப்ளாத்
- தூக்குமரத்தார் - ஸில்வியா ப்ளாத்
- தூரத்தில் வெகுதூரத்தில் - ஷார்ல் போதலேர்
- துயரின் ரசவாதம் - ஷார்ல் போதலேர்
- ஊமைக்காயம் - ஸில்வியா ப்ளாத்
-
►
10
(21)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (175)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (24)
- அணுசக்தி (10)
- அறிவியல் (41)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (53)
- உரைமொழி (4)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (168)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (174)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழலியல் (20)
- செயல் (84)
- ஜெர்மன் (9)
- திரை (25)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (10)
- நடனம் (2)
- நட்பு (17)
- நிகழ்வு (6)
- நேர்காணல் (14)
- பயணம் (11)
- போதலேர் (39)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (7)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (31)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (52)
- லண்டன் (11)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (9)
- வரலாறு (166)
- வரைமொழி (120)
- வானொலி (3)
- விழியின் கதை (9)
- ஸில்வியா (37)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸெர் (2)
- ஸ்பானிஷ் (23)
