காலனியாதிக்கக் கால மாற்றங்களின் ஊடே, இந்தியாவின் ஒரு பகுதியில் - அதாவது தென்னகத்தில், கணித நடைமுறையின் சமூக வரலாற்றை ஆய்வுசெய்ய முனைந்தேன். அப்போது எனக்குக்கிட்டியவை தமிழ்க் கணித ஆவணங்கள் சில - ஓலைச்சுவடிகளும் புத்தகங்களும். இந்தச்சுவடிகளும் புத்தகங்களும் இருவகை:
1. முதல்வகை, எண்சுவடி (1).
எனப்படும் தொடக்ககால கணிதக்கல்விக்கான வாய்ப்பாட்டுப் புத்தகங்கள் (2). கடந்தகால திண்ணைப் பள்ளிக்கூடங்களின் கல்விமுறை சார்ந்து எழுந்தவை, இவை (3).
2. இரண்டாம்வகை, சற்றே உயர்மட்டக் கணிதம் பயிற்றுவிக்கும் கணக்கதிகாரம் எனப்படும் சுவடிகள். கணக்கதிகாரம் எனப் பல இருப்பினும், இவற்றிலுள்ள கணித வழிமுறைகள், மக்களின் பொருட்சார்ந்த வாழ்க்கையில் தோய்ந்து, தினசரி உழைப்பின் பரிமாணங்களை கணக்கியல்ரீதியாக அணுகுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவை, தமிழ்ச்சமூகம் அறிவியலை எதிர்நோக்கியதன் சான்றாக விளங்குகின்றன. ஆக, இவற்றின் உள்ளடக்கத்தை முன்வைத்து, தமிழ்ச்சமூகம் அறிவியலுடன் கொண்ட வரலாற்று-உறவு பற்றி விவாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில், சில கேள்விகளை இங்கே முன்வைக்கிறேன்.
1
இந்தச்சுவடிகள் மற்றும் புத்தகங்களின் கணிதம் சார்ந்த உள்ளடக்கம் பல கேள்விகளைத் தூண்டுவதாக அமைகின்றன. இவற்றுக்கு விடைகாணும் முயற்சிகளும் சிரமமிக்கதாக அமைகின்றன. இந்தச்சிரமங்களை, வரலாற்று ஆவணங்களைத் தரவுகளாகக் கணிக்கும்போது எழும் வழக்கமான சிரமங்கள் என்று மாத்திரம் கூற முடியவில்லை. அதற்கும் மேலாக, வரலாற்றில் அறிவுமரபுகளை வரையறுக்கப்பயன்படும் உத்திகள் தொடர்பான பிரச்னைகளும் இந்தச்சிரமங்களின் பின்னே இருக்குமோ என்று எண்ண முற்பட்டேன். அப்போதுதான் புதிய கேள்விகள் சாத்தியமாகின்றன.
உதாரணமாக, இந்தியக் கணித மரபு என்றதும் நம்மில் யாவரும் நினைவுகொள்வது எவற்றை? சுல்ப சூத்திரங்களில் தொடங்கி ஆரிய பட்டர், பிரம்ம குப்தர், பாஸ்கரர் என்று நீளும் பண்டைக்கால இந்தியக் கணித மரபைத்தானே நினைவுகொள்கிறோம்! இப்படிக் கணிதம் என்றாலே வடமொழியை நினைவுபடுத்துவதாக ஆகிறது, கோட்பாட்டு-உருவாக்கம் என்ற உயர்-மட்ட சிந்தனாமுறையைக் கைக்கொள்வதாக ஆகிறது, அதைத் தரப்படுத்தலாகக் காட்டி, சமுதாயத்தில் உயர்-அந்தஸ்து பெற்ற ஒருசிலர் மாத்திரமே இந்த அறிவை வாழையடிவாழையாகப் பெற முடியும் என்பதாக இந்த நினைவு அமைகிறது.
அதேவேளை, ’இந்தியக் கணிதம்’ என்பதாக இந்த மரபு நமக்கு அறிவுறுத்தப்படுவதற்கு, இது வடமொழியில் அமைந்திருப்பது மாத்திரமே காரணம் என்பதில்லை! அதாவது, இது மொழிசார்ந்து எழும் பண்பாட்டு அதிகாரப்பிரச்னை அல்ல என்றே தோன்றுகிறது. இந்த மரபில் வரும் கணித வழிமுறைகளின் அறிவுப்புலமானது ஓர் உயர்மட்ட சிந்தனாமுறையைக் கடைப்பிடிப்பது மட்டுமின்றி, இது சமகால-உலக கணித அறிவுப்புலத்தோடு தொடர்புற்றும் ஒப்பிட்டும் காணவல்ல ஒன்று என்ற கூற்றும் இங்கே சேர்கிறது. இந்த இரண்டும்தாம் இந்தக் கணித மரபைப் பிரத்தியேகமான ஒன்றாகக் காட்டுகின்றன. ஆனால் இது மாத்திரமே நாம் காணும் கணித-மரபு அல்ல. எடுத்துக்காட்டாக, கணக்கதிகாரத்தில் உள்ள கணித வழிமுறைகள் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கின்றன. இந்த வேறுபாடு மொழியில் மாத்திரமல்ல, உள்ளடக்கத்திலும் இருப்பதைக் காண முடிகிறது.
ஆனால், வடமொழிக் கணித மரபு கையாளும் உயர்மட்ட சிந்தனாமுறை, இப்படி ஓர் கூடுதல் வசதியைப் பெறுவது ஏன்? அதன் அடித்தளம் ஒருங்கிணைந்த-உற்றுநோக்கல் (organized observation), தேற்றங்கள்-உருவாக்கம், வானியல்-சார் கணிதம் போன்றவற்றில் அமைந்திருக்கிறது. மாறாக, கணக்கதிகாரம் சார்ந்த கணித வழிமுறைகளைப் பார்த்தால், அவை மக்களின் பொருள்சார் வாழ்விலிருந்து எழுந்தவையாக இருக்கின்றன - நில அளவை, தானிய-அளவை, வரிசெலுத்தல், கூலிக்கணக்கு போன்றவற்றிலிருந்து எழுபவை இவை. அதே வேளை, கணித வழிமுறைகள் தோன்றி, சிந்தனைத்தளங்கள் மாற்றம் பெற்று, உலகளாவிய கணிதச் செயல்பாட்டைச் சாத்தியமாக்கும் கூறுகள் இந்த மரபிலும் இருப்பது தெளிவு.
இந்த இரு மரபுகளின் வரலாற்றை ஆய்வோர் எதிர்கொள்வது ஓர் அசாதாரணக் கேள்வி. இருவேறு தளங்களில், தனித்தனியாகத் தோன்றி, தனித்தனி வட்டங்களுக்குள் சுழலும் இந்த இரு மரபுகள் கொண்ட பரஸ்பர உறவு எத்தகையது என்பதே இந்தக்கேள்வி. அதாவது, அவதானிப்பிலிருந்து தோன்றும் அறிவுப்புல வழிமுறைகளும் செயல்பாட்டிலிருந்து தோன்றும் அறிவுப்புல வழிமுறைகளும் கொண்ட உறவு எத்தகையது என்பதே இந்தக்கேள்வி.
இந்த இருவேறு மரபுகள், தளங்களுக்குப் பொதுவான கணிதக்கோட்பாடுகள் இருந்தன, எனினும் கோட்பாடுகளை மாத்திரம் வைத்து இவற்றின் பரிமாற்றங்களை, அந்தப் பரிமாற்றங்களின் தன்மையை, புரிந்துகொள்ள முடியுமா? இல்லை இவை இரண்டும் சில குறிப்பிட்ட கணித வழிமுறைகளை எவ்வாறு வித்தியாசமாகக் கையாள்கின்றன என்பதைக் கொண்டு இவற்றை உணர முடியுமா? இல்லை மொழியும் மொழிசார்ந்து ஆய்வுசெய்யும் உத்திகளும் இந்தத்தேடலில் உதவ முடியுமா? இந்த இருவேறு தளங்களின் நோக்கங்களை எவ்வாறு புரிந்துகொள்வது? ஒவ்வொன்றின் தன்மையை, தனித்த கூறுகளை, எவ்வாறு பிரித்துக் கையாள்வது? அதேவேளை, மொழி மற்றும் மொழிசார்ந்த உத்திகள் குறித்து சற்றே ஐயத்துடன் அணுக வேண்டும் என்ற எண்ணங்கொண்டால் இந்த இருவேறு தளங்களின் நோக்கங்களைப் புரிந்துகொள்ள முடியுமா?
வரலாற்றின் போக்கில் தனிநபர்களும் இயக்கங்களும் தத்தம் கொள்கைசார்ந்து இத்தகைய கணித மரபுகளை மீட்டுருவாக்கம் செய்துவந்திருக்கின்றனர் (4). அப்படியானால், உண்மையான கணிதத்துறை சார்ந்த செயல்பாடுகள், இந்த மரபுகளிலிருந்து எழுந்த கணிதக்கோட்பாடுகளை, எவ்வாறு புரிந்து கொண்டு தத்தம் செயல்பாட்டை வகுத்துக்கொண்டன?
இத்தகைய ஏராளமான கேள்விகளை எழுப்ப முடியும். இவ்வாறு எழுப்புவதன்வழி என்ன தெரிகிறது? கணிதத்தில் உயர்மட்டச் சிந்தனாமுறை என்பதன் வடிவம் மற்றும் பொருளுக்கென, குறிப்பிட்ட ஒரு தரத்தை நிர்ணயித்துக்கொண்டால் - அதாவது நவீனக்கணிதம் சார்ந்த உயர்மட்டச் சிந்தனாமுறையே உயர்ந்தது என்பதை மீறி யோசிக்க முயற்சி செய்தால், உயர்மட்டச் சிந்தனாமுறை என்பதன் அடிப்படைத்தன்மைகள் பன்முகத்தன்மை கொண்டவை என்று புரியும். ஆனால், உயர்மட்டச் சிந்தனாமுறைகள் உருவாகிற, செயல்படுகிற இடம் குறித்து உன்னிப்பான கவனம் தேவை. இந்தச் செயல்பாட்டு இடத்திலிருந்துதான் இவற்றின் பல்வேறு வடிவங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தக் கண்ணோட்டத்தின்படி, குறிப்பிட்ட ஒரு மரபைப் பிராமணிய மரபு என்றும் மற்றதை பிராமணியமற்ற மரபு என்றும் வித்தியாசப்படுத்திக் காண்பதைவிட வேறு ஆழ்ந்த வேறுபாடுகளைக் கண்டுணர்ந்து, சிந்தனாமரபுகள் குறித்த தெளிவைப் பெறவே முடியாதா என்ன! உதாரணமாக, தமிழ்ச்சுவடிகள் உணர்த்தும் கணிதமரபு-சார்ந்த-உயர்சிந்தனை என்பதை இப்படிப் புரிந்துகொள்ளலாம்: இது நடைமுறையிலும் செயல்பாட்டிலும் தோய்ந்து, திறன்-வளர்ச்சிக்கெனவும் குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு குறிப்பிட்ட தீர்வுகாணக் கூடிய ஒன்று. மற்றது, அவதானிப்பில் தோய்ந்து தொடங்கி, அறிவுத்தேடலில் இன்பங்காணும் அளவு ஈடுபட்டு, சடங்குரீதியில் அமைந்த சமூகத்தளத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவிய ஒன்று எனலாம்.
இப்படி, உயர்சிந்தனாமுறைகள் பன்முகத்தன்மை கொண்டவை என்ற புரிதல் ஒருபுறமிருக்க, வரலாற்று-ஆய்வில் இன்னொரு பிரச்னை வருகிறது. அதாவது, சமகால அறிவுத்தேடல் நிகழ்ந்த அதே சமூகத்தளத்தில், அடக்குமுறை சார்ந்த செயல்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, சிந்தனையை மட்டும் தேடிச்செல்வதில் சிக்கல்கள் உண்டு. இந்தச் சிக்கல்களைப் பலர் எதிர்கொள்கின்றனர் என்பதும் தெரிகிறது. அதையும் மீறி, சமகால-தற்கால சமூக அடக்குமுறைகளை கண்டுணர்ந்து இவை சார்ந்த புரிதலை ஆழப்படுத்தி, சிந்தனாமரபுகளின் வரலாற்றைச் சமூக வரலாறாக எழுதும் முயற்சியில் ஈடுபட வேண்டிய தேவை இன்று அதிகம். இதைச் செய்யவே விழைகிறோம் நாம்.
மேற்கண்ட தமிழ்ச்சுவடிகளை ஆராயும்போது, உயர்சிந்தனை குறித்த புரிதல் எத்தனை சிக்கலானது என்று புரிந்துகொள்ள முடிகிறது. தவிர, இன்னும் பல கேள்விகள் எனக்குத் தோன்றின. இந்தச்சுவடிகள் நமக்குக் காட்டுவது, எண்சார்ந்த நடைமுறைகளைத் தரப்படுத்தி, இவற்றுக்கு வடிவம் கொடுத்த ஒரு சமூகவெளியை. இந்தச்சுவடிகள் பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. எனவே, அறிவை ஓலையிலோ, பின்னர் காகிதத்திலோ பதிவுசெய்யும் வாய்ப்புக்கொண்ட சமூகமாக மாறியபோது இந்த அறிவு என்னவாயிற்று என்ற கேள்வியும் வந்தது. அப்போது, குறிப்பிட்ட மொழித்திறன் கொண்ட சிலர், அதுவரை வாய்மொழியால் மட்டுமே சுழற்சியில் இருந்த கணித-உயர்சிந்தனையை ஓலையில் பதிவுசெய்தார்கள்.
ஆனால் இந்தச்சுவடிகளை மாத்திரமே கொண்டு, சமூக வரலாற்றுக்கான முழுமையான தரவுகளை அடைந்துவிட்டதாகக் கொள்ள முடியாதல்லவா! இந்தச்சுவடிகளை யார் எழுதினார், இவை எவ்வாறு சுழற்சியில் பரவி, கைமாறி, அறிவுப்பரிமாற்றத்தில் கருவிகளாக மாறின என்பதை இன்று தெரிந்துகொள்ள முடியவில்லை என்பது இதற்கொரு முக்கிய காரணம். இப்படித் தரவுசார்ந்த சிக்கல்கள் இருப்பினும் கணிதத்தில் கோட்பாடுசார் வெளிப்பாட்டுக்கும் நடைமுறைசார் செயல்பாட்டில் தோய்ந்த செயல்பாட்டுக்கும் ஒரு போராட்டம் நிகழ்ந்து வந்திருக்கிறது என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. இந்தப் போராட்டத்தின் மையமாகத் தெரிவது, எழுத்தறிவு பெற்றோர் மாத்திரமே எண்கணித வழிமுறைகளில் ஈடுபடுவோர் அல்ல என்ற விஷயம்தான்!
2
கணக்கதிகாரத்தில் உள்ள நிலம்சார்ந்த கணக்குகள் யாவற்றையும் தொகுத்து வகைப்படுத்தி, சமகாலத் தொழில்சார் சமூக ஏற்றத்தாழ்வுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால் ஒரு விஷயம் பிடிபடுகிறது. உடலுழைப்பை மாத்திரம் கொண்டு வாழ்ந்தோர், தம் தொழில் சார்ந்தும் தொழில்சாராத தினசரி வாழ்விலும் கணிதத்தில் தேர்ச்சி பெற்றவராக விளங்கியுள்ளனர் என்பது இந்த விஷயம். உதாரணமாக, வெட்டியான் (நிலம் அளப்பவர்), நீர்க்காரன், தோட்டி, தலையாரி போன்றவர்கள் தொழில்சார்ந்து, உடலுழைப்பில் ஊறிப்போன செயல்பாட்டின் ஊடாகவே கணிதச்செயல்பாட்டிலும் ஈடுபட்டனர். தொழிலுக்கு அப்பால் ஊர்சந்தையில், அடுப்படியில், அரசுக்கு வரிகட்டும் செயல்களில் எனப் பலவகையில் கணித ஈடுபாடு கொண்டோராக விளங்கினர் என்பதைப் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலச் சுவடிகளும் ஆவணங்களும் தெரிவிக்கின்றன. ஆக, கணிதத்திறனுக்கு எழுத்தறிவு அத்தியாவசியமான ஒன்றல்ல என்பது தெளிவு.
ஆனால் இதே சுவடிகளில் இவரின் உடலுழைப்பும் செயல்பாடும் கணக்குப்போடுவதற்கான பொருட்களாக மாற்றப்படுகின்றன; ஆக, பொருள்சார் மக்கள்வாழ்க்கை கணிதப்பொருட்களாக பாவிக்கப்படுகிறது; அதிலும் ஓர் உயர்மட்ட சிந்தனைமரபை உருவாக்கியுள்ளனர் என்ற வரலாறு வெளிவருகிறது.
(இன்னும் வரும்)
அடிக்குறிப்புக்கள்
1. கணக்கதிகாரச் சுவடிகள் பல உண்டு. இவற்றுக்கு உரையுடன் கூடிய செம்பதிப்புக்கள் இனித்தான் வரவேண்டும். இதுபோன்ற பிற நூல்கள் கணித நூல் மற்றும் ஆஸ்தான கோலாகலம். இவற்றில் நான் வாசித்தவை:
சத்தியபாமா காமேஸ்வரன், கணக்கதிகாரம் - தொகுப்பு நூல், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் பதிப்பு எண் 388, தஞ்சாவூர், 1998.
பி.சுப்பிரமணியன், கே.சத்தியபாமா, கணித நூல் - கணிதவியல் பகுதி, முதல் பகுதி, ஆசியவியல் நிறுவனம் பதிப்பு எண் 68, சென்னை, 1999.
திருமலை ஸ்ரீசைல சர்மா, ஆஸ்தான கோலாகலம், சென்னை அரசு கீழையியல் நூலகப் பதிப்பு வரிசை 3, 1951.
2. மேற்கண்ட பதிப்புகளில் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். இவற்றிலுள்ள பல கணக்குகள் இன்றும் கிராமப்புறங்களில் விடுகதைகளாக வலம் வருகின்றன.
3. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் குறித்த சமூக வரலாறு இனித்தான் எழுதப்பெற வேண்டும். ஆனால் இவற்றின் பரவலான செயல்பாடு குறித்து பல்வேறு ஆதாரங்களைத் தொகுத்து வழங்கிய நூல்: Dharampal, The Beautiful Tree, Indigenious Indian Education in the Eighteenth Century, Other India Press, Goa, 2000.
4. இதுமாதிரியான பார்வையுடன் அறிவியலின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யலாம் என்று ஆழ்ந்த ஆய்வுப்புலத்துடன் உலகுக்கு எடுத்துக்காட்டியவர் ஆங்கில விஞ்ஞானி மற்றும் வரலாற்று ஆசிரியர், ஜோசப் நீட்ஹாம்.
(புதுச்சேரியைச் சார்ந்த ஆய்வாளர் த. செந்தில்பாபுவுக்கு நன்றி).
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
31.1.09
அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - த. செந்தில்பாபு - 1
29.1.09
ஈழம் - சாதலும் புதுவது அன்றே
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னா தென்றலும் இலமே - மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
மரபான பொருள்: எமக்கு எல்லாம் ஊர். யாவரும் சுற்றத்தார். கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லாது பிறர் தர வாரா. நோதலும் அது நீர்தலும் அவற்றையொப்பத் தாமே வருவன. சாதலும் புதியதன்று, கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது. வாழ்தலை இனிதென்று உவத்தலும் இலம், ஒரு வெறுப்பு வந்தவிடத்து இன்னாது என்று இருத்தலும் இலம். மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலான் அமையாது, கல்லை யலைத்து ஒலிக்கும் பேர்யாற்று நீர்வழியே போகும் மிதவையைப் போல அரிய இந்த உயிர் செல்கின்றது நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாற் தெளிந்தோம் என்பதால் நன்மையால் மிக்காரை மதித்தலும் இலம். சிறியோரைப் பழித்தல் அம்மதித்தலிலும் இலம்.
கணியன் பூங்குன்றனின் பெயர்பெற்ற இந்தப் புறநானூற்றுப் பாடலை இன்றைய சூழலில் இப்படிப் பொருள்கொள்ளலாம்:
"எல்லோரையும் சுற்றத்தாரென எண்ணும் எமக்கு இன்று ஏறத்தாழ யாருமில்லை. எங்களைக் குண்டுவீசி அழிக்கும் ராணுவம் தீயது என்று தெரிந்தாலும் எது நல்லது எனத் தெரியாத நிலை எமது. இதை யோசிக்கவும் நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். எப்போதும் சாதல். இந்த உயிர் அரிது என்ற நிலை எப்போதோ மாறி எங்கோ போய்க்கொண்டிருக்கிறது எங்கள் வாழ்க்கை, இல்லையில்லை எங்கள் சாதல். வரலாற்றின் முன்பக்கங்களில் இதுவரை இல்லாதபடி அது நடக்கிறது. இந்நிலையில் பெரியோர்-சிறியோர் என்று யாரை, எப்படி வகைப்படுத்துவது என்று தெரியாமல் சோகத்தில் தத்தளிக்கிறோம். யாரை நம்புவது, எதை, எங்கிருந்து தொடங்குவது?"
சென்னையிலிருந்து - முத்துக்குமார் என்ற இளைஞர் தம் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் என்ற மிகவும் வேதனையளிக்கும் செய்தி வந்திருக்கிறது. ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற ஆற்றாமையிலிருந்து வருவது இது, பொதுவாகப் பரவும் இவ்வித ஆற்றாமை சிலரிடம் இப்படி வெளிப்படுகிறது என்கிறார்கள், இதுபற்றி யோசிக்கும் சில தத்துவ வாதிகள். பெரும் கலைஞர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டுவிடுவதைக்கூட வாசிக்கிறோம்.... எதுவாக இருந்தாலும் நான் சென்னையில் பத்திரிகைக்காரனாகப் பணியாற்றியபோது பல்வேறு சூழல்களில் முத்துக்குமார் செய்ததைப்போன்று பொதுவெளிக்கு வந்து, ஒரு பொதுப்பிரச்னையை முன்வைத்துச் செய்த தற்கொலைச்சம்பவங்களைக் கண்டும் கேட்டும் அதிர்ந்திருக்கிறேன். பிறகு அவை பொருளற்றுப்போவதில் அவற்றின் சோகமும் அபத்தமும் கூடுவதை உணர்ந்திருக்கிறேன்.
முத்துக்குமாருடைய இறுதிக்கடிதத்தையும் இணையத்தில் வாசிக்க நேர்ந்தது. இதில் இலங்கை-இந்திய அரசுகள் மீது காட்டமான விமர்சனம் இருப்பது நியாயம்தான்; அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்-ராணுவ அணுகுமுறைகள், தற்போதைய போருக்கு முன்பே, ஈழச்சமுதாயத்திடையே அவர்களை முற்றும் ஆதரிப்பவர்களுக்கே பெரும் பிரச்னையை உருவாக்கியிருக்கின்றன என்பதை இந்தக்கடிதம் கவனிக்கவில்லை. இவ்வளவு வாசித்திருக்கும் இந்த இளைஞர், விடுதலைப்புலிகள் குறித்த பிரச்னைகளை முழுமையாகப் பேசத் தயங்கியிருக்கிறார்.
முத்துக்குமாருடைய கடிதத்தின் நியாயப்பாடுகள், பிரச்னைகள் ஒருபுறமிருக்க, தற்கொலைச்செயல் சரியல்ல. இது தியாகமல்ல. இதுபோன்று யாரும் செய்யக்கூடாது. ஈழத்தில் இத்தனை போருக்கிடையில் மக்கள் வாழவே முயல்கிறார்கள் என்பதை உணர வேண்டும். வாழ்க்கை மகத்தானது என்பதை, மற்றவர்க்ளுக்காக முழுமையாக வாழ்வதன் மூலம் நடப்பதே தியாகம் என்பதை, உணரவேண்டும். மேற்கண்ட பழந்தமிழ்ப்பாடல் கூறுவதும் இதுவே.
முத்துக்குமாரின் உயிர் முக்கியமானது. இவர் வாசித்து, உழைத்து, எழுதி எவ்வளவோ செய்திருக்க வேண்டும். இவரை இழந்த சுற்றத்தார்-நண்பர்கள் இதைத்தான் விரும்பியிருப்பார்கள். இவர் எதற்காகத் தம்முடைய உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும்? மாறாக, இப்போதிருக்கும் நிலையில் "ஒன்றும் செய்ய முடியவில்லை" எனச் சும்மா அங்கலாய்க்கும் தமிழக-இந்திய அரசியல்-தலைவர்களும் அதைக்கூடப் பேசவராத அவர்களுடைய பல்வேறு குடும்ப-வாரிசுகளும்தாம் தம்முடைய பதவி, அதிகாரம், முறைகேடாகக் குவித்திருக்கும் சொத்து-சுகம், பறித்து வைத்திருக்கும் நிலங்கள்-பங்களாக்கள், தொடங்கி நடத்தும் வணிக-கல்விநிறுவனங்கள், தேர்தல் கூட்டணி வியூக பேரங்கள்-முஸ்தீபுகள் என யாவற்றையும் துறந்து களத்தில் குதிக்க முன்வர வேண்டும். அதுதான் சரி.
கனிமொழி, தமிழச்சி தவிர எத்தனை அரசியல்-வாரிசுகள் போராட்டக்கூட்டங்களுக்குப் பேச வருகிறார்கள் என்பதை ஒருமுறை எண்ணிப்பார்த்தால், இப்படி ஒருவர் தம் உயிரை மாய்த்துக்கொண்டதன் மூலம் யார் பயனடைய இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
28.1.09
பதிவுகளும் நானும் ஓராண்டாக
தமிழ், ஆங்கிலப்பதிவுலகத்தில் வாசகனாக மட்டுமிருந்த நான் பதிவு எழுதத்தொடங்கி ஓராண்டாகும் நிலையில், ஈழ மக்களின் நிலையை நினைக்க நினைக்க ஏற்படும் வேதனையில் தொண்டை அடைத்து பிற உணர்வுகள் யாவும் அற்றுப்போய் விட்டிருக்கின்றன.
லண்டனிலிருந்து பார்க்கும்போது, இந்த ஓராண்டில் உலகம் நிறைய மாறிவிட்டிருப்பதைக் காண்கிறேன்... ஈராக் போரில் மேற்குலகம் குதித்தது பெருந்தவறு என்ற உணர்வு இங்கே மக்களிடையே பெருகியிருக்கிறது. எங்கும் பணி-இழப்பு, எதிர்காலம் குறிப்பாக போர், கடனட்டை, சூழலியல்-பிரச்னைகள் குறித்த அச்சம், அரசுகள்-நிதி முதலீட்டிய அமைப்பு குறித்த அவநம்பிக்கை, இனியும் நீளூம் குளிர்காலம்... பாலஸ்தீனக் காஸாப்பகுதியில், இலங்கைத்தீவில் பெரும்போர்க்காலம் (எப்போதுதான் ஓய்ந்தது?). வன்னியில் தொடரும் துயரமும் கொழும்பில் நிறைய ஆணவமும் தமிழகத்தில் போராட்டமும் டில்லியில் மற்றும் உலகின் பிற தலைநகரங்களில் தமிழ்மக்கள் மீது வேண்டுமென்றே பாராமுகமும் என எல்லாமே ஏற்கனவே கண்டும் கேட்டும்விட்ட உணர்வில், இவை மீண்டும் நடப்பதில், அயர்ச்சியுண்டு. வழக்கமான மொழியில் எழுதுவதைவிட வேறொரு வகையில் எழுதவேண்டும் என்ற உந்துதலும் உண்டு. அதுவரை மற்ற விபரங்களைப் பார்க்கலாம்.
திணை இசை சமிக்ஞை என்ற இந்த என் வலைத்தளம் இயங்கத்தொடங்கி எதிர்வரும் ஃபிப்ரவரி ஆறாம் நாள் ஓராண்டு முடியும் நிலை. இந்த 358 நாட்களில் 374 பதிவுகள். ஆக, நாளும் ஒரு பதிவு என்ற சீரான வேகத்தைத் தாண்டிச் செயல்பட்டிருக்கிறேன்.
திணை இசை சமிக்ஞையை வாசிப்பவர்கள் எத்தனை பேர் இருக்கலாம்? இதைக் கணினி எண்ணத் தொடங்கி 335 நாட்களில் 35,000 பேருக்குமேல் வாசித்திருக்கிறார்கள். தின-வரத்து ஐம்பது பேர் என்று தொடங்கிய நிலையிலிருந்து இப்போது 250 பேருக்குக் குறையாமல் வாசிக்கிறார்கள். வலைப்பதிவர்கள் ஐம்பதுக்கும் மேல் பின்தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் (இதை நினைத்தால் பயமாக இருக்கிறது). பார்வை எண்ணிக்கை எப்போதோ ஒருலட்சத்தைத் தாண்டியாகிவிட்டது. தவிர, இந்த வாசகர்கள் எழுபது நாடுகளைச் சார்ந்தவர்கள் என்பது மிகவும் ஆச்சர்யம்தரும் விஷயம். அதாவது ஆசிய நாடுகளில் தாய்வான், ஆப்பிரிக்காவில் சூடான், மடகாஸ்கர் மற்றும் செனகல், அரபு நாடுகளில் ஈராக், அல்ஜீரியா, பிறகு லத்தீன் அமெரிக்க நாடுகள் இங்கிருந்தெல்லாம் வாசகர்கள்! இங்கெல்லாம் இலங்கையிலிருந்து சென்றவர்கள் இருக்கிறார்கள் என்றால் இவர்களின் சோகம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இதே காலகட்டத்தில் தமிழ் எழுத்தாளப் பிரபலர் சிலரின் இணைய தளங்கள் பெற்றிருக்கும் பார்வைகள், மூன்று லட்சத்திலிருந்து எட்டு லட்சம்வரை. அவர்களை ஒத்த பிரபல்யம் எனக்கில்லை என்பதால் என் பக்கங்களை இவ்வளவு பேர் கண்டிருப்பதே ஆச்சர்யம். அதைவிட முக்கியம், கண்டவரும் கண்காணித்தவரும் என்ன வாசித்தார்கள், யோசித்தார்கள், செய்தார்கள் என்பதே.
கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக, என் பதிவுகளில் யாரும் மறுமொழி இடலாம். எல்லாவகைக் கருத்துகளையும் விவாதங்களையும் எதிர்கொள்ளவே முயல்கிறேன். பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பற்றி என்னுடன் உரையாட வந்த வன்பாக்கம் விஜயராகவன் என்ற ஒருவர் தவிர வேறு யாரும் இந்த வலைத்தளத்தை வாசிப்பதை நிறுத்துவதாக என்னிடம் அறிவிக்கவில்லை.. தவிர, மட்டுறுத்தல் என்பதைப் பயன்படுத்தி நான் நிராகரித்த மறுமொழிகள் பத்துக்கும் குறைவே... வேண்டுமென்றே ஆங்கிலத்தில் எழுதுவோரைத்தான் அப்படி நிராகரித்திருக்கிறேன். அதேவேளை, மறுமொழி ஆங்கிலத்தில் மாத்திரம் அமைந்தால் ஒரே முறை தமிழாக்கி வெளியிடுகிறேன். அப்புறம் வெளியாகாது. எனவே யாரும் தமிழில் எழுதி என்னைக் கிழிக்கலாம். இடையிடை ஆங்கிலம் வருவது ஒரு பிரச்னையே இல்லை.
இந்த வலைத்தளத்தில் நிறைய தமிழாக்கங்கள் - ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து. ழார் பத்தாய்யின் பெயர்பெற்ற, சர்ச்சைக்குரிய விழியின் கதை நாவலின் மூன்று பகுதிகள் வந்திருக்கின்றன. இந்தத் தமிழாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை. இந்த ஆண்டாவது அதை முடித்துவிடுங்கள் என்று அதைச் செய்துவரும் யூரேக்காவிடம் கூறுகிறேன்... இந்த வலைத்தளத்தில் என் ஆக்கங்கள் தவிர, மற்ற எழுத்தாளர்களின் சுமார் நாற்பது ஆக்கங்களை மறுபதிவாக இட்டிருக்கிறேன். எழுதத்தோன்றாத நாட்களில் இவற்றின் உறுதுணை முக்கியம்...
இந்த காலகட்டத்தில் திணை இசை சமிக்ஞையில் வந்த என் ஆக்கங்கள் சில தீராநதி, உயிர்-எழுத்து, நவீன விருட்சம், பவளக்கொடி, நிழல் உள்ளிட்ட இதழ்களில் வந்திருக்கின்றன. இந்த வலைத்தளத்திலிருந்து என்னுடைய நூறு பதிவுகளை, நளிர் என்ற இருநூல்-தொகுப்பாக ஆழி பதிப்பகம் கடந்த மாதம் வெளியிட்டது. இதேபோல, ஆர்தர் ரைம்போவின் இங்குள்ள கவிதைகளின் தமிழாக்கம் பல, ஊழிக்குப் பின் என்ற தொகுப்பாக அதே ஆழி பதிப்பகம் கொண்டுவந்திருக்கிறது.
கடந்த ஓராண்டாகத் திணை இசை சமிக்ஞையை வாசித்து வருவோரைப் பொறுத்தவரை, அரசியல்-நடப்பு-நிகழ்வுகள் குறித்த பதிவுகளுக்கு மறுமொழி எழுதி உரையாட வருவோர்தாம் அதிகம். வழக்கம்போல இலக்கியம்-கலாச்சாரம் ஏன் வரலாறு தொடர்பான பதிவுகளில் உள்ளுறையாக எத்தனையோ இருக்கும்போதும் வழக்கமான சிலர் தவிர இவற்றுக்கு மறுமொழி? ம்ஹூ..ம்... இப்போது கடைசியாக அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறித்த பதிவு, சரியான எடுத்துக்காட்டு.
திணை இசை சமிக்ஞை வலைத்தளத்தை வாசிப்போர்க்கும் இதில் மறுமொழி எழுதுவோர்க்கும் தம்முடைய பக்கங்களில் இணைப்புக்கொடுத்திருப்போர்க்கும் நன்றி... நாம் யாவரும் இருந்து, நன்றி சொல்லி என்ன பயன்.. மக்களின் அழிவை நிறுத்த முடியவில்லையே என்ற உணர்வே என்னிடம் மேலோங்கி நிற்பது...
பதிவுகளும் நானும் இதுவரை - 7
பதிவுகளும் நானும் இதுவரை - 6
பதிவுகளும் நானும் இதுவரை - 5
பதிவுகளும் நானும் இதுவரை - 4
பதிவுகளும் நானும் இதுவரை - 3
பதிவுகளும் நானும் இதுவரை - 2
பதிவுகளும் நானும் இதுவரை - 1
லாஸ்கோ குகை-ஓவியம் பற்றி ழார் பத்தாய்
சாவு மற்றும் காமக்கலை என்றதும் நம்மில் உடன் இருண்டதாய் வினையாற்றுவது ஏதோ ஒன்று; அதை, நிச்சய மதிப்பாக, அடிப்படையான மதிப்பாக நான் கருதுவதுபோல் ஏன் கொள்ளக்கூடாது என்று கேட்கிறேன்! ஏழு ஆண்டுகள் முன்பு "தீய்மை"யின் இந்தக்கூறு பற்றி, உலகின் மிகப்பண்டைய படிமம் ஒன்றை முன்வைத்துப் பேசத்தொடங்கியிருந்தேன் (1). ஆனால், காமச்செயலுடன் உறவுகொண்ட சாபம் என்ற "தீய்மை" கொண்ட இந்தப்பொருள், இந்தப்படிமத்தில் இருப்பது உண்மைதானா, பார்க்கலாம்.
விவிலியம் உள்ளிட்ட பல்வேறு நூல்களும் சாபம் என்ற இந்தப் பொருளை விவரிக்கின்றன. இதே பொருளை, வரலாற்றுக்கு முற்பட்ட மிகப்பண்டைய ஆவணங்களில் தேடிக்கண்டறியும் நோக்குடன், மேற்கண்ட காத்திரமிக்க கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். இதில் முக்கியமாக, தேடிக்கண்டறிய என்பதைவிட ஏற்கனவே கண்டறிந்துவிட்டேன் என்று கூறலாம். அதாவது விவிலியம் விவரிக்கிற, ஜென்ம பாவம் (original sin) என்கிற மூலத்தீவினையை, ஃப்ரான்ஸ் நாட்டின் லாஸ்கோ (Lascaux) குகையின் ஆழத்தில் கண்டேன் - அதாவது பாவச்செயலுடன், காம-பரவசத்துடன், காமக்கலையுடன் இணைந்ததாக இங்கே நான் கண்டது மரணத்தைத்தான்!
இந்த லாஸ்கோ குகைக்குள் எளிதில் நுழையவியலாமல் இயற்கையாக அமைந்த பிலமொன்றில், இந்தப்படிமம் - நம்மை மிகவும் கலவரப்படுத்த வல்ல இந்தப்படிமம் - இருக்கிறது.
அதீதமானதோர் ஓவியம்தான், இந்தப்படிமம். இதை ஒரு புதிராகத்தான் லாஸ்கோ மனிதன் நம் முன்னே வைக்கிறான். இவன் தன்னைப் புதைத்துக்கொண்ட வழிமுறை, இந்தப்புதிர். இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், நமக்குத்தான் இது புதிர்; இவன் பார்வையில் புதிரல்ல. இவனைப் பொறுத்தவரை, எருதும் மனிதனும் உள்ள இந்த ஓவியத்துக்குத் தெளிவான பொருளுண்டு. இன்றோ, இந்தக்குகைச்சுவர்களில் இந்த இருண்ட ஓவியத்தைக் காணும் நாம் மனங்குலைந்து திகைத்துப்போகிறோம்.
இந்த ஓவியத்தில் உள்ள மனிதனுக்குப் பறவையின் முகம். இவன், தன் ஆளுமையை நிறுவுவது, விரைத்த ஆண்குறி கொண்டு. அதேவேளை வீழ்ந்துமிருக்கிறான். அப்படி வீழ்ந்திருப்பது, புண்பட்ட ஒர் எருதின் முன்பு. சாகப்போகும் இந்த எருது, இவன் முன்பு வீழ்ந்திருக்கிறது. இதன் குடல் பயங்கரமாகச் சரிந்து தொங்குகிறது, இவன் முன்பு.
இந்தப் பரிதாபக்காட்சியை மாறுபடுத்திக்காட்டுவது இருண்ட, விநோதமான ஏதோ ஒன்று என்பேன். நம் காலத்திய எந்த ஒரு காட்சியையும் இத்துடன் ஒப்பிட முடியாது. இப்படி வீழ்ந்துகிடக்கும் மனிதனுக்கு மேல், ஒரே கோட்டில் வரைந்த பறவை, குச்சிமுனையில். இது நம் சிந்தனையைச் சிதறடிக்கிறது. இன்னும் இடதுபுறமாக, ஒரு காண்டாமிருகம் விலகிச்செல்கிறது. ஆனால் எருதும் பறவை-மனிதனும் சாவின் முன் ஒருங்கிணையும் காட்சிக்கும் காண்டாமிருகத்துக்கும் தொடர்பில்லை என்றே கூறலாம்.
ஆனால் ப்ரெயில் பாதிரியார் என்பவர் இந்தக்காட்சிக்கு ஒரு விளக்கமளிக்கிறார்: அதாவது, காண்டாமிருகம் எருதின் வயிற்றைக் கிழித்துவிட்டு சாவை எதிர்கொள்ளும் இருவரையும் விட்டு விலகிச்செல்வதாக இந்த ஓவியத்தைக் காண்கிறார். ஆனால், எருதைக் காயப்படுத்தியவன் இந்த மனிதனே என்பதை, இந்தக்காட்சியின் உள்ளமைப்பை வைத்துச் சொல்லிவிட முடிகிறது. அதாவது, சாகும் தறுவாயிலுள்ள இந்த மனிதன் வீசிய ஈட்டியால்தான் எருதுக்குக் காயம் என்று கூறலாம். அதாவது, இந்த ஓவியத்தின் பிரதான காட்சிக்குத் தொடர்பின்றியே காண்டாமிருகம் இருப்பதாகவே தெரிகிறது.
இந்தப் பிரதான காட்சிக்கான விளக்கம் என்பது கிட்டாமலே போய்விடலாம்! அபாரமாக நம்மைத் தாக்கும் இந்தச்சித்தரிப்பை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக யாரும் காணாத ஆழத்தில் எனப் புதைந்துகிடந்த இந்தச்சித்தரிப்பை, என்னதான் சொல்லி விளக்குவது!
ஆழத்தில் என்றா கூறினேன்? யாரும் காணாத ஆழமா என்ன? பலரும் இருபதாண்டுகளாக இந்த ஓவியத்தைக் கண்டுவந்திருக்கிறார்கள். நான்குநான்கு பேராக லாஸ்கோ குகைப்பிலத்துள் சென்று காண முடிகிறது. இப்படி யாரும் காண முடிகிற இந்த ஓவியத்தை விவிலியத்தில் வரும் ஆதியாகமக்கதைக்கு (Genesis) எதிராகவும் அதேவேளை அத்துடன் இணைத்தும் நான் பார்க்கிறேன்.
லாஸ்கோ குகை கண்டறியப்பெற்றது, 1940-ஆம் ஆண்டு செப்டம்பர் பன்னிரண்டாம் நாளில். அப்போதிருந்து இந்தக்குகைப்பிலத்துள் இறங்கிய பலர் இந்த அதீத ஓவியத்தைக் கண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஓவியம் பெயர்பெற்றதென்னவோ புகைப்படங்கள் மூலமாகத்தான். இதில் பறவைமுகம் கொண்ட ஒரு மனிதனைக் காணலாம். இவன் வீழ்ந்திருக்கிறான், எருதின் முன்பாக. ஒருக்கால் இவன் செத்திருக்கலாம். சீற்றத்தில் துடிக்கும் எருதும் சாகும் வேதனையில் இருப்பதைக் காணலாம்.
லாஸ்கோ குகை-ஒவியம் பற்றி நான் எழுதத்தொடங்கியது ஆறாண்டுகள் முன்பு. அதிர்ச்சிதரும் இந்தக்காட்சி பற்றி அப்போது தனிப்பட்ட விளக்கமேதும் அளிக்காமல் என்னைத் தடுத்துக்கொண்டேன். ஜெர்மன் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் தந்த விளக்கத்தைத் திரும்பக்கூறுவதுடன் நின்றுகொண்டேன் (2). இவர், இந்த ஓவியத்தை யாக்கூட் இனத்தவரின் பலிச்செயலுடன் ஒப்பிட்டு, இந்த மனிதன் கிடக்கும் நிலையைக் காணும்போது வெறியாடிப் பரவசம் எய்தும் ஒருவன் பறவைமுகத்தை வேடமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றார். பழங்கற்காலத்தைச் சார்ந்த இந்த வெறியாடல் என்றாலும் இந்த மனிதனுக்கும் சைபீரியா போன்ற பகுதிகளில் தற்காலத்திலும் தொடரும் வெறியாடற்காரனுக்கும் பெரிதும் வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை! சொல்லப்போனால், இந்தக்காட்சியின் அதீதத்தன்மையை வலியுறுத்துவது மாத்திரம்தான் இந்தக்காட்சியின் ஒரே தகுதி!
பிறகு ஈராண்டுக்காலம் இந்த ஓவியம் பற்றிய துல்லியமான கருதுகோளேதும் என்னிடம் இல்லை என்பதால் எழுதத் தயங்கியிருந்தேன். அந்த நிலையில், இதுபற்றிய துணிபொருளாக ஒன்றைக் கைக்கொள்ளும் சாத்தியமும் வந்தது. அதாவது, இந்த ஓவியத்தை வரைந்த மனிதர்களைப் போன்று ஏறத்தாழ அதே வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களிடையே, "வேட்டையில் விலங்குகளைக் கொன்ற உடனாகவே அதற்கான கழுவாயை (expiation) மேற்கொள்ளும் வழக்கமுண்டு" என்பதைப் புரிந்துகொண்டேன். இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு கூறினேன் (3):
"பெயர்பெற்ற இந்த ஓவியம் பற்றி பல்வேறு விளக்கங்கள் வந்திருக்கின்றன. இவை முரண்பட்டும் திருப்தி தராமலும் உள்ளன - எனவே, இந்த ஓவியம் கொலை மற்றும் கழுவாய்ச்செயல் பற்றியது என்பேன்."
அதாவது, வெறியாடற்காரனாகத் தெரியும் இந்த மனிதன், தான் எருதைக் கொன்ற செயலுக்கென, தன் சாவுவழி, கழுவாயில் ஈடுபட்டிருக்கிறான் என்பதே என் கூற்று. வேட்டையில் விலங்குகளைக் கொல்லும் பழங்குடிச்சமூகத்தினர் பலரும் இத்தகைய கழுவாயை விதியாக மேற்கொள்கின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.
அதற்கு நான்காண்டுகள் கழித்து, மேலதிக ஆதாரம் வரவில்லை என்கிற நிலையில், லாஸ்கோ குகை-ஓவியம் குறித்த மேற்கொண்ட என் கூற்று சரிதானா என எனக்குத் தோன்றியது. "இந்த ஓவியம் ஒரு மாயா-விநோதம், அல்லது இதற்குப் பயன்பாட்டுப்பொருள் உண்டு" என்பன போன்ற விளக்கங்கள் போதவில்லை என்று கூறி இவற்றுக்குப் பதிலாக என் கூற்றைக் குறைந்தபட்சமாக முன்வைக்க முடிந்தது. அதாவது, என் விளக்கம், உச்சபட்ச வேட்டை என்ற நிலையில் எது மதம் என்பதை விளக்குவதாக அமைந்தது என்று என்னால் கூற முடிந்தது.
இன்றோ, இந்த விளக்கங்கள் யாவையும் தாண்டிச் சென்றாக வேண்டும் எனத் தெரிகிறது. ஆக, லாஸ்கோ ஓவியம் என்ற புதிர் பற்றியது மட்டுமல்ல இந்தப்புத்தகம். இந்தப்புதிரில் தொடங்கி மேலே செல்லும் நோக்கம் கொண்டது, இந்தப்புத்தகம். இந்தப்புதிரைக் கொண்டு, மனிதன் என்பவனின் குறிப்பிட்ட ஒரு முகத்தின் - புறக்கணிக்கவோ கைவிடவோ முடியாத முகத்தின் - பொருளை விளக்க முயல்கிறேன்.
காமக்கலை என்று நாம் வகைப்படுத்தும் பொருள்தான் அது.
அடிக்குறிப்புகள்
1. Georges Bataille, La peinture préhistorique - Lascaux ou la naissance de l'art, Genève, 1955.
2. H. Kirschner, Ein Beitrag zur Ungeschichte der Schamanism, Anthropols, 47, 1952.
3. Georges Bataille, L'Erotisme, Paris, 1957.
--- ழார் பத்தாய் எழுதிய லாஸ்கோ குகைப்பிலத்தில் சாவு என்ற கட்டுரை. ஈராஸின் கண்ணீர் என்ற புத்தகத்திலிருந்து.
Georges Bataille, La mort au fond du "puits" de la caverne de Lascaux, Les Larmes d'Eros, Paris, 1961, p. 102
படங்கள் - பதினையாயிரம் ஆண்டு முன்பான பெயர்பெற்ற லாஸ்கோ ஓவியம், இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டு முன்பான தமிழகம் நீலகிரிப் பகுதியில் நரபலி குறித்தது எனக் கருதப்பெறும் கரிக்கியூர் ஓவியம், ஊர்வன குறித்த கரிக்கியூர் ஒவியம்.
அதி-குறியியல்-தளத்தில் லீனா முதல் லாஸ்கோ வரை
ழார் பத்தாய்யின் விழியின் கதை நாவல்
காடு விழுங்கும் ஸர்ரியலிஸக் கலை
விருதுகளுக்கு அப்பால் மூதறிஞர் ஐராவதம் மகாதேவன்
27.1.09
விருதுகளுக்கு அப்பால் மூதறிஞர் ஐராவதம் மகாதேவன்
ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு, இந்திய மத்திய அரசு விருது வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தமிழ் மொழியின், தென்னகத்தின், வரலாறு குறித்துத் தம்முடைய வாழ்நாளில் அதிமுக்கியக் கண்டுபிடிப்புக்களைச் செய்திருக்கும் ஐராவதம் மகாதேவன், இத்தகைய விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். இத்தகைய மூதறிஞர் இந்தியாவில், தமிழகத்தில், சென்னையில், இருந்து செயலாற்றிவருவது, வரலாறு நமக்கு அளித்திருக்கும் கொடை.
பெயர்பெற்ற எழுத்தாளர் ஜோர்ஜ் லூயி போர்ஹெவின் சிறுகதைகளில் வரும் பாத்திரம் மாத்திரமே நிகழ்த்தவல்லதோர் அதிசயத்தைச் செய்துகாட்டியிருப்பவர் ஐராவதம் மகாதேவன். சிந்துவெளி எழுத்தின் மர்மத்தை இனங்காண்பதில் இடையறாது உழைத்து வருபவர். சிந்துவெளி எழுத்து பற்றித் தற்போது ஒரு புத்தகம் எழுதிவருகிறார் என்று அறிகிறேன்.
இவ்விதத்தில், இங்கே லண்டனிலிருந்து நோக்கும்போது ஐராவதம் மகாதேவன் அவர்களின் பணியின் முக்கியத்துவம் இன்னமும் புரிகிறது. உலக அளவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அதீத அறிஞர்கள் சிலரின் வழிவருபவர் ஐராவதம் மகாதேவன் - ரோஸ்ஸட்டா கல்லின் (Rossetta Stone) வழி எகிப்தின் சித்திர எழுத்தை வாசிக்கும் முறையைத் தம் இளவயதில் கண்டறிந்த ஃப்ரெஞ்சு அறிஞர் ழான்-ஃப்ரான்ஸ்வா ஷம்போய்யான் (Jean-François Champollion) மற்றும் பிரிட்டிஷ் அறிஞர் தோமஸ் யங் (Thomas Young), அதேபோல அசோகரின் பிராமிக் கல்வெட்டெழுத்தை வாசிக்கும் முறையைக் கிரகித்து, இந்திய வரலாற்றைப் புதிய ஒளியில் காண வழிவகுத்த பிரிட்டிஷ் அறிஞர் ஜேம்ஸ் ப்ரின்செப் (James Prinsep) ஆகியோர் இவருடைய முன்னோடிகள். அதாவது, இவர்கள் வழிவந்த அறிவுப்புலத்தில் செயலாற்றிவருபவர், ஐராவதம் மகாதேவன்.
எண்பதுகளின் இறுதிப்பகுதியில் இவர் தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்து செயலாற்றிய காலத்தில் சென்னையில் பத்திரிகைக்காரனாகப் பணியாற்றினேன். அப்போது இவருடன் நெருங்கிப்பழகுகிற வாய்ப்புக் கிடைத்தது என் பெரும்பேறு. எப்போது பேட்டிகாணச் சென்றாலும் கனிவுடன் வரவேற்றுப் பதிலளிக்கும் பெருந்தகை இவர். இவருடைய முக்கியக்கட்டுரையொன்றை இங்கே மறுபதிவாக இடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
1996-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வெளியீடான வரலாறு ஆய்விதழுக்காக எழுதிய கட்டுரை இது. தமிழாக்கம் - ஜயந்தி நாராயணசுவாமி. ஒருசில மாற்றங்கள் உண்டு. நன்றி - வரலாறு.காம் இணைய இதழ். இதில் இருப்பனவற்றைத் தாண்டி, தமிழ்-பிராமி எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய தம்முடைய கருதுகோள்களை, தற்போதைய கண்டுபிடிப்புக்களை ஒட்டி தமிழ்-பிராமி-1, 2, 3 என மூன்று காலகட்டங்களாகப் பிரித்து இப்போது முன்வைக்கிறார். - நாகார்ஜுனன்
சங்ககாலத்தில் ‘முதல் அறிவொளி இயக்கம்’ - ஐராவதம் மகாதேவன்
தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிப் பல ஆண்டுகளாக நடத்தி வரும் ஆய்விதன் விளைவாக நான் எதிர்கொண்ட முக்கியமான பிரச்னைகளில் ஒன்று, தமிழகத்தில் முதன்முதலாக எழுத்தறிவு தோன்றிய காலச்சூழ்நிலை பற்றியது. இவற்றைப் பின்வருமாறு விவரிக்கலாம்:
1. தமிழகத்தில் எழுத்தறிவு தோன்றியது எப்போது, எவ்வாறு?
2. அது தோன்றவும் பரவவும் துணையான காரணிகள் யாவை?
3. எழுத்தறிவினால் தமிழகத்தில் உடனடியாக ஏற்பட்ட மாறுதல்கள் யாவை?
4. தவிர, ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் அதே காலகட்டத்தில் எழுத்தறிவு ஏற்பட்டபோதும் அதன் விளைவுகள் தமிழகத்தைக் காட்டிலும் முற்றிலுமாக மாறுபடுவதற்குக் காரணங்கள் யாவை?
இவற்றுக்கான விடைகள், இதுவரை வெளியாகியுள்ள நூல்களில் காணப்படவில்லை என்பது வியப்புக்குரிய ஒரு விஷயம். இதுவரை ஆய்வு நடத்தப்படாத இந்த விஷயத்திலுள்ள சிக்கல்கள் யாவையும் உடனடியாக விடுவிக்க முடியாதது என்றாலும் மேலும் ஆய்வு நடத்த ஓர் உரையாடலைத் தொடங்கி வைப்பதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம்.
தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள எழுத்துக்களிலெல்லாம் பண்டையவை, தமிழ்-பிராமி எழுத்துக்கள். இவை ஏறத்தாழ மௌரியப் பேரரசர் அசோகரின் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகளை ஒத்திருப்பதால் இவ்விரு எழுத்துமுறைகளும் சமகாலத்தவை என்று எடுத்துக்கொள்ளலாம். மேலும் தமிழகத்துக் குகைக்கல்வெட்டுகள் சமணச்சார்புடையவை. அசோகரின் பாட்டனாகிய சந்திரகுப்தர் தென்னாட்டுக்கு வந்தபோது பத்ரபாகு முனிவரின் சீடராகிய விசாக முனிவர் தமிழகத்தில் சமண சமயத்தை முதன்முதலாக பரப்பியவர் என்பது கர்ண பரம்பரை வரலாறு. இதன் அடிப்படையில் பிராமி எழுத்துமுறை தமிழகத்தில் முதன்முறையாக கி.மு. 300 வாக்கில் பரவியதாக ஏற்றுக்கொள்ளலாம். தமிழகத்தின் வடக்கே ஆந்திர-கர்நாடகப் பகுதிகளிலும் தெற்கே இலங்கையிலும் காணப்படும் பண்டைய எழுத்துகளும் இதே காலகட்டத்தைச் சார்ந்தவை. தமிழகத்திலும் இந்தியத் துணைக்கண்டத்தின் மற்ற பகுதிகளிலும் இதுவரை நடந்துள்ள அகழ்வாய்வுகளில், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் (சிந்துவெளி எழுத்துமுறையைத் தவிர்த்து மற்ற) எழுத்துகள் காணப்படவில்லை. ஆக, இந்தச்சான்றுகளை ஒட்டுமொத்தமாகக் கவனிக்கும்பொழுது தமிழகம் உள்ளிட்ட தென்னகத்திலும் இலங்கையிலும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தறிவு தோன்றியது என்று கருதலாம்.
த்மிழும் தென்னகத்தின் பிற மொழிகளும்
தமிழகத்தில் முதன்முதலாக எழுத்துகள் தோன்றிப் பரவிய சூழ்நிலை, அதே காலகட்டத்தில் திராவிட மொழிகள் வழக்கிலிருந்த ஆந்திர-கர்நாடகப்பகுதிச் சூழ்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது என்பது உண்மையிலேயே மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் முதன்முதலில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தை 'முதல் அறிவொளி இயக்கம்' என்று கூறமுடியும். ஆனால் ஆந்திர-கர்நாடகப் பகுதிகளில் பிராமி எழுத்துமுறை பரவியிருந்தபோதும் அங்கு 'அறிவொளி இயக்கம்' தோன்றியதாகக் கருதமுடியாது. இவ்விதமான மாறுபட்ட விளைவுகளுக்கு முக்கியமான காரணங்கள் மூன்று.
1. ஆந்திர, கர்நாடகப் பகுதிகளைக் காட்டிலும் மிக முந்தைய காலத்தில், தமிழகப்பகுதியில், மக்களின் பேச்சுமொழியான தமிழில், கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன.
2. கல்வெட்டுகளில், பானைக்கீறல்களில், நாணயங்களில், முத்திரைகளில், மோதிரங்களில் - சுருங்கக்கூறினால் எழுதப்பட்டவை யாவையுமே - தமிழில் மட்டுமே உள்ளன.
3. அரசவையில், மேனிலை-மக்களிடையே, வழிபாட்டுத்தலங்களில் மாத்திரம் எழுத்தறிவு என்ற நிலை தமிழகத்தில் காணப்படவில்லை. மாறாக எல்லா நிலைகளிலும் எல்லா மக்களிடையேயும் எழுத்தறிவு மிகப் பரவலாகக் காணப்பட்டது என்பது என் ஆய்வின் ஒரு முக்கிய முடிவாகும். இதற்கு மேற்கூறிய காரணங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு ஆராயலாம்:
மேற்கூறியபடி தமிழகப்பகுதியின் பண்டைய கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன. இதுவரை கண்டெடுத்துள்ள கன்னடக் கல்வெட்டுகளில் பண்டையது ஹல்மிடி சாசனம். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்தது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தெலுங்குக் கல்வெட்டுகளில் பண்டையது ரேநாட்டுச் சோழர்களின் கலமல்ல சாசனம். இது கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பொறிக்கப்பட்டது.
கல்வெட்டுகளில் இருப்பது போன்றே இலக்கியத்திலும் தமிழுக்கும் கன்னட-தெலுங்கு மொழிகளுக்கும் பெரும் கால இடைவெளி உண்டு. தமிழில் சங்கப்பாடல்கள் தொகுக்கப்பெற்ற காலத்தைத் தள்ளிவைத்தாலும் கூட, அது கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து என, அகச்சான்றுகள், புறச்சான்றுகள் மூலம் கருதமுடியும். ஆனால் கன்னடத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதலும் தெலுங்கில் கி.பி. பதினோராம் நூற்றாண்டு முதலும்தான் இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின.
தமிழ்க் கல்வெட்டுகளுக்கும் கன்னட-தெலுங்குக் கல்வெட்டுகளுக்கும் கால இடைவெளியைத் தவிர மற்றுமொரு மிகப்பெரிய மாறுபாடும் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகப் பழைய தமிழ்-பிராமி கல்வெட்டுகள் யாவற்றுள்ளும் இருப்பவை தமிழ் வாசகங்களே. இந்த வாசகங்களில் ஆங்காங்கே பிராகிருதச் சொற்கள் காணப்படினும் கல்வெட்டுகளின் அடிப்படைமொழி தமிழே என இப்பொழுது ஐயத்துக்கிடமின்றி நிறுவப்பட்டுவிட்டது.
தமிழ்மொழியின் சிறப்பு எழுத்துக்களாகிய ழ, ள, ற, ன என்பன இவற்றில் காணப்படுகின்றன. வடமொழியின் வர்க்க எழுத்துக்கள் சிற்சில பிராகிருதச் சொற்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் காணப்படவில்லை. இதுவரை தமிழகத்தில் முற்றிலும் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள பண்டைய பானைக்கீறல்களில், நாணயங்களில், மோதிரங்களில், இலச்சினைகளில் தமிழ்மொழியே கையாளப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் போன்ற தலைநகர்களிலும் அரிக்கமேடு, கொடுமணல் போன்ற வணிக மையங்களிலும் மட்டுமே மிகச்சில பானைக்கீறல்களில், இலச்சினைகளில் பிராகிருத மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது, தமிழகப் பகுதியில் எழுத்துமுறை முதன்முதலாகத் தோன்றியபொழுது எழுதக் கையாளப்பட்ட மொழி தமிழே என்பதில் ஐயமில்லை.
கன்னட-தெலுங்கு பேசும் பகுதிகளில் இதே காலகட்டத்தில் சூழ்நிலை முற்றிலும் மாறாக இருந்தது. இவ்விரு பகுதிகளிலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள், இலச்சினைகள், பானைக்கீறல்கள் எல்லாமே முழுக்க முழுக்க பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. எழுத்துமுறை தோன்றி எண்ணூறு ஆண்டுகளுக்கும் மேல் கன்னடத்திலோ, தெலுங்கிலோ கல்வெட்டுகளும் பிற சாசனங்களும் எழுதப்படவில்லை. பிராகிருத மொழிச் சாசனங்களில் ஆங்காங்கே சிற்சில கன்னட-தெலுங்குச் சொற்கள் மட்டுமே காணப்படுகின்றன. 
இதை இன்னொரு விதமாகவும் விளக்கலாம்: தமிழகப்பகுதியின் பழைய கல்வெட்டுகளில் பிராகிருதச்சொற்களைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்; அதே காலகட்டத்தில் ஆந்திர-கர்நாடகப் பகுதிகளில் எழுதப்பட்டுள்ள பிராகிருத சாசனங்களில் தெலுங்கு-கன்னடச்சொற்களைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்!
தமிழில் எழுத்தறிவு
தமிழகப்பகுதியில் பண்டைக் காலத்திலிருந்தே எழுத்தறிவு பரவலாகக் காணப்பட்டது என்பதற்குப் பல சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன. இங்கே குகைகளில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்-பிராமி கல்வெட்டுகளைச் செய்தவர்கள் வடநாட்டிலிருந்து வந்த தமிழறியா சமணத்துறவிகள் என முதலில் கருதப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் அகழ்வாய்வு செய்தபோது நூற்றுக்கணக்கான பானைக்கீறல்கள் தமிழ்-பிராமி எழுத்துக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பானைக்கீறல்கள் மதுரை, கரூர், உறையூர் போன்ற தலைநகர்களிலும் கொற்கை, அழகன்குளம், அரிக்கமேடு போன்ற துறைமுகங்களிலும் மட்டுமன்றி அழகரை, போளுவாம்பட்டி போன்ற சிற்றூர்களிலும் கிடைக்கின்றன. இந்தப் பானைக்கீறல்களில் சாமானியர்களான பொதுமக்களும் தத்தம் பெயர்களை எழுதியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும் அதே காலகட்டத்தில் அல்லது சற்றே பிந்தைய காலத்தில் எழுந்த சங்க நூல்களை ஆக்கியோரும் தொகுத்தோரும் சமுதாயத்தின் எல்லாத் தளங்களையும் சார்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. சங்கப்புலவர்களில் அரசர்களும் வணிகர்களும் பல்வேறு தொழில் செய்தவர்களும் பெண்டிரும் அடங்குவர். இந்தச்சான்றுகளை நோக்கினால் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் முதல் அறிவொளி இயக்கம் மிகப் பரவலாக நடைபெற்றது என்ற முடிவுக்கு வரலாம்.
இதே காலகட்டத்தில் ஆந்திர-கர்நாடகப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பானைக்கீறல்கள் பௌத்த விகாரங்களில் மட்டுமே கிடைத்துள்ளன. அவை பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை; பௌத்த சமயச் சார்புள்ளவை.
மேற்கூறிய சான்றுகளிலிருந்து தமிழகப்பகுதியிலும் ஆந்திர-கர்நாடகப் பகுதிகளிலும் முதன்முதலில் காணப்படும் எழுத்தறிவு இருவேறு வகையானவை என்றுதான் கருதமுடிகிறது. தமிழகப்பகுதியின் எழுத்தறிவைப் பொதுமக்களின் ஆதரவு பெற்ற (Popular) அறிவொளி இயக்கம் என்றும் ஆந்திர-கர்நாடகப் பகுதிகளில் காணப்படும் எழுத்தறிவை மேல்மட்டத்து (elitist) எழுத்தறிவு என்றும் வர்ணிக்கலாம்.
மேற்குறித்த மாறுபாடுகளுக்கு என்ன காரணங்கள் என்பதை இனி காணலாம்.
ஆந்திர-கர்நாடகப் பகுதிகளில் அக்காலத்தில் பேசப்பட்ட மொழி பிராகிருதம் என்று கூறமுடியாது. பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ள சாசனங்களில் ஆங்காங்கே கன்னட-தெலுங்குச்சொற்கள் காணப்படுவதிலிருந்து இந்தத் திராவிட மொழிகளைத்தான் மக்கள் அங்கு பேசிவந்தார்கள் என்று தெரிகிறது. மேலும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை கன்னட-தெலுங்குச்சொற்கள் தனிமொழிகளாக வளர்ச்சியடையவில்லை என்றும் கூறமுடியாது. திராவிட மொழிகளின் ஒப்பியல்-ஆய்வு மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் வரலாற்றுக்காலத்திற்கு முன்பே தனிமொழிகளாகிவிட்டன என்று தெரிய வருகிறது. மேலும் தெலுங்கு-கன்னடம் பேசும் பகுதிகளில் சதவாகனர்கள் போன்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள்; கலை-நுணுக்கம் மிகுந்த பெரும் வழிபாட்டுத்தலங்கள் எழுப்பப்பட்டன. பிராகிருத மொழியில் இலக்கியம் தோன்றியது. பொதுவாகத் தமிழகப்பகுதியை விட ஆந்திர-கர்நாடகப் பகுதிகள் பண்பாட்டில் பின்தங்கியிருந்தன என்று கருத எத்தகைய சான்றுகளும் இல்லை. ஆகவே மேற்கூறியபடி மொழிவளர்ச்சியில் மட்டும் காணப்படும் மாறுபாட்டுக்கு வேறு காரணங்கள் இருக்கவேண்டும்.
அரசியல்-சுதந்திரம்
ஒரு மிக முக்கிய காரணம் தமிழகம் அக்காலகட்டத்தில் அரசியல்ரீதியாக சுதந்திரமாக இருந்தது என்பதே. ஆந்திர-கர்நாடகப் பகுதிகள், நந்த-மௌரியப் பேரரசுகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தன. பேரரசர் அசோகர் தம்முடைய பதின்மூன்றாவது சாசனத்தில் ஆந்திரத்தைத் தம்முடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி என்று கூறியிருக்கிறார். மகத அரசின் ஆட்சிமொழி பிராகிருதமாக இருந்ததால் அப்பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்திலும் பிராகிருத மொழியே ஆட்சிமொழியாகவும் சமயம், வணிகம், கல்வி போன்ற துறைகளில் பொதுமொழியாகவும் இருந்தது. மௌரிய ஆட்சி வீழ்ந்து அவர்களுக்குப் பின் ஆந்திர-கர்நாடகப் பகுதிகளை ஆண்ட சதவாகன மன்னர்களும் அவர்களுக்குப் பிறகு இக்ஷ்வாகு, கதம்ப, சாலங்காயன, விஷ்ணுகுண்டின், பல்லவ வம்சங்களைச் சார்ந்த மன்னர்களும் பிராகிருத மொழியையே தொடர்ந்து ஆட்சிமொழியாகப் பயன்படுத்திவந்தனர். மேனிலை-மக்கள், பொதுமக்களுக்குப் புரியாத ஒரு மொழியைத் தங்கள் ஆட்சிமொழியாக வைத்துக்கொள்வதின் மூலம் சாமான்ய மக்களை ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலக்கிவைத்துத் தாமே அதிகாரத்தைத் தொடர்ந்து செலுத்தினர் என்பது உலகறிந்த உண்மை. பிற்காலத்தில் இந்தியத்துணைக்கண்டத்தில் மொகலாய ஆட்சியின்போது பாரசீகம் ஆட்சிமொழியாக இருந்ததும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் அதற்குப் பிறகும் ஆங்கிலம் ஆட்சிமொழியாக அமர்ந்திருந்ததும் வரலாறு காட்டும் உண்மைகள்.
இந்தக் காலகட்டத்தில் தமிழகப்பகுதியின் அரசியல்நிலை முற்றிலும் வேறாக இருந்தது. தமிழகப்பகுதி, நந்த-மௌரியப் பேரரசுகளின் கீழ் ஒருபோதும் அடங்கியிருக்கவில்லை. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் மட்டுமின்றி அதியமான்கள் போன்ற குறுநில மன்னர்களும் தமிழகத்தில் சுதந்திரமாக ஆட்சி செய்து வந்தனர். பேரரசர் அசோகர் தம்முடைய இரண்டாம் சாசனத்தில் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களையும் சத்ய-புத்திரர் எனப்படும் அதியமான்களையும் தம்முடைய 'அண்டை நாட்டுக்காரர்' என்றே குறிப்பிடுகிறார். தமிழகப்பகுதி அப்போது பெற்றிருந்த அரசியல் சுதந்திரத்தினால் இங்கே தமிழே ஆட்சிமொழியாக, கல்விமொழியாக, சமயம், வணிகம் போன்ற எல்லாத்துறைகளிலும் பொதுமொழியாக விளங்கி வந்தது. தமிழ்மக்கள் தமிழை எழுதப் பிராமி எழுத்துமுறையை ஏற்றுக்கொண்டபோதும் பிராகிருத மொழியை ஆட்சிமொழியாகவோ பொதுமொழியாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. பிராமி எழுத்துமுறையை மாற்றியமைத்துத் தமிழுக்குத் தேவையான எழுத்துகளைக் கூட்டியும் தமிழுக்குத் தேவையில்லாத எழுத்துகளை நீக்கியும் மேலும் சில மாறுதல்களைச் செய்தும் தமிழுக்கென ஒரு தனியான எழுத்துமுறையைப் படைத்தனர். இதையே தமிழ்-பிராமி என்று இன்று குறிக்கிறோம்.
முற்காலத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட சமண-பௌத்த சமய நூல்களில் தமிழகத்தின் பண்டைய எழுத்துமுறையை திராவிடி அல்லது தாமிளி என்று குறித்தனர். அக்காலத்தில் தமிழகத்தில் சமயத் தொண்டாற்ற வந்த சமண-பௌத்த முனிவர்களும் தமிழைக் கற்றுக்கொண்டு தங்கள் சமயப்பணியையும் தமிழ்ப்பணியையும் ஒருங்கே ஆற்றினர். பிற்காலத்தில் ஐரோப்பாவிலிருந்து கிறிஸ்தவ மத போதகர்கள் இங்கே வந்தபோது சமயத்தொண்டையும் தமிழ்த்தொண்டையும் ஒருங்கே ஆற்றினர் என்ற வரலாற்று உண்மையையும் இங்கு குறிப்பிடலாம்.
மற்ற தென்னகப்பகுதிகளைக் காட்டிலும் தமிழகப்பகுதியில் மிக முன்னதாகவே எழுத்தறிவு பரவியதற்கு அரசியல் சுதந்திரமும் தமிழ் ஆட்சிமொழியாகவும் பொதுமொழியாகவும் இருந்தமையும் முக்கியக்காரணங்கள். இவற்றைத் தவிர தமிழகப்பகுதியில் முதல் அறிவொளி இயக்கம் வேகமாகவும் ஆழமாகவும் பரவியதற்கு மேலும் சில காரணங்கள் இருந்தன. அவற்றையும் இங்கு சுருக்கமாக ஆராயலாம்.
1. புலமைக்கு மதிப்பு: இங்கே புலவர்களும் வாய்மொழியாகப் பண்ணிசைத்த பாணர்களும் வெகுவாகப் போற்றப்பட்டனர். வேந்தர்களும் குறுநில மன்னர்களும் தமக்குள் போரிட்டுக் கொண்டபோதும் புலவர்களும் பாணர்களும் ஓர் அரசவையிலிருந்து மற்றொரு அரசவைக்குப் போக எந்தத்தடையும் இருக்கவில்லை. தமிழ்மக்களுக்கு வாய்மொழிப்பாடல்களிலும் இசையிலும் இருந்த ஈடுபாடு, எழுத்துமுறை வழக்குக்கு வந்த பிறகு இலக்கியங்கள் வெகுவிரைவில் தோன்ற ஒரு நல்ல களமாக அமைந்தது. தமிழ் வேந்தர்களும் குறுநில மன்னர்களும் புலவர்களைப் பெரிதும் போற்றப்பட்டதால், இங்கே சங்க காலத்தில் எழுத்திலக்கியம் பெரிதும் வளர்ச்சி பெற்றது.
2. குருமார்களின் எதிர்ப்பின்மை: வடநாட்டில் குருமார் வேதங்களை வாய்மொழியாகவே கற்கவேண்டும் என்றும் அவற்றை எழுதுவது கூடாது என்றும் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனாலேயே வேதங்களை "எழுதாக்கிளவி" (ஸ்ருதி) என்று அழைத்தனர். இந்தச்சூழ்நிலையில்தான் வடநாட்டில் எழுத்துமுறை தோன்றி ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் வரை வடமொழியில் கல்வெட்டுகளே காணப்படவில்லை. கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், இலச்சினைகள் யாவும் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. வடமொழியில் எழுதப்பட்டுள்ள முதல் முக்கியமான கல்வெட்டு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட ருத்ரதாமன் என்ற மன்னனுடையதாகும்.
தமிழகத்தில் கல்வி எந்த ஒரு குழுவிடமோ சாதியிடமோ கட்டுண்டு கிடக்கவில்லை. மேலே குறிப்பிட்டபடி சங்கப்பாடல்களை எழுதிய புலவர்களும் அதற்கு முன்னரே பானைக்கீறல்கள் மூலம் எழுதிய பொதுமக்களும் சமுதாயத்தின் அனைத்துத்தளங்களிலும் இருந்துள்ளனர்.
3. தமிழகத்தின் ஊராட்சி-முறை: சங்கத்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அம்பலம், பொதியில், மன்றம் போன்ற அமைப்புகளும் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் குறிப்பிடும் நிகமம் போன்ற அமைப்புகளும் தமிழகத்தில் முற்காலத்திலேயே ஊராட்சி முறை ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதற்குச் சான்றுகளாகும். மக்கள் பேசும் மொழியான தமிழ்மொழியே பல்வேறு ஆளும் மன்றங்களுக்கு ஆட்சிமொழியாக அமைந்திருந்தது. இந்தச்சூழ்நிலையில் எழுத்தறிவு ஓர் அறிவொளி இயக்கமாகவே தமிழகத்தின் கிராமப்புறங்களில்கூடப் பரவியிருந்தது என்பதற்கு எங்கு தோண்டினாலும் கிடைத்துவரும் பானைக்கீறல்களையே சான்றுகளாகக் காட்டலாம்.
4. சமண-பௌத்த சமயத்தொண்டு: மேலே குறிப்பிட்டபடி ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமணமும் பௌத்தமும் இங்கே பரவியபோதுதான் எழுத்துமுறை முதன்முதலாக உருவாகியது. இவ்விரு சமயங்களுமே வைதீக-இந்து மதத்திற்கு எதிராக எழுந்தவை. இந்தச்சமயங்கள் வடமொழி வேதங்கள் முதலாகிய நூல்களில் நம்பிக்கைகொள்ளவில்லை. இவ்விரு சமயத்தவர்களும் தம்முடைய சமயப்பணியை முதல் காலகட்டத்தில் வடமொழியில் பதிவு செய்யாமல், வடநாட்டில் மக்கள் பேசிய மொழியாகிய பிராகிருதத்திலேயே எழுதியும் பிரச்சாரம் செய்தும் வந்தார்கள். சமண-பௌத்த முனிவர்கள் சமயத்தொண்டுக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்தபோதும் அதே மரபைப் பின்பற்றினர். அதாவது, மக்கள் பேசும் மொழியான தமிழ்மொழியிலேயே தம்முடைய சமய நூல்களை இயற்றி சமயத்தொண்டாற்றினர். இச்சூழ்நிலையில் தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் தமிழ்மொழிக்கு மிகப்பெரிய தொண்டாற்றியுள்ளன என்பதில் ஐயமில்லை.
இதே காலகட்டத்தில், ஆந்திர-கர்நாடகப் பகுதிகளில் பிராகிருதம் ஆட்சிமொழியாகவும் பொதுமொழியாகவும் இருந்ததால், அங்கே பிராகிருத மொழியையே சமணர்களும் பவுத்தர்களும் சமய நூல்களை இயற்றவும், சமயப்பிரச்சாரம் செய்யவும் பயன்படுத்தினர் என்று கல்வெட்டுகளிலிருந்தும் செப்பேடுகளிலிருந்தும் அறிய முடிகிறது. அங்கே நிலவிய அரசியல், சமுதாயச்சூழ்நிலை, சமயப்பிரச்சாரம் மக்களின் பேச்சு மொழியில் அமைய உகந்ததாக இல்லை.
5. தமிழகத்தில் வெளிநாட்டு வணிகம்: சங்க காலத்திற்கு முன்னரே தமிழ்மக்கள் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடும்" பொருட்டு மேலைநாடுகளுடனும் கீழைநாடுகளுடனும் கடல்வணிகம் செய்துவந்தனர். சங்ககாலத்தில் தமிழகப்பகுதியுடன் நடந்த ரோமானிய வணிக அளவு எவ்வளவு பரந்தது என்பதை இங்கே கிடைத்துள்ள ரோமானிய நாணயங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த வணிகத்தின் மூலம் இங்கே பெரும் செல்வம் குவிந்தததுடன், மேற்குலக எழுத்துமுறை பற்றிய செய்தியும் கிடைத்தது. 
அண்மையில், எகிப்து நாட்டில் செங்கடல் கரையில் அமைந்துள்ள க்வெசிர் அல்-காதிம், பெரெனிகே ஆகிய துறைமுகங்களில் தமிழ்மொழியில் தமிழ்-பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ள பானைக்கீறல்கள் அகழ்வாய்வுகள் மூலமாகக் கிடைத்துள்ளன. இப்பானைக்கீறல்களில் சா[த்]தன், க[ண்]ணன், கொ[ற்]ற[ப்] பூமான் ஆகிய தமிழ்ப்பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. வியன்னா நகரத்து அருங்காட்சியகத்தில் உள்ள கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பாப்பிரஸ் ஏட்டில், முசிறிஸ் எனப்படும் இன்றைய கேரளத்தின் கொடுங்கல்லூர்த் துறைமுகத்தைச் சார்ந்த ஒரு வணிகனுக்கும் எகிப்து நாட்டுத் துறைமுகம் அலெக்ஸாந்திரியா நகரிலிருந்த ஒரு ரோமானிய வணிகனுக்கும் இடையே கடல்வணிக ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆவணம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ள போதிலும் சங்க காலத்தில் கடல்வணிகம் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
அண்மையில், தாய்லாந்து நாட்டில் (குவான் லுக் பட் என்ற நகரின்) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கல்லில் பெரும்ப[த்]தன் கல் என்று தமிழ்-பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல் பொன்னின் தரத்தைக் கண்டறிய உதவும் உரைகல் ஆகும் என்று அதை நேரில் பார்வையிட்ட ப. சண்முகம் கூறுகிறார்.
6. தமிழ் எழுத்துகளின் எளிமை: தமிழ்-பிராமி எழுத்துமுறையில் எட்டு உயிரெழுத்துக்களும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் ஆக மொத்தம் இருபத்தாறு எழுத்துக்களே உள்ளன. எழுத்துக்களின் அமைப்பும் கற்பதற்கு மிக எளிமையாகவே இருந்தது. எழுதுவதற்காகப் பயன்படுத்திய பனையேடுகளும் தமிழகப்பகுதியெங்கும் ஆண்டு முழுவதும் தேவையான அளவுக்கு மேலாகவே தாராளமாகக் கிடைத்தன. இரும்பினால் ஆன எழுத்தாணியைக் கிராமப்புறங்களில் கொல்லர்கள் மிக எளிதாக உருவாக்கியிருக்க முடியும். குறைந்த எண்ணிக்கையில் எழுத்துகள், எளிய முறையிலமைந்த எழுத்துருக்கள், தாராளமாகக் கிடைத்த எழுத்தாணியும் ஏடும் அமைந்திருந்த நிலையில், தமிழகமெங்கும் இவ்வெழுத்துமுறை மிக விரைவில் பரவியதில் வியப்பில்லை.
இலங்கையில் எழுத்தறிவு
தமிழகப்பகுதியிலும் அதன் சற்றே வடக்கில் ஆந்திரம்-கர்நாடகப் பகுதிகளிலும் எழுத்தறிவு தோன்றிய சூழ்நிலை மிகவும் மாறுபட்டிருந்தது என்பதை இதுவரை பார்த்தோம். இதே காலகட்டத்தில் தமிழகத்துக்குத் தெற்கே இலங்கையிலும் பௌத்தத் துறவிகள் மூலம் பிராமி எழுத்துமுறை பரவியபோது அங்கு நிலவிய சூழ்நிலையையும் சுருக்கமாக ஆராயலாம்.
அரசியல் நிலைமையைப் பொறுத்தவரை, இலங்கையும் அக்காலத்துத் தமிழகத்தைப் போலவே ஒரு சுதந்திர நாடாக இருந்தது. அதனால், அங்கு இந்தியாவிலிருந்து சென்ற எழுத்துமுறை ஓர் அறிவொளி இயக்கமாகவே மலர்ந்தது. சிங்கள அரசின் ஆதரவிலும் பௌத்தத்துறவிகளின் ஆதரவிலும் பிராமி எழுத்துமுறை சிங்கள எழுத்துமுறையாக மாற்றியமைக்கப்பட்டது. பழைய சிங்களமும் ஒரு பிராகிருத மொழிதான் என்றாலும் அதன் ஒலியமைப்பு இந்தியப் பிராகிருத மொழிகளிலிருந்து வேறுபட்டிருந்தது. பழைய சிங்கள மொழியின் ஒலியமைப்புக்கு ஏற்றவாறு பிராமி எழுத்துமுறையிலிருந்து நெடில் உயிரெழுத்துகளும் மூச்சொலி மெய்யெழுத்துகளும் வேறு சில ஒலிகளும் நீக்கப்பட்டன. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட எழுத்துமுறையை, "சிங்கள-பிராமி" என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இக்காலகட்டத்தில் இலங்கையில் பொறிக்கப்பட்டுள்ள குகைக்கல்வெட்டுகள் அனைத்தும் பழைய சிங்கள மொழியிலும் சிங்கள-பிராமி எழுத்துமுறையிலும் அமைந்தவையே. தமிழகத்தைப் போலவே, இலங்கையிலும் சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களிடம் கல்வியறிவு மிகப்பரவலாக இருந்தது என்று ஊகிக்க முடிகிறது.
அக்காலத்தில் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து வந்த தமிழ்மக்களின் நிலை வேறுவிதமாக இருந்தது. சிங்களமே ஆட்சிமொழியாகவும் பொதுமொழியாகவும் இருந்ததால், தமிழ்மக்களும் அங்குப் பொது அறிவிப்புகளுக்கு சிங்களத்தையே பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆகையால்தான் இலங்கையில் குகைக்கல்வெட்டுகளில் தமிழ் வணிகர்களும் சிங்கள மொழியையே பயன்படுத்தினார்கள். ஆயினும், யாழ்ப்பாணம் போன்ற தமிழ்ப்பகுதிகளில் தமிழ்மக்கள் தமக்குள் தமிழ்மொழியையும் தமிழ்-பிராமி எழுத்துமுறையையும் கையாண்டனர் என்பது அண்மையில் பூநகரி, கந்தரோடை ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ள பானைக்கீறல் எழுத்துக்களிலிருந்து தெரியவருகிறது.
முதல் அறிவொளி இயக்கத்தின் விளைவுகள்
தொன்றுதொட்டுப் பேச்சுமொழியாக இருந்த தமிழ்மொழி, எழுத்துமொழியாக மாறிய காலத்தில் தமிழ்ச்சமுதாயத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். இம்மாறுதல்களைப் பற்றி வரலாற்றாய்வாளர்கள் இன்றும் ஆழ்ந்து கணிப்பு செய்யவில்லை என்பது என் கருத்து. அக்காலத்தில் நிகழ்ந்த பெரும் மாறுதல்களில் முக்கியமான சிலவற்றை மட்டும் இவ்வாய்வுரையின் முடிவில் குறிப்பிடுகிறேன். 
1. இனக்குழுக்களின் தலைவர்கள் அரசர்களாக வளர்ந்தனர். எழுத்தறிவின் மூலமாகக் கணக்கு வைத்துக்கொள்ளும் முறை வளர்ந்து, பல்வகையான வரிகள் போடும் சூழ்நிலை உருவாகியது. வெளிநாடுகளுடன் அரசியல், வணிக உறவுகள் எழுதப்பட்ட ஒப்பந்தங்களின் மூலம் வலுப்பெற்றன.
2. அரசின் தலைமையகங்களும் துறைமுகங்களும் வணிக மையங்களும் பெருநகர்களாக வளர்ச்சியுற்றன.
3. பெரும் கோயில்கள் எழுப்பப்பட்டு அவையே ஊர்களின் பள்ளிகளாகவும், வங்கிகளாகவும், ஆவணப்பதிவகங்களாகவும் சமய மையங்களாகவும் ஊராட்சி நிலையங்களாகவும் பன்முனை வளர்ச்சி பெற்றன.
4. மேற்குலக, கீழையுலக நாடுகளுடனும் கடல் வணிகம் பெருகியது.
5. தமிழே ஆட்சிமொழியாகவும் பொதுமொழியாகவும் இருந்ததாலும் தமிழின் எழுத்துமுறை கற்பதற்கு மிகவும் எளிதாக அமைந்ததாலும் எல்லோருக்கும் கல்விவாய்ப்பு பெருகி, ஊராட்சியில் பொதுமக்கள் அதிகமாகப் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
6. தொன்றுதொட்டு வாய்மொழியாக இருந்தபோதே மிகவும் வளமடைந்திருந்த தமிழ்மொழி, எழுத்துமுறை உருவாகியபிறகு மேலும் வளர்ந்து, இலக்கியங்கள் தோன்றி ஓர் உயரிய செம்மொழியாகப் பரிணாம வளர்ச்சியடைந்தது. இதையே "சங்ககாலம்" என்று குறிக்கிறோம். தமிழ்மொழியில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி, தென்னகத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.
படங்கள் -
1. செங்கடல் பகுதி, பெரெனிகே துறைமுகத்தில் கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்பெறும் பானைக்கீறல், இதிலுள்ள தமிழ்-பிராமி வாசகம் - கொற்றன்.
2. செங்கடல் க்வெசிர் அல்-காதிம் பகுதியில் உள்ள பானைக்கீறல், கி. மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்பெறுவது. இதிலுள்ள த்மிழ்-பிராமி வாசகம் ஆதன். இதே போன்ற இன்னொரு பானைக்கீறலில் உள்ள வாசகம், ?(ஆ)தன்.
3. தாய்லாந்தின் குவான் லுக் பத் என்ற துறைமுக நகரில் வைக்கப்பட்டிருக்கும் உரைகல். கி. பி. மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்பெறுகிறது.
4. மேற்கண்ட உரைகல் தவிர, மூன்றாண்டுகள் முன்பு ஃப்ரெஞ்சு-தாய்லாந்து அறிஞர் குழுவொன்று தாய்லாந்தில் ஃபூ காவ் தோங் என்ற இடத்தில் கண்டெடுத்த பானைக்கீறல். து-ற-?-ஓ என இருக்கும் இந்த தமிழ்-பிராமி வாசகத்தை துறவோன் என வாசிக்கலாம்.
5. இரு ஆண்டுகள் முன்பு, பிரிட்டிஷ் தொல்லியல் அறிஞர்கள் செங்கடல் க்வெசிர் அல்-காதிம் பகுதியில் கண்டறிந்த கி. மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்பெறும் பானைக்கீறல், இதிலுள்ள தமிழ்-பிராமி வாசகம் - பானை ஒறி (உறி).
ஐராவதம் மகாதேவன் அவர்களின் முக்கிய நூல்கள்:
The Indus Script: Texts, concordance and tables, Delhi, 1977.
Early Tamil Epigraphy. From the Earliest Times to the Sixth Century A.D., Chennai and Cambridge, USA, 2003.
வாழ்த்தும் நூல்:
Airavati Felicitation Volume in Honour of Iravatham Mahadevan, (ed) R. Kalaikkovan et al., Chennai, 2008.
கடப்பாடு பல - ஆர்தர் ரைம்போ
வோரிங்ஹெம்
லூயிஸ் வனேன் (1)
என்ற என் சகோதரிக்கு!
இவள் தலைக்குட்டை
வடகடல் நோக்கும்
கலச்சேதம் பிழைத்தோர் தேடி.
லியோனி ஓபுவா ஆஷ்பி (2)
என்ற என் சகோதரிக்கு!
கோடைப்புல்லின்
சரசரப்புக்கு, நாற்றத்துக்கு!
தாய்சேய் ஜுரம் பலதுக்கு!
நட்பில்பெண்டிர்க் கால உரைவீச்சை
தன் போதாக் கல்வியை
இன்னும் ரசித்துக் காக்கும்
லூலூ
என்ற பூதத்துக்கு!
ஆடவர்க்கு!
மதாம் எக்ஸுக்கு!
ஒருகாலம்
முதிரா இளைஞனான எனக்கு!
முதிர்புனிதராம் இவருக்கு!
தவச்சாலைக்கு, நற்தூதுக்கு!
வறியோரின் ஆன்மாவுக்கு!
உயர்ந்த மதக்குருமார்க்கு!
நினைவை வழிபடும்
இடமெதும் கொண்ட பிரிவாம்
யாவற்றுக்கும்
எம் பெரும் தீநெறி
அன்றில்
அக்கணத்தின் பேரவா எதிலும்
தங்கிக் காண வேண்டிய சம்பவம்
யாவற்றுக்கும்
சமமாய்!
சிகப்பு யாமத்தின்
மாதம் பத்தொப்ப
ஒளிபட்டு
தடிமீனொத்துக்
காணும்
பனியுச்சி பலதின்
சிர்ஸெட்டோவுக்கு (3)
இந்த மாலைப்பொழுதில்!
பொன்மஞ்சள் தீரமான
இவள் இதயத்துக்கு!
யாமப் புலமிவற்றில்
என்
மௌனப் பிரார்த்தனை
இது மாத்திரம் –
துருவக் கொந்தளிப்பிலும்
வன்மையான
தீரச்செயல் பல முன்பாக!
இழப்பும் வடிவமும்
ஏதெனினும்
மீமெய்ம்மைப் பயணமெங்கிலும்
இனியுமில்லை
அப்பாலைக்காய்.
அடிக்குறிப்புக்கள்
1. 1893-ஆம் ஆண்டில் ப்ரஸ்ஸல்ஸ் நகர மருத்துவமனையில் ரைம்போவின் உடல்நலத்தைக் கவனித்த நர்ஸ்.
2. யாரென்று தெரியவில்லை.
3. ஸிர்ஸெட்டோ - ஹோமர் எழுதிய ஒடிஸ்ஸியில் வரும் பாத்திரம் சிர்ஸ், கிரேக்கப் புராண மரபில் வரும் பெண்பாத்திரம் ஸெட்டோ இரண்டையும் ரைம்போ இணைத்து உருவாக்கியிருக்கலாம்.
படம் - ரைம்போ லண்டனில் தங்கிய வீடுகளில் ஒன்று. கிங்ஸ் க்ராஸ் பகுதியில் என் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்.
ஊழிக்குப் பின் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை
ரைம்போ கவிதைகள்
26.1.09
காட்சி பல - ஆர்தர் ரைம்போ
பழம் ஹாஸ்ய நாடகம் தன் மரபில் சென்று பாட்டு பல முன்வைக்கும்.
அரங்கப்பலகை பலதின் புலிவார்-சாலை (1) பல.
கல்கிடந்த பரப்பின் ஒருமுனையினின்று மறுமுனை வரை படகுத்துறையின் நீள்மரப்பாலம். அங்கே வெறும் மரம் பலதின்கீழ் செல்வர் மிலேச்சர் கூட்டம்.
கரும்சல்லாத்துணியடர்ந்த தாழ்வாரம் பலதில் நடப்போரின் அடிச்சப்தத்தின், அவர்தம் லாந்தர் விளக்கு பலதின், இலைகளின் பின்செல்வர்.
மர்ம நாடகம் பலதில், தீவுக்கூட்டத்தில் படகுநிறைய வரும் பார்வையாளர் நகர்த்தும் கற்பாலமதில் அமரும் பறவை பல.
பாடல்காட்சி பல, குழலும் முழவும் உடனிசைக்க, மேற்பரப்பின் அடியில் விட்ட பாதைவழிச் சரியும், நவீன ’க்ளப்’ பல அன்றில் கீழை-உலகின் பெரும் அறை பல நோக்கி.
திறந்தவெளி அரங்கும் முட்செடி முடிசூடி அதன் உயரே மாய நாடகம் நடத்தும். அன்றில் போஷியர் (2) ரசனைப்படிச் சுறுசுறுப்பாய் மாறும், உழுநிலத்தின் மேல் கைவீசும் மரச்செறிவின் நிழலில்.
அரங்கின் இருக்கைநிலை முதல் தாழ்விளக்கு வரையென பத்துப்பிரிவும் தம்முள் வெட்டிக்கொள்ளும் கோணத்தில் அதை ஹாஸ்ய இசை-நாடகம் பிரிக்கும்.
அடிக்குறிப்புக்கள்
1. புலிவார்-சாலை - boulevard என்பதன் தமிழ்ப்படுத்தல்
2. போஷியர் - கிரேக்கத்தின் அருகில் வாழ்ந்த பழங்குடியினர்.
படம் - பாரீஸில் பல்கலைப் பாலம்
ஊழிக்குப் பின் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை
ரைம்போ கவிதைகள்
25.1.09
இயக்கம் - ஆர்தர் ரைம்போ
புரளும் ஆற்றின் கரையில் அசைவும்
படகின் அமரக்கூம்பில் சுழலும்
ஆங்கே சரிவில் உருளும் வேகம்
போய்வரும் புனலின் பேரோட்டம்
புத்தொளி மாறும் விளக்குப் பலதும்
ஊடே ரசாயனக் கண்டறிதலும்
பள்ளத்தாக்கின் சாரல்நீரும்
சற்றே எதிர்ச்சுழலும் தாண்டிப்
பயணியரை ஓட்டிச் செல்லும்.
பயணியர்தாம் வெல்வர் உலகும்.
தேடுவதும் ரசாயனச்செல்வம்.
ஆட்டம் சுகமும் உடன்செல்லும்.
இனம் பல வர்க்கம் மிருகமென
இவற்றைக் கற்பதைத்
தாங்கிச்செல்லும் இவர்க்கும்
ஓய்வும் கிறுகிறுப்பும் வேண்டி
ஊழியதன் ஒளியில்
பல பயங்கர-இரவிலும் படிப்பர்.
எந்திரம் பலதின் ஊடே
நிகழும் பேச்சு
குருதிப் பன்மலர்
தீ பன்நகை
தப்பியோடுவோரின்
கொந்தளிக்கும் கணிப்பு
எனக் காணலாம்
செய்கரையென உருளும்
சாலை பலதும்
புனல்மின்சக்தியின் உருள்வீச்சும் தாண்டி
ராட்சஸமாய்
முடிவற்ற ஒளிபட்டு
இவர்தம் வாசிப்பின் சேகரம்
தம்மில் விரட்டும்,
இசைவான பரவசமும்
கண்டறிதல்-தீரமும் நோக்கி.
அதிர்ச்சிமிகும்
வளிமண்டலச் செயல்பல
நடுவில்
அந்தப்பேழையில்
தள்ளி நிற்கும்
இளம்பருவத்தார் இருவர்,
ஒருக்கால் கடந்தகாலத்தின்
மிலேச்சத்தனத்தை
மன்னிக்கவோ என,
தம் நிலையேற்பர் பாடி.
--- Arthur Rimbaud, Mouvement, Les Illuminations, 1887.
ஊழிக்குப் பின் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை
ரைம்போ கவிதைகள்
24.1.09
வரலாற்று-மாலை - ஆர்தர் ரைம்போ
மாலைப்பொழுதொன்றில்
எம் பொருளாதாரப் பயங்கரம் விட்டு
சுற்றுலா செல்லும் அப்பாவி.
புற்பரப்பின் ஸ்வரமண்டல வாத்தியத்தை
உயிர்ப்பிக்கும் பாணரின் கரம்.
குளத்தின் அடியில் நடக்கும்
சீட்டாட்டம்.
ராணியர், உகந்தோரை
நினைவூட்டும் நிலைக்கண்ணாடி.
பெண் புனிதர்,
முகத்திரை,
இசைவின் இழைபல
படுஞாயிறதன்
பெயர்பெற்ற வண்ண ஜாலம்.
வேட்டையும் திரளானவரும்
கடந்தோட சிலிர்த்தார் இவர்.
நாடகம் பாடிக் கசியும் புற்பரப்பில்.
இந்த முட்டாள் விஷயங்கள்
வறியோரை, மெலிந்தோரை
அறக்குழப்பத்தில் ஆழ்த்தும்!
இவர் அடிமையென்ப இந்தக்காட்சியில்
ஜெர்மனி நிலவு நோக்கித் துன்புறுத்தும்.
தர்த்தாரியப் பாலையும் ஒளிரும்.
விண்ணுலகப் பேரரசின் இதயத்தில்
கனன்றுவிடும் பழம் பல கலகம்.
மாடிப்படியில்,
அரச இருக்கையின் கைப்பிடியில்,
வெளிறித் தகடாய் நீண்ட
ஆப்பிரிக்கா-மேற்குலகு என்ற
சிற்றுலகும் கட்டப்பெறும்.
அறிந்த கடலும் யாமமும்
பயனற்ற ரசாயனமாய்,
சாத்தியமில்லா இன்னிசையாய்,
இணையும் நாட்டியம்!
பொம்மைப்படகு
எம்மைக் கரைசேர்த்த
எங்குமதே பூர்ஷ்வா மாயம்.
அகமாம் இந்த அந்தரங்கம் முன்
உடல்மீதான அனுதாபத்தின்முன்
அடிபணியும் சாத்தியம்
இனியுமில்லை என,
இது ஒரு நோய் என
இயல்பியல் பயில்வோனும்
உணர்வான்.
இல்லை,
கதையில்லை!
நீராவி-அறையின்
புறமாக்கிய கடலின்
நிலத்தடிக் கொந்தளிப்பின்
சுமைதாங்கும் புவிக்கிரகத்தின்
இறுதிநாளும்
அதன்வழி வரும் அழித்தொழிப்பும்
என
விவிலியமும் நோர்ன் இனத்தோரும்
மெலிதாய்க் கூறிய தீர்மானம்
நடப்பதைக் காணும் கடமை
எம்மைப் போன்ற தீவிரத்தாருக்குண்டு
எனினுமிது
கதையில்லை.
வெறுங்கதையில்லை!
படம் - பாரீஸ் நகரில் மாலை
ஊழிக்குப் பின் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை
ரைம்போ கவிதைகள்
23.1.09
திராட்சைரஸத்தின் ஆன்மா - ஷார்ல் போதலேர்
இரவொன்றில் போத்தல் பலதிடம் திராட்சை ரஸமும் பாடியது:
"மனிதா,
யாரோ கைவிட்ட இனமே!
கண்ணாடிச் சிறையும்
மூச்சடைக்கும் ரோஸ்மெழுகும்
தாண்டி அனுப்புகிறேன்
ஒளிமிக்க
சகோதரத்துவப் பாடலிதை
உன்னிடமே!
எரிஞாயிறதன் கீழ்
அழற்கரை பலதில்
வியர்க்க உழைப்பதன்
வலியறிவேன்.
வாழ்வும் எனக்களித்து
ஆன்மாவும் பிறப்பித்த
செய்ந்நன்றி இல்லாமல்
போவேனோ!
உழைப்பால் அயர்ந்த
இவனொருவன் நோக்கித்
தாழக் குதித்து
நாணத் தொண்டை தீண்டும்
விநோத சுகம்
யான் உணர,
பிலக்குகை எனதிலும்
என்னை வளமாக்கும்
மென்-கல்லறை,
கதகதக்கும்
இவன் மார்போ!
ஞாயிறு தோறும் ஓலுறும்
உடன் பாட்டும் கேட்டிலையோ!
படபடக்கும் மார்பெனதில்
பாடும் நம்பிக்கையும் கேட்டிலையோ!
சட்டைக்கை மடக்கி
மேஜையில் முழங்கை வைத்து
பாடியென்னை அமைவாய்
நீயோ!
புளகித்த உன் துணைவியின்
விழியொளிரச் செய்வேன்.
வலிவும் வண்ணமும்
மீண்டுமுன் மகனுக்களிப்பேன்.
வாழ்வின் மெலிந்த
விளையாட்டு வீரனும்
மற்போர் வீரனின்
தசையேற்றும் எண்ணெயும்
யானோ!
பசுங்காய் அமுதமும்
நித்தியம் விதைப்போன் தூவும்
நெல் கண்மணியும்
நீயோ,
உன்னில் யானிறங்கி
அக்காதலின்றும் பிறந்து
அரியதோர் மலராய்
கடவுளை நோக்கியெழும்
கவிதையோ!"
- Charles Baudelaire, L'Ame du vin, Les Fleurs du mal, 1857.
21.1.09
நித்தியம் - ஆர்தர் ரைம்போ
கிட்டியது மீண்டும்
நித்தியமோ
கதிருடன் சென்ற கடல்.
கபாடத்தில் ஆன்மா
முணுமுணுக்கட்டும்,
இன்மை நிறை இரவின்,
மீறி எரித்த நாளின்,
பாவம் சம்மதித்து
மனிதமட்டில் பாராட்டு
பொது வேட்கை
இரண்டினின்றும்
இங்கு பிரிவாய் நீ!
விருப்பமாய்ப் பறக்க
உன்னில் உன்னிலின்றும்
பட்டுக்கங்கு பலதை
இறுதியெனக் கூறாமல்
கடமை கண்காணிக்க
இங்கில்லை நம்பிக்கை
இல்லை விண்ணப்பமும்;
பொறை கூடும் அறிவு.
சித்திரவதை நிஜம்.
கிட்டியது மீண்டும்
நித்தியமோ
கதிருடன் சென்ற கடல்.
--- Arthur Rimbaud, L'Eternité, Poésies Complètes, 1872.
ஊழிக்குப் பின் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை
ரைம்போ கவிதைகள்
20.1.09
அதி-குறியியல்-தளத்தில் லீனா முதல் லாஸ்கோ வரை
சென்னையில் முப்பத்திரண்டாவது புத்தக விழா முடிந்துவிட்ட இந்த நேரத்தில், பத்தாண்டுக்காலம் விலகி நின்றவன் என்பதால் எனக்கு எஞ்சுவது மலைப்பே - பதிப்பகங்கள் சில தலா இருபது, அறுபது ஏன் நூறு வரை நூல்களை வெளியிடுகின்றன. என்னுடன் நெடிய நட்புக்கொண்ட சக எழுத்தாளர்கள் ஐந்து, பத்து என எழுதித்தள்ளியிருக்கிறார்கள். சூ-வன்னா, பா-வன்னா இரண்டு வெங்கடேசன்மாரும் ஆண்டுபல உழைத்து எழுதியிருப்பவை நீண்ட நாவல்கள். ஒருவர் எதார்த்தமென்றால் இன்னொருவர் மாயா-எதர்ர்த்தமென்று அறிந்தேன். கோணங்கியின் பாழி நாவலின் இரண்டாம் பதிப்பு தவிர இவருடைய மொத்த சிறுகதைகளும் சலூன் நாற்காலியில் சுழன்றபடி 900 பக்க நூலாக வருகிறது எனவும் அறிகிறேன்...
நூல்களைவிட சுவாரசியம் இப்போதைக்கு வெளியீட்டு விழாக்களின் தடபுடலும் நியாயப்பாடும்தாம். மேடையில் நுனிநாக்கில் தங்கிலீஷ் பேசும் பெண்கள், பளீர் உடைகள், புன்- மற்றும் குபீர்-சிரிப்புகள், நூல்களை வாசிக்கவே துணியாத அரசியல்-வணிக-திரைப் பிரபலங்கள், யாருடனும் கைகோர்க்கத் துணிந்துவிட்ட எழுத்தாளர்கள், விழாக்களுக்கென சிறப்புப்பதிவுகள், புகைப்படங்களைப் பார்க்கும்போது யாவரும் இவற்றில் லயித்திருப்பது பிடிபடுகிறது... கண்காட்சியில் நிரந்தரர் வைரமுத்து ஒருபுறம் சி. மணி, ந. முத்துசாமி உள்ளிட்டோர் மறுபுறம், ஆங்கிலத்தில் குடியேறிவிட்ட ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர்... ஸிடி கடைகள், மேலும் சாப்பாட்டுக்கடைகள் என, இருபதாண்டுகளில் இப்படியாகத் தலைகீழாகியிருக்கிறது தமிழ்ச்சமுதாயம்.. புத்தகக் கண்காட்சி-நிகழ்வுகள், சடங்காக்கம் (ritualization) என்ற வகையில் ஒரு புதிய-குறியியல்தளத்தை எய்தியிருப்பதாகத் தெரிகிறது. கண்காட்சிக்குச் சென்ற தமிழவன் வார்த்தைகளில், புத்தகக் கண்காட்சி-நிகழ்வுகள், தமிழ்ச்சமுதாயத்துக்கான ஓர் அதி-குறியியல்-தளமாக மாறியிருக்கின்றன (hyper-semiotic space)... என் பங்குக்கு இரண்டு நூல்கள் வந்திருப்பதால் இதுபற்றிப் பேசும் உரிமை இதற்குமேல் எனக்கில்லை.
கண்காட்சிக்குப் போகாமலேயே மின்-நூலொன்று லண்டனுக்கு வந்தது. லீனா மணிமேகலையின் உலகின் அழகிய முதல் பெண் என்ற கவிதைத்தொகுப்பு. ஆச்சர்யமாக, புத்தகத்தின் உள்ளே குகை-ஓவியங்கள், வெட்டெழுத்துக்கள். கவிதைகளை முதல்முறை வாசித்ததில் வேட்டையை அடிக்கடி முன்வைக்கும் வரிகள் மேலெழும்பி வந்தன. கவிதையைக் குகை-ஓவியத்துடன் இணைக்கும் ஆர்வம்... அதற்கொப்ப, மேற்கண்ட புத்தக வெளியீட்டு அழைப்பிதழ் முகப்பில் இருப்பதும் வேட்டை பற்றிய குகை-ஓவியம்தான். அதேவேளை, பெயரற்ற மனிதர்கள் வரைந்த குகை-ஓவியத்துடன், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பெயர்கள் எழுத்தில் - அடடா, இங்கே அவற்றை வெட்டி எடுத்துவிட்டேன்! 
இந்தக் குகை-ஓவியங்கள் பற்றி லீனாவுடம் கேட்டபோது, நீலகிரிப்பகுதியில் கரிக்கியூர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற குகை- மற்றும் பாறை-ஓவியங்களைப் புத்தகத்தில் எடுத்தாண்டிருப்பதாகத் தெரிவித்தார். இவைபற்றிப் பதிவுசெய்துவரும் கே.டி. காந்திராஜனிடமிருந்து இந்த ஓவியங்களைப் பெற்றதாகக் கூறினார்...
அதேவேளை அழைப்பிதழில் உள்ள மேற்கண்ட ஓவியம் தமிழ்நாட்டைச் சேர்ந்தல்ல, மாறாக ஃப்ரான்ஸ் நாட்டில் லாஸ்கோ (Lascaux) என்ற குகைப்பகுதியில் உள்ள பெயர்பெற்ற ஓவியம். இதைத் தெரிவித்து, லாஸ்கோ ஓவியத்தையும் இணைத்து லீனாவுக்குச் செய்தி அனுப்பினேன். அவரும் இதை காந்திராஜனிடம் கேட்டு உறுதிசெய்தார். பிறகு எனக்குத் தெரிய வந்தது ஒரு விஷயம் - தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நாங்கள் கொண்டுவந்த வித்யாசம் இரண்டாவது இதழின் அட்டையில் இருந்ததும் இதே லாஸ்கோ ஓவியம்தான். வித்யாசம் ஆசிரியர் குழுவில் இருந்த எஸ். சண்முகம் இதை எனக்கு நினைவுபடுத்தினார். அந்த இதழின் அட்டையை வடிவமைத்தவனான எனக்கு இந்த விஷயம் மறந்துவிட்டது!
லாஸ்கோ குகை, எழுபதாண்டு முன்பு, அதாவது இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் சிறார் இருவர் எதேச்சையாகக் கண்டறிந்த ஒன்று. அங்குள்ள ஓவியங்கள் பலப்பல. சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகள் முந்தி வசித்த மனிதர்கள் வரைந்தவை இவை! ஆனால் பதினைந்தே ஆண்டுகள்தாம் இவற்றைப் பொதுமக்களால் பார்க்க முடிந்தது. பார்க்க வந்தவர்களின் சுவாசக்காற்று ஓவியங்களைத் தாக்கிவிட்டது என்பதால் குகையை மூடியே விட்டார்கள். சில ஆண்டுகள் முன் ஃப்ரான்ஸுக்குப் போன போது லாஸ்கோ நிஜ குகைக்கருகில் சுற்றுலாப்பயணிகளுக்கென நிர்மாணித்திருக்கும் virtual குகைவரை போய் வந்தேன். மறைந்த ழான் போத்ரியார் (Jean Baudrillard) கூறுவது போல, நகல்-பரப்பென்பது லாஸ்கோவுக்கும் பொருந்தும் ஒன்றே. அதாவது குகை-ஓவியம் என்பது ஓர் அதி-குறியியல்-தளமாக மாறியிருக்கிறது.
லாஸ்கோ குகையில் உள்ள வேட்டையில் வீழ்ந்த எருதும் மனிதனும் என்ற ஓவியத்தின் மர்மத்தை அலசும் நோக்கில், ஒரு முக்கிய நூலையே எழுதியவர், ழார் பத்தாய் (Georges Bataille). அதாவது, லாஸ்கோ - கலையின் பிறப்பு (Lascaux ou la Nassaince de l'art) என்ற நூலும் அதைத் தொடர்ந்து கட்டுரைகள் சிலதும் எழுதியிருக்கிறார். நேரம் கிட்டட்டும், இவருடைய ஒரு கட்டுரையாவது தமிழில் செய்கிறேன்... 
என்னைப் பொறுத்தவரை, கர்நாடகத்தில்-தமிழகத்தில் பத்திரிகைக்காரனாகப் பணியாற்றிய காலத்தில் குகை ஓவியங்கள்-வரைவுகள் குறித்த செய்தி சேகரிக்கப் பல இடங்களில் சுற்றியிருக்கிறேன். கிருஷ்ணகிரி அருகே மல்லம்பாடி, மகாராஜகடை, திருக்கோயிலூர் போகும்வழியில் கீழ்வாலை ரத்தப்பாறை என அலைந்த காலம் அது (இப்படி அலையும்போதுதான் பனமலைக்கோயில் சென்று அங்குள்ள பல்லவர் கால ஓவியத்தையும் கண்டேன்). இந்தக் குகை-ஓவியங்கள், வரைவுகள், வெட்டெழுத்துக்கள் குறித்த செய்திகளைத் தொகுப்பதில் எனக்கு ஆவல்...
நான் லண்டன் வந்த பிறகான காலத்தில், தமிழகத்தில் வால்பாறை அருகே மாவடைப்பு, நீலகிரிப்பகுதி கரிக்கியூர் உள்ளிட்ட இடங்களில் குகை மற்றும் பாறை-ஓவியங்களைக் கண்டறிந்தார்கள் என்பதை அறிந்தேன். இவற்றில் முக்கியப்பங்கு வகிப்போர் காந்திராஜன் மற்றும் அவர் சகாக்கள்தாம். இந்தக் கண்டறிதலைப் பலர் தொடர்கின்றனர். சென்ற வாரம்கூட பழனி அருகே புதிதாகக் குகை-ஓவியங்களைச் சென்று கண்டிருக்கிறார்கள். இந்தக் குகை-ஓவியங்கள், சுமார் 2,500 ஆண்டுகள்வரை பழமையானவை. இவற்றில் சில, சங்கக்கவிதை என நாம் இன்று அழைக்கும் பழந்தமிழ்த் தொகை-நூல்களின் பாடல்கள் உருவான காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்பதும் முக்கியமான விஷயம்.
நினைவும் மறதியும் கலந்து மனிதனை இயக்குகின்றன என்ற பொருளில் எழுதுகிறார் ஃப்ரீட்ரிக்ஹ் நீட்ஷ (Friedrich Nietzsche). ஃப்ராய்டுக்கும் இத்தகைய சிந்தனை இருக்கிறது. மனிதனை மாத்திரமின்றி வரலாற்றையும் இவைதாம் இயக்குகின்றன என்று இந்தச்சிந்தனையை இழுக்கிறார் ஃப்ராய்ட்... ஒருகாலகட்டத்தில் மறந்துபோன சங்க இலக்கியம் அச்சுயுகத்தை முன்னிட்டு மீண்டும் புழக்கத்துக்கு வந்ததில், தமிழ் என்ற வரலாற்று-அடுக்கில் எங்கோ விட்டுப்போன ஒரு தளம் மீண்டும் இயங்கத்தொடங்கியது - இது இருபதாம் நூற்றாண்டுக்கான வரலாறு. இப்போது இந்தக் குகை-ஓவியங்களைக் ’கண்டறிதலிலும்’ வரலாற்றின் இத்தகைய புதிதான ஒரு தளம் மேலெழுந்து வந்து இயங்குவதற்கான உட்செய்தி எங்கோ பொதிந்திருக்கலாம் - அதி-குறியியல்-தளத்தில் இதுவரை கலக்காமலிருந்தால்!
லாஸ்கோ இணையத்தளம்
லாஸ்கோ பற்றி ழார் பத்தாய்
படங்கள் - லீனாவின் புத்தக அழைப்பிதழிலிருந்து, லாஸ்கோ குகை-ஓவியம்
கரிக்கியூர் ஓவியம் (நன்றி - கே.டி. காந்திராஜன், மணிவண்ணன்)
கரிக்கியூர் பற்றி ஃப்ரன்ட்லைன் ஆங்கில இதழில் வந்த கட்டுரை
- pdf கோப்பு என்பதால் பதிவிறங்கச் சற்றே பொறுத்து பிறகு உட்சென்று காணவும். புகைப்படங்கள் அபாரம்.
ஒபாமாவுக்காகவே எழுதிய கவிதை?
விஷங்களின் கதைப்பாடல் - ஆலன் கின்ஸ்பெர்க்
தெருப்பலதில் மாயநிறம் பூசும் எண்ணெயும்
நகரக் காய்கறியில் வீழும் கரித்துகளும்
மாலைமயங்கு மலையூடு பாயும் புகைப்பனியும்
கறுப்பும் வெள்ளையுமென
ஈரின-உறுதி குலைக்கும் போதைப்பொருளும்
கரையத்துடிக்கும் ப்ளாஸ்டிக் குமிழ் பலதும்
ஆண்டு இரண்டரை லட்சம் வரை
விஷமாயிருக்கும் புதுப் புளூட்டோனியமும்
உணவுச்சங்கிலியில் சிக்கிய பூச்சிக்கொல்லியுமாய்
உம் ஆன்மா நீடூழி வாழட்டும்!
உம் கண்கள் மட்டும் நீர் கசியட்டும்!
முட்டையின், பொரித்த குஞ்சின் அதீத ஹார்மோனும்
மாட்டுக்கறியில் வரும் கலவர சிவப்புச்சாயமும்
நறுக்கிய பன்றிக்கறியில் கிட்டும் நைட்ரேட் பலதும்
சிறாரைக் கொலைவெறியராக்கும் இனிப்புத்தானியமும்
வாய்வயிற்றில் புற்றுநோய் காட்டும் ரசாயன உணவும்
முலைப்பாலில் பெருகும் ஸ்ட்ரான்ஷியம் தொண்ணூறும்
செவியில் பியர் பாய்ச்ச அலறும் பாலுறவுக்கூச்சலும்
வாந்தி நீரெடுக்கும்வரை இறங்கும் நிக்கோடின் குப்பியுமாய்
உம் ஆன்மா நீடூழி வாழட்டும்!
உம் கண்களில் மட்டும் நீர் கசியட்டும்!
நுண்மின்-அலைக் கதிர்பாய்ச்சும் டோஸ்டர் தொலைக்காட்சியும்
பழமர இலையில் படரும் காட்மிய-ஈயமும்
உலக வர்த்தக மையத்தின் (1) உறக்க நேர உளைச்சலும்
கோனித் தீவின் (2) கரையெங்கும் சிதறிப்பரவும் மலமும்
கடலில் ஒருகாலம் கத்தியலையும் நீலத் திமிங்கிலமும்
இவை யாவும் நீந்திச்செல்லும் அமேஸான் உலகமும்
ராக்ஃபெல்லர் கழித்த எண்ணெய் ஆழ்கடலில் கழுவும் மீனும்
அணு ஆயுத பயம் தூண்டும் எண்ணெய்க்கான உழைப்பும்
உலகப் புரிந்துணர்வை சிஐஏ அழித்தொழிப்பதுமாய்
உம் ஆன்மா நீடூழி வாழட்டும்!
உம் கண்களில் மட்டும் நீர் கசியட்டும்!
இறுதியாக,
அதிபரே!
கரப்பான்பூச்சித்தனமான பக்தியில் இருப்பினும்
கதிரியக்கக்குழம்பு கலந்த
உணவுண்டு விஷமடைவோர் உம் மக்கள்.
முதலில்
உம்முலகம் புரிந்துணர்வை நோக்கி நகரட்டும்!
உம் கண்கள் நீர் சிந்தக் கற்றுத்தான் கொள்ளட்டும்!
அடிக்குறிப்பு
1. ஆம், செப்டம்பர் 2001 தாக்குதலில் தரைமட்டமான கட்டிடம்தான்.
2. கோனித் தீவு - ந்யூ யார்க் நகரை அடுத்த தீவு. தற்போது சுற்றுலாத்தலமாக இயங்குவதாக அறிகிறேன்.
படம் - மறைந்த அமெரிக்கக்கவிஞர் ஆலன் கின்ஸ்பர்க். இவர் எழுதிய பாடல், Ballade of Poisons. எழுதிய ஆண்டு, 1977-78.
1989-ஆம் ஆண்டு பிரம்மராஜன் வெளியிட்ட மீட்சி உலகக்கவிதை தொகுப்பில் என் தமிழாக்கத்தில் வந்தது. மறுஆக்கம் - 2008.
இன்று ஒபாமாவின் பதவியேற்பை ஒட்டி இந்தப் பதிவு.
19.1.09
தனித்தவரின் திராட்சை ரஸம் - ஷார்ல் போதலேர்
சும்மா தன் அழகை
நடுங்கும் ஏரியில் நீராட்டும்
தாசியிவள்
எமை நோக்கி
ஆங்கே
அலைநிலவின் வெண்கதிராய்
ரகசியமாய் வீசும்
விநோதப்பார்வையும்
சூதாடியில் விரல் பற்றும்
இறுதிப் பணப்பையும்
ஏடலின் எனும் மெல்லியலாள்
தந்த ஆசைமுத்தமும்
வலியுணரும் மனிதனின்
தூரக்கதறல் போல்
தீண்டும் வருத்தும்
இசையொலியும்
இவையேதும்
ஆழ் போத்தலே!
புனிதக்கவிஞனின்
தாகமாம் இதயத்தை
வளமிக்க உன் வயிறு
தீண்டித்தரும் மருந்துக்கு
இணையில்லை!
இளமை நம்பிக்கையும் வாழ்வும்
இரத்தல் யாவின்
செல்வமாம்
பெருமிதமும்
இவனில் ஊற்றித்தா!
எமை வெல்லவைத்து
கடவுளருக்கு நிகராக்க
இவனில் ஊற்றித்தா!
-- Charles Baudelaire, Le Vin du solitaire, Les Fleurs du Mal, 1857.
18.1.09
கமில் ஸ்வெலபில் - மறைந்த அறிஞருக்கு அஞ்சலி
எண்பத்திரண்டு வயதான செக் நாட்டுத் தமிழ் மற்றும் தென்னக மொழி அறிஞர், கமில் வி. ஸ்வெலபில் (Kamil V. Zvelebil), நேற்று மறைந்தார் என இங்கே லண்டனில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அவருடைய புதல்வியார் மார்க்கேதா ஸ்வெலபில் அவர்களிடருந்து சற்றுமுன் எனக்கு வந்த மின்-அஞ்சல் தெரிவிக்கிறது. நீண்ட அஞ்சலி அவசியம் - இப்போதைக்கு ஒரு சிறுகுறிப்பு மாத்திரம்.
கடந்த சில ஆண்டுகளாக, ஃப்ரான்ஸ் நாட்டின் தெற்குப்பகுதியில் கான்-மினர்வோ என்ற இடத்தில் ஃஸ்ன் பௌத்த தியானத்தில் ஈடுபட்டு வந்தார் கமில் ஸ்வெலபில். உடல்நலம் குன்றிய நிலையில் ஓய்வு வேண்டி ஃப்ரான்ஸில் வசித்ததாக அறிந்தேன். மூன்று ஆண்டுகள் முன்பு வரை அவருடன் எனக்கு மின்-அஞ்சல் தொடர்பிருந்தது.
வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதையை செக் மொழியில் ஆக்கியவர், தமிழ் நாட்டுப்புறக்கதைகளை ஆய்வு செய்தவர் என்ற முறையில் உரைநடையின் வரலாறு பற்றி எனக்கிருந்த சில ஐயங்களைக் கேட்டு அவருக்கு மின்-அஞ்சல் எழுதியிருந்தேன். அவற்றுக்குப் பதில் அளித்திருந்தார். தவிர, செக்-ஃப்ரெஞ்சு எழுத்தாளர் மிலன் குந்தெரா பற்றி தமிழில் என்னென்ன வருகிறது என்பதை மறக்காமல் கேட்டுத் தெரிந்துகொண்டார். பிறகு நன்றி தெரிவித்து எழுதியிருந்தேன்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின், இலக்கியத்தின் வரலாற்றை எழுதிச்சென்ற உலக அளவிலான அறிஞர்களில் முக்கியமானவர் கமில் ஸ்வெவலபில். தமிழ் உள்ளிட்ட தென்னக மொழிகளை நன்கு பயின்ற அறிஞர். வடமொழி அறிவு கொண்டவர். சுமார் பதினைந்து ஆண்டுக்காலம் செக் நாட்டில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஃப்ரெஞ்சு நாட்டில் வளர்ந்த அமைப்பியலின் முன்னோடிச் சிந்தனையான ருஷ்ய வடிவவியல்வாதம் (Russian Formalism) மற்றும் ப்ராக் நகர மொழியியல் வட்டத்தின் (Prague Linguistic Circle) தாக்கத்தில், குறிப்பாக முறையே நிக்கோலா ட்ரூபட்ஸ்காய் (Nikolay Trubetskoy), ரோமான் யாக்கோப்ஸன் (Roman Jakobson) போன்றோரின் தாக்கம் தம்முடைய சிந்தனையில் உண்டு என்பதை என்னிடம் கூறினார். சங்க இலக்கியம், தொல்காப்பியம் முதற்கொண்டு தமிழில் வளர்ந்திருக்கும் உரைமரபு என்பது, தென்னாட்டுக்கே உரித்தானது, வடமொழி உரை மரபுடன் பரிமாற்ற உறவுகளைக் கொண்டது என்பதை வலியுறுத்திப் பேசினார். இதையுணர்ந்தே தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் ஆக்கியதாகக் கூறினார்.
1968-ஆம் ஆண்டு சோவியத் டாங்கிகள் செக் நாட்டை ஆக்கிரமித்தபோது நாட்டைவிட்டு வெளியேறியவர்களில் ஒருவர் கமில் ஸ்வெவலபில். குடும்பமும் நாட்டை விட்டு வெளியேறியது. அப்போதிருந்து ஸ்வெவலபில், செக் நாட்டுக்கு வெளியேதான் இயங்கியிருக்கிறார்! நாட்டைவிட்டு நீங்கியவுடன், அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மறைந்த அறிஞர் ஏ.கே. ராமானுஜனுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஃப்ரான்ஸில், மிஷெல் ஃபூக்கோ, ரோலான் பார்த் ஆகியோர் பேராசிரியர் பொறுப்பிலிருந்த ஃப்ரெஞ்சுக் கல்லூரியிலும் (Collège de France) இருந்திருக்கிறார். எண்பதுகளில் ஹாலந்து நாட்டின் உட்ரெக்ஹ்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
தென்னாட்டு மொழிகள், கலாச்சார வரலாறு தொடர்பாக பலவகை ஆய்வுகளை மேற்கொண்டிருந்தவர், கமில் ஸ்வெலபில். இவருடைய முதற்கட்ட ஆய்வு, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில் ஒலியனியல் (phonology) பற்றியது. இதில்தான் ப்ராக் மொழியியல் பள்ளியின் தாக்கம் இருக்கிறது. பிறகு தமிழிலக்கிய வரலாறு குறித்து பல முக்கிய நூல்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சில:
* தமிழிலக்கியம் (Tamil Literature)
* தமிழிலக்கியம் வரலாற்றுக்கான துணைநூல் (Companion Studies to the History of Tamil Literature)
* தமிழிலக்கிய வரலாறு - அறிமுகம்
* தமிழிலக்கியப் அகராதி (Lexicon of Tamil Literature)
* தமிழிலக்கண வரலாறு - அறிமுகம் (Introduction to the Historical Grammar of the Tamil Language)
* தமிழிலக்கணம், திராவிட மொழிகளின் இலக்கணம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு
(Tamulica et Dravidica: A Selection of Papers on Tamil and Dravidian Linguistics)
* முருகனின் சிரிப்பு - தமிழிலக்கியம் பற்றி (The Smile of Murugan: On Tamil Literature of South India)
* ஆனந்தத்தாண்டவம் - ஆடல்வல்லான் என்ற வடிவம் தென்னாட்டில் பிரதி மற்றும் சிற்ப மரபில் பெற்ற வளர்ச்சி (Ananda-tandava: The development of the concept of Atavallan-Kuttaperumanatikal in the South Indian textual and iconographic tradition).
* சங்க இலக்கியத்தில் அக மரபு (Literary Conventions in Akam Poetry)
* மதனகாமராஜன் - மயில்ராவணன் கதைகள் - ஆய்வு (Two Tamil Folktales: The Story of King Matanakama, the Story of Peacock Ravana)
* அமரத்துவம் நோக்கிய சித்தர்களின் தேடல் (The Siddha Quest for Immortality)
இவை அனைத்தும், மிக முக்கியமான ஆய்வுத்தரவுகளின் தொகுப்புக்களை தம்மகத்தே கொண்டவை. கமில் ஸ்வெவபில் எழுதிய ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் வீச்சை, இவற்றை வாசிக்கும்போது அறிந்துகொள்ள முடிகிறது; பிரமிப்பாக இருக்கிறது. தவிர, தென்னக மொழிகள் மற்றும் வடமொழியிலிருந்து செக், ஸ்லோவாக், ஜெர்மனிய மொழிகளில் பல ஆக்கங்களைச் செய்தவர். இவற்றில் நான் விரும்பி வாசித்தது, உ.வே. சாமிநாதய்யரின் என் சரித்திரம் சுயசரிதையின் ஆங்கில ஆக்கம். அதாவது, உ.வே.சா.-வை ஆங்கில உலகம் முழுமையாக அறியச்செய்தவர், செக் நாட்டவர்!
தமிழ்நாட்டின் பழங்குடியினர் பற்றி, குறிப்பாக நீலகிரி மலையில் வாழும் பழங்குடியினர் குறித்த தீவிர ஆய்வுகளையும் மேற்கொண்டவர், கமில் ஸ்வெலபில். இதுபற்றி இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார் - Nilgiri areal studies, The Irulas of the Blue Mountains.
கமில் ஸ்வெலபில் எழுதிய இலக்கிய வரலாறு என்பது, இலக்கிய வடிவங்களை, அவற்றில் நடந்த மாற்றங்களை, வாசித்து, அதனூடாக தென்னகச் சமுதாய வரலாற்றின் மர்மங்களைத் திறப்பதாகும். செவ்வியல் வடிவம் தொடங்கிப் பழங்குடிக்கலை வரை இவர் சென்று பார்த்திருப்பதிலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். தமிழின், தென்னக சமுதாயத்தின் மூலப்படிமங்களை ஆராய்ந்து விளங்கிக்கொண்டு, அவற்றின் பொதுமைக்கூறுகளை உலகுக்கும் விளக்கியவர், கமில் ஸ்வெலபில். இவரைப்போன்ற ஆய்வாளர்களும் நண்பர்களும் இனியும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தென்னாட்டுக்கும் கிடைப்பதற்கான வழியையும் திறந்துவைத்துச் சென்றிருக்கிறார் என்பதை முக்கியமாகக் குறிப்பிட்டாக வேண்டும்.
கமில் ஸ்வெலபில் - தமிழிலக்கியம் நூலின் சில பகுதிகள்
கமில் ஸ்வெலபில் - தமிழிலக்கிய வரலாற்றுக்கான துணைநூல்
கமில் ஸ்வெலபில் - முருகனின் சிரிப்பு
கமில் ஸ்வெலபில் - மதனகாமராஜன், மயில்ராவணன் கதை ஆய்வு
நகரம் பல - 2 - ஆர்தர் ரைம்போ
நகரம் இவையோ! தாம் கனாக்கண்ட மலைபல (1) உயிர்த்து எழுச்சி பெறும் இவர்க்கு!
புலப்படாத் தண்டவாளமும் ராட்டினமும் எனப்பல வழி நகரும் கண்ணாடியும் மரமும் வீடு பலதுக்கென.
பேர் பொருதரங்கு சூழக்கிடக்கும், எரிகல் பண்டு தாக்கிச்செய்த பெரும்குழியும் செம்புப்பனையும் எனப்பல தீக்குங்குகளில் கனிமொழியாய் உறுமும். மரவீடு பல பின்புறம் தொங்கும் வாய்க்கால் பால மீது எதிரொலிக்கும் காதல்விழாப் பல. கணகணக்கும் மணியோசை தான் விரட்டி மலையிடுக்குப் பாதை பலதில் எதிரொலிக்கும். மலையுச்சிப் பேரொளியொத்த நிறப் பொன்னழல் உடையும் நீள்-அங்கியும் அணிந்த பெரும்பாடகர் சங்கம் பலதும் விரைந்து வரும். ஆழ்குடாப் பலதில் நிற்கும் கப்பற்தளங்களில் இருந்தவாறு, தம் எதிர்ப்பை அறைவிப்பர் ரோலான் (2) என்போர். பிலம்மீதான நடைப்பாலத்தில், விடுதிக்கூரை பலதில் கொடிமரமேற்றும் ஸ்வர்க்கத்தின் சூடு. பனிப்புயலின் இடையே கிடந்தலையும் பெண்ணுடற்புரவியராம் தேவதையரின் உயர்மட்டம் வரை செல்லும் வாழ்த்துப்பா பலதின் சிதைவும். அதிசிகரத்தைக் காட்டிலும் உயரே கடலொன்றும் கொந்தளிக்கும் வீனஸின் முடிவற்ற பிறப்பால், அதீத முத்தும் சங்கும் கொண்டு இசைவரிசையாகப் பாடிப்பரவும் கப்பலொன்றும் செல்வதால். அந்தக்கடலும் சிலவேளை கருக்கும் ஒளிக்கற்றையின் கொடூரத்தால். எம் ஆயுதம், கும்பம் போல் வளர்ந்து அறுவடையான மலர்பலதின் கூச்சலும் மலைச்சரிவினின்றும் வரும். கம்பைக்கல் செம்பழுப்பு நிற ஆடை அணிந்த தேவதைராணியரின் (2) ஊர்வலம் கணவாய் பலதினின்றும் கிளம்பும். மேலே அருவியில், முளரிக்காட்டில் கால்வைத்த வேட்டைக்காரி டயானா, மானுக்களிப்பாள் தன் முலைப்பால். புறநகர்சார் உன்மத்தப் பெண்பூசாரியர் கதற, எரிந்தும் அலறும் நிலவு. கொல்லன் முனிவர் கற்பாழியில் நுழைவாள் வீனஸ். மணிக்கோபுரம் பல கொத்தாய் தேசகீதம் பல இசைக்கும். எலும்புக்கோட்டை பலதினின்றும் வரும் முகமற்ற இசை. ஆங்கே தொன்மம் யாவும் சரடாய்ச் சுற்றும். குடியிருப்பு பலதில் அலையாய்ப் பாயும் உரம். புயல் பலதின் இந்த ஸ்வர்க்கம் உடைந்துகொண்டிருக்க, காட்டுமிராண்டியர் முடிவற்ற நாட்டியத்தில் கொண்டாடுவர் யாமத்தை.
ஒரே மணி நேரத்தில் பாக்தாத் நகரின் புலிவார்-சாலை (3) வாழ்வு நோக்கி வந்திருக்கிறேன் யான். ஆங்கே வலுக்கும் மழை புத்தம் பணியின் பரவசம் பாடி நிற்பர் கூட்டமாய் அசையும் மனிதர், தாம் சந்திக்கும் இடமாகவிருந்த விநோத மலைப்பூதம் பலதைத் தவிர்க்க இயலாதவாறே.
என் உறக்கமும் அசைவு பலதும்தாம் வரும் இந்தப்புலத்துக்கு மீண்டும் என்னை இட்டுச்செல்ல வல்லவை, எந்தப் பரிவான கரமும் நன்னேரமும்?
அடிக்குறிப்புகள்
1. இங்கே ரைம்போ குறிப்பிடுவது அல்லெகனி என்ற அமெரிக்க மலைத்தொடரும் லெபனான் மலைகளையும்.
2. இங்கே ரைம்போ குறிப்பது, பதினொன்றாம் நூற்றாண்டின் ஃப்ரெஞ்சு மொழிக் வீரக் கதைப்பாடல் La Chason de Roland.
3. வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் வரும் தேவதைராணி Mab.
படம் - உலகின் பண்டைய நகரங்களில் ஒன்றான டமாஸ்கஸ் இன்று.
ஊழிக்குப் பின் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை
ரைம்போ கவிதைகள்
17.1.09
நகரம் பல - 1 - ஆர்தர் ரைம்போ
நவீனகால மிலேச்சத்தனம்
குறித்த
கருத்தமைவு பலதைக் காட்டிலும்
அதீதமாக
அதிகாரப்பூர்வமாய்
மேல்தள மாநகரமிது.
மாறாத சிமிட்டி நிற வானின்று
வரும்
தட்டை ஒளி
கட்டிடம் பலதின்
ஏகாதிபத்தியப் பளபளப்பு
தரையில் நித்தியமான பனி
விவரிக்கவும் முடிவதில்லை
இவற்றை.
ஆங்கே
செவ்வியல் கட்டிடக்கலையின்
விநோதங்கள் யாவும்
எழுப்பப்பட்டிருக்கின்றன
மீண்டும்
படுமோசத் தனிரசனை
கொண்டு.
ஆக
ஹாம்ப்டன் கோர்ட்டில் (1)
கண்டதைக் காட்டிலும்
இருபது மடங்கு பெரிய
ஓவியக் கண்காட்சியதைக்
காண்கிறேன் யான்.
என்ன ஓர் ஓவியம்!
அமைச்சுக்கட்டிடம் பலதின்
மாடிப்படி கட்டியவர்
நார்வே நாட்டின்
நெபுச்செட்நெஸ்ஸார் சக்ரவர்த்தி!
ஒருவழியாக
யான் கண்ட
இவர் அடியாட்கள்
பிராமணர்களைக் காட்டிலும்
பெருமிதம் கொண்டவராயிருக்க
ஆங்கே
பெரும்பொருதரங்கு பலதின்,
அதிகாரப்பலர் எழுப்பிய கட்டிடம் பலதின்
காவலரைக்
கண்டு நடுங்கினேன் யான்.
சதுக்கம், முற்றம், நீள்மாடமென
பலதாக இவற்றை வகைத்த முறையோ
வெளியேற்றும்
வாகன ஓட்டுநரை.
ஆங்கே
சீற்றங்கொண்ட இயற்கைதனை
வெளிப்படுத்த வேண்டி
விநோதக்கலை கொண்டு
அதை உருவாக்கிய பூங்காவென
உண்டு பல.
மாநகரின் மேம்பட்ட பகுதியிலோ
விவரிக்கமுடியாத விபரம் பல –
படகற்ற கடலில் கரமொன்று
நீலச்சூறாவளி கொண்ட தன் சல்லாத்துணியை
பெரும் கிளைவிளக்குத் தண்டுகள் அடுக்கிய
துறைமுகத் தளம் பல நடுவே விரிக்கும்.
குறும்பாலமொன்று அழைக்கும்
ஸான்–ஷாப்பல் (2) கோபுரக்கலசத்தின்
நேர்கீழே உள்ள
சிறுவாயிலுக்கு.
இந்தக்கலசமோ
கலைநோக்கில் வடித்த உருளையென்ப,
அதன் விட்டமோ பதினையாயிரம் அடி.
செம்பு நடைப்பாலம் பலதின் கட்டமென
நடைமேடையென
கூடாரமிட்ட சந்தையை
ஆங்கே
தூண் பலதைச் சுற்றிருவரும் மாடிப்படியென
இடம் சிலதை வைத்து
மாநகரமிதன் ஆழத்தைக் கணிக்க
என்னால் முடியும் என நினைத்தேன்.
இருந்தும்
மேல்தள மாநகரம் குறித்த விநோதமொன்றை
என்னால் வரையறுக்கவே முடியவில்லை
இதன் பிற பகுதிகள் கீழோ மேலோ
என்ன தூரத்தில்
அமைந்திருக்கின்றன என்ற
விநோதமிது.
இத்தகைய புலமறிதல்
நம் காலத்தினின்றும்
அந்நியப்பட்டவர்க்குச் சாத்தியமன்று.
மாநகரின் வணிகப்பகுதியோ
தனிப்பாணியில் வளைவு பலதுடன் அமைந்த
அரங்குபல கொண்ட
ஸர்க்கஸ்.
காணக் கடைகளில்லை
ஆங்கே
எனினும் துகைக்கப்பட்டிருந்தது
சாலையின் பனி.
தவிர,
தம் வைரச்சாரட்டு வண்டி நோக்கி
நவாபுகள் நடக்கும் காட்சி,
லண்டன் மாநகரில்
ஞாயிற்றுக்காலை நடப்போரைப் போன்ற
அரிய காட்சி.
ஆங்கே
சிகப்புப் பட்டு மெத்தைகள் சில.
பரிமாறப்படுவனவோ துருவப்பானம் பல.
இவற்றின் விலையோ எகிறும்
எண்ணூறு ரூபாயிலிருந்து
எட்டாயிரம் ரூபாய் வரை.
இந்த ஸர்க்கஸில்
அரங்குசில தேடலாமென
நினைத்துப் பிறகு
ஆங்கே
கடைகளிலேயே நிழலான நாடகங்கள் நிச்சயம் நடக்குமெ என
என்னில் கூறிக்கொண்டேன் யான்.
மாநகருக்கென
காவல்துறையாக ஒன்றிருக்கும்
எனினும் நிழலான மனிதர்
எத்தகையோரென
என்னால் கற்பனையும்
செய்ய இயலாதபடி
அந்நியமாகியிருக்க வேண்டும்
சட்டம்.
மாநகரின் மையத்தை விட்டகன்றால்
பாரீஸின் தெருவொன்றைப் போல்தான்
வனப்புடன் தெரிகிறது.
ஆங்கே
அருளென வீசுவதோர் ஒளிக்கதிர்.
வெகுமக்களை எண்ணினால்
அகப்படும் ஆன்மாக்கள்
நூறு வரை இருக்கலாமெனினும்
ஆங்கே
வீடுகள் அமையவில்லை வரிசையாக.
மாநகரின் இறுதிப்பகுதியோ
விநோதமாக அமிழ்கிறது நாட்டுப்புறமொன்றில்.
மேற்கில் எல்லையற்ற காடுகளும்
பாரிய தோட்டங்களுமெனப் பரவ,
இவற்றின்
செய்தித்தாள் பத்தி பலதைச்
செயற்கை ஒளியால்
வேட்டையாடுமிவர்
கொடூர-மெல்லியலார்.
-- Arthur Rimbaud, Villes I, Les Illuminations, 1887.
படம் - கிரேக்கத்தின் அக்ரோபோலிஸ், டில்லியின் ஜன்பத்.
அடிக்குறிப்புக்கள்
1. லண்டன் மாநகரின் தென்மேற்கே ஸர்ரே பகுதியில் உள்ள பிரிட்டிஷ் அரச மாளிகை
2. பாரீஸ் நகரில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அரசர்களுக்காகக் கட்டப்பெற்ற
தேவாலயம். இதில் கலசமேதும் இல்லை!
ஊழிக்குப் பின் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை
ரைம்போ கவிதைகள்
16.1.09
மாநகர்த்தனம் - ஆர்தர் ரைம்போ
நீலச்சாய நீரிணை தொட்டு
ஓஸ்ஸியனின் (1) பலகடல் வரை
திராட்சைரஸப் பானம்
வீசிச்சேர்த்த
ஆரஞ்சு வெளிர்சிகப்பு
மணற்பரப்புமீது
ஸ்படிகப் புலிவார்-சாலை (2)
சற்றே எழுந்து சந்திக்கும்
ஆங்கே
உடன் குடியேறிய
வறிய இளம்குடும்பத்தார்
பழக்காரனின்றும் பெறுவர்
தம் உணவை.
செல்வமில்லை, இது நகரம்!
தாரிட்ட பாலையினின்றும்
தலைதெறிக்கக் கலைந்தோடுவர்,
இரங்கியழும் ஆழி தயாரிக்கும்
தீய்மை மிக்க கரும்புகை
உருவாக்கிய வானம்
வளைந்து பின்வாங்கி வீழ
அதன் பயங்கர மட்டத்தில்
மூடுபனிப்போர்வையும் விரிய
உடன் தலைக்கவசம்
சக்கரம் படகு எச்சம் எனப்பல.
போர்!
முகமதை உயர்த்திப்பார்!
தெரியும் வளைந்த மரப்பாலம்.
ஸமாரியாவின் (3)
இறுதிக் காய்கறித்தோட்டம்.
குளிர் யாமம் வீசியெறிந்த
லாந்தர் விளக்கால் ஒளிர்ந்த
முகமூடியவை.
ஆழ் ஆற்றில்
சப்த-ஆடையில் மனமலையும்
நீர்க்கன்னி இவள்.
பட்டாணி வரிசையில்
ஒளிரும் கபாலம் பல.
பிற பயப்பிராந்தியும்
நாட்டுப்புறமும்.
இருமருங்கும் தண்டவாளம் சுவர்
மரச்செறிவை அடக்கவியலாத படி.
இதயமென்ப சகோதரியென்ப அழைக்கும்
கொடூர மலர் பல.
ரைன் நதி, ஜப்பான்,
தென்னமெரிக்க குவாரனியர்
என பிரபுவம்சத்தாரின் சொத்தான
டமாஸ்கஸ் நகரம்.
அயர்வில் நாசமாயினும்
பழம்இசை மரபை
விரும்பிவாசிக்க வல்ல
டமாஸ்கஸ் நகரம்.
இன்னும் உண்டு
ஏற்கனவே கதவுமூடிவிட்டுத்
திறக்காத விடுதி பல.
ஆங்கே
இளவரசியரும்
உன்னால் தாங்க முடியுமென்றால்
வானும்
விண்மீன்களை வாசிப்பதும்.
காலைப்பனியின் ஒளியில்
பச்சை உதடுகளில்
பனிக்கட்டியில் நீலக்கதிரில்
துருவ ஞாயிறதன் ஊதா சுகந்தத்தில்
இவளுடன் இணைந்து நீயும் பொருத,
அதுவே உன் வலிமை.
- Arthur Rimbaud, Metropolitain, Les Illuminations, 1887.
அடிக்குறிப்புக்கள்
1. ஓஸ்ஸியன் – கேலிக் (Gaelic) மொழிப் பாணர்.
2. புலிவார் - Boulevard என்ற நிழற்சாலையின் தமிழ்ப்படுத்தல்.
3. ஸமாரியா - பண்டைய இஸ்ரேலின் தலைநகர்-மேற்குக்கரைப் பகுதி.
படம் - கொல்கொத்தாவின் ஹூக்ளி பாலம்
உயிரும் எழுத்தும் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை">ஊழிக்குப் பின் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை
ரைம்போ கவிதைகள்/span>
நகரம் - ஆர்தர் ரைம்போ
நவீனமெனக் கருதப்பெறும் மாநகரொன்றின் நிலையற்ற, திருப்தியற்ற குடிமகன் யான்.
ஈண்டு நிலவும் ரசனை, மோஸ்தர் யாவும் மாநகரின் அகச்சாதனம் பலதில், வீடு பலதின் புறத்தில், இதன் திட்ட-வரைவில் தவிர்க்கப்பெற்றதால் இது நவீனமெனக் கருதப்பெறுகிறது! மூடநம்பிக்கைக்கென நினைவுச்சின்னமதையும் நீர் காண முடியாது.
ஆக, ஈண்டு ஒழுக்கம் பலதும் மொழியும், தம் எளிய வெளிப்பாட்டுக்கெனக் குறுக்கப்பெறும், இறுதியில்!
Arthur Rimbaud, Ville, Les Illuminations, 1887.
படம் - பல ஆண்டுகள் நான் வசித்த மும்பை
ஊழிக்குப் பின் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை
ரைம்போ கவிதைகள்
15.1.09
புதிதாய்க் கிடைத்த ரைம்போ கவிதை
கடந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் மாதம் தொடங்கி ஃப்ரெஞ்சுக்கவிஞர் ஆர்தர் ரைம்போவின் கவிதைகள் சிலதைத் தமிழாக்கி இந்த இணையதளத்தில் வெளியிட்டு வருகிறேன். இப்படிச் செய்து தற்போது ரைம்போவின் Les Illuminations என்ற தொகுப்பு அதன் முதல்கவிதையான ஊழிக்குப் பின் என்ற தலைப்பில் புத்தகமாக ஆழி பதிப்பகம் சார்பில் வெளியாகியிருக்கிறது.
இந்தக்கவிதைகளின் தமிழாக்கத்துக்குள் இருக்கும் செய்தி, பிற பதிவுகளைக் காட்டிலும் முக்கியமானது என்று எனக்கு அவ்வப்போது தோன்றும் விஷயம். இருந்தாலும் அரசியல்-சமுதாய விஷயங்கள் குறித்த என் பதிவுகளுடன் உரையாட வருவோரில் பலருக்கு ரைம்போவின், இவருடைய முன்னோடியான ஷார்ல் போதலேரின் கவிதைகள், தமிழாக்கம் குறித்துச் சொல்ல, கேட்கப் பெரிதாக ஒன்றுல்லை என்பதைக் கவனித்தும் வருகிறேன். வாசிக்கிறார்களா என்றுகூட சரிவரத் தெரியாத நிலை. ’இலக்கியத்துக்குக் கடைசி இடம்’ போலிருக்கிறது!
இதற்கிடையில், கடந்த மே மாதம் வந்தது, ரைம்போ பிறந்த ஷார்ல்வில் மேஸியர்ஸ் என்ற ஊரிலிருந்து ஒரு செய்தி. என்ன செய்தி? 1870-ஆம் ஆண்டில், அதாவது தமக்குப் பதினாறு வயதில், ரைம்போ எழுதிய கவிதை ஒன்று தெரியவந்திருக்கிறது - ழான் பாத்ரி (Jean Baudry) என்ற புனைபெயரில் இதை எழுதியிருக்கிறார். Le Progres des Ardennes என்ற உள்ளூர் செய்தித்தாளில், அவ்வாண்டு நவம்பர் மாதம் வெளியான கவிதை இது.
ழான் பாத்ரி என்ற இந்தப் புனைபெயரில், வேறுபல பெயர்களில் ரைம்போ எழுதியது தெரிந்த விஷயம்தான். அந்தக்காலகட்டத்தில் ப்ரஷ்யப் (ஜெர்மன்) படை ஃப்ரான்ஸுடன் நடத்திய போரை ஒட்டி, ப்ரஷ்ய அதிபர் ஓட்டோ ஃபான் பிஸ்மார்க்கைக் கேலிசெய்து ரைம்போ எழுதிய கவிதை - பிஸ்மார்க் கண்ட கனா - Le rêve de Bismarck (Fantaisie). இன்று நடக்கும் போர்ப் பொருத்தப்பாட்டுடன் கவிதையை வாசிக்கலாம் இனி.
பிஸ்மார்க் கண்ட் கனா
1
மாலை. கூடாரம் தமதில், மௌனக்கனவில், தியானத்தில் பிஸ்மார்க். ஃப்ரெஞ்சு நாட்டின் வரைபடம் மீது ஒரு விரல். தம் 'பைப்' குழாயினின்று நீலப் பெரும்புகை அலையாய்ப் பரவ, இன்னும் தியானத்தில்.
வரைபடத்தோல் நெடுக, நகரும் சிறு சுட்டுவிரல், ரைன் ஆறு முதல் மோஸெல் வரை, மோஸெல் முதல் ஸைன் ஆறு வரை. உறழ்வற்று ஸ்ட்ராஸ்பூர்க் நகர் சுற்றி நின்றாங்கே சிறுகீறலிட்டு இன்னும் மேற்செல்லும் நகம்.
ஸார்ப்ருக்கன், விஸ்ஸம்பூர்க், வோர்த், ஸெடான் என பெருநகமொத்த இந்தச் சிறு சுட்டுவரல் பரபரப்பில் நடுங்கும். நான்ஸியைத் தீண்டி, பிட்ச மற்றும் ஃபால்ஸ்பூர் நகரைச் சிமிண்டி, மெட்ஸ் நகரைக் கீறிப் பின் உடைந்த சிறுவரியின் எல்லைவழி சென்று நிற்கும்.
வெற்றியுடன், அல்ஸாஸ் மற்றும் லொர்ரைன் பகுதியும் சுட்டுவிரல் மூடிச்செல்லும். எத்தனை பேராசை கொண்ட உன்மத்தம், இந்த மஞ்சள் கபாலத்துள்! அதிர்ஷ்டமிக்க இவர் ’பைப்’பினின்றும்தான் வீசும் எத்தனை மணங்கொண்ட புகைமேகம்!
2
மேலும் தியானத்தில் பிஸ்மார்க். ஓ, நடுங்கும் சுட்டுவிரலை நிறுத்த வரும் கெட்டியான கருப்புப்புள்ளியொன்று. பாரீஸ் நகரம். சிறுநகமோ சீற்றமுற்று காகிதம் நெடுகக் கீறி, இறுதியில் நிற்கும்.
சற்றே திருகி அசைவற்று நிற்கும் விரல். பாரீஸ், பாரீஸ்! ஓ, விழிதிறந்து இவர் காணும் கனாவென்பதால் மயக்கம் தாக்க, இவர் நெற்றியும் வரைபடம் நோக்கிக் குனியும், ’பைப்’ உதட்டினின்றும் எந்திரகதியில் வீழும். அழகற்ற கரும்புள்ளி மீது ‘பைப்’பின் வாய் திடுமென்று வீழும்.
ஓ, தலைசாய, இவர் மூக்கு, ஓட்டோ ஃபான் பிஸ்மார்க் மூக்கு, எரியுமந்த வாயில் கவிழும்... ஓ, அருமை பிஸ்மார்க் மூக்கு எரியுமந்த வாயில் நன்றே கவிழும்! பாரீஸை விரலால் தீண்டியவர்.. முடிந்தது இவர் கனவு, வெற்றிகுறித்த கனவு!
3
இத்தனை மெலிதான மூக்கு, அருளும் ஆன்மிகமும் கொண்ட மூக்கு! பெயர்பெற்ற பிஸ்மார்க் மூக்கு! இதை மறைத்தாக வேண்டும், இனி மறைத்தாக வேண்டும்!
"ஆம்! மாளிகைக்குத் திரும்பி நீ புளித்த முட்டைக்கோஸை, உன் குற்றத்தின் சம்பளத்தை.. வரலாற்றுநூல்களில் வரும் பெண்களுடன் பங்கிடும்போது, கொண்டுசெல்வாய் உன் முட்டாள் விழிமணிகளுக்கிடையில் எரிந்து கரிந்த மூக்கையும்!
ஓ! போவாய் நீ! பகல்கனாக் கண்டிருக்க வேண்டாம் நீ!"
படங்கள் - சிவந்த ரைம்போ. 1871 போரில் ப்ரஷ்யப்டைகள் தாக்குதலைக் காட்டும் வரைபடம். ரைம்போவின் சொந்த ஊர், ஷார்ல்வில் மேஸியர்ஸ், ரீம்ஸ் நகரிலிருந்து ஸெடான் செல்லும் வழியில் இருப்பதைக் காணலாம். பிறகு ரைம்போவின் ஆசிரியர் ழார் இஸம்பார், ஃப்ரெஞ்சுப்படைத்திரட்டலில் இணைகிறார். ரைம்போ படிப்பைத்துறந்து பாரீஸ் செல்கிறார். ரைம்போவின் ஊர்ப்பகுதியைத் தாண்டிச் சென்றன ப்ரஷ்யப் படைகள்.
ஊழிக்குப் பின் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை
ரைம்போ கவிதைகள்
13.1.09
ஒளிஞாயிறு - ஷார்ல் போதலேர்
பழம்வீதி நெடுக வீடுபலதில்
உடைந்த சரப்பலகை வரிசை
இச்சை-ரகசியமும் மறைக்கும்.
நகரம் நாட்டுப்புறம்
கூரை கோதுமைவயலென
கொடுஞாயிறுக் குழல்பல
மேன்மேலும் தாக்கும்.
விநோத ஆவலில்
தனி விளையாடிச் செல்வேன்,
வாசமென மூலை யாவிலும்
சந்தம் தட்ட,
கல் பாவிய தரையில்
சொல் இடற,
என்றோ பண்டு கண்ட
கனா வரியில்
ஒருக்கில் மோத.
வளர்தாதை பச்சிலைக்கு,
வாடலுக்கோ எதிரி!
பாடல் ரோஜாவென்ப
நிலத்தில் மலர வைக்கும்.
கவலைபல வானெழும்ப
ஆவியாக்கும்.
தேன்கூடும் மூளையும்
ஒருங்கே நிரப்பும்.
கோலூன்றிச் செல்வோரை
இளைஞராக்கும்.
பெண்ணென்ப அவர்க்கும்
களியுவகை நல்கும்.
செழிக்கட்டும்,
சூலுறட்டும் பயிர்
என்றும் மலர விழையும்
நித்திய இதயம் பலதில்
என ஆணையி்டும்.
கவியொப்ப நகரிறங்கிக்
கீழான பொருள் யாவின்
விதியேந்தும்.
அரசென்ப
சேவகரும் சப்தமும் அற்று
நுழையும்
கோட்டை மருத்துவ மனை
யாவிலும்.
— Charles Baudelaire, Le Soleil, Les Fleurs du mal, 1857.
படம் - எழுஞாயிறு, சென்னையில். இன்று தமிழர் திருநாள். பொங்கல். ஆனால் நிலவும் சூழலில் இந்தப்பாடல் தாண்டி அதை நினைக்க மனமில்லை! அந்த அளவு, யாவர் மனதிலும் சோகம் ரகசியமாய்....
கல்லறை - ஷார்ல் போதலேர்
அந்தகார ஆழ் இரவில்
அறத்தான் கிறித்துவனும்
கட்டிடமொன்றின் புறத்தே
உன்னுடல் புதைக்க
கற்பின் விண்மீன் பல
உறக்கம் தழுவக் கண்மூட
ஆங்கே
சிலந்தி
தன் வலை பின்ன
விரியனும்
சந்ததி தொடர
ஆண்டு நெடிதாய்
இரங்கும் ஓநாய் பலதின்,
அரைப்பட்டினி மாயத்தாள் பலரின்
ஊளையும்
வேட்கைமிகு முதியோரின்
களியாட்டமும்
கொடூரக்கள்வரின்
சதியும் எனப்பல
சாபம்பெற்ற
உன் தலைமேல் கேட்க
- Charles Baudelaire, Sepulchre, Les Fleurs du mal, 1857.
படம் - போதலேரின் கல்லறை, பாரீஸில்.
வடமொழியில் வைதீக எதிர்ப்பு - இந்திரா பார்த்தசாரதி
தொன்றுதொட்டு வரும் மரபுக்கும் ஸ்தாபனத்துக்கும் எதிரான கருத்துகள் வைக்கப்படுவது, மேல்நாட்டுச்சிந்தனையின் தாக்கம் என்ற தவறான எண்ணம் நம் நாட்டிலே பரவியிருக்கிறது. இத்தகைய எதிர்க்குரல்கள்தாம் நம் இந்திய சிந்தனைப்பண்பாட்டின் இன்றிமையாத அம்சம் என்பதை நாம் உணர வேண்டும்.
‘ஸ்தாபனம்' என்றால் என்ன?
காலந்தோறும் மனிதச்சிந்தனைப் பரிணாமத்துக்கேற்ப நம் வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகளும் (பழக்க வழக்கங்களும்) தொடர்ந்து மறுபரிசீலனைக்கு உட்பட்டாக வேண்டும். அவ்வாறு மாறாமல், எந்தச்சூழ்நிலையில், எந்த வரலாற்று நிர்ப்பந்தத்துக்கிசைய உருவாகினவோ, அவ்வளவிலேயே அம்மதிப்பீடுகள் உறைந்து இறுகிவிடுகின்றன என்றால், அந்த மரபு எதேச்சதிகாரமே ‘ஸ்தாபனமா'கி விடுகின்றது. இதை ஆங்கிலத்தில் Establishment என்பார்கள். இந்த ‘ஸ்தாபன'த்தை எதிர்த்து, இந்தியச்சிந்தனை வரலாற்றில் கொள்கைப்போர்கள் தொடர்ந்து நிகழ்ந்துவந்திருக்கின்றன.
இந்திய ‘லோகாயதம்' (materialism), பிரஹஸ்பதி லௌக்கிய என்பவர் காலத்திலிருந்து தொடங்குகிறது. இவர் தத்துவரீதியாக வைதீக மதத்தை எதிர்த்தார். இவருடைய தொடக்கக்கால எதிர்ப்புக்கணைகளையே அடிக்கற்களாகக்கொண்டு, பிற்காலத்திய லோகாய வாதமும் சார்வாகக்கோட்பாடுகளும் பிறந்தன. பிராம்மண நெறிச் சடங்குகள், இறைவன் பற்றிய கருத்து, பிறவித்தொடர்ச்சி, சரீரத்தினின்றும் வேறுபட்டதாக ‘ஆத்மா' என்று ஒன்று இருப்பதாகக் கொள்ளும் நம்பிக்கை அனைத்தும் கேள்விக்குரியனவாகின. பிரஹஸ்பதி லௌக்கிய-வின் கொள்கைகள் ஒருகாலத்தில் பிரபலமாக இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. தைத்ரீய பிராம்மணம் இதற்குச் சான்று தருகிறது:
"ஒரு சமயம் பிரஹஸ்பதி, காயத்ரியின் தலையில் ஓங்கி அடித்தார். தலையும் மூளையும் சுக்குநூறாகச் சிதறின. ஆனால், காயத்ரி அமரத்துவம் வாய்ந்தவள். அவளுடைய மூளையின் ஒவ்வொரு சிறு பகுதியும் அழிவுறாமல் நித்தியமயிருந்தது."
இச்செய்தி எதைக் குறிக்கிறது? பிரஹஸ்பதி எதிர்ப்புணர்வின் உருவகம். காயத்ரி வைதிக மதம், அதாவது ஸ்தாபனம். ஸ்தாபனத்தை அழிக்க முடியாது. புதிய கோலம் பூண்டு அழிக்க முடியாதாகவே இருக்கும். புத்தரை திருமாலின் அவதாரமாக்கியது போல. மேல்கோட்டை சம்பத்குமார் கோயிலில், ராமானுஜர் செய்வித்த ஹரிஜன ஆலயப் பிரவேசம், நாளா வட்டத்தில் ஒரு சமயச்சடங்காக மாறி, ஒடுக்கப்பட்ட மக்கள், ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டது போல.
மனுவுக்கும் பிரஹஸ்பதிக்கும் நீண்ட சம்வாதம் நிகழ்ந்ததாக மஹாபாரதம் கூறுகிறது. மனுவின் சநாதனக்கொள்கைகளை பிரஹஸ்பதி எதிர்த்துப்பேச, மனு அவரைத் தம் வழிக்குக் கொண்டு வந்ததாகக் கூறும் சம்பவம் இது. அதாவது, ஸ்தாபனத்தின் வெற்றி என்பது பொருள்.
விஷ்ணுபுராணம் இவ்வெதிர்ப்பை வேறுவகையாகக் கூறுகிறது. அந்தக் காலத்தில் அசுரர்கள் வேத நெறியை ஏற்றுக்கொண்டு கடுமையாகத் தவஞ்செய்யத் தொடங்கினார்கள். அதனால், இந்திரன் அச்சம் அடைந்தான். தன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற பயம். ஆகவே அவன் வேண்டுகோளின்படி, மாயாமோஹன் சிருஷ்டிக்கப்பட்டு, அவன் அசுரர்களுக்கு பிரஹஸ்பதியின் போதனைகளைக் கற்பித்தான். இதன காரணமாக, அசுரர்களுக்கு எது நல்லது, கெட்டது என்று தெரியாமல் போய்விட்டது. அவர்கள் நெறி பிறழ்ந்தார்கள். இந்திரனுக்கு அவர்களை அழிப்பது என்பது எளிதாகிவிட்டது. பிரஹஸ்பதி சுக்கிராச்சாரியார் உருவத்தில் அசுர குருவானார் என்று மைத்ராயணி உபநிஷதம் கூறுகின்றது. ஸ்தாபன எதிரியான பிரஹஸ்பதி ஓர் ஏமாற்றுக்காரர் என்பது கருத்து.
பைபிளில் வரும் சாத்தான் கதைகளுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது. கடவுளின் இறையாண்மையை எதிர்த்து மனிதனுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு வழிகோலிய சாத்தான், தீய சக்தியாகச் சித்திரிக்கப்படுகின்றான். நெருப்பை (பகுத்தறிவு) உலகிற்குக் கொண்டு வந்த ப்ரொமிதீயஸ் (Prometheous) இறைவனால் தண்டிக்கப்படுகின்றான் என்று கிரேக்கப்புராணங்கள் கூறுகின்றன. ஆங்கிலக்கவிஞனாகிய ஷெல்லி இதைப் பற்றி ஒரு அற்புதமான குறுங்காவியம் படைத்திருக்கிறான்.
ஆகவே, ஸ்தாபனத்துக்கும் அதை எதிர்ப்பவர்களுக்குமிடையே நிகழும் போராட்டங்கள் மிகத் தொன்மையானவை. ‘சார்வாகம்' என்றால் ‘இன்பத்தைத் தரும் பேச்சு' என்று அர்த்தம். தனிமனிதக் கருத்துச்சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு. இவர்களைப் பற்றி விஷ்ணுபுராணம் கூறுகிறது: "இவர்கள் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருப்பவர்கள். இவர்களுக்கு நன்மை, தீமை என்று எதுவும் கிடையாது. நிகழ்வன அனைத்தும் எதேச்சை என்பது இவர்கள் கருத்து. இவர்கள் கடவுளை மறுப்பவர்கள். அவனவன் தனக்கு விதித்துக்கொள்வதே தர்மம் என்பதே இவர்கள் கருத்து."
சமூகம் தடம் புரளாமல் இருக்க வேண்டுமென்றால், தனிமனிதனின் கருத்துச்சுதந்திரத்துக்கு வரம்பு தேவையாகின்றது. ‘இன்பத்தைத் தரும் பேச்சு', கவர்ச்சிகரமான போதனைகளாக மாறி (நாத்திகப்பிரச்சாரமும் திரைப்படக்கவர்ச்சியும் அரசியலும் தமிழ்நாட்டில் இணைந்தாற்போல்) சிற்றின்பங்களை நுகர்வதில் சமூகத்தடை எதுவும் இருக்கக்கூடாது எனும்போதுதான் பிரச்சினைகள் எழுகின்றன. மனிதன் தன் ஆற்றலின் எல்லை வரம்புக்கு உட்பட்டது என்று உணர்வதுதான், இறை-உணர்வு ஏற்படுவதற்கான அடிநாதம். கடவுளை ஏற்றுக்கொள்ளாத எந்தக்கோட்பாடும் இந்தியாவில் வெற்றி அடைந்ததில்லை. சார்வாக மதத்தின் வீழ்ச்சிக்கும் இதுவே காரணம்.
கடவுள் எதிர்ப்புக்கொள்கையை வற்புறுத்திய சார்வாகரையும் சார்வாக முனிவராகக் கொண்டதுதான், இந்தியத் தத்துவ மரபின் தனித்தன்மை. ஆகவே, சமஸ்கிருதம் என்றதுமே, அதை சநாதன மதத்தோடு மட்டும் இணைத்துப் பார்ப்பது கொச்சைத்தனமான அணுகுமுறை. ஸ்தாபனமாக இறுகத்தொடங்கிய எந்தக் கருத்துத்தளத்தையுமம் எதிர்த்த கோட்பாடுகள் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருத மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததினால்தான் ஜாபாலி முனிவரிலிருந்து, அம்பேத்கார் வரை அனைத்து அறிஞர்களாலும் ஸ்தாபனத்தின் மீது அறிவுசார்ந்த போர் தொடுக்க முடிந்திருக்கிறது.
தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவின் ஆதிமொழிகள். சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தாய்மொழியாகக் குறிப்பிடப்பட்டது, ஐரோப்பியப்பாதிரிகள் உருவாக்கிய கற்பிதம். அறிஞர்களுக்கிடையே கருத்துப்பரிமாற்றத்துக்காகச் ‘செய்யப்பட்ட மொழி' சமஸ்கிருதம். (‘சமஸ்கிருதம்' என்றாலே ‘செய்யப்பட்டது' என்றுதான் அர்த்தம்). இந்தியத் தத்துவ வரலாற்றைப் பார்க்கும்போது, தத்துவப்போர்களை நிகழ்த்தியவர்களில் பெரும்பான்மையோர் தென்னாட்டைச் சேர்ந்தவர்கள். நுண்மையான (abstract) கருத்துகளைச் சொல்வதற்கான ஓர் இயல்பான வசதி சமஸ்கிருதத்தில் ஏற்பட்டுவிட்ட காரணத்தினால், தத்துவரீதியான விவாதங்கள், இம்மொழியில் அகில இந்திய ரீதியாக அக்காலத்தில் நிகழ்ந்து வந்திருக்கின்றன. அந்தத் தத்துவ ஞானிகளை இனவழியாகவோ, ஜாதிவழியாகவோ கண்டறிய முயல்வது அறிவீனம்.
இந்தியப் பண்பாட்டு மரபில் கருத்துகளுக்கும் படைப்புககளுக்குந்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதேயன்றி, அவற்றின் ஆசிரியர்களைப் பற்றி வரலாற்றுரீதியான அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. உபநிஷதங்களின் ஆசிரியர்கள் யாரென்று வரையறுத்துக் கூறமுடியுமா? ஆசிரியர் பெயர் தெரியாத நூல்களுக்கெல்லாம் வியாஸர், அகத்தியர் பெயர்களை வழங்கிவிட்டார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது! பதினெட்டு மஹாபுராணங்களில் பெரும்பான்மையானவை தென்னாட்டில்தான் உருவாகியிருக்க வேண்டுமென்பது அறிஞர் கருத்து.
சநாதனமதத்துப் புராணச் செய்திகள், பக்தி இயக்கத்தின் போது, தமிழ்த் திருமுறைகளிலும், திவ்யப் பிரபந்தத்திலும் வருவன போல், அக்கால கட்டத்தில் வடநாட்டில் வட்டார மொழிகளில் வழங்கப் பெறவில்லை என்பது வரலாற்று உண்மை. தனிமனிதனைச் சமூகத்தோடு இணைத்தது பக்தி இயக்கம். ‘நான் அதுவாக இருக்கிறேன்' (‘தத்துவமஸி') என்பதைக் காட்டிலும் 'அது'வை ‘மனிதனா'கக் (அவதாரம்) கண்டு, மனிதத்தைத் தெய்வீக நிலைக்கு உயர்த்தியது பக்தி இயக்கம். ‘மானுடம் வென்றதம்மா' என்கிறான் கம்பன்.
இவ்வரலாற்று உண்மைகளைச் சரிவரப் புரிந்துகொண்டால், அவையே நம் பண்பாட்டு அடையாளங்களை அறிவதற்கும் உதவும்.
நன்றி - உயிரோசை
படங்கள் - ப்ரோமிதீயஸ், அட்லஸ்
கோடிக்கரை - ஆர்தர் ரைம்போ
பொன்னிற வைகறை
நடுங்கும் கருகலில்
எம் இருபாய்மரக்கப்பலும்
வீடதன், புறவீடதன் எதிரே
கரையில்.
எபிரஸ், பெலோபொன்னீஸ்
ஏன் ஜப்பான், அரேபியா போல்நீளும்
கோடிக்கரையில்.
மீளும் ஊர்வலம் பலதின்
ஒளியில் ஆலயம் பல.
கரைகாக்கும் நவீனப்படையின்
பெருங்காட்சி
ஒளிரும் மலர்பலதின் நிறத்தில்
மணல்முகடு பல.
கார்த்தேஜ் நகரின்
பெரும்கால்வாய் பல.
அலைமாற்றும் வெனிஸ் நகரின்
கற்கரை பல.
எரிமலை எட்னாவின்
வலிவற்ற வெடிப்பும் பல.
பாறையுட் பனிநீரும் மலரும் பல
ஜெர்மன் போப்லர் மரம்சூழ்
துணிதோய்க்கும் துறை பல.
ஜப்பான் மரம் பல தலைதொங்கும்
விநோதப்பூங்காச் சரிவும் பல.
ஸ்கார்பரோ, ப்ரூக்ளின்
நகர விடுதியின்
வளைந்த முகப்பும் பல.
ஆங்கே
ரயிலோடும்
விடுதியின்
அருகில் அடியில் பரப்பில்.
இத்தாலி, அமெரிக்கா, ஆசியாவின்
வனப்பான பெரும் கட்டிடம் பல
வைத்துத் தேர்ந்த விடுதி.
ஈண்டு
அரியதோர் ஒளியில்
பானத்தில்
இனிய காற்றில்
குளித்த
இதன் ஜன்னலும் மாடமும்
திறந்திருக்கும்
பயணியர் ஆன்மாவுக்கும்
பிரபுக்கள் பலர்க்குமென.
விடுதியரும்
மாளிகைதன்
சிறந்த முகப்பென
ஏற்பர்
நாட்பொழுதில் அலைநடம் யாதும்.
ஏன்,
பெயர்பெற்ற கலையின்
பள்ளத்தாக்கு பலதின்
பாட்டின் இடையே வாத்திய இசையும்
ஏற்பர்
கோடிக்கரையில்.
--- Arthur Rimbaud, Promontoire, Les Illuminations, 1887.
காதலரின் திராட்சை ரஸம் - ஷார்ல் போதலேர்
இன்று வெளியோ பேரொளி்!
கடிவாளம் கம்பியும் குதிமுள்ளுமன்றி
உகைத்துச்செல்வோம்
தூரத்தே தேவலோகம் நோக்கி.
ஓயாத பித்தால் வதையுறும்
தேவதை இருவர் போல
காலை ஸ்படிக நீலத்தூடே
தூரக்கானல் தொடர்ந்து.
சாதுர்யச் சூறாவளியின்
இறக்கைமீது மெலிதாய் நிலைத்து
அதற்கிணைய பரவசத்தில்
என் தங்காய்!
அருகருகில் மிதந்து
நில்லாமலே
பறப்போம்
என் கனா உலகெனும்
ஸ்வர்க்கம் நோக்கி.
- Charles Baudelaire, Le Vin des amants, Les Fleurs du mal, 1857.
12.1.09
தமிழ்ப்புனைகதை மரபும் கோணங்கியும் - 2 - எஸ். சண்முகம்
தமிழ்ப்புனைகதை மரபும் கோணங்கியும் - 1 - எஸ். சண்முகம்
3
இன்று புனைகதை மரபில் மைய-அழுத்தம் பெற்றிருப்பது எதார்த்த-எழுத்துமுறை. இது என்ன செய்கிறது? தனக்கு எதிரான, அதாவது எதிர்-எதார்த்தமாகக் கதைசொல்லும் போக்குகளை விளிம்புக்கு வெளியே தள்ளி, தன்னை வாசகரின் கற்பனைப்பாதுகாவலனாக முன்னிறுத்திக்கொண்டிருக்கிறது. ஆக, எதிர்-எதார்த்தக் கதைசொல்லும் முறை விளிம்புகளுக்கு வெளியே இயங்க வேண்டி வருகிறது. இந்த எதிர்-எதார்த்த புனைகதை என்பதை அலச, Peter Lamarque என்ற விமர்சகர் ‘புனைகதை’, ‘கதையாடல்’ ஆகிய இரண்டையும் குறித்த கருத்துக்கள் நமக்குதவும். Christopher Nash என்ற விமர்சகர் தொகுத்த Narrative & Culture என்ற முக்கிய நூலில் இவர் எழுதிய Narrative& Invention: The limits of fictionality என்ற கட்டுரையின் வருவன இந்தக்கருத்துக்கள்:
அ. ‘புனைகதை’ - சாதாரணமாக ‘நாவல்’ அல்லது கதையைக் குறிப்பது.
ஆ. ‘கதையாடல்’ என்பது புனைகதை செய்யப்படுவதும் மற்றும் அமைப்பாக்கம் பெறுவதும் என்ற சொற்பண்பைக் குறிப்பது.
ஆக, புனைகதை என்பது, ஒன்றில் மெய்ப்பொருள் தெளிவின் குணமின்றி ‘உருவாக்கப்படலாம்’ அன்றில் கதையாடல்களின் வாயிலாகப் புனைந்து உருவாக்கப்பட்டு, பருண்மையிலும் சித்தரிப்புப்பொருளிலும் பயின்றுவரலாம். அதேவேளை கதையாடல் என்பது புனைகதைத்தன்மையோடு மட்டுமே நின்றுவிடும் ஒன்றல்ல. ஆக, இவ்வாறு சொல்வதை ஒரு குறிப்பிட்ட வரையறையில் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிகிறது. கதைப்பிரதி என்பதில் கதைசொல்லுதல் ஒரு கட்டமைப்பைப் பருண்மைப்படுத்த முயல்கிறது, அவ்வளவுதான்.
இதனோடு தொடர்புள்ள பீட்டர் லமார்க்கின் மற்றொரு கருத்தைப் பார்ப்போம். எதிர்-எதார்த்தத்தை கட்டமைப்பனவாக இவர் தரும் பண்புகள் இரண்டு. அதில் இரண்டாவதாக அவர் தருவதைக் காண்போம்.
அ. புனைகதை என்பது யாவும் மனிதனால் தயாரிக்கப்பட்டது.
ஆ. உண்மை என்பதும் மனிதனால் தயாரிக்கப்பட்டது (ஒன்றில் கருத்துருவத்தில் அன்றில் மொழியியலில்)
இ. ஆகையால், உண்மையென்பது புனைகதையில் வாழும் ஒரு உயிரி.
மேற்கண்டவற்றை வைத்துப்பார்க்கும்போது, கதைப்படுத்தல் அல்லது பிரதிப்படுத்தல் என்பது, அடிப்படையில், மொழிரீதியாக செய்யப்படுகிறது என்பது நன்கு விளங்கும். ஆக, மொழியால் சொல்லப்பட்டுச் செய்யப்பட்ட கதையென்பதைக் கையாள்கிற ஒரு மனிதனுக்கு முன்பு, அதே மொழியை, மற்றொருவன், வேறொரு ‘சொல்லுதலுக்குப்’ பயன்படுத்தி, கதைப்படுத்தியிருப்பான்! ஒரு கதைப்பிரதியென்பதின் மொழியை எடுத்துக்கொண்டால் அதன் முக்கிய சாத்தியம் என்ன? - கதைக்கு முன்பும் சரி, கதைமுடிந்த பின்பும் சரி, சொல்ல வந்த கதையையுமின்றி வேறொரு கதையைச் சொல்லியும் இருந்து வந்திருக்கிறது என்பதே அந்தச் சாத்தியம். ஆக, கதைசொல்லியாகும் ஒருவன் கையகப்படுத்தும் மொழியின் அர்த்தம் என்பதே, அவனுடைய ‘சொல்லுதலின்’ நிமித்தம் உருவாகிக் கதையானதும் அது கரைந்துபோய் அடுத்து வரும் ‘கதைசொல்லி’யின் சொல்லுதலுக்காக காத்திருப்பதே.
கதை என்பதை யூகங்களின் அடிப்படையில் வாசித்தல் என்ற பின்-நவீனத்துவ முறையை அறிமுகப்படுத்திய தமிழவனின் சரித்திரத்தில் படிந்த நிழல்கள் என்ற நாவலை இங்கு குறிப்பிட வேண்டும். இப்படி பல்வேறு கதைசொல்லிகளைக் கண்ட தமிழ் புனைகதையின் ஏடுகளில் கோணங்கியின் கதைப்பிரதியை ஒருமுறை வாசிக்கலாம்.
4
சிறுகதை என்பதைச் ‘சொல்வதன் மொழியை’ தன்னால் இயன்றவரை ஒரு நூதனமான நிலைக்கு உந்தித்தள்ளியவர்களில் கோணங்கியும் ஒருவர். இவருடைய பட்டுப்பூச்சியில் உறங்கும் மூன்றாம் ஜாமம் தொகுப்பில் வரும் பனிவாள் மற்றும் உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை தொகுப்பில் வரும் அதே பேர் கொண்ட புனைகதைகள் இரண்டை வாசித்தால் கிடைக்கும் புதிய மொழிப்பரப்பைப் பார்க்கலாம்.
பனிவாள் கதையில் வரும் முதல்வரி இது: "தானாக இருந்த நீரில் ஒருதுளை விழ அதன் வழி ஆலிஸ் பிறந்தாள்."
ஆலிஸ் என்ற குறி அல்லது சமிக்ஞை, தமிழில் வருகிறது. இது கதைசொல்லுதலில் தொடக்கம். இது ஆலிஸின் விந்தை உலகு (Alice in Wonderland) எழுதிய லூயி கரோலின் பிரதான ‘கதைக்குறி’ என்பதை அறிகிறோம். இதைக் கோணங்கியின் கதை, தமிழில் மறுபிரதியாக எழுதும்போதே இன்னொரு புனைகதைப்பரப்பை முன்வைக்கிறது. அதாவது, ’ஆலிஸ் பிறந்தாள்’ என்பது, ’ஏற்கனவே உள்ள தமிழ்ப்புனைகதை’ என்ற பரப்புக்கான கதைசொல்லும் தொடக்கத்தை முன்வைக்கிறது.
இப்படிக் கதைமொழியில் ஆலிஸ் முகிழ்ப்பது எங்கிருந்து? "எல்லா துளைகளிலும் ஆலிஸ்.." எனும்போது கதையின் பரப்பில் இருக்கக்கூடிய எல்லாவிதமான aporia-விலிருந்து, ஆலிஸ் என்பது மொழிக்குறியாக - தமிழ்ப்படுத்தப்பட்ட மொழிக்குறியாக - வருகிறது. ஆலிஸ் எங்கிருந்து எழுகிறாள்? துளையிலிருந்து. அவளுடைய முன்பிரதி-நிலையில் என்னவாகிறாள்?
முயலைத் துரத்தியபடி வரும் ஆலிஸ் அதன் குழியில் விழுந்ததைச் சொல்வதாக லூயி கரோல், புதிய விந்தை உலக மொழிக்குள் ஒரு கதவைத் திறக்கிறார். ஆனால் கோணங்கியோ, ஆலிஸின் பின்னால் ஓடிய யாவரும் அவள் விழுந்த, அந்த மொழி-விந்தையின் ஆழத்தைப் பார்க்க ஆலிஸின் உருமாற்றத்துடன் கதையைத் தொடங்குகிறார்.
"உறைந்து-உறையாத நீரில் 'பனிவாளாக' மாறித் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்" என்று கதையில் வருகிறது. ஆலிஸ் என்ற விந்தையான குறி, தமிழில் 'பனிவாளாக'ப் பிரதியாகிறது. அவ்வாறு பிரதியாகும்போது ஆலிஸின் தோற்றம், தமிழில் மொழிப்பிறப்பாக மாறுகிறது.
"நீரை வாளாக ஏந்தி வாளின் கூர்முனை கொண்டு நீரில் ஒரு துளைவிழ ‘அவள்’ பிறந்தாள்."
‘அவள்’ என்பது யார்? ஆலிஸ் பனிவாளாவது பிரதியில் நடக்கும் விந்தை. ஆக, பனிவாள் அவளாக பதிலியாகிறது. ஆக, பிரதியில் நடப்பது ஒருவித ரசவாதம். இப்படி இந்த முழுக்கதையின் முதல்-பத்தி ஒன்றை அறிவிக்கிறது - என்ன அது? வரப்போகும் கதையை. அதாவது, வரப்போகும் கதைக்கு இது ஒரு சிறிய முகவுரை எனலாம். வரப்போகும் கதை,
ஆலிஸ் பனிவாளாகும் பரஸ்பர பிரதியாக்கம் என்பதை அறிவிக்கும் முக்வுரை எனலாம். ஆக இங்குள்ள பிரதியின் நுட்பத்தைப் பின்வருமாறு கூறலாம்:
அ. ஆலிஸ் தோன்றுதல்
ஆ. பனிவாளாக பதிலியாதல்
இ. ‘அவள்’ என பிறத்தல்
ஆக, பனிவாளாக மொழிமாற்றம் பெறுகிறாள் ஆலிஸ். இருவேறு எதிரெதிர் பண்புகளைக் கொண்ட மூதாதைக்கூட்டத்தினரின் இடையே இருக்கத் தொடங்குகிறாள். அவர்கள் பனிமனிதர்கள் x மணல் மனிதர்கள். இவர்களின் இடையே மிதந்துபோகும் பனிவாளை இரு கூட்டத்தினரும் கையகப்படுத்த எத்தனித்த வண்ணம் இருக்கிறார்கள். இந்தப் பனிவாளின் கீழ் கட்டப்பட்டுள்ள இருவேறு கற்பனை நிலபரப்புக்களாக பனிவெளியும் மணல்வெளியும் பிரதியில் தோற்றம் கொள்கின்றன. பனிமனிதர்களின் உடலிய-விளிம்பில் பனித்துகளும் மணல்-மனிதர்களின் உடலிய விளிம்பில் மண்துகளும் பூசப்பட்டு நிலப்பரப்பு, உடற்பரப்பு ஆக மாற்றம் கொள்கின்றது. அதற்கிணையாக, ஆலீஸும் மனதில் உள்ளதையெல்லாம் உடலில் வரைந்து கோலமிடுகிறாள். கதைப்பிரதியின் கற்பனை-மனிதர்களுக்கீடாக ஆலிஸ் என்ற மொழிக்குறியும் தன்னை மறு-ஒப்பனை செய்துகொள்ள, தனது அகம் என்பதை உடல்மேல் வரைந்து மாற்றிக்கொள்கிறாள்.
இன்று பின்-நவீனத்துவ கோட்பாடுகளில் ஒன்றாக கூறப்படும் மேற்பரப்பு/சுய-மறுஒப்பனை இங்கே கதைசொல்லுதலில் நடந்தேறுகிறது எனலாம். பனிவாளைச் சுற்றி வலைப்பின்னலாக அமைக்கப்பெற்றிருக்கும் சொல்லுதல்களை விளங்கிக்கொள்ள, முதலில் இருவேறு மொழிபரப்புகளை இங்கே இனங்காண வேண்டும். கதையை மொழிரீதியாக நகர்த்தும், ‘பனிவாள்’ என்ற ஆலிஸின் மறுபுனைவாக்கம் பனி x மண் என இரண்டு கற்பனையான பிரதிப்பரப்புகளை உருவாக்கியிருக்கிறது. அவற்றில் உருப்பெறும் இருவேறு எதிரிடை மனிதர்களிடம் வசப்படாமல் மிதக்கும் பனிவாளை கைக்கொள்ள நடக்கும் பிரதியியல்-நீட்சியின் மொழியாக்கமே கதையை கட்டமைக்கும் சொல்லுதல்கள். இப்படி இருவரிடமும் சிக்காமல் திரவக்கதையாடலாகி நகர்ந்துபோகிறது பனிவாள். இதுவரை கதைமொழியில் வந்தவைகளின் அடுத்தகட்ட சொல்லுதலாக பனிமனிதர்கள் x மணல்-மனிதர்களின் மூதாதையர்களின் வருகையும் அவர்கள் எப்படி நினைவு-உறைந்த மொழிக்குறியாக மாறி உள்ளனரோ அதுபோல பனிவாளும்.
இருவேறு உலகஙக்ளின் இடையே இடையாட்டமாக விளங்கிய பனிவாள் ஒரு குகைக்குள் புகுவதன் மூலம் ஸ்படிகக்கல்லாக மாறுகிறது.
பனிவாளைத் தொடர்ந்துவரும் இருவிதக் கதைசொல்லுதலின் பதிலியாக பனிமனிதர்கள் x மணல்-மனிதர்களைக் கொள்ளலாம். இவ்விரு கதைசொல்லுதலும் பனிவாளைப் பின்பற்றி குகைக்குள் நுழையும்போது அங்கு புதிய ‘மிருகிய பெண்-இணைவை’ எதிர்கொள்கிறார்கள்.
ஆக, நிர்வாணமான பழங்குடிப்பெண்ணின் நரபலி ஆட்டத்தில்தான் பனிவாள் வசப்படுகிறது. அவளிடம் வீசுவதோ மிருக நாற்றம். அவளிடமே பனிவாள் வசப்படுகிறது. ஆலிஸ் பனிவாளாக மாறியதிலிருந்து குகைக்குள் ஸ்படிகக்கல்லாக உறைகிறாள். கதையின் முன்பகுதியில் வரும் நீரின் குழியிலிருந்து தோன்றிய ‘அவள்’ இப்போது இட-வசப்படுகிறாள். ஆக, கதையின் முதல் குறியாக வந்த ‘ஆலிஸ்’ ‘தோன்றினாள்’ என்பதற்டையில் ‘அவள்’ பிறந்தாள் எனவும் கடைசியில் ஸ்படிகமாக உருமாறி ஆதிக்குடிப்பெண்ணிடமிருந்து "பனிவாளின் வெள்ளை உருவம் துருவ நட்சத்திரத்தில் ‘தோன்றுவதாக’ விழித்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" சிலர் (வாசகர்கள்).
தன் பிரதிவ்ழியே கோணங்கி எதைச் செயல்படுத்துகிறார்? புனைகதை ‘மரபில்’ லூயி கரோலின் ‘ஆலிஸ்’ என்ற விந்தையான குறியை எடுத்துக்கொண்டு அதை தமிழ்ப்பிரதியாக்கியிருக்கிறார், அதில் இரு எதிரிடையான கற்பனை-நிலப்பரப்புகளை மொழிப்படுத்தி சாத்தியமாக்குகிறார் எனலாம்.
பனிவாள் முடிவது, மிருக-நாற்றத்துடனும் நரபலி ஆட்டத்துடனும். அதன் பிரதியியல் வழியே கோணங்கியின் அடுத்த கட்ட கதையான உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தைக்கு வரலாம். இதையும் மொழியாடலாய், மொழிவிளையாட்டாய் அணுகமுடிகிறது. இதன் முதல்வரியிலேயே முன்-அறியப்படாத, உயரமான மஞ்சள் நிற அலியின் தலைமுடியின் வாசனை வருகிறது. மிருக நாற்றத்தோடு, அலியின் தலைமுடி வாசனையோடு கதைசொல்லுதல் தொடங்குகிறது.
அலிகளின் எதிரிடைக்‘குறியாக’, சிறுத்தைத்தோல்கொண்ட யுவதி, ஏற்கனவே மிருகிய நாற்றமுடையவள். இந்தப்பிரதியில் தன் உடலின் மேற்பரப்பாக சிறுத்தையின் தோலைப் போர்த்துக் கொள்கிறாள். இந்த கதைப்பிரதியில் வரும் அலிகளின் கைகளில் ‘உப்புக்கத்தி’ என்ற பனிவாளின் மூலம் மற்றொரு பிரதியியல் சாத்தியப்பாடு விரிவடைகிறது. இனி உப்புக்கத்தியின் கதை சொல்லுதல்களைக் காணலாம்.
மஞ்சள் நிற அலிகள் x சிறுத்தை யுவதி
இந்த அலிகளின் கதையாடலை நிர்மாணிக்க கற்பனை-நகரமொன்று கட்டமைக்கப்பெறுகிறது. ‘எரிது’ என்ற அம்மொழிக்குறி, இரண்டு சொல்லுதல்களைக் கொண்டுள்ளது. எரிது என்ற நகரை, அலிகளின் கற்பனை-நிலப்பரப்பாகக் கொள்ளலாம். அங்கு கதைசொல்லுதல் என்பதை ஆடியுள் நிகழ்த்தப்படும் அசைவுக்கோர்வைகளாக, பரஸ்பர இணைவற்ற பிம்பங்களை அடுக்கி, கோணங்கி தனது கதைமொழியின் போக்காக சொல்லிச்செல்கிறார். ‘உப்புக்கத்தி’யைத் தேடிய இருவேறு பண்புகளை கொண்டவர்களின் தொகுப்பாக, உடைத்தெறியப்பட்ட சொல்லாடல்களின் தொகுப்பாக, கொள்கிறார்.
"பழங்கண்ணாடி வேவுபார்க்கும் பாழ் அறைக்கு ரகசிய அலிகளும் வந்து உப்புக்கத்தியைத் தேடுகிறார்கள்."
"கூட்டமாய் வரும் மிருகங்கள் மஞ்சள் அலி மீது ஊர்ந்துநெருங்க உடலனைத்தும் கொண்ட மூர்க்க வெறி தாபமாய் சிதறி வெடிக்கக் காத்திருக்கிறான் கண்ணாடிமுன்."
முதலில் உப்புக்கத்தியைத்தேடி அலிகளும் யுவதிகளும் வேவுபார்க்கும் கண்ணாடியுள் பிரவேசிக்கிறார்கள். 'வேவுபார்க்கும் கண்ணாடி' தான் எதிரிடையான உடலிய சாத்தியங்களின் பிரதிப்பரப்பாகும். இந்த இரண்டு எதிரிடைகளைத் தாண்டிய கூட்டமான மிருகங்கள் மஞ்சள் அலியின் மீது தாக்க, தன்னுள் உள்ள ‘இன்மைப்பண்பான தாபம்’ வெடித்துச்சிதறும் காட்சியை, கண்ணாடியின் முன்னின்ற அலி பார்க்க, கதை நகர்கிறது. தன்னிலையின் சிதறலைத் தானே பிரதிப்படுத்துவதன் மூலமாக பிணைக்கும் ‘தாபம்’ என்ற பெருந்தத்துவச் சொல்லாடல் தகர்கிறது. இவ்வாறு ‘மஞ்சள் அலி’ என்பதை அலியில் பொருள்படுத்தும் நோக்கில், பிரதியில் ‘மஞ்சள்’ என்கிற நிற-ஜீவியாக குறியாக்கம் செய்கிறார் கதைசொல்லி. இந்த மஞ்சள் நிறத்தை அலிக்கு பதிலிப்படுத்த பிரதியின் ஓரிடத்தில் ’பச்சைப்பெண்’ என்ற குறியை இதற்கு நேரெதிராக பயன்படுத்துகிறார். இதை, ‘பாசீ’ என்ற சங்கேதச்சொல்லின் துணைக்கொண்டு அடையாளப்படுத்துகிறது கதைமொழி.
மஞ்சள் x பச்சை.
இங்கு மஞ்சள் நிறம், பச்சை என்பதைத் தன் எதிரிடையாகவும் ஒருவித சமிக்ஞையாகவும் மொழியால் இணைத்துக் காட்டுகிறது. இங்கு மஞ்சள் என்பது anti-fertility-யாகக் குறிக்கப்பெறுகிறது. மேலும் இங்கு இருக்க வேண்டியதின் இன்மை என்பது ஒருபாலுக்கான பாலியல்-உறுப்பு இல்லாமல் போகும்போது அதனை மறுகண்டெடுத்தலைச் செய்யுமுகமாக மஞ்சள் நிற அலியின் செயல்பாட்டை மொழிரீதியாக கண்டறிவதைக் காணலாம்.
"உப்புக்கத்தியை எடுத்து சுரோனிதப் பையைக் கீறி சுரோனிதக்கல்லை எடுத்து கண்ணைக் கீறி கண்மேல் பதித்த சுரோனிதக்கல்."
தன்னிடமுள்ள உப்புக்கத்தியால் தன்னிடமில்லாத ‘சிறுத்தை யுவதியின்’ சுரோனிதப்பையைக் கீறிக் கிடைத்த கல்லை தனது உடலிய சாத்தியப்பாட்டை மாற்றியமைக்கும் முகமாக கண்களின் மேல் அந்தக் ‘கல்லை’ப்பதித்து மாற்றிப்பார்த்தல் என்பதை, மறுகட்டமைப்புப் பார்வை எனப் புனைகதையின் புதிய மொழியைச் சொல்வதாகக் கொள்ளலாம்.
உப்புக்கத்தியை வைத்து தம்மை மறுகட்டமைப்புக்கு உட்படுத்திக்கொள்ளும் மஞ்சள் அலிகளுக்கு, ’பும்மைதுனைக்காரர்களை கத்தியின் விளிம்பால் தொடுகிற செயல்’ தம்மையொத்த பும்மைதுனைக்காரர்களின் உடல்விளிம்பைக் கத்தியால் தொடுவதாகிறது, விளிம்பு மற்றொரு விளிம்பைத் தொடும் ஒரு நுண்-சொல்லுதலாகப் பிரதியாகிறது.
அடுத்ததாக, அலிகளின் மொழிப்பிரதேசமாக கட்டப்பட்டுள்ள உப்புவெளியில் அலிகள் தங்கள் உடலை மஞ்சளாக பதிலிப்படுத்துதலை கீழறுப்பு செய்யுமுகமாக தங்களின் உடல்களை மாற்று உடல்களோடு சேர்த்து இழைபின்னுதலைக் கோணங்கி இவ்வாறு கூறுகிறார்:
"வண்ணத்துப்பூச்சிகளை அலி உடல்களில் சேர்த்துத் தைத்துவிடும் அந்நியனைத் தேடி பலர் வந்துபோகிறார்கள். வர்ண இறகுகளின் நிறப்பொடியில் ஆணைப் பெண்ணாக மாற்றும் தையல்வேலை நடந்து வந்தது ரகசியமாக"
எனவும்
"அலிகள் அலைவுறும் சந்துகளில் ஒவ்வொருவர் உடலிலும் விநோதப்பிராணிகளை ஒட்டித்தைக்கும் தோல்தையலில் ‘இழைக்கட்டு’ பிறந்ததும் இணைந்துகொண்ட இரு உயிரினமான விநோதம் நகரை நெருக்கடியில் சிக்க வைத்தது."
எனவும் மொழிவயப்படுத்துகிறார். அலியின் உடலியல் விடுதலையின் குறியீடாக வண்ணத்துப்பூச்சியின் இறகுகளின் நிறப்பொடியில் ஒரு பாலை (ஆண்) வேறொரு பாலாக (பெண்) மாற்றுவதை ‘வண்ணம்’ என்ற குறிப்பீடு மஞ்சள் நிறத்தைக் கீழறுப்பு செய்து பல வண்ணங்களாக பிரதியியல் விடுவிக்கிறது. ஆனால் அலிகளின் உடல்மீது ஊர்ந்து தாபத்தைப் சிதறடித்த பிராணிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். அதே பிராணிகளை அலிகள் உடலில் ஒட்டித்தைத்து விளிம்பில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து அவர்கள் ‘இரு உயிரினமாக’ மாறும் புதிய பிரதி-சாத்தியத்தைக் கோணங்கி கட்டமைக்கிறார்.
அலிகளின் கதைநகரமான ‘எரிது’ அதன் ரகசிய சமூகத்தின் வரலாற்றை பல்வேறு நுண்ணிய சொல்லுதல்களால் கட்டியுள்ளதைக் கண்டோம். இந்தப்பிரதியில் வரும் ஒரு கிழட்டு அலிமீது பல சிறுமிகள் தங்கள் ரேகைகளைப் பதிக்கிறார்கள். அந்த அலியின் உடல்மீது உள்ள சுருக்கங்களை அலிகளின் வரலாற்றின் வரிகளாகப் பிரதிவயப்படுத்தியுள்ளார் கோணங்கி - சிறுமிகள் கைரேகைகளைப் பதிப்பதைப் போல.
படங்கள் - Alice in Wonderland, The Baptism of the Eunuch by Rembrandt
காதலும் கபாலமும் - ஷார்ல் போதலேர்
(பழம் பின்பாடல்)
மனிதக்கபாலம்
மீதமரும் காதல்
புனிதமற்ற அரியாசனம்
மீது்ம்
வீரத்தில்,
வெட்கமற்ற நகைப்பில்.
களிப்புடன் ஊதிவரும்
குமிழ்பல
வானிலெழும்
ஆகாச எல்லையில்
கோளம் பலதுடன்
மீண்டும் இணையத்தான்.
நொறுங்குவதாய்
ஒளிரும் கோளம்
வேகப்பறந்து
அற்ப ஆன்மா தனதை
உமிழும்,
வெடித்து மறையும்
பொற்கனாவென.
குமிழும் போதெல்லாம்
முனகிக் கெஞ்சும்
கபாலம்:
"என்று முடியும்
கொடும் கூத்திது?
இரங்கா உன் வாயும்
ஏதோ காற்றில் பரப்பியதால்
என் மூளை,
என் குருதியும் சதையும்
இங்கே
ராட்சதக் கொலைஞராய்..."
-- Charles Baudelaire, L'Amour et le Crâne, Les Fleurs du mal, 1857.
11.1.09
நிலவின் துயர் பல - ஷார்ல் போதலேர்
மாலையிது மயங்க
இன்னும் சோம்பிக்
கனாக்காணும் நிலவோ,
மெத்தைபல குவிந்த
படுக்கையதில் கிடந்து,
விளக்கால்,
உணங்கும் தன் கையால்,
இருமுலை வளையத் தடவிப்
பின் தூங்கும்
அழகுப்பெண்.
உகல்மேகம் பலதின்
பட்டுப்புறம் ஞெகிழ்ந்து,
நெடுகக்குமைய விழுந்து,
மணிநீலத்தில் விரிமலராய்
எழும்
வெண்பூதம் பலதைக்
கண்நோக்குவாள்
இவள்.
முயக்கம் தனதில்
ஒருக்கில் இப்புவிமீது
சற்றே இமைத்தும்
சிந்துவாள்
கண்ணீர்த்துளி,
புனிதக்கவியாய்
உறக்கத்தின் எதிரியாய்
இவள்.
வெளிறிய துளியும்
தன் கையகத்தில் வீழ்ந்து
கம்பைக்கல்லெனக் குமிழ்ந்து
வானவில் பரப்பில்
நிறம்மாறுவதை
ஒளிஞாயிறதன் கண்ணினின்றும்
தூரத்தே
தன் இதயத்தில் மறைக்கும்
இவன்.
--- Charles Baudelaire, Tristesses de la lune, Les Fleurs du mal, 1857.
10.1.09
என் ஆக்கங்கள் இரண்டு
நண்பர்களுக்கு,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, என் ஆக்கங்கள் இரண்டு, சென்னை ஆழி பதிப்பகம் சார்பாக, வெளியாகின்றன. இவை:
1. நளிர் - திணை இசை சமிக்ஞை என்ற இந்த வலைப்பக்கத்திலிருந்து சுமார் நூறு பதிவுகள் - என்னுடையவை.
2. ஊழிக்குப்பின் - ஆர்தர் ரைம்போ கவிதைகள் - ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து நேரடித் தமிழாக்கம்
ஞானக்கூத்தன், கோணங்கி, பிரபஞ்சன், பா. வெங்கடேசன், அ. ராமசாமி, அழகிய பெரியவன், இந்திரன், ச. முருகபூபதி, சா. தேவதாஸ், அய்யப்ப மாதவன், செ. ச. செந்தில்நாதன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூல்களுடன் என் ஆக்கங்களும் வெளியாக உள்ளன.
இடம் - தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை டி.ஆர். சுந்தரம் அரங்கம்
(சென்னை அண்ணா மேம்பாலம் அருகில்)
நாள் - ஜனவரி பத்தாம் நாள், சனிக்கிழமை
நேரம் - மாலை ஐந்து மணி
லண்டனின் இருப்பதால் இந்த நிகழ்வில் நானில்லை. அதே நேரத்தில், காஸா பகுதியில் இஸ்ரேல் முற்றுகை மற்றும் தாக்குதலை நிறுத்த வேண்டும், போர்நிறுத்தம் வேண்டும் எனக்கோரி இங்கே லண்டனில் இஸ்ரேல் தூதரகம் முன்பு நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கிறேன்.
நளிர் தொகுப்பை தமிழவன் அளிக்க, எஸ். சண்முகம் பெற்றுக்கொள்வார். ஊழிக்குப்பின் தொகுப்பை ஞானக்கூத்தன் அளிக்க தமிழ்நதி பெற்றுக்கொள்வார்.
அங்கு தற்போது நிலவும் பெட்ரோல், டீஸல் தட்டுப்பாட்டைக் கடந்து நீங்கள நிகழ்ச்சிக்குச் சென்றால் யார் என்ன பேசினார்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள்.
தங்கள்
நாகார்ஜுனன்
உயிரும் எழுத்தும் – ஆர்தர் ரைம்போ நூலின் பின்னுரை
நளிர் நூலின் முன்னுரை
சிற்பியின் நரகம் - புதுமைப்பித்தன்
1
சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும் விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிரதேச வாசிகளும் வெளுத்து ஒதுங்கிய கடாரவாசிளும், தசைவலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும் வெளுத்த யவனர்களும் தென்னாட்டுத்தமிழும் வடநாட்டுப் பிராகிருதமும் - எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் குழம்பின. சுங்க உத்தியோகஸ்தர்கள் அன்னம் போலும் முதலைகள் போலும் மிதக்கும் நாவாய்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங்களையும் வேலைக்காரர்களையும் பொற்பிரம்பின் சமயோசிதப்பிரயோகத்தால் தணிக்கை செய்துகொண்டிருந்தனர். அரசனுக்குக் கடாரத்திலிருந்து வெள்ளை-யானைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கத்தான் என்றுமில்லாத கூட்டம்!
அஸ்தமன சூரியனின் ஒளியே எப்பொழுதும் ஒரு சோக நாடகம். கோவில்-சிகரங்களிலும் மாளிகைக்கலசங்களிலும் தாக்கிக் கண்களைப் பறிப்பது மட்டுமல்லாது, கடற்கரையில் கரும்பாறையில் நிற்கும் துவஜஸ்தம்பத்தின் மீது கீழ்த்திசை நோக்கிப் பாயும் பாவனையில் அமைக்கப்பட்ட பொன் முலாம் பூசிய வெண்கலப்புலியின் முதுகிலும் வாலிலும் பிரதிபலிப்பது அவ்விடத்திற்கே ஒரு மயக்கத்தைக் கொடுத்தது.
இந்திர விழாவின் சமயத்தில் மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ஸ்நான கட்டத்தின் படிக்கட்டில் பைலார்க்கஸ் என்ற யவனன் கடலை நோக்கியபடி உட்கார்ந்திருந்தான். நீண்ட போர்வையான அவனது 'டோக்கா' காற்றில் அசைந்து படபடவென்றடித்து, சில சமயம் அவனது தாடியையும் கழுத்துடன் இறுகப்பின்னியது. பெரிய அலைகள் சமயாசமயங்களில் அவனது பின்னிய தோல்வார்ப்பாதரட்சையை நனைத்தன. அவ்வளவிற்கும் அவன் தேகத்தில் சிறிதாவது சலனம் கிடையாது. மனம் ஒன்றில் லயித்துவிட்டால் காற்றுத்தான் என்ன செய்ய முடியும், அலைதான் என்ன செய்ய முடியும்?
பைகார்க்கஸின் சிந்தனை சில சமயம் அலைகளைப் போல் குவிந்து விழுந்து சிதறின. கனவுகள் அவனை வெறியனைப் போல் விழிக்கச் செய்தன.
திடீரென்று, "சிவா!" என்ற குரல். ஒரு தமிழ்நாட்டுப் பரதேசி!
"யவனரே! உமது சித்தம் உமக்குப் பிரியமான ஒன்றுமற்ற பாழ் வெளியில் லயித்ததோ? நான் நேற்றுச்சொன்னது உமக்குப் பதிந்ததா? எல்லாம் மூல சக்தியின் திருவிளையாடல், அதன் உருவம்! கொல்லிப்பாவையும் அதுதான்; குமரக்கடவுளும் அதுதான்! எல்லாம் ஒன்றில் லயித்தால்..?"
"உமது தத்துவத்திற்குப் பதில் ஒரு கிண்ணம் திராட்சை மது எவ்வளவோ மேலானது. அதுவும் ஸைப்பிரஸ் தீவின் திராட்சை.. அதோ போகிறானே, அந்தக் காப்பிரியும் ஏதோ கனவை நம்புகிறான். உமது முதல் சூத்திரத்தை ஒப்புக்கொண்டால் உமது கட்டுக்கோப்பில் தவறு கிடையாதுதான்.. அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஒவ்வொருவனுடைய மனப்பிராந்திக்கும் தகுந்தபடி தத்துவம்.. எனக்கு அது வேண்டாம்.. நாளங்காடியில் திரியும் உங்கள் கருநாடிய நங்கையும் மதுக்கிண்ணமும் போதும்.." 
"சிவ! சிவ! இந்த ஜைனப்பிசாசுகள் கூடத் தேவலை, கபாலி வெறியர்கள் கூடத் தேவலை... உம்மை யார் இந்த அசட்டுமூட்டையைக் கட்டிக்கொண்டு யவனத்திலிருந்து வரச் சொன்னது?"
"உம்மைப் போன்றவர்கள் இருக்குமிடத்தில் நான் இருந்தால்தான் அர்த்தமுண்டு. எங்கள் ஜூபிட்டரின் (1) அசட்டுத்தனததுக்கும் உங்கள்