பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

3.7.09

புலிகளின் பொன் - ஜோர்ஜ் லூயி போர்ஹெ

மஞ்சள் படுஞாயிறின் இக்கணம்வரை
எத்தனைமுறை என் கண்வைப்பேன்,
ஒருக்கிலும் சிறையென ஐயப்படாது
புதிர்வழி இரும்புக்கிராதிகள் பின்
நடந்துதேய்ந்த தன் வழி
திரும்பத்திரும்பச் செல்லும்
தசைநார் உடல்கொண்ட
வங்கப்புலியிதன்மீது!

பிறகு
பிறிதான புலிகள் தோன்றும்.
வில்லியம் பிளேக்கின்
எரியொளியாம் ஒளியெரியும் புலி.
பிறகுவரும் பிறிதான பொன்னும்.
ஸீயஸ் கடவுளுக்கும் வேடமிடும்
காமப் பொன் துளிமழை.
முடிவற்று
ஒன்பதாம் ஒன்பதாம் இரவில்
ஒன்பதொன்பது ஆழியென
ஒளிர ஒளிர பெருகும்
ஆழிப்பொன்.
என்னில் ஆண்டாண்டாய் நீங்கும்
என்னைத் திணறடிக்கும் பல வண்ணம்.
இப்போது தப்பியதோ
காம ஒளி
ஆதிப்பொன்
பிரியா நிழல்.
படுஞாயிறே!
புலியே!
தொன்மப் புராண அற்புதமே!
என் பொன்னே! இனிதினிதே!
இக்கரமிரண்டும் தீண்ட விழையும்
உன் வண்ணமுடிப் பொன்னே!

- Jorge Luis Borges, El oro do los tigres, 1975.
ஸ்பானிஷ் மொழியிலிருந்து தமிழாக்கம்.

1 கருத்துகள்:

vasu said...

பிறிதான புலி, மஞ்சள் புலி, நீலப்புலி, இப்போது பொன் புலி...
சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் பதிவுகள்...

என்ன‌ள‌வில் சொல்கிறேன்...

பிறிதான நீலப்புலி எதிர் க‌ன‌வில் ம‌றைந்த‌து....( inter-textuality interpretation)
blue tigers க‌தையில் நீல‌ப்புலியை தேடிப்போய், மிஞ்சிய‌து எந்த‌ அறிவிய‌ல் ச‌ம‌ன்பாட்டுக்கும் அட‌ங்காத‌ மொழி போன்ற‌ நீல‌க்க‌ற்க‌ள்..ஆக‌ நீல‌ப்புலியை நீங்க‌ள்,நான், போர்ஹேஸ் யாவ‌ரும் மொழியில் தேடிக்கொண்டிருக்கிறோம்..
பொன் புலி ப‌ற்றி கொஞ்ச‌ம் யோசிக்க வைக்கிற‌து..
ஆனால், போர்ஹே சொன்ன‌ ஒவ்வொரு புலியும் வேறு..( ம‌ஞ்ச‌ள்,நீல‌ம்,பொன்)...ஆழ‌மாக‌ போக‌வேண்டும் புலியின் குறியீடுள்ளே...

பதிந்தவை