பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

29.6.09

கனாப்புலிகள் - ஜோர்ஜ் லூயி போர்ஹெ

புலி வழிபாட்டில் மிகுந்த உணர்வுடன் ஈடுபடுவோனாக என் சிறுபிராயத்தில் இருந்தேன். புலி என்றால் இங்கே அமேஸான் பகுதிப் பச்சைக்காடுகளில், பரானா நதியில் மிதந்துவரும் தாவரங்களில் உறைகிற, புள்ளிகொண்ட ஜாகுவார் சிறுத்தையல்ல. மாறாக, அது ஆசியக்கண்டத்தில் காணப்படும் அரசமிடுக்கு கொண்ட வரிவிலங்கு. ஆனை அம்பாரி மீதமர்ந்த ஒரு போர்வீரன்தான் இதைத் தேடிக் கண்டறிய முடியும்...

அப்போதெல்லாம் மிருகக்காட்சிசாலையில் கூண்டொன்றில் இருந்த இதன்முன்னே முடிவற்றுத் தறுகி நின்றதும் என் வழக்கம். பெரும் கலைக்களஞ்சியங்களை, இயற்கை-வரலாறு குறித்த புத்தகங்களை நாம் மதிப்பீடு செய்ததும் அவற்றில் புலிகள் பற்றி என்ன போட்டிருக்கிறது என்பதை வைத்துத்தான். ஒரு பெண்ணின் புன்னகையையோ புருவத்தையோ சரிவர நினைவுகொள்ள முடியாத எனக்கு இன்னும் நினைவிருப்பவை, அவற்றில் இருந்த புலிப்படங்கள்.

என் சிறுபிராயமும் கழிந்தது. புலிகளும் அவை குறித்த என் மோகமும் மூப்படைந்தன. என்றாலும் என் கனாக்களில் வருபவை அவை. ஆழ்மனதோ அதன் குழப்பமோவென அந்த மட்டத்தில் தொடர்பவை அவை. ஆக உறங்கும் என்னில் ஏதோ கனா வசீகரிக்க, திடீரென கனாக்காண்பதை அறிகிறேன். ஓ, இது கனா, என் மனோலயம் போடும் ஆட்டம்தான் என எண்ணி, எனக்கிருக்கும் எல்லையற்ற இந்த சக்திகொண்டு ஒரு புலியையே படைப்பேன் என நினைத்துக்கொள்வேன்.

ஓ, நான் மோகிக்கும் அந்தக் காட்டுவிலங்கை ஒருபோதும் மெய்யாக்கப்போவதில்லை என் கனாக்கள். அந்தத் திறன் எனக்கிருக்கிறதா என்ன.. புலியென்னவோ இன்னும் வரத்தான் செய்கிறது கனாவில். ஆனால் அந்தப்புலி இருப்பதும் பஞ்சடைத்தோ உடைவதாகவோ.. அதன் உருவமிருப்பதும் மாறியோ குலைந்தோ சாத்தியமற்றோ, கணத்தில் தோன்றிமறைவதாகவோ.. அது தீண்டுவதென்னவோ ஒரு பறவையை, நாயைப் போலத்தான்.

-- Jorge Luis Borges, Dreamtigers, 1960.

3 கருத்துகள்:

rama said...

தன்னில் இருக்கும் புலி இறக்கும் போது அதனோடு இறுதியாக கழிந்த பொழுதுகள் மென்மையாகவோ, வன்மையாகவோ அழிக்கப்படும். அதன் பின்னர் வரும் கூர்மையான நகங்கள் நாம் கனவை கிழிக்கும், கிழிபடுவதற்காக காத்திருக்கும் நம் கனவுகள்.

Chan said...

இந்த பதிவினைப் படித்த பிறகு இதன் ஆங்கில மொழியாக்கதையும் படித்தேன்.[Dreamtigers, by Jorge Luis Borges, translated by Mildred Boyer] ஒரு சிறிய சந்தேகம். The tiger indeed appears,......, or with a touch of the dog or the bird என்பதை முதலில் 'நாயின் பறவையின் தீண்டுதலைப் போலத்தான் அதன் தீண்டலும்' என்று எழுதியிருந்தீர்கள். பிறகு '.. அது தீண்டுவதென்னவோ ஒரு பறவையை, நாயைப் போலத்தான்' என மாற்றியுள்ளீர்கள். நீங்கள் ஸ்பானிஷிலிருந்து மொழிபெயர்த்தீர்களா?
எனக்குத் தெரிந்தவரை 'with the touch of' என்பதற்கு 'a suggestion of some quality (there was a touch of sarcasm in his tone) என பொருள்படும் என்று நினைக்கிறேன். எனவே 'அந்த கனாப்புலி..... ஒரு நாயின் அல்லது பறவையின் சிறு சாயல்/குணம்/தன்மை கொண்டதாகவோ உள்ளது' என நான் அர்த்தம் கொள்கிறேன். எனக்கு இதனை சரியாக மொழிபெயர்க்க தெரியவில்லை. தீண்டுதலுக்கு 'with the touch of' என்ற phrasal அர்த்தம் உள்ளதா என்றும் எனக்கு தெரியவில்லை. தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.
நன்றி
சான் சுந்தர்

நாகார்ஜுனன் said...

with a touch of என்பதற்கு நீங்கள் கூறுவது போல சிறுசாயல் என்பது சரியான பொருள். அதனால் இடையில் ’தோன்றுவதென்னவோ’ என ஒருமுறை போட்டேன். என்றாலும் அதில் literal-ஆகத் தீண்டுவது என்ற tactile பொருள் இல்லை. பிறகு ‘தீண்டுவதென்னவோ’ என மாற்றினேன். மூன்றிலும் எனக்குத் திருப்தியில்லை. ஆக, தமிழாக்கம் முழுமையில்லைதான்.

பதிந்தவை