ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் விசேட அமர்வு சென்ற வாரம் மே 26-27 நாட்களில் ஜெனிவா நகரில் நடந்தேறியது. இதில் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அம்மையார், இலங்கைப்படுகொலைகள் பற்றிய ஒரு பன்னாட்டு விசாரணை, காத்திரமானதாக, நம்பகத்தன்மை கொண்டதாக, பக்கச்சார்பற்றதாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த, இந்திய-தமிழ் வம்சாவழியினரான இந்த அம்மையாரின் உரையில் உள்ள முக்கியக்கோரிக்கைகளைத் தோற்கடிக்கும்வகையில் மனித உரிமைகள் குழு இலங்கை அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நிறைவேற்றியது.
தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் - இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள், செனகல், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, அங்கோலா, பர்க்கினா ஃபாஸோ, காமரூன், மடகாஸ்கர், ஜாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள், எகிப்து, பஹ்ரைன், கத்தார், சௌதி அரேபியா, ஜோர்தான், அஸர்பைஜான் ஆகிய மேற்காசிய நாடுகள், ருஷ்யா, தவிர க்யூபா, நிக்கரகுவா, பிரேஸில், பொலிவியா, உருகுவே ஆகிய மத்திய-தென்னமெரிக்க நாடுகள். எதிர்த்து வாக்களித்த நாடுகள் - கனடா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஒல்லாந்து, ஸ்விட்ஸர்லாந்து, போஸ்னியா, ஸ்லோவாக்கியா, சிலி, மெக்ஸிக்கோ. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நாடுகள் - ஜப்பான், கொரியா, மௌரிஷியஸ், அர்ஜென்டினா, உக்ரைன், காபோன்.
நவநீதம் பிள்ளையின் உரை இதோ:
இலங்கையில் மனித உரிமைகள் நிலை பற்றி இன்று நடக்கும் மனித உரிமைகள் குழுவின் விசேட அமர்வில் என்னால் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். மனித உரிமைகள் பாதுகாப்புக்கான முதன்மையான அமைப்பு என்ற வகையில் ஐ.நா.-வின் இந்த மனித உரிமைகள் குழு, இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மற்றும் போரின் சோக விளைவுகள் குறித்துப் பேச வேண்டியது மிகமிக அவசியம்.
இலங்கையின் போர்ப்பகுதியிலிருந்து பெண்களும் ஆண்களும் சிறாரும் பெரிதும் மிரண்டும் பசிப்பிணியுற்றும் தப்பிவந்த சித்திரங்கள் எம் கூட்டுநினைவில் என்றென்றும் தங்கியிருக்கும். எம்மை உடன் செயல்படுமாறு இவை தூண்ட வேண்டும்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் இப்போது கடைசியாக நடந்திருக்கும் கடும்போரில் பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்கள் பலியாகியிருக்கிறார்கள், காயம்பட்டிருக்கிறார்கள், இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களுடைய சொத்துக்களும் வாழ்வாதாரங்களும் நொறுக்கப்பட்டுவிட்டன. போரின்போது பன்னாட்டு மனித உரிமைகளும் மனிதாபிமானச் சட்டங்களும் இவ்வாறு மீண்டும் மீண்டும் கடுமையாக மீறப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டி இந்தப்பகுதிகளுக்குச் செல்ல பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் தங்குதடையற்ற அனுமதி வேண்டும்.
இதுதவிர, போர்ப்பகுதியிலும் போர்ப்பகுதியிலிருந்து தப்பி முகாம்களுக்குச் செல்லும் வழியிலும் இருந்த ஆயிரக்கணக்கான சாமானிய மக்களின் கதி பற்றி முழுமையான செய்திகள் இன்னமும் தெரியவில்லை. இவர்களுக்கு உணவு, நீர், மருத்துவ உதவி மற்றும் பிற அடிப்படைச்சேவைகள் உடன் கிடைத்தாக வேண்டும். இவர்கள் முகாம்களில் திரளாகக் குவித்து வைக்கப்பட்டிருப்பதும் பெரும் பிரச்னைகளைக் கிளப்பும் என்றே தெரிகிறது. இங்கே ஊட்டச்சத்தற்ற நிலைமை தொடர்வதும் பெரிதும் கவலையளிப்பதாக இருக்கிறது; தொற்றுநோய்கள் ஏற்கனவே பரவியிருக்கின்றன என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இப்படிப் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தங்குதடையற்ற மனிதாபிமான உதவி உடன் கிடைத்தாக வேண்டும். இவர்களில் பலர் வாழ்வா, சாவா, நோயா என்ற நிலையிலிருந்து மீள்வதற்கு இந்த உதவி மிகமிக அவசியம். இருந்தபோதும் இவர்கள் இருக்கும் முகாம்களுக்குச் செல்ல ஐ. நா. மன்ற அமைப்புகளுக்கும் அரசு-சாரா நிறுவனங்களுக்கும் அனுமதி கிட்டுவதில் தடைகள் நீடிக்கவே செய்கின்றன. இந்த மக்களுக்குத் தங்குதடையற்ற உதவி உடன் கிட்ட வேண்டும், இதை உறுதிசெய்ய வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தவிர, சாமானியத் தமிழ்மக்களிடமிருந்து விடுதலைப்புலிகளைப் பிரித்து விசாரிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு செயல்படுத்திவருகிறது. இதிலுள்ள பிழைகளைக் களைந்து இதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசை வலியுறுத்துகிறேன். இப்படித் தடுத்துவைக்கப்ப்ட்டோரை மனிதாபிமானம் மிக்க முறையில் நடத்த வேண்டும், இவர்கள் மீதான விசாரணை சட்டப்படி நடக்க வேண்டும் என்பதற்கு பக்கச்சார்பற்ற கண்காணிப்பாளர்களுக்கு முழு அனுமதி இருந்தாக வேண்டும். தவிர, போரால் இடம்பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பாலோரால் பாதுகாப்பு-அச்சுறுத்தல் ஏதுமில்லை என்ற நிலையில் இவர்களுக்கு சுதந்திரமாக நடமாடும் உரிமையை இலங்கை அரசு எத்தனை விரைவில் அளிக்க முடியுமோ அளித்தாக வேண்டும்.
ஏப்ரல் மாதத்தில் தப்பிவரும் தமிழர்கள்.
2 கருத்துகள்:
//ஏப்ரல் மாதத்தில் தப்பிவரும் தமிழர்கள்.//
"தமிழ் மக்களை விடுவிப்பதற்கான படைநடவடிக்கை என்பது வரலாற்றில் மிகவும் பாவமான வாக்கியமாகும்".- தீபச்செல்வன் (கீற்று ஏப்ரல் 2009)
எதிலிருந்து தப்பி வரும் தமிழர்கள்? விளக்க முடியுமா நாகார்ஜுனன்?
'விடுவிக்கும் படைநடவடிக்கை' என்ற பிரயோகத்தை இலங்கை அரசை ஆதரிப்போர் தவிர யாரும் ஏற்க முடியாது... 'விடுவிப்பதும்'
போரிலிருந்து தப்புவதும் வேறானவை... மேலே கூர்ந்து வாசித்தால் தப்பி வந்திருக்கும் இடத்திலிருந்தும் இனி தப்பியாக வேண்டும் என்பதும் புரியும்.
Post a Comment