பருவ மழை சற்றே நிற்க, கேரளத்தைத் தாக்கியிருப்பது வேறொரு விஷயம். அசாதாரண வாழ்க்கை கொண்ட மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டி என்ற கமலா தாஸ் என்ற கமலா சுரையாவின் மரணம்தான் அது. இன்று அதிகாலை புனே நகரில் நடந்திருக்கிறது. இவருக்கு வயது எழுபத்தைந்து என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நாளை மறுநாள் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் என்றது செய்தி. 'சேச்சி'-யின் மரணத்துக்கு எழுத்தாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை ஆதராஞ்சலிகள் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
செய்தி கேட்ட சற்று நேரத்தில் நன்றாகத் தண்ணீர் விட்டுக் குளித்தேன். கேரளத்தில் என் துணைவியாரின் வீட்டில் இருந்திருந்தால் மீனச்சில் ஆற்றுக்குச் சென்று குளித்திருப்பேன்.... குளிர்நீர் என் உடலெங்கும் ஊர்ந்து வழிய, மெலிதாகச் சிலிர்த்தேன். ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸவின் மரணத்தைக் கேள்விப்பட்ட திருலோக சீதாராம் கிணற்றுக்குச் சென்று குளியல் போட்டதும் நினைவுக்கு வந்தது. ஆம், நிஜத்தில் நம் சுற்றத்தார், எழுத்தாளர்களும் கலைஞர்களும்தாம் அல்லவா..
எனக்குப் பதின்மூன்று-பதினான்கு வயதில் கமலா தாஸ் எழுதிய ஆங்கிலக்கதைகள் மற்றும் கட்டுரைகளைத்தான் முதலில் வாசித்திருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா வார இதழில் வெளியானவை. அப்போது புரியவில்லை. அந்த வயதுக்கேற்ப புரிந்தவை போலக் கிளர்ச்சியாக இருந்தன. இப்படியும் எழுத முடியுமா என்று பயமாக இருந்தது... இன்று திரும்பிப்பார்க்கும்போது மாதவிக்குட்டியின்மீது ஆண்டாளின் நிழல் பட்டுக்கொண்டே இருப்பது தெரிகிறது. உண்மையில் இவர் காதலன் கண்ணன்தான் எனத் தோன்றுகிறது.
திருச்சூர் அருகே நாலாப்பாட்டு தறவாட்டின் பெயர்பெற்ற எழுத்தாளர் பாலாமணியம்மாவின் மகளாகப் பிறந்த மாதவிக்குட்டியின் வாழ்வு, இஸ்லாமியக் கபரடக்கத்தில் சென்று முடிந்திரு்கிறது. தந்தையார் வி.எம். நாயர், மாத்ருபூமி நாளேட்டின் ஆசிரியராக இருந்தவர். மகன் மோனு தாஸ் நாலாப்பாட் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆசிரியர் குழுவில் இருப்பவர். இப்படிக் குடும்பமே எழுதும் நிலையில் இருக்க, 'மான்குட்டிக்குப் பிறந்த குரங்கு' என்று தம்மை விவரித்துக்கொள்கிறார் மாதவிக்குட்டி.
மாதவிக்குட்டியின் வாழ்வில் எத்தனையோ மனிதர்கள், காதலர்கள், நண்பர்கள், மார்க்கங்கள்.. ஆக, இவர் எழுத்தைக் காட்டிலும் விசித்திரமானது இவர் வாழ்வு. இதுபற்றி விமர்சித்து எழுதாதவரே இல்லை.. என்றாலும் இவர் பேசுவதைக் கேட்கும்போது பிறிதோர் உலகத்தில் வாழ்பவர் என்ற உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவேயில்லை. இதுதான் இவருடைய பலமோ என்று ஒருகணம் தோன்றும்...
இதற்குச் சரியான எடுத்துக்காட்டு இதோ - கேரளத்தில் தூக்குத்தண்டனை பெற்ற ஒரு கைதி, சிறையில் இவருடைய எழுத்தை வாசித்தார். பிறகு தண்டனைக்குறைவு பெற்று விடுதலையாகி மாதவிக்குட்டியின் வீட்டுக்கு வந்து 'அம்மயுட மடியில் தலைவைத்துக் கிடக்கணும்' எனக் கோரினார். அது நிறைவேறியது.
இருபதாண்டுகளுக்கும் முன்பு நானும் மாதவிக்குட்டியைக் கண்டிருக்கிறேன். சென்னையில் வைத்து. அப்போது இலங்கைக்குச் சென்றிருந்த இந்தியப்படையினருக்கும் அங்கு விடுதலைப்புலிகளுக்கும் மோதல்கள் தொடர்ந்து அதை நான் கடுமையாக விமர்சித்துப் பொதுக்கூட்டமொன்றில் பேசியிருந்தேன். அதையடுத்து ஒருநாள் காலை இந்திய உளவுத்துறையினர் என் அலுவலகம் வந்து என்னைப்பற்றி விசாரித்துச் சென்றிருந்தார்கள். மாலை டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு அகஸ்மாத்தாக நான் சென்றபோது அங்கே காரில் இவர் ஏறிக்கொண்டிருந்தார். உளவுத்துறை விசாரணை பற்றிய யோசனையிலேயே நான் சென்றதால் என் மோட்டார் சைக்கிள் இவர் காரை உரசிவிட்டது. ஓட்டுநர் என்னை ஏதும் சொல்வதற்குள் 'எந்தா மோனே..' என்று வந்து என் தோளைத் தட்டிச் சிரித்தார். நிறைய நகை அணிந்திருந்தார். கைவளை ஒலி காதுவரை சென்று மீண்டும் சிலிர்த்தேன். அப்போதுதான் தொட்டது மாதவிக்குட்டி என உணர்ந்தேன்.
"ஓ, என் தப்புதான்.. ஸாரி.... உங்கள் கதைகளை வாசித்திருக்கிறேன்..."
"எந்தினா ஸாரி மோனே, என் கதைகளை வாசித்ததற்காகவா.." என் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு ச்ட்டென்று காரில் ஏறிச் சென்றார்...
இவருடைய கதைகளில் ஒன்று, நெய்ப்பாயசம். இதுதான் கண்ணனுக்குப் பிடித்தது. பாவை பாடும் ஆண்டாளும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்றழைத்துக் கூறுவாள்:
.......... உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
மாதவிக்குட்டியைச் சந்தித்த அன்றைய நாள் என் ஆசையின் நினைவாக இந்தக் கதையை இங்கே தமிழாக்கியிருக்கிறேன். ஆண்டாளில் பிரசாதமாக வரும் அக்கார அடிசில் மாதவிக்குட்டியின் எழுத்தில் சாவின் சுவையாகிறது, இன்மையின் சுவையாகிறது. வாசியுங்கள்.
நெய்ப்பாயசம் - மாதவிக்குட்டி
சட்டென்று முடிந்த சவ தகனம் அது. உடன் இருந்தோருக்கு நன்றிசொல்லி, அகால நேரமதில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த இவரை அச்சன் என்றே நாம் அழைப்போம்.
இவரை இந்தப்பட்டினத்தில் மூன்று சிறுபிள்ளைகள் மாத்திரமே அப்படி அறிவார்கள். ஆம், இவரை ‘அச்சா!’ என்றே அழைப்பவர்கள் அவர்கள்தாம்.
அந்நியர்களுடன் பஸ்சில் அமர்ந்து, அன்று ஒவ்வொரு நொடியையும் அசைபோட்டார் இவர்.
காலை இவர் துயிலெழுந்ததே அவள் குரல் கேட்டுத்தான்.
"உண்ணியே, இப்படி இழுத்துப்போர்த்திக்கிட்டு உறங்கினா எப்பிடிடா. திங்களாழ்ச்ச இல்லியா இன்னிக்கி?". மூத்த பிள்ளையை எழுப்பிக்கொண்டிருந்தாள். கசங்கிய தன் வெண்நிறப் புடவையில் அடுப்படியில் பிறகு நுழைந்தாள். பெரிய கோப்பை நிறைய இவருக்குக் காப்பியும் கொணர்ந்தாள். பிற்பாடு. என்னதான் நடந்தது? மறக்கவியலாதபடி ஏதும் சொன்னாளா? அதற்கப்புறம் அவள் சொன்ன ஏதும் எவ்வளவோ முயன்றும் நினைவில் இல்லை.
"இப்படி இழுத்திப்போர்த்திக்கிட்டு உறங்கினா எப்பிடிடா. திங்களாழ்ச்ச இல்லியா இன்னிக்கு?" இந்த வாக்கியம் மாத்திரம் திரும்பத்திரும்ப வந்து நினைவாக நின்றது. மந்திரம்போல இதை உச்சாடனம் செய்தார். மறந்தாரெனில் தோன்றும் துயரைத் தாங்க முடியாது போய்விடும் என்பதைப் போல.
காலை அலுவலகம் கிளம்பியபோது பிள்ளைகள் மூவரும் வந்தது இவருடன்தான். அவர்களுக்கு மதிய உணவை சிறிய அலுமினிய டப்பாக்களில் வைத்துக் கொணர்ந்த அவள் வலதுகரத்தில் சற்றே தீற்றியிருந்தது மஞ்சள் பொடி.
தம் அலுவலகப்பணியின் போது அவளை நினைக்கும் வழக்கம் இவருக்கில்லை.
ஓரிரண்டு ஆண்டுகள் நீண்ட காதலுக்குப் பிறகு நடந்தது, அவர்கள் திருமணம். பெற்றோர் சம்மதமின்றி. அது குறித்துப் பிற்பாடு வருந்தியதில்லை அவர்கள். பணப்பற்றாக்குறை, சிலவேளை பிள்ளைகளின் உடல்நலக்கேடு என அடி்க்கடி அவர்களுக்கு சோதனையும் தளர்ச்சியும்தாம். தன் உடை-தோற்றம் குறித்து கவனம் செலுத்துவதைக் குறைத்திருந்தாள் அவள். சிரிக்க ஓரளவு மறந்துபோயிருந்தார் இவரும்.
இன்னும் பரஸ்பரம் காதலிக்கவே செய்தார்கள். மூன்று பிள்ளைகளுக்கும் அச்சன்-அம்மா என்றால் உயிர். ஆண்பிள்ளைகள் மூவரும். உண்ணிக்கு வயது பத்து, பாலனுக்கு ஏழு, ராஜனுக்கு ஐந்து. எப்போதும் மூவர் முகத்திலும் அழுக்கு அப்பியிருக்கும். அழகோ புத்திசாலித்தனமோ அற்ற பிள்ளைகள். ஆனால் அம்மாவும் அச்சனும் பேசிக்கொள்வதென்னவோ இப்படித்தான்:
"உண்ணியப் பாருங்க. ஏதாவது வைச்சிட்டு செஞ்சுகிட்டே இருக்கான். எஞ்சினியரிங்லதான் ரொம்ப ஆர்வம்."
"பாலனை எப்படியாவது டாக்டராக்கிடணும். நெத்தியைப் பாரு.. ரொம்ப அகலம். புத்திக்கு அடையாளமில்லியா அது."
"இருட்டில போனா ராஜனுக்கு பயமேயில்லை. கெட்டிக்காரன். பட்டாளத்தில சேரணும் இவன்."
இந்தப் பட்டணத்தில் அவர்கள் வாழ்ந்தது நடுத்தர வர்க்கத்தினர் வசித்த தெருவொன்றில்தான். மூன்று அறைகள் கொண்ட முதல் மாடி ஃப்ளாட் அது. இருவர் மாத்திரம் நெருக்கி நிற்கும்படி வராந்தா. அம்மா தொட்டியில் நீருற்றி வளர்க்கும் ஒரு பன்னீர்ச்செடி. பூக்கவில்லை இதுவரை.
அடுப்படிச்சுவரில் அடித்த கொக்கிகளில் பித்தளைக்கரண்டிகளும் சாரணிகளும் தொங்கிக் கொண்டிருக்கும். ஸ்டவ் அருகே ஒரு தேய்ந்த மரப்பலகை. அச்சன் அலுவலகத்திலிருந்து திரும்பி வீட்டை அடையும் நேரம் அவள் அதில்தான் அமர்ந்து சப்பாத்தி இடுவாள்.
பஸ் நிற்க இறங்கினார் இவர். முட்டிக்கால் வலி தெறிக்க உணர்ந்தார். மூட்டுவாதமாக இருக்குமோ? நான் படுத்துவிட்டால் பிள்ளைகளை இனி கவனிப்பது யார்? சட்டெனக் கண்ணீர் பெருகியது. அழுக்குக் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டார். நடையை எட்டிப் போட்டார்.
பிள்ளைகள் உறங்கிப்போயிருக்குமோ? உணவு ஏதும் கழித்திருக்குமோ? இல்லை அழுதழுது உறங்கியிருக்குமோ? நடந்ததைப் புரியவியலாத சிறுபிள்ளைகளல்லவா.. அவளை இவர் டாக்ஸியில் ஏற்றியபோது உண்ணி பார்த்துக்கொண்டே நின்றானே. சின்னஞ்சிறியவன் மாத்திரம் அழுதான். டாக்ஸியில் ஏறிக்கொள்ளவேண்டும் என்ற அழுகைதான். சாவின் பொருள் அவர்களுக்குத் தெரியாது என்பது நிச்சயம்.
எனக்காவது தெரிந்ததா? யாரிடமும் விடைபெறாமல் சட்டென ஒரு மாலைப்பொழுதில் வீழ்ந்து சாவாள் என்று நான் எப்போதாவது கற்பனையும் செய்திருப்பேனா..
அலுவலத்திலிருந்து திரும்பியவுடன் இவர் அடுப்படி ஜன்னல் ஊடே பார்த்தார். அவள் இல்லை. வீட்டின் முகப்பில் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கும் சத்தம். உச்சத்தில் கேட்டது உண்ணியின் குரல்தான்.
தன் சாவியால் வீட்டின் முன்வாசலைத் திறந்தபோதுதான் அவளைப் பார்த்தார். தரையில் வீழ்ந்திருந்தாள். திறந்த உதடுகள். வழுக்கி விழுந்திருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் ஆஸ்பத்திரியில் மருத்துவர், "ஒண்ணரை மணி நேரமாச்சு செத்துப்போய். மாரடைப்பு" என்றார் இவரிடம்.
சுழலாய் என்னென்னவோ உணர்ச்சிகள். காரணமே இன்றிக் கோபம் வந்தது அவள்மீது. இப்படி எச்சரிக்கையின்றி பொறுப்புகள் யாவற்றையும் என் மீதே சுமத்திவிட்டு எப்படிப் போகலாம் அவள்?
இனிமேல் பிள்ளைகளைக் குளிப்பாட்டுவது யார்? உணவு சமைப்பது யார்? உடல்நலம் கெடும்போது கவனிக்கப்போவதும் யார்?
"என் மனைவி செத்துப்போயிட்டா." தமக்குள் முணுமுணுத்தார். "என் மனைவி இன்னிக்கி சட்டுனு போயிட்டா. அதனால ரெண்டு நாள் லீவு வேணும்."
விடுப்பு விண்ணப்பம் புதுமையானது. மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்பதாலன்றி மனைவி செத்துவிட்டாள் என்பதால் இவர் விடுப்பு கோரும்போது, மேலதிகாரி தம் அறைக்கு அழைக்கலாம், துக்கம் விசாரிக்கலாம். அவருடைய துக்கம்! யாருக்கு வேண்டும் அது! அவருக்கு அவளைத்தான் தெரியுமா. அவள்தம் சுருள்நுனி கொண்ட முடியும் அயர்ச்சியான புன்சிரிப்பும் அதிர்வற்ற நடையும் என இழப்புகள் யாவும் இவருடைய இழப்புகளல்லவா..
இவர் வாசலைத் திறந்தவுடன் சின்னஞ்சிறியவன் ஓடி வந்தான். "அம்மா வரல்லியா?"
இவ்வளவு விரைவில் மறந்துவிட்டானோ? டாக்ஸியில் ஏற்றிவைத்த உடல் தானாக வீடுதிரும்பும் என எண்ணியிருப்பானோ
மகனின் கை பற்றி அடுப்படிக்கு நடந்தார்.
"உண்ணீ..." கூப்பிட்டார்.
"என்ன அச்சா?" உண்ணி அடுப்படிக்கு வந்தான்.
"பாலன் உறங்கிட்டான்."
"சரி. நீங்க ஏதாவது கழித்தாச்சா?"
"இல்ல."
அடுப்படி மேடைமீது மூடி வைத்திருந்த பாத்திரங்களின் தட்டுகளை நீக்கிப் பார்த்தார். சப்பாத்தி, சோறு, உருளைப்பொரியல், வறுவல், தயிர் என்று அவள் தயார் செய்துவைத்திருந்த சாப்பாடு. கண்ணாடிப்பாத்திரமதில் அவள் பிள்ளைகளுக்காக அவ்வப்போது செய்யும் நெய்ப்பாயசமும்.
வேண்டாம். இதைக் கழிக்கக்கூடாது. சாவு தீண்டியது. 
"ஆறிப்போச்சில்ல இது. கொஞ்சமா உப்புமா வைச்சுத் தர்றேன்." என்றார்.
"அச்சா." உண்ணியின் குரல்தான்.
"ம்."
"அம்மா எப்ப வருவாங்க? அம்மாவுக்கு இன்னும் சரியாகல்லியா?"
உண்மை இன்னும் ஒருநாள் பொறுக்கட்டும் என நினைத்தார். இன்றிரவு இந்தப்பிள்ளையை அழ வைப்பதில் பொருளில்லை...
"அம்மா வருவாங்க" என்றார்.
கழுவிய கிண்ணங்களைத் தரையில் வைத்தார். இரண்டு கிண்ணங்கள்.
"பாலனை எழுப்பவேண்டாம். உறங்கட்டும்." என்றார்.
"அச்சா, நெய்ப்பாயாசம்!" என்றான் ராஜன் பரபரப்புடன். தன் சுட்டுவிரலை அதற்குள் அமிழ்த்தினான்.
இவர் மனைவி எப்போதும் அமரும் மரப்பலகையில் அமர்ந்தான்.
"உண்ணி, நீயே ஊத்திக்கொடேன். அச்சனுக்கு முடியல. தலைவலி."
கழிக்கட்டும் அவர்கள். அவள் கைச்சமையல் அவர்களுக்கு இனி எப்போதும் கிடைக்காதல்லவா.
பிள்ளைகள் பாயசம் அருந்தினர். அசையாமல் அவர்களைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தார்.
கொஞ்ச நேரமான பிறகு கேட்டார்.
"சோறு வேண்டாமோ உண்ணி?"
"வேணாம். பாயாசம்தான் வேணும். ரொம்ப நல்லாருக்கு."
சந்தோஷத்துடன் கூறினான் ராஜன். "ஆமாப்பா. அம்மா நெய்ப்பாயாசம் பிரமாதமா செஞ்சிருக்காங்க."
எழுந்து சட்டெனச் சென்றார் குளியலறை நோக்கி.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
31.5.09
மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு அஞ்சலி
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(261)
-
►
12
(11)
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 3
- க்ஹஸர் அகராதியின் வரலாறு - மிலோராத் பாவிச்
- சாவில் தொடங்கும் பிறிதான வாழ்வு - பாவிச் மறைவு
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 2
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 1
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 2
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 1
- கண்ணாடியில் தெறிக்கும் கொலைச்செயல்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 3 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- போபால்: கால் நூற்றாண்டுக்காலக் குற்றம்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 2 - ஆர்தர் ஸி. க்ளர்க்
-
►
11
(8)
- அகர முதல எழுத்தெல்லாம்? - 1 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- கிழவியின் விரக்தி - ஷார்ல் போதலேர்
- அந்நியன் - ஷார்ல் போதலேர்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 5 - மரிலின் க்ரிஸ்ல்
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- ஃப்ரெஞ்சு அறிஞர் க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ் மறைவு!
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
▼
05
(17)
- மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு ...
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்ட...
- ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
- மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை
- சரண்-பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகள் என்னிடம் கோ...
- இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்.....
- உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்
- கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
- குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
- ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா
- எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
- இன்றைய கொடூரத்திலிருந்து உருவாகும் தமிழ்-உண்மை - த...
- அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
- முகாம் என்பது யாது? - 2 - அகம்பென்
- பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்
- தூதுவர் - ஸில்வியா ப்ளாத்
-
►
12
(11)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (181)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (27)
- அணுசக்தி (10)
- அறிவியல் (45)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (56)
- உரைமொழி (13)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (170)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (177)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழியல் (21)
- செயல் (86)
- ஜெர்மன் (9)
- திரை (30)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (10)
- நடனம் (2)
- நட்பு (17)
- நிகழ்வு (6)
- நேர்காணல் (14)
- பயணம் (11)
- போதலேர் (41)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (7)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (31)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (52)
- லண்டன் (11)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (9)
- வரலாறு (168)
- வரைமொழி (120)
- வானொலி (3)
- விழியின் கதை (9)
- ஸில்வியா (37)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸெர் (2)
- ஸ்பானிஷ் (28)
15 கருத்துகள்:
மோட்டார் சைக்கிள் பற்றி நீங்கள் எழுதியுள்ள இடத்தை மிகவும் ரசித்தேன். மோட்டார் சைக்கிள் ஒட்டும் போது அது நம் உடல் போல் ஆகிவிடும் தருணங்கள் மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள். இதைப்பற்றி
தஸ்தாவெய்ஸ்கியின் புத்தக சாலை என்ற கதையில் அல்லது அடிகுறிப்பு என்று கூட சொல்லலாம் , அதில் எழுதி பார்த்தேன். நீங்கள் விரும்பினால் வாசித்து பார்க்கலாம்.
குமுதத்தில் என்று நினைக்கிறேன், மாதவிக்குட்டியின் 'என் கதை' தொடராக வந்திருந்தது. தமிழாக்கியவர் பெயர் நினைவில்லை. என் சிறுவயதில், எங்கள் கடைக்கு பைண்ட் செய்யப்பட்ட பழைய புத்தகமாக வந்தது அத்தொடர். அதிகம் புரியாத, சற்றே அதிர்ச்சியும், சிறிது கிளர்ச்சியுமூட்டுவதாக அதை நான் அப்போது உணர்ந்ததாக நினைவு. மீண்டும் படிக்க வேண்டும்.
பின்பு அவர் இஸ்லாமில் ஒன்றியதை சற்றே கிண்டலுடன் வாசிக்க வைத்தது என் பொதுப்புத்தி. பின்னர் இன்னும் சில சிறுகதைகளையும், அவரைப் பற்றிய கட்டுரைகளையும் வாசித்தேன் என்பது தவிர வேறு நினைவில்லை. ஆயினும், என் மனதில் அவர் குறித்த மதிப்பு உயர்ந்தது மட்டும் நிச்சயம்.
உங்களிடம் ஒரு கேள்வி. ஏன் 'கழிப்பது' என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கிறீர்கள்?
மாதவிக்குட்டி அவர்களின் கதைகளை வாசித்திருக்கிறேன், அவரை ஆண்டாளாகவே பார்க்கிறேன். அவருக்கு என் அஞ்சலிகள்.
நெய்ப்பாயசம் கதையின் இன்னொரு தமிழாக்கம் - இணையத்தில் தேடியபோது கிடைத்தது. செய்தவர் எம். குருமூர்த்தி. வாசித்து ஒப்பிடலாம்.
சர்வோத்தமன் - வாசித்துப் பார்த்தேன். இதை இன்னும் நீட்டலாம். ஹூலியோ கொர்த்தஸாரின் The Night Face Up என்ற கதையை வாசிக்கவும். இதை நான் தமிழாக்கிப் பார்த்தேன். வெளியிடவில்லை. திருப்தி ஏற்படாததே காரணம். இன்னொரு விஷயம் - எழுதும்போது ஒற்று மிகும் இடங்களை மனதில் கொள்க - அதாவது க். ச். ப், ற் எங்கே வரவேண்டும் என்பதை உணர்க.
வித்யாசாகரன் - மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு உள்ளிட்ட மொழிகள் தமிழில் வழக்கொழிந்த சில சொற்களைப் புழக்கத்தில் வைத்திருக்கின்றன. இவற்றை இடம்பார்த்துப் பாவிப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் சாவுத்தீட்டைக் கழிக்கும் இடமாக இருப்பது என்பதால் இந்தச் சொல்லைப் பாவித்திருக்கிறேன். அதாவது ஒவ்வொரு முறை உண்ணும்போதும் யாருடைய சாவுத்தீட்டையோ கழிக்கிறோம் என்ற பிரபஞ்ச உணர்வைக் (குற்ற உணர்வு அல்ல) குறிப்பதாக அமையும் சொல் இது. கிறித்தவத்தில் இறுதி ராப்போசனத்தை இப்படியாகப் பொருள்கொள்ள முடியும்.
எம். குருமூர்த்தியின் தமிழாக்கத்தை வாசியுங்கள். "சாவு தீண்டிய சாப்பாடு" என்ற இடம்வரை வந்திருக்கிறார்.
சாவுத்தீட்டைக் கழிப்பது முக்கியம் என்றுணரும் அச்சன், தாம் உண்ணாமல் இருந்தாலும் தம் குழந்தைகளுக்கு வேறொரு தர்க்கத்தை அனுமதிக்கிறார். அதுவும் டாக்டராக வேண்டிய பாலன் என்ற அகன்ற நெற்றி கொண்ட பிள்ளைக்குக் கிட்டவில்லை. காரணம் அவன் உறங்கியிருக்கிறான். சின்னஞ்சிறுவன் உறங்காமலிருக்க, மூத்தவனை அம்மா துயிலொழியச்செய்வாள் என்பதற்கான வாக்கியம் மந்திர உச்சாடனமாக வருகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். பள்ளியெழுச்சியைப் பதிலிசெய்யும் வாக்கியம் என்பதையும் தான்..
நாகர்ஜூனன்,
ஒரு அருமையான கதையை நினைவூட்டுகிறீர்கள்.(கொர்த்தஸாரின் The Night Face Up என்ற கதையை ). யதார்த்தமும்,கனவும் ஒரு labyrinth ஆக மிகச்சிறப்பாக கொர்த்தசார் தன் புனைவில் கொண்டுவந்திருப்பார். ஜென் கதை போல், ஜென் மாஸ்டர் தன் கனவில் பட்டாம்பூச்சியாக மாறி, இறுதியில், கனவு காண்பது பட்டாம்பூச்சியா அல்லது தானா என்ற inbetween illusion and reality தன்மை இந்த கதையை படிக்கும்போது வரும். இதைப்பபற்றியும் மற்றும் கொர்த்தஸாரின் AXOLOTL, MEETING கதைகளை நாம் உங்கள் வீட்டில் வைத்து விவாதித்தது எனக்கு நினைவு இருக்கிறது. MEETING கதையில் ஒரு dulaity உத்தியை கையாண்டிருப்பார்( CHE Vs Cortazar ). இந்த கதையின் ஆரம்பத்தில், ஒருவன் மரத்தின் மேல் சாய்ந்து கொளரவமான சாவை எதிர்பார்ப்பதை jack london சிறுகதையிலிருந்து மேற்க்கோள் காட்டிருப்பார். பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது, இந்த கதைதான் என் நினைவுக்கு வந்தது.
அவரின் இழப்பு அத்துடன் இந்தக்கதை எல்லாமே கண்களில் நீரை வரவழைத்துவிட்டது
கேரளா சென்றால் எப்பாடியாவது அவரை சந்திக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன் ..அவருக்கு என் அஞ்சலி
ஆண்டாளின் பாசுரத்தோடு இந்தக்கதையை நீங்கள் தொடர்புறுத்தியது ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமான கதை. இது என்னுடைய கருத்து.
நாகார்ஜுனன்,
விளக்கத்திற்கு நன்றி!
நான் கவனிக்கத் தவறிய, எத்தனை முயன்றாலும் கவனித்திருக்க வாய்ப்பில்லாத பலவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கும்.
குருமூர்த்தி அவர்களின் தமிழாக்கத்தையும் வாசித்தேன். நீங்கள் இருவரும் தேர்வு செய்துள்ள தமிழ்ச் சொற்களின் ஒற்றுமை, வேற்றுமையில் மனது செல்கிறது.
நிரம்பவும் துருவிக் கேட்கிறேன் என்று எண்ணாவிடில், 'சாவு தீண்டிய உணவு' என்பதன் மலையாள மூலம் என்னவாக இருந்தது என்று சொல்லுங்களேன்.
அதை நீங்களே தேடிக் கண்டறிய விட்டுவிடுகிறேன்..
:)
நான் தேடிப் பார்த்திருக்க வேண்டிய ஒன்றை உங்களிடம் கேட்டு விட்டேனோ என்று எனக்கும் இன்று தோன்றியது. அதற்கேற்றவாறு உங்கள் பதிலும். நன்றி.
தங்களது இப்பதிவை மேற்கோளுக்காக எனது பதிவில் எடுத்தாள அனுமதி கோருகிறேன்.
தயவு கூர்ந்து அனுமது தருக!
நன்றி
கமலாதாஸின் கவிதைகள் நான் கல்லூரிக் காலங்களில் வாசித்தும், அப்பொழுது ஆங்கிலம் வழி தமிழில் மொழி பெயர்க்கவும் முயன்றிருக்கிறேன். நாங்கள் நடத்திய அந்தக்கால உருட்டச்சு இதழ்களில் (ஸ்டென்சில் மேகசைன்) சில கவிதைகளையும் வெளியிட்டதாக நினைவு உள்ளது. அதன்பின் பல சர்ச்சைகளில் சிக்கினார், இஸ்லாமில் இணைந்தது உட்பட. ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவரது மரணத்திற்கு எனது அஞ்சலியை இங்கு பதியவைக்கிறேன்.
மேற்கோளிட்டு எழுதலாம்.
நன்றி, எழுத்துப் பிழைகள் அதிகம் தான். மாற்ற முயற்சி செய்ய வேண்டும். The Night Face up கதையை நிறைய முறை வாசித்தேன். பெரிய வித்தைகாரர் போல தெரிகிறார்.
-------------
இது போன்ற ஒரு மோட்டார் சைக்கிள் பயணியால் ராஜமார்த்தாண்டன் இறந்து விட்டார். புதுமைப்பித்தனும் கயிற்றரவும் புத்தகத்தில் புதுமைப்பித்தனுக்காக பெரிய அளவில் வாதாடியிருப்பார். அதில் புதுமைப்பித்தன் மீது அவருக்கு இருந்த மோகம் தெரிந்தது. என்னை அது வசீகரித்தது.அங்கீகாரங்களற்ற அர்ப்பணிப்புகள். உயிர் எழுத்து அவர் வாழும் காலத்திலேயே அவருக்கு இதழ் கொண்டுவந்ததும் , அறுபது வயதையோட்டி அவருக்கு எடுக்கப்பட்ட விழாவும் அவருக்கு சற்று மனநிறைவுயை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.என் அஞ்சலி.
La noche boca arriba - இரவு முகம் மேலே என்ற இந்தக்கதையைத் தமிழாக்கி வெளியிட்டாயிற்று. வாசிக்கலாம்.
Post a Comment