குறிப்பு: இலங்கைப்படுகொலைகள் குறித்து இங்கே லண்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் இதழில் அந்த நாளிதழின் நிருபர் மேரி கொல்வின் இன்று எழுதியிருக்கும் ஆங்கிலக்கட்டுரை, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எனவே இங்கே அதைத் தமிழாக்கித் தந்திருக்கிறேன்.
2001-ஆம் ஆண்டு வன்னிப்பகுதிக்கு ரகசியமாய்ச் சென்ற மேரி கொல்வின் இலங்கை ராணுவத்தின் கிரனேட் தாக்குதலுக்கு ஆட்பட்டு ஒரு கண்ணை இழந்தவர். ஈராக் உள்ளிட்ட போர்க்களங்களுக்கு நிருபராகச் சென்றவர்:
----------------------------------------------------------------------------------------
கடந்த ஞாயிற்றுக்கிழமை - மே பதினேழாம் நாள் இரவு எனக்கு வந்தது, அந்தத் தொலைபேசி அழைப்பு. இறுதிக்கட்டத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரின் அழைப்பு. ஆனால் குரலை வைத்துப் பார்க்கும்போது அடுத்த சில மணி நேரத்தில் சாகப்போகிற ஒருவர் செய்த அழைப்பாகத் தெரியவில்லை.
பேசியவர், விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன். இவர் வேறேதும் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவே எனக்குப் பட்டது. இவர் என்னிடம் கூறினார்:
"எம் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்."
இலங்கையின் வடகிழக்கில் காடும் கடற்கரையும் சந்திக்கும் இடத்தில் நடக்கும் இறுதிக்கட்டப்போரில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இறுதித் துண்டுநிலத்திலிருந்து தம்முடைய செய்மதித் தொலைபேசி மூலம் என்னிடம் இதைத் தெரிவித்தார் நடேசன்.
பின்னணியில் எந்திரத்துப்பாக்கி வேட்டுச்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் கலவரமேதும் அடையாமல் நடேசன் தொடர்ந்து கூறினார்.
எங்கள் பாதுகாப்பு தொடர்பான உத்திரவாதத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் மற்றும் பிரிட்டிஷ் அரசிடமிருந்து பெற விழைகிறோம். அத்தகைய உத்திரவாதம் கிட்டுமா?
இலங்கையில் சிங்கள ராணுவம்-விடுதலைப்புலிகள் இடையே இருபத்தாறு ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப்போரில் வெற்றியடைய இருக்கும் ராணுவத்திடம் சரண் அடைவது அந்தப்போரிலேயே மிக அபாயமான கட்டமாக இருக்கும் என்பதை நன்கறிந்தவராக இருந்தார் நடேசன்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு எட்டாண்டுகள் முன்பு நான் ரகசியமாய்க் கூட்டிச்செல்லப்பட்ட காலத்திலிருந்து நடேசன் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் சமாதானத்துறைப் பொறுப்பாளர் புலித்தேவன் இருவரையும் அறிவேன். அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு இவர்கள் வசமிருந்தது. ஆனால் இப்போதோ, எஞ்சியிருக்கும் சுமார் முன்னூறு போராளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் உயிர்களைக் காப்பாற்ற இவர்கள் முயல்கிறார்கள்! இவர்கள் பலர் காயமடைந்தோர். இவர்களுடன் பல ஆயிரக்கணக்கான மக்களும் இந்தப்போரில் சிக்கியிருக்கிறார்கள். தொடர்ந்த குண்டுவீச்சைத் தாங்க வேண்டி, கையால் தோண்டப்பட்ட பதுங்குகுழிகளில் மறைந்து இப்படிச் சிக்கியிருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பைத் தோற்கடிக்கும் நோக்கில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றுவரும் இந்நேரத்தில், இறுதித்துண்டுநிலத்தின் மீது ராணுவம் தாக்குதல் நடத்தும்போது, விடுதலைப்புலிகள் தலைமை-ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கிடையில் பேச்சுவார்த்தை பரிமாறிக்கொள்ளும் பணியைப் பல நாட்களாகவே நான் செய்துவந்தேன்.
ஐக்கிய நாடுகள் மன்றத்திடம் மூன்று விடயங்களைத் தெரிவிக்குமாறு நடேசன் என்னிடம் கேட்டுக்கொண்டார்:
1. ஆயுதங்களைக் கீழே வைக்கத் தாங்கள் தயார்;
2. தங்கள் பாதுகாப்புக்கென அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசுகளிடமிருந்து உத்திரவாதம் தேவை;
3. இலங்கை அரசு தமிழ்ச்சிறுபான்மையினருக்கான உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கில் ஒரு அரசியல் பாதையை ஏற்கும் என்ற உறுதிமொழியும் தேவை.
பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் வழி, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் செயலாளர்-நாயகம் பன்-கி-மூன் அலுவலகத்தின் தலைமை அதிகாரியும் அவருடைய விசேடத்தூதராகக் கொழும்பு சென்றிருப்பவருமான விஜய் நம்பியாரைத் தொடர்புகொண்டேன். விடுதலைப்புலிகள் ஆயுதக்களைவு பற்றி முன்வைத்த நிபந்தனைகளை அவரிடம் தெரிவித்தேன். அவற்றை இலங்கை அரசிடம் தெரிவிப்பதாக விஜய் நம்பியார் என்னிடம் கூறினார்.
ஆக, சமாதானம் ஏற்படலாம் என்ற நம்பிக்கை பிறக்கத்தொடங்கியது. கண்ணாடி அணிந்தவரும் எப்போதும் நகைச்சுவையாகக் கதைக்கக்கூடியவருமான புலித்தேவன், பங்கரில் இருந்தவாறே தாம் சிரிக்கிற ஒரு புகைப்படத்தை என் கைத்தொலைபேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தார்.
ஆனால் ஞாயிறு பின்னிரவு ராணுவத்தாக்குதல் உக்கிரமடையத் தொடங்கியது. அதற்குப் பிறகு விடுதலைப்புலிகள் தரப்பிடமிருந்து அரசியல் கோரிக்கைகள் ஏதுமில்லை. புகைப்படங்கள் வரவுமில்லை. நடேசன் என்னை அழைத்தபோது சரண் என்ற சொல்லைப் பாவிக்க மறுத்துவிட்டார், ஆனால் அவர் முன்வைத்தது அதைத்தான். விடுதலைப்புலிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய விஜய் நம்பியார் அங்கு களத்தில் இருக்க வேண்டும் என்றார்.
நியூயார்க் நகரில் நாள் முழுதும் ஓய்வற்று இயங்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அலுவலகத்தை மீண்டும் தொடர்பு கொண்டேன். அந்த அலுவலகம் மீண்டும் விஜய் நம்பியாரிடம் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது. கொழும்பில் உறக்கத்தில் இருந்த விஜய் நம்பியாரைக் அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுப்பிப் பேசினேன்.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன். இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சே தம்மிடம் உறுதிகூறியிருக்கிறார், நடேசனும் புலித்தேவனும் பாதுகாப்பாக சரணடையலாம் என்று தம்மிடம் உறுதிகூறியிருக்கிறார் என்று என்னிடம் தெரிவித்தார் விஜய் நம்பியார். அவர்கள் வெள்ளைக்கொடியை உயரே ஏந்திவந்தால் போதும் என்று என்னிடம் மேலும் கூறினார்.
"சரணடைவதைக் காண நீங்கள் அங்கே போக வேண்டாமா?" என்று விஜய் நம்பியாரிடம் கேட்டேன். அவர், "தேவையில்லை, இலங்கை அதிபரின் உறுதிமொழிகள் போதும்" என்று என்னிடம் கூறினார்.
இங்கே லண்டனில் அப்போது ஞாயிறு பின்னிரவு இன்னும் கழியவில்லை. நடேசனின் செய்மதித் தொலைபேசியை அழைக்க முயற்சித்தேன். பிறகு தென்னாப்பிரிக்காவில் உள்ள விடுதலைப்புலிகள் தொடர்பாளரை அழைத்து விஜய் நம்பியாரின் இந்தச்செய்தியை விடுதலைப்புலிகளிடம் தெரிவிக்குமாறு கூறினேன். வெள்ளைக்கொடியை உயர ஏந்திச்செல்லுங்கள் என்பதுதான் அந்தச்செய்தி.
அதிகாலை ஐந்துமணிக்கு தொலைபேசி அழைத்து எழுந்தேன். தென்கிழக்காசியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் இன்னொரு தொடர்பாளர் என்னிடம் பேசினார். நடேசனிடம் பேச முடியவில்லை. எல்லாம் முடிந்து விட்டது. அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள் என்றார்.
அன்று மாலை அவர்கள் உடல்களை இலங்கை ராணுவம் காட்டியது. சரணடையும் முயற்சி எங்கே, எப்படி, ஏன் தவறிப்போனது? இந்தக்கேள்விக்கான விடை எனக்கு உடன் கிட்டியது.
நடேசன் என்னை அழைத்த அதே ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன் சந்திரநேருவையும் அழைத்திருக்கிறார். அவர் இலங்கை அதிபர் ராஜபட்சேவிடம் தொடர்புகொண்டிருக்கிறார். அடுத்த சில மணி நேரத்தில் நடந்தவை பற்றி ரோஹன் என்னிடம் தெரிவித்தார்:
"நடேசன் மற்றும் அவர் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பை நான் உறுதிசெய்கிறேன் என்று இலங்கை அதிபர் என்னிடம் கூறினார். தம்முடன் சுமார் முன்னூறு பேர் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் காயம்பட்டவர்கள் என்று நடேசன் என்னிடம் தெரிவித்தார். சரி, நான் அங்கே சென்று அந்தச் சரண் நடவடிக்கையை எதிர்கொள்கிறேன் என்று இலங்கை அதிபரிடம் தெரிவித்தேன். இலங்கை அதிபர், மாறாக, என்னிடம், 'நம் ராணுவம் கட்டுப்பாடு கொண்டது, கண்ணியமானது. போர்க்களத்துக்கு நீங்கள் செல்ல வேண்டாம். நீங்கள் அபாயத்தில் சிக்க வேண்டாம்’ என்றார்."
இலங்கை அதிபரின் சகோதரர் பாசில் ராஜபட்சேவும் தம்மிடம் தொலைபேசியதாக ரோஹன் தெரிவித்தார்: "‘அவர்கள் பாதுகாப்பு நிச்சயம். வெள்ளைக்கொடி ஏந்திவந்தால் போதும்’ என்ற பாசில் அவர்கள் வரவேண்டிய வழியையும் என்னிடம் தெரிவித்தார்."
ரோஹன் நடேசனைத் தொடர்புகொண்டபோது திங்கட்கிழமை அதிகாலை மணி ஆறு இருபது. துப்பாக்கிச்சத்தம் மேலும் பலமாகக் கேட்டது.
"’நாங்க தயார். வெளியே வந்து வெள்ளைக்கொடியை ஏந்தப்போறன் நான்’ என்றார் நடேசன்.
’அண்ணை, உயர ஏந்திப்போங்கோ, அவர்கள் அதைப் பாக்கோணுமாம். சாயங்காலம் நான் வந்து உங்களைப் பார்க்கறன்’ என்றேன் நான்."
கொலைக்களத்திலிருந்து எப்படியோ தப்பிய தமிழர் ஒருவர் அங்கே என்ன நடந்தது என்பதைத் தெரிவித்திருக்கிறார். நிவாரணப்பணியாளர் ஒருவரிடம் இவர் பேசியிருக்கிறார். நடேசனும் புலித்தேவனும் வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கை ராணுவத்தின் முன் அரண்களை நோக்கி நடந்தனர். அவர்களுடன் சுமார் பத்துப்பன்னிரண்டு பேர் ஆண்களும் பெண்களுமாகச் சென்றனர். ராணுவம் அவர்களை நோக்கி எந்திரத்துப்பாக்கியால் சுடத் தொடங்கியது என்கிறார் இவர்.
நடேசனின் மனைவி (விஜிதா) சிங்களப்பெண்மணி. சிங்கள மொழியில் அவர் படையினரைப் பார்த்துக் கூக்குரலிட்டார். "சரணடைய வரும் இவர்களை நீங்கள் சுடக்கூடாது" என்று ஓலமிட்டார். இவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தக்குழுவில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டார்கள். இந்தச்செய்தியைத் தெரிவித்த தமிழர் தலைமறைவாக இருக்கிறார். இவர் உயிருக்குப் பேரபாயம். அதேபோல ரோஹன் சந்திரநேருவின் உயிருக்கும் அச்சுறுத்தல். இலங்கை அதிபரும் அவர் சகோதரரும்தாம் அச்சுறுத்தலை விடுத்திருக்கிறார்கள். ரோஹன் நாட்டைவிட்டுத் தப்பிவிட்டார்.
தவிர, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் விசேடத்தூதராகப் பணியாற்றும் விஜய் நம்பியார் குறித்தும் ஐயங்கள் கடந்த சில நாட்களாக எழுந்தவண்ணம் உள்ளன. இவர் சகோதரர், சதீஷ் நம்பியார், 2002-ஆம் ஆண்டு முதல் இலங்கை ராணுவத்திடம் ஊதியம் வாங்கும் ஆலோசகராகப் பணியாற்றுபவர்; தவிர, இலங்கை ராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பெரும் ராணுவத்தலைவர் என்று பாராட்டையும் வழங்கி எழுதியிருப்பவர்.
விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொறுத்தவரை, தற்கொலைக்குண்டுவீச்சு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அமைப்பு என்பதால் அந்த அமைப்பைப் பல நாடுகள் தடை செய்திருக்கின்றன. அதேவேளை நடேசனும் புலித்தேவனும் அரசியல் தீர்வை விழைந்தவர்கள். அவர்கள் உயிரோடிருந்தால், தமிழ்ச்சிறுபான்மையினரில் அரசியல் தலைமையை ஏற்போராக இருந்திருப்பார்கள்.
படங்கள்: ஈராக்கில் மேரி கொல்வின், எரிக் சொல்ஹைமுடன் நடேசன்.
குறிப்பு: வெள்ளைக்கொடி ஏந்திச்சென்று சுடப்பட்டவர்களான நடேசன், புலித்தேவன் இருவரையும் நடேசன் மனைவி விஜிதா அவர்களையும் பத்திரிகைக்காரன் என்ற முறையில் அறிந்தவன் நான். எண்பதுகளின் இடைப்பகுதியில் சென்னையில் வசித்த பல்வேறு ஈழப்போராளிக்குழுத் தலைவர்களைப் போல நடேசனும் என் இல்லத்துக்கு வந்திருக்கிறார். மருத்துவரான என் தந்தையாரிடம் அப்போது கண் பார்வைப் பரிசோதனை செய்துகொண்டார். இந்தவகையில் நடேசன், புலித்தேவன் ஆகியோர் எத்தனையோ தவறுகளைச் செய்திருந்தாலும் அவர்களுக்கு என் அஞ்சலி. - நாகார்ஜுனன்.
4 கருத்துகள்:
பல விமர்சனங்களோடும் விடுத்லைப்புலிகளின் போராட்டத்தையும், இதுவரை,இப்போ இறந்த போராளிகளின் மரணத்தையும் என்னால் குறைத்து மதிப்பிட முடியவில்லை, அதற்க்கான காரணங்கள் பல உண்டு ...இறந்த போராளிகளுக்கு என் அஞ்சலியையும்
என் மன நிம்மதிக்காக இதனூடே தெரிவித்துக்கொள்கிறேன்..
இந்தியா என்றுமட்டுமல்லாமல், உலகில் எப்போதும் மண்மேல் தோன்றிய எந்த அரசாங்கமும் மானுட அறத்தை மட்டும் முன்னுறுத்தி ஆட்சி செய்திருக்கவில்லை.இதுவே வரலாறு நமக்கு தரும் உண்மை. இந்தியாவில் இருக்கும் இதழாளர்கள் அவசியம் தங்களையே கேள்விகேட்டுக்கொள்ள வேண்டிய தருணம்.
முன்னொரு காலத்தில் யுத்தம் இருந்தது - மகிந்த மாத்தய எங்கள் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அரசு என்பது ஆசிரமம் நடத்திக்கொண்டிருக்கும் அமைப்போ
தேர்தல்களை நடத்தி உறுப்பினர்கள் மந்திரிகள் முதன்மந்திரி உள்ளிட்ட நாடாளுமன்ற அமைப்புமுறை மூலமாக மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அமைப்போ அல்ல எனப் பட்டுணர்ந்துள்ளோம்.
பொலிஸ்-இராணுவம்-நீதிமன்றம்- சிறைச்சாலை இவற்றால் ஆனதுதான் அரசு-இயந்திரமென்ற அரசறிவியலுக்கு அப்பால் அரசு
சமகாலத்தில் எப்படித்தொழிற்படும் என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணமும் சர்வதேசம், உலக ஒழுங்கு எப்படி இருக்கின்றது என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் நாம் நமது இலங்கை அரசைக்கேள்விக்கிடமின்றி சிறப்புதாரணம் கொள்ளமுடியும்.
அதே நேரத்தில் விடுதலைப்போராட்டம் என்பதன் பேரால் எப்படியான கொடூரங்களும் பயங்கரங்களும் உச்சபட்சமாக நிகழ்த்த முடியும் என்பதற்கும் இந்த உலகத்தின் புத்தாயிரத்தின் தொடக்கத்தில் புதிய தசாப்தத்தில் நடந்துமுடிந்த நிகழ்வுகள் நமக்கு முன்னால் அள்ளிநிறைந்து கிடக்கின்றன.
போர் முடியும் என எல்லோரிடமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருந்த போதிலும் நல்லமாதிரி முடியவேண்டுமென இருந்த அசட்டு நம்பிக்கை அபத்தமாக அவலச்சுவையுடன் முடிந்துள்ளது. இப்பேரழிவின் சுழலிலிருந்து கிழக்கு மாகாணம் தன்னை மிகவும் புத்திசாலித்தனமாக விடுவித்துக்கொண்டிருக்கிறது.
யுத்தத்திற்குப்பிறகான காலம் குறித்து புகலிடக்கவிதை ஒன்று இப்படிச்சொல்கிறது. "இறக்கப்பிறந்தவனைச் சாகப்பண்ணி.... அதற்கொரு காரணம் சொல்லி கைதட்டுக்கேட்கும் காலம் அகன்றிருக்கும்.."
இந்தப்போரிலே ஈடுபட்டுத் தப்பியோடியவர்களுக்குத்தான் தெரியும் அதன் பயங்கரங்களும் அவலங்களும். நம் மாவீரர் குடும்பங்கள் இனி எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதை எழுதாமல் இருப்பது அவர்கள் மரணங்களைக் கொச்சைப்படுத்தாமல் இருக்க உதவும்.
தியாகிகள்-துரோகிகள் எனப் பிளவுபடுத்தப்பட்ட சமூகவகைப்படுத்தலிலிருந்து
இந்தப்போர்முடிவு மாபெரும் விடுதலையை அழித்திருக்கிறது.
இந்தவகையில் மகிந்த மாத்தயா எம் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள். அகதிமுகாம்களுக்கு தமிழரசியற்தலைவர்களின் பெயரைச்சூட்டிய உங்கள் நுண்ணுணர்விற்காக சிறப்பு மரியாதையையும் ஏற்றுக்கொள்ளுங்கள். சிங்கள சினிமா மட்டுமல்ல சிங்கள அரசியலும் உலகத்தரம் வாய்ந்தது என மாத்தையா நீங்கள் நிறுவியிருக்கிறீர்கள்.
தேசியப்பெருமிதங்களும் இனப்பெருமைகளும் எங்குதானில்லை?
இனம்-மொழி-தேசம்-தன்னாட்சி- சுயநிர்ணய உரிமை-விடுதலை-உரிமை-சுதந்திரம்- இவற்றுக்கு எதிர்மறையான அர்த்தங்களை வழங்கியதென்றவகையில் மோசமான முன்னுதாரணமாகவும் சர்வதேச போராட்ட சக்திகளுக்கும் எதிர்ப்பியக்கங்களுக்கும் குழப்பத்தையும் நம்பிக்கையீனத்தையும் எச்சரிக்கையையும் வழங்கியிருக்கிறோம்.
இந்த முப்பதாண்டுகாலத்தில் இந்தப்போரிற்கான எதிர்ப்பில் இந்த யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என மிகவும் மெலிதான ஈனஸ்வரத்தில் ஒலித்த, எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த போர்-எதிர்ப்புப் போராளிகளுக்கு இந்த போர்முடிவு கசப்பான, வெறுமையான, வேதனையான துயர்மிகுந்த, வெறுத்துப்போன மனநிலையை அளிக்கிறது.
"இந்த அராஜக யுத்தங்கள் நாகரீக சமுதாயத்தின் நல்விழுமியங்கள் அனைத்தையும் தடயமே இல்லாமல் குழிதோண்டிப்புதைத்தன" "என சிங்கள சமூகத்தின் புரட்சியாளரான தயபால திராணகம 1990-ஆம் "துப்பாக்கிக்கலாசாரத்திலிருந்து மீள்வது எப்போது?" என்ற தம் கட்டுரையில் நம் புகலிட சஞ்சிகையில் குறிப்பிடுகிறார்.
"செம்மனச்செல்வி சிவபெருமானுக்கு அடித்த அடி ஏன் எல்லா உயிர்கள்மேலும் படவேண்டும். அடிக்க ஒருபிரம்பு இருந்ததால்.." என்ற நியாயமான கேள்வியிலிருந்து "ஆயுதங்களை வீசி எறிவோம் கடலுக்குள்...." என்பதுவரை போர்-எதிர்ப்பில் இலக்கிய முகம் எதிர்ப்பு இலக்கியமாகவே இருக்கிறது.
துப்பாக்கிகளின் பேரைச்சொல்வதே கெளவரமாகிப்போன தேசத்தில் மானுடத்தை யார் மதித்தார்....என கவிதை மானுட மேன்மைக்காக அழுதிருக்கிறது.
அறம் ஆன்மீகம் சகோதரத்துவம் அன்பு கருணை பரிவு நேசம் இவற்றுக்கும் சக மனிதரை மதித்தல் என்ற பக்குவத்துக்கும் இனி தமிழ்ச்சமூகம் தயாராக வேண்டியுள்ளது.
றஞ்சினி,
எல்.ரி.ரி.ஈ. போன்ற ஒரு - அழித்தல் அல்லது அழிந்துபடுதல் அன்றி வேறொன்றறியாத - தலைமையும், அவர்களை வளர்த்துச் சமூகத்தையே அழித்துச் சிதைத்ததுக்காக இப்போதும் எந்தவிதக் குற்றவுணர்வோ கூச்சமோ அடையாமல் அந்த ஹீரோக்களை இழந்ததுக்காக வருந்தும் உலகத்தமிழர்களும் பிறந்த இந்தச் சமூகத்தில் பிறந்துவிட்டதற்காக நானும்தான் வெட்கப்படுகிறேன். என்ன செய்வது றஞ்சினி?
ராஜபக்சேக்கள் குறித்து என் சிங்கள நண்பரும் இப்படி ஒரு வெட்கத்தைச் சொன்னார். எங்களெல்லோரையும் நினைத்து எனக்கு வெட்கமோ வெட்கமாகிவிட்டது.
‘அதிகமதிகம் துன்புற்றவர்கள் நாமே’ என்பதையே தம் நினைவில் எப்போதும் கொண்டிருப்பதால்தான் பெரும்பான்மை இஸ்ரேலியர்களும் இப்படி ஆகியிருக்கக் கூடுமோ றஞ்சினி?
நட்புடன், தருண்யன்
Post a Comment