கடந்த எட்டு மாதக்காலமாக நம்மைச் சூழ்ந்துவந்த அச்சம் நிஜமாகும் பயங்கரச் சூழலை, நெருக்கடியை இன்று சந்திக்கிறோம்.
தெற்காசியப் பிராந்தியத்தின் அண்மை வரலாற்றில் மிகப்பெரும் மனித-இனப்படுகொலையை நடத்தியிருப்பது இலங்கை அரசு. மொத்த மனித இனமும் நின்று காணக்காண, இந்தப் பாதகச்செயலை நடத்தியிருக்கிறது இலங்கை அரசு. நடந்தவற்றைப் பார்க்கும்போது தமிழ்மக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்பில் பதினைந்தாயிரம் பேர் வரை பலியாகியிருக்கலாம் என்றும் பதினைந்தாயிரம் பேர் வரை காயம், படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. தவிர, ஆறாயிரம் இலங்கைப்படையினர் வரை பலியாகியிருக்கலாம், காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
இந்தப்போரை நேரில் கண்ட சாட்சிகள், அதில் சொல்லொணாத்துன்பத்தை எதிர்கொண்ட வன்னித் தமிழ்மக்களும் அவர்களுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் குழாமும்தாம். இவர்களில் பெரும்பாலோர் இப்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பது முகாம்களில். விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருப்போர் எழுபதாயிரம் பேர் மாத்திரம் என்று ஜனவரி மாதம் தொடங்கி இலங்கை அரசு கூறிவந்தது, அதை இந்திய அரசும் ஊடகங்களும் அப்படியே எதிரொலித்தன. இந்தச் செய்திப்பொய்கள் இப்போது ஓய்ந்துவிட்டன. மாறாக, இப்போது இந்த முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை லட்சம் பேர் என்று இலங்கை அரசு ஒப்புக்கொண்டு, இவர்களை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து விடுவித்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்துவருகிறது. இவர்கள் இருக்கும் முகாம்களுக்கு சர்வதேச நிவாரண அமைப்புக்கள் சென்றுவர அனுமதி வேண்டும், இங்கெல்லாம் தடுப்புக்காவல் கூடாது, முகாம்களில் இருக்கும் மக்கள் வெளியே சென்றுவர அனுமதி வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மன்றமும் பிற அமைப்புக்களும் கூறியிருக்கின்றன.
இந்தப்போரில் கொலையுண்டவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியத்தலைவர்கள், போராளிகள், அவர்களுடைய குடும்பத்தினர், யுத்தப்பிரதேசத்திலிருந்து வெளிவர இயலாமல் அவர்களுடன் சிக்கிய மக்கள் எனப்பலர். இவர்களில் ஒவ்வொரு வகையினர் பற்றியும் நிறைய எழுதமுடியும்... இப்படிக் கொலையுண்டவர்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் குடும்பத்தார், உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற்புலிகள் பொறுப்பாளர் சூசை உள்ளிட்டோரும் இருக்கிறார்களா, இல்லையா என்ற குழப்பம் தொடர்கிறது. இதுகுறித்து மாறுபட்ட செய்திகள், ஹேஷ்யங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம் - இப்போது இலங்கை அரசு விடுதலைப்புலிகளை ராணுவரீதியாகத் தோற்கடித்த நிலையில் ஈழத்தமிழ்மக்களின் அரசியல்-அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலைத் தொடங்க அதற்குப் பெரிதும் தடையிருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த வார நிகழ்வுகளை, செய்திகளைச் சங்கேதமாக வைத்து வாசிக்கும்போது விடுதலைப்புலிகளின் முக்கியத்தலைவர்கள், பிராந்திய-சர்வதேச அரசியல் சக்திகளின் பேச்சைக் கேட்டு வேறுவழியின்றி ஆயுதக்களைவுக்குத் தயாரான சமயத்தில் அவர்களை இலங்கை அரசு கொலைசெய்து முடித்திருப்பதாகவே கூற வேண்டும். தவிர, தற்போது இலங்கை அரசு இந்த கோரப்படுகொலைகளுக்கான தடயங்களையும் அழித்துவருவதாகத் தெரிகிறது. இலங்கை அரசின் இந்தத் தாக்குதலுக்கு நேரடியாகவும் திரைமறைவிலும் ராணுவ உதவி, தளவாட உதவி, நிதியுதவி என வழங்கிய நாடுகள் இந்தியா, ருஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா, சௌதி அரேபியா ஆகிய நாடுகள் ஒருபுறம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை மறுபுறம், தவிர கண்டும் காணாமல் நின்றதற்காக ஐக்கிய நாடுகள் மன்றமும் பொறுப்பு என்றே கூறவேண்டும். இதில் ஒவ்வொரு தரப்பின் பொறுப்பும் ஒவ்வொருவகையில் மோசமானது என்பதில் மறுகருத்துக்கே இடமில்லை.
விடுதலைப்புலிகள் அமைப்பிடம் எத்தனையோ அறப்பிறழ்வுகள், தவறுகள், கொடூரங்கள் உண்டு. இருந்த போதும் போரின் இறுதிக்கட்டத்தில் இந்த அமைப்பு, இலங்கை அரசு அற்ற சர்வதேச, மூன்றாம் தரப்பிடம் ஆயுதங்களைக் கையளிக்கத் தயார் என்று அறிவிக்கிறது. இந்த மூன்றாம் தரப்பு, இந்திய அரசா, நார்வேயா, அமெரிக்காவா, பிரிட்டனா இவையெல்லாம் கலந்த ஒன்றா என்பதில் குழப்பமுண்டு. பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் வெளியே வந்த அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன், நடேசனின் துணைவியார் விஜிதா, சமாதானச்செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன், சிறப்புக்கட்டளைத் தளபதி ரமேஷ் உள்ளிட்ட குழுவினரை இலங்கைப்படையினர் கொன்றுவிட்டுப் பழியை விடுதலைப்புலிகள் மீது போட முயற்சி செய்திருக்கிறார்கள். நடேசனும் புலித்தேவனும் நார்வேயிடம், இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் மன்றச் செயலாளர்-நாயகத்தின் விசேட தூதுவர் விஜய் நம்பியாரிடம் இன்னும் பிறரிடம் பேசியிருக்கிறார்கள், பேசிய பிறகே சரணடைய முன்வந்திருக்கிறார்கள் என்று எல்லாத்தரப்பு செய்திகளின் ஊடாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது.
அதற்கும் முன்பாக விடுதலைப்புலிகள், சூசையின் குடும்பத்தாரையும் தாங்கள் பிடித்துவைத்திருந்த இலங்கை ராணுவத்தினர் ஏழு பேரையும் விடுவித்திருக்கிறார்கள். சூசையின் குடும்பத்தாரைக் கைது செய்துவிட்டதாகவும் ஏழு இலங்கை ராணுவத்தினரைத் தாங்கள் மீட்டதாகவும் இலங்கைப்படையினர் அறிவித்ததையும் ஒரு சங்கேத செய்தி எனக் கூறலாம். அடுத்த கட்டமாக நடேசன்-புலித்தேவன் குழுவினர் வெளியே வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் இவர்கள் கொல்லப்பட்டதைப் பார்க்கும்போது, சூசை குடும்பத்தாரைத் தவிர கௌரவமாக யாரும் தப்பவில்லை என்றே தெரிகிறது.
போரின்போது ஆயுதம் தாங்காதோரைக் கொல்வது போர்க்குற்றம், அதைப் போல இப்படிச் சரணடைய முன்வருவோரையும் போர்க்கைதிகளையும் கொல்வதும் போர்க்குற்றமே. இத்தகைய போர்க்குற்றங்களைச் செய்யாத அரசுகளோ, ராணுவங்களோ இல்லை என்பது முக்கிய உண்மை. இருந்தபோதும் இந்தப் போர்க்குற்றங்களைத் தவிர்க்க முயல்கிற தளபதிகளும் ஆங்காங்கே இருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசின் தரப்பில் அப்படி யாரும் இல்லை, அதற்கான அறிகுறியே இல்லை போலும்.
இந்தப்போரின்போது இலங்கை அரசு-விடுதலைப்புலிகள் தரப்பில் நடந்தேறிய போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் எழுப்பியுள்ளன. இதுகுறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை - மே 26-ஆம் நாள் - ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் விசேட அமர்வில் தீர்மானமொன்றைக் கொண்டுவந்திருக்கின்றன. இந்தத் தீர்மானத்தை ஸ்விட்ஸர்லாந்து, போஸ்னியா, மௌரிஷியஸ், ஆர்ஜெண்டினா, சிலி, மெக்ஸிக்கோ, உருகுவே மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் ஆதரித்திருக்கின்றன. இதற்கு மாற்றாக, இலங்கை அரசு, பயங்கரவாதத்தை வென்றதற்காகத் தன்னையே பாராட்டிக்கொள்வதான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கின்றது. இதை ஆதரிக்கும் நாடுகள் இந்தியா, சீனா, க்யூபா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா, சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் பிலிப்பைன்ஸ் - அதாவது இலங்கை அரசின் இன்றைய நெருங்கிய நண்பர்கள் இவர்கள்தாம்.
கடந்த பல பத்தாண்டுகளில் இலங்கையில் நடந்த அரசியல்-படுகொலைகள், இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்காக யாரும் பெரிதாகத் தண்டிக்கப்பட்டதில்லை, எவ்வித பன்னாட்டு விசாரணைக்கும் இலங்கை அரசு தயாராக இருந்ததுமில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த நிலையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பில் விசாரணை ஏதும் நடப்பதற்கான சாத்தியமுண்டா என்பது அடுத்த ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
இலங்கை அரசு முன்மொழிந்திருக்கும் தீர்மானத்தில் இந்திய அரசின் சார்பில் கையொப்பமிட்டிருப்பவர், ஏ. கோபிநாதன் என்ற வெளியுறவுத்துறை அதிகாரி. இந்தத் தீர்மானத்தைத் தமிழக அரசியல் கட்சிகளும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமுறையாவது வாசித்துப் பார்க்க வேண்டும். இந்திய அரசின், வெளியுறவுத்துறையின், ஊடக உலகின் முகங்கள் எத்தகைய கொடூரம் வாய்ந்தவை, இவற்றை எதிர்கொள்ள வேண்டிய தாங்கள் எங்கு நிற்கிறோம் என்பது இவர்களுக்கு இனிமேலாவது புரியட்டும்.
இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற முறையில் இந்திய அரசின் இந்தக்கொடூர முகம் எனக்குப் புதிய ஒன்றல்ல. பத்திரிகைக்காரன், ஆர்வலன் என்ற வகையில் இந்த முகத்தை ஏற்கனவே பல முறை கண்டவன் நான். இருந்தபோதும் உள்ளபடியே இந்த முகம் இன்று மீண்டும் வெளிவந்திருக்கிறது, அம்பலப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற முறையில் பெரிதும் வெட்கித் தலைகுனிகிறேன், என் ஈழச்சகோதரர்கள் என்னை மன்னிக்கப்போவதில்லை என்பதை உணர்கிறேன், தமிழ்பேசும் மக்களில் ஒருவன் என்பதால் கடும் கொதிப்படைகிறேன்...
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
24.5.09
இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்..
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(261)
-
►
12
(11)
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 3
- க்ஹஸர் அகராதியின் வரலாறு - மிலோராத் பாவிச்
- சாவில் தொடங்கும் பிறிதான வாழ்வு - பாவிச் மறைவு
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 2
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 1
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 2
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 1
- கண்ணாடியில் தெறிக்கும் கொலைச்செயல்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 3 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- போபால்: கால் நூற்றாண்டுக்காலக் குற்றம்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 2 - ஆர்தர் ஸி. க்ளர்க்
-
►
11
(8)
- அகர முதல எழுத்தெல்லாம்? - 1 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- கிழவியின் விரக்தி - ஷார்ல் போதலேர்
- அந்நியன் - ஷார்ல் போதலேர்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 5 - மரிலின் க்ரிஸ்ல்
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- ஃப்ரெஞ்சு அறிஞர் க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ் மறைவு!
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
▼
05
(17)
- மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு ...
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்ட...
- ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
- மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை
- சரண்-பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகள் என்னிடம் கோ...
- இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்.....
- உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்
- கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
- குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
- ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா
- எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
- இன்றைய கொடூரத்திலிருந்து உருவாகும் தமிழ்-உண்மை - த...
- அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
- முகாம் என்பது யாது? - 2 - அகம்பென்
- பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்
- தூதுவர் - ஸில்வியா ப்ளாத்
-
►
12
(11)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (181)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (27)
- அணுசக்தி (10)
- அறிவியல் (45)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (56)
- உரைமொழி (13)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (170)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (177)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழியல் (21)
- செயல் (86)
- ஜெர்மன் (9)
- திரை (30)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (10)
- நடனம் (2)
- நட்பு (17)
- நிகழ்வு (6)
- நேர்காணல் (14)
- பயணம் (11)
- போதலேர் (41)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (7)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (31)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (52)
- லண்டன் (11)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (9)
- வரலாறு (168)
- வரைமொழி (120)
- வானொலி (3)
- விழியின் கதை (9)
- ஸில்வியா (37)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸெர் (2)
- ஸ்பானிஷ் (28)
25 கருத்துகள்:
//இந்திய அரசின் சார்பில் ஏ. கோபிநாதன் என்ற அதிகாரி கையொப்பமிட்டிருக்கும் இந்தத் தீர்மானத்தைத் தமிழக அரசியல் கட்சிகளும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமுறையாவது வாசித்துப் பார்க்க வேண்டும். இந்திய அரசின், வெளியுறவுத்துறையின், ஊடக உலகின் முகம் எத்தகைய கொடூரம் கொண்டது, அதை எதிர்கொள்ள வேண்டிய தாங்கள் எங்கு நிற்கிறோம் என்பது அவர்களுக்கு இனிமேலாவது புரியட்டும்.//
அரசியல் கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் என்ன செய்வார்கள் என்ற தைரியம் இந்தியாவின் கோரமுகத்தை உருவாக்குகிறது. சனநாயகத்தை பேச்சளவில் கூட இந்திய ஆட்சியாளர்கள் நம்புவதாக தெரியவில்லை. உதாரணத்திற்கு அணுசக்தி ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தின் அவைகளில் விவாதிக்காமல் மறைத்து வைத்த போது அரசியல் கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் என்ன செய்தார்கள்?
வன்னிப் படுகொலைகளில் இந்தியாவும் குற்றவாளியாக இருக்கும் போது என்ன எதிர்பார்க்க முடியும்? 'சிறீலங்காவின் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிடக்கூடாது' என்று மீண்டும் புதுடில்லி அதிகாரவர்க்கம் கூப்பாடு போடுகிறது. வன்னிப்படுகொலைகள் துவங்கிய போதும் இதையே சொன்னது இந்தியா. மனித உரிமைக் குற்றங்களை உள்நாட்டு பிரச்சனை என்று மறைக்கிறவர்களிடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்க இயலுமா? அது எத்தகையதாக இருக்கும்?
//இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற முறையில் பெரிதும் வெட்கப்படுகிறேன், தமிழ்பேசும் மக்களில் ஒருவன் என்பதால் கடும் கொதிப்படைகிறேன்...//
எனது நிலையும் அதே.
//கடந்த பல பத்தாண்டுகளில் இலங்கையில் நடந்த அரசியல்-படுகொலைகள், இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்காக யாரும் பெரிதாகத் தண்டிக்கப்பட்டதில்லை, எவ்வித பன்னாட்டு விசாரணைக்கும் இலங்கை அரசு தயாராக இருந்ததுமில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.//
மூதூரில் மனிதநேயப் பணியாளர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டுகள் எழுந்த போது இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பகவதி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது மகிந்தா அரசு. அந்த குழுவிற்கு விசாரணைகளை மேற்கொள்ள எந்த சுதந்திரமில்லாததால் தானாகவே கலைந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக மனித உரிமை கவுன்சில் கூட்டங்களில் சிறீலங்காவின் மனித உரிமை குற்றங்களை விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்காமல் இந்தியா எதிர்த்து வந்துள்ளது. உலகநாடுகளும், ஐ.நாவும் என்ன செய்தன? சிறீலங்கா, மியான்மர் நாடுகளை மனித உரிமை குற்றங்களிலிருந்து காப்பாற்றும் வேலையை தொடர்ந்து இந்தியா செய்து வருகிறது. தேசிய இனங்கள், ஒடுக்கப்படுகிற மக்கள் மீதேறி நசுக்கிக் கொண்டு அசோக சக்கரம் சுழல்கிறது. உள்ளூரில் மனித உரிமையில் கவனம் செலுத்தாத இந்தியா உலகத்திலா கவலைப்பட போகிறது?
இந்தியா ஒரு கொலைகார நாடு. கொலை செய்பவனுக்கு ஆதரவாக இருப்பதும் குற்றம் தானே!
அய்யா மன்னிக்க வேண்டும்! வெளிநாட்டு வாழ் அன்பர்கள் தான் உள்ளக்குமறல்களை இணையத்தில் கொட்டுகிறார்கள். நீங்கள் நன்றாக எழுதும் நபர். ஏன் நீங்கள் இந்தியாவில் திரும்பி வந்து இருந்து ஒரு அமைதிப்புரட்சி செய்யக்கூடாது?
எனது முழு கருத்துக்களையும் இங்கு பதிய முடிவில்லை எனவே எனது பவிவில் பார்க்கவும் http://sashvel.blogspot.com/2009/05/vs-vs.html
Saravanan
Bangalore
அரசுகள் இவ்வாறு வன்முறை நிகழ்த்தும் சூழலில் தீவிரவாதம் தோன்றாதிருந்தால்தான் வியப்பு. அது பயங்கரவாதமாக மாறாதிருந்தால்தான் வியப்பு. எம்மில் பலருக்கு, இயலாமையும், கோபமும் தோன்றி, அன்றாட அலுவல்களில் கரைந்து போயின. இன்னும் சிலரில் கையறுநிலை நீங்காக் கசப்பையும், வெறுப்பையும் தோற்றுவித்திருக்கிறது. என் நண்பனொருவன், இந்தியப் பொருளாதாரத்தை நசுக்குவோம் என்று கூறிக்கொண்டிருக்கிறான். சற்றே பொருளாதாரம் ஓங்கியதால்தானே, அண்டை நாடுகளின் மேலான வல்லாதிக்கத்திற்கான கனவும், ஆசையும் என்பது அவன் வாதம்.
அறிவுப்ப்புலம் என்பதான ஒன்று என்ன செய்யக்கூடும் என்று நினைக்கிறீர்கள் நீங்கள்? என் புரிதலில், இன்னுமொரு தேசத்தில் அகதிகள் என்றொரு சொல்லின் அவசியம் நேராதிருப்பதைத் தடுப்பதே அறிவுப்புலத்தின் பணியாயிருக்க முடியும். ஆயினும், அதில் சிறிதேனும் வெற்றி கிட்டுமாவென்ற ஐயம் பெரிது. நம் கண் முன்னால், இந்தியா, இலங்கை உட்பட்ட நாடுகள் வெற்றிப் பெருமிதத்துடன் செய்து முடித்துள்ள காரியங்களை எதிர்த்துக் கேள்வி கூட எழவில்லையே இங்கு. மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தி இரண்டாம் பக்கத்தில், முதல் பக்கத்தில் கருணாநிதியும், மன்மோகன் சிங்கும் இந்தியாவின் தலையீட்டின் காரணமாக அமைதி திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாகத் தம்பட்டம். இன்று, அவர்களுக்கிடையில் பேச்சு வார்த்தை அமைச்சர் பதவிகளுக்காக. யார் ஆண்டாலும் இதேதான் நிலை என்பது தெளிவாகப் புரிகிறது, ஆயினும் செய்த தவறுகட்குத் தண்டனை வேண்டாம் கண்டனம் கூட இல்லை யாருக்கும். மக்களுக்கு இத்தவறுகளில் பங்குண்டா?
வீட்டுக்கு வெளியே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைக் கண்டுகொண்டிருந்தேன். சற்றே வயதில்/உருவில் வலிய சிறுவர்கள் வைத்ததுதான் சட்டம் அங்கும். கண்டு பொருமுபவர்கள் ஓரம் நின்று ஓலமிட மட்டும்தான். அல்லது, கடமையைச் செய்தோமென்ற திருப்தியில் தீவிரவாதத்திலோ, வேறெதாவது வாதத்திலோ கலந்து வெகு நிச்சயமாக ஒடுக்கப்படவேண்டியதுதான். அல்லது, கண்டு பொருமும் ஒருவரிடம், நீ வந்து புரட்சி செய்யேன் என்று கேள்வி கேட்கலாம். இன்று பாதுகாப்பாகவும், நாளை பணக்காரனாகவும் இருந்து கொள்வதற்கான வழிமுறைகளைப் பார்த்து ஒதுங்கிக்கொள்ளலாம்.
எழுதுவதைப் படித்து பொதுக்கருத்து உருவாகும் காலம் இன்னும் மிச்சமிருக்கிறதா? அறிவுரீதியில் மக்களைத் திரட்டிய புரட்சி என்ற ஒன்று சாத்தியமா? வலியை உணர்ந்த மக்களின் குரல்வளை முறிக்கப்பட்டிருக்க, மற்றவர்கள் அதில் நூற்றிலொரு பங்கேனும் உணர முடியுமா? அவரவர்க்கான எலிப் பந்தயமும், ஊடக மயக்கமும் அதற்கு வழி விடுமா?
வன்னியில் 1982 அளவின் கணக்கெடுப்பின்படி ஐந்து லட்சம் மக்கள் வாழ்ந்ததாக அறிகிறேன், அதன்பின் கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்கிறார்கள்..
இதன்படி பார்த்தால் நிறையப்பேர் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அறுபதாயிரத்துக்குக் கிட்ட மக்கள் இறந்த்ததாகக் கூறுகிறார்கள். உண்மையறிய சுயமான எந்த அமைப்புக்கும் அங்கேதான் அனுமதியே இல்லையே.. இறுதியாக விடுதலைப்புலிகள் உறுப்பினர் சூசை பேசிய போது ’எம்மோடு 25 ஆயிரம் மக்களுக்குக்கிட்ட காயப்பட்டுள்ளார்கள். நாம் சர்வதேசத்திடம் காப்பாற்றி வெளியில் எடுக்கும்படி கேட்டுள்ளோம். புகலிடத்து மக்களே காப்பாற்றுங்கள்’ என்று சொன்னது இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது... அப்படியானால் அந்த 25 ஆயிரம் மக்க்ளுடன் மீதமிருந்தவர்கள் எல்லாமாக 50 ஆயிரம் என்கிறார்கள்.. நந்திக்கடலும் வானமும் சாட்சியாக அத்தனை உயிர்களும் கொல்லப்பட்டிருக்க வேண்டும்... யாராவது அதிலிருந்த சிங்கள மனிதனுக்கு மனம் நொந்து அங்கு என்ன நடந்ததென்ற உண்மை வெளிவந்தால் தான் உண்டு....
ருவாண்டாவிலும் காலம்கடந்துதான் ஐ.நா. மன்றம் விழித்தது.. அதன் பின் அப்படியொரு மனித அழிவு வரக்கூடாதென்றார்கள். ஆனால் ஈழத்தில் இன்று நடந்ததை எவ்வளவு சொல்லியும் இவர்கள் கவனிக்கவில்லை. இனி நடவடிக்கைகள் எடுத்தால் என்ன (எடுப்பார்களா என்பது அடுத்த கேள்வி). இத்தனை மக்களின் உயிர்களையும் திரும்பப்பெற முடியுமா..எத்தனை லட்சம் மக்கள் அகதியானார்கள்,
முடமானார்கள், சிறார்கள் பலியானார்கள், அனாதையானார்கள், மனப்பிறழ்வை அடைந்தார்கள், எத்தனை பெண்கள் வதைபடுகிரார்கள் இதையெல்லாம் எவராலும் ஈடுசெய்யமுடியுமா ...
இந்தியாவில் பிறக்காததையிட்டு நான் மகிழ்கிறேன், அதே நேரம் இந்தியாவிலுள்ள பத்திரிகைகளும் நிலைமையை அறியாத மக்களும் ராஜபட்ச பயங்கரவாத அரசுடனும் இந்திய பயங்கரவாத அரசுடனும் சேர்ந்து இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக வெட்கப்படுகிறேன்..
றஞ்சினி அவர்களின் மறுமொழியில் சில எழுத்துப்பிழைகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் இட வேண்டி மறுமொழிக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியிருந்தேன். அந்த நேரத்தில் பார்த்து மறுமொழி எழுதியிருக்கும் பெயரற்ற-ஒருவர் ‘நீங்களும் றஞ்சினியும் ஒருவர்தான், றஞ்சினி பெயரில் ஏன் எழுதுகிறீர்கள்’ என்று என்னைக் கேட்டிருக்கிறார்...
இன்னொருவர் பெயரில் எனக்கே மறுமொழி எழுதிக்கொள்பவனாக என்னை அவர் கருதுவது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது!
நாகார்ஜுனன், எல்லாம் சரிதான். ஆனால் இந்தியனாக சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் என்று சொல்வது கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி, துக்கத்தின் உச்சகட்ட வார்த்தையாக வருகிறது. மிகச்சிறந்த அறிவியல் பார்வை கொண்ட உங்கள் எழுத்தில் இப்படி வருவது ஆச்சரியமளிக்கிறது.
//
இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற முறையில் இந்திய அரசின் இந்தக்கொடூர முகம் எனக்குப் புதிய ஒன்றல்ல. பத்திரிகைக்காரன், ஆர்வலன் என்ற வகையில் இந்த முகத்தை ஏற்கனவே பல முறை கண்டவன் நான். இருந்தபோதும் உள்ளபடியே இந்த முகம் இன்று மீண்டும் வெளிவந்திருக்கிறது, அம்பலப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற முறையில் பெரிதும் வெட்கித் தலைகுனிகிறேன், என் ஈழச்சகோதரர்கள் என்னை மன்னிக்கப்போவதில்லை என்பதை உணர்கிறேன், தமிழ்பேசும் மக்களில் ஒருவன் என்பதால் கடும் கொதிப்படைகிறேன்...
//
வேதனை...
அரசாங்கங்களைப் பொறுத்தவரை ஆயுதங்களை விற்று லாபம் பார்க்க வேண்டும், அவ்வளவு தான். மனித உயிர்களைப் பற்றி இந்திய அரசாங்கம் என்று கவலைப்பட்டது?
இன்னும் "தேசப் பற்றில்லாதவன், துரோகி" என்று உங்களை அவதூறு செய்யும் பின்னூட்டங்களே வரவில்லையே ஏன்?
கே ஆர் மணி
இந்தியன் என்று நான் எழுதவில்லை. இந்தியாவைச் சேர்ந்தவன் என்று எழுதியிருக்கிறேன்.
ஆச்சரியமாக இருக்கிறது நாகார்ஜூணன் எனக்கும்...
அந்த பெயரில்லா நபருக்கு : நான் எழுதியதில் உங்களுக்கு என்ன சந்தேகம் எனது பெயர் பெண்ணுடையது என்பதாலா ?? அல்லது இந்தியா போன்ற நாடுகளை பயங்கரவாத நாடென்று சொன்னதாலா... அப்படியிருந்தால் இன்னும் பலதடவை சொல்லலாம்..
அன்புடன் றஞ்சினி
//இலங்கை அரசு முன்மொழிந்திருக்கும் தீர்மானத்தில் இந்திய அரசின் சார்பில் கையொப்பமிட்டிருப்பவர், ஏ. கோபிநாதன் என்ற வெளியுறவுத்துறை அதிகாரி. இந்தத் தீர்மானத்தைத் தமிழக அரசியல் கட்சிகளும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமுறையாவது வாசித்துப் பார்க்க வேண்டும்.//
நாகார்ஜுனன்,
இதன் பிரதி (இணையத்தில் அல்லது காகிதத்தில்) கிடைக்கிறதா? நீங்கள் குறிப்பிட்டபடி தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாசிப்பது முக்கியமென்றால் இது அவர்களுக்கு கிடைக்க வழிசெய்ய வேண்டும். ஆகவே பிரதியின் நகலெடுத்து தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி முதற்கொண்டு அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைக்கலாம். பிரதி கிடைக்கும் பட்சத்தில் தன்னார்வலர்கள் மூலம் இதைச் செய்ய முடியும்.
சுந்தரமூர்த்தி,
ஜெனிவா நகரில் நாளை நடக்க இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுமம் பற்றி ஐ.நா. மன்ற அலுவலகச் செய்தி.
http://www2.ohchr.org/english/bodies/hrcouncil/docs/11specialsession/HRC_NV-May09.pdf
ஸ்விட்ஸர்லாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொண்டுவந்திருக்கும் தீர்மானங்கள்.
http://blog.unwatch.org/wp-content/uploads/2009/05/swiss-sri-lanka-res.pdf
இலங்கை அரசு கொண்டுவந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டிருக்கும் தீர்மானம்.
http://blog.unwatch.org/wp-content/uploads/2009/05/sri-lanka-draft-res.pdf
இதில் இலங்கை அரசின் தூதர் தயன் ஜெயதிலக வைத்திருக்கும் வாதங்கள் பின்வருமாறு:
1. இவை காலனியத்தில் ஈடுபட்ட நாடுகள் சார்பில் வரும் தீர்மானங்கள்;
2. இலங்கையில் போர், படுகொலைகள் நின்று விட்டன;
3. எமக்குப் பரந்த பன்னாட்டு ஆதரவு உண்டு.
நாகார்ஜுனன்
முன்னர் குறிப்பிட்ட பின்னூட்டத்தில் திருத்தம்:
ஜெர்மனி தலைமையிலான தீர்மானத்தின் படி சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் போர்க்குற்ற விசாரணைகள் பற்றி இதுவரை தகவல்கள் இல்லை. வேறு தீர்மானங்கள் போர்க்குற்றம் பற்றி வருகிறதா?
திரு
ஸ்விட்ஸர்லாந்து கொண்டுவந்திருக்கும் தீர்மான வரைவின் பதினொன்றாம், பன்னிரண்டாம் பகுதிகளை வாசியுங்கள். போர்க்குற்றங்கள் என்ற வாசகம் இல்லை எனினும் போர்க்குற்றங்கள் இவற்றில் அடங்கும்.
வித்யாசாகரன்
அறிவுப்புலத்தில் இருப்போர்க்கு நீண்ட, நெடிய பணி, பல மட்டங்களில், உண்டு. தத்தம் பணியை வகுத்துக்கொண்டு
உடனடிப்பலனை எதிர்நோக்காமல் கடுமையாக உழைக்க முன்வர வேண்டும். போரில் வீழ்ந்த நம் மக்களுக்கு, தியாகிகளுக்கு நாம் செய்யக்கூடிய அஞ்சலி அதுவே.
கே ஆர் மணி
அறிவும் உணர்வும் எதிரெதிரானவை அல்ல. இன்று என்னைப்போன்று பலர் உள்ளூர அனுபவிக்கும் துயரின் அடிப்படையில் புதிய அறிவு இனி உருவாகும். இதை நீங்கள் புரிந்துகொண்டால் சரி.
நாகார்ஜுனன்
நீங்கள் குறிப்பிட்டுள்ள 11 மற்றும் 12ம் தீர்மானங்களை மீண்டும் வாசித்தேன். சர்வதேச சட்டங்களின் மீறல், பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான அதன் விளைவுகள் பற்றி 11 குறிப்பிடுகிறது.
ஆனால், 12ல் அதன் விசாரணையை சர்வதேச தரத்துடன் நடத்த வேண்டுமென்று குறிப்பிட்டு சிறீலங்கா அரசிடமல்லவா ஒப்படைக்கிறார்கள்? சிறீலங்கா அரசு சர்வதேச சட்டங்களுக்கும், சர்வதேச தரத்திற்கும் ஏற்ற விசாரணையை நடத்தி, குற்றங்களுக்கு தனக்குத் தானே தண்டனை வழங்குமென்று மேற்குலக நாடுகள் எதிர்பார்ப்பதில் சந்தேகம் வருகிறது.
'பாதுகாக்கும் கடமை' கோட்பாட்டிற்கும், ஜெனிவா பிரகடனங்களுக்கும் முரணாக அல்லவா இருக்கிறது.
போர்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களின் மீறலை விசாரிக்க மனித உரிமை கவுன்சில் சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மனிதாபிமானக் கம்பளத்தால் மறைப்பதாக தெரிகிறது.
என் புரிதலில் தவறிருந்தால் குறிப்பிடுங்கள்.
திரு
திரு
போர்க்குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்துவது எந்த ஒரு நாட்டினதும் உள்ளார்ந்த கடமை. இதைத்தான் மனித உரிமை அமைப்புக்கள் கோருகின்றன. ஆனால் இலங்கை இதுநாள் வரை தன் கடமையை நிறைவேற்றியதாக சரித்திரமில்லை, இப்போதும் இந்தக்கடமையைத் தட்டிக்கழிக்கிறது, அது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) போன்ற அமைப்பையே ஏற்கவில்லை என்ற யாவையும் வைத்தே பிற்பாடு நீங்கள் கருதுவது போன்ற பன்னாட்டு விசாரணைக்கான அடிப்படை சாத்தியமாகும்.
அத்தகைய விசாரணை நடக்குமா, நடக்காதா என்பதும் பன்னாட்டு அரசியல் சூழலை வைத்தே உருவாகும் என்பதே இன்றைய எதார்த்தம்.
'கரமசோவ் சகோதரர்கள்' நாவலில் இவானும் அல்யோஷாவும் உணவகத்தில் வைத்து உரையாடலில் ஈடுபடும்போது இவான், குழந்தைகள் எந்த குற்றத்திற்காகவும் அல்லாமல், ஒருவேளை நாளை வேறு ஓரிடத்தில் கிடைக்கூடிய இஷ்டலோகத்திற்காக வதைக்கப்படலாம் என்கிற கூற்றை தன்னால் ஏற்கவே முடியாது என்று கூறுவான். 'கரமசோவ் சகோதரர்கள்' எழுதப்பட்ட அதே மண்ணில் சில ஆண்டுகளில் புரட்சி ஏற்பட்டு, இந்தப் புவியில் இதோ நாம் விரும்பும் இஷ்டலோகம் என்று எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்த தருணத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் கொல்லப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் தோன்றிய புதிய அறிவை இந்த தலைமுறை, இதோ உங்கள் கருத்தியலில் இருந்த கோணலை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டீர்கள். அதுவே எல்லாவற்றுக்கும் காரணம் என்று என்று சொல்லி புதிய அறிவை உருவாக்குகிறது. ஆனால் அவர்களுக்கும் புரியவில்லை - மானுட வாழ்வை கோட்பாட்டு குப்பியில் அடைக்கமுடியாது என்று.
'மானுட' வாழ்வு என்று தனியாக ஒன்றில்லை, எந்த உயிரை யாருக்கு அழிக்க உரிமையுண்டு என்ற கேள்வியை எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம் என்ற பதிவில் கேட்டிருக்கிறேன். வாசித்துப்பாருங்கள்.
இரண்டு விஷயங்கள்
1. "இலங்கை அரசு கொண்டுவந்திருக்கும் தீர்மானம் தமிழ்மக்களின் நலன்களுக்குப் பெரிதும் எதிராக இருக்கிறது, எனவே அந்த நலன்களைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று கூறி தமிழக முதல்வர் இந்தியப்பிரதமருக்கு வழக்கம்போல கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக்கடிதத்தில் இந்திய அரசு ஏற்கனவே இந்தத் தீர்மானத்தை ஆதரித்திருப்பது, கையொப்பமிட்டிருப்பது பற்றி ஒரு வார்த்தையுமில்லை! இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஆதரித்திருப்பது பற்றி இந்திய-தமிழ் ஊடகம்கூட இதுவரை எழுதியதாக்த் தெரியவுமில்லை.
2. இன்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் விசேட அமர்வில் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அதன் தலைவர் நவநீதம் பிள்ளை அம்மையார், இலங்கைப்படுகொலைகள் பற்றிய ஒரு பன்னாட்டு விசாரணை, நம்பகத்தன்மை கொண்டதாக, சுயாதீனமாக இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
தேசம் என்ற அமைப்பை தாண்டி சிந்திக்கும் , கற்பனை செய்யும் கருவிகள் இப்போதைக்கு என்னிடம் இல்லை. ஆனால் என்னால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். நீங்கள் எழுப்பி உள்ள கேள்விகள் மேலிருந்து கீழ்நோக்குதல் என்ற அடிப்படையில் வந்த கேள்விகள் என்று தோன்றுகிறது. இங்கே மனிதன் கடையன் ஆகிறான்.
மேலே நான் குறிப்பிட்ட எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம் என்ற என் பதிவை நீங்கள் வாசிக்கவில்லை என்று தெரிகிற்து.
இன்று இறுதியாக வந்த செய்தியின் படி, இலங்கை அரசு தன்னைப் பாராட்டிக்கொள்கிற தீர்மானமே, சில திருத்தங்களுடன் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக்குழுவில் நிறைவேறியிருக்கிறது! வாக்கெடுப்பின்போது விவாதத்தைத் தடுத்த நாடு, க்யூபா. வாக்கெடுப்பில் தீர்மானத்தை ஆதரித்த நாடுகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான், க்யூபா உட்பட 29. எதிர்த்த நாடுகள் 12. ஆறு நாடுகள் வாக்களிக்கவில்லை.
இதையடுத்து
1. போரின்போதான மனித உரிமை மீறல்கள் பற்றி பக்கச்சார்பற்ற, காத்திரமான விசாரணை ஏதும் நடக்கத் தேவையில்லை!
2. முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சுமார் இரண்டரை லட்சம் பேருக்கான நிவாரண உதவி கிட்டவேண்டி ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கு தங்குதடையற்ற அனுமதி கிட்டாது!
3. இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதல்கள் பற்றிய பன்னாட்டுக்கவனம் வரத் தேவையில்லை!
வாழ்க ஐ.நா. மன்றம், வாழ்க இந்தியா!
4. இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் துரைசாமி ராஜா, தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அன்பரசு ஆகியோர் பேசியிருப்பதை வாசித்தேன். தமிழக முதல்வரைப் போலவே இந்தியா ஏற்கனவே இலங்கையின் தீர்மானத்தில் கையொப்பமிட்டிருப்பது பற்றி இருவரும் வாய்திறக்கவில்லை. இதுதான் இந்திய-தமிழக அரசியல் போலும்!
நான் வாசிக்கவில்லை என்று நீங்கள் சொல்வது ஒரு வழிமுறை.
இதுபோன்ற சொல்லாடல்களால் மறுதரப்பின் இருப்பை காலிசெய்து விடலாம்.பிறகு இரண்டு விஷயங்கள் சாத்தியம்.மறுதரப்பு தன் இடத்தை காலி செய்து கொள்ளலாம் அல்லது நான் இருக்கிறேன் , நான் இருக்கிறேன் என்று குதிக்கலாம். நான் இரண்டாவதை தேர்வு செய்கிறேன்.
காந்தி கனவு காண்கிறார். அவர் கனவு தனிமனிதனில் ஆரம்பமாகிறது. தனிமனிதன் தன்னளவில் முழுசுகந்திரம் அடைந்தவனாக இருக்க வேண்டும். அப்போது ஒரு கிராமம் தன்னிறைவு அடைந்ததாக இருக்கும். இந்தியா கிராமங்களாலான தேசமாக இருக்கும். அப்படிப்பட்ட இந்தியாவை அண்டைநாடுகள் தாக்காது. அரண் கிட்டத்தட்ட தேவையற்றது ஆகிறது.தேசம் இருந்தும் இல்லாமல் இல்லாத நிலை. தனிமனிதனிலிருந்து தேசம். அப்போது தேசம் என்பதன் அலகுகள் இல்லை.முகிழாபிறப்புகளுக்கு அவசியம் இல்லை.
எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம் என்ற பதிவில் நீங்கள் நவீன அரசு, இயக்கங்கள் சார்ந்து எழுப்பும் கேள்விகளில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் தேசம் என்பதை மட்டும் அது மையம் ஆக்குகிறது. அங்கிருந்து அனைத்தையும் பார்க்கிறது. அதைத்தான் மேலிருந்து கீழ்நோக்குதல் என்று சொன்னேன்.நீங்கள் சொல்லும் புதிய பொருட்கள் அதன் பருண்மைவடிவில் புதிதாக இருக்கலாம்.ஆனால் அறிவுத்தளத்தில் அது பலநூற்றாண்டுகளாக இருந்து வந்தது தான். முற்றிலும் புதியது என்று சொல்லத்தக்கது கவர்ச்சியானது.ஆனால் அப்படியொன்று எப்போதும் இல்லை.
1. உங்களைக் காலிசெய்வது என் நோக்கமல்ல.
2. என் பதிவு தேசத்தை மையமாக்குவதல்ல, மாறாக தேசம் என்ற கருத்தமைவின் மறுபக்கத்தை மையமாக்குவது. அதேபோல 'தனிமனிதன்' என்ற கருத்தமைவின் மறுபக்கத்தையும் மையமாக்கிப் பேசுவது.
3. காந்தியார்-தாகூர் இடையில் தேசம் குறித்து நடந்த முக்கிய உரையாடலை வாசித்திருக்கிறேன்... காந்தியாரின் தேசத்தை-மீறும் சிந்தனையை மதிக்கிறேன். அணு விஞ்ஞானியாக நானிருந்த காலத்தைத் தாண்டவும் அந்தத்தொழிலைத் துறக்கவும் எனக்கு உதவியதும் அதுவே. என்றாலும் அவர் கனவு அவர் பிறந்த சமுதாயத்திலேயே எதிர்-கனவாக மாறியிருப்பதையும் கண்டிருக்கிறேன்.
மேலே மனித உரிமைகள் குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை அம்மையார் என அவசரத்தில் எழுதிவிட்டேன். மனித உரிமை ஆணையர் என்பதே சரி. அறிந்தும் அவசரமாக எழுதிய தவறுக்கு வருந்துகிறேன்.
Post a Comment