இன்றைக்கு ஈழச்சிக்கல் சார்ந்த தமிழ்மக்களின் துயரம் எல்லையில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஏதும் செய்யமுடியாதபடி கட்சிகளாகப் பிரிந்திருக்கிற இந்தியத்தமிழர்கள் ஒற்றுமையாகப் போராடச் சக்தியற்றவர்கள் என்பது விளங்குகிறது. தமிழ்-நிலைப்பாடு என்பது சக்திமிக்க தமிழர்களின் அடையாளம். இது மெதுமெதுவாக பலவீனப்பட்டுக் கொண்டே போகிறது. பெரியாரிடமிருந்து அண்ணாதுரை தலைமையில் உருவான திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தமிழ்-நிலைப்பாட்டுக் கட்சி மெதுமெதுவாக ஒரு சாதாரண அரசியல் கட்சியாக மாறுகிறது. ஈழச்சிக்கலில் அக்கட்சியின் குணநலன்கள் வெகுவாக மாறியுள்ளது தெரிகிறது. அக்கட்சியின் அடுத்த தலைமுறை வரும்போது முற்றிலும் அக்கட்சி மாறிவிடும். ஆனால் அகில உலக தமிழ்-நிலைப்பாடு திராவிடக்கட்சிகளுக்கப்பால் மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்களால் முன்னெடுக்கப்படும். ஈழத்தமிழர்கள் அதன் முன்னணியில் நிற்பார்கள்.
இதில் கலாச்சார நிலைப்பாடு முக்கியமானதாகும். அப்போது ஈழம் மற்றும் தமிழக மக்களின் மனம், கற்பனைகள், கலைகள், ஞாபகங்கள் வரலாறுகள், பழக்க வழக்கங்கள், மண்ணோடுள்ள உறவுகள் முக்கியமானவையாகும். தேச எல்லைகளுக்கப்பால் நிறுவனங்கள் தோன்றும். தோன்ற வேண்டும்.
இனி என்றும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும் என்று தோன்றவில்லை. 1937-ஆம் ஆண்டில் பெரியார் தனித்தமிழ்நாடு வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்தியாவில் அது நடைமுறை சாத்தியமில்லை. எனவே ‘தேசமற்ற-கலாச்சார-தேசங்களை’ உருவாக்குவது பற்றி அகில உலகத் தமிழர்கள் யோசிக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. குவலயமாதல் (Globalization) என்பது இன்று அகில உலக ஒருமை பற்றிச் சிந்திப்பவர்கள் மத்தியில் முக்கியமான சிந்தனையாகியுள்ளது. குவலயமயமாதலில் பொருளாதாரம், இலக்கியம் எல்லாம் இணைகின்றன.
எனக்குத் தமிழிலக்கிய வரலாறும் படைப்பு நெறிமுறைகளும் எப்போதும் முக்கியமாகப் படுவதால் ஈழத் தமிழிலக்கியம், ஈழக்கவிதை வரலாறு, ஈழத்தில் உரைநடை வளர்ச்சி, கற்பனை செல்லும் நெறி போன்றவையும் இவற்றை இந்தியத்தமிழோடு இணைத்து ஒப்பிட்டு ஆராய்தல், திறனாய்தல் போன்றன முக்கியமாகப்படுகின்றன.
ஈழத்தமிழில் தோன்றும் நீள்புனைவுகள் தமிழகத்தின் உரைநடைப் புனைவுகளைவிட வித்தியாசமாக அல்லது படிநிலை-குறைந்தவையாக அமைந்துள்ளன. தமிழகத்தோடு ஒப்பிடும்போது நாவல் எழுத்து முயற்சிகள் மிகமிகக் குறைவாக ஈழத்திலிருந்து வந்துள்ளன.
திறனாய்வில் பல முக்கியமான ஆளுமைகள் ஈழத்திலிருந்து வந்துள்ளனர். திறனாய்வில், இயல்பாகவே, இருக்கும் தத்துவ அழுத்தம்தான் ஈழ நாவல் எழுத்து முயற்சிகளை அழித்துவிட்டன என்பது முட்டாள்தனமான வாதம். கேள்விகள் இந்த முறைகளில் உருவாகக்கூடாது. ஏன் நாவல் திறனாய்வு உச்சபட்ச நிலையில் ஈழத்திலிருந்து வந்தாலும் நாவல் படைப்பு அங்கிருந்து தோன்றவில்லை என்று கேள்வி வரவேண்டும். இந்தக் கேள்விதான் பயனுள்ள கேள்வி. ஏனென்றால் பயனில்லாத கேள்வி பிரயோஜனமில்லாத வழியில் சர்ச்சையைக் கொண்டு செல்லும். ஒரு பிரச்னையை ஆழமாகச் சிந்திக்கக் கேட்கப்படும் கேள்விகளின் நோக்கமும் முக்கியம்.
அறுபதுகள் வாக்கில் எழுத்து இதழ் ஒரு புது இயக்கத்தைத் தமிழுக்குத் தந்தது. ஓரளவு இக்காலகட்டத்தை தமிழக-ஈழ படைப்பாளிகளின் கூட்டியக்கமாகப் பார்த்திருக்க வேண்டும். இதை இப்படி இரு மக்கள் கூட்டத்தின் ஒத்த இயக்கமாக சி.சு. செல்லப்பா ஏனோ விளக்கவில்லை. கைலாசபதி, முருகையன், சில்லையூர் செல்வராஜன், கே.எஸ். சிவகுமாரன், சிவத்தம்பி, எஸ். பொன்னுத்துரை என்று ஈழத்திலிருந்து பலர் சேர்ந்து எழுத்து பத்திரிகை மூலமாக ஒரு இலக்கிய இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தருமு சிவராமு அப்போது இலங்கையராக இருந்து பல கருத்துகளைக் கொண்டு வந்திருக்கிறார். பின்னால் இவர் ஈழ அடையாளம் அற்றவராகப் புதுக்கவிதையை அறிமுகப்படுத்த முனைகிறார். புதுக்கவிதை எழுபதுளைத் தொடும்போது சி.சு.செ. எப்படியோ ஒரு பெரிய அம்னெஷியாவுக்கு ஆட்பட்டு ஈழ அடையாளத்தை எழுத்து இதழ் உருவாக்கிய இயக்கத்திலிருந்து துண்டித்து விட்டிருக்கிறார். எழுத்து பத்திரிகையின் 25-ஆம் இதழிலிருந்து 45-ஆம் இதழ் வரை படித்துப் பார்த்தால் ஈழத்தவர்களின் சிந்தனைப் பங்களிப்பு இதழின் உள்ளாற்றலாய்ப் பரிணமித்திருப்பது தெரியும். இலக்கிய வரலாற்றுக்கு இச்செய்தி மிக முக்கியமானதாகும்.
இன்னொரு முக்கியமான சிந்தனையையும் சொல்ல வேண்டும். ஈழ எழுத்துகளையும் தமிழக எழுத்துகளையும் ஒப்பிடும்போது - அதாவது கடந்த முப்பது ஆண்டுகளில் - தமிழகத்தில் மிக அதிகமான கற்பனை உரைநடையும் திறனாய்வு இயக்கங்களும் தோன்றியுள்ளன. ஆனால் ஈழத்தில் கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜெ. கனகரெட்னா சேர்ந்து மார்க்சியத்திறனாய்வை அழுத்திப் பேசியது ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டம். அதற்குப் பிறகுள்ள திறனாய்வுப்போக்கு பற்றியும் ஈழத்தில் ஏதும் இல்லை.
இன்னொரு முக்கிய விஷயம். ஈழத்தமிழ் எழுத்தில் ஆங்கிலப் படிப்பு, ஏனோ, கடந்த முப்பது ஆண்டுகளில் உரமாகப் போய்ச் சேரவில்லை. இக்காலத்தில் தமிழகத்தில் ஆங்கிலத்திலிருந்து நடந்த மொழிபெயர்ப்புகள் பற்றி விரிவாக எழுதப்பெற வேண்டும். ரஷ்ய, ஸ்பானிஷ், ஆங்கில, ஃப்ரெஞ்சு எழுத்துகள் ஆங்கிலம் மூலமாக மிகப்பெரிய அளவில் தமிழுக்குக் கொண்டுவரப்பட்டன. ஈழத்தில் இப்படி ஏதும் நடக்கவில்லை.
ஆனால் 1983-இலிருந்து ஈழப்போராட்டம் புதிய கட்டத்தை எட்டியபோது அது கவிதையைப் புதுத்தளத்தில் கொண்டு சேர்த்தது. புதிய ஈழக்கவிதை என்று புது அடையாளத்துடன் உருவானது. பழைய கவிஞர்களான மஹாகவி, நீலாவாணன், சண்முகம் சிவலிங்கம், தா. ராமலிங்கம் போன்றோரின் மொழிநடை மரபிலிருந்து விலகிய ஒரு தனியான குரல் வெளிப்பட்டதுதான் 20-ஆம் நூற்றாண்டின் ஈழக்கவிதையின் உச்சக்கட்டம். இதில் இன்றெழுதும் பலர் புதிய ஆளுமையுடன் வெளிப்பட்டனர். (பார்க்க : ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதை, காவ்யா வெளியீடு. இந்தத் தொகுப்பு கன்னட மொழியில் தனித் தேசிய இனப் பிரச்சினையை அழுத்திப் பேசிய ஒரு இயக்கத்தால் அதிகம் பிரச்சாரப்படுத்தப்பட்டது என்பதும், தமிழில் வரும் முன்பே கன்னடத்தில் இத்தொகுப்பு வந்தது என்பதும் ஆவணப்படுத்த வேண்டிய செய்திகள்)
இந்தப் புதுவிதக்கவிதைகள் ஈழக்கவிதையின் முந்தைய தடத்திலிருந்து வந்தவை அல்ல. மஹாகவியின் கவிதை போன்றன அல்ல அவரது மகனான சேரனின் கவிதைகள். மஹாகவியிடம் அவர் கவித்துவ உருவாக்கத்தில் ஒருவகை ஆங்கிலத்தொனி இருந்ததால், ஆங்கிலத்திலிருந்து விடுபட்ட தொனியைத் தேடிக் கண்டடைந்தன, சேரன், ஜெயபாலன், சோலைக்கிளி, நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள். ஈழத் தமிழ்க்கவிதை பற்றிய வரலாற்றை அறிய இது ஒரு பிரயோஜனமான குறிப்பு என்று நினைக்கிறேன்.
ஈழ எழுத்தையும் தமிழக எழுத்தையும் திறனாய்வு நோக்கில் பார்த்து எழுதப்பட்ட அதிகமான கட்டுரைகளோ, நூல்களோ அதிகம் கிடையாது. தமிழகத்தில் எழுதப்பட்டுள்ள நாவல்கள் பற்றியோ, கவிதைகளின் போக்குகள் பற்றியோ ஈழக் கல்வியாளர்களோ, விமரிசகர்களோ அதிகம் எழுதவில்லை.
தமிழக எழுத்தில் இன்று ஒருவித அனைத்துலகப் போக்குகளை சுவீகரிக்கும், உள்வாங்கும் தன்மை உள்ளது. இது சிறப்பாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம். தமிழ் நாவல் எழுத்துச்சூழலில் ஒருவித வட்டாரத்தன்மையின் மாய்மாலம் உள்ளது. ஸல்மான் ரஷ்டி, இந்தியாவில் நாவல்கள் எழுதப்படவில்லை என்ற வாசகத்தை இந்தச்சூழலின் பின்னணியில் யாரும் பார்த்ததாய்த் தெரியவில்லை. குவலயமயமாக்கச் சூழலில் புதிய இலக்கியப் போக்குகள் உருவாகின்றன. நாடுகளின் எல்லைகள் இரண்டு விதமாக உடைய ஆரம்பித்துள்ளன. இறையாண்மை என்பது புத்திபர தளத்தில் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் நான் The White Tiger (வெள்ளைப்புலி) நாவலை அணுகுகிறேன். சமீபத்திய நாவல்களில் வரும் இடம் என்பது முக்கியமான சிந்தனை. ‘உலக இடம்’ (World Space) என்பது புனைகதைகளில் உருவாக ஆரம்பித்துள்ளது. இது பிராந்திய, மரபான நாவலாசியர்களுக்கு அறிய முடியாத விஷயம். இத்தகைய ‘பிராந்திய நாவலாசிரியர்கள்’ இந்திய மொழிகள் பலவற்றிலும் உள்ளனர். அவர்களுக்கு வெள்ளைப்புலி நாவலின் புதுத் தோரணை எரிச்சலூட்டும். ஸல்மான் ரஷ்டியின் கூற்று எரிச்சலூட்டியது. வெள்ளைப்புலி நாவலில் அரவிந்த் அடிகா, புதிய நாவலாசிரியராக இருப்பதால், மரபான பிராந்திய நாவல் மனோபாவத்தைக் கடந்துவிடுகிறார். வட இந்திய கிராமத்தை ஆசிரியர் போய்ப் பார்த்திருப்பாரா என்று நம்மவர்களைக் கேள்வி கேட்கவைக்கும் முறையில் பிராந்தியம் உலக நாவல் வாசகனின் களமாக மாறுகிறது. வட இந்தியக் கிராமத்தைப் போய்ப் பார்க்கத் தேவையில்லை. நைப்பாலின் சில நாவல்களிலும் இப்படிப்பட்ட தன்மையைக் காணமுடியும். குவலயமயமாதல் இலக்கியத்தையும் தேசத்தையும் பொருளாதாரத்தையும் சந்தையையும் ‘உலக இடமாக’ (World Space) மாற்றுவது இப்படித்தான். இதனால்தான் அரவிந்த் அடிகாவின் நாவலான வெள்ளைப்புலி, உலகின் எல்லாப் பெரும்பான்மை பத்திரிகைகளாலும் அங்கீகரிக்கப்பட்டது. இப்படித்தான் அந்த நாவல் இனி எழுதப்படும் பிராந்திய நாவல்கள் உள்வாங்க வேண்டிய எழுத்தை முன்வைக்கிறது. அதாவது பிராந்திய மொழி நாவல்கள் தம்மை தற்காலத்தன்மை கொண்ட நாவலாக ஆக்குவது இப்படித்தான். இலக்கிய சனாதனிகளுக்குத் தங்கள் சாதனையே எல்லாம் என்ற இறுமாப்பு இருப்பதால் பூனைக்கண் திறக்காமல் போகிறது.
இப்படியான ஒரு சூழலின் பின்னணியில் இனி நாம், தமிழக-ஈழ எழுத்துகளை வைத்துப் பார்க்க வேண்டும். மிகப் பிந்திய அகில உலகப் போக்குகளோடு ஒப்பிடவேண்டும். குவலயமயமாக்கம் பற்றிப் பேசும் அறிஞர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத பிராந்தியம் (Region beyond representation) பற்றிக் கூறுவார்கள். தேச-அரசுகள் அதன் வணிக மையங்களை மையப்படுத்துவதால் (குடிசைவாசி நாய் மில்லினியர் படம் மும்பையை மையப்படுத்துவது எதேச்சையானதல்ல.) வேறுசில பிராந்தியங்கள் கவனிக்கப்படாது. இந்தியா பொருளாதார ரீதியாக ‘வளர்கிற’ அதே நேரத்தில் அதன் விவசாயிகள் தற்கொலை செய்வது இதனால்தான். விவசாயிகள் கவனிக்கப்படாத பிராந்தியங்களாவர். இந்த வளர்ச்சியுடன் எதிர்மறையாக இணைந்ததுதான் நக்ஸல் இயக்கமும். 
எனக்கு ஈழக்கவிதையின் தந்தை மஹாகவியின் நீண்ட கவிதையான ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், தமிழகப் புதுக்கவிதையின் பின்னணியில், முதலில் பிடிக்கவில்லை. ஆனால் அந்நாவலுக்கு நுஃமான் எழுதியுள்ள முன்னுரையையும் சண்முகம் சிவலிங்கம் எழுதியுள்ள பின்னுரையையும் படித்தபோது யோசிக்க வேண்டும் என்று தோன்றியது (என்றைக்கும் தமிழ் விமரிசனம் பாதுகாக்க வேண்டிய ஒரு கட்டுரையாக சண்முகம் சிவலிங்கத்தின் பின்னுரை அமையும் என்பது என் கணிப்பு.) தமிழகப் புதுக்கவிதை யாப்பு சார்ந்த சந்தத்தை முற்றாக இன்று ஒதுக்கியிருப்பதால் ஆரம்பக்கட்ட ஈழக் கவிஞர்கள் இன்றைய தமிழகக் கவிதை வாசகர்களை ஈர்க்க மாட்டார்கள். எனினும் சிவலிங்கத்தின் தற்கால காவியம் பற்றிய விளக்கமும் ‘கருத்து பிம்பம்’ பற்றிய கருத்துகளும் ஈழ தற்கால இலக்கியத்தின் ஆரம்பக்கட்டத்தைக் கவனிக்க வைக்கின்றன. ‘மேனாட்டாரின் தற்காலக்கருத்து பிம்பம்’ என்று இமேஜரியைச் சொல்கிறார் என்று கருதுகிறேன். இது மேனாட்டரின் இலக்கிய அம்சங்கள் பிராந்தியங்களில் பாய்வதை விளக்குகிறது.
மொத்தத்தில் இன்றைய அகில உலகத் தமிழர்களின் தோல்வி ஒரு பாடமாக அமைய வேண்டும். இந்த மொழியால் ஏற்பட்ட அனைத்துலக அடையாளம் குவலயமாதலின் பண்புகளை ஊன்றிக் கற்க வேண்டும். தமிழினத்தின் அடிமைத்தனமும் அதுபோல் அதன் வெற்றியும் பிற வல்லாதிக்க சக்திகளோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அந்த வல்லாதிக்கச் சக்திகள் சிங்கள இனத்தை ஆதரிக்க அதனிடம் ஒரு நாடு இருக்கிறது. நாடில்லாத தமிழர்கள் எப்படி தங்களை இனித் தகவமைத்துக் கொள்வது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். எரிந்த கட்சியாக புலிகளா, புலிகளில்லையா என்று பட்டிமன்ற பாணியில் சிந்திப்பதை விட்டுவிட வேண்டும்.
நன்றி - உயிரோசை
படங்கள் - யாழ்ப்பாணத்தின் கல்வி, முகாம்களாக தேசம்
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
12.5.09
குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(246)
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
►
08
(35)
- 108 - 14: லா. ச. ராமாமிருதம்
- எழுத்தை வெட்டும் கல் - 13 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 12 - சிவத்தம்பி
- 108: 13 - வசனகவிதை
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 1 - ழார் பத்தாய்
- எழுத்தை வெட்டும் கல் - 11 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 10 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 9 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 8 - சிவத்தம்பி
- ஒளிப்பதிவும் காலமும் - 3 - மணி கௌல்
- விழியின் கதை - 3
- விழியின் கதை - திரை
- ஒளிப்பதிவும் காலமும் - 2 - மணி கௌல்
- வன்னி முகாம்களைத் திறக்க வேண்டிப் பிரச்சாரம்
- ஒளிப்பதிவும் காலமும் - 1 - மணி கௌல்
- எழுத்தை வெட்டும் கல் - 7 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 6 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 5 - சிவத்தம்பி
- காணாக்காட்சி அல்ல என் சினிமா - கோதார்
- 108: 12 - ஹைக்கூ
- 108: 11 - பிற்போக்கு
- 108: 10 - தர்க்க அலசல்
-
▼
05
(17)
- மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு ...
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்ட...
- ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
- மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை
- சரண்-பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகள் என்னிடம் கோ...
- இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்.....
- உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்
- கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
- குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
- ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா
- எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
- இன்றைய கொடூரத்திலிருந்து உருவாகும் தமிழ்-உண்மை - த...
- அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
- முகாம் என்பது யாது? - 2 - அகம்பென்
- பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்
- தூதுவர் - ஸில்வியா ப்ளாத்
-
►
10
(21)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (175)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (24)
- அணுசக்தி (10)
- அறிவியல் (41)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (53)
- உரைமொழி (4)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (168)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (174)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழலியல் (20)
- செயல் (84)
- ஜெர்மன் (9)
- திரை (25)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (10)
- நடனம் (2)
- நட்பு (17)
- நிகழ்வு (6)
- நேர்காணல் (14)
- பயணம் (11)
- போதலேர் (39)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (7)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (31)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (52)
- லண்டன் (11)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (9)
- வரலாறு (166)
- வரைமொழி (120)
- வானொலி (3)
- விழியின் கதை (9)
- ஸில்வியா (37)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸெர் (2)
- ஸ்பானிஷ் (23)
5 கருத்துகள்:
//இந்தப் பின்னணியில்தான் நான் The White Tiger (வெள்ளைப்புலி) நாவலை அணுகுகிறேன். சமீபத்திய நாவல்களில் வரும் இடம் என்பது முக்கியமான சிந்தனை. //
நாகார்ஜுனன் - அரவிந்த் அடிகாவின் இந்த நாவல் குறித்து நீங்கள் ’ஏனோ போகத் தோன்றவில்லை’ என்ற ரீதியில் உங்கள் பதிவில் எழுதியிருந்ததைப் படித்தேன் - என்ன தொனியில் எழுதினீர்களென்று விளங்கவில்லை; இருந்தாலும் இது குறித்து நீங்கள் எழுதாதது ஏமாற்றமே - எழுதவேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை என்றாலும் கூட. எனது குறிப்பிலும் கூட நாவலின் அதே தொனியில் tongue-in-cheek ஆக பாராட்டித்தான் எழுதியிருந்தேன் - அது எந்தளவு தெளிவாய் வெளிப்படுகிறது என்று தெரியவில்லை. நாவலைத் தாக்கி எழுதியிருக்கிறேன் என்றும் படிக்கலாமோ என்னவோ. ருஷ்டியின் சமீபத்திய Enchantress of Florence படித்திருப்பீர்களென நம்புகிறேன் - இருபது வருடங்களுக்கு முந்தைய ருஷ்டி இதுபோன்ற குப்பைகளை எழுதியிருக்க முடியுமா என்ற ஆயாசம் தான் எழுகிறது. அரவிந்த் அடிகாவின் இந்த நாவல் இந்திய ஆங்கில எழுத்தில் ஒரு முக்கியமான முன்னகர்வு - இதே கதைக்களனை ருஷ்டி அல்லது, ஏன் - பங்கஜ் மிஷ்ரா போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் கூட எவ்வளவு கேவலமாக இருந்திருக்குமென்று யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஜெயமோகன் என்னடாவென்றால் காவிய மணலுக்குள் தலையை விட்டுக்கொண்ட நெருப்புக்கோழி மாதிரி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அரவிந்த் அடிகா என்ற மேம்போக்கான ஆங்கில எழுத்தாளர் மேற்கத்திய ரசனைக்கேற்ப ‘வடித்துக் கொட்டும்’ ஆங்கில எழுத்தாளர் என்று கி.மு. காலத்திலிருந்து தொடர்ந்து அதே பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கிறார். ஆங்கில எழுத்துக்கள் என்று மேற்கத்திய உலகத்துக்கு சமீபத்தில் அறிமுகமானவற்றில் தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய இந்தியா குறித்து இவ்வளவு எள்ளலுடன் கச்சிதமாக எழுதப்பட்ட நாவல் சமீபத்தில் வேறெங்கே இருக்கிறது? ஜெயமோகன் தல்ஸ்தோய், தாஸ்தாயெவ்ஸ்கி, விஷ்ணுபுரம் வரிசையில் இந்த நாவலை வைத்துப் பார்த்து இது ஒரு குப்பை என்பார்; இந்த நாவல் நிரப்பியிருப்பது அதற்கெனவுண்டான ஒரு பிரத்யேக வெற்றிடத்தை (niche) - அடுத்து அடிகா ஒரு பெருங் காவியத்தை எழுதுகிறாரா இல்லையா என்பது முக்கியம் அல்ல, அடிகா என்ற நபரும் வாசிப்பவர்களுக்குத் தேவையில்லை. அந்த இடம் இந்தப் புத்தகத்தால் நிரப்பப்பட்டுவிட்டது என்றே கருதுகிறேன் - இது திட்டமிட்டுச் செய்யப்படுவது அல்ல; தற்போக்கில் நிகழ்வது - அதனாலேயே தமிழவன் குறிப்பிட்டிருப்பது போல ’’இலக்கிய சனாதனிகளுக்கு பூனைக்கண் திறக்காமல் போவது’’ ’தங்கள் சாதனையே மேல் என்ற இறுமாப்பு’ தவிர்த்து, இந்த அனிச்சையான போக்குகள் தங்களது திட்டவட்டமான செயல்திட்டங்களை, நம்பிக்கைகளை, உரைகற்களை எள்ளி நகையாடுவது குறித்து எழும் எரிச்சலும் மேலொரு காரணம் என்று நினைக்கிறேன். தமிழவன் இந்த நாவலை எழுதிய ஆசிரியரைத் தவிர்த்து தனிப்பட்ட ஒரு entityயாக, மிகச் சரியாக அணுகியிருக்கிறார் என்று தோன்றுகிறது - இதை மேலும் விரித்து எழுதவேண்டும் அவர்.
இந்த நாவலின் கதைக்களம் அதாவது திணை, சிறுநகரத்தின் குற்றப்பரப்பிலிருந்து கிளம்பி பெருநகரின் தொழில்மயப்பரப்பாக விரிவது - ஹிந்தி சினிமாவில் இருக்கும் ஒன்றுடன் இணைவதைப்போல இருப்பதால் என்னால் முழுதும் ஒன்ற முடியாமல் போய்விட்டது. இந்த ஒன்ற முடியாத விஷயம்தான் இந்தியா என்பதாக வைத்துக்கொண்டு பார்த்தாலும் இந்த ஆசிரியர் இதில் திளைப்பவரா, நீங்கள் சொல்வதைப்போல இதை எள்ளியிருப்பவரா என்ற சந்தேகம் எஞ்சுவதால் எழுதாமல் விட்டேன். சொல்லப்போனால் இந்தத்திசையில் இந்த நாவல் போதாது என்பது என் கணிப்பு, போதும் என்பது இங்கே பிரிட்டனில் இருப்போரின் கணிப்பு, வேண்டாம் என்பது இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகனின் கணிப்பாக இருக்கலாம்.
நான் சொல்ல வந்தது கிட்டத்தட்ட இதுதான்: ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால் மட்டுமே இது முக்கியத்துவம் பெறுகிறது - தமிழில் அல்லது பிற பெரும் இந்திய மொழிகளில் எழுதப்பட்டிருந்தால் பத்தோடு ஒன்று பதினொன்றாகத்தான் இருந்திருக்கும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. இ.பா, ஜெயமோகன் போன்றவர்கள் அடிகா போன்றவர்களை விட எழுத்தாளர்கள் என்ற அளவில் எங்கோ உயரத்தில் இருப்பவர்கள் - அவர்களது ரசனை அவர்களது ரசனையாக மட்டுமே இருப்பதில் தவறேதும் இல்லை; இருந்தாலும் தமிழ் மனம், 'ஊறிப் பதப்படுத்தப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டவைகளையே' வழிமொழிந்து அங்கீகரிப்பதில் பெரும் இன்பமும் திருப்தியும் கொள்ளும் மனம் அல்லவா! 'இலக்கியத் தரத்துக்கு' இந்தப் புத்தகம் போதுமா போதாதா என்பதைக்கூட நாம் முந்தைய அளவீடுகளைக் கொண்டுதான் தீர்மானிக்கிறோம் - இது அனைத்துக்கும் பொருந்தும் என்று தோன்றவில்லை. ஜும்பா லஹரி, கிரண் தேசாய் போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட புக்கர் பரிசைவிட இது மேலானது என்பது என் தாழ்மையான கருத்து.
இருக்கலாம்.
1. ஆனால் இந்திரா பார்த்தசாரதி ஓரிடத்தில் நயத்தகு விமர்சனம் என்ற நிலையை முன்வைக்கிறார். இங்கே நாவல் என்ற வடிவம் தேச-மறுவடிவமைப்புக்கு உதவும் (உதவ வேண்டும்?) என்ற பார்வை இருப்பதாகத் தெரிகிறது. மாறாக இந்த நயம் போய்விட்டது என்பதைச் சுட்டும் தமிழவன், இங்கே வேறு ஒரு பரப்பு வருகிறது, அதை ஆங்கில எழுத்துலகம் அங்கீகரிக்கிறது என்பதைக் குறிக்கும் அறிகுறியாக இந்த நாவலை முன்வைக்கிறார்.
2. என்னைப் பொறுத்தவரை மொழி ஒவ்வொன்றிலும் நாவல் தோன்றும்போதும் தேசக்கட்டமைப்பும் தேசமீறலும் ஆட்டத்தில் இறங்கின. இறங்கும். மொழியளவில் நாவல் தேசத்தை மீறும் களம்; ஆக, ஆட்டம் கொடூரமாகி விட்டிருப்பதை எப்போதோ நாவல் உணர்ந்தாகிவிட்டது எனலாம்.
3. சாஹித்ய அகாதமி தொடங்கி புக்கர், ஆஸ்கர், நோபல் ஈறான பரிசுகளுக்கு மரியாதை செலுத்திக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. இவை ஒரு pretext. அவ்வளவுதான்.
நாகார்ஜுனன்
இந்திரா பார்த்தசாரதி ஓரிடத்தில்
உங்கள் கடைசி மறுமொழியுடன் முழுக்க ஒப்புதலே. பரிசுகள் என்பவை (விமர்சனம்/பரிந்துரை எதுவும் போல) திசைகாட்டிகள், அல்லது நீங்கள் சொன்னது போல ஒரு pretext மட்டுமே, அவை காட்டும் திசைகள் சரியா தவறா என்பது கூட அவரவர் தேர்வு பொறுத்தது என்பதிலும் ஒப்புதலே.
பதில்களுக்கு நன்றி.
Post a Comment