பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

14.4.09

தயை - ஸில்வியா ப்ளாத்

வீடெனதில் மிதப்பதும்
தயை.
ஆம், தயை எனும் நல்லாள்.
ஆழியிவளின்
செந்நீலக்கல் பல
ஜன்னலில் புகையும்.
ஆடி பல
புன்னகையில் நிரம்பும்.

குழவிக்கதறலொப்ப
நிஜமானதும் யாது?
இதனினும் கதறும் காட்டுமுயல்
எனினும்
அதற்கில்லை ஆன்மா.
நோயேதும் ஆற்றும் சர்க்கரை
என்பது தயைவாக்கு.
ஆயினும் சர்க்கரை ஒரு திரவம்.
அதன் ஸ்படிகங்கள் பிசுபிசுக்கும்.
தயையே, தயையே
இனிதாய் இனி
துண்டுபல
நீ பொறுக்கலாம்.
எனதான
ஜப்பான் பட்டும்
நம்பிக்கையற்ற பட்டாம்பூச்சிகளும்
பிணைக்கப்பெறலாம்,
மயக்கம் தரப்படலாம்
எப்போதும்.

இப்போதோ
நீ வருவாய்
நீராவியணைக்க
தேநீர்க்கோப்பையுடன்.
குருதித்தாரையே கவிதை.
நிறுத்த முடியாது அதை.
நீ எனக்களித்த
குழவியரும்
இரு ரோஜாக்கள்.

-- Sylvia Plath, Kindness, 1963.

2 கருத்துகள்:

Giri said...

"The blood jet is poetry"
- குருதித்தாரையே கவிதை.
உயிர்ப்பான மொழிபெயர்ப்பு!

சில T.S.Eliot கவிதைகளையும் மொழிபெயர்க்க வேண்டுகிறேன்.

ரா.கிரிதரன்
http://beyondwords.typepad.com

நாகார்ஜுனன் said...

டி. எஸ். இலியட் - நிறையத் தமிழாக்கியிருக்கிறார்கள்.. சி. மணி, பிரம்மராஜன் ஆக்கங்களை வாசிக்கலாம். என்வரை இனிமேல்தான் பார்க்க வேண்டும். ’மொழிபெயர்க்க’ என்ற சொல்.. ம்ஹூம்.. அதை விட்டாயிற்று.

பதிந்தவை