பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

22.4.09

இறுதிச்சொற்கள் - ஸில்வியா ப்ளாத்

வெறும் பெட்டி வேண்டாம்
பெரும் கற்தாழி வேண்டும்
யான் காண.
புலிவரியும்
வட்டநிலா முகமும் கூட.
ஊமைக்கனிமம் வேர் பலதுடன்
இவர்வர,
காணவும் விருப்பம்.
காணவும் காண்கிறேன்.
வெளிறும்
விண்மீன் தூரத்து
முகம் பல.
இப்போதிவர் ஏதுமில்லை.
குழவியரெனவும் இல்லை.
தாய்தந்தையரின்றி
முதற்கடவுளர் போல்.
முக்கியமோ யானென
நினைப்பாரிவர்.
என் நாள் பலதை
இனிதாக்கி
பழமாய்ப் பாதுகாக்கவும்
வேண்டுமென
நினைத்தேன்.
ஆடியெனதில் புகைபடிய
இன்னும் சில மூச்சுவிட
அதில் ஏதும்
பட்டுத்தெறிக்காது.
மலர்முகம் பலதும்
காகிதம் போல்
வெளிறும்.

நம்பவில்லை ஆன்மாவை யான்.
நீராவியாய் வெளியேறுமது
கனவெனதில்
என் வாயும் கண்ணும் திறக்க.
நிறுத்த முடியவில்லை அதை.
திரும்பாது ஒருநாள் அது.
தங்கும் அவை,
சிறப்பான தம் சிற்றொளி சில
கைபட்டுத்தான் கதகதக்க.
புறுபுறுக்குமோ அவை.
காலடியெனதும்
சில்லிட்டுச்செல்ல
என் பேரோசனைக்கல்லின்
நீலக்கண்ணும்
என்னை ஆசுவாசப்படுத்தும்.

என் செம்புச் சமையல்பாத்திரம்
எனக்குக் கிட்டட்டும்.
என் சிகப்புக்குடம்
என்மீது இரவுப்பூவாய்
மணத்துடன்
மலரட்டும்.
காயக்கட்டுகளாய்
என்னைக் கட்டட்டும்.
இதயமெனதை
நன்கு மடித்து
பொட்டலமாய்
என் காலடியில்
சேமித்து வைக்கட்டும்.
யானும் யார்? அறிகிலேன்.
சூழ்ந்து இருளும் வரும்.
சூலுறும் கடவுளர் முகத்தில்
இனிதாய் ஒளிரும்
இந்தச் சிறுபொருளும்.

--- Sylvia Plath, Final Words, 1961

4 கருத்துகள்:

Giri said...

//குளிரெடுக்கும் போது
என் நீலப்பெருங்கண்
என்னை ஆசுவாசப்படுத்தும்.

இந்த கவிதையின் ஆங்கில வரிகள் எனக்குக் கிடைக்கவில்லை.Last Wordsஇல் இருக்கிறதா?

ரா.கிரிதரன்
http://beyondwords.typepad.com

நாகார்ஜுனன் said...

They stay, their little particular lusters
Warmed by much handling. They almost purr.
When the soles of my feet grow cold,
The blue eye of my turquoise will comfort me

மேற்கண்ட வரிகளைச் செய்யும்போது ஓரிரு சொற்கள் விட்டுப்போயிருக்கின்றன! சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன். மீண்டும் செய்திருக்கிறேன். பாருங்கள்.

Giri said...

இசையைப் பற்றி உங்கள் பதிவுகளைப் படித்தேன்.மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இதைப் போல இசைக் குறிப்புகளை என் வலைப்பகுதியில் தந்துள்ளேன்.நேரம் கிடைக்கும் போது வந்து போகவும்.

உங்கள் புத்தகங்கள் லண்டனில் எங்கு கிடைக்குமென தெரியப்படுத்தவும்.

நன்றி
ரா.கிரிதரன்.
http://beyondwords.typepad.com

நாகார்ஜுனன் said...

என் புத்தகங்கள் இரண்டு இப்போது புழக்கத்தில் இல்லை. ஆர்தர் ரைம்போ கவிதைகளின் தமிழாக்கத்தையும் வலைப்பதிவுகள் தொகுப்பையும் சென்னை ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது, அவை நிச்சயம் லண்டனில் கிடைக்காதவை.

பதிந்தவை