பாரதியின் தத்துவ மரபு பற்றி முப்பால் மணி எழுதிய கட்டுரை திண்ணை இதழில் அண்மையில் வெளியானது.
காந்தியார் குறித்து ஜமாலன் தீராநதி ஏப்ரல் 2008 இதழில் எழுதியதில் அ-த்வைதம் பற்றி விமர்சனமாக இருந்ததற்குப் பதிலளிக்கும்போது, திண்ணையில் தமிழில் அ-த்வைத மரபு பற்றி அண்மையில் வந்த சுவாரசியமான கட்டுரை, வாசியுங்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன்.
தற்போது திண்ணையில் இதைத் தேடித்தான் வாசிக்க வேண்டும் என்பதால் இங்கே மறுபதிவாக இடப்படுகிறது. இதை எளிதில் வாசிக்க சில மாற்றங்கள், அடிக்குறிப்புக்கள் உண்டு. உரிமையுடன் செய்திருக்கிறேன். முப்பால் மணியும் திண்ணை ஆசிரியர் குழுவும் எனனைப் பொறுத்தருள வேண்டும்!
பாரதியின் தத்துவ மரபு குறித்த இந்தக் கட்டுரை முக்கியமானது. இது பற்றிய என்னுடைய கருத்துக்களைப் பிறகு எழுதுகிறேன்.
பாரதியாரது தத்துவ மரபு - முப்பால் மணி
1. தமிழக மரபில் வேதாந்தம்
சங்ககாலத் தமிழகத்தில் வேதங்கள் பயிலப் பட்டன, சங்ககால வேதக்கடவுளர் பலர். அவர்கள், இந்த இகஉலகு சார்ந்தவரே. இந்திரன் கோசிகக்குடியில் பிறந்தவன் (1). இப்படி யாகத்திற்குரிய கடவுளரும் பலர். இவர் பிறப்பும் உருவமும். குணமும் உடையவரே. காலத்துக்கும் இடத்துக்கும் உட்பட்டவரே. எனினும் வேதக்கடவுளரின் துதிப்பாடல்களை, வேத மறைகளை உணர்ந்தவர் தமிழறிந்து தம்முடைய செய்யுட்களைப் புறம், அகம் பிறகு பரிபாடல் சார்ந்து அளித்தது தமிழ்மரபின் தவப்பயன் ஆகும், ஆயினும் துதிப்பாடல்-கருத்தியல்கள் சார்ந்து தமிழ்மொழியில் அப்போதைய தம்முடைய தத்துவத்தைத் தராதது வேதமரபின் தவக்குறை ஆகும்.
பெரியாழ்வார்தான் (2) வேதாந்த விழுப்பொருள் எனத் திருமாலைத் தமிழில் ஏத்துகிறார் (3). இதே காலத்தில் திருமங்கையாழ்வார் தைத்ரீய, சாந்தோக்கிய உபநிடதங்களையும் பவுழியன் எனக் கௌஷிதகீ பிராமணத்தையும் குறிப்பிடுகிறார் (4).
மாணிக்கவாசகர் மாயாவாதம் எனக் குறிப்பது, சௌத்ராந்திக-யோகாசார-பௌத்தத்தை மட்டுமல்லாமல் பிரம்ம சூத்திர அத்வைதத்தையும் ஆகும். மணிமேகலையில் சுட்டுணர்வு எனப் பயிலப்படுவது குறிப்பிடத்தக்கது (5) -"புறநிலைப்பொருளிடத்து வெளிப்பொருண்மை மட்டும் அறியப்படுகிறது. மற்றபடி அப்பொருளுடைய பொருள், பெயர், பண்பு, சாதி, செயல் ஆகியன பஞ்ச கற்பனையாக அப்பொருளுக்கு மனித உணர்வுகளால் கற்பிக்கப்படுகின்றன, உண்மையில் இவை ஐந்தும் அப்பொருளின் இடத்தில் இல்லை."
இது சௌத்ராந்திக-யோகாசார-பௌத்தம் ஆகும். இதிலிருந்து இன்னும் முன்னேறி "புறப்பொருளானது பண்புடையது. அதனால் அது அழியும் எனவும் பிரம்மம் ஒன்று மட்டுமே உண்மை, பஞ்சபூதப்பொருள்கள் இருப்பதாகக் கருதிக்கொள்ளும் எண்ணம் அவித்தை, மாயைத்தன்மையானது" என்பதாக, சங்கரர் தமது அகவய-அத்வைதத்தை விளக்கினார், இதன் பொருட்டு அத்தியாசவாத முறையியலைக் கைக்கொண்டார்.
சௌத்ராந்திக யோகாசார பௌத்தம் மற்றும் சங்கரருடைய அத்வைதத்தை மாணிக்கவாசகர் மாயாவாதம் என்றார். பிரம்ம சூத்திர அத்வைத ஞானமே இப்படி மதிப்பிடப்படுகின்றது. பகவத் கீதை ஆழ்வார்களால் பேசப்படவில்லை. எனினும் நம்மாழ்வாரின் ஐந்தாம் பத்தின் ஆறாம் திருமொழி பகவத் கீதைக் கருத்தியலை நினைவுபடுத்துகிறது.
கி. பி. எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டுக்காலப் பகுதியில்தான் உபநிடதம், பிரம்ம சூத்திரம் சார்ந்த பிரம்மஞானம், அத்வைதம் ஆகியவை இங்கு வழக்கிற்கு வந்திருந்தது. இதைத்தழுவி, தமிழகத்தில் அகவய-அத்வைத வேதாந்தம் கி. பி. எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டுகளில் விளக்கம் பெற்றது. எனினும் தமிழில் அதற்கு நூல்கள் இல்லை. சமஸ்கிருதத்திலேயே உபநிடதங்கள், பிரம்மசூத்திரம் ஆகியன ஓதியுணரப்பட்டன. அகம்-பிரம்மாஸ்மி என அகவயப்பட்ட பிரம்மமே நிறுவப்பட்டது.
எனினும் வைணவ வழியில் உள்ளும்-புறமும், பொருளிலும்-உணர்விலும், இகஉலகிலும்-அப்பாலும் நிறைந்த கடவுளை, நாராயணனை, அடிமை மற்றும் பிரபத்தி (சரணாகதி) நெறிகளுடன், ஆச்சாரியர், தம்முடைய இறையியலிலும் தத்துவவியலிலும் முன்னிலைப்படுத்தினர் (6). சார்வாகம், உலகாயதம், சுதந்தர மரபு (சம்சாரிகள், சங்கர அத்வைதம் மற்றும் செமித்திய நெறியாளர்), பிற- மற்றும் பலதெய்வ-வணக்கம். ஆகியனவற்றை எதிரிட்டுக்கொண்டு தம்முடைய விசிஷ்டாத்வைத்த் தத்துவத்தை உருப்படுத்தினர், உலகியல் பொருட்களும் மற்றும் மனித சம்சார வாழ்வும் துன்பமானவை, பரம்பொருளே இன்பமானது என்றனர், இதனை முன்னிட்டுக் கொண்டு ஆழ்வார்களுடைய திவ்வியபிரபந்தம், உபநிடதம், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் ஆகியனவற்றுக்கு ஆச்சாரியர் பேருரை கண்டனர்.
அப்போது உலகப்பொருள்கள் மற்றும் உயிர்கள் அனைத்துமே கடவுளின் வடிவங்கள் என்று ஆயன்பட்டனார் (7) விளக்கினார், பகவத் கீதையைப் பரமார்த்த தரிசனம் எனத் தமிழில் அளித்தார், பிரஸ்தானத் திரயங்களில் இதுதான் முதல் தமிழ் நூல்.
இந்த ஆயன்பட்டனார் காலந்தொட்டு, பொருளுக்கும் உணர்வுக்கும் மற்றும் புறத்துக்கும். அகத்துக்கும் எட்டாத அப்பாலான ஆழ்நிலை-அகவயப் பிரம்மமா, அனைத்துள்ளும் நிலவி, தனக்குள் அனைத்தையும் கொண்ட புறவயப் பிரம்மமா என அத்வைத வேதாந்தத்தில் இரு துறைகள் தமிழகத்தில் நிலவின.
ஆயன்பட்டனாரின் பரமார்த்த தரிசனம் என்னும் பகவத் கீதை, தமிழக அத்வைத வேதாந்த வரலாற்றில் அகவயப் பிரம்ம ஞானத்தையும் அனைத்துமான ஏகாத்மப் பிரம்ம ஞானத்தையும் தன்னுள் சங்கமித்துக்கொண்டு எதிர்காலத்தை நோக்கித் திகழ்ந்தது. இந்த இருவகை அத்வைதங்களும் இக உலகையும். புறநிலைப்பொருளையும். சம்சார வாழ்வையும் மாயை, காட்சிப்பிழை, பொய் என்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இக-உலக நிலையிலிருந்து அப்பாலை-நிலைக்கும் சம்சார-நிலையிலிருந்து முக்திநிலைக்கும் இருமைநிலையிலிருந்து ஏகத்துவ நிலைக்கும் த்வைதத்திலிருந்து அ-த்வைதத்திற்கும் இந்த இருவகை வேதாந்தங்களும் விளக்கம் உரைத்தன, உலகம், புறப்பொருள் ஆகியன மாயை அநித்தியம் என்பதிலும். உலகின் பன்மைத்தன்மை என்பது தோற்றம் கற்பனை என்பதிலும் பிரம்மம் என்பது மட்டுமே உண்மை என்பதிலும் இந்த விளக்கம் வேர்கொண்டிருந்தது, எனினும் பிரம்மத்தை உணர்வதிலும். விளக்குவதிலும் இந்திய வேதாந்திகள் வேறுபாடு கொண்டிருந்தனர்.
பதினாறாம் நூற்றாண்டில் தத்துவராயர் தமிழக அத்வைத மரபில் "அனைத்தின் உள்ளும் புறமும் பிரம்மமே விளங்குகிறது. உலகும் புறப்பொருளும் இதன் பன்மைத் தன்மை எல்லாம் பிரம்மத்தின் விளக்கங்களே. எதுவும் மாயை இல்லை" எனப் பரமாத்வைதம் என்ற நெறி கண்டார். இதன்பொருட்டுப் பிரஸ்தானத் திரயங்களில் ஒன்றான உபநிடதங்களைச் சொரூபானந்த சித்தி என்ற பெயரில் தமிழில் முதன்முதலில் பிரம்ம கீதை என்ற பெயரில் எழுதினார், இந்த நூலுக்குக் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் பரமாத்வைத மரபில் உரை செய்தார்.
தத்துவராயர் தமிழகச் சைவத்துறையில் வேதாந்தம் என்ற மரபைத் தோற்றுவித்தார் என்பது வரலாறு. இந்த வேதாந்தத்துக்கும் சித்தாந்தத்துக்கும் இடையேதான் தாயுமானவர் தொடங்கி வள்ளலார் உள்ளிட்டு அனைத்து சைவ ஞானிகளும் சமரசம் நாடிப் பாடுபட்டனர். சூத சம்ஹிதை. பிரம்ம கீதை, பாடுதுறை, பெருந்திரட்டு, ஞான வாசிட்டம், கைவல்ய நவநீதம், நிஜானந்த விலாசம், சுவாநுபவ மஞ்சரி. சுவாநுபூதி ரசாயனம், நூற்றொகை விளக்கம், மனோன்மணீயம், நாநாஜீவவாதக் கட்டளை, கோ. வடிவேலு செட்டியார் உரை, வையாபுரிப்பிள்ளையின் இலக்கிய உதயம். தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் கானல்வரி ஆய்வு ஆகியன பரமாத்வைதத்துக்கு உரிய நூல்கள்.
தமிழக அத்வைத மரபு ஆயன்பட்டனாருக்குப் பிறகு (பதினேழாம் நூற்றாண்டில்) செங்கோட்டை ஆவுடையக்காளிடம் நிலைகொண்டது, இந்த அம்மையார் அனுபூதி-அத்வைதத்தை தமிழகத்தில் உருவாக்கினார். அப்போது சமஸ்கிருதத்தில் வித்யாரண்யர் பஞ்சதசி என்ற நூலில் அத்வைதத்தை விளக்கியிருந்தார். இதனை அடியொற்றிக் கைவல்ய நவநீதம் எனத் தமிழில் அத்வைத நூல் உருவானது, தத்துவராயர் மரபில் ஞானவாசிட்டம். நாநாஜீவவாதக் கட்டளை ஆகிய நூல்கள எழுந்தன, இவை பரமாத்வைத வேதாந்தத்தின் பிரமாண நூல்கள்.
அகவயப் பிரம்மமா, அனைத்தையும் அளாவி உள்ளும் புறமும் ஆகவுள்ள புறவயப்பிரம்மமா என்ற இந்த இருதிறமும் 1892-ஆம் ஆண்டில் விவாதப்பொருளாக மனோன்மணீயம் நாடகத்தில் நிட்டாபரர்-கருணாகரர் உரையாடலாகத் திரண்டது. சங்கரர் வழிவந்த அகவய-அத்வைதமா, தத்துவராயரால் பொலிவு பெற்ற புறவய-அத்வைதமா என்பது அந்த உரையாடலின் உள்ளொளி. அடுத்து, கோ. வடிவேலு செட்டியார் என்ற சான்றோரால் தத்துவராயருடைய பரமாத்துவைதம் தொடர்ந்து நிலவியது.
2. பாரதியாருக்கு முந்திய வேதாந்தம்
1880-ஆம் ஆண்டில் சிதம்பரத்திலிருந்து வந்த பிரம்ம வித்யா இதழில் சீனிவாச சாஸ்திரி அத்வைதக் கட்டுரைகளை வெளியிட்டார், சார்வாகம் உலகாயதம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகியனவற்றை மறுத்து எழுதினார். ஜான் லாக் (John Locke), தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes) ஆகியோருடைய ஆங்கிலேய உலகாயதத்தையும் மற்றும் ஜெர்மானிய புஹ்னர் மேற்கொண்டு இருந்த ஆற்றல்-பொருள் பற்றிய உலகாயதமும். அதோடு சமூகம் மற்றும் சோஷலிசத்தின்பால் இயற்கை சார்ந்த தத்துவங்களைக் கொண்டு செலுத்துவது பற்றிய கருத்துக்களையும் அறியப்பெற்று இருந்த கல்வியாளர் 1880 முதற்கொண்டு இங்கே இருந்தனர். மேலும் வோல்த்தேர் (Voltaire), ரூஸ்ஸோ (Rousseau) வழிப்படுத்திய ஃப்ரெஞ்சுப்புரட்சி மற்றும் (????) விவரித்த நாத்திகம் ஆகியனவற்றைப் பயின்ற படிப்பாளிகள் இங்கே நிலவினர்.
1870-ஆம் ஆண்டு முதற்கொண்டு சைவச்சான்றோர்கள் (யாழ்ப்பாணம் கொக்குவில் குகதாசர், ச. சபாரத்தின முதலியார், சூளை சோமசுந்தர நாயக்கர்) இங்கே நேர்க்காட்சிவாதத்தின் ஆன்மிக மற்றும் சமூக விளக்கங்களைக் கைக்கொண்டு புத்தெழுச்சியுடன் திகழ்ந்தனர், கூடவே இங்கே ஜே. எஸ். மில் (J. S. Mill), ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் (Herbert Spencer), ஆகியோரின் நேர்க்காட்சிவாத வழிப்பட்ட பகுத்தறிவு-நாத்திகக்கருத்துகளும் ஆங்கிலக்கல்வியாளரிடையே வலுவுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன (இந்த நேர்க்காட்சிவாதக் கல்விப்பயிற்சி பெற்றவரைத்தான் பாரதி "பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்" என வெறுத்தார். பாரதியாரால் "பொய்மைசேர் மதியினில் புலைநாத்திகம் கூறுபவர்" என்று பேசப்பட்டவர் இவர்களாக இருக்கலாம்).
1880 முதல் 1896 முடிய பிரம்ம வித்யா இதழ் இவர்களோடு தத்துவப்போர் புரிந்தது. (கமலாம்பாள் சரித்திரம் நாவல் எழுதிய) பி. ஆர். ராஜம் அய்யர், சென்னை அழகியசிங்கர் தம் பங்குக்குக் கட்டுரைகளைத் தந்தனர். இவர்கள் புல், பூண்டு, மரம், விலங்கு, பறவை, மனிதர், தேவர், எல்லாப்பிறப்பும் பிரம்ம ஸ்வரூபங்கள் என்று முதலில் பேசினர். பிறகு பஞ்சபூதப்பொருட்களும் இல்லை என்றனர். கடவுளானது (பிரம்மானது) தனது மாயை காரணமாகப் புல், பூண்டு, மரம், விலங்கு, பறவை, மனிதர், தேவர் என எல்லாப்பிறப்புமாகத் தோற்றம் தருகிறது, ஆகவே புல், பூண்டு. ஆகியன தோற்றம் மட்டுமே, இருப்பது ஒன்றே, அது பிரம்மம் எனச் சுட்டினர், புறவயப்பொருள்களையும் இயலுலகையும் ஏற்றனர். பிரம்மத்தையும் ஏற்றனர். என்றாலும் அறிவு மட்டுமே உண்மை, பொருள்கள் பொய் என்ற கருத்தியலின்பால்நின்று, பிரம்மம் ஒன்று மட்டுமே உண்மை, புல், பூண்டு, மரம், விலங்கு, பறவை, (நதி. கடல். தீ. காற்று), தேவர் (நாட்டார் குலதெய்வங்கள்) மனிதர் எல்லாப்பிறப்புகளும் தோற்றம் மட்டுமே என்று முடிவாகக் கூறினர்.
இப்படியாக, இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நின்றனர், அகவயப் பிரம்மமா அல்லது அனைத்தையும் அளாவி உள்ளும் புறமும் ஆக விளங்கும் புறவயப் பிரம்மமா என்ற வரலாற்றுச்சூழ்நிலையில் அகம்-பிரமாஸ்மி என அகவயப் பிரம்மத்திற்கு அத்வைதத் துறையில் விளக்கம் கூறினர்.
அப்போது பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றான பிரம்ம சூத்திரமானது, முதன்முதலாக 1905-ஆம் ஆண்டில் சங்கர. ராமாநுஜ. நீலகண்ட பாஷ்யங்களுடன் தமிழில் மாடபூசி ராமாநுஜாச்சாரியாரால் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சங்கரரின் அகவய-அத்வைதமே முதலில் பாரதியாரிடம் பிரவேசித்தும் இருந்தது.
3. பாரதியாருடைய வேதாந்தம்
தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் பிறப்பாலேயே அத்வைதிகள். இந்நிலையில் மேற்கூறிய அத்வைதக் கருத்தியல் பின்னணியிலேயே முதலில் பாரதியார் இருந்தார். அப்போது “தேகம் என்பது யான் அன்று, மேலும் அகவயமான யானும் பிரம்மம் அன்று, வாழ்வு என்பது கனவு” என ஏற்றிருந்தார் (8). அதாவது சார்வாகம், உலகாயதம் போற்றியுரைத்த தேகாத்மம் என்பதை அப்போது இயல்பாகவே தமது சுயமரபு காரணமாக மறுப்புக்கொண்டிருந்தார், தேகமே ஆத்மாவாக உள்ளது, ஆத்மா எனத் தனியாக ஒன்றும் இல்லை என்பது தேகாத்ம வாதம், ஆனால் பாரதி இதை ஏற்கவில்லை, அவர் தேகம் வேறு, ஆத்மா வேறு, அவை தனித்தனி என்பதையே மேற்கொண்டு இறுதிவரை இப்படியே திகழ்ந்தார், "அகவயமான யான் என்பதே பிரம்மம் மற்றும் வாழ்வு என்பது கனவு" என்பன சங்கரரின் அகவய-அத்வைதம், இது அவருடைய சுயமரபு. இதிலிருந்துதான் அவர் மாறுபாடு அடைகிறார்.
1906 முதல் 1913 வரை அவரது வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. சொந்தக் குடும்பம், அரசியல், பத்திரிகை-எழுத்து என அவை பொலிவுபெற்றன. 1912-ஆம் ஆண்டில் அரசியல், பத்திரிகை ஆகியன தொடர்ச்சியற்றுவிட்டன (9). 1911-ஆம் ஆண்டில் குள்ளச்சாமி பழங்குப்பை, பழம்பொய் எனச் சுட்டிக்காட்ட, பாரதியார் கடந்தகாலத்திலிருந்து விடுதலை பெற்ற புதியவன் ஆனார். புதிய காற்றால் புதிய உயிராய்ப் பிறந்துவிட்டார் (10). கோவிந்த ஞானியின் தொடர்பு கண்ட பின் எல்லாமுமே அனைத்துமே பிரம்மம், பரம்பொருள். தெய்வம், பரசிவம் எனத் தெளிந்தார். இதனோடு நிற்காமல் சம்சார விருத்திகள் பரம்பொருளின் விருத்திகள், செயல்கள் எல்லாம் சிவன் செயல்கள் எனத் தெளிந்து பகவத் கீதைக்கு முன்னுரை எழுதினார். விருத்தி என்பது இல்லையெனில் அழிவு, காதல் போயின் சாதல், விருத்தி என்றால் பிறப்பு-செயல்-மாற்றம்-இன்னொரு பிறப்பை ஈன்று விட்டு ஏகமாதல், இதுவே அத்வைத நிலை, முக்தி ஆகும் என்ற உறுதிக்கு வந்தடைந்தார். இதுவே அவரது மாற்றம், இயலுலக வாழ்வில் விருத்தி என்பது சமூக விருத்தி ஆகும்.
பாரதியாருக்கு (அதாவது 1880-ஆம் ஆண்டுக்காலத்துக்கு) முன்பு இருந்தே புராதன பொதுவுடைமைச் சமூகம், கால்நடை மேய்ப்புச் சமூகம், நிலவுடைமைச் சமூகம் பற்றிய விபரங்களை 1865-ஆம் ஆண்டு முதலே பிரம்ம சமாஜத்தினர் மேற்கொண்டிருந்தனர், மேலும் வோல்த்தேர்-ரூஸ்ஸோ ஆகியோர் அறைகூவிய சுதந்தரம். சகோதரத்துவம். சமத்துவம் மற்றும் ஃப்ரெஞ்சுப் புரட்சி பற்றிய பற்றுணர்வு கொண்ட கற்றோர் இங்கே இருந்து வந்தனர், 1878-ஆம் ஆண்டு முதலே தத்துவ விசாரணி பிறகு தத்துவ விவேசினி பத்திரிகையாளர்கள் (சேமையா பிறகு பு. முனுசாமி, அமரம்பேடு முத்துசாமி, எம். தெய்வசிகாமணி) சார்வாகம், உலகாயதம் சார்பாக நின்று தொழிலாளர் உயர்வை எடுத்துக் கூறி வந்தனர் (11).
இந்தப்பின்னணியில் பாரதி மண்டையம் திருமலாச்சாரியார் தொடர்பால் பொதுவுடைமை என்ற சமூக நோக்கத்துக்குப் பக்குவப்பட்டார், அப்போது பொதுவுடைமையியலின் மற்ற பகுதிகளான இயங்கியல் (12), பொருள்முதல்வாதம் மற்றும் அறிதலியல் (13) ஆகியன தமிழகத்தில் அறிமுகமாகியிருக்கவில்லை. இருந்தாலும் பாரதி உலகியலின் சம்சார நிலையிலிருந்து தொடங்கினார். இதன்பொருட்டு நீண்ட ஆயுள், நோயில்லாமை, அறிவு, செல்வம் எனத் தேகவாதத்தை வந்தடைந்தார். இது அவர் மரபுக்கு உகந்ததாக இருந்தது. பொதுவுடைமை என்ற சமூக நோக்கத்தின் அறிமுகத்தை முன்னிட்டுக்கொண்டு சம்சார விருத்தி என்பது புறநிலையளவில் பாரதியாருக்குப் பொதுவுடைமை பொலிந்த கிருதயுக எழுச்சி ஆகும். தொழிலாளரையும் உழவரையும் போற்றிப் பாடி எழுதினார்.
அதோடு மட்டுமன்றி அதுவே அகநிலையளவில் முக்திநிலை. பரசிவநிலை என்று வேதாந்த மரபுநிலையாகத் தெளிந்தார். இந்த நிலைகள் அப்பாலானவையோ, அகவயமானவையோ அல்ல, இயலுலகுக்குரியன; மனித வாழ்வுக்குரியன; புறநிலைப்பொருளை, பஞ்சபூதத்தால் ஆன இக-உலகப் பொருள்களை, மற்றும் பிறந்து இருந்து இன்னொரு சந்ததியை உண்டாக்கிவிட்டு இறக்கும் இந்த மனித வாழ்வு நிலைமைகளை, கடவுளுக்கு, சிவத்துக்கு முரண், பகை, மறைப்பு என்று அணுகும்போது அவை தீமை தருவன. அப்போது பாவத்தின் ஊற்று, மாயை, காட்சிப்பிழை, பொய் என்ற விளக்கவுரைகள் தோன்றும்.
இதற்கு மாற்றுநிலையாக, தமிழக வேதாந்த மரபு பாரதியார் வழியாகப் பரசிவ நிலையை விளக்கப்படுத்தி உயர்ந்தது, ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்பதையும் கடந்து பொலிந்தது (14). இந்தப் பிரபஞ்சமாக, இக-உலக வாழ்வாக இயங்கித் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளுகிறது (15) எனத் தம்முடைய வேதாந்த மரபில் புதியகோலம் இட்டார் பாரதி.
பிறகு, 1918-ஆம் ஆண்டில் கடையத்தில் தங்கியிருந்த காலை, கோமதி மகிமை புனையத்தொடங்கியிருந்தார். இது சூத சம்ஹிதை என்னும் நூல் தொடர்பானது, இதில் சூத கீதை, பிரம்ம கீதை ஆகியன இடம் பெற்றுள்ளன. 1912-ஆம் ஆண்டில் சூத சம்ஹிதையை நா. சு. ராஜாராமையர் வெளியிட்டிருந்தார் (16). ஆர். அனந்தகிருஷ்ண சாஸ்திரியார் மொழிபெயர்த்திருந்தார். இது பாரதியாருடைய வாசிப்புக்குள்ளாகி இருக்கலாம். எப்படியெனில், இந்த ராஜாராமையர் பாரதியாருடைய கருத்தியல்-உணர்வு வழிப்பட்ட சுயகுல உத்தமார்த்த பரோபகாரி, பாரதியாருடைய தத்துவப்புலமையை அறிந்து ஆதரித்தவர்.
பாரதியாருக்குச் சற்று முந்திய ஆண்டுகளில் சூதசம்ஹிதை தத்துவ உலகில் வீச்சுப் பெற்றிருந்தது, கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஊர்தோறும் பிரசங்கித்து வந்தார். இந்தச் சூத சம்ஹிதையைக் கோமதி மகிமை என்ற பெயரில் புனையத் தொடங்கினார் பாரதி. இது முற்றுப் பெற்றிருந்தால் 1912-ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்த தத்துவ உணர்வுநிலையிலிருந்து தம்முடைய சொந்தப்போக்கில் பாரதியார் முதிர்ச்சி கண்டிருந்தது இன்னும் துல்லியமாகப் புலப்பட்டிருக்கும்.
சூத சம்ஹிதையிலும் பிரம்ம கீதையிலும் உலகியல் பொருள்கள் மனித ஆத்மாக்கள் வழியாகப் பிரம்மம், பரசிவம். பரம்பொருள் தன்னை விளங்குவித்துக்கொள்ளுகிறது. எதுவும் மாயை இல்லை, காட்சிப்பிழை அல்ல, பொய் இல்லை, அனைத்தும் கடவுளின் விளக்கங்கள், ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி (17). பிரம்மம் செயல்பாடுடையது, அனைத்தும் இதன் செயல்களே, தனித்த ஆத்மாவினது சுயச்செயல் என்ற சுய சுதந்தரம் என்பது இல்லை, இதுவே மாயை, பிரம்மம் அல்லாத இரண்டாவதான இன்னொன்று இல்லை, அப்படி இருப்பதாகக் கருதிக்கொள்வதே இந்த நெறியில் மாயை என விளக்கப்படுகிறது, இல்லா மாயை என்பது மனோன்மணீயக் கருத்தியல், இந்த மாயையைப் பாரதி தன் பக்குவப்போக்கினில் ஜீவ கற்பனை என உணர்ந்து புலப்படுத்தினார்.
பரசிவ வெள்ளம் என்ற கவிதையும் ஜீவ கற்பனை என்ற கருத்தியலும் சூத சம்ஹிதையைக் கோமதி மகிமை எனப் பாடத்தொடங்கியதும் பாரதியின் மெய்யியல்-வளர்ச்சிப் பக்குவ வரலாற்றில் ஊன்றிக் காணத்தக்கன ஆகும். 1912-ஆம் ஆண்டுக்குப் பிறகான அவருடைய புத்தாக்க நிலையைத் தெளிய இயலும், உள்ளும். புறமும் எங்குமான பரசிவம் செயல்நிலையில் அனைத்துமாக உள்ளது, சம்சார விருத்தியாக விளங்குகிறது, காலம்-இடம், அகம்-புறம், பொருள்-சக்தி, எல்லாம்-தனி, செயல்-மாற்றம் அனைத்தும் ஈசவெள்ளம், தனிப்பட்ட ஒருபொருளானது உயிரானது தன்னை மட்டும் பெரிதாக வியந்துகொள்வது ஜீவ கற்பனை, மாயை, ஆனாலும் அப்படி ஒரு நிலையானது உண்மையில் இல்லை, அனைத்தும் பிரம்மம் பரம்பொருள் செயல்நிலையில் உள்ள தெய்வ வெள்ளம், இந்த ஆழ்ந்த பொருள்தான் அனைத்திலும் இருப்பதாகப் பரசிவ வெள்ளம் கவிதையில் புலப்படுத்தினார், அவரது அப்போதைய படைப்புகள் அனைத்திலும் இந்த வேதாந்தம் ஒளிவிட்டது, இதையே 1920-ஆம் ஆண்டில் ஹிந்து மதாபிமான சங்கத்தார் பாடலிலும் பொலியவைத்துள்ளார்.
பாரதியாருடைய கருத்தியலின்படி பரம்பொருள் எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் புகுந்து நிரம்பியுள்ளது, செயலில் உள்ளது, ஒவ்வொரு தனிப்பட்டதிலும் அதுவே பிரவேசித்துள்ளது, தனிப்பட்டவைகளும் உண்மை, தனிப்பட்ட ஆத்மாவானது பிரம்மத்தின் பிரதிபலிப்பு அன்று, பரம்பொருளே அப்படி உள்ளது என்பதுவே பாரதியாரது சிறப்பியல்பு, இதுவே அவரிடத்தில் பக்குவம் கொண்ட தத்துவம்,அதன் மரபு.
தமிழக வேதாந்த மரபில் ஆயன்பட்டனாருக்குப் பிந்தைய காலங்களில் அகவய பிரம்மமா, எங்குமான பிரம்மமா என்று தொடர்ந்த இருதிறத்தில் பாரதியார் எங்குமான பிரம்மம், கடவுள், பரம்பொருள், பரசிவம் என்ற புறவயத்திறத்தில் (1912-1914) பொலிவு பெற்றிருந்தார், இதனை முன்னிட்டுக் கொண்டே சூத சம்ஹிதை நூலில் பயிற்சிபெற்றார். இந்த நூலின் ஆசிரியர் வியாசருடைய மாணவர் சூத மகரிஷி. இவருடைய வழியில் பதினோராவது குருவாக வந்தவர் சிவப்பிரகாசர். இவருடைய மாணவர் ஸ்வரூபானந்தர். இவரிடத்தில் ஞானம் பெற்றவர் தத்துவராயர். இவர் தமிழகச் சைவத்துறையில் பரமாத்வைதம் என்ற தத்துவ மரபினை முறைப்படுத்தியவர் ஆவார்.
இந்தத் தத்துவ மரபானது சைவத்துறையில் வேதாந்தம் எனப்பட்டது, தத்துவராயரின் இந்த வேதாந்தத்துக்கும் மெய்கண்டாரின் சித்தாந்தத்துக்கும் இடையேதான் சமரசம் நாடித் தாயுமானவர் தொடங்கி வள்ளலார் உள்ளிட்ட சைவ அருளாளர் பெரிதும் தவம் பேணினர்.
இந்த வேதாந்த மரபில் சூத சம்ஹிதை ஒரு பிரமாண நூல் ஆகும். 1914-க்கு பிறகு கோமதி மகிமை எனச் சூத சம்ஹிதையைப் பாடத்தொடங்கியபோது அனைத்தும் கடவுள், பிரம்மம், பரம்பொருளின் நிலைமைகளே என்று பாரதியார் பரமாத்வைதத்துடன் இணக்கம் கொள்கிறார் என்ற மதிப்பீட்டினைக் கைக்கொள்வதற்கு இவருடைய சுயவரலாற்றுத் தொடர்ச்சியானது ஊக்கம் நல்குகிறது. பரம்பொருளான கடவுள் உலகியல்-பொருட்களின் வழியாகத் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளுகிறது என உணரத்தொடங்கினார். உருவமற்ற அப்பாலான பிரம்மம், பரம்பொருளானது சம்சார விருத்தியின் வழியாக இந்த உலகில் தன்னைத்தானே பொதுவுடைமையாகப் புதுப்பித்துக் கொள்ளுகிறது. இந்தப் புதுப்பித்துக்கொள்ளல் என்ற கருத்தியலால் பாரதியார் தமிழக அனைத்திறை அத்வைதத்தை எல்லையற்றதாக்கினார்.
பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் சகோதரியின் புதல்வியார் திருமதி கோமதி ராஜாங்கம். இவரது கூற்றுப்படி செங்கோட்டை ஆவுடையக்காளுடைய அனுபூதி-அத்வைதப் பாடல்களைப் பாரதி தனது உயிருக்கு நிகராகக் கொண்டார். அப்பாடல்களை அடியொற்றி அனுபூதி வேதாந்தப் பாடல்களைப் புனைந்தார். பாரதியாருக்குத் தத்துவ முன்னோடி இந்த ஆவுடையக்காள். இவரது தொடர்ச்சியாகப் பாரதியார் காலத்திலும் இடத்திலும் புறத்திலும்-அகத்திலும் பொருளிலும்-உணர்விலும் இக உலகிலும்-அப்பாலும் இருப்பது ஒன்றே, பரசிவ வெள்ளமான, ஏகமயமான பரம்பொருள் அது எனத் தமிழக வேதாந்த மரபுக்குப் பங்களிப்புச் செய்தார். சங்கர அகவய அத்வைதத்தில் இருந்து மாறுபாடடைந்து அனைத்திறை அத்வைதத்திற்கு வந்தடைவதன் மூலம் அதைச் செய்தார்.
சூத சம்ஹிதை வழியான பரமாத்வைதமும் ஆவுடையக்காள் வழியான அனுபூதி-அத்வைதமும் ஒருவழிப்பட்டவை, அதன் தொடர்ச்சியில் (கோமதி மகிமை எழுதிய) பாரதி அதற்குள் அமரர் ஆகிவிட்டார்.
உலகப்பொருள்கள், செயல்கள், பண்புகள், விதிகள் எல்லாம் உண்மை, நித்தியம், சத்தியம் இவையெல்லாம் பரசிவ வெள்ளம், இறைவெள்ளம், உள்ளும் புறமும் ஒன்றுக்கொன்று வேற்றுமை முரணற்றுப் பாய்ந்து ஒரே செயலாக ஊற்றாய்ப் பொழிவது, தனித்த ஒரு சுயசெயல், சுயதீர்மானம், சுய உத்தரவாதம் என்பன இல்லை, பலவாய் வேற்றுமைப்பட்டிருப்பது என்பதுவே நீக்குவதற்கு உரியது என முடிக்கிறார். தனிப்பட்ட குறிப்பான ஒரு பொருளின் சுயாதீனம், சுயச்செயல், சுய தீர்மானம். சுய உத்திரவாதம் ஆகியனவற்றை முன்னிட்டுக்கொண்டு சுய வருமானம், சுய லாபம், சுயப் பிரயோசனம் ஆகியவற்றை வலியுறுத்திய ஆங்கிலேயே நேர்க்காட்சிவாதத்தையும் அதற்கிணையான அகம்பிரம்ம வாதத்தையும் மறுத்தபடி, எங்குமாக நிறைந்துள்ள புறவயப் பிரம்மத்தை நிலைநிறுத்துவது அவருடைய தத்துவத்தின் பங்களிப்பாகும்.
இது இந்திய வேதாந்தத்துக்குத் தமிழகத்திலிருந்து தரப்பட்ட வலுவான பகுதியாகும்.
பிறப்பு என்பது பாபமானதன்று, ஏனெனில் அது பரசிவத்திலிருந்து உண்டாகிறது, உலகை நேசித்திருத்தல் என்பது தீமையோ அறியாமையோ அன்று. ஏனெனில் பரசிவத்தின் இருப்பே இப்படியாக இருக்கிறது, இறப்பு என்பது தண்டனையன்று, ஏனெனில் இயலுலகப்பொருள்களில் பரசிவத்தை உணரும்போது அதனோடு ஒன்றாகிறது, பிறந்து இருந்து மறையும்போது சந்ததித்தொடர்ச்சியைத் தருவது பரசிவத்தின் புதுப்பித்துக்கொள்ளும் செயல்தன்மையே ஆகும். அகத்தில் உள்ளதே புறத்திலும் உள்ளது, அகமும் புறமும் முரணானவையல்ல என்பதிலேயே பாரதியின் தத்துவக்கட்டமைப்பின் சிறப்பும் உள்ளது.
அடிக்குறிப்புக்கள்
1. ரிக் வேதம் 10 மண்டலம் அநுவாகம் 3 சூக்தம் 3 - 10
2. பெரியாழ்வார் - கி. பி. 690-775
3. திவ்வியப்பிரபந்தம் 4 - 3 - 11
4. திவ்வியப்பிரபந்தம் 5 - 5 - 9
5. மணிமேகலை 29 - 49
6. ராமாநுஜர் முதலான வைணவ ஆச்சாரியார்.
7. ஆயன்பட்டனார் - கி. பி. 1100-1200
8. பாரதியாரின் யான் (1906), சுயசரிதை (1910) கவிதைகள்
9. அண்மையில் ஆய்வாளர் ஆ. இரா. வெங்கடாசலபதி கண்டறிந்த, ஹிந்து ஆங்கிலப்பத்திரிகைக்கு பாரதி எழுதிய க்டிதங்கள், 1911-12 ஆண்டுக்காலத்தைத் தாண்டி 1916 வரை நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
10. பாரதியார், யோக சக்தி
11. தத்துவ விவேசினி, 04-04-1885
12. முரணியக்கம் (dialectics)
13. அறிதல்-கோட்பாடு (epistemology, theory of knowledge)
14. பாரதியார், பரசிவ வெள்ளம் (1914)
15. வசன கவிதை – சக்தி, 4.5
16. இவருடைய வீட்டில்தான் 1911 முற்பகுதியில் பாரதியார் இந்த ராஜாராமையருடைய பிதா என். பி. சுப்பிரமணிய சர்மா மொழிபெயர்த்து வைத்திருந்த சங்கர பாஷ்யத்தின் சாராம்சங்கள் அடங்கிய உபநிடதப்பிரதிகளைத் திருத்தங்கள் செய்து செப்பனிட்டார். "இதன் முதல்-நான்கு உபநிடதங்களின் முதல் பதிப்பு 500 பிரதிகளும் முதல்-ஐந்து உபநிடதங்களின் இரண்டாம் பதிப்பு 1,000 பிரதிகளும் 12-12-1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தி டில்லி பட்டாபிஷேக சின்னமாய் ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியர் அவர்கள் அருளிய ச்லாகா பத்திரிகையையும் இணைத்து அப்போதே முமுட்சுகளுக்கு இனாமாகக் கொடுக்கப்பட்டன."
17. வசன கவிதை, காற்று, 15.