16.12.08

நவீன சமூகமும் இரட்டைநிலையும் - தமிழவன்

என்னைப் போன்ற ஒருவன் வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை ஒற்றைமொழிக் கலாச்சாரத்தின் மையத்தில் கழித்தவனல்லன். மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிறமொழிக் கலாச்சார மனிதர்கள், இலக்கியவாதிகள், அவர்களின் நடையுடைபாவனைகள், விருந்துகள், விழாக்கள் என்று பரிச்சயம் கொண்டவன்; ஒற்றைமொழிக் கலாச்சாரத்தின் மையத்திற்கென்றே உள்ள உறுதிகள் இல்லாதவன்; அதன் லாபங்களைப் பெறாதவன். பன்மொழிக் கலாச்சாரங்களுக்கான உறுதியின்மை, "என் கருத்தைப் போல் இன்னொரு கருத்தினனுக்குக்கூட ஒரு நியாயம் இருக்கலாம்" என்ற எண்ணம் கொண்டவன்.

இத்தகைய குணநலன்களை ஒற்றைமொழிக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள், வேலை பார்த்தவர்கள், பெரும்பாலும் மதிப்பதில்லை.

தமிழ்ச்சமூகம் எத்தகைய ஒற்றைமொழிக் கலாச்சாரம் என்று யோசித்துப்பார்க்க வேண்டுமென்று படுகின்றது. முப்பதாம் வயதுக்குள்ளாகவே தமிழகத்தை விட்டு வெளியே வாழ வந்துவிட்டவன் என்ற நிலையில் எப்போதும் தமிழகத்தை இன்னொரு பார்வைவழியாகவே பார்த்து வந்திருக்கிறேன்.

போதாக்குறைக்குத் தமிழகத்தின் பெருவாரிப்பண்பாடுகளாகிய மேடைப்பேச்சு, பட்டிமன்றம், சினிமா, குமுதம், ராணிமுத்து, வெள்ளைவேஷ்டி, மு.வ., திருக்குறள் உரை எழுதுதல், கட்சிக்கூட்டங்களுக்குப் போவது போன்ற மனோபாவங்களோடு எனக்குச் சேர முடிந்ததில்லை. இப்படிச் சேர முடியாததோடு ஒட்டியதே பெருவாரி ரசனைக்கு மாற்றாகவும் எதிர்ப்பாகவும் உருவான சிறுபத்திரிகைகளோடு இணைவது, இடதுசாரி மனோநிலையை உருவாக்கிக்கொண்டது போன்றவையும்.

புதுக்கவிதை இவ்வளவு பெரிய இயக்கமாய் வளர்வதற்கு முன்பு, என்னைப்போன்ற பிற தமிழாசிரியர்களுக்கு நடுவில் நான் ஒருவனே புதுக்கவிதை ஆதரவாளனாக இருந்திருக்கிறேன். அதாவது அறுபதுகளின் இறுதிப்பகுதியைப் பற்றிப் பேசுகிறேன்.

தமிழ்ச்சமூகத்தில் பல அடுக்குகள் இருக்கின்றன. எந்தச் சமூகத்திலும் அப்படியிருக்கலாம். அந்தக்காலத்திலிருந்தே இருந்திருக்கிறது. சங்ககாலக் கவிதைகளைப் படித்துப்பார்க்கையில் அந்த மொழியின் அமைப்பில் பல அடுக்கு சிந்தனைகள் ஒன்றன் மீது ஒன்று ஒட்டிக்கொண்டு இருப்பதுபோல் தெரிகிறது. ஒரு அடுக்கைக் கிழித்தெடுக்கையில் அடுத்த அடுக்கு கண்ணில் படுகிறது. எதிர்காலமும்கூட ந. பிச்சமூர்த்தியை ஒரு புதியமுறைக் கவிதையின் தந்தை என்று ஏற்றுக்கொண்டால் அவர் அடுத்த தெருவில் காணக்கிடைத்த பாரதிதாசனோடு ஏன் உறவு வைக்கவில்லை என்ற கேள்வி தொடரும். இந்த விஷயம் பற்றி மீண்டும் மீண்டும் யோசிக்கையில், இதற்குக்காரணம் இந்த இரு தனிமனிதர்கள் அல்ல எனத் தோன்றுகிறது. இருவரும் ஒரே கால கட்டத்தில் தமிழ்ச்சமூகத்தின் இரண்டு அடுக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறார்கள்; இரண்டுவித வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கிறார்கள்; இரண்டுவித காலகட்டங்களை ஒரே கணத்திற்குள் பார்த்திருக்கிறார்கள்; ஓர் அடுக்கைத் தமிழ் வரலாறு கிழித்துவிட்டது. கிழிக்கப்பட்டது பாரதிதாசனின் அடுக்கு. அதற்கடுத்து உடனே பிச்சமூர்த்தியின் அடுக்கு கண்ணில் படுகிறது.

இப்படித்தான் விளங்கிக் கொள்ள வேண்டும் போலுள்ளது. நடைபெறுகிற சம்பவங்களை வைத்து அர்த்தங்களைத் தேடுவது ஒரு புதுவிஞ்ஞானம். அதன் பெயர் குறியியல். சம்பவங்களைக் குறிகளாகப் பார்க்கும்போது இப்படி ஒரு கணத்துக்குள் இரண்டு கால கட்டங்கள், இரண்டு மனோபாவங்கள், இரண்டு வரலாறுகள், இரண்டுவித செய்யுள் ஓசைகள் அடங்கியிருக்கின்றன. ஒரு விதையிலிருந்து இரண்டு செடிகள். இப்படித்தான் பாரதிதாசனை, பழங்காலத்தமிழின் ஒரு தொடர்ச்சியாகவும் ந. பிச்சமூர்த்தியைப் பழங்காலத்தின் இன்னொருவிதத் தொடர்ச்சியாக்வும் காணலாம் என்று கருதுகிறேன்.

நம் இன்றைய மனோபாவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு சாதி மனோநிலை. சாதியில்லை என்று ஒரு வெளிமொழியைப் பேசுகிறோம். வீட்டுக்குள் நுழைந்தவுடன் நமக்குள் ஓர் உள்மொழி உருவாகி, நம் உறவினர், குடும்பத்தவர், அக்கம்பக்கத்தவர் என்று அந்த மௌனமான இன்னொரு மொழிமூலம் பேசுகிறோம். இப்போது உங்களுக்குத் தெரியும், எந்த மொழி ஆற்றலுடையதென்று. நம் உள்மொழிதான். அதனால்தான் நம் குடும்பங்களில் இருந்து கல்லூரிக்குப் போகும் பிள்ளைகள் சக மாணவனின் சாதியை ரகசியமாய் அல்லது வெளிப்படையாய்த் தெரிந்து அதற்கேற்ப நடக்கும் ஓர் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஆக இரட்டைமொழி, இரட்டை வாழ்க்கை, இரட்டை உணர்த்துமுறை ஒரே கணத்தின், இரண்டு முகங்கள். இதில் ஒரு முகம் உண்மையென்றும் இன்னொரு முகம் போலி என்றும்கூடக் கூற முடியாது. சாதி முற்றாய் மறையும்வரை இரண்டு முகங்களும் உண்மைகள். இப்போது நம் சமூகத்தின் சிக்கலின் ஆழம் புரியும். ஒரு சந்தர்ப்பத்தில் நாம் இரு வரலாறுகளில் வாழ்கிறோம். மேற்கத்திய சமூகவியலோ வரலாற்றியலோ மானுடவியலோ இலக்கியமுறையோ இந்தச்சிக்கலான சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியாது. நமக்கான வேறுபட்ட சமூக விஞ்ஞானங்கள் வேண்டும்.

இந்த மாதிரியான பார்வை ஒன்றை உருவாக்கினால் ஒழிய நமக்குப் புரியாது - சட்டக்கல்லூரி மாணவன் ஒருவன் ஏன் தன் பக்கத்தில் அமர்ந்து பாடம் கேட்ட இன்னொரு மாணவனை இவ்வளவு கொடூரத்துடன் தாக்குகிறவனாய் இருக்கிறான் என்று. இந்த வன்முறை நம் சமூகத்தின் இன்னோர் அடுக்கிலிருந்து வெளிப்படுகிறது. இது அபாயமான ஓர் உணர்வு என்ற நிலைப்பாட்டை நான் எடுக்கவில்லை. சில சூழல்களில் நாம் எல்லோருமே அபாயமானவர்கள்தாம். நாம் எல்லோரும் அந்த வன்முறையாளனும்தான். இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. நமக்கான சமூக விஞ்ஞானங்கள் எதிர்காலத்தில் தோன்றும். அப்போது அது இந்த இரு அடுக்குகளைக் கணக்கிலெடுத்துக் கற்கும் Social Science of Double articulation ஆகலாம். தமிழில் "இருவிதப் பேச்சுகளை ஒரே நேரத்தில் பேசும் சமூக விஞ்ஞானம்" என்று பெயர் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில், சட்டக்கல்லூரி மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறி சக மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பற்றி எழுதிய சிலர் ஃப்ராய்டின் உளவியலைப்பற்றிக் கூறியிருந்தார்கள். எனக்கும் ஃப்ராய்டின் சில கருத்துகள் ஞாபகம் வருகின்றன. சாவு உணர்வு, வாழும் உணர்வு என்ற இரு உணர்வுகளால் மனிதன் கட்டப்பட்டிருக்கிறான் என்கிறார் ஃப்ராய்ட். மாறிமாறி மனிதன் இவ்வுணர்வுகளால் தாக்கப்படுகிறான். சமூகங்கள், கலாச்சாரங்கள், நாகரிகங்கள் இவ்வுணர்வுகளின் பரஸ்பரத்தாக்குதல்களால் கட்டியமைக்கப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியங்கள் இந்த இருவுணர்வுகளின் பதிலிகளான 'அகம்' மற்றும் 'புறம்' கூறுகளால் மொத்தமும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து எதிர்முரண்களின் சலனமும் போராட்டமும் உள்ளடுக்கிலும் அமைதி, அதுபோல் அறம், நியாயம், நீதி என்ற சொல்களால் உருவான ஒற்றைமுகப்பாவனை மேலடுக்கிலும் வெளிப்படுகின்றன.

இப்படித்தான் இந்தியாவில் தேசம் என்ற கருத்தாக்கம் தோன்றியது. பிரிட்டிஷ்காரர்கள் தந்த சீதனம் இந்த நவீன தேசம். நமது பாராளுமன்றம், சட்டசபை, அரசியல் சாசனம், தேர்தல் முறை, ஆட்சிமுறை எல்லாம் மேற்கத்திய தேசம் என்ற கருத்தாக்கத்தின் காப்பி. சரி, இந்தியாவுக்குக் கொண்டுவந்து இந்திய நாடாளுமன்றம், இந்திய நாட்டுச் சட்டசபை, இந்திய அரசியல் சாசனம், இந்தியத் தேர்தல்முறை என்று நமக்கானதாய் ஆக்கிவிட்டோம். இங்கும் இரண்டு அடுக்கு என்ற எதார்த்தம்தான் தலைநீட்டுகிறது.

மிக மோசமான மன்னராட்சியின் கூறுகள் நமது நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்றன. இந்திய மக்களாட்சிக்கு முன்னின்று உழைத்த ஜவகர்லால் நேரு இறந்ததும் மன்னராட்சி முறையில் பின்பற்றும் வாரிசு ஆட்சி தொடங்குகிறது. அதாவது நமது தலை (அறிவு) நாடாளுமன்ற அரசியலை அறிந்தாலும் நமது இதயம் (உணர்வு) மன்னராட்சிக்குத்தான் பழக்கப்பட்டிருக்கிறது. ஓர் அடுக்கை இன்னோர் அடுக்கு அமுக்கி வைக்கிறது.

சமீப நாட்களில் கார்கில் போரில் இறந்தவர்களுக்கு வீர வணக்கம், பம்பாய் தீவிரவாதத் தாக்குதலில் உயிர்த்தியாகம் புரிந்த கமாண்டோக்களுக்கு வீரவணக்கம் என்று புதியதோர் உணர்வலையில் கம்யூனிஸ்டுகளும்கூட விழுந்ததைப் பார்த்தோம். அரசுகள் உதிரும் (States will wither away) என்பதுதான் கார்ல் மார்க்ஸின் கருத்து. ஒரே அரசாங்கம், ஒரே தேசம், உலகம் முழுவதும் என்பதுதான் மார்க்ஸின் கருத்து. தேசம் பற்றிய விஷயத்தில் மார்க்ஸ் ஒரு அனார்க்கிஸ்ட்; அதாவது அனார்கிஸம் என்பது ஒரு தத்துவம். அவர்களுக்குச் சில சித்தாந்தங்கள் உண்டு. அதிமுக்கியமான சித்தாந்தம், அனார்க்கிஸ்டுகள் அரசுகளை, தேசங்களை ஆதரிப்பதில்லை. எனக்குப் பல வேளைகளில் தோன்றும், நாம் இன்னும் போர்களைக் கைவிடப்பயிலாததால் காட்டுமிராண்டிகள்தாமே என்று. ஃப்ராய்டைப் படித்த பிறகுதான் 'சாவு உணர்வுக்கான' அகில உலக வடிவமே, போர், யுத்தம், என்று பட்டது.

'கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்' என்ற வரியை எழுதிய பாரதிதாசனை நினைத்து நினைத்து ஆச்சரியமாக இருக்கிறது. வினோபா பாவே, பாகிஸ்தானும் இந்தியாவும் யுத்தம் செய்து கொண்டிருந்தபோது "இருபக்கமும் சாகிறவர்களை நினைத்து அவதிப்படுகிறேன்" என்று சொன்னபோது எனக்கு ஒருகணம் உலகம் அமைதியாகி ஸ்தம்பித்தது என்று பட்டது. ஆனால் இன்று இப்படி ஒரு குரலை பாரதத்தில் கேட்க முடியவில்லை. எனது இந்தியா என்ற உளறலைத்தான் கேட்க முடிகிறது. லங்கேஷ் என்ற எழுத்தாளர் கன்னடத்தில் எழுதினார். இப்போது அவர் உயிருடன் இல்லை. அவருடைய ஒரு கவிதையின் தலைப்பு: "தேஷபக்தி சூளேமகனே" என்பது. (சூளே-விபச்சாரி; மகனே-புதல்வனே) இது அனார்க்கிஸத்தின் உள்ளுந்துதலில் இருந்து வரும் வரி. ஆனால் பரிதாபம், நமது மார்க்ஸிஸ்டுகள் தேச பக்தியால் தலையில் கொடி எடுத்து ஆடுகிறார்கள்.

ஆனால் சற்று ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது கேரளத்தில் அய்யப்பனுக்கு நேர்ந்து சபரிமலை போகிறவர்கள் கம்யூனிஸ்டாகவும் இருப்பதுதான் நேர்மையான காரியம்; தன் கலாச்சாரத்தை விட்டுவிடாத குணம் இது. தன்னுடைய மன்னர்களை மறக்காமல் நாடாளுமன்ற ஆட்சிமுறையைக் கொண்டு வருவதுதான் ஒரு வகையில் பாரதக் கலாச்சாரத்தின் பண்பு. இதில் காணப்படும் இரட்டை முகம், நமது இயல்பு.

மேற்கத்திய பண்பாட்டு விளக்கத்திற்குப் போய் நமது பண்பாட்டின் முரண்பாடுகளை சமனப்படுத்தும் தன்மையை நாம் அறியவில்லை. நேர்மை, நம்பகத்தன்மை போன்ற சில சொற்கள் மேற்கின் சொற்கள் என்பதை உணரவில்லை. ஓர் ஓட்டுக்கு எவ்வளவு விலை என்று நிர்ணயம் செய்வதுதான் நம் இயல்பு.

தேசம் என்ற எதார்த்தம் பற்றிய கருத்துகளின் தொகுப்பை தேசியம் என்கிறோம். இது ஒரு கற்பனை என்று தொண்ணூறுகளில் சிலர் பரப்பினார்கள். ஆனால் இந்தக் கருத்தைப் பற்றி முதன்முதலாக நூல் எழுதியவரின் பெயர் பெனடிக்ட் ஆண்டர்ஸன். அவர் நூலில் எங்கும் இந்தக்கருத்து இல்லை; ஆங்கிலத்தில் Imagined Communities என்ற பெயரில் பெனடிக்ட் ஆண்டர்சன் எழுதிய நூலில் வரும் கருத்து - தேசியம் என்பது பல நிலைப்பாடுகளால் உருவாகிறது; நமக்குத் தெரியாத மனிதர்களோடு நாம் வைக்கிற உறவு, ஒரு எல்லையால் அல்லது மொழியால், அல்லது ஒரேவகை சீதோஷ்ணநிலையால் தீர்மானிக்கப்படுகிறது; நமக்குத் தெரியாதவர்களோடு உள்ள உறவு பழைய சமூகங்களில் இரத்த உறவு சார்ந்ததாய் இருந்தது; வேறுசில சமூகங்களில் மதம் சார்ந்ததாய் இருந்தது; புதிய தேசியம் இத்தகைய பல்வேறு தன்மைகளால் உருவாகிறது என்பதுதான் இந்த நூலின் கருத்து. நாம், உறவு இருக்கிறது என்று யூகித்துக்கொள்வதன் அடிப்படையில் தேசியம் உருவானதென்று கூறுவது வேறு; கற்பிதம் என்று பொய் போல் அந்தச்சொல்லைப் பயன்படுத்துவது வேறு. தேசியம் எந்த அடிப்படையும் அற்றதல்ல. மூல ஆசிரியன் பயன்படுத்தாத கருத்தை அகில உலகக் கருத்து என்பதுபோல் சிலர் கருதினர்.

அப்படிப் பார்க்கையில் பாரதி பாடியதுபோல் 'வாழ்க தமிழ்', அதேபோல 'வாழ்க பாரத மணித்திருநாடு' என்ற கூற்றில் காணப்படும் இரு தேசிய உணர்வுகளுக்குள் (தமிழ்த் தேசியம் மற்றும் இந்தியத்தேசியம்) ஒரு முரண்பாடு இருக்கிறதென்பதுதான் என் எண்ணம். அந்த முரண்பாடு முரண்பாடற்றதாய் சமனப்படுத்தப்படுகிறது. ஏனென்றால் தமிழ்த்தேசியம் ஓர் அடுக்கு; இந்தியத்தேசியம் இன்னோர் அடுக்கு. அன்று இந்தியத்தேசியம் அடுக்கு கண்ணுக்குத் தெரிந்தது. அந்த அடுக்கை மூடிய தாளைக் கீறித் தாண்டிப்போய்ப் பார்த்தபோது அடுத்த அடுக்கு தெரிந்தது. அது தமிழ்த்தேசியம். தனிநாயகம் அடிகள் இதனை இரட்டைத்தேசியம் என்றார்.

இந்த உண்மையை எப்படியோ உணர்ந்துதான் நேரு, இந்தியா ஒரு பாலிம்ப்ஸெஸ்ட் (மேல் எழுத்தை சுரண்டிப்பார்த்தால் உள்ளே இருக்கும் எழுத்து புலப்படும் என்பது பாலிம்ப்ஸெஸ்ட் ஆகும்) அமைப்பு கொண்டது என்று கூறினார்.

நன்றி - உயிரோசை
படங்கள் - 1971 போருக்குப் பிறகு சிம்லா ஒப்பந்தத்தில் இந்திய-பாகிஸ்தான் பிரதமர்கள். உடன் பேனசிர் பூட்டோ.
கன்னட எழுத்தாளர் - மறைந்த லங்கேஷ்.

15 கருத்துகள்:

ராஜன் குறை said...

கற்பிதத்தால் விளைவிக்கப்பட்ட எதார்த்தம்

- ராஜன் குறை

தமிழவன் எனது மதிப்புக்குரிய முன்னோடிகளில் ஒருவர். 1982-ஆம் ஆண்டு திருச்சியில் “சினிமாவும் நமது கலாசாரமும்” என்ற இலக்கு கலாசார இயக்க கருத்தரங்கிற்கு அவர் வந்தபோது முதலில் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது 20. எதற்காக இதை கூறுகிறேன் என்றால் தமிழில் கருத்துமாறுபாடு பகைமையாக, குழுவாதமாக புரிந்துகொள்ளப்படுகிறது என்பதால்தான்.

அவரது “தவளைக்கொட்டகையும் ரெஜிமெண்டு மனிதர்களும்” சிறுகதையில் வந்த “அவர்கள் குசு விடுவது போல் தேசிய கீதம் பாடினார்கள்” என்ற வரி என்னை மிகவும் ஈர்த்தது, இன்றும் அது நினைவில் இருப்பதிலிருந்தே புலனாகும்.

மேற்கண்ட 'நவீன சமூகமும் இரட்டைநிலையும்' அவர் கூறியுள்ள பல கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவை. சமூகங்கள் எல்லாமே, குறிப்பாக நவீன சமூகங்கள் எல்லாமும் பல அடுக்குத்தன்மை கொண்டவை. இந்திய, தமிழ் சமூகங்கள் மட்டுமல்ல; ஸ்காண்டினேவிய சமூகங்களும் கூட.

தெல்யூஸின் “ஆயிரம் சமதளங்கள்” (Thousand Plateaus) என்ற உருவகம் இதையே குறிப்பிடுவதாக நினைக்கிறேன். தெல்யூஸைக் கருத்தில் கொள்ளும் சமூக அறிவியல் இருவிதப் பேச்சுகளை சுலபத்தில் அணுக முடியும். ஏற்கனவே உள்ள ஆய்வுகள் பலதும் இதனை சாதித்துள்ளன. ஹைடெக்கர் சிந்தனைகள் அடிப்படையில் தனது “கருகிய தாலாட்டுக்கள்” (Charred Lullabies) நூலில் வாலண்டைன் டானியல் எழுதியுள்ள “துயருற்ற தேசமும், அன்னியமாதலும்” (Suffering Nation and Alienation) என்ற பகுதியை குறிப்பாக உதாரணம் கொள்ளலாம். இது இலங்கைத்தமிழர் குறித்தது என்றாலும் பொதுவில் விளக்கம் கொள்வது.

ஆண்டர்சன் குறித்து தமிழவன் எழுதியுள்ள பத்தி எனக்கு வியப்பளிக்கிறது. சில கேள்விகள்/ கருத்துக்கள்:

1.தேசம் என்ற எதார்த்தம் பற்றிய கருத்துக்கள் தேசியமா அல்லது தேசியம் என்ற கருத்தாக்கம் அல்லது கற்பனை/கற்பிதம் விளைவித்த எதார்த்தம் தேசமா?

தமிழவன் “தேசம் என்ற எதார்த்தம் பற்றிய கருத்துக்களின் தொகுப்பு தேசியம்” என்று தொடங்குவது அதிர்ச்சியளிக்கிறது. இறைமை என்ற கருத்தாக்கம் விளைவித்த எதார்த்தம் கோயில்கள், விக்கிரகங்கள்.

2. கற்பனை அல்லது கற்பிதம் என்பதற்கு அடிப்படைகள் உண்டு. அது ex-nihilo அதாவது சூன்யத்தலிருந்து பிறப்பதில்லை. இறைமைக்கு அடிப்படை அநாதியான இருப்பு. அதை விளக்கத்தான் இறைமை தேவைப்பட்டது/ தேவைப்படுகிறது. தேசியத்தின் அடிப்படைகளை பற்றிய நீண்ட பட்டியல்களும் முடிவற்ற விவாதமும் உண்டு. ஆனால் தேசம் என்ற எதார்த்தத்தை உருவாக்கும் கருத்தாக்கம், கற்பனை/கற்பிதம் தேசியம் என்பதில் பெருமளவு ஒப்புதல் சமூக அறிவியலில் இருக்கிறது.

3. கற்பிதம் என்றால் பொய் அல்ல. புனையப்பட்டது என்றுதான் பொருள். ராஜன் குறை என்பது என் புனைபெயர். ஆனால் பொய் அல்ல. எழுத்துரு. ஒரு கருத்தரங்கத்தில் ஒருவர் என்னிடம் “நீங்கள் நாகார்ஜுனனா?” என்று கேட்டார். ஆம் என்று சொன்னால் பொய். உண்மை, பொய் என்பவை தர்க்கம் சார்ந்தவை. நான் தமிழன் என்றோ, இந்தியன் என்றோ சொல்லிக்கொள்ளலாம். இரண்டும் இருவிதமான கற்பிதங்கள். ஆனால் ருஷ்யன் என்று சொன்னால் பொய் – தர்க்கரீதியாக எப்படி என்று கேட்பார்கள். கற்பிதம் தர்க்கத்திற்கு உட்பட்டது. அந்த தர்க்கத்தை உடைக்க
“என்புதோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?” என்று கேட்கலாம். இந்த தத்துவப்பிரச்சினை குறிந்த சிறந்த விவாதம் “Social Construction of What?” எழுதிய இயன் ஹாக்கிங்கிற்கும் ப்ரூனோ லத்தூருக்கும் நடந்ததாகும்.

4. “முதன்முதலில் எழுதியவர்” “மூல ஆசிரியர்” போன்ற சொற்கள் உரைமரபின் தாக்கத்தால் விளைபவை. நமது வேலை ஆண்டர்சனுக்கு உரை எழுதுவதல்ல. தேசம் பற்றி சிந்திப்பது. ஆண்டர்சனுக்கு முன்னால் ஆயிரம் பேர் தேசம் பற்றி எழுதிவிட்டனர். பின்னால் எழுதிக்கொண்டே இருக்கின்றனர். ஆண்டர்சனின் மூலங்களில் ஒன்று வால்டர் பெஞ்சமின். அவரது மூலங்களில் ஒன்று ஹென்றி பெர்க்ஸன். (காலம் பற்றிய கருத்திற்கு)

5. ஆண்டர்சன் நூலின் தலைப்பு “Imagined Communities” என்பதை கவனிக்க வேண்டும். “Actual Communities” அல்லது “Real Communities” அல்ல. Imagined என்றால் கற்பனைதானே? யூகமா? இந்த கற்பனை எவ்வளவு தேவை, எப்படி கற்பனை செய்யப்பட வேண்டும், இக்கற்பிதம் உருவானது நல்லதா இல்லையா என்பது பற்றி உலகில் கடும் விவாதம் இருக்கிறது. ஆனால் கற்பிதமே இல்லை மலைகளும், மடுக்களும் தேசத்தின் பெயரை உடலில் சுமந்துதான் உருவாயின அல்லது என்புதோல் எலும்பிலும் இலக்கமிட்டு மாந்தர் பிறந்தனர் என நம்புவது கடினம்.

Perundevi said...

//நமக்கான சமூக விஞ்ஞானங்கள் எதிர்காலத்தில் தோன்றும். அப்போது அது இந்த இரு அடுக்குகளைக் கணக்கிலெடுத்துக் கற்கும் Social Science of Double articulation ஆகலாம். தமிழில் "இருவிதப் பேச்சுகளை ஒரே நேரத்தில் பேசும் சமூக விஞ்ஞானம்" என்று பெயர் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.//
உள்ளே/வெளியே, தனி/பொது என்கிற வெளிகளின் கட்டமைப்பு, இவ்வெளிகள் தொழில்படும் விதம் பற்றிய சமூக விஞ்ஞான எழுத்துகள் ஏற்கெனவே உருவாகியிருக்கின்றன. பார்த்தா சட்டர்ஜி, எம்.எஸ்.எஸ். பாண்டியன் போன்றவர்களுடைய பங்களிப்புகளைக் குறிப்பிடலாம்.

நாகார்ஜுனன் said...

வன்பாக்கம் விஜயராகவன்

நீங்கள் எழுதிய மறுமொழி ஆங்கிலத்தில் மாத்திரம் இருந்ததால் வெளியாகவில்லை.

நாகார்ஜுனன் said...

ராஜன்குறை

தமிழவன் கட்டுரையை அலசுவதற்கு முன்பாக உங்கள் மறுமொழியை ஒருமுறை நோக்கலாம். விளைவிக்கப்பட்ட.. என்று தலைப்பில் செயப்பாட்டுவினையிலும் விளைந்த.. என்று உள்ளே செயல்வினையிலும் எழுதியிருக்கிறீர்கள். எது உண்மை என்றால் இரண்டும்தான் எனலாமா.. உங்களை நெருக்கினால் எதைத் தேர்வீர்கள்..

நீங்கள் கூறும் இறைமை என்பது அப்பாலைத்தன்மை (transcendence)
கொண்டதா, உடனடித்தன்மை (immanence) கொண்டதா.. என்று உங்களை நெருக்கினால் பதிலாக என்ன கூறுவீர்கள்?

இங்கே சிவவாக்கியரின் பாடலை மேற்கோளிட்டதற்கு நன்றி. இவருடைய முழுப்பாடல்கள் பலதை ஆராயும்போது இந்த இரண்டுக்கும் இடையில் ஊடாடும் தன்மை இருப்பதைக் காண முடியும். மேற்குலக சிந்தனா வரலாற்றில் ’இருப்பு’ என்பதை அழிக்க முற்படும் ஹைடெக்கரிலும் இதே ஊடாட்டம் வருகிறது. இங்கேதான் மொழி, உரைமரபின் முக்கியத்துவம் வருகிறது என்று கருதுகிறேன்.

பெருந்தேவி

நீங்கள் குறிப்பிடும் இருவரில் பார்த்தா சாட்டர்ஜி வங்காள மொழியிலும் எழுதுபவர், அதில் என்ன, எப்படி எழுதுகிறார் என்று பார்க்கும்போது ஆச்சரியங்கள் ஏற்படலாம். தமிழ்ச்சூழல்-வரலாறு பற்றி எழுதும் எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழில் இதுவரை எழுதவில்லை என்றோ எழுதினால் என்ன ஆகும் என்றோ யோசிக்க வேண்டும். அதாவது அப்படி எழுதும்போது தமிழ் உரைமரபின் வழிவந்த அகம்-புறம் என்பதை விரித்து எழுத வேண்டியிருக்கும். இப்படி யோசித்து, தமிழவனின் வாக்கியத்தை மீண்டும் படிக்கலாம் என்று தோன்றுகிறது.

rajan kurai said...

அன்புள்ள நாகார்ஜுனன்,

1.தலைப்பில் கற்பிதத்தால் என்று கற்பிதத்துடன் ஆல் விகுதி சேர்ந்துள்ளதையும் சேர்த்துப் பாருங்கள். உள்ளே அந்த சொற்றடர் அமைந்துள்ள வரி அதற்கு தெளிவான விளக்கமளிக்க தலைப்பில் இருண்மை தவிர்ப்பதற்காக அது தெளிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேலும் இரண்டு வரிகளுக்கும் வேறுபாடு இருந்தால் விளக்கினீர்கள் என்றால் சுவாரசியமாக இருக்கும். அல்லது முழுமையான இலக்கணம் நானே கூறவேண்டுமென்றாலும் செய்யலாம்.

2. இந்த இறைமை பற்றிய எனது புரிதலை திண்ணை இணைய தளத்தில் ஜனவரி மாதம் எழுதிய "இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்" என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன். அவகாசம் இருந்தால் பாருங்கள். இன்னமும் விரிவாக விரைவில் எழுதவிருக்கிறேன். பின்னூட்டத்தில் பேசக்கூடிய விஷயமில்லை இது.

அது சரி, பின்னூட்டங்கள் கட்டுரையுடன் தொடர்ந்த படிக்க வசதி இருந்ததே உங்கள் தளத்தில்; அது செயல்படவில்லையா? அல்லது எனது browser இல் பிரச்சினையா?

நாகார்ஜுனன் said...

ராஜன் குறை

உங்கள் திண்ணை கட்டுரையை வாசிக்கிறேன்.

ஆல் விகுதியைப் பார்த்ததால்தான் செயப்பாட்டுவினை பற்றிக் கேட்டேன். கற்பிதத்தால் விளைந்த.. என்று நீங்கள் எழுதவில்லையே! இந்த இடத்தில் செயப்பாட்டுவினையைப் போடுகிறீர்கள். கீழே விளைந்த.. என்கிறீர்கள்.

என் கணினியில் கட்டுரை, மறுமொழி இரண்டையும் ஒருசேர வாசிக்க முடிகிறது.

ராஜன் குறை said...

மீண்டும் ஒருமுறை நான் எழுதியதை கவனமாகப் பார்த்தேன். எந்த இடத்திலும் "விளைந்த" என்று இல்லை. "விளைவித்த" என்றுதான் இருக்கிறது.

விளைவித்த/விளைவிக்கப்பட்ட என்ற மாறுபாட்டைதான் சொல்கிறீர்கள் என்று நினைத்துதான் முதலில் பதில் சொன்னேன். இதிலும் ஏதேனும் முரண்பாடு இருப்பதாக தோன்றினால் சொல்லுங்கள்.

நாகார்ஜுனன் said...

ராஜன்குறை

தவறாக எழுதிக் குழப்பியதற்கு என்னை மன்னிக்கவும!

பிரச்னை இதுதான் - கற்பிதத்தால் விளைந்த.. என்று நீங்கள் தலைப்பில் எழுதவில்லை. மாறாக, கற்பிதத்தால் விளைவிக்கப்பட்ட.. என செயப்பாட்டுவினையை எழுதுகிறீர்கள். உள்ளே விளைவித்த என்று நேரடியாகச் செயலை எழுதுகிறீர்கள், சரிதானே..

நானும் இதுபோல முன்பு நிறைய எழுதியிருக்கிறேன். ஆனால் இப்போது எச்சரிக்கையுடன் செயப்பாட்டுவினையைத் தவிர்ப்பதுண்டு. செயலை எழுதும்போது ஒருவித ஊடாட்டத்தை வைத்து மொழியில் செயல்பட முயல்கிறேன். எவ்வித ஊடாட்டம் என்று பார்ப்போம்.

இந்திய-தமிழ்ச்சூழலில் Double-Multiple Articulation in Social Sciences என்பதைப் பற்றி கோட்பாட்டளவில் உரையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஸ்காண்டிநேவியாவில் எப்படியிருக்கிறது என்பது இதற்கு உதவும்பட்சத்தில் சரி.

"நாம், உறவு இருக்கிறது என்று யூகித்துக்கொள்வதன் அடிப்படையில் தேசியம் உருவானதென்று கூறுவது வேறு; கற்பிதம் என்று பொய் போல் அந்தச்சொல்லைப் பயன்படுத்துவது வேறு" என்கிறார் தமிழவன்.

கற்பிதம்-எதார்த்தம் இரண்டுக்கும் உள்ள உறவை விவரிப்பதற்கு முன்பாக ஒரு விஷயம். கற்பிதம்-எதார்த்தம் என்பவை அடிப்படை-விளைவு என்பதாக, இயங்குவனவா... இதை விளக்க பழைய உரைமரபு உத்தியொன்றைத் தொல்காப்பியத்திலிருந்து எடுக்க முடியும் என்று நினைக்கிறேன்.

அதாவது, தொல்காப்பியத்தின் அகம்-புறம் என்ற பாகுபாட்டை வைத்து, இங்கே இயங்குவனவற்றை இரண்டாக வகைப்படுத்தலாம் என்று படுகிறது - கற்பிதம்-எதார்த்தம் என்று பரவுகிற குழப்ப இயக்கத்தில் ஒரு வகை, ஒப்பீட்டளவில் அகத்தன்மை அதாவது ஒப்புமைத்தன்மை (analogous) கொண்டது. மற்ற வகை
புற சமாச்சாரமாகிறது, அதாவது எண்ணிலக்கத்தன்மை (digital) கொண்டது எனலாம். இங்கே கற்பிதம் என்பது ஒப்புமைத்தன்மை கொண்டது, எதார்த்தம் என்பது எண்ணிலக்கத்தன்மை கொண்டது என்று பிரிக்க முடிவதில்லை - ஆனால் இங்கே இரண்டும் இந்த இரண்டுவகைகளுக்கமான ஊடாட்டத்தில் இயங்குவன.

இதில் இரண்டுமே நிஜம்தான், ஆனால் இரண்டு வேறுபட்ட வகைகளில் - analogue and digital -என்ற வகைகளில். ஆக இரண்டு சரிகளுக்கும் இடையில் ஊடாட்டம் உண்டு. உரைமரபு இரண்டையும் அதனதன் இடத்தில் வைத்து ஊடாடிப் பார்ப்பது. இதனால்தான் தொல்காப்பியம் ஒரே சமயத்தில் இன்றைய பொருளில் இலக்கியமும் விமர்சனமும் எனலாம். உரைமரபினர் இத்தகையோர்.

நான் ருஷ்யனா என்ற கேள்வியை எடுத்துக்கொண்டால், அதற்கும் அகம், புறம் அதாவது analogue, digital வகையில் பதில்கள் வேறானவை. இரண்டுமே சரிதாம், ஆனால் அதனதன் இடத்தில். இதற்கான analogue பதிலை, தத்துவம்-இலக்கியம் என சௌகர்யமாக வகைப்படுத்திக்கொள்கிறோம். நிஜத்தில் இந்தப்பதில் உண்மை-பொய்மையைத் தாண்டிய rhetorical இலக்கிய-தத்துவக்கேள்வி மாத்திரமல்ல. எடுத்துக்காட்டாக, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதில் யாவரும்.. என்பதற்கு நீவிரும் அவரும் இவரும் உவரும் பலரும்.. என்று அடுக்காக வரும் பொருளுண்டு. நம்மாழ்வாரின் உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்.. என்ற திருவாய்மொழியின் முதல் பாசுரத்தைப் பொருள்கொள்ளப் புகும் ஏ.கே. ராமானுஜனும் இதைக் காட்டுகிறார் - இதில் சுவாரசியமான விஷயம், இந்தப்பாசுரம் இறைமை பற்றியதாகவும் மொழியின் தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்களை அடுக்குவதாகவும் இருப்பது என்பதை ராமானுஜன் காட்டுவதுதான்.

நீங்கள் நாகார்ஜுனனா என்ற கேள்வியைக் கேட்டவருக்கான ஒப்புமைப்பதில் - நான் நாகார்ஜுனனும் அதுவும் இதுவும் பலதும் கலந்தவன்/அனைத்திலிருந்தும் வேறுபட்டவன் என்பதே... அதேபோல, நான் ருஷ்யனா.. என்ற கேள்விக்கு.. யார் நான், ருஷ்யனுமல்லன், தமிழனுமல்லன், இந்தியனுமல்லன்.. என்கிற பொருளும் உண்டு. ஆக, Digital தர்க்கத்தை வைத்து analogue கேள்வியை அணுகினால் பிரச்னைதான்.

என்னைப் பொறுத்தவரை, இந்த இரண்டுக்கும் நடுவில் இருக்கும் ஊடாடட்டம் முக்கியம் என்கிறேன்.

Perundevi said...

//தமிழ்ச்சூழல்-வரலாறு பற்றி எழுதும் எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழில் இதுவரை எழுதவில்லை என்றோ எழுதினால் என்ன ஆகும் என்றோ யோசிக்க வேண்டும். அதாவது அப்படி எழுதும்போது தமிழ் உரைமரபின் வழிவந்த அகம்-புறம் என்பதை விரித்து எழுத வேண்டியிருக்கும். இப்படி யோசித்து, தமிழவனின் வாக்கியத்தை மீண்டும் படிக்கலாம் என்று தோன்றுகிறது.//
தமிழ் epistemological tradition வழியாக இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்வது எனக்கு உடன்பாடானதே. ஆனால் அதே நேரத்தில் இந்த பொது/தனி, உள்ளே/வெளியே போன்ற 'இரட்டைப் பேச்சுக்களை' தமிழ்ச்சமூகம் மாத்திரம் கொள்ளவில்லை என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ராஜன்குறை சொன்னதுபோல நவீனச்சமூகங்கள் பலவற்றிலும் இப்படியான 'பேச்சுகள்' உண்டு. எம்.எஸ்.எஸ் பாண்டியன் தமிழ் அகம்/புறம் மரபோடு இப்பேச்சுகளைத் தொடர்புறுத்தாவிட்டாலும், அவர் நவீனத்தமிழ்ச் சமூகத்தின் இரட்டைப் பேச்சுகள்/வெளிகள் பற்றி அடையாளங்கண்டு எழுதியிருக்கிறார் என்பதே நான் சொல்லவந்தது.

rajan kurai said...

நாகார்ஜுனன்

கற்பிதம் கடுமையாக வேலை செய்தே நான் குறிப்பிட்டுள்ள யதார்த்தங்களை உருவாக்குவதால் செயப்பாட்டுவினை பொருத்தமே. நிற்க. கருத்து மாறுபாடுகளை சகஜமாக உரையாடும் சூழல் உங்கள் வலைத்தளத்தில் உருவாகியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய உரையாடல் வெவ்வேறு திசையில் பயணம் செய்பவர்கள் பரிமாறிக்கொள்ளும் புன்சிரிப்பாக, முகமன்களாக இருக்க வேண்டுமே தவிர, நெருக்குவதாக இருக்கக்கூடாது என்றும் நினைக்கிறேன். எனவே நமக்குள்ளான மாறுபாடு என்ன என்பதை மட்டும் இங்கு தெளிவுபடுத்திவிடலாம் என தோன்றுகிறது.

நீங்களும் தமிழவனும் தொடர்ந்து ஆர்வம் காட்டும் அமைப்பியல் சிந்தனை எனக்கு உடன்பாடில்லாத ஒன்று. எனது புரிதலில் அமைப்பியல் வித்தியாசங்களை இருமை எதிர்வாக உறையச்செய்து அர்த்த உருவாக்க களங்களை அமைக்கிறது. அதை மறுத்து குறிகளின் தொடரியக்கத்தில், செயல் தொடர் மற்றும் தற்செயலின் நிர்ணயமற்ற அர்த்த நிகழ்வு சாத்தியங்களை காணும் தெரிதாவின் சிந்தனையும், மரம் என்னும் உருவகம் மறுத்து பூமிக்கடியில் பலதிசையில் பரவும் தாவர உயிரிகளை உருவகித்த தெல்யூஸின் சிந்தனையும் சசூரின் சமகாலத்தில் வாழ்ந்து குறியிழைப் பின்னல்களின் ஆதியந்தமற்ற தொடர்ச்சியை உருவகித்த பர்ஸின் குறியியலும், செயல் வலைப்பின்னலை முக்கிய உருவகமாக்கும் லதூரும், வம்சாவழியியலை பயிற்சி செய்து காட்டிய ஃபூக்கோவும் என்னுடைய சிந்தனையின் அடிப்படைகள். இவர்களுக்கிடையே இருக்கக் கூடிய மாறுபாடுகளும்கூட சிந்தனைக்கு உரமாகும்.

அடுத்து இந்த உரைமரபு ஈடுபாடும் எனக்கில்லை. பிரதிகளை எல்லைக்காட்படுத்துவது உரைமரபின் செயல். பிரதிகளினூடாக குறுக்கு மறுக்காக பயணம் செய்யும் இழைகளே எனது சிந்தனையின் அடிப்படை. மொழி என்பதை குறியியக்கத்தின் ஒரு சிறு பகுதியாகத்தான் கணிக்கிறேன். ஒருவிதத்தில் சொன்னால் ஊடாட்டம் மட்டுமே இருக்கிறது. அதன் விளிம்பில் இதையும், அதையும் உருவகிக்கிறோம்.

அவ்வப்போது உங்களுடன் உரையாடுவதால் பயனடையும் வாய்ப்பை எதிர்நோக்கியிருப்பேன். இத்தகைய உரையாடல்கள் எனது சிந்தனைகளை விரிவாக பதிவு செய்யும் பணிக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

நாகார்ஜுனன் said...

ராஜன் குறை

கற்பிதம் செயல்படுவது கடுமையாகவா, மெலிதாகவா என்பதெல்லாம் அந்தந்த இடத்தைப் பொறுத்தது. தவிர, அதைக் கணிக்கும் நீலையில் நாமிருக்கிறோமா என்பதையும் பொறுத்தது.

உரைமரபு என்பது வேறு, ’நான்’ செய்வது வேறு என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதில்தான் பிரச்னை!

நீங்கள் கூறும் அத்தனை சிந்தனையாளர்களையும் வாசித்தவன், அவர்களில் சிலரையேனும் தமிழில் அறிமுகம் செய்தவன் என்ற முறையில் கூறுகிறேன் - குறிகளின் பரப்பை இயங்கவைத்து ஆடுவதுதான் உரைமரபு - அது எங்கே நடந்தாலும் சரி.

இதைத் தமிழில் செய்யும்போது இங்கு வரலாற்றுரீதியாக உள்ள உரைமரபுடன் தொடர்பில்லை, ஈடுபாடில்லை என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

நாகார்ஜுனன்

வ்ன்பாக்கம் விஜயராகவன் said...

நாகார்ஜுனன்

தமிழவன் சாதி மனோநிலை என்கிறார். அது மனோநிலையல்ல, சமூக உண்மை. மேலும் ”சாதியில்லை என்று ஒரு வெளிமொழியைப் பேசுகிறோம்” என்கிறார். யார் அப்படி பேசுகிறார்கள் எனத் தெரியவில்லை. ஐந்து வயதுக் குழந்தைகளுக்கே அதிகாரிகளிடமிருந்து ஜாதி சான்றிதழ் வாங்க வேண்டியிருக்கிறதே, அப்போது ஜாதி இல்லை என்று யாரால்தான் பேசமுடியும்?

மேலும் ’பிரிட்டிஷ்காரர்கள் தந்த சீதனம் இந்த நவீன தேசம் (பாரதம்)’ என்கிறார். சீதனம் மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை, அதை இங்கே போடுவது பொருத்தமற்றது. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவின் நவீன அரசியல், நிர்வாக முறைகளை கொண்டுவந்தார்கள்; சுதந்திர இந்தியாவும் அம்முறைகளின் பயனை அறிந்துள்ளனர். ஆனால் இந்திய தேசீயம் என்பதையே, அவர்கள் கொடை என்பது அபத்தம்.

மதிப்புடன்
விஜயராகவன்

நாகார்ஜுனன் said...

விஜயராகவன்,

ஜாதி மனோநிலை பற்றிப் பேசுவதற்கு முன்பாக ஒருவிஷயம் - ’பிரிட்டிஷ்காரர்கள் தந்த சீதனம் இந்த நவீன தேசம்’ என்கிறார் தமிழவன். பாரதம் என்பதை நீங்கள் சேர்த்துக்கொள்கிறீர்கள்! இப்படிச் சேர்த்துகொள்வதை இரட்டை மனநிலை எனலாம்!

நாகார்ஜுனன்

வன்பாக்கம் விஜயராகவன் said...

நாகார்ஜுனன்

தமிழவன் சொல்வது ”இப்படித்தான் இந்தியாவில் தேசம் என்ற கருத்தாக்கம் தோன்றியது. பிரிட்டிஷ்காரர்கள் தந்த சீதனம் இந்த நவீன தேசம்”. அதனால். ‘இந்த தேசம்’ என்பது இந்திய அல்லது பாரதத்தைதான் குறிக்கும்.


விஜயராகவன்

நாகார்ஜுனன் said...

தமிழவனுடைய கட்டுரையில் உள்ள எடுத்துக்காட்டுகள் பலதிலும் ’நவீன தேசம்’ என்பது இங்குள்ளோரால் எப்படியெல்லாம் புரிந்து, செயலாக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயம் ஊடுபாவாகச் சென்றுகொண்டிருக்கிறது. இதில் இருப்பதுதான் இரட்டைநிலை! இந்த அளவில் நவீன தேசம்
என்பது ஒருநிலை, இந்தியா என்பது அடுத்தநிலை, பாரதம் என்பது பிறிதொரு நிலை, எனவே என்னைப்பொறுத்தவரை மூன்றுநிலைகள் இருப்பதாகக் கொள்ள முடியும். நவீன தேசம் = இந்தியா = பாரதம் என்ற உங்கள் சமன்பாட்டைத் தாண்டிச் சிந்திப்பதுதான் தமிழவனின் கட்டுரையின் அடிப்படை எனப் புரிந்துகொள்கிறேன். கட்டுரையின் ஒரு வாக்கியத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு பார்க்கிற உங்கள் புரிதலில் ஒருதளம் மாத்திரமே வருகிறது!

நாகார்ஜுனன்