(செம்மொழி அறிவிப்பு தொடர்பாக விஜயராகவன் என்பவர் உரையாடியதைத் தொடர்ந்து ஆட்சிமொழிப்பிரச்னைகள் பற்றி இணையத்தில் என்ன இருக்கிறது என்று தேடினேன். அப்போது, சுமார் ஐந்தாண்டுகள் முன்பு வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, மரத்தடி.காம் வலைப்பக்கத்துக்கென எழுதிய விளக்கங்களை வாசித்தேன். சுவாரசியமான அவற்றை இங்கே மறுபதிவாக இடுகிறேன். சில மாற்றங்களை உரிமையோடு செய்திருக்கிறேன். ராஜதுரை என்னை மன்னிக்கட்டும்!
இதுபற்றி அப்புறம் எழுதுகிறேன். எழுதுவதற்கு முன்பாக - தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் அரசியலமைப்புச் சட்டத்தையெல்லாம் தாண்டி ஒரு விஷயம் - எனக்குத் தாய்மொழி தமிழ் பிறகு ஆங்கிலம் தவிர, ஹிந்தி பேச, வாசிக்க, எழுதத் தெரியும். ஹிந்தி சினிமாப்பாடல்களை வைத்து இள வயதில் காதல் கடிதமே எழுதியிருக்கிறேன். வடமொழியைப் புரிந்துகொள்வேன், வாசிப்பேன், எழுதுவேன். உருது புரியும், மலையாளம், கன்னடம் பேசத்தெரியும். தெலுங்கு நன்கு புரியும். மூன்றையும் ஒரளவு வாசிப்பேன். மராத்தி, குஜராத்தி, வங்காளி மொழிகளில் யாராவது பேசினால் ஒரளவு புரிந்துகொள்வேன். பிறகு, ஃப்ரெஞ்சு விரும்பிக் கற்ற மொழி. கொஞ்சம் ஜெர்மன் பயிற்சியும் உண்டு. என் மகள் இத்தாலிய மொழி கற்பதால் அதில் கொஞ்சம் பரிச்சயமுண்டு. சிங்களம், அரபு, சீன மொழிகள் தெரியவில்லையே என்று வருத்தமும் உண்டு என்பதைச் சொல்லிவிடுகிறேன்! - நாகார்ஜுனன்].
இந்திய அரசியலமைப்புச்சட்டமும் மொழிகளும் - பிரபு ராஜதுரை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 343 என்பதன்படி இந்தியாவின் ஆட்சிமொழி, தேவநாகரி எழுத்துருவில் எழுதப்படும் ஹிந்தி மட்டுமே, வேறெந்த மொழியுமல்ல. ஆனால், 1950-ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கில மொழி மத்திய அரசு அலுவலகப்பணிகளுக்காக நீடிக்கலாம், இதற்குள்ளான காலத்திலேயே ஹிந்தியை ஆங்கிலத்துடன் அரசுப்பணிகளுக்காக பயன்படுத்தலாம். இறுதியாக பதினைந்து ஆண்டுகள் கழித்தும் ஆங்கிலத்தின் பயன்பாட்டை, நாடாளுமன்றம் தகுந்த சட்டமியற்றித் தொடரலாம். இதுதான் இந்த சட்டப்பிரிவு கூறிய விஷயம்.
இவ்வாறாக, ஆங்கிலத்தின் பயன்பாட்டை, அன்று அரசியலமைப்புச் சட்டவரைவுக்குழுவில் இடம்பெற்ற தென்னகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் போராடிப்பெற்றார்கள். இப்படிப் பெறுவதற்குள் அவர்களுக்குப் போதும்போதும் என்றாகி விட்டது...
இதை இன்னும் விரிவாகக் காணலாம். இந்தியா அரசியல் விடுதலை அடைந்த பிறகு அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதற்கென, அரசியலமைப்பு சட்டவரைவுக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுவாக, அனைவருக்கும் ஒத்திசைவான கருத்துக்களை வைத்தே சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. என்றாலும் இந்த மொழிப்பிரச்னையில் ஹிந்தி ஆதரவாளர்கள் இந்தக்குழுவையே பிளக்குமளவு சென்றனர்.
மொகலாயர்கள் வருகைக்குப் பிறகே ஒன்றுபட்ட இந்தியா உருவானது. அவர்களது தாக்கத்தால் பாரசீக மொழி நீதிமன்ற மொழியாகவும் உருது வணிக மொழியாகவும் உருப்பெற்றன. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர் நீதிமன்றங்கள், அரசு நிர்வாகம் மேலும் முறைப்படுத்தப்பட்டு ஆங்கிலத்தின் ஆட்சி ஏற்பட்டது. விடுதலைப்போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி ஹிந்துஸ்தானியை ஆட்சிமொழியாக வழிமொழிந்தார். அதாவது பாரசீக மொழித்தாக்கம் மிகுந்த உருதுவையும் வடமொழியின் தாக்கம் மிகுந்த ஹிந்தியையும் இணைத்து உருவாக்க விரும்பிய மொழிதான் ஹிந்துஸ்தானி. காந்தியின் சமரசத்தின் நோக்கம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இந்தியா மதரீதியாகப் பிளவுபட்டதும் ஹிந்துஸ்தானி முழக்கம் வலுவிழந்து ஹிந்தி வலுப்பெற்றது.
இந்தியாவின் தேசிய மொழிகள்?
இந்தியாவில் தேசிய மொழி என ஏதும் இன்றுவரை கிடையாது. ஏனெனில் ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியாவில் பெரும்பான்மையினர அல்லர். ஆனால் மற்ற மொழிகளைப் பேசுவோரை விட ஹிந்தி பேசுவோர் அதிகம் என்ற நிலையில், அரசியலமைப்புச் சட்டவரைவுக் குழுவிலும் அவர்களது தாக்கம் அதிகம் இருந்தது. அதில் சிலர் ஹிந்திதான் வேண்டும் என்ற தீவிரவாதிகளாக இருந்தனர். ஆனால் காங்கிரஸில் இருந்த மற்ற மொழி பேசும் மிதவாதிகளின் ஆதரவும் அவர்களுக்குப் பண்டித நேரு அளித்த ஆதரவும் கொண்டுவிளைந்ததே முன்ஷி-ஐயங்கார் ஃபார்முலா என்றழைக்கப்படும் மேற்கண்ட அரசியலமைப்புச்சட்டப்பிரிவு.
"ஹிந்தி என்பது, ஹிந்துஸ்தானியை ஒதுக்காமல் அனைத்து மொழிகளிலிருந்து வார்த்தைகளைத் தழுவி நாட்டின் கலாச்சார ஒற்றுமையைப் பேணாத வகையில் அதை அரசுமொழியாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று பண்டித நேரு இந்தக்குழுவிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறெனில் அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாம் அட்டவணை குறிப்பிடும் பதினெட்டு மொழிகளின் அந்தஸ்து என்ன?
அரசியலமைப்புச்சட்டத்தின் இணைப்பாக அட்டவணைகள் (schedules) பல உண்டு. இவற்றில் உள்ள மொழிகள்தாம் இந்தப் பதினெட்டு மொழிகள். இவற்றை அட்டவணை மொழிகள் என்றே அழைக்க வேண்டுமே ஒழிய, ஆட்சிமொழிகள் என்று அழைப்பது தவறு. இவற்றின் சிறப்புத்தகுதி என்ன? எனக்கு அதிகம் தெரியவில்லை.
எனக்குத் தெரிந்தவரை, அரசியல் சட்டப்பிரிவு 344 சொல்வதன்படி அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்து ஐந்து மற்றும் பத்து ஆண்டுகள் கழித்து குடியரசுத்தலைவர் ஒரு ஆணையம் (Commission) ஏற்படுத்த வேண்டும், இந்த ஆணையத்தில், இந்த அட்டவணையில் உள்ள மொழிகளில் ஒவ்வொன்றையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஓர் உறுப்பினர் இடம்பெற வேண்டும். சரி, இந்த ஆணையத்தின் பணிதான் என்ன? சுருக்கமாகக் கூறினால், இந்திய அரசுப்பணியில் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆங்கிலத்தை மட்டுப்படுத்தி ஹிந்தியின் பயன்பாட்டை உறுதிசெய்யும் வழிகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவது, இந்த ஆணையத்தின் பணி.
இதே பிரிவை எழுதியவர்களுக்கு வேறு ஒரு பயம் வந்துவிட்டது. அரசுப்பணி எப்படியாக இருந்தாலும் தொழில், வணிகத்துறையில் ஆங்கிலம்தானே கோலோச்சுகிறது. மேலும் வணிகம், தொழில் போன்றவை இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே பரவலானவை. இப்படி ஹிந்தி, ஹிந்தி என்று அடித்துக்கொண்டால் அவை பாதிக்கப்படாதா? எனவே இத்தகைய ஆலோசனைகளை வழங்குபவர்கள், நாட்டின் தொழில்-விஞ்ஞான மற்றும் கலாச்சார முன்னேற்றத்தையும் ஹிந்தி பேசாத மாநில மக்களின் நலன்களையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
அடுத்து சட்டப்பிரிவு 351 என்பது, இந்த எட்டாம் அட்டவணையில் உள்ள மொழிகள் பற்றிக் கூறுகிறது. இந்தப்பிரிவு முக்கியமானது. அதாவது, இந்திய அரசாங்கம் இந்தியாவின் ஒன்றிணைந்த கலாச்சாரத்தைப் (composite culture) பிரதிபலிக்கும் வண்ணம் ஹிந்தியை வளப்படுத்த்தி, அனைத்து மக்களும் அதைப் பயன்படுத்தும் வண்ணம் பரவலாக்க வேண்டும் என்கிறது இந்தப்பிரிவு. எவ்விதம் வளப்படுத்த வேண்டும்? நேரு விரும்பியபடி ஹிந்தியின் ஜீனியஸ் தன்மை கெட்டுவிடாத வண்ணம் ஹிந்துஸ்தானி மற்றும் எட்டாம் அட்டவணையில் கண்ட பிற மொழிகளின் அமைப்பு, நடை, வெளிப்படுத்தும் தன்மை (expression) ஆகியவற்றை சுவீகரித்து வளப்படுத்த வேண்டும். தவிர, வேண்டுமிடத்தில் வார்த்தைகளை முதற்கண் வடமொழியிலிருந்தும் இரண்டாவதாக எட்டாம் அட்டவணையில் உள்ள மற்ற (அனைத்து) மொழிகளிலிருந்தும் தழுவி வளப்படுத்த வேண்டும். ஆக, இத்தோடு முடிந்தது, எட்டாம் அட்டவணையில் உள்ள மொழிகளின் பணி. வேறு எந்தவிதமான சிறப்புத்தகுதியோ ஆட்சிமொழித்தகுதியோ இவற்றுக்கில்லை. ஒருவேளை இந்திய அரசுப்பணிக்கான தேர்வுகளை இந்த மொழிகளில் எழுதலாம் என்பது அடுத்த தகுதியாக இருக்கலாம். ஆனால், இதற்காக அரசியலமைப்புச்சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியமில்லை.
இத்தனை குழப்பத்தில் தெளிவான, உருப்படியான ஒரு சட்டப்பிரிவு, 350. இதன்படி தம் குறைகளைத் தெரிவிக்க இந்திய அரசுக்கு மனுச்செய்யும் ஒருவர், இந்தியாவில் பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும் செய்யலாம். அதுபோல மாநில அரசுக்கு மனுச்செய்பவர் அந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும் மனுச்செய்யலாம். அந்த மனு, ஆட்சிமொழியில் அல்லது அரசுப்பணி மொழியில் இல்லை என்பதால் அதை நிராகரிக்க முடியாது.
மொழி தவிர, அரசியலமைப்புச்சட்டம் எண்களைப்பற்றிக் கூறுவதிலும் குழப்பம். அரசியலமைப்புச்சட்டம் இந்திய அரசுப்பணிக்காக 'சர்வதேச அமைப்பில் அமைந்த இந்திய எண்களைப்' பயன்படுத்த வேண்டும் என்கிறது. அதேவேளை, குடியரசுத்தலைவர் தேவநாகரி எண்களை பயன்படுத்தவும் உத்தரவிடலாம் என்கிறது. சர்வதேச அமைப்பில் அமைந்த இந்திய எண்கள் என்று கூறுவது, அரபு எண்களாகல்ல, எனவே அது இடக்கரடக்கலான பதம் என்கிறார் சட்ட அறிஞர் எச்.எம். சீர்வை.
ஆங்கிலத்தின் அந்தஸ்து
ஹிந்தி வேண்டாம் என்றால் ஆங்கிலம் மட்டும் அந்நிய மொழியல்லவா? அதன் தேவை என்ன? உணர்வுப்பூர்வமாக அணுகினால் இந்த வாதம் சரியே! ஆனால் நடைமுறையில், இந்தியா ஒன்றிணைந்திருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று உணர்கிறேன். இதைப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். உதாரணமாக, அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு
345 என்பதன்படி, மாநில அரசுகள் ஹிந்தியையோ அந்தந்த மாநிலம் பயன்படுத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழியையோ தன் அரசுப்பணி-மொழியாக பயன்படுத்த அனுமதியளிக்கிறது. சட்டப்பிரிவு 348 என்பதன்படி குடியரசுத்தலைவரின் அனுமதிபெற்று மாநில அரசு ஹிந்தியையோ, அந்த மாநிலத்தில் அரசுப்பணிகளுக்காகப் பயன்படும் மொழியையோ அந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் என்ன நிகழும்? நீதிமன்றத்துக்கு நீதிமன்றம் குழப்பம் நிலவும். உயர்நீதிமன்றங்களில் இருந்து மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் செல்கையில் மேலும் குழப்பம். ஏறக்குறைய இவ்வாறான நிலையை, கிறித்தவர்களின் வேதத்தில் கூறப்படும் பாபேல் கோபுர நிலைக்கு சட்ட அறிஞர் எச்.எம். சீர்வை ஒப்பிடுகிறார். ஆங்கிலம் ஒன்றே இந்த நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் கருவிகளில் ஒன்று என்பதை நாட்டின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்திருக்கும் பலர் அறிவர்.
1952-ஆம் ஆண்டில் மாநில ஆளுநர்கள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும் உத்தரவில் ஹிந்தியை, தேவநாகரி எண்களைப் பயன்படுத்தலாம் என்பது நடைமுறைக்கு வந்தது. 1955-ஆம் ஆண்டில் பிற அரசுப்பணிகளுக்காகவும் ஹிந்தி பயன்படுத்தப்படலாம் என்பது நடைமுறைக்கு வந்தது. 1956-ஆம் ஆண்டின் அரசியலமைப்புச்சட்டத்தின்படி, ஹிந்தியின் பயன்பாட்டைக் கூட்ட ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பி.ஜி. கெர் ஆணையம் தன் அறிக்கையை குடியரசுத்தலைவரிடம் அளித்தது. 1959-ஆம் ஆண்டில் கெர் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட கோவிந்த் வல்லப் பந்த் தலைமையிலான நாடாளுமன்றக்குழு தன் அறிக்கையை அளித்து ஆட்சிமொழி பற்றிய விவாதத்தைத் தொடங்கிவைத்தது.
விவாதம் சூடு பிடிக்க, பண்டித நேரு ’இந்தியாவின் அனைத்து மொழிகளும் அதன் தேசிய மொழிகளாக சமமாக மதிக்கப்படும். ஆங்கிலம் ஹிந்தியோடு தொடர்ந்து அரசுப்பணிகளுக்காகப் பயன்படும். அதை நீக்குவதற்கான கால அவகாசம் ஏதும் கிடையாது’ என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். தேசிய மொழி என்பது உணர்வுபூர்வமான பதம். சட்டபூர்வ அங்கீகாரம் அதற்கில்லை!
1960-ஆம் ஆண்டில் ஹிந்தியைப் பரப்புவதற்காகவும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு ஹிந்திப் பயிற்சி அளிப்பதற்காகவும் ஹிந்திக் கலைச்சொற்கள் நடைமுறைவழக்கத்துக்காக ஹிந்திக்கையேடுகள் உருவாக்கவும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களில் பயன்படும் வண்ணம் ஹிந்தி சட்டவரைவுகளை எழுதவும் அதிகாரமளித்து குடியரசுத்தலைவர் கையெழுத்திட்டார். இந்த உத்தரவின்படி 45 வயதுக்குக் குறைந்த இந்திய அரசு அதிகாரிகள் கட்டாய ஹிந்தி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். அதில் தேறாவிட்டால் தண்டனை ஏதும் கிடையாது. என்றாலும் தேறியவர்களுக்கு ஊக்கத்தொகை போன்றவை வழங்கப்படும். ஹிந்திபேசும் பகுதிகளில் உள்ள இந்திய அரசுப்பணிக்கானவர்களை நியமிக்கையில் அவர்களுக்குத் தேவையான ஹிந்தி அறிவு இருத்தல் வேண்டும். 1962-ஆம் ஆண்டு வெளியான ரயில்வே போர்டு அறிவிப்பு, ’ஹிந்தி்ப்பயிற்சி மிகவும் மந்தமாக இருப்பதாகக் கவலைப்பட்டு பயிற்சிக்கு வராத அலுவலர்கள் வேலைக்கு வராதவர்களாக கருதப்படுவார்கள்’ என்று எச்சரித்தது.
ஆட்சிமொழிகள் சட்டம், 1963
போதாதா? மொழிப்பிரச்னையில் தமிழ்நாட்டு அரசியல் மெல்ல மெல்லப் புகையத் தொடங்கியது. இதற்கிடையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பதினைந்து ஆண்டுக்கெடு நெருங்கிக்கொண்டிருந்தது. பண்டித நேருவுக்கோ இருபக்கமும் நெருக்கடி! பதினைந்து ஆண்டுகள் ஆனாலும் ஆங்கிலத்தின் பிடியை நீக்க முடியவில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு 1963-ஆம் ஆண்டு ஆட்சிமொழிகள் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆட்சிமொழி என்னவோ ஒன்றுதான் என்றாலும் ஆட்சிமொழிகள் சட்டம் என்று பன்மையில் இந்த சட்டத்தின் தலைப்பு அமைந்திருப்பது சட்டத்தை இயற்றியவர்களுக்கே வெளிச்சம்! இதன்மூலம் ஹிந்தி என்பது ஆட்சி மற்றும் அரசுப்பணிகளுக்கான மொழியென்றாலும் ஆங்கிலம் ஹிந்தியோடு சேர்ந்து பயன்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் போராட்டம் தீவிரப்பட, பண்டித நேரு, 'ஹிந்தி பேசாத மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் நீக்கி ஹிந்தி மட்டுமே அரசு பயன்பாட்டு மொழியாக மாற்றப்பட மாட்டாது' என்று உறுதிகூறினார்.
நேருவின் மரணத்துக்குப் பிறகு இந்த உறுதிக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வகையில் 1968-ஆம் ஆண்டு ஆட்சிமொழிகளின் சட்டத்தில் 'அனைத்துச் சட்டமன்றங்களும் ஆங்கிலத்தை நீக்கி ஹிந்தியை மட்டும் அரசுப்பயன்பாட்டுமொழியாக பயன்படுத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை பாராளுமன்றத்துக்கு அனுப்பும்வரை ஆங்கிலமும் ஹிந்தியோடு பயன்பாட்டுமொழியாக நடைமுறையில் இருக்கும்' என்று ஒரு திருத்தம் கொண்டு வரப்பட, தமிழகம் அமைதியடைந்தது. இதற்கிடையே இங்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய தி.மு.க ஆட்சிக்கும் வந்திருந்தது.
இதற்கிடையில் இந்த மொழிப்பிரச்னை முக்கியமான ஒரு மனிதரின் பதவியை காவு வாங்கியது. 1967-ஆம் ஆண்டு இறுதியில் 'ஆங்கிலத்தை விடுத்து ஹிந்திக்கு முதலிடும் கொடுக்கும் அமைச்சரவைக் கல்விக்கொள்கை' மீதான முடிவை எதிர்த்து, கல்வி அமைச்சராக முன்பு பணியாற்றிய வெளியுறவு மந்திரி, சட்ட அறிஞர் எம்.சி. சாக்ளா பதவி துறந்தார்.
எது எப்படியோ, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஹிந்திக்கு மட்டுமே "முதலிடம்" என்று சொல்வதை விட "இடம்" என்று சொல்வது சரியானதாக இருக்கும்.
தமிழில் அரசியலமைப்புச்சட்டம்
இந்திய அரசியலமைப்புச்சட்டம் இந்திய மொழிகளில் கிடைக்கிறதா? பல சட்டங்களின் தமிழ் வடிவம் கிடைக்கும் என்றாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் எழலாம். உதாரணமாக சட்ட பிரிவுகளில் காணப்படும் shall, may, as போன்ற வார்த்தைகளின் நுணுக்கமான அர்த்தம்பற்றிக் கூட பல சமயங்களில் விவாதம் நடைபெறுவதுண்டு. மொழி பெயர்ப்புக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் இவ்வாறு நுணுக்கமாக ஆராய்கையில் குழப்பத்தை விளைவிக்கும். எனவே தமிழ் மொழியாக்கம் படிப்பு உபயோகத்துக்கு மட்டுமே பயன்படும். ஆங்கில வடிவம் மட்டுமே செயல்வடிவம் பெறும். தமிழிலேயே சட்டமியற்றப்பட்டால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும்.
இந்திய அரசியலமைப்புச்சட்டம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக, சட்ட வரைவுக்குழு அதன் ஹிந்தி மொழியாக்கத்தைச் செய்து வெளியிட ராஜேந்திர பிரசாதுக்கு அனுமதியளித்தது. அதன்படி ஹிந்தியில் மொழிபெயர்த்து, ஆங்கில வடிவம் மற்றும் ஹிந்தி மொழியாக்கம் இரண்டிலும் சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள் 1950-ஆம் ஆண்டு கையெழுத்திட்டனர். ஹிந்தி மொழியாக்கத்தைப் படித்த நேரு அதில் ஒரு வார்த்தைகூடத் தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கடிதம் எழுதினார். பின்னர் ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஹிந்தி மொழியாக்கம் இறுதியாக 1988-ஆம் ஆண்டு முழுமைபெற்று அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்திய பிரிவு 394A என்பதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஹிந்தி தவிர்த்த மற்ற மொழிகளுக்கு இந்த உரிமையில்லை.
பொதுவாக சட்டங்கள், நீதிமன்ற முறைகளை தமிழிலோ ஹிந்தியிலோ இயற்றுவது கடினமான காரியம், ஆனால் இயலாததல்ல. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் முன்னேற்றமும் தேவை. பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் லத்தீனே படித்தவர்களின் மொழியாக இருந்து, பின்னர் ஃப்ரெஞ்சு அந்த இடத்துக்கு வந்தது. மெல்ல மெல்ல ஜெர்மன், ருஷ்ய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கப் பல ஆண்டுகள் பிடித்தது.
நீதிமன்றங்களும் மொழிப்பிரச்னையும்
இறுதியாக, நீதிமன்றங்கள் எவ்வாறு இந்த மொழிப்பிரச்னையில் மாறுபட்ட நிலை எடுத்து நீதிபதிகளும் ரத்தமும் சதையுமான மனிதர்கள் என்று உணர வைக்கின்றன என்பதற்கு உதாரணமான வழக்குகள் இரண்டைப் பார்க்கலாம்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர், தனது கட்சிக்காரர்களுக்கு சகாயம் செய்யும் வண்ணமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்ற தியாகிகளுக்கான ஓய்வூதியத் (pension) திட்டம் ஒன்றினை அறிவித்தது. உடனடியாக, விடுதலைப்போராட்ட தியாகி தளவாய், இந்த ஓய்வூதியத்திட்டம் ’ஹிந்தியை மேம்படுத்திப் பரப்புவது இந்திய அரசின் கடமை’ என்ற அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 351 என்பதைப் பாதிக்கிறது என்ற வாதத்துடன் ஒரு ரிட் வழக்கைத் தாக்கல் செய்தார். சென்னை நீதிமன்ற நீதிபதிகள், ’நிதிப்பகிர்வு சட்டத்தின்மூலம் மாநில அரசுக்கு இவ்விதமான திட்டத்துக்கு நிதி ஒதுக்க அதிகாரம் உண்டு’ என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர். தளவாய் உச்சநீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு 'இவ்விதமான ஒதுக்கீடு அரசியலமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது என்று கூறி தமிழக அரசின் திட்டம் செல்லாது என அறிவித்தனர். நீதிபதிகள் முக்கியமாக தீர்ப்பில் கூறிய வாசகம் கவனிக்கத்தக்கது - ’தமிழக அரசின் இந்தத்திட்டம் (நாட்டைப்) பிளவுபடுத்தும் பிரிவினைவாத சக்தியை உள்ளடக்கியது. ஏதாவது மாநிலம் ஹிந்திக்கு அல்லது வேறுமொழிக்கு எதிரான உணர்வுகளை தூண்டிவிட முயன்றால் அத்தகைய முயற்சியானது மக்கள்-விரோத, தேசவிரோத செயல்கள். அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.’ எனவே தமிழக அரசின் திட்டம் செல்லாக்காசாகியது (All India Reporter, 1976, Supreme Court 1559).
இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் மாறுபட்ட கோணங்களில் மொழிப்பிரச்னையை அணுகியது மற்றொரு வழக்கிலும் நேர்ந்தது. 1960-ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவர் கையெழுத்திட்ட அந்த உத்தரவைத் தொடர்ந்து இந்திய அரசுத்துறைகள் பல தத்தம் ஊழியர்களுக்குக் கட்டாய ஹிந்திப்பயிற்சி அளிக்கும் நோக்குடன் அறிவிப்பு வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம். இவற்றை எதிர்த்து அப்போது தி.மு.க.-வின் நாடாளுமன்றக் கட்சித்தலைவராக இருந்த முரசொலி மாறனும் தபால்துறையில் வேலை பார்த்த ஒரு உதவி மேலாளரும் தனித்தனியே ’ரிட்’ வழக்கு தொடர்ந்தார்கள். முரசொலி மாறன் அந்த அறிவிப்பால் பாதிப்படைப்பவர் அல்லர் என்ற காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றம் அவர் வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால் தபால்துறை உதவி மேலாளரின் ரிட் வழக்கை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் அந்த உத்தரவுகள் ஆட்சிமொழிகள் சட்டப்பிரிவுக்குப் புறம்பாக இருப்பதாகக் கூறி அவை செல்லாதவை என அறிவித்தது. பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றது. தளவாய் வழக்கினை விசாரித்த அதே நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, குடியரசுத்தலைவரின் உத்தரவும் அரசுத்துறை நிறுவனங்களின் அறிவிப்புகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணமாகவே உள்ளன. அவை அரசுமொழிகள் சட்டத்தின் பிரிவுகளை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக அவற்றுக்கு இசைவானவை என்று கூறியது. மேலும், "கட்டாயப்பயிற்சி வேலைநேரத்தின் பகுதியாகவே வழங்கப்படுவது. எனவே இதில் பங்கேற்பது அவர்கள் கடமை. ஆனால் இதில் தேறவேண்டிய அவசியமில்லை. தேறவில்லை என்றாலும் பாதிப்பில்லை. தேறிய்வர்களூக்கு ஊக்கத்தொகை (incentive-like prizes and increase in pay) வழங்கப்படுவதால் மட்டுமே சமநிலை பாதிக்கப்படுகிறது என்பதல்ல" என்று கூறி இந்திய அரசு ஊழியர்களுக்கான கட்டாய ஹிந்திப்பயிற்சியும் அதில் தேறினால் கிடைக்கும் ஊக்கத்தொகையும் சட்டத்துக்கு உட்பட்டவையே என்று தீர்ப்பளித்தனர் (All India Reporter, 1977, Supreme Court 231)
ஆக, இந்தியாவின் ஆட்சிமொழி ஹிந்தி மட்டுமே.... ஆட்சிமொழி மட்டுமல்ல. அரசுப்பணி மொழியாகவும் அதை முழுதும் மாற்றும் வண்ணம் இந்திய மக்களாகிய நாம் செய்ல்பட நம்மை அறிவுறுத்துகிறது, அரசியலமைப்புச்சட்டம்.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
27.11.08
இந்திய அரசியலமைப்புச்சட்டமும் மொழிகளும் - பிரபு ராஜதுரை
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(159)
-
▼
07
(11)
- இசையும் தொன்மமும் - 1 - க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ்
- லால்கர் - இடதுசாரிகளின் பதில் என்ன? - தலையங்கம்
- மறைந்த வ.அய்.சுப்பிரமணியன் பற்றி தமிழவன்
- இரவு முகம் மேலே - 4 - ஹூலியோ கொர்த்தஸர்
- இரவு முகம் மேலே - 3 - ஹூலியோ கொர்த்தஸர்
- இரவு முகம் மேலே - 2 - ஹூலியோ கொர்த்தஸர்
- இரவு முகம் மேலே - 1 - ஹூலியோ கொர்த்தஸர்
- கதையாடல்களின் சுழற்சியும் நிறங்களின் புதிர்மையும் ...
- புலிகளின் பொன் - ஜோர்ஜ் லூயி போர்ஹெ
- பதிவுகளும் நானும் ட்விட்டரும்
- பிறிதான புலி - ஜோர்ஜ் லூயி போர்ஹெ
-
►
06
(16)
- மீண்டும் சாரு நிவேதிதாவுக்குக் கடிதம்
- நெஞ்சத்து அவலம் இலர் - 2
- கனாப்புலிகள் - ஜோர்ஜ் லூயி போர்ஹெ
- இலங்கை அரசை ஆதரிக்கும் க்யூபா, பொலிவியாவுக்குக் கண...
- தமிழாக்கமும் ஆங்கில ஆக்கமும் - கடிதம்
- நெஞ்சத்து அவலம் இலர் - 1
- பூத சதுக்கம் புக்கனர் மயங்கி - 2
- நிலவின் உருமாற்றம் - ஸில்வியா ப்ளாத்
- சாவாளும் புலம் அறுக - டிலன் தோமஸ்
- பூத சதுக்கம் புக்கனர் மயங்கி - 1
- எங்கு? - பௌல் ஸெலான்
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு...
- நிலப்பரப்பு - பௌல் ஸெலான்
- குற்றமே போலாகும் காலம் - ப்ரெக்ஹ்டும் ஸெலானும்
- கறுப்பாய் - பௌல் ஸெலான்
-
►
05
(17)
- மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு ...
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்ட...
- ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
- மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை
- சரண்-பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகள் என்னிடம் கோ...
- இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்.....
- உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்
- கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
- குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
- ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா
- எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
- இன்றைய கொடூரத்திலிருந்து உருவாகும் தமிழ்-உண்மை - த...
- அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
- முகாம் என்பது யாது? - 2 - அகம்பென்
- பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்
- தூதுவர் - ஸில்வியா ப்ளாத்
-
▼
07
(11)
பகுப்பு
- ஃபூக்கோ (17)
- ஃப்ரெஞ்சு (141)
- அகம்பென் (4)
- அஞ்சலி (20)
- அணுசக்தி (9)
- அறிவியல் (39)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (13)
- இணையம் (10)
- ஈக்கோ (2)
- ஈழம் (45)
- உரைமொழி (4)
- ஊடகம் (43)
- ஓவியம் (2)
- கடிதம் (25)
- கண்டனம் (1)
- கவிதை (165)
- குறியியல் (2)
- சாம்ஸ்கி (4)
- சிந்தனை (106)
- சிற்பம் (2)
- சீனம் (3)
- சூழலியல் (20)
- செயல் (82)
- ஜெர்மன் (9)
- திரை (20)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (5)
- நடனம் (2)
- நட்பு (14)
- நேர்காணல் (9)
- பயணம் (11)
- போதலேர் (39)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (3)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (7)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (51)
- லண்டன் (10)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (4)
- வரலாறு (136)
- வரைமொழி (91)
- வானொலி (3)
- விழியின் கதை (6)
- ஸில்வியா (36)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸார் (2)
- ஸ்பானிஷ் (15)
3 கருத்துகள்:
ஒரே நாட்டிலிருந்து சிங்கள மொழியை என்னாலும் ஒரு சில வார்த்தைகள் தவிர கற்க, பேச முடியவில்லை என்ற வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது..
உலகில் உள்ள எவ்வளவு மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம். இதுதான் என் ஆவலும்..
//இந்தியாவில் தேசிய மொழி என்பது ஏதும் இன்றுவரை கிடையாது. ஏனெனில் ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்கள் பெரும்பான்மையினர் கிடையாது. ஆனால் மற்ற மொழிகளை விடவும் ஹிந்தி பேசுபவர்கள் அதிகம் என்ற நிலையில், அரசியலமைப்புச் சட்டவரைவுக்குழுவிலும் அவர்களது தாக்கம் அதிகம் இருந்தது. அதில் சிலர் ஹிந்திதான் வேண்டும் என்ற தீவிரவாதிகளாக இருந்தனர். ஆனால் காங்கிரஸில் இருந்த மற்ற மொழி மிதவாதிகளின் ஆதரவாலும் அவர்களுக்குப் பண்டித நேரு அளித்த ஆதரவாலும் விளைந்ததே முன்ஷி-ஐயங்கார் ஃபார்முலா என்றழைக்கப்படும் மேற்சொன்ன அரசியலமைப்பு சட்டப்பிரிவு.
"ஹிந்தி என்பது ஹிந்துஸ்தானியை ஒதுக்காமல் அனைத்து மொழிகளிலிருந்து வார்த்தைகளைத் தழுவி நாட்டின் கலாச்சார ஒற்றுமையைப் பேணாத வகையில் அதை அரசுமொழியாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று பண்டித நேரு சட்டவரைவுக்குழுவிடம் கூறியது குறிப்பிடத்தக்கது /
இது எனக்குப் புதிய தகவல்.
/இன்னொரு விஷயம் - "மொழி விஷயங்களில் இந்திய அரசியல் கட்டமைப்புகள் நாசூக்காகவும் சாதுர்யமாகவும் sophisticated ஆகவும் இதுவரை நடந்துகொண்டுள்ளன. அதனால் மொழிச்சிக்கல்களினால் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட ரத்த நதிகள் இந்தியாவில் தவிர்க்கப்பட்டுவிட்டன. 1965 தமிழ்நாடு தவிர. தமிழ்நாட்டிலேயும் இந்தி எதிர்ப்பு தொல்லையில் உள்ள ஞாபகமாகத்தான் உள்ளது" என்று நீங்கள் எழுதுவது மேம்போக்கானது.
போடோ, ஜார்க்கண்ட், மணிப்புரி மக்களின் தியாகம், போராட்டத்துக்குப் பிறகே அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாம் அட்டவணை ஒவ்வொரு முறையும் மாறியிருக்கிறதைக் காண்பதைத் தவிர்த்து, "ரத்த நதி" என்ற பதத்தை செயப்பாட்டுவினையில் எழுதி, சொந்தத்தோளில் தட்டிக்கொண்டு அதை சாதுர்யம், நாசூக்கு என்று நீங்கள் அழைத்துக்கொள்வது சரியல்ல./
இது அகில இந்திய மொழி சமாச்சாரத்தில் வருவதால், இந்தப்பக்கம் இழுத்து விடுகிறேன்.
போடோ மொழிக்கு அங்கீகாரம் வேண்டும் என்ற இயக்கம் அஸ்ஸாம் மாநிலத்தின் மீது மோதியது. அது அகில இந்திய மொழிக்கொள்கைகளுடன் மோதவில்லை. ஜார்க்கண்டில் அதிகார மொழி ஹிந்தி; அது பீகாரிலிருந்து பிரியும் போது மொழி-அடிப்படையில் பிரியவில்லை. அங்கு வங்காள, ஒரியா, சந்தால், ஓரான் மொழிகள் இருந்தாலும் மொழிப்பூசல்கள் இருக்கிறாற்போலத் தெரியவில்லை.
1950களில் மொழிவாரியாக மாகாணங்கள் பிரிவு, இந்திய அரசியலின் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். இது பல பூசல்களைத் தடுத்தது. இன்னும் சில பிரச்னைகள் உள்ளன. எப்பொழுது ஒரு மொழியை தனி மொழி என்று கூறலாம், எந்த அளவுக்கு சிறுபான்மை மொழிக்கு அதிகாரம் தர வேண்டும், என்றெல்லாம். இதெற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு, முதலிலேயே செய்யப்பட்ட ஃபார்மூலா என்றில்லை. ஜனநாயக அரசியல் மூலமாக கோரிக்கைகள் வரும்போது தீர்க்க வேண்டும்.
இந்தியா 60 வருட சுதந்திரத்தில், பொருளாதார, வாழ்க்கைத்தர அளவுகளில் பெரிய வெற்றிகளை சாதித்து விடவில்லை. ஆனால் , மொழிப்பிரச்னைகளை வெற்றிகரமாகத்தான் எதிர்நோக்கியுள்ளது. இலங்கையில் 60 வருடம் முன்பே, மொழிவாரியாக தமிழ், சிங்கள மாகாண்ங்களை ஆக்கியிருந்தால், அங்கு தமிழர்கள் தங்கள் மரபுவழி தாய்நாடு போய்விட்டதே என எண்ணியிருக்க மாட்டார்கள்; ஸ்ரீலங்காவும் மோசமான உட்போரில் தவித்திருக்காது.
பாகிஸ்தானில் விடுதலைக்கு முன் முதல் நாளிலிருந்தே உருதுதான் அதிகார மொழி, இணைப்புமொழி என ஆணையிடப்பட்டது. இத்தனைக்கும் உருது இந்தியாவிலிருந்து செனற அகதிகளின், பொதுவாக தில்லி, உ.பி., ஹைதராபாத் இடங்களிலிருந்து சென்றவர்களின் மொழிதான். அதாவது 3-5 சதவிகித மக்களின் தாய்மொழி. முதலில் வங்காளிகள் உருது சாம்ராஜ்யத்திற்க்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அதனால் வங்காளத்தவர் மீது வெளிப்படை உருதுத்திணிப்பு நிறுத்தப்பட்டாலும், மேற்கு பாகிஸ்தான் உருதுவின் பின் நின்றதால் மானசீகமான சமமாக ஏற்க்வில்லை. அது 1971 ரத்தக்குளிப்புக்க்கு வித்திட்டது. சில கணக்குகள் படி ஒன்பது மாத வாக்கில் 30 லட்சம் பேர் அங்கு கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் உருது பஞ்சாபியரின் மொழியை முற்றிலுமாக நசுக்கி விட்டது. பஞ்சாபியரின் எண்ணிகை 55 சதவிகிதம். அப்படியிருந்தும் மாணவர்கள் அதை பள்ளியில் பயிலவில்லை. ஓரிரண்டு பத்திரிகைகள் உள்ளன அவ்வளவுதான். இதை இந்திய பஞ்சாபில் பஞ்சாபி் மொழி அந்தஸ்து/ஆதிக்கத்துடன் ஒப்பிடுங்கள். பாகிஸ்தானியர் தங்கள் தாய்மொழித்தொடர்பை ஊக்கப்படுத்தியிருந்தால் ஒருவேளை மதவெறி குறைந்திருக்கும்.
அதனால் நான் என் சொந்தத்தோளில் தட்டிக்கொள்ளவில்லை; கடந்த 60 ஆண்டுகளின் பாடத்தை தான் சொல்கிறேன். எங்கு சபாஷ் கொடுக்க வேண்டுமோ, அதைக்கொடுப்பதில் தவறில்லை.
விஜயராகவன்
பாகிஸ்தான்-வங்க தேசம்-இலங்கை நிலைமை தெரிந்ததுதான்.
1956 மொழிவாரி மாநிலங்கள் வேண்டுமென்று பலதரப்பில் போராட்டங்கள் நடைபெற்றன என்பதை மறந்துவிட்டீர்கள் போல.. amnesia அதிகம்தான்! ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’கின் மறுபுறம் இந்த amnesia. இதுதான் சொந்தத்தோளில் தட்டும் பாங்கு.. அதேபோல, ஜார்க்கண்ட் மாநிலம் உருவானபோதுதான் சந்தால் மொழி எட்டாம் அட்டவணையில் சேர்ந்தது. கூர்க்காக்களின் போராட்டத்துக்குப் பிறகுதான் நேபாளி மொழி சேர்ந்தது.
அதற்குப்பிறகுதான் மேற்கு வங்க மாநிலத்தில் இவற்றுக்கு ஓரளவு அங்கீகாரம்.. இன்னும் பல மொழிகள் பல இடங்களில் சேருவதற்கு ரத்தம் சிந்தட்டும் என்பது, அதிகாரத்தைத் தரும் நிலையிலிருப்பவர்களின் நிலைப்பாடு போல..
நீங்கள் "அகில இந்தியக் கொள்கை"யில், அதிகாரத்தைத் "தரும்" நிலையில், உங்களை வைத்துக்கொண்டிருப்பதால்தான் இந்த amnesia.. அரசியலமைப்புச்சட்டம் உருவான போதே பல முட்டாள்தனங்களைத் தடுத்திருக்க முடியும், இவற்றைச் செய்தவர் யார்யார் என்பது நாடறிந்த விஷயம். ராஜதுரையின் பதிவிலும் அதைக் கூறுகிறார். இப்போதும் பலரின் நிலைப்பாடு அதுதான். அதுபற்றியெல்லாம் உங்களிடமிருந்து ஒருவார்த்தையும் வரவில்லை!
Post a Comment