பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

20.11.08

கண்ணில் பட்டவை - பல்சந்த மாலை பற்றி...

இணையத்தில் சுவாரசியமாக என்ன இருக்கிறது என்று தேடும்போது அகப்பட்டது, ஆறாம் திணை இதழில் வந்த பீ.மு. அஜ்மல்கானின் இஸ்லாமும் தமிழிலக்கியமும் என்ற கட்டுரை. இதில் பல நூற்றாண்டுகள் முன்பு இஸ்லாம் சார்ந்து தமிழில் வந்த இலக்கியங்கள் பற்றிப் பேசுகிறார். எழுத்தாளரும் நாகூர் சார்ந்த நண்பருமான ஆபிதீன் வலைத்தளத்திலும் முழுக்கட்டுரையை வாசிக்கலாம்.

இஸ்லாமியரின் படைப்போர் இலக்கியம் குறித்து அஜ்மல்கான் எழுதிய புத்தகத்தை முன்பு வாசித்திருக்கிறேன். இவர் இந்தக்கட்டுரையில், பல்சந்த மாலை நூல், பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கிறார். அதிலிருந்து ஒரு பாடல், இரு வரிகள் மாத்திரம் தருகிறார். எட்டுப்பாடல்கள் மாத்திரமே களவியற் காரிகை நூல்வழிக் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார். இங்கே தந்திருக்கும் பாடல், பேரருளாளனாகிய இறைவனை வணங்கி, பிறகு "பழனங்கள் சூழ் நாட்டகமே" எனத் தமிழ்மரபில் முடிகிறது. இந்த களவியற் காரிகை நூல் யாரிடமாவது இருந்தால் அதிலுள்ள எட்டுப்பாடல்களை முழுமையாகப் பதிவில் இடலாம்...

கோவை, மாலை, கண்ணி போன்ற இலக்கிய வடிவங்களின் மரபு நீண்ட ஒன்று. மாலை என்பது X-X-X... என்பதாக பூத்தொடுப்பது. X என்பது வெண்பாவாக, கலிப்பாவாக இருப்பது வழக்கம். மாலை பாடியோரில் மூத்தவர் யாரென்று பார்த்தால், காரைக்கால் அம்மையார் ஈசன்மேல் பாடிய இரட்டைமணி மாலைதான் என நினைக்கிறேன். கட்டளைக்கலித்துறையும் (X) நேரிசை வெண்பாவும் (X') அடுத்தடுத்து வரும் X-X'-X-X'-X-X... அமைப்பு. X, X' உறவு அந்தாதி உறவு கொண்டவை. இப்படி இருபது பாடல்கள்.

கிளர்ந்துந் துவெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந் துகங்கையும் வானத்திடை வளர்கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்இருக்குஞ்சென் னிஈசனுக்கே (X).

ஈசன் அவன்அல்லா தில்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான் (X').

தமிழில் மாலைகள் நிறைய. தொண்டரடிப்பொடியாழ்வாரின் அரங்கமா நகருளானே என முடியும் பெயர்பெற்ற பாடல்களில் தொடங்கிச் செல்கிற நாற்பத்தைந்து பாடல்களால் ஆனது, திருமாலை, தனியனும் உண்டு. இதில் உள்ள பச்சை மாமலை போல் மேனி.. என்ற பாட்டு இன்று கச்சேரி, சினிமாவரை வந்துகொண்டிருக்கிறது... நிறைய மாலைகளைச் செய்தவர், குமரகுருபரர். பத்துப்பாடல்களில் அமைந்த சகலகலாவல்லி மாலையை, காசி நகரம் சென்று பாடியிருக்கிறார். மொகலாய மன்னர் ஷாஜஹானின் மூத்த புதல்வர், சூஃபியத்தில் ஆர்வம் கொண்டவர், வடமொழி உபநிடதங்களைப் பாரசீக மொழியில் ஆக்கியவர்களில் ஒருவர் என்று கருதப்பெறும் இளவரசர் தாரா ஷிக்கோஹ்-வின் அவையில், ஹிந்துஸ்தானி (இன்றைய ஹிந்தி) மொழி அறியாத குமரகுருபரர், அந்த மொழியை உடன் அறிய வேண்டி, கலைமகள் குறித்து இயற்றியது சகலகலாவல்லி மாலை என்பது ஐதீகம். கட்டளைக் கலித்துறையில் பத்துப்பாடல்களும் சகலகலாவல்லியே என முடிகின்றன. அதற்கு முன்பே, மதுரை மற்றும் தில்லையில், மீனாட்சியம்மை மற்றும் சிவகாமியம்மை மீது இருபது பாடல்களில் இரட்டைமணிமாலை, நாற்பது பாடல்களில் அமைந்த திருவாரூர் நான்மணிமாலை ஆகியவற்றை இயற்றியவர் குமரகுருபரர். துறைமங்கலம் சிவப்பிரகாசர் சைவக்குரவர் நால்வரின் மீது பாடிய நால்வர் நான்மணிமாலை, ஐரோப்பியரான வீரமாமுனிவர் திருக்காவலூர் அடைக்கல நாயகிமீது இயற்றிய அடைக்கல மாலை, திரிகூட ராசப்பக் கவிராயரின் நூறு பாடல்களும் குற்றாலத்துறைபவனே என முடியும் திருக்குற்றால மாலை பிறகு உ.வே. சாமிநாதய்யர் மதுரையை வைத்து நூறு பாடல்களில் பாடிய கயற்கண்ணி மாலை வரை மாலைகளைச் சொல்லலாம். ஆக, வைணவர், சைவர், கிறித்துவர், இஸ்லாமியர் தமக்கான தமிழை மாலைவடிவத்தில் கண்டிருக்கிறார்கள், அதேநேரம் அதைத்தாண்டிய களமாகத் தமிழிலக்கியத்தின் வடிவங்களைக் காண்கிறார்கள் என்று கூறலாம்.

அஜ்மல்கானின் கட்டுரையில் இன்னொரு விஷயம் - இதில் வருகிற யாகோபுச்சித்தர் பாடல்கள், ஆயிர மசலா, மிகுராஜ மாலை, திருநெறி நீதம் ஆகியவை பற்றிய மேல்விபரங்கள், பேராசிரியர் ம. மு. உவைஸ் அவர்களின் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் நூலில் உண்டு என நினைக்கிறேன். இவற்றில் திருநெறி நீதம், பதினேழாம் நூற்றாண்டைச் சார்ந்த சூஃபி ஞானி தக்கலை பீர்முகம்மது இயற்றியது.

இனி அஜ்மல்கான் கட்டுரையின் சில பகுதிகள்:

"...இன்றைக்குத் தமிழிலக்கிய உலகில் சுட்டிக்காட்டத்தக்க எல்லைப்பரப்பினைப் பெற்றுச் சிறக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்ற வளர்ச்சிக்கு, இஸ்லாம் தமிழகத்துடன் கொண்ட தொன்மை-உறவே காரணமாக இருந்திருக்கும். இந்தத் தொன்மை-உறவினையும் அதன் பயனாய் மலர்ந்த முதல் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தையும் ஏனைய பிற இஸ்லாமிய இலக்கியங்களையும் சுட்டிக்காட்டுவதே இங்கு நோக்கமாகும்.

...இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கு அச்சாரமிட்ட பெருமை பல்சந்த மாலை என்னும் இலக்கியத்தைச் சாரும். பல்சந்த மாலை, இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதைப் பல்வேறு சான்றாதாரங்களின் அடிப்படையில் அறிய முடிகிறதே தவிர, நூல் முழுமையும் நமக்குக் கிடைத்தில. இதனுள் இடம்பெற்றுள்ள எட்டுப்பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. பழங்காலத்தில் தோன்றிய அகப்பொருள் பற்றிய ஒரு நூலுக்கு எழுதப்பட்ட உரையிலேயே மேற்குறித்த எட்டுப்பாடல்களும் சான்றுச்செய்யுட்களாக இடம்பெற்றுள்ளன. இந்த அகப்பொருள்நூல்கூட இன்னும் தமிழிலக்கிய ஆய்வாளர்களால் முழுமையாகக் கண்டுகொள்ள முடியவில்லை. இந்த நூலை வையாபுரிபிள்ளை களவியல் காரிகை என்று பெயரிட்டு 1931-ஆம் ஆண்டில் பதிப்பித்துள்ளார். இந்த நூலின் ஒரே ஒரு கையெழுத்துப்படி சென்னையில் உள்ள அரசாங்கத்தின் தொன்னூல் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த ஆங்கிலக்குறிப்பினால், இது ஆழ்வார்திருநகரி மலையப்பிள்ளைக் கவிராயருக்குரிய ஏட்டுப்படிகளுள் ஒன்றாக இருந்தது என்பதும் அதனின்றும் நாதமுனைப்பிள்ளை என்பவர் 1920-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பன்னிரண்டாம் தேதி் படி எடுத்தார் என்பதையும் அறியலாம். அதுவே வையாபுரிப்பிள்ளை களவியற் காரிகை என்ற தலைப்பில் பதிப்பித்து வெளியிட மூலமாக அமைந்தது.

பதிப்பாசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறும்போது, "கையெழுத்துப்பிரதியில் இறையனார் அகப்பொருட்துறையைச் சங்கச்செய்யுளாக உதாரணம் எழுதியது" எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். "இக்குறிப்பு இன்னதென உணர்வதற்கு அதன் புறத்தே எழுதி வைக்கும் தலைக்குறிப்பாகவே கொள்ளவேண்டுமேயன்றி நூலில் பெயரல்ல என்பது திண்ணம்" என்பதையும் குறிப்பிடும் வையாபுரிப்பிள்ளை, இதற்கு இப்போது இடப்பட்ட பெயர் களவியற் காரிகை என்பது தம்மாலே சூட்டப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

களவியற் காரிகையில் விளக்கப்படும் அகப்பொருட்துறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் பல்வேறு பழைய இலக்கியங்களிலிருந்து தரப்பட்டுள்ளன. இத்தகு எடுத்துக்காட்டுகளில் அடங்கியுள்ள எட்டுச்செய்யுட்கள் மட்டும் பல்சந்த மாலை என்னும் இலக்கியத்தைச் சார்ந்ததாகக் காணப்படுகிறது. நமக்குப் பல்சந்த மாலை என்னும் தனித்ததொரு இலக்கியம் கிடைக்காவிடினும் இச்சான்றாதாரச் செய்யுட்களைக் கொண்டு இத்தகு இலக்கியம் இருந்து அழிந்திருக்க வேண்டும் என்பதை நன்கு அறியமுடிகிறது.

வையாபுரிப்பிள்ளை தம்முடைய பதிப்பின் இறுதியில் மேற்கோள்நூல்கள் பற்றிய குறிப்பு ஒன்றை இணைத்துள்ளார்: பன்னிருபாட்டியலில் பல்சந்த மாலை என்பது ஒரு பிரபந்த வகை எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நூல் அந்தப் பிரபந்த வகையை சார்ந்ததாக இருத்தல்கூடும். இந்நூல் வச்சிர நாட்டு வகுதாபுரியில் அரசுபுரிந்த அஞ்சு வண்ணத்தார் மரபினனாகிய ஒரு முஸ்லிம் மன்னனைக் குறித்துப் பாடப்பெற்றதாகும். வகுதாபுரியை இக்காலத்தில் காயற்பட்டினம் என வழங்குவர். வகுதாபுரிக்கு அந்து பார் என ஒரு பெயரும் இருத்தல் வேண்டும் என்பது பல்சந்த மாலையின் ஒரு செய்யுளால் புலப்படுகிறது' எனவும் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் ஒரு செய்யுளை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறோம்.

இல்லார் நுதலயு நீயுமின் றேசென்று மேவுதிர்கு
தெல்லா முணர்ந்தவ ரேழ் பெருந்த தரங்கத் தியவனர்கள்
அல்லா வெனவந்து சத்திய நந்தாவகை தொழுஞ் சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே

இச்செய்யுளின் மூன்றாவது அடியில் வரும் 'அல்லாவென வந்து சத்திய நந்தா தொழுஞ்சீர்' என்பது பல்சந்த மாலை இலக்கியம் இஸ்லாமியச்சார்புள்ளது என்பதற்கோர் காரணமாகக் கொள்ளலாம். இதுபோன்று ஏனைய செய்யுட்களின் உள்ளடக்கக் கருத்துக்களும் பல்சந்த மாலை இஸ்லாமியத் தமிழிலக்கியமே என்பதைப் பறைசாற்றுகின்றன. அவற்றை இங்கு எடுத்துக்கூறின் விரியும் என்ற காரணம் தகுதி விடுக்கின்றோம்.

இனி, பல்சந்த மாலையின் காலக்கணிப்பு தொடர்பாகச் சில கருத்துக்களைக் காண்போம். கால ஆராய்ச்சியை மொழி இயல்பினைக் கொண்டு ஓரளவு கணிக்கலாம். பல்சந்த மாலையின் காலம் பதினான்காம் நூற்றாண்டு என்பார் மு. அருணாசலம். இது பொருந்துவதன்று. பல்சந்த மாலையில் இடம்பெற்றுள்ள செய்யுட்களில் அதன் ஆசிரியர் தொல்காப்பியரின் மொழிமரபைப் பின்பற்றியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் நன்னூல் கருத்துகளுக்கு ஏற்புடையதாகக் காணப்படவில்லை. இதில் ஆசிரியர் சோனகரைக் (முஸ்லிம்களை) குறிக்க இயவனர் என்ற சொல்லாட்சியை இரு இடங்களில் பயன்படுத்தியுள்ளார். அத்துடன் 'இயவனராசன்' என ஒரு செய்யுளை ஆரம்பிக்கின்றார்.

இயவனராசன் கலுபா தாழுதலெண்ண வந்தோர்

என அமைகிறது இச்செய்யுள். பிறிதொரு செய்யுளில் இரண்டாமடி

தெல்லா முணர்ந்த ரேழ்பெருந்த தரங்கத் தியவனர்கள்

என உள்ளது. இரண்டு செய்யுட்களிலும் இயவனர் எனவே என உள்ளது. முதலாம் செய்யுளில் இயவனர் என்பது பாடலை ஆரம்பிக்கும் சொல்லாக வர, மற்ற செய்யுளில் யகரத்தின் முன் வந்த குற்றியலிகரம் முற்றியலிகரமாக மாறி 'இயவனர்' என வந்துள்ளது. யவனர் எனப் பாடலில் பயன்படுத்தி இருந்தால் அந்த மரபு தொல்காப்பிய மொழி வழக்காறு நிலைக்கு முரணாக இருந்திருக்கும். சான்றோர் அதனைத் தவறு எனக் கருதுவர். பல்சந்தமாலை ஆசிரியர் வாழ்ந்த காலததில் அகரத்தோடு யகரமெய் மொழிக்கு முதலில் வரும் என்ற நிலை இருந்திருக்காமல் இருக்கலாம். எனவேதான் பல்சந்த மாலை ஆசிரியர் இயவனர் என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் இம்மரபு நன்னூல் கூறும் மொழி இலக்கணத்துக்கு முரணானது. எனவே பல்சந்த மாலை ஆசிரியர் காலத்தை நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர் காலத்துக்கு முற்பட்டதாகக் கொள்ளல் வேண்டும். பவணந்தியாரின் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது தெளிவு. அப்படியாயின் அதற்கு முற்பட்ட காலமான பன்னிரண்டாம் நூற்றாண்டினையே பல்சந்த மாலை சார்ந்ததாக இருத்தல் வேண்டும். இக்காலத்தையே இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தொடக்க காலமாகக் கொள்ளலாம்.

பல்சந்த மாலைக்கு அடுத்த நிலையில் பதினைந்தாம் நூற்றாண்டில் யாகோபுச்சித்தர் பாடல்கள், ஆயிர மசலா (கி.பி. 1572), மிகுராஜ மாலை (கி.பி. 1590), திருநெறி நீதம் (கி.பி. 1613), கனகாபிஷேக மாலை (கி.பி. 1648), சக்கன் படைப்போர் (கி.பி. 1686), முதுமொழி மாலை (பதினேழாம் நூற்றாண்டின் இறுதி) சீறாப்புராணம் (கி.பி. 1703), திருமக்காப்பள்ளு (பதினேழாம் நூற்றாண்டு) முதலான ஒன்பது இலக்கியங்கள் இடம்பெறுவதாக அவற்றின் கால எல்லை அடிப்படையில் வரையறை செய்யலாம் - இந்தப் பத்து இலக்கியங்களையும் தொடக்ககால இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாகக் கொள்ளலாம். கி.பி. 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் இன்றுள்ள இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள அனைத்தும் அடங்கும். இந்த நூற்றாண்டுகளை இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆக்கத்தின் பொற்காலமாகக் கருதலாம்.

இஸ்லாம் தமிழுக்காற்றியுள்ள பணிகளுள் குறிப்பிடத்தக்கது, வேறு எந்தவொரு தனிப்பட்ட சமயமும் அளித்திராத எண்ணிக்கையில் காப்பியங்களைப் படைத்தருளி இருப்பதாகும். கனக கவிராஜரின் கனகாபிஷேக மாலை, உமறுப்புலவரின் சீறாப்புராணம், கேசாதி நயினாரின் திருமணக்காட்சி, பனியகமது மரைக்காயரின் சின்ன சீறா, வண்ணக்களஞ்சியப் புலவரின் இராஜநாயகம், சேகனாப்புலவரின் குத்புநாயகம், வண்ணக்களஞ்சியப்புலவரின் குத்புநாயகம், பதுறுத்தீன் புலவரின் முஹியித்தீன் புராணம், சேகனாப்புலவரின் திருமணிமாலை, புதுகுஷ்ஷாம், திருக்காரணப்புராணம், வண்ணக்களஞ்சியப்புலவரின் தீன் விளக்கம், ஐதுறூசு நயினார் புலவரின் நவமணிமாலை, குலாம் காதிறு நாவலரின் நாகூர்ப்புராணம், ஆரிபு நாயகம் போன்ற பதினைந்து இஸ்லாமியத்தமிழ்க் காப்பியங்களை இயற்றித்தந்த பெருமை முஸ்லிம் தமிழ்ப்புலவர்களைச்சாரும்.

காப்பியங்களுடன் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் நின்றுவிடவில்லை. தமிழிலக்கிய வரலாற்றில் காலத்திற்கேற்பத் தோன்றியுள்ள பல்வேறான இலக்கியவகைகளிம் தங்களுடைய பங்களிப்பை நிலைநாட்டியுள்ளார்கள். அத்துடன் தமிழிலக்கிய வரலாற்றிற்குச் சில புதிய இலக்கிய வடிவங்களையும் அறிமுகம் செய்வித்த பெருமை முஸ்லிம் புலவர்களைச் சாரும். இத்தகு இலக்கிய வடிவங்களே புதுவகை இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாக இடம் பெற்றுள்ளன..."

இப்படி முடிகிறது அஜ்மல்கானின் கட்டுரை.

தமிழிலக்கியத்தின் வடிவங்களான அந்தாதி, ஆற்றுப்படை, மாலை, கண்ணி, கோவை, கலம்பகம், வண்ணம், வெண்பா, பதிற்றுப்பத்து, பிள்ளைத்தமிழ், திருப்புகழ்-விருத்தம், பதம், காப்பியம் என அனைத்திலும் நாட்டுப்புற வடிவங்களான அம்மானை, சிந்து, கும்மி, நொண்டிநாடகம் ஆகியவற்றிலும் இஸ்லாமியர் இலக்கியம் நிறையவே இயங்கியிருக்கிறது.

படைப்போர் என்பது இவர்கள் பிரத்தியேகமாகக் கொண்டுவந்த வடிவம் எனலாம், இதனுடன் புறப்பொருள்நூல்களை ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கலாம். மசலா மற்றும் முனஜத் அரபுமொழியின் இலக்கிய வடிவங்கள், கிஸ்ஸா (கதைவடிவம்) மற்றும் நாமா ஆகியவை, பாரசீக மொழியின் இலக்கிய வடிவங்கள் - இவற்றைத் தமிழுக்கு இஸ்லாமியர் அளித்திருக்கிறார்கள். கிஸ்ஸா, நாமா இவையிரண்டும் இன்று உலக இலக்கியத்தில் பெரும்தாக்கம் செலுத்துபவை - குறிப்பாக, நாமா என்பது வம்சாவழி-உரைநடையாகப் பொதுவாகவே மாறியிருக்கிறது எனலாம்.

4 கருத்துகள்:

Raja said...

ஐயா,
இது போன்று பல தமிழ் இலக்கியங்கள், குறிப்பாக சோழ, பல்லவ கால இலக்கியங்களை பற்றியும் நீங்கள் எழுத வேண்டும்

Sugan said...

பாட்டாலே விளக்கெரியச்செய்த பாவலர் அருள்வாக்கு அப்துல் காதிர் புலவர் (1912). அவரது வெண்பா:

எரிவாய் விரிந்தெழுந்து எண்ணெய்மேல் தோய்ந்து
கரிவாய் இருள்போக்கிக் காட்ட - அரியணையின்
தூண்டா விளக்கே! சுடர்விட்டு நீயென் முன்
ஈண்டிங் கெழுந்து எரி

பாட்டால் எரியச்செய்த விளக்கை பாட்டாலேயே அணைத்தும் காட்டினார். அதற்கான வெண்பா:

தூண்டா மணிவிளக்கே, துகள்போக்கும் தூயொளியே,
காண்டற் கரியதோர் காட்சியே - வேண்டி
எரியவுனை வைத்ததுபோல் எல்லோரும் பார்க்க
அரியணையில் நீநின் றணை.

sugan said...

அவசரமான கணமொன்றில் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பற்றிய குறிப்பை உங்களுக்கு துணுக்குப்போல அனுப்ப நேர்ந்தது வருத்தமளிக்கிறது.

கவிஞர் த. துரைசிங்கம் அவர்களின் பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப்பாவலர்கள் எனும் கைநூலை சமீபத்தில்தான் படித்தேன். அதில் வரும் பகுதியே உங்களுக்கு அனுப்பியது. அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பகுதியைப் படித்தபோது முப்பத்தைந்து வருடங்களிற்கு முன்னால் எனது தமிழாசிரியர் பண்டிதர் இராசரத்தினம் எமக்குப் பாடமொன்றை நிகழ்த்தியது நினைவில் வந்தது. சேனாபதி ஒருவன் தன் குதிரையில் புலவர் ஒருவரை எதிர்கொண்டு அவமானப்படுத்தியது அல்லது சேனாபதியின் குதிரை புலவரின் வயலை நாசப்படுத்தியிருக்கவேண்டும். படைத்தளகர்த்தனுக்கும் புலவருக்கும் பிரச்னையாகிவிட்டது. பிரச்னை மேலும் முற்றியபோது புலவர் தம் கவிதையால் அறம் பாடுகிறார்:

ஆர்த்த வாய்க்கால் அதுகடுத்த அம்மையே!
காளிங்கன் ஏறும் குதிரையை மாளக்கொண்டுபோ!

குதிரை உடனே வீழ்ந்து இறந்துவிடுகிறது. சேனாபதி புலவரிடம் மன்னிப்புக் கேட்கிறான். புலவர் படைத்தலைவனை மன்னித்துப் பாடுகிறார்:

ஆர்த்த வாய்க்கால் அதுகடுத்த அம்மையே!
காளிங்கன் ஏறும் குதிரையை மீளக்கொண்டுவா!

குதிரை மீளவும் உயிர்பெற்று எழுகிறது. பண்டிதர் இராசரத்தினம் அவர்கள் இதைப் பாடம்நடாத்தும்போது அவர்கண்களில் இருக்கும் தீட்சண்யம், நம்பிக்கையின் வடிவம், அவர் உடல்மொழி, முகம் இவை காட்டும் அசாத்தியமான தோற்றம் இன்றும் என்ன, எப்போதுமே என்னால் மறக்க முடியாது.

புலிகள் முஸ்லிம் பெருமக்களை வடமாகாணத்திலிருந்து துரத்தியபோது
கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் "எனது இனம் அழிந்துபோகட்டும்!" எனக் கவிதை எழுதியபோது மு.போ.-வோ வில்வரத்தினம் அவர்களோ ’அடேய்! நீ கவிஞனடா,அறம் பாடக்கூடாதடா! எமது இனம் அழிந்துபோகுமடா!’ என்று அறிவுறுத்தியதாக செவிவழிச்செய்தி உண்டு.
கவித்துவ அறச்சீற்றம் நம் மரபில் இன்னும் தொடர்கிறது.

விதியோடு விளையாடும் ராகங்களே!
விளக்கேற்றி உயிர்காக்க வாருங்களே!

என்ற தான்சேன் பாடலுக்கு சிவாஜியின் நடிப்புக்குப் பிரபஞ்சத்தில் எதைக்கொடுத்தாலும் ஈடாகுமா?

sugan said...

கவிஞர் த. துரைசிங்கம், பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள் நூலில்,
பாவலர் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பற்றிக் கூறியிருப்பதிலிருந்து:

பாட்டாலே விளக்கெரியச் செய்து பாட்டாலே விளக்கை அணையச் செய்தார் ஒரு புலவர். அவர்தான் ஈழத்திருநாடு தந்த அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர். இந்த அற்புதத்தை அவர் கண்டி மாநகரில் பல்லோர் முன்னிலையில் நிகழ்த்திக்காட்டினார்.

இறையருளும் நல்லிசைப்புலமையும் வாய்ந்த புலவர் விளக்கெரியும்படி பாடிய வெண்பா பாடல் வருமாறு;

எரிவாய் விரிந்தெழுந்து எண்ணெய் மேல் தோய்ந்து
கரிவாய் இருள்போகிக் காட்ட - அரியணையின்
தூண்டா விளக்கே! சுடர்விட்டு நீயென்முன்
ஈண்டிங் கெழுந்து எரி.

இவ்வாறு பாட்டால் தீபத்தை எரியச்செய்வது தீப சித்தி என்றழைக்கப்படும். அட்டாவதானம், தசாவதானம், சதாவதானம் என்பவற்றைவிட இது மேலானதாகும். இத்தகைய ஆற்றல்மிக்க புலவர் பாட்டால் எரியச்செய்த விளக்கைப் பாட்டாலே அணைத்தும் காட்டினார். அதற்காக அவர் பாடிய மற்றுமொரு வெண்பாவைப் பார்ப்போம்.

தூண்டா மணிவிளக்கே, துகள்போக்கும் தூயொழியே
காண்டற்கரியதோர் காட்சியே - வேண்டி
எரியவுனை வைத்ததுபோல் எல்லோரும் பார்க்க
அரியணையில் நீ நின்றணை.

இத்தகு ஆற்றல் மிக்க புலவரது சிறப்புக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

எனும் குறளும்

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம்

எனும் தொல்காப்பியச் சூத்திரமும் தக்க சான்றாகும் எனலாம். இவ்வாறு அறிஞர் தம் முன்னிலையில் தமது ஆற்றலைக் காட்டிய புலவரின் செயலைக் கண்ணாரக் கண்டுகளித்த பொன்னம்பலக் கவிராயர்

எல்லா அதிசயத்தும் ஈது மிகப்பெரிதாம்
வால்லான்மெய்ஞ் ஞாநியப்துல்ல்காதிர் - பல்லார்முன்
பாட்டால் விளக்கெரித்துப் பாட்டதனாலேயணைத்துக்
காட்டியதோரிக்காட்சி காண்

என்று பாடிப் பரவசமுற்றார்.

புலவர் பாடும் புலவராய் மெய்ஞ்ஞானியாய் விளங்கிய அப்துர்காதிர் கண்டி மாவட்டத்திலுள்ள போப்பிட்டி என்னும் சிற்றூரில் 30 ஆகஸ்ட் 1866 அன்று பிறந்தவர். தந்தையார் ஆ.பி. அல்லாப்பிச்சை ராவுத்தர். தாயார் கவ்வா உம்மா. இளமையில் அரபுப்பள்ளியில் திருக்குர்-ஆனும் தமிழ்ப்பள்ளியில் தமிழும் பயின்ற இவர் கண்டியில் உள்ள ராணி அக்கடமியில் (தற்போது அர்ச் போல்ஸ் கல்லூரி) ஆங்கிலம் கற்றார். பின் தமது மூதாதையரின் இடமான திருப்பத்தூருக்குச் சென்று மஹ்மூது முத்துப் பாவாப்புலவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தார். தனது பதினாறாவது வயதிலே கவியரங்குகளில் கவிமழை பொழியத்தொடங்கினார். அச்சமயம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த கவியரங்கொன்றில் கவிமழை பொழிந்த இவரது புலமைத்திறனை வியந்தோர் அவ்வரங்கிலேயே இவருக்கு "அருள்வாக்கி" எனப் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். அன்றுமுதல் அதே பெயரில் அழைக்கப்படலானார். உண்மையிலே அவர் அருள்வாக்கினராகவே விளங்கினார். பலரது தீராத நோய்களைத் தீர்த்துவைத்தாரெனவும் கூறுவர்.

பதிந்தவை