அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 1
அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 2
அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 3
அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 4
அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 5
இந்தியாவின் பிரதான செவ்வியல் இசைமரபுகள் இரண்டு - ஹிந்துஸ்தானி என்பது வடநாட்டு மரபு. தென்னாட்டு மரபைக் கர்நாடக இசை என்று வழங்குவதுண்டு. அதே சமயம், இவை இரண்டின் சார்பாகவும் ஏகப்பட்ட கோபதாபங்கள், மனமாச்சர்யங்கள் உண்டு! இரண்டுக்கும் பரஸ்பரப்புரிதல் வேண்டி வாரந்தோறும் இருதரப்பும் சார்ந்த இசைவாணர்கள் பங்கேற்கும் கூட்டுநிகழ்ச்சியை அகில இந்திய வானொலி அண்மையில் தொடங்கியது. இது பத்து வாரங்கள் வரை செல்லும் எனத் தெரிகிறது. முடியுமென்றால் இருதரப்பு ரசிகர்களுக்கும் பரிச்சயமுள்ள ராகங்கள் இந்த நிகழ்ச்சியில் இசைக்கப்பெறுகின்றன. தவிர, தென்னாட்டு இசைவாணர்களில் சிலர் வடநாட்டுப்பாணிகளை அவ்வப்போது முயற்சித்துப் பார்ப்பதும் உண்டு. இருப்பினும் இரு மரபுகளின் உள்ளார்ந்த பலத்தைக் காட்டும் அம்சங்களும் தாக்குப்பிடிக்கிற, இந்திய இசையின் பன்மைத்தன்மையையும் தரத்தையும் செழுமைப்படுத்துகிற, சாத்தியமே அதிகம் என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் உயர்மத்தியர-வர்க்க மனிதர்கள் அனைவரும் விரும்பி ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றித் தங்கள் கருத்தைத் தெரிவிப்பார்கள் என்றால் அது இங்குள்ள செவ்வியல் இசைபற்றித்தான். இப்படி இசைபற்றி மேலதிகமாக ஏதாவது ஒரு கருத்தைத் தெரிவிக்கும் மேலதிக எண்ணிக்கை நபர்களை இந்தியா தவிர நான் எங்கும் கண்டதில்லை! இந்தியா அரசியல்-விடுதலை பெற்றது இங்குள்ள கலைமரபுகள் குறித்த பரவலான ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. தென்னாட்டின் செவ்வியல் இசைக்கும் இங்குள்ள சமய மரபுக்கும் ஆழமான உறவு உண்டு. இசைப்பயிற்சி என்பதே ஆன்மீக வெளிச்சத்துக்கான நிச்சயப்பாதையாகக் கருதப்பெறும் இடம் இது. இந்த விஷயம், இங்குள்ள ஒரு சராசரி மனிதருக்கு ஒரு செய்தியைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது - 'உன் இசை சிறப்பானது, விலைமதிப்பற்றது, உன் பண்பாட்டின் அதிமுக்கிய அலகு, உனக்கென இறைவன் படைத்தளித்தது' என்ற இவருடைய நம்பிக்கையை வலுப்படுத்தும் செய்தி இது.
இதெல்லாம் வைத்துப் பார்த்த போது, என்னைப் போன்ற ஒருவர் கச்சேரி செய்வதை இங்குள்ள ரசிகர்கள், அதிலும் மரபான இசையை மாத்திரம் கேட்பவர்கள், எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று எனக்குக் கொஞ்சம் அச்சமிருந்தது. ஆனால், இவர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன் என்று தெரிந்துகொண்டேன். தங்கள் இசையைக் கற்க நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்பது இங்குள்ள அனைத்துவித ரசிகர்களையும் மகிழ்வடையச் செய்திருக்கிறது. முழுநேரக் கச்சேரி செய்யும்போது அதை எதிர்கொள்ளக் கொஞ்சம் தயங்கினார்கள். இயல்புதானே அது! ஆனால் நான் சகஜமாகப் பாட என, விதிவிலக்கே இன்றி அனைவரும் தங்களால் இயன்ற அனைத்தையும் ஒத்தாசையாகச் செய்தார்கள். குறிப்பாக, இந்த மூன்றாண்டுகளில் இறுதியாண்டில் இந்தியாவெங்கும் நாங்கள் செய்த கச்சேரிகளில் நான் பாடியதற்கு, அளவுக்கதிகமான வரவேற்பை மனமுவந்து அளித்தார்கள் என்பதைச் சொல்லியாக வேண்டும்.
மேற்குலகைச் சார்ந்த என்னைப் போன்ற ஒருவர் இப்படித் தங்கள் இசையைப் பாடுவதை, இங்குள்ள மரபான பழைய மனிதர்கள் பலர் தங்களுக்குப் பரிச்சயமான முறையில் புரிந்துகொள்ள முயன்றார்கள். இதை நான் நாடு திரும்புமுன்பான மாதங்களில் அதிகமாக உணர்ந்தேன்: இவர்கள் என்னிடம் வந்து "நீங்கள் முந்தைய பிறவியில் ஹிந்துமதப் பின்னணி கொண்டவராக இருந்திருக்க வேண்டும், பெரும் இசைவாணர் ஒருவரிடமிருந்து கற்றிருக்க வேண்டும்" என்று கூறினார்கள்! இவர்கள் என்னிடம் இப்படிக்கூறியது ஒருவிதத்தில் என் நெஞ்சைத் தொட்டது. அந்நிய மனிதர்களை ஏற்றுத் தன்னைச் செழுமைப்படுத்திக்கொள்ளும் இந்திய மக்களின் வரலாற்றுத்திறன் குறித்து எனக்கிருந்த மதிப்பும் பெருகியது. மேற்குலகிலிருந்து இன்னும் பல மாணவர்கள் இங்கு வந்து இசை குறித்த புதிய புரிதலை, அனுபவத்தைப் பெறுவார்கள், அப்போது இந்த இரண்டு கலாச்சாரங்களுக்கிடையே இசைப் பரிமாற்றம் குறித்த ஆர்வம் பெருகும் என்று நினைக்கிறேன். நமக்குள் கண்டறியவும் பங்கிடவும் எத்தனையோ இருக்கும் நிலையில் கலைமரபுகள், இசைமரபுகள் பற்றிய பரஸ்பர அறியாமை நீடிப்பது சரியல்ல.
இந்தியாவில் நான் கழித்த மூன்று ஆண்டுகள் ஒரு தொடக்கம்தான். இந்தப்பயணம் என் பார்வையைச் செழுமைப்படுத்தியிருக்கிறது. என் இந்தக்காலகட்ட முயற்சியின் முக்கிய விளைவு, எனக்குக் கிடைத்த புதிய நட்பு. மற்ற எல்லாமே போனஸ்தான்!
(முற்றும்)
[1984-ஆம் ஆண்டு டிசம்பர் பத்தாம் நாள், அமெரிக்காவில் கார் இடித்து மரணமடைந்தார் ஜான் பி. ஹிக்கின்ஸ். இவர் குறித்த என் புரிதலை அஞ்சலியாக எதிர்வரும் டிசம்பர் பத்தாம் நாள் எழுதுகிறேன். அது குறித்து இப்போது இரண்டு விஷயங்கள் மட்டும்:
1. தென்னாட்டின் தேர்ந்த இசைவாணர்கள் பலர் தங்கள் இசையைச் செழுமைப்படுத்திக்கொள்ள வீணை தனம்மாள் மரபை நோக்கிச் செல்வது வழக்கம். பாட வரும்போதே இந்த மரபை நோக்கிச் சென்றவர் ஜான் ஹிக்கின்ஸ் என்பதில் சுவாரசியம் உண்டு. தமக்கு ஆசிரியராக டி. விஸ்வநாதன் அமைந்தது தன் பாக்கியம், அதிர்ஷ்டம் என்று இந்தக்கட்டுரையில் பல முறை சொல்கிறார். இதைத் தமிழில் ஆக்கிய போது, எனக்கு உ.வே. சாமிநாதய்யர் தமக்கு ஆசிரியராக திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அமைந்ததைச் சிலாகிப்பதும் தமக்குச் சிந்தாமணி பற்றித் தெரிய வழிசெய்த சேலம் ராமசாமி முதலியாரைச் சந்தித்த நாளைச் சிலாகிப்பதும் நினைவுக்கு வந்தன!
2. ஜான் ஹிக்கின்ஸ் வரலாறும் மேற்குலகச் செவ்வியல் இசையும் பயின்றவர். இசையியலில் பிற கலாச்சாரங்கள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பயிலும் நோக்கம் கொண்டவர். தம்முடைய தென்னாட்டு இசைப்பயணத்தை மேற்குலகக் கண்டறிதல் (discovery) என்பதாகத்தான் தொடங்குகிறார். மேற்குலகச் செவ்வியல் இசை போன்ற வடிவத்திலோ, தமக்கு ஏற்புடைய ஒரு வடிவத்திலோ தென்னாட்டின் கச்சேரி வடிவம் என்பது இல்லை என்றும் கண்டறிகிறார். அதே சமயம், திருவையாற்றில் காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜர் ஆராதனையில் பாடிய அனுபவத்தில், ஒரு யாத்திரை (pilgrimage) நிறைவுறும்போது கிட்டக்கூடிய பரவசத்தை எய்துகிறார். காவிரிக்கரையில் புனிதம் என்பதைத் தீண்டும் நிலையில், மனங்கள், உடல்கள் பல இசையால் ஒன்றிணைவதைக் கவனிக்கிறார். அங்கே பாடியதை ஒரு நிமித்தமாகக் கொண்டு அதிலிருந்து கச்சேரி-வடிவத்துக்குத் தயாராகிறார். அதில் வந்த வெற்றி இவரைத் தாக்குகிறது. ஆனால் அந்த வெற்றியில் அமிழ்ந்துவிடாமலும் இயங்குகிறார். இறுதியில், பழைய மரபான மனிதர்கள், ’முற்பிறவியில் ஒரு ஹிந்து, பெரிய இசைவாணரிடம் இசை பயின்றவர்’ எனத் தங்கள் பாணியில் இவரை அடையாளம் காண்கிறார்கள்! அதில் மனமுருகிவிடும் ஹிக்கின்ஸ் பிறகு சற்றே தள்ளி நிற்கிறார் - மீண்டும் பரஸ்பர அறியாமை, கண்டறிதல் பற்றிப் பேசுகிறார். இறுதியில் தென்னாட்டில் தனக்குள்ள புதிய உறவுகளை, நட்பு என்று வகைப்படுத்துகிறார். இவை அனைத்தையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
டிசம்பர் பத்தாம் நாள் வரை உங்களுக்கு நேரமிருக்கிறது, நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை யோசித்துவைக்க! - நாகார்ஜுனன்]
படங்கள் -
1969-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பாடகர் டி. பிருந்தாவின் வீணைக் கச்சேரி. மிருதங்கம் - டி. ரங்கநாதன்
நாட்டியக்கலைஞர் பாலசரஸ்வதி
3 கருத்துகள்:
நீங்கள் எழுதப்போகும் ஜான் பி. ஹிக்கின்ஸ் அஞ்சலியை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.
இசைபற்றியெல்லம் எனக்கு ஒன்றும் தெரியாது. உங்கள் தமிழ்நடைக்குள் புகுந்து வெளிப்படவும் அச்சம். 'செவ்வியல் இசை-6'-க்குள் அறியாமல்தான் நுழைந்துவிட்டேன். நான் இதுகாறும் கொண்டிருந்த எதிர்மன நிலைப்பாடு குறித்து மன்னிப்புக்கோருவதைத் தவிர வேறு வழி இல்லை.
செவ்வியல் இசை 1,2,3,4,5 எல்லாம் புரட்டிப் படித்து விட்டேன். உங்கள் தமிழ் எளிமை வாசிக்க வாசிக்க இனிக்கிறது.
'அதற்கு இணையான மூன்று பாதைகளில் அவர் பயணிக்க வஎண்டும்.' என்கிற ஒரே ஒரு வாக்கியக் குழப்பம்தான். 'அதற்கு' அடுத்து ',' போட, அல்லது 'அதற்கு' என்பதை 'அவர்' ஒட்டி இட மறந்து விட்டீர்கள் இல்லையா?
என் சுட்டிக்காட்டலுக்கு மன்னிக்க வேண்டும். இது போல் தவறுகள் நானும் செய்வேன்.
ஹிக்கின்ஸ் உணர்வுகளை நான் அறியத்தந்ததற்கு நன்றி.
மாற்றியாகிவிட்டது.
"அதற்கென, மூன்று இணையான பாதைகளில் அவர் பயணிக்க வேண்டும்." சரியா!
நீங்கள் எதற்காக மன்னிப்புக்கோர வேண்டும்!
Post a Comment