பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

19.11.08

அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 3

அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 1
அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 2

டி. விஸ்வநாதன் எனக்கு வாய்ப்பாட்டுப் பயிற்சி அளித்தது வாரத்தில் மூன்றுநான்கு முறை. பாடலின் தீவிரம் மற்றும் நீளத்தைப் பொறுத்து இவை அமையும். பிறகு வீட்டுக்குச்சென்று வரிகளை மனனம் செய்து பாடலைச் செழுமைப்படுத்த வேண்டும். அடுத்த பயிற்சி வரும்போது பாடிக்காட்ட வேண்டும். முதலில் மனனம் என்பதை மாத்திரம் வைத்துப் பயின்றுவந்தேன். ஸவர வரிசைகளை எழுதவேயில்லை. அது சரியாகவும் இருந்திருக்கலாம். ஆனால் வீட்டுக்குப் போன பிறகு பாட வேண்டும் என்பதால் பிறகு சுருக்கெழுத்துபோல எழுதிவைத்துக்கொண்டேன். இப்போதும் மனன வழியைப் பின்பற்றுகிறேன். என்றாலும் ஸ்வரங்களை எழுதுவது வழக்கமாகியிருக்கிறது.

ஸ-ரி-க்-ம-ப-த-நி-ஸ என்ற ஏழு ஸ்வர நிலைகளை கீழ் ஸ, மேல் ஸா வரை எழுதினால், மேற்குலகின் பன்னிரண்டு ஸ்வர நிலைகளுக்கு (chromatic tones) ஒப்பாகிவி்டுகிறது. ஆனால் ராகங்களை ஆலாபனை செய்யும்போதோ, பாடல்களைப் பாடும்போதோ அவற்றின் ஸ்வரங்களைப் தென்னாட்டு, வடநாட்டு இசைக்கலைஞர்கள் பெரும்பாலும் பலர் எழுதுவதில்லை. எழுதாமல் அப்படியே பாடுகிறார்கள். ஒருவேளை எழுதினால் ஸ-ரி-க்-ம.. என்று எழுதுகிறார்கள். பயிலும் பாட்டை நினைவில் வைக்க இது உதவுகிறது. அதே சமயம் பாடுபவர், எந்த ஒரு ராகத்துக்கும் இந்த ஸ்வர நிலைகள் ஏறுமுகம், இறங்குமுகமாக எப்படி இருக்கும் எனப்தை உள்ளார்ந்து அறிந்திருக்க வேண்டும், அலங்காரம் எப்படி இருக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும். இது மிகமிக அவசியம்.

மேற்குலகைச் சார்ந்தவன் என்ற முறையில், தென்னாட்டின் இசைமரபுக்கு அந்நியன் என்ற முறையில், இவற்றில் பல ராகங்களை என் வாழ்க்கையில் கேட்டதேயில்லை! என் காதுகள் இவற்றுக்குப் பழக்கப்படாத நிலையில் இவற்றை எப்படி நினைவில் வைக்க முடியும்? எது சரி, எது தவறு என்பதை உணர்வுநிலையில் புரிந்துகொள்ள மிகமிக சிரமப்பட்டேன். இசைப்பயிற்சி தொடங்கி நான்காண்டுகள் கழிந்த நிலையில், இன்றுவரை என் அறிவை, வாசிப்பை வைத்தே இந்தப்பிரச்னையைப் பெரிதும் அணுகிவருகிறேன். நானறியாமலேயே பயிற்சியால் வளரட்டும் என என் உள்ளுணர்வை அப்படியே விட்டிருக்கிறேன்.

நான் இந்தியா வந்த ஆறாவது மாதம், அவ்வாண்டு தஞ்சாவூரை அடுத்த திருவையாற்றின் காவிரிக்கரையில் இசைவாணர் தியாகராஜரின் சமாதி அருகே ஆண்டுதோறும் நடக்கும் அவருக்கான ஆராதனை விழாவில் நானும் சற்றே பாடலாம் என்றார் டி. விஸ்வநாதன். திடுக்கிட்டேன். ஜனவரி மாதம் மூன்று நாள் நடக்கும் இந்த அஞ்சலியில் தென்னாட்டைச் சேர்ந்த அனைத்துச் செவ்வியல்-இசைவாணர்களும் பங்கேற்பார்கள். ஆண்டின் மிகப்பெரிய இசை-நிகழ்ச்சியான அதில் என்னைப்போன்ற மாணவனா பாடுவது?! தேர்ந்த இசைவாணர்களும் ரசிகர்களும் இருக்குமிடத்தில் பாடுவதா! அப்படியே மிரண்டுவிட்டேன்... அதேவேளை அங்கே யாரும் பதினைந்து இருபது நிமிடங்கள் வரைதான் பாடலாம், அவ்வளவு பேர் பாடுகிறார்கள் என்பதால் சரி, பாடித்தான் பார்க்கலாமே, அதனால் என் பயம் விலகி, திறமை வளர உதவலாம் என்றும் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

திருவையாற்றில் பங்கேற்று முதல்முறை பாடிய அந்த அனுபவத்தைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அங்கே இசையஞ்சலி என்பது காலையில் தொடங்கி இரவுதாண்டிச் செல்கிறது. இடைவிடாத இசைமழை. மின்-ஒலிபெருக்கி வைத்து அடுத்த கிராமம்வரை கேட்கிறது. வானொலியில் நேரடி ஒலிபரப்பு வருகிறது. அடுத்த நாள் அதன் தொகுப்பு மலேசியாவரை செல்கிறது. அங்கே தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் அந்த இசையைக் கேட்டு மகிழ்கிறார்கள். மாலை மூத்த இசைவாணர்களின் கச்சேரிகள். ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ஆற்றங்கரை மணலில் சப்பணமிட்டு அருகருகே இடமற்று நெருங்கி அமர்ந்திருக்கும். இன்னும் பலர் சேர, முட்டிகள் இடிக்க, இன்னும் நெருக்கம். இசை பரவ, மணிக்கணிக்கில் அப்படியே சொக்கிப்போய் அமர்ந்திருக்கும்... அது ஒரு தனி அனுபவம்.

மேற்குலகைச் சேர்ந்தவன் என்பதாலோ என்னவோ, மாலை ஆறுமணிக்குப் பாடுமாறு எனக்கு அழைப்பும் வந்தது. வெள்ளை வேட்டி, ஜிப்பாவுடன் மேடையில் ஏறும்போது அங்கிருந்த பெருங்கூட்டத்தார் இடையே இவரா பாடப்போகிறார் என்ற ஆச்சரியமும் ஆர்வமும் அலையசைந்ததைக் கண்டேன். ஓரிடத்தில் இத்தனை ரசிகர்களை என் வாழ்க்கையில் கண்டிராத எனக்கு, ஓ, அங்கிருந்து குதித்து ஓடியே விடலாமா என்று அந்த மோசமான ஒருகணத்தில் தோன்றியது...

--- ஜான் ஹிக்கின்ஸ்

(இன்னும் வரும்)

படம் - திருவையாற்றில்.

1 கருத்துகள்:

Vaal Paiyan said...

மிக அருமையான பதிவு. ஒரு அமெரிக்கர் தென்னாட்டு இசையில் ஆர்வம் கொண்டு , இங்கு வந்து பயின்று கச்சேரி செய்யும் அளவுக்கு திறன் பெற்று இருந்தார் என்ற செய்தி எனக்கு மிக மிக இன்ப ஆச்சர்யத்தை கொடுத்தது.

அவரது பாடலை இணையத்தில் தேடிப்பிடித்து கேட்டு ரசித்தேன். இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவை ஒத்த குரல் வளம் . அருமையான ஆலாபனை . சுருதி சுத்தம். இனிமை மிக இனிமை

கேட்டு ரசிக்க இங்கே சொடுக்குங்கள்
http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/m/artist.78

பதிந்தவை