பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

8.10.08

அடுத்த ஓராண்டு தமிழ்ச்சினிமா இல்லை? -1

என் ஐம்பதாண்டு வாழ்வில் ஒரு விஷயத்தை நிச்சயமாகக் கூற முடியும்: என் மொழியாகிய தமிழ்பேசும் மனிதர்களுக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவு அசாதாரணமானது. அதாவது, அக-புற உலகுகளை சினிமா என்ற கண் வழி மாத்திரம் நோக்குமளவு செல்வது, இந்த உறவு. சொல்லப்போனால், தொழில்நுட்பம் என்பது முழுதமிழ்ச்சமுதாயத்திலும் சென்றுசேர்ந்து ஜீரணிக்கும் பிரதான வழிமுறை என்றும் கூறலாம்.

இந்த உறவை வேறு ஒரு துறையை வைத்துப் புரிய முயற்சிக்கலாம் என ஏற்கனவே எழுதியிருக்கிறேன்: அதாவது, எண்-கணிதத்தை எடுத்துக்கொள்ளலாம். தமிழர்களை ஒருவித முழு-எண்வரிசையாக (integers) உருவகிக்கலாம். இந்த எண்வரிசையில் உலகெங்கும் வசிக்கும் பலவகைத்தமிழர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அப்போது இந்த அனைவரையும் சினிமா என்ற குறிப்பிட்ட எண்ணை வைத்து வகுத்துவிடலாம் என்று தோன்றுகிறது, மீதமே இருக்காது!

அதாவது, தமிழர்கள் என்ற முழு-எண்வரிசையில் பகா எண்கள் (prime numbers) என்பவை இருக்க வாய்ப்பில்லை - அதாவது இந்த எண்வரிசை 2,4,6,8,10.. எனச்சென்றால் சினிமா என்பதன் எண் இரண்டாக இருக்கும். 3,6,9,12, 15 எனச்சென்றால் சினிமா என்பது எண் மூன்று... இப்படிப்போகிறது வரிசை (உலகில் இந்த மாதிரி இந்தி, தெலுங்கு சினிமாக்கள்மீது எல்லைமீறிய நாட்டமுள்ள அந்தந்த ஊர்க்காரர்களையும் சேர்க்கலாம் என்பதும் சரிதான்). அந்த அளவு தமிழ்ச்சினிமாவுக்கு "இலக்கணம்" அல்லது இலக்கணங்கள் ஏற்பட்டு, என் மொழி பேசும் மனிதர்களின் மூளை-இயக்கத்தைத் தாக்கிவிட்டிருக்கிறது! குடிசைவாசிகளிலிருந்து இணையதளம் பாவிக்கும் இளைஞர்கள்வரை இது ஒன்றேபோல எனவும் தோன்றுகிறது!

எடுத்துக்காட்டாக, கறாரான அரசியல் கட்டுரைகளை வெளியிட்டுவரும் கீற்று இணைய தளத்தைப் பாருங்கள். சினிமா என்று வரும்போது இந்தக் கறார்த்தன்மை காணாமல்போய், கீழ்க்கண்ட செய்திகள் காட்டுவதுபோல, எல்லாம் நீக்குப்போக்காகி விடுகிறது (எந்த இணைய தளத்திலும் நிலைமை இப்படித்தான்):

"....மீண்டும் இணைகிறார்கள் ஸ்ரீகாந்த், பிருதிவிராஜ், விஷ்ணுவர்த்தனுடன் த்ரிஷா மோதல், கௌதம் மேனன் படத்தில் அஜித்,
உதவி இயக்குநர்களை நீக்கிய ஷங்கர், கதைக்கு முக்கியத்துவம் தரும் மீரா ஜாஸ்மின், ஆட்ட நாயகன் சக்தி, தயாரிப்பாளர்கள் விரும்பும் இயக்குனராக வெங்கட் பிரபு, அடிதடி பட வாய்ப்புகளே வருகின்றன - பரத், கமலுக்காக எந்த ரிஸ்க் எடுக்கவும் தயார் - த்ரிஷா, சூர்யாவின் இன்னொரு பரிமாணம் வாரணம் ஆயிரம், விளம்பரங்களில் நடிக்கும் பிரபு, தமன்னாவின் ஆனந்தத் தாண்டவம், கோவாவில் திரைப்பட பஜார், குசேலன் தோல்வி - விநியோகஸ்தர்கள் அதிருப்தி, கமலுடன் நடிக்கக் காத்திருக்கிறேன் - பத்மப்ரியா, பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் விஜய், த்ரிஷாவைக் காப்பாற்றுமா அபி?, குசேலன்: பிரியதர்ஷன் தாக்கு, கதாநாயகனாகும் இயக்குநர் சசிக்குமார், இந்தியில் பிரபலமாகும் ஜெனீலியா, 15 நாட்களில் 20 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி, மணிரத்னம் படத்தில் ப்ரியா மணி, தசாவதாரம் விமர்சனம்: வெளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சம், முன்னணி ஹீரோவான சுந்தர்.சி, 100 கோடிக்கு விற்பனையான குசேலன், 100 கோடியில் தயாராகும் மர்ம யோகி, ரஜினியின் இளமை(!) ரகசியம், சரண் இயக்கத்தில் வினய், கோபிகாவின் கடைசிப்படம், அகம்-புறம் படத்தில் ஷாம், அசினுக்கு மேலும் சில இந்திப்படங்கள், விருதுக்கு அமீர்தான் காரணம் - ப்ரியா மணி, வித்தியாச வேடத்தில் ஐஸ்வர்யா ராய், 'கல்லைக் கண்டால்..' கமலின் நம்பிக்கை, 'அயனி'லும் வில்லன் கேரக்டர் பேசப்படும் - கே.வி.ஆனந்த், திரைப்படமாகிறது அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை, 'படிக்காதவன்' தனுஷ், கம்ப்யூட்டர்மயமாகும் கமல் ரசிகர் மன்றங்கள், விஜய் ரசிகரான ஆஸ்திரேலியப் பிரதமர், ரஹ்மான் இசைப்பள்ளி, வணிக சினிமா என் நோக்கமல்ல - பிரகாஷ்ராஜ், ஸ்ரீனிவாசன் ஜோடியாக பத்மப்ரியா, இயக்குனர் நந்திதா தாஸ், வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் இது - ரஜினிகாந்த், தமிழ்த்திரைப்படத்தில் குழந்தைகளுக்கான இடம் நிரப்பப்படவே இல்லை, கமல் மோகன்லால் இணைகிறார்கள்..."

ஆக, சினிமா என்பதாகத் தாங்கள் அறிந்ததைத் தமிழர்கள் கொஞ்சம் இடைநிறுத்தி யோசிக்க வேண்டியிருக்கிறது. மேலும் தமிழில் சினிமா-விமர்சனம் என்ற பெயரில் வரும் விஷயங்கள் பலதைக் கொஞ்சக்காலம் மறக்கவும் கற்றுக்கொள்ளலாம். சிரமம்தான் என்றாலும் முயன்றுபார்க்கலாம். சினிமா பற்றி வேறுமாதிரி சிந்திக்க வேண்டும்...

இன்னொரு கோணத்திலும் இந்த விஷயத்தைப் பார்க்கலாம்: கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வெகுஜன சினிமா பற்றிய ஆய்வுப்புலம் சற்றே அதிகரித்திருக்கிறது. பெரும்பாலும் சினிமா பற்றிய வரலாற்றுத்தரவுகளைக் கோர்ப்பதாக ஒருபுறம், வெகுஜன சினிமாவைப் பிரதியாக வைத்து, வாசித்து, விமர்சிப்பதாக மறுபுறம். இது போதுமா, தெரியவில்லை...

போதாது என்பதற்கு நல்ல உதாரணம், கடந்த அக்டோபர் நான்கு-ஐந்து சனி-ஞாயிறன்று, காட்சிப்பிழை இதழ் சார்பில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த கருத்தரங்கு. தமிழ்ச்சினிமா பற்றிய வரலாற்றுரீதியான ஆய்வுகளைச் செய்த தியோடர் பாஸ்கரன் மற்றும் எம்.எஸ்.எஸ். பாண்டியன் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டதாகத் தெரியும் ஆய்வுக்கட்டுரைகளின் தலைப்புக்களை நோக்கலாம் (நன்றி, வளர்மதியின் பனித்திரை).

"...ஏ.வி.எம்-ஒரு சரித்திர வாசிப்பு பற்றி ப்ரீத்தம் மற்றும் வெங்கடேஷ் சக்ரவர்த்தி, பேசும் படங்கள் பேசாத தளங்கள் பற்றி ப்ரேம், ஒளித்திரையில் உயிர்த்தெழும் சீதையும் கண்ணகியும் பற்றி மாலதி மைத்ரி, சின்னத்திரையும் பெரிய திரையும் பற்றி சுரேஷ் பால், நினைவிழக்கும் வரலாறுகளும் மருள்காட்சி வரலாறுகளில் உழலும் நினைவுக்குட்டைகளும் - வளர்மதி, உலகம் சுற்றும் வாலிபனும் தசாவதாரமும் பற்றி எதிர்வு சிவகுமார், கமலஹாசன் பெரியாரைக் கல்லில் கட்டிக் கடலில் விட்டெறிந்த கதை - சுந்தர் காளி, வடிவேலுவின் நகைச்சுவையில் தென்படும் உதிரித்தன்மையின் பன்முகம் - அமுதன், இசையுரு ஆகிய திரைஇசை - இளையராஜா என வேணுமணி, When a Woman Called Shots எனத் திரை அனுபவம் பற்றி லீனா மணிமேகலை, வீதியில் வெள்ளித்திரை - சினிமா பேனர்கள் பற்றிய சில குறிப்புகள் பற்றி வ. கீதா, கேள்விக்குறிகள் மூன்று போட்ட தலைப்பில் ராஜன்குறை..."

இதில் சினிமா இயக்குநர்கள் சிலரும் பங்கேற்றதாகத் தெரிகிறது... நிச்சயம் வரவேற்க வேண்டும்.. ஆனால் கட்டுரைகள் எப்படி இருந்தன, என்ன பேசினார்கள் என்ற முழுவிபரங்கள் இன்னமும் தெரியவில்லை. சரி, வரலாற்றுவிபரங்கள் தவிர இவற்றில் ஒரு கட்டுரை கூட சினிமா பார்க்கும் வெகுஜனங்கள் இடையே நிகழ்த்தப்பெற்ற கள ஆய்வின் அடிப்படையில் அமைந்திருக்குமா, தெரியவில்லை.

இப்படி ஒரு கருத்தரங்கில் நான் பங்கேற்கும் பட்சத்தில் என்ன செய்வேன்? மிகமிக அடிப்படையாக தமிழ் சினிமா பார்ப்பவர்கள், எடுப்பவர்கள், நடிப்பவர்கள், தொழிலாளர்கள், அதுபற்றி வாசிப்பவர்கள், அரட்டை அடிப்பவர்கள் வரை சென்று ஒரு சர்வே எடுப்பேன். அதில் பின்வரும் கேள்விகள் இருக்கும். பத்துக்கேள்விகள் என்று தொடங்கி பதினொன்றாகிவிட்டது. இதில் சர்வே எடுப்பவரும் பதில்சொல்ல வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. காரணம், ஏற்கனவே கூறிய படி தமிழர்களில் சினிமாவுக்குப் புறத்தே யாருமில்லை என்பதே: (எனவே எவ்வளவு முட்டாள்தனமாக இருந்தாலும் என் பதில்களும் அடைப்புக்குறிகளில்):

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
(ஐந்து வயதில். ஆனந்த ஜோதி. அடுத்தது பலே பாண்டியா. அந்த வயதில் தீவிர எம்ஜியார் ரசிகன். தஞ்சாவூரில் சிவாஜி போஸ்டர்மீது சாணி கரைத்து ஊற்றிய டீக்கடைக்காரர்களுடன் சைக்கிளில் சென்றிருக்கிறேன். ஆனாலும் சென்னை லஸ்ஸில் காமதேனு அரங்கில் பலே பாண்டியா பார்த்தபோது சிவாஜி-எம்.ஆர். ராதா காட்சிகளில் சிரித்து ஸீட்டிலிருந்து விழுந்தது நினைவிருக்கிறது. நாய், பூனை குறுக்கே போகும் இந்த அரங்கு சில ஆண்டுகள் முன்பு இடிக்கப்பெற்றது).

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? (நினைவில்லை. ரொம்ப வருஷமாகிவிட்டது).

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
(பச்சைக்கிளி முத்துச்சரம். விமானத்தில். தூங்கிவிட்டேன். அதற்கு முன்பு அன்பே சிவம். அதுவும் விமானத்தில். தூங்கிவிட்டேன். அதற்கு முன்பு ஆயுத எழுத்து. விமானத்தில்தான். தூங்க முடியவில்லை. விமானத்தைவிட சப்தம்).

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
(அவள் அப்படித்தான். மிகவும் தாக்கிய தமிழ் நாடகங்கள் பல. உதாரணமாக, பராசக்தி).

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
(திராவிட இயக்கத்துக்காக திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் கொடியேற்றி தண்டனை அனுபவித்த அந்துவான் என்ற எஸ்.ஏ. அசோகன் நாடகம், சினிமா எல்லாம் கழிந்து இறுதியில் சோ, ஜெய்சங்கர் போன்ற நிச்சய பிராமணர்களை நண்பர்களாக ஏற்று வாழ்ந்தது).

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
(பேசும்படக் காலத்தில் தைரியமாக எடுக்கப்பட்ட புஷ்பக விமானம் என்ற பேசாத படம் வெற்றிகண்டது. இந்தப்படம் சினிமாவின் அக-நினைவு (memory) எனலாம்).

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
(தமிழ் சினிமா பற்றிய சிறுகதைகள், நாவல்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. பிடித்த நாவல் அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள். சினிமா மூலமாக நிறைய வாசித்திருக்கிறேன் - சிறுவயதில் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி பாடலை நாகேஷ் வாசிப்பதைக் கேட்டு குறுந்தொகை பற்றி அறிந்துகொண்டேன்; சர்வர் சுந்தரம் பாடல் பார்த்துவிட்டு மாமல்லபுரம் போயிருக்கிறேன்).

7. தமிழ்ச்சினிமா இசை?
(இசையென்றாலே உயிர். நிறையக்கேட்பேன். இலக்கியவாதி என்பதால் பாடல் வரிகள் அத்துப்படி. உதாரணமாக - நாற்பதாண்டுகள் முன்பு பார்த்த நாடோடி படத்தில் மறக்காத வரிகள் - ஒன்றே வானம் ஒன்றே நிலவு ஓடிச்சென்றன ஆண்டுகள் கோடி.. இப்படிப் பாடல்வரிகள் தவிர, குரல், வாத்தியம், ராகம், இசைவடிவம் என்று அக்குவேறாக எப்போதும் அலசல்தான். ஜகதலப்பிரதாபன் காலத்திலிருந்து இன்றைய கண்கள் இரண்டால், நாக்கமுக்க வரை up-to-date. மலையாளம் மட்டுமே நன்கறிந்த என் மகள் தமிழ்ப்பாடல்களில் என்னைவிட up-to-date).

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
(நிறைய. எல்லா இந்திய, உலக மொழிகளிலும். பதின்பருவத்தில் என்னைத் தாக்கிய படம் மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் ஸ்வயம்வரம். இளம்வயதில் ரித்விக் கட்டக்கின் சுபர்ணரேகா - தமிழில் மறக்க முடியுமா என்ற படம் இதன் நாடக வடிவம். பிறகு ரெய்னர் வெய்னர் ஃபாஸ்பிண்டரின் A Year with Thirteen Moons, வெர்னர் ஹெர்ஸாக் எடுத்த Don Aguirre, The Wrath of God, அண்மையில் ழான்-லுக் கோதாரின் Histoire du Cinema - சினிமாவின் வரலாறு...).

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
(நேரடித்தொடர்பு இல்லை. என்றாலும் சென்னை வாழ்க்கையில் சினிமாத்துறை நண்பர்கள் பலர் இருந்தனர். தமிழ்ச்சினிமா பற்றிப் பேசுவதை இருதரப்புமே தவிர்ப்போம். வேறேதாவது பேசுவோம். சினிமா விஞ்ஞானம்-தொழில்நுட்பம் பற்றி, உலக சினிமா, இந்தியாவின் மற்ற மொழிகளில் சினிமா, கலை-இலக்கியம், இசை, இடதுசாரி அரசியல், இலங்கை-ஈழத்தமிழர் பிரச்னை எனப் பேசுவோம். இதெல்லாம் தமிழ்ச்சினிமா மேம்பட உதவுமா தெரியவில்லை, அதில் இருப்பவர்கள் மேம்பட உதவலாம்).

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (அடுத்த கேள்விக்குச் செல்லவும்).

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
(ரிலையன்ஸ் ஃப்ரெஷ் முதல் லோக்கல் டீக்கடை வரை, பாரதீய ஜனதா முதல் கீற்று வரை - இப்படி ஜாதி, வர்க்க வித்தியாசமின்றி நிறையத் தமிழர்களுக்கு என்ன செய்வதென்று புரியாமல் பித்தம் பிடித்துவிடும். நாட்டில் நேரடி சர்வாதிகாரம், குழப்பம், குழு ஃபாஸிஸம் பெருக வாய்ப்புண்டு... எனக்கு தமிழ்ச்சினிமா இசையைக் கேட்க முடியாமல் பித்தம் பிடிக்கலாம் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்).

17 கருத்துகள்:

ஜமாலன் said...

சர்வே நடத்த வேண்டிய அவசியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள்.
உங்கள் சர்வேயில் என் பதிலையும் சொல்லிப்பார்த்துக் கொண்டேன்.

1. நானும் எம்ஜியார் ரசிகன்தான் அந்த வயதில். முதல்படம் நினைவிலிருப்பது, அன்பு சகோதரர்கள். குடும்பத்துடன் ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம். குடந்தை ஜூபிடர் தியேட்டர். இன்று அது கோ-ஆப்டெக்ஸ் குடெளன் ஆகிவிட்டது.

2. சிட்டிசன். வீட்டில் உள்ள எட்டு பசங்களுடன் அரங்கில் பார்த்த கடைசிப்படம்.

3. சவுதியா விமானத்தில் சினிமா போடுவதில்லை. போட்டாலும் பெண்களே இல்லாத படங்களாக தேடிப்பிடித்துப்போடுவார்கள். தூங்குவதே மேல். அதனால் அரங்கின்றி பார்த்த கடைசி படம் அறையில் உள்ள கலைஞர்-அய்ங்கரன் டீவி போட்ட, உன்னாலே உன்னாலே.

4. அவள் அப்படித்தான் - எனக்கும் பிடித்த படம்.

5அ. எம்ஜியார் கட்சி ஆரம்பித்தபோது இனிப்பு வழங்கிய ரசிகர்களிடம் மிட்டாய் வாங்கித்தின்றது. திமுக கோட்டையான எங்கள் ஊரில் அதிமுக கொடிபிடித்து தேர்தல் பிரச்சாரம் செய்தது. 10-15 வயதுகளில் நள்ளிரவில் இருட்டோடு இருட்டாக சுவரில் இரட்டை இலை வரைந்தது. தஞ்சைப்பகுதிகளில் அதிமுக 1975-இல் திமுக கெடுபடிக்க பயந்து தீவிரவாத இயக்கம்போல இருட்டோடு இருட்டாகத்தான் செய்லபட்டு வந்தது.

5ஆ என் கருத்தும் அதே - பேசும்படம் என்னைத் தாக்கிய படம்.

6. பெரும்பாலும் தமிழ்ச்சினிமா பற்றிய வெகுசனப் பத்திரிக்கை செய்திகள் மற்றும் "நிழல்" போன்ற சினிமா சார்ந்த பத்திரிக்கைகளை வாசிப்பதுண்டு.

7. தமிழில் இசை என்றாலே சினிமாப்பாடல்தான் என்கிற நிலை. பாடல்கள் கேட்பதுண்டு. எல்லாப்பாடல்களும்.

8. பார்ப்பதுண்டு. அரவிந்தனின் சிதம்பரம் - யோசிக்க வைத்த படம். Babel ஆச்சர்யமான படம். பாதித்த படம் Children of Heaven ஈரானியப் படம்.

9. தொடர்பில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி நினைப்பதைவிட.. தமிழ் நடிகர்களின் எதிர்காலம்தான் ஒளிமயமாக இருக்கிறது.

11. உங்கள் பதில்தான். தமிழ் வாழ்க்கை ஸ்தம்பித்துவிடும். வாழ்க்கையிலிருந்து அல்ல சினிமா இப்போது. சினிமாவிலிருந்ததான் வாழ்க்கை. சினிமாவின் பாதிப்பு சகல தளங்களிலும் விரவியிருக்கிறது. தமிழ்ச்சினிமா பற்றிய சமூகவியல் ஆய்வுகள் ஏதுமில்லை. முன்பு எம்ஜியார் பற்றிய ஆய்வு க. சிவத்தம்பியால் செய்யப்பட்டது. எம்ஜியார் பற்றிய மற்றொரு சமூக-உளவியல் ஆய்வு எப்படி அவர் சிறுதெய்வ வழிபாடாக மாறினார் என்பதைப்பேசியதாக நினைவு. அது குறித்த "படிகள்" இதழில் வெளிவந்துள்ளது என நினைக்கிறேன். தற்சமயம் "படிகள்" போன்ற வெகுசனப்பண்பாடு பற்றி சமூகவியல் ஆய்வுகளைக் கொண்ட தனித்தன்மையான ஒரு பத்திரிக்கை தேவை.

உலகப்படங்களுடன் ஒப்பிட்டு தமிழ் அறிவுஜீவிகள் அடையும் கவலையைவிட.. தமிழ் சினிமா ஏற்படுத்தியருக்கும் உளவியல் பாதிப்புகள் சமூக மாற்றுகள் பற்றிய ஆய்வு மிக மிக அவசியமானது.

நாகார்ஜுனன் said...

நன்றி, ஜமாலன்.

என் கட்டுரையில் சில முக்கிய விஷயங்களை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

1. சினிமாவைப் பிரதியாக வைத்து வாசிப்பது போதாது, கள ஆய்வு வேண்டும். சிவத்தம்பியில் கட்டுரையில் கள ஆய்வு இருந்ததாக நினைவில்லை. படிகள் இதழில் வந்த கட்டுரை, நண்பர் ஜி.கே. ராமசாமியின் கள ஆய்வின் அடிப்படையில் உருவானது.

2. கள் ஆய்வின் முதல் மாதிரியாக இந்தக் சர்வே கேள்வித்தாள். இதன் கருதுகோட்கள் (hypothesis) பின்வருமாறு.

3. சினிமாவுக்குப் புறத்தே யாருமில்லை; தமிழ்ச்சமுதாயத்தில் தொழில்நுட்பம் முதலான விஷயங்கள் நெடுகிலும் சென்று சேர்வதற்கான பிரதான வடிவம் சினிமா. தமிழில் சினிமா-அரசியலின் எதிர்விதி-தொழில்நுட்பம் இவற்றைப் பிரிக்க முடியாது; தமிழ்ச்சினிமா-இசையை, பொதுவாக சினிமா-இசையை, விசேடமான இசையியல்-ஆய்வு செய்ய வேண்டும்.

நாகார்ஜுனன்

றஞ்சினி said...

தமிழ்ப்படங்களைத் திட்டித்திட்டி பல படங்கள் பார்த்துவிட்டிருக்கிறேன்.. தமிழ்ப்படப் பாடல்களும் அப்படித்தான்.. தமிழ்ப்படங்கள் பற்றிய தீவிர விமர்சனம் ஒன்றும் இதுவரை படித்ததில்லை. அப்படி படிக்கக்கூடிய விமர்சனத்தை தவற விட்டதாகவும் தெரியவில்லை..

தமிழ்ப்படங்கள் மட்டுமல்ல, எல்லா மொழிப்படங்களும் பார்ப்பதுண்டு, ஜெர்மன் படங்களூக்கும் தமிழ்ப்படங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை போல் எனக்குத் தோன்றும். ஆனாலும் தமிழ்ப்படங்களைப்போல் சில தெரிவுசெய்து பார்க்கக்கூடிய படங்களும் உண்டு. தமிழ்ப்படங்கள் மட்டுமல்ல, ஹொலிவூட் படங்களும் அண்மைக்காலமாக நல்ல படங்கள் வரவில்லை என்று தோன்றுகிறது. எனக்கு உடன் ஞாபகம் வரும் நல்ல படமென்றால், எனக்குபிடித பிரெஞ்சு நடிகையும் கொலிவூட் நடிகரும் (Juliette Binoche , Johnny Depp)நடித்த Chocolat. அடுத்தும் எனக்கு பிடித்த நடிகர் Denzel Washington நடித்தது Cry Freedom.

அவள் அப்படித்தான் பற்றி... இந்த விமர்சனம் எழுதுவதற்குக் காரணமே இந்தப்படம். என்னைப் பாதித்ததா, கவர்ந்ததா அல்லது பெண்நிலைவாதிகளின் மனநிலையை (எனக்குப் பிடித்த) அப்படியே தந்ததா என்று கூற முடியாத அளவுக்கு என்னைக் கவர்ந்த படம். இப்படியும் தமிழில் படம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்று சந்தோசப்படுத்திய படம்.. ஒரு சிறு விமர்சனத்தைத் தவிர (குடும்ப சூழலால்தான் அவள் இப்படியானாள் என்ற ஒரு கருத்து அதில் வராமல் இருந்திருந்தால் அப்படத்தில் பிழைகூற ஒன்றும் எனக்கு இருந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். ஸ்ரீப்ரியா, கமல் ஏன் ரஜனிகூட நன்றாக நடித்திருந்த படம், இந்தப்படத்தைத் தேடிக்களைத்துப் பின் ஒரு நண்பர் எடுத்துத்தந்தார். ஆனாலும் பிரதி சரியில்லை எங்காவது நல்ல பிரதி எடுக்க முடியுமா? நீண்ட நாளைக்குப் பின் அந்தப்படத்தைத் திரும்பவும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது).

வேறும் சில படங்கள் நிழல் நிஜமாகிறது, அரங்கேற்றம் புதிதாக கற்றது தமிழ் இப்படிச்சில விமர்சனங்களுடன் பார்த்தவை.

RP ராஜநாயஹம் said...

அந்துவான் மரியதாஸ் என்ற எஸ்.ஏ. அசோகன் உங்களை நிறையப் பாதித்திருக்கிறார். எறந்தவனை சுமந்தவனும் எறந்துட்டான் பாடலை முழுமையாக ஜான் ஆப்ரஹாம் பற்றிய கட்டுரையில் தந்திருக்கிறீர்கள்!

இதில் ஐந்தாவது கேள்விக்கு உங்கள் பதில் விசித்திரம். அசோகன் திராவிட சித்தாந்தங்களில் இருந்து பிறழ்ந்துவிட்டது பெரிய அதிசயமா? Hypocrisy திராவிட கொள்கைச்சிங்கங்கள் அனைவருக்கும் பொதுவானது. அதுபோக அசோகன் பிள்ளைகளுக்குக் கூட அமல்ராஜ், வின்சென்ட் என்று கிறித்தவப்பெயர்களை இட்டவர். பிராமணப்பெண்ணைத் திருமணம் செய்தவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுகூட அவருடைய பிராமண நேசத்துக்குக் காரணமாக இருக்கலாம். இவருடைய அரசியல்-நிலைப்பாடு உங்களைப் பாதிக்க வேண்டிய அவசியம் - ஒருவேளை அசோகன் குடும்பம் உங்களுக்கு family friends-ஆ?

ஜமாலன் கேள்வியின் முதல் பகுதிக்கு சொல்லிய பதில் reasonable. ஆனால் நீங்கள் ஒரு பொதுமையான பிறழ்வை அசோகன்மீது சுமத்துகிறீர்கள் எனத் தோன்றுகிறது. திராவிடக்கொள்கை பெரியாரில் ஆரம்பித்து ஜெயலலிதா என்ற பிராமணப்பெண்ணிடம் வந்து நின்ற ஒன்று.

அசோகன் எம்ஜியாரை நம்பி தொழில் நடத்தியும் அவர் கட்சி ஆரம்பித்த போது அவர் பின்னால் பொகவில்லை. சாதாரண நடிகர்கள் ஐசரி வேலன், கே. கண்ணன், சிவசூரியன்தான் போனார்கள். இதற்குக்காரணம் நம்பியார் இப்போது சொன்னார்: எம்ஜியார் சந்தேக புத்தியுள்ளவர். அதனால் சித்திரவதை. அதனால்தான் நம்பியார் போகவில்லை. அசோகன் "நேற்று இன்று நாளை" படத்தயாரிப்பாளர் ஆகி எம்ஜியார் படுத்திய பாடுதான் அவரை சோ, ஜெய்சங்கர் பின்னால் போகச் செய்தது. எம்ஜியாரின் சித்திரவதை தான் அவரை விரட்டியது. இதில் திராவிடச்சித்தாந்தக் குழப்பம் என்ன பெரிதாய் வந்துவிட்டது...

"வெறுங்கையோடு திருச்சியில் இருந்து வந்தேன். வெறுங்கையோடு திருச்சிக்குப் போய் விடுகிறேன்" -இப்படி எம்ஜியார் படம் எடுத்த கடன் தொல்லை தாங்க முடியாமல் அழுதவர்தான் அசோகன் என்ற அந்துவான் மரியதாஸ்.

திராவிட இயக்க நடிகர்கள் என்றால்கூட கே. ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், எம்ஜியார் என்றுதான் நினைவுக்கு வரும். அசோகனை யாரும் திராவிட இயக்க நடிகர் எனச் சொல்லவே மாட்டார்கள்... அண்ணாத்துரையின் வண்டிக்காரன் மகன் நாடகத்தைப் போட்டார். 1971-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாகப்பட்டினத்தில் சிவாஜி பிரச்சாரம் செய்தபோது "நாகப்பட்டினத்துக்குத்தான் என் இரண்டு பெண்ணையும் கொடுத்திருக்கிறேன்" என்றார். இதற்கு அசோகன் "ஊருக்கே பொண்ணைக் கொடுத்துட்டாரா?" எனப்பேசி சிவாஜியின் பகையையும் சம்பாதித்தார். இதுதான் அசோகனின் அரசியல் செயல்பாடுகளில் இப்போது நினைவுக்கு வருவது.

என்னைத்தாக்கிய அரசியல்-சினிமா சம்பவம் என நீங்கள் அசோகனைப் பற்றிக் குறிப்பிடுவது, நடிகர் கார்த்திக் தனக்கு முதலமைச்சர் ஆகத் தகுதியிருந்தும் விருப்பமில்லை என்று அறிக்கை விட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது என்னைத் தாக்கிய அரசியல்-சினிமா சம்பவம் என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

பேசும்படம் பற்றிச் சொல்வது சரிதான்.

அவள் அப்படித்தான் படம்தான் நம்மைப் போன்றவர்களுக்குப் பிடித்த ஒரே படமாய் இருக்க முடியும். ஆனால் அந்த ருத்ரையா குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான் அவள் அப்படித்தான்! அவர் இயக்கிய அடுத்த படம் சந்திரஹாசனை வைத்து எடுத்த கிராமத்து அத்தியாயம் பார்த்தால் இந்த உண்மை யாருக்கும் புரியும்.

நாகார்ஜுனன் said...

ராஜநாயஹம்

1. முதலில், இந்தப்பதிவு தமிழ்ச்சினிமாவுக்கு மனத்தளவில் வெளியே வாழ்கிற ஒருவ்னால், ஆனால் வெளியே நில்லாமல் எழுதப்பெற்ற ஒன்று (நீங்கள் நிறைய ஏற்கனவே எழுதுகிறீர்கள்). எனவே என் தனிப்பட்ட வாழ்க்கையின்
ஒப்புதல்களுடன் இருக்கிறது. ஆனால்
இந்தப்பதிவு தமிழ்ச்சினிமாவைச் சிலாகிப்பதில்லை.

2. சினிமா பார்ப்பது, பிரதிகளை வாசிப்பது, வரலாற்றை நினைவுகூர்வது என்ற நிலையில் இன்றைக்கு ஆய்வு நிற்கிறது. என்ன கருதுகோள் இருந்தாலும் சரி, சினிமா-அரசியல்-தொழில்நுட்பம் தொடர்பான
கள ஆய்வு வேண்டும் என்பது நான் முன்வைப்பது.

3. எறந்தவனை சுமந்தவனும்.. பாட்டு ஜான் ஆப்ரஹாமுக்குப் பிடித்தது. எனக்குப் பிடிக்கும் என்று சொல்லமுடியாது.

4. எனக்கு அசோகன், குடும்பத்தாருடன் நேரடித்தொடர்பு ஏதுமில்லை. இளம்வயதில் நிறையத் தமிழ், ஹிந்தி நடிகர்களை imitate செய்து கைதட்டல் வாங்கியதுண்டு. குறிப்பாக எம்.ஆர். ராதாவை. ஆனால் அசோகன் என்னை மிகவும் சிரமப்பட வைத்தார். காரணம் அவர் வில்லன் பாத்திரத்திலிருந்து அப்போது மாறிக்கொண்டிருந்தார்.

அசோகனை நேரடியாகப் பார்த்தது ஒருமுறையே. சென்னையில் சைக்கிளில் சுற்றும்போது பார்த்தேன்.
நீங்கள் கூறும் நேற்று இன்று நாளை படவெளியீட்டுக்காக சைக்கிள் பயணம் போய்க்கொண்டிருந்தார் - பல்லாவரத்திலிருந்து அண்ணாத்துரை சமாதி வரை. அப்போதே அழும்நிலையில் இருந்தார்.

4. அவர் இறந்தபிறகு அரசியல்-சினிமாத்துறையற்ற அவருடைய நண்பர்கள் சிலரைத் தனிப்பட்ட முறையில் அறிய நேர்ந்தது. அவர்களுடன் பேசியதிலிருந்து அசோகன், திராவிட இயக்கம் என்ற பெயர்களை மறந்துவிட்டு இந்தப் பிரச்னையை அலசலாம் என்று பட்டது. ஷேக்ஸ்பியரின் ஆங்கில வசனங்களைப் பேசும் வல்லமை கொண்டிருந்த இளைஞர், இறுதியில் கோமாளியாக நடிக்க நேர்ந்திருக்கிறது. இதேசமயத்தில் அந்த இளைஞருக்கு நியாயமான லட்சியமாகத் தெரிந்த இயக்கத்தால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே ஆக முடிந்திருக்கிறது. அதாவது ஒரு மொத்த milieu-வாகவே மாறிவிட்டது. அந்த இளைஞரின் அழிவைத் தடுக்க முடியாத, ஏன் ஊக்குவிப்பதாக இந்த milieu மாறுகிறது. அவரும் இதற்குத் துணைபோகிறார். இறுதியில் இந்த milieu-வை விட்டு விலக வழிதெரியாத நிலை... ஆக, அரசியல்வாதியற்ற அசோகனின் எதிர்-விதி (anti-destiny), என்று நான் கூறுவது அவரைப்போன்று வந்த, வருகிற, வரக்கூடிய இளைஞர்களின் எதிர்-விதிதான். (மற்றவர்களைப் போல நேரடிப்பதவி-விழைவுகள் கொண்டவரில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்)... நண்பர்கள் exhaust-ஆன நிலையில் milieu-வில் இருந்த பிராமண நடிகர்களே எஞ்சுகிறார்கள். மீண்டும் எம்ஜியாரை அண்டி மதுக்கடை நடத்தும் உரிமம் கேட்கவேண்டிய நிலை (அதற்குப்பிறகு அண்டுவோர் தொழில்நுட்பக்கல்லூரி நடத்துவோராக மாறுகிறார்கள்...)

5. சினிமாத்துறையில் பெயர்பெற்று அழிந்தவர்கள் பலரின் வரலாறு நம்மைத் தாக்கிய ஒன்றே. அதேவேளை சினிமா-உலகுக்குள் இளைஞர்களை இப்படி இழுக்கிற milieu-வை திராவிட இயக்கம், மற்ற இயக்கங்கள் தீவிரப்படுத்துகின்றன. இதில் ஒருசிலர் அடையும் வெற்றி மற்றவர்களின் அவலத்துக்கும் கோமாளித்தனத்துக்கும் இட்டுச்செல்கிறது. அதைச் சுட்டவே அசோகனை எழுதினேன்.

6. ஆக, சர்வே நடத்தப்பெற வேண்டிய விஷயம், இந்த விதி, எதிர்-விதி நிகழ்காலத்தில் எப்படிச் செயல்படுகிறது என்பதே.

நாகார்ஜுனன்

Prakash said...

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எட்டு வயதில். முதன் முதலில் பார்த்தது மந்தைவெளி கபாலீ டாக்கீஸில் , சங்கராபரணம்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா. சில வாரங்களுக்கு முன்பு.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
நேற்று இரவு டிவிடியில் முக்தா ராமசாமி இயக்கிய பொம்மலாட்டம் பார்த்தேன். ஒரு துறையில் அற்புதமான திறமை கொண்டிருக்கும் சோ, அரசியலரங்கில் ஏனிப்படி கோமாளியாகிப் போனார் என்பதுதான் உடனடி நினைப்பு.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
மௌலியின் ' மற்றவை நேரில்', மகேந்திரனின் 'மெட்டி, ஸ்ரீதர்ராஜனின் ' கண்சிவந்தால் மண் சிவக்கும்'
(பார்த்த மாத்திரத்தில் அவள் அப்படித்தான் படமும் தாக்கிற்றுதான் என்றாலும், ஸ்ரீபிரியா கதாபாத்திரம்
மத்திய-தர-மக்களின்-பல்ஸ்-பிடித்துப்-பார்த்ததாகச்-சொல்லப்படும் பாலச்சந்தரின் பட பாத்திரம் போல கொஞ்சம் phony ஆக இருந்தது)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
1996 இலே. கலைஞருக்கு ஆதரவாக
தலைவர் ரஜினிகாந்த் குரல் கொடுத்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
மைடியர் குட்டிச்சாத்தானின் முப்பரிமாண சினிமா, அபூர்வ சகோதரர்களின் குள்ள அப்பு

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வாசிப்பதுண்டு. ஆனால் பொதுவாகத் திருப்தி இல்லை. ஒரு பக்கம், சுவாரசியமான விஷயத்தை dry ஆக எழுதும் தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள். இன்னொரு பக்கம், frivolous ஆன விஷயத்துக்கு முக்கியத்துவம் தரும் ராண்டார்கை போன்றார்களின் சுவாரசியமான எழுத்து, இதற்கிடையில் மயிர்பிளக்க வைக்கும் சிற்றிதழ் எழுத்துகள், தகவல்கள் அதிகம் நிரம்பிய அறந்தை, அவ்வப்போது ஆயாசம் ஏற்படுத்தும் யமுனா ராஜேந்திரன், இந்தாள் தமிழ்ல எழுதித் தொலைக்க மாட்டாரோ என்று நினைக்கும் எம்.எஸ்.எஸ் பாண்டியன் போன்றவர்கள் எழுத்துக்களை
மேய்வதுண்டு.

7.தமிழ்ச்சினிமா இசை?
இசை என்றால், தமிழனுக்கு தமிழ்ச் சினிமா இசைதானே? அதிலே ஏன் ஒரு கேள்விக்குறி.

இதை derogatory ஆகச் சொல்ல வில்லை. இசை நுட்பங்கள், வடிவங்கள், நவீனங்கள், இசை படைப்புகள் போன்றவற்றுக்கு, தமிழ்ச் சினிமா இசை அமைப்பாளர்கள் சிலர், குறிப்பாக இளையராஜா, எம்.எஸ்.வி போன்றோர் பங்களிப்பு செய்ததுக்கு ஈடாக, கவிதைக்கு பாரதியார் கூடச்
செய்ததில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலம் உலக மொழி என்றால், பாப்புலரான ஹாலிவு சினிமா பார்ப்பதுண்டு. உலக சினிமா பார்ப்பதில்லை. இந்திய சினிமா பார்ப்பதுண்டு. எமெர்ஜென்ஸிக்குப் பின்னான நாட்களில் கன்னடத்தில்
நல்ல படங்கள் வந்ததுண்டு.நாகபரணா, கிரிஷ்கர்நாட், சங்கர்நாக் போன்றவர்கள் எடுத்த படங்கள் விருப்பம்.கன்னடம் போல அல்லாமல், மலையாளத்தின் நல்ல படங்களுக்கு பொதுவாக அங்கீகாரம் கிடைத்துவிடுவதுண்டு. அவற்றையும் பார்ப்பேன். இந்தி மொழியிலும் அப்படியே. தங்களின் கலாசாரத்தை, நிலபரப்பை, உணவுப்பழக்க வழக்கங்களை, அரசியல் நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரிய , வங்காள, அசாமிய மொழிப்படங்களைப்ப் பார்க்க விரும்புவேன். அதை லோக்சபா தொலைக்காட்சி நிறைவேற்றி வருகிறது. நாம் உலக மொழிப் படங்களைப் பார்க்கும் முன்பு, இந்திய மொழிப் படங்களை பார்க்கவேண்டும் என்று சொல்வேன். மாநிலங்களுக்கு இடையில் உள்ள வெளியைக் குறைப்பதில் திரைப்படங்கள் உதவி செய்யும் என்பது என் கருத்து. உதாரணமாக ஆந்திரா சாப்பாடு காரம் என்று தெரியும், ஆனால் ஜார்க்கண்ட் சாப்பாடு?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை. இதுவரை இல்லை :-)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வளமாக இருக்கிறது. கலைப்படைப்புக்கு உதவி செய்யும்
நுட்பத்தில் விலை மட்டுப்படும் பொழுது அங்கே ஜனநாயகம் தலை தூக்கும். நேர் நேர் நிரை நேர் போன்ற இலக்கண நுட்பம் எல்லாம் தேவை இல்லை, வெறும் போஸ்ட்கார்ட் போதும் புதுக்கவிதை எழுத என்று ஆனது போல. இந்த நிலைமை, குறைந்த செலவில் நிறைய நல்ல படங்களுக்கு வழி வகை செய்யும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இதற்கு, ஒரு அரசு உயர் அதிகாரி , பிரஸ் மீட்டில் சொல்வது போல பதில் சொல்ல வேண்டும் என்றால், " We appreciate your interest in this
issue. There can, however, be no clear answer to such hypothetical questions." :-)

நன்றி.

நாகார்ஜுனன் said...

நன்றி, பிரகாஷ்.. கடைசிக்கேள்விக்காகத்தானே எல்லாம்! அதில் ஒரு அறிபுனைத்தன்மை இருக்கிறது.

Prakash said...

நாகார்ஜுனன், சரி அதை ஏன் விட்டு வைப்பானேன்.....

கடைசிக்கேள்விக்கான பதில் :

நம்மை, மிதவாதிகளாக வைத்திருப்பதில் சினிமாவுக்கு நிறைய பங்கு உண்டு. என்ன தான் சமூகக் கோபம் இருந்தாலும், 'எண்டெர்ட்ய்ன்மெண்ட்டுக்காக' சினிமா பார்த்து, கோபத்தை ஆற்றிக் கொள்பவர்கள் நாம். மின் தடை, அதிக அளவில் பிரச்சனை ஆக்கப்பட்டதுக்குக் காரணமே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தடைபட்டதுதான் என்று நினைக்கிறேன். ( இல்லாவிட்டால், சிறு தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி, ஊடகங்கள் வரிந்து கட்டிக்க்கொண்டு எழுதுமா?)

ஆக சினிமா இன்றேல் பித்தம் பிடிக்கும். வன்முறை அதிகமாகும்.

RV said...

. ஆறு வயது இருக்கலாம். தங்கச்சுரங்கம் படம். செய்யூர் என்ற ஊரில் ஒரு தியேட்டரில். ஏதோ அல்கெமி என்றும் "கட்டழகு பாப்பா கண்ணுக்கு" என்ற பாட்டும் "நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு இனியது" என்ற பாட்டும் நினைவிருக்கின்றன.

2. தசாவதாரம். கலிஃபோர்னியாவில் குடும்பத்தோடு ஆளுக்கு பதினாறு டாலர் டிக்கெட் வாங்கி முதல் நாள் நைட்ஷோ பார்த்தது.

3. அந்த நாள் - சன் டிவியின் தமிழ் சினிமாக்கொண்டாட்டம் ப்ரோக்ராமில் பார்த்தது.

4. எதுவுமில்லை.

5a. எதுவுமில்லை.

5b. எதுவுமில்லை.

6. கரைந்த நிழல்கள் பிடித்த புத்தகம். தியோடர் பாஸ்கரன் மாதிரி எழுதினால் விரும்பிப்படிப்பேன். இல்லாவிட்டால் கிடைத்ததைப் படிப்பேன் - tamilcinema.com அடிக்கடி போவேன்.

7. ரொம்பப்பிடிக்கும்.

8. மிகவும் தாக்கிய படங்கள் இகிரு (ஜப்பானிய படம், குரோசோவா இயக்கம்), கல்யுக் (ஷ்யாம் பெனகல்), ஆனந்த் (ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன்), Pulp Fiction(க்வென்டின் டாரன்டினோ)

9. இல்லை.

10. நான் பார்த்த சிறந்த தமிழ் சினிமா தண்ணீர் தண்ணீர். தமிழ் சினிமாவில் B grade வாங்கக்கூடிய படங்கள் வந்திருக்கின்றன, ஆனால் A grade வாங்கிய படம் இதுதான். உலகத்தரம் வாய்ந்த படங்கள் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. வரும் என்ற நம்பிக்கையும் இல்லை.

11. ஏன் நியூஸ் இல்லை என்று இரண்டு வாரம் எல்லா ஊடகங்களிலும் மாய்ந்துமாய்ந்து பேசுவார்கள். பிறகு வேறு ஏதாவது பேசக் கிளம்பிவிடுவோம். ஒன்றும் மாறிவிடாது.

சுரேஷ் கண்ணன் said...

அன்புள்ள நாகார்ஜீனன்,

நீளமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். இதை என் வலைப்பதிவில் தனிப்பதிவாகவே இட்டுள்ளேன். http://pitchaipathiram.blogspot.com/2008/10/blog-post_10.html

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

சரியாக நினைவில் இல்லை. ஒண்டுக் குடித்தன வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருப்பவரின் வீட்டில் படம் ஆரம்பிக்க இருப்பதற்கு சற்று முன்னரே வசதியான இடத்தில் இடம்பிடித்து விஞ்ஞானத்தின் முக்கிய பரிணாமமான டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற பரவசத்துடன் ராஜேஷ்கண்ணா வகையறாக்கள் நடித்த மொழி புரியாத இந்திப்படங்களும் முணுக்கென்றால் பாடக்கிளம்பிவிடும் காவிய, சரித்திரப்படங்களும் பார்த்த வயது ஏழோ அல்லது எட்டோ இருக்கலாம். முழுப்பிரக்ஞையுடன் நினைவில் இருப்பதென்றால் திரிசூலம். சிவாஜி தொலைபேசியுடன் கோவென்று அழும் போது சுற்றி அமர்ந்திருந்தவர்கள் கண்கலங்க அப்போதே எனக்கு சற்று எரிச்சலாக இருந்தது உண்மை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

விஜய் நடித்த தரணியின் இயக்கத்தில் வெளிவந்த 'குருவி'. எட்டு வயது மகள் வலியுறுத்தியதின் பேரில் அவளுடைய மகிழ்ச்சிக்காக சென்றது என்றாலும் 'கில்லி'யில் முக்கால் படத்திற்கு தரணி அமைத்திருந்த சுவாரசியமான திரைக்கதையின் மீது ஏற்பட்ட நம்பிக்கையில் சென்றேன். மோசமில்லை. பல தமிழ்ப்படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எரிச்சலாக இருக்கும். குருவியை பார்த்து முடித்த பின்புதான் எரிச்சல் ஏற்பட்டது. கள்ள நகலெடுக்கப்பட்ட குறுந்தகடுகளும் இணைய தரவிறக்கங்களும் பழக்கமாகி விட்ட பிறகு அரங்கில் சென்று திரைப்படம் பார்க்கும் அனுபவம் குறைந்து போனது. (ஒரு நல்ல திரைப்படத்தை எப்படி அணுகுவது / பார்ப்பது என்பதைப் பற்றி தமிழ்ச் சமூகத்திற்கு யாராவது கற்றுத் தந்தால் தேவலை.)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஆச்சரியமாக இதுவும் ஒரு வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படம்தான். பேரரசுவின் பழனி. பொழுதைக் கொல்ல வேண்டிய ஒரு கணத்தில் வீட்டில் கேபிள் டி.வி.யில் பார்த்தேன். வரப்போகும் காட்சிகளை முன்கூட்டியே உடனுக்குடன் ஊகிக்க முடிந்தது. எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் பழைய படங்கள் போலவே இதிலும் முணுக்கென்றால் எரிச்சலூட்டும் பாடல் காட்சிகள். சினிமாவில் பாடல் என்கிற மகா அபத்தத்தை அன்புமணியோ, கவுண்டமணியோ யாராவது சட்டம் போட்டு தடை செய்தால் புண்ணியமாய்ப் போகும். அபத்தமான வணிகப்படம்தான் என்றாலும் முழுப்படத்தையும் பார்க்க வைத்த இயக்குநரின் திறமையை வியந்தேன். திரைக்கதையின் சூட்சுமத்தை ஒரளவிற்கு உணர்ந்த இவர்களின் வணிக சங்கிலிகளின் தடையை நீக்கினால் நிச்சயம் நல்ல படங்களை அவர்களால் தரமுடியும் என்ற நம்பிக்கையுண்டு.

கைக்குட்டை போன்ற இரான் தேசம் கூட மனிதச் சமூகத்தின் அக/புறச் சிக்கல்களை, அனுபவங்களை திரைப்படங்களுக்கேயுரிய பிரத்யேக மொழியில் பாசாங்குகள் தவிர்த்து காவியங்களாக பதிவு செய்து கொண்டிருக்கும் போது நம் தமிழ் சினிமா மாத்திரம் ஏன் இப்படி மலக்குழியில் அமிழ்ந்திருக்கிறது என்பதை எண்ணி வேதனையாக இருந்தது.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நாகார்ஜூனன் இதை எழுதியிருக்காவிட்டாலும் நான் இதைத்தான் சொல்லியிருப்பேன். ஏற்கெனவே இதை இணைய விவாதங்களில் பல முறை சொல்லியிருக்கிறேன். மென்மையும் குரூரமும் திமிரும் சுயபச்சாதாபமும் தவிப்பும் ஏக்கமும் வன்மமும் கொண்ட 'மஞ்சு' என்கிற அந்த கதாபாத்திரத்தை நிகழ்வுகளின் மூலமும் வசனங்களின் மூலமும் இவ்வளவு வலுவாக சித்தரிக்கப்பட்ட படத்தை முன்னரும் பின்னரும் கண்டதில்லை. தமிழிலேயே வந்த உருப்படியான ஒரே சினிமா என்று கூட அதிரடியாக என்னால் இதை வரையறை செய்ய முடியும். அந்தளவிற்கு என்னை தாக்கிய/பாதித்த தமிழ் சினிமா இது. உலக சினிமாவில் ஏற்பட்ட புதிய அலையின் பாதிப்பு தமிழில் எதிரொலித்த முக்கிய படங்களுள் இது ஒன்று.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்றும் தோன்றவில்லை. இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ரஜினி மக்களிடம் தொலைக்காட்சியில் அறிக்கை விட்ட சம்பவத்தை வேண்டுமானால் சொல்லலாம். அதுவும் கூட ஜெயலலிதாவிற்கு எதிரான மனநிலையுடன் ஒரு சாய்வு நிலையில் சொல்லப்பட்ட அறிக்கை அது. நம்மை ஆள்பவர்களை தேர்ந்தெடுப்பதற்கு கூட நடிகர்களின் மூளையை இரவல் வாங்குகிற அளவிற்கு ஆட்டு மந்தையாக தமிழ்ச்சமூகம் சினிமாப்பித்து கொண்டிருக்கிறதே என்று அப்போது வேதனையாக இருந்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஏ.ஆர். ரகுமானின் வருகையைச் சொல்லாம். மேம்படுத்தப்பட்ட நுட்பங்களின் மூலம் பாடல்களின் கேட்பனுபவத்தை இன்னும் உன்னதமாக்கியது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஓ நிறைய. அறந்தை மணியன் தொடங்கி தியோடர் பாஸ்கரன், யமுனா ராஜேந்திரன், அ.ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, விஸ்வாமித்திரன், செழியன் என்று யார் தமிழ்சினிமா பற்றி உருப்படியாக எழுதினாலும் வாசித்துவிடுவேன், பத்திரிகைகளின் துணுக்குச் செய்திகள் உட்பட. பள்ளிப்பருவத்திலேயே சினிமா passion ஆக என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்தது. கேமிராவின் பின்னால் உள்ள துறையில் பணிசெய்வது, அதிகபட்சமாக இயக்குநராக ஆவது என்பதே என் வருங்கால கனவாக இருந்தது.

7. தமிழ்ச்சினிமா இசை?

தமிழச் சமூகத்திற்கே இசை என்றால் அது திரையிசைப்பாடல்கள்தான் என்று பெரும்பான்மையாக இருக்கும் போது நான் மட்டும் விதிவிலக்கல்ல. பள்ளிக்கு கிளம்புகிற அவசரத்திலும் விவிதபாரதியில் ஒலிக்கிற 'ஒரே நாள் உனை நான்' பாடலை கிறக்கத்துடன் கேட்கத்துவங்கியதில் ஆரம்பித்த பித்து இன்னும் அடங்கவில்லை. இளையராஜாதான் அப்போதைய ஒரே ஆதர்சம். எம்.எஸ். விஸ்வநாதன் கூட இரண்டாம்பட்சம்தான். இப்போதையப் பாடல்களில் விருப்பப்பாடலை தேர்வு செய்வது சிரமமாக இருந்தாலும் அப்படியொன்றும் மோசமாகிவிடவில்லை. நாம் விரும்பாவிட்டாலும் கூட தொலைக்காட்சிகளும் பண்பலை வானொலிகளும் அவைகளை தொடர்ந்து காதில் ஊற்றிக் கொண்டேதானே இருக்கின்றன?

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

சத்யஜித்ரே உடல்நலம் குன்றி மருத்துவனையில் இருந்ததும் தொடர்ந்து அவருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டதும், வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டதுமான நிகழ்வுகளைத் தொடர்ந்து ரேவின் முக்கிய படங்களை தேசிய தொலைக்காட்சி வரிசையாக ஒளிபரப்பியது. அதுவரை பார்த்திருந்த சினிமாவெல்லாம் ஒரே கணத்தில் அபத்தங்களாகிப் போக சினிமா என்கிற காட்சி ஊடகத்தை இவ்வளவு வலிமையாகவும் கலாஅனுபவத்துடனும் உபயோகிப்பது சாத்தியமா என்றொரு பரவச நிலையை எய்திய கணமது. பிறகான தேடல்களில் நிறைய உலக சினிமாக்களைப் பார்த்தாலும் பார்க்கிற ஒவ்வொரு முறையும் என்னை அலைக்கழிப்பது ரேவின் 'பதேர் பாஞ்சாலியும்' 'சாருலதாவும்'. இந்தியா ஒரே நாடு என்பதை virtual reality ஆக ஆக்கிக் கொண்டாலும் திரைப்படத்துறையிலும் கூட (தென்னிந்தியாவையும் இந்தி சினிமா உலகையும் தவிர) மற்ற மாநிலங்களில் என்ன நிகழ்கிறது என்பதே நமக்கு தெரியாமலிருப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமான நிலைமை.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பில்லை. ஆனால் திரைத்துறையில் பணிபுரிய வேண்டுமென்கிற கனவு இன்னமும் அடங்காமல் இருக்கின்றது. அடுத்த வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாதது என்பதால் முயற்சிக்கத் துணியவில்லை. ஒருவேளை பணிபுரிய நேர்ந்தால் நேர்த்தியான ஒரு சினிமாவைத் தரமுடியும் என்று எல்லா உதவி இயக்குநர்கள் போலவும் எனக்கும் நம்பிக்கையுண்டு.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஆஹா! கேட்கவே பரவசமாயிருக்கிறது. பெரும்பாலான தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இணையப்பதிவுகளும் முதலில் ஸ்தம்பித்துப் போகும். மக்கள் தங்களுக்கான முதல்வர்களைத் தேட முடியாமல் பரிதவித்துப் போவார்கள். ஆனால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள். மெகா சீரியல்கள் இன்னும் நீளமாகும். மாத நாவல்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும். தமிழர்களையும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தையும் பிரிக்கவே முடியாது. ஏதாவதொரு மாற்று வழியை நிச்சயம் தேடிக் கொள்வார்கள்.

நாகார்ஜுனன் said...

சினிமா கருத்தரங்கில் கட்டுரை வாசித்தவர்கள் கள ஆய்வு செய்திருப்பார்களா என்று கேட்டு நான் ஏதோ விளையாட்டாக சர்வே என எழுதப்போக, அது ராஜநாயஹம் மற்றும் ஐகாரஸ் பிரகாஷ் தயவில் meme ஆகியிருக்கிறது! சுடரோட்ட ரீதியில் போய் பலர் பதிலளிக்கும் நிலை.. ஆச்சரியம்தான். நான் எதிர்நோக்கவில்லை. ஏற்கனவே
சிலரால் கேட்கப்பெற்ற, பலருடைய தொண்டைகளில் சிக்கியிருந்த கேள்விகள்தாம் இவை எனத் தெரிகிறது. என் பணி தொகுத்துக்கேட்டது மாத்திரம் எனக்கூறலாம்.

பதில்களிலிருந்து -

1. தனிப்பட்ட அனுபவங்கள் சுவாரசியமிக்கவை. வெவ்வேறு தலைமுறைகள் இதில் பங்கேற்றால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். ஒருகட்டத்தில் இவற்றின் பொதுப்போக்குகளை யாராவது தொகுக்கலாம்.

2. சென்னைக் கருத்தரங்கில் பங்கேற்றவர்கள், சினிமாத்துறை சார்ந்தவர்கள் பதிலளித்தால், விமர்சனம் செய்தால் சுடரோட்டம் இன்னும் சூடு பிடிக்கும்.

3. கடைசிக்கேள்வியை யாரும் புறக்கணிக்கவில்லை.

4. இணைய தளத்தில் புழங்குவோர் இணைந்தால் புதிதாக ஒரு படமே எடுத்துவிடலாம்போலத் தெரிகிறது... நம்மைத்தாண்டியவர்களுக்கு அதைக் கொண்டுபோகத்தான் முயற்சிக்க வேண்டியிருக்கும்.

நாகார்ஜுனன்

நாகார்ஜுனன் said...

பிரகாஷ், RV, சுரேஷ் கண்ணன் இன்னும் தத்தம் வலைப்பக்கங்களில் எழுதிய பாஸ்டன் பாலாஜி, லக்கிலுக், சங்கர் மற்றும் பா. ராகவன் இன்னும் பலருக்கும் இந்தக்கேள்விகளைத் தம்மளவில் ஸீரியஸாக எடுத்துக்கொண்டதற்கு நன்றி.

நாகார்ஜுனன்

திலகர் மருது எம். said...

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வி. சாந்தாராமின் ஜனக் ஜனக் பாயல் பாஜே. பிறந்து அறுபதாம் நாளில்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
பருத்திவீரன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கட்டாயம் ஏற்பட்டால், கண்ணையும் காதையும் தடித்த துண்டால் மூடிக்கொள்வேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ஔவையார்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
சினிமா-அரசியல் என்பதால் தமிழர்கள் தம் அடையாளங்களைத் தொலைத்தார்கள்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அமெரிக்காவைச் சேர்ந்த எல்லிஸ் ஆர் டங்கன் தமிழ்ச்சினிமாவில் பெரிதும் ஈடுபட்டு, பங்களிப்பைச் செய்து தாய்நாடு திரும்பியது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அத்தகைய தவறைச் செய்யவே மாட்டேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?
M (Music) இப்போது N (Noise) ஆகிவிட்டது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
சோரப் மோடி, மஹபூப் கான், வி. சாந்தாராம், பிமல் ராய், குருதத், ரித்விக் கட்டக் போன்றோரின் படங்களை.. உலக அளவில் ஜான் ஃபோர்ட், ஸ்டான்லி குப்ரிக், ஹிட்ச்காக், பஸ்ஸோலினி, கோதார், குரோஸவா அப்புறம் வாங் கார்-வாய் படங்களை..

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நிறையப்பேருடன் தொடர்புண்டு. ஆனால் அவர்கள் படங்களுடன் தொடர்பில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இனிமேல் திரைப்படிப்புப் பட்டம் பெறுவோரின் கையில் இருக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
11. ஓராண்டு கழித்து, சக்திகொண்ட இளைஞர்கள் சிலர் இணைந்து, "எங்கள் கனவுகளைப் பிறர் திருட இனியும் அனுமதியோம்" என முழங்குவார்கள். ஆம், எனக்கு நல்ல நம்பிக்கையுண்டு.
இந்தப் பெரும் சகாப்தம் முடிவதன் தொடக்கம்தான் இது.

ஜமாலன் said...

மிகவும் பரபரப்பாக வலைப்பதிவில் இந்த கேள்விகள் ஒரு தொடர் விளையாட்டாக போய்க்கொண்டு உள்ளது. பார்க்கலாம் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு ஆய்வாக செய்யமுடியுமா என்று. இதனை பண்புடன் குழுமத்தில் போட்டு அங்கும் சிலர் பதில்கள் தந்துள்ளனர்.

Suresh said...

ருத்ரையா பற்றிய ராஜநாயஹம் அவர்களின் கருத்து மிகவும் வேடிக்கையானது. ஒருவர் இரண்டு படைப்புகளை உருவாக்குகிறார், ஒன்று -- குறைந்தது ராஜநாயஹம் அவர்களின் பார்வையில் -- நன்றாக இருக்கிறது, மற்றொன்று சரி இல்லை. இதைவைத்து இரண்டு முடிவுகளுக்கு வரலாம்: 1. ஒரு திறமையான படைப்பாளி தன் ஒரு படைப்பில் கோட்டை விட்டு விட்டார்; 2. ஒரு திறனற்ற மனிதர் குருட்டுக் குத்தாக ஒரு தலைசிறந்த படைப்பை உருவாக்கிவிட்டார்.

இவர் எந்த அடிப்படையில் ருத்ரையா இரண்டாம்* ரகத்தைச் சேர்ந்தவர் என்ற "உண்மையை" கண்டறிந்தார் என்று தெரியவில்லை?

கிராமத்து அத்தியாயம் கமல் நடிக்க இருந்த படம். கமலுக்கும் ருத்ரையாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கமல் படத்தில் இருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் கமலுக்கே உரிய அறிய பண்போடு வேறு சில கலைஞர்களையும் படத்தில இருந்து விலகச் செய்தார். படம் நின்றுபோகக் கூடிய நிலையிலும் ருத்ரையா விடாப்பிடியாக, கைக்கு சிக்கிய நடிகர்களை வைத்து படத்தை எடுத்து முடித்தார். அப்படத் தோல்வியோடு ருத்ரையா மீண்டும் தமிழ் திரையுலகில் தலையெடுக்க முடியாமல் போனது.

*-முந்தைய பின்னூட்டத்திலிருந்து திருத்தப்பட்டது

tamilnadunews said...

சில விஷயங்கள் எனக்குப் புரியவில்லை. ஆனாலும் இது படிக்கப்பிடிக்கிறது!

நேற்று இன்று நாளை படத்தால் ஏற்பட்ட கஷ்டநஷ்டங்கள்
உங்களுக்கு இன்னொருவர்
சொன்ன அனுபவம் மட்டுமே.
ஆனால் அந்தப்படத்தில் பணியாற்றிய, அசோகனை நன்கறிந்த
எடிட்டர் பெயர் கௌதம். உங்களுக்குத் தேவையான தகவல் வைத்திருக்கிறாரா என்று பாருங்கள்.

சரவணகார்த்திகேயன் சி. said...

சினிமா பற்றிய கேள்வி-பதில்கள் தொடர்பதிவாய் தமிழ் வலைப்பூக்களில் பல பதிவர்களால் எழுத‌ப்பட்டு விட்ட நிலையில் கொசுறுக்கு கொஞ்சம் தமிழ் கொஞ்சும் என் வலைதளத்திலும் (அழைப்பு இல்லாவிடினும்) இப்பதிவை இடுவது தார்மீக கடமை ஆகிறது. இனி கேள்வி-பதில்கள்:

1-அ) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
கிட்டதட்ட மைனஸ் ஒரு வயதில். ஆம். அம்மாவின் வயிற்றிலிருந்த போது. அபிமன்யுவுக்கு கிருஷ்ணன் பத்மவியூகம் சொன்னது போல‌. படம்: வைதேகி காத்திருந்தாள்.

1‍‍-ஆ) நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், நினைவில்லை. கலவையாய் பல படங்கள் வந்து போகின்றன. எதுவென்று சரியாய்ச் சொல்ல முடியவில்லை.

1-‍‍‍இ) என்ன உணர்ந்தீர்கள்?
அப்படிக் கலவையாய் வந்து போகும் படங்கள் அனைத்திலும் பொதுவான அம்சமாய் இருந்த அதிரடி சண்டைக்காட்சிகளும், நடிகைகளின் தொப்புள்காட்சிகளும்.

2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
பெங்களூர் ஃபேம் லிடோ திரைப்பட அரங்கில் நண்பர்களுடன் நேற்றிரவு இரண்டாம் ஆட்டம் பார்த்த கெளதம் வாசுதேவ் மேனனின் வாரணம் ஆயிரம்.

3-அ) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது?
மணிரத்னத்தின் அல்லது கமல்ஹாசனின் நாயகன். இது படத்தை நான் பார்க்கும் முப்பதாவது அல்லது அதற்கு மேற்பட்ட தடவையாக இருக்கலாம். கணக்கு வைத்துக் கொள்ள‌வில்லை.

3-ஆ) எங்கே?
என் வீட்டில், தனிமையில், மடிக்கணிணியில், குறுந்தகட்டில். எனக்கு பிடித்த இது போன்ற பழைய படங்களின் குறுந்தகடுகளை சேகரித்து வைத்திருக்கிறேன்.

3-‍‍‍இ) என்ன உணர்ந்தீர்கள்?
த‌மிழின் ஆகச்சிறந்த படம் என்பதை மேலும் ஒரு முறை உறுதி செய்து கொண்டேன். இது போன்ற படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதை ஒரு மனப்பயிற்சியாகவே கருதுகிறேன்.

4) மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
கமல்ஹாசனின் குருதிப்புனல். இதுவரை உலக தரத்தில் தமிழில் புனையப்பட்ட ஒரே திரைக்கதை என்பதாலும் அதில் ஒளிந்திருக்கும் தொழில்நுட்ப நேர்த்திக்காகவும்.

5-அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
குஷ்புவின் கற்பு பற்றிய கருத்துக்களும் அதற்கான அதீத எதிர்வினையும். அவர் சொன்னது உண்மை என்பது தான் பிரச்சனை - அதன் விலை எப்போதும் அதிகம்.

5-ஆ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சந்தேகமில்லாமல் இயக்குநர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களின் ஜிம்மிக்ஸ் வேலைகள். அன்றைய ஜென்டில்மேன் தொடங்கி நாளைய ரோபோ வரை.

6) தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
காலச்சுவடு, உயிர்மை, தீராநதி முதல் குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் வரை சினிமா தொடர்பாய் வரும் அனைத்தையும் பாகுபாடின்றி‌ - தினத்தந்தி உட்பட.

7) தமிழ் சினிமா இசை?
இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா.

8-அ) தமிழ் தவிர வேறு இந்திய மொழி சினிமா பார்ப்பதுண்டா?
சிறுவயதில் தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகும் மாநில மொழி படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். தற்போது இந்தி படங்கள் மட்டும்.

8-ஆ) அதிகம் தாக்கிய படங்கள்?
Lagaan, Taare Zameen Par, Black, A Wednesday, Fashion, Fire, Water, Dil Se, Guru, Mathrubhoomi, Swadesh, Samay, Sarkar, Satya மற்றும் Sholey.

8-‍‍‍இ) தமிழ் தவிர வேறு உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
ஜேம்ஸ் பாண்ட், ஜாக்கி சான், ஜுராஸிக் பார்க் தொடங்கி தொலைக்காட்சியிலும் குறுந்தகட்டிலும் பல ஆங்கிலப்படங்கள். அவ்வப்போது திரையரங்கில்.

8‍‍‍‍-‍‍‍ஈ) அதிகம் தாக்கிய படங்கள்?
Jurassic Park, Titanic, Troy, Island, Independence Day, Water World, Day After Tomorrow, Wall-E, Johnny English, Behind The Enemy Lines, E.T., Apocalypto மற்றும் Gladiator.

9-அ) தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
கல்லூரி நாட்களில் உண்டு. உடன் படித்த அழகப்பன் (அவன் தந்தை திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பளர்) என்ற சினேகிதனின் மூலமாக.

9-‍‍‍ஆ) என்ன செய்தீர்கள்?
ராஜ்மோகன் என்ற இயக்குநரின் முதல் படத்திற்கு நான்கு பாடல்கள் எழுதினேன். சில பல காரணங்களால் அந்தப் படம் பாதியில் கைவிடப்பட்டது.

9-இ) பிடித்ததா?
கிட்டதட்ட. கனவுத்தொழிற்சாலையின் அரசியல் உணர்ந்தே அத‌ற்குத் தயாரானேன். ஆத்மசுத்தியோடு அங்கு செயல்பட இயலாது.

9-ஈ) அதை மீண்டும் செய்வீர்களா?
வாய்ப்பு கிடைத்தால் செய்வேன். சினிமாவுக்காக அல்ல என் சுயந‌லத்துக்காக. அது தரும் புகழ் எனும் மூலதனத்துக்காக. அதனால் என் நிஜ எழுத்துக்கள் வாசிக்கப்படும் என்பதற்காக.

9-உ) தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
உதவாது. சினிமா என்னால் மேம்பட இரண்டு விஷயங்கள் சாத்தியப்பட வேண்டும். நான் இயக்குநராக இருக்க வேண்டும் நானே தயாரிப்பாளாராகவும் இருக்க வேண்டும்.

10) தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பாலா, சேரன், அமீர், செல்வராகவன், கெளதம், முருகதாஸ், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், சசிகுமார், ராதமோகன், சிம்புதேவன், வெங்கட் பிரபு, விஜய் - என்ன சொல்கிறீர்கள்?

11-அ) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு எப்படியிருக்கும்?
சினிமாவுக்கான‌ பண‌த்தை மேலும் கூடுதாலாய் புத்தகங்கள் வாங்கவும், நேரத்தை பார்க்காமல் விடுபட்ட தமிழ் படங்களை குறுந்தகட்டில் பார்க்கவும் செலவிடுவேன்.

11-ஆ) தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டின் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும், பிரபல வாரப்பத்திரிக்கைகளும் சில வலைப்பூக்களும் இழுத்து மூடப்படும். "இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்ற புகழ்மிக்க சொற்றொடர் மறக்கப்படும்.

திரையரங்குகளில் எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களுக்கு முன்பதிவு நடக்கும். அடுத்த தமிழக முதல்வர்களின் எண்ணிக்கை சரியும். வேலையற்ற இளைஞர்கள் அனைவரும் வேலையிழப்பார்கள். புதிதாய் அறிமுகம் ஆகிற‌வர்களிடம் பேச விஷயமிருக்காது.

புதிய சிகையலங்காரங்கள் உற்பத்தியாகாது. கல்லூரி விழா கலை நிகழ்ச்சி்கள் களையிழக்கும். கார்பரேட் கம்பெனிகளின் சைவ வகை வார இறுதி கொண்டாட்டங்கள் ஜாகை மாற்றுவார்கள். இளைஞர்கள் பெண்களைக் கவர சுயமாய் யோசிக்க வேண்டியது இருக்கும்.

அரிவாள் தயாரிப்பு தொழில் சுணங்கும். சாதி அரசியல்வாதிகளுக்கு சினிமாவை அச்சுறுத்தவோ எதிர்த்து அறிக்கை விடவோ காரணம் கிடைக்காது. இரவுக்காட்சி முடிந்து திரும்புபவர்களை வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கும் பாலியல் தொழிலாளிகள் வேறு மார்க்கம் பார்ப்பார்கள்.

பொதுவாய் வன்முறையும் வல்லுறவும் குறையும். கலவரங்கள் சினிமா தவிர்த்த வேறு காரணங்கள் சொல்லி நிகழும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் பொருளாதாரம் குறையும். ரீமிக்ஸில் புண்ணாகும் காதுகள் பிழைக்கும்.

யாரை யார் வைத்திருக்கிறார் என்ற பொது அறிவு மங்கும். மக்களின் புன்னகையோ கண்ணீரோ அதன் பயன்பாடு வீழும். ஷகீலா படங்களின் மவுசு பகற்பொழுதிலும் கூடும். தயாரிப்பாளர் வினியோகஸ்தர் தற்கொலைகள் குறையும்.

செல்பேசி ரிங் டோன், காலர் ட்யூன் வினோதங்கள் அகலும். இளம் கதாநாயகர்களைத்தேடி சென்னைக்கு ரயிலேறும் பதின்வயது பெண்டிர் எண்ணிக்கை குறையும். நமது தேசிய அடையாளமான பஞ்ச் டயலாக்கள் வழக்கொழியும்.

மதன், சுஹாசினி மழுப்ப வேண்டிய அவசியமில்லை. வசனமெழுதும் எழுத்தாளர்கள் கதாநாயகன், இயக்குநர் புராணம் பாடுவது நிற்கும். நடிகைகள் த‌விர்த்து பெண் கவிஞர்களுக்கு கோயில் கட்டுவார்கள். எழுத்தாளர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைப்பார்கள் (இது மட்டும் நப்பாசை).

எல்லவற்றுக்கும் மேலாக நேரடியாக சினிமாவை மட்டுமே நம்பி வாழும் சில ஆயிரம் தொழிளாலர்கள் வீட்டில் அடுத்த வேளை அடுப்பெரியாது.

பின்குறிப்புகள்:
1. பதினொன்றாவது கேள்வி தான் மூலவர் - மற்றவை உற்சவ மூர்த்திகள்.
2. இத்தொடர் பதிவுக்கு வித்திட்ட நாகார்ஜுனன் அவர்களுக்கு நன்றி.
3. இப்பதிவைத்தொடர இவர்களை அழைக்கிறேன்:

* சாரு நிவேதிதா
* ஜெயமோகன்
* எஸ்.ராமகிருஷ்ணன்
* ஞானி
* நவீன் குமார்

பதிந்தவை