குளிர் மதியம்.
ஈழத்தின் காடு மற்றும் கடலின் ஊடே இந்திய விமானம் திருகோணமலைத் துறைமுகத்தை நெருங்கியபோது நிருபர்கள் அனைவரும் குலுக்கலையும் மீறி வட்டக்கண்ணாடி ஜன்னலருகில் முகங்களைப் புதைக்கிறோம்.
கடல்சூழ் மலையும் மலைசூழ் கடலும் தூரத்திலிருந்து கோணேஸவரர் ஆலயமும் குரங்குப்பாலமும் ஜன்னலில் பார்க்கப்பார்கக் மறைய, நேர்கீழே இந்தியக் கடற்படைக் கப்பல்கள், மீன்பிடிப்படகுகள். துறைமுகத்தைப் பிடிக்கிறோம். காமிராக்களில்.
விமானம் தரையிலிறங்கும் முன்பே பிரிட்டிஷார் காலத்து ஓட்டப்பாதையென உணர்கிறோம். நின்றவுடன் கதவுகள் திறந்து நானே முதலில் ஈழ மண்ணை மிதிக்கிறேன் முதல்முறையாக. காண்பது ஈழவர்களையல்ல. இந்திய ராணுவ அதிகாரிகளை, துருப்புகளை, ஜீப்புகளை, டாங்கிகளை.
தொலைதூரத்தில் கட்டிடங்கள் சில - ப்ரீமா ஜப்பானிய மாவுமில் என்று தெரிகிறது பின்னர். மிக அருகில் துறைமுகம். கலைந்த என் தலையைப் பதம் பார்க்கும் கடற்காற்று.
ட்ரக்கில் இந்திய சிப்பாய்களிடம் ஹிந்தி மொழி துணைபுரியப் பேசுகிறேன் சென்னை சக நிருபர்கள் வினோதமாகப் பார்க்க.
"உணவு, உடை, இருப்பிடம் பரவாயில்லை. சிங்கள சிப்பாய்கள் ஆங்கிலம் பேச, நமக்குப் புரியவில்லை" என்று ஒருவர் சொல்கிறார். ஊருக்குள் போனால் தமிழர்கள் வரவேற்க சிங்களவர்கள் கல்லால் அடித்ததாக மராத்திய ரெஜிமென்டைச் சேர்ந்த ஒருவர் உடைந்த ஹிந்தியில் பரிதாபமாகச் சொல்கிறார்.
சிங்கள, இந்திய இராணுவ அதிகாரிகள் முன்சென்ற ஜீப்பில் சிரித்துப்பேச, ட்ரக், வலைக்கம்பி சூழ்ந்த விமானத்தை விட்டு வெளியேறி ஆடிச் செல்கிறது. விறகு சுமக்கும் முதியவர், சைக்கிள் பயணி, குரைக்காத நாய் இவை ராணுவத்தை மீறிய உயிர்ப்பைக் காட்ட, மரங்கள் சூழ்ந்த பாதையில் ட்ரக் திரும்ப, இந்திய டாங்க் ஒன்றுக்கருகில் கைக்குழந்தையுடன் தண்ணீர் சுமந்துசெல்லும் ஒரு பெண்மணி எங்கள் ட்ரக் மீது காறி உமிழ்கிறார்!
"ஃபோட்டோ எடுக்க முடியலியே!" நிருபர் ஒருவரின் வருத்தம்.
"நமக்குக் கல்லடி இல்லையே." இன்னொருவர்.
"இன்று காலை ஜே.ஆரின் கூட்டத்தின்மீது யாரோ குண்டுவீசியது போல நம் மீதும் வீசிவிடலாமே!" - அடுத்த நிருபர்.
பேச்சைத் தாண்டி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பெரும் பெட்ரோல் டாங்கர்கள். ஓ, இவைதாம் அமெரிக்கக் கப்பல்களுக்குப் பெட்ரோல் (ஈழத்தமிழில் பெற்றோல்) நிரப்புபவை? சுற்றிலும் ராணுவம் தொடர்பான சிங்களக்குடியேற்றங்கள். கடுமையான பார்வையுடன் பெண்கள். ஆண்கள் வெளியே சென்றிருக்க வேண்டும். நாய்கள்கூட ட்ரக்குகளைத் துரத்தவில்லை. பழகிப்போயிருக்க வேண்டும்.
Ceylon Petroleum Corporation என்ற ஆங்கிலப்பலகை தாண்டி, இந்தியச் சிப்பாய்கள் சூழ்ந்த கூடாரத்தருகில் ட்ரக் நிற்கிறது.
இந்திய ராணுவ அதிகாரிகள் குல்வந்த் சிங், பல்பீர் சிங் வரவேற்கிறார்கள். திருகோணமலை மக்கள் குழுவைச் சேர்ந்த பெர்னார்ட் ஃபெர்னாண்டோ, கமாண்டர் செனவிரத்ன பொறுமையிழந்து எங்ளைப் பார்க்கிறார்கள்.
அங்கிருந்த ஒரே தமிழர், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்த வசந்த் மட்டுமே.
"மக்கள் குழுவில் தமிழ்பேசும் யாரும் கிடையாதா?"
என் கேள்வியைப் பொருட்படுத்த யாருமில்லை. வசந்த் தமிழ்பேசும் எங்களை அடையாளம் காண்கிறார்.
கிடத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டு இந்தியச்சிப்பாய்கள் சிரித்துக்கொள்ள, ஆயுதங்களுடன் தங்களைப் போட்டோ எடுக்குமாறு ஒரு சிப்பாய் எங்களிடம் வேண்ட, இந்திய அரசின் டி.வி. நிருபர் அமிதாப் சாட்டர்ஜி அவர்களைப் படமெடுத்துத் திருப்திசெய்கிறார்.
வழக்கமான கேள்விகளை வழக்கமான நிருபர்கள் கேட்க, நான் ஊர்நிலைமை பற்றி செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் கேட்கிறேன். ஊர்க்காவல்படையினர் துப்பாக்கிகளுடன் அலைவதாகவும் தமிழ் அகதிகள் திரும்பிவருவது கடினம்தான் என்றும் ஒப்புக்கொள்கிறார்கள். இதற்கு நேர் எதிராக பெர்னாண்டோ சக நிருபர்களிடம் கூறுவது காதில் விழுகிறது. வசந்த்திடம் ஓரிரு கேள்விகள் கேட்டிருக்கும்போது குல்வந்த் சிங் என்னிடம் வந்து வழிவிடுமாறு கூறுகிறார். வசந்த் ஒரு ஏகே-47 துப்பாக்கியை முத்தமிட்டுக் கொடுக்க, குல்வந்த் அதைப்பெற்று செனவிரத்னவிடம் காட்டுகிறார். அவர் அதைத் தொட்டுவிட்டு எங்களைப் பார்த்து ஃபோட்டோவுக்காகச் சிரிக்கிறார்.
செனவிரத்னவுடன் பேசுகிறேன். கெரில்லாக்கள் பலரும் வெளியில் வரவில்லையே என்று குறைபட்டுக் கொள்கிறார்.
"நாங்களும் இலங்கையர்களே. எங்களை நம்புங்கள்" என்கிறார் கைவிரித்து. நட்பு ஆச்சரியமாயிருக்க, அவருடைய ராணுவ நடவடிக்கை பற்றிக் கேட்கிறேன். "இது எங்கள் ஊராக இருப்பதில், இதைக் காப்பாற்றுவதில், பெருமையடைந்திருக்கிறோம்" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லும் போது கண்கள் பயத்தை உண்டாக்க, சிலிர்த்து நகர்கிறேன்.
காலை தலைநகர் கொழும்பில் ஜே.ஆர். கூட்டத்தின் போது குண்டுவீசித் தாக்கப்பட்டது பற்றிக் கேட்க நினைக்கிறேன். அடுத்த நிருபர் கேட்கிறார். செனவிரத்ன பதிலுக்குப் புன்முறுவலுடன் நிறுத்திக்கொள்கிறார்.
சட்டென்று தெளிவாகிறது. நாங்கள் ஊருக்குள் போகப் போவதில்லை. குல்வந்த் சிங்கை அணுகிக்கேட்கிறேன். எல்லோருக்கும் டீ கிடைக்கிறது.
"இன்று போவது அவ்வளவு உசிதமில்லை. நான் சொல்லியா உங்களுக்குத் தெரியவேண்டும்." சிரிக்கிறார்.
நிருபர்கள் விரட்டப்பட்டு டிரக்கில் கோபத்துடன் ஏற்றப்பட, வசந்த் என்னுடன் பேச விரும்பி வருகிறார். டிரக் நகர்கிறது.
"எங்களுக்கு எப்பவும் பயந்தான். எங்கட 6,000 குடும்பம் வெளிய ரோட்டிலையும் மற்றும்படிக்கு முகாம்களிலும் நிக்கினம். நாங்க எல்லோரும் அடியில்தான்" என்று மடமடவென்று பேசுகிறார்.
"அப்ப இவங்க உங்க பகுதிகளுக்கு வருவதில்லையா?"
"வருவினம், ஆனா இவங்களுக்குத் துறைமுகம்தான் முக்கியம். அதைத்தான் எல்லோருமே முக்கியமாக் நினைக்கினம்."
ஊர் நிலைமை பற்றி வருந்திக்கொண்டே குறித்துக்கொண்டோம். புதிய நிலைமைகளை இன்னமும் புரிந்துகொள்ள விழையும் அச்சம் மிகுந்த அவர் கண்கள் கலக்கத்தை உண்டாக்குகின்றன.
"யாழ்ப்பாணத்திலோ, சென்னையிலோ பார்ப்போம்" என்னை அணைத்து விடைபெறுகிறார்..
விமான நிலையம் வந்துவிட, அடுத்த இந்திய விமானம் மிடுக்காக வந்திறங்குவதை அங்குள்ள இலங்கை விமானப்படையினர் உள்ளிட்ட அனைவரும் அண்ணாந்து பார்க்கிறோம். திரும்பினால் வசந்த் மீண்டும் கையசைப்பது தெரிகிறது. விமானத்தில் ஏற்றப்பட்டு விரட்டப்படுகிறோம். 
சிலர் உடனே பீர் புட்டிகளை உடைக்க, நுரைபொங்கும் போது விமானம் கிளம்பித் துறைமுகத்தைத் தாண்டிவிடுகிறது.
"எல்லோரும் ஏறிட்டீங்கல்ல, அடுத்து பலாலிதான்." சென்னை அதிகாரியின் கனத்த குரல்.
நெஞ்சுக்குழி விறைத்துவிடுகிறது. இனம் தாண்டிய சோகம் தோலைப் பற்றிச் சுண்ட, கண்முன் திருகோணமலை மறைந்து இந்துமாக்கடலின் பரப்பு விரிகிறது.
"இதற்காகத்தானா எல்லாம்?" நான் யோசிக்க, சுற்றியிருந்தவர்களின் நெஞ்சுக்குழிகளில் பீர் நிறைந்துவிடுகிறது.
பாலம் செப்டம்பர் 1987 இதழில் வெளியானது
படங்கள்
திருகோணமலை குடா வரைபடம் - Carte de la Baye de Trinquemale. 1761-ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் அச்சானது. அடுத்தது பதினெட்டாம் நூற்றாண்டு டானிஷ் சித்திரம்.
திருகோணமலை இன்று.
3 கருத்துகள்:
பழைய அல்லது மிகப்பழைய நினைவுகளை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறீர்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
http://blog.sajeek.com/?p=264
உங்களுடைய பழைய குறிப்பினை மீளப்பதிந்தமைக்கு மிக்க நன்றி!
-மதி
Post a Comment