6.6.08

நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை - 2

நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை - 1

ஜான் ஆப்ரஹாம் பற்றிய இன்னொரு முக்கிய விஷயம், அவர் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தது, உஸ்கி ரோட்டி என்ற சக இயக்குநர் மணி கௌலின் முதல் ஹிந்திப்படத்தில். தீவிர ஃப்ரெஞ்சு இயக்குநர் ராபர் ப்ரெஸ்ஸோனின் Pickpocket படம் பார்த்து அந்தத்தாக்கத்தை அடிப்படையாக வைத்து சில மாற்றங்களுடன் மணி கௌல் எடுத்த படம் அது. ஜான் பிறகு எடுத்த அக்ரஹாரத்தில் கழுதை படத்தின் சில கூறுகளை, அந்த அனுபவத்திலிருந்து பெற்றிருக்கலாம்.

அதற்குப்பிறகு சில ஹிந்திப்படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்திருக்கிறார் ஜான். அவற்றில் ஒன்றே ஒன்றுதான் வெளியானது என நினைக்கிறேன். அதில் ஜான் ஏறத்தாழ இயக்குநராகவே இருந்தார் என்றும் அவர் நண்பர்கள் மூலம் அறிந்தேன். த்ரிசந்தியை என்பது படத்தின் பெயர் - அதாவது ஒளியும் நிழலும் மயங்கும் நிலை. 1972-ஆம் ஆண்டு வந்த இந்தப்படத்தில் நடித்தவர் பெயர்பெற்ற நடிகை வஹீதா ரஹ்மான். இந்தப்படம் நான் பார்க்கவில்லை.

அக்ரஹரத்தில் கழுதை படத்துக்குப் பிறகு தாம் பிறந்த குட்டநாட்டுப்பகுதியில் வைத்து ஜான் எடுத்த படம் செரியாச்சன்டெ க்ரூர க்ருத்யங்ஙள் (1980). அடூர் பாஸி முக்கிய வேடமேற்று நடித்த இந்தப்படத்தை, பம்பாய் நகரில் நான் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த மலையாள நண்பர்களுடன் சென்று கண்டேன். பம்பாயின் நான் விஞ்ஞானியாகப் பணிபுரிந்த காலம் அது. இப்போது லண்டனில் இருப்பது போன்ற புறநகர் வாசம். தினம் இரண்டு மணி நேரம் ரயில் பயணம். ஆனால் கடுமையான உடற்பயிற்சியாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்தே ஆக வேண்டும். தவிர, அங்கே தமிழ், மலையாளப்பாடங்களை ஞாயிற்றுக்கிழமை காலையில் திரையிடுவார்கள்.

கேரள அரசின் விருது பெற்ற படம் அது என்று மட்டும்தான் எனக்குத் தெரியும். ஜானின் பெயர் படத்தில் கண்ட ஒருசில நிமிஷங்களில் ஜான் நேரடியாக எங்கள் வரிசையிலேயே அமர்ந்திருப்பதையும் கண்டோம். குட்டநாட்டில் விவசாயக்கூலிகளின் வர்க்கப்போராட்டத்தைக் கண்டு அதை அடக்குவதற்குப் பதிலாக மிரண்டுபோகும் ஒரு நிலப்பிரபுவின் கதை அது.

அந்தப்படத்துக்குப் பிறகுதான் ஜானுடன் என் அறையில் தங்கிய அந்த நாட்கள். அவரை நண்பர் என்று கூறமுடிகிற சமயம், அதை அறுத்துக்கொள்ளும் வகையில் எதையாவது செய்துவிடுவார். இதையெல்லாம் கண்ட உடனிருந்த சில தமிழ் நண்பர்கள் "இவர் படமெல்லாம் எடுப்பவரா என்ன, அறையைக் காலிசெய், அல்லது நாங்கள் காலிசெய்வோம்" என்று பயமுறுத்தினார்கள். மலையாள நண்பர்கள் பரவாயில்லை, உதவினார்கள்.

ஒருநாள் அறைக்கு ஜான் வந்தபோது இதுபற்றிக் கூறினேன். கோபப்படுவார் என எதிர்பார்த்தேன். அவர் கோபமே படவில்லை. "சரி, வா, இதுபற்றியே ஒருபடம் பார்க்கலாம்" என்றார். என் எஃப் டி ஸி எனப்படும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் குழுமம் நடத்திய அரங்கம் அப்போது பம்பாய் ஸென்ட்ரல் பகுதியில் இயங்கியது. அங்கே 27 Down என்ற ஹிந்திப்படம் கண்டோம். ஷாட்-ஷாட்டாக இருட்டில் குறிப்புகள் எழுதிக்கொண்டே வந்துவிட்டார். 1974-ஆம் ஆண்டு அவதார் கௌல் இயக்கி, எம். கே. ரெய்னா உள்ளிட்டோர் நடித்த அசாதாரணப் படம் அது. என் எஃப் டி ஸி தயாரிப்பு.

கதை என்றால் இதுதான்: கலை பயில விரும்பும் மகன் சஞ்சய். தந்தை எஞ்சின் ட்ரைவர், விபத்தில் காயமடைந்து கட்டாய ஓய்வு பெறுகிறார். ஆக, மகனுக்கு ரயில்வேயில் டிடிஆர் வேலை கிடைக்கிறது. ஓடும் ரயில். வேலைக்குப்போகிற ஷாலினி என்ற பெண்ணின் நட்பு கிட்ட, அதை எஞ்சின் ட்ரைவர் அப்பா துண்டித்து, மகனுக்குக் கிராமத்துப்பெண்ணை மணம் செய்துவைக்கிறார். வாழ்க்கை கசந்து வீட்டுக்கே செல்லாத சஞ்சய்க்கு ரயிலே எல்லாமாகி விடுகிறது. குடும்பம், வீடு என்ற நிறுவனம் தாண்டி, குடி மற்றும் விபச்சாரம் வந்துவிடுகிறது. ஷாலினியைச் சந்திக்கிறார். பேச ஏதுமே இல்லை. விளிம்புநிலைப் பெருக்கத்தில் வாழ்க்கையின் கோணமே மாறிவிடுகிறது. கடைசி ஷாட்டில் மரணத்துக்காகப் பலர் காத்திருக்கும் நகரான காசிக்கு 27 Down செல்கிறது. ரயிலின் டிடிஆரோ ஏற்கனவே மரணித்திருக்கிறார்...

27 Down அவதார் கௌலின் ஒரே படம். வந்தவுடன் மரணித்துவிட்டார்.

"படத்தை உன்னை ஹீரோவாக வைத்துத் தமிழில் எடுத்தால் என்ன மாற்றம் செய்யலாம்" என்ற ஜான், "ராமேஸ்வரத்திலிருந்து படத்தைத் தொடங்கலாம். உன் பெயரிலேயே அது உண்டு. அது பிறப்பு. காசிவரை செல்ல எளிதாகிவிடும். காவேரி-கங்கா எக்ஸ்பிரஸும் உண்டே.." என்று கடகடவென்று சிரித்தார். எனக்கு இன்னும் பயமாகிவிட்டது. அதேசமயம் ஆச்சர்யமும்.

அடுத்த சில ஆண்டுகளில் ரமேஷ் என்ற என் பெயரிலன்றி நாகார்ஜுனனாக எழுத இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

பிறகு ஜானுடன் பார்த்தது இன்னும் சில படங்கள். பழைய ஹிந்திப்படங்கள். ஒவ்வொன்றும் ஒரு puzzle போலத் தெரியும். பார்க்கும்போது குறிப்புகள் சில சமயம் எழுதுவார். வெளியில் வர, டீயுடன் தொடங்கும் விமர்சனம், சட்டென்று நிற்கும்போது படம் நம் சிந்தனையில், பார்வையில், காட்சி-அலகுகளாகப் பிரிந்து இணைந்திருக்கும். படம் எடுக்கப்பெறும் முறையும் அதன் வரலாறும்கூட அப்படி அபூர்வமாகப் பிரிந்து தெரியும். படத்தின் மீது ஜான் நிகழ்த்திய செய்த மார்க்ஸிய-அமைப்பியல்வாத உரையாக இதை இன்று என்னால் உணர முடிகிறது. இப்படியாக பம்பாய், சென்னைப் படவுலகத் தயாரிப்பு முறைகளை என் முன்னால் மிக எளிதாக அலசிவிடுவார். ஒருவேளை என் எஃப் டி ஸி தயாரிப்பில் ஜானால் படம் எடுக்க முடியாததும் இதனால்தானோ என்னவோ...

பிறகு ஜான் புனே நகர், கேரளம் சென்றுவிட்டார்.

1984-ஆம் ஆண்டில் நான் பெங்களூர் வந்த காலகட்டத்த்துக்குப் பிறகு, ஜான் கேரளத்தின் வீதிநாடகங்களில் பங்கேற்றதாகவும் ஒடெஸ்ஸா இயக்கம் என ஒன்றைத் தொடங்கி, திரைப்படங்களை மக்களுக்காகத் திரையிட்டு, மக்களிடமிருந்தே நேரடியாக உதவிபெற்றுப் படங்களை எடுக்கப்போகிறார் என்ற செய்தி வந்தது.

ஜானின் மாற்றுவழியும் மாற்றுசினிமாவும் இணைந்தது அம்ம அறியான் என்ற அவருடைய பெயர்பெற்ற இறுதிப்படத்தில். 1972-ஆம் ஆண்டில் வெளியான ஸ்வயம்வரம் என்ற அடூர் கோபாலகிருஷ்ணனின் படத்துக்குப் பிறகு மலையாளத்தில் அதிக சர்ச்சையைக் கிளப்பிய படம் இதுதான் என்று நினைக்கிறேன்.

(இறுதிப்பகுதி பிறகு வெளியாகும்)


நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை - 1

படங்கள்

உஸ்கி ரோட்டி, 27 Down, அம்ம அறியான் திரைப்படங்களிலிருந்து

1 comment:

sarwothaman said...

27 DOWN என்ற படத்தின் கதை கோணங்கியின் 'அப்பாவின் குகையில் இருக்கிறேன்' கதையை நினைவுபடுத்தியது.

நன்றி,
ச.சர்வோத்தமன்.