3.6.08

நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை - 1

நாடகத்திரைக்கும் அரசியலுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருந்துவரும் அதீத உறவைக் குறிப்பதான ஆதார நாள் மீண்டும் இன்று.

நவீனத்திரைக்கும் அரசியலுக்கும் இடையில் வேறென்ன உறவு சாத்தியம் என்பதை அண்டை மாநிலத்திலும் தற்போது காணாமல் போன ஒருவரை எடுத்துக்காட்ட வேண்டியிருக்கிறது.

ஆம், ஜான் ஆப்ரஹாம் மரித்து சரியாக இருபத்தோரு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. மரித்த நாள், மே 31, 1987.

எண்பதுகளின் தொடக்கத்தில் பம்பாய் நகரில் சில ஆண்டுகள் இளைஞனாக நான் வாழ்ந்த போது என் அறையில் தங்கியிருக்கிறார் ஜான். அப்போது சில பழைய ஹிந்திப்படங்களை ஒன்றாகப் பார்த்துமிருக்கிறோம். இன்று அதைப் பேசப்போவதில்லை. ஜான் இறந்த சில வாரங்களில் சென்னையில் அவருக்கு அஞ்சலிக்கூட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன். அதையும் இன்று பேசப்போவதில்லை.

இன்று ஜானின் படங்கள் பற்றி மாத்திரம். தம் படங்கள் மூலமாக மட்டுமே அவர் நம்மிடம் இன்று பேசுகிறார்.

தமிழ்நாட்டுக்கும் ஜானுக்கும் தொடர்பு நிறைய. கும்பகோணத்தில் எல்ஐஸி ஊழியராக இருந்த ஜான், அதைவிட்டு புனே சென்று திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தார். ஜானின் குரு, ரித்விக் கட்டக். ஸீனியர் மாணவர்கள், அடூர் கோபாலகிருஷ்ணன், மணி கௌல், குமார் ஷஹனி. இந்த நால்வரின் படங்கள் பல, எப்போதும் புதிதாகப் பொருள்கொள்ளத்தக்கவை.

ஜானின் முதல் படம் ஆங்கிலத்தில் - கொய்னா நகர் (1967). அடுத்த படம், ஹிந்தியில் - ப்ரியா (1969). புனே கல்லூரி பட்டயப்படிப்பை நிறைவு செய்யும் படம். மூன்றாவது படம், ஆங்கிலத்தில், Hides and Strings (1969). மூன்றையும் தொண்ணூறுகளில் புனேவில் வைத்துப் பார்த்திருக்கிறேன்.

நான்காவது படம், ஜான் சென்னையில் வசித்தபோது எடுத்தது. இதுவே ஜானின் முதல் மலையாளப்படம். வித்யார்த்திகளே இதிலே இதிலே (1971).

கதை என்றால், பள்ளியில் கால்பந்தாட்டம். ராஜு என்ற மாணவன் பந்தடித்து, பள்ளி நிறுவனரின் சிலை உடைந்துவிடுகிறது. சிலை ரிப்பேர் செய்யப் பணம் தர வேண்டும் இல்லையேல் பள்ளியிலிருந்து விலக்கப்படுவான் ராஜு என்ற நிலை. மாணவர்கள் ஒன்றிணைந்து ஷூ பாலிஷ் செய்து, லாட்டரி டிக்கெட் விற்றுப் பணம் சேர்க்கிறார்கள். தலைமையாசிரியருக்கு இது பிடித்துப்போகிறது. நிர்வாகமே சிலையை ரிப்பேர் செய்கிறது. மாணவர்கள் சேர்த்த பணத்தில் சுற்றுலா போக அவர் ஏற்பாடு செய்கிறார். மீண்டும் கால்பந்தாட்டத்தில் சிலை உடைகிறது.

இந்தப்படத்தில் அடூர் பாஸி, ஜெயபாரதி, எஸ். பி. பிள்ளா தவிர மனோரமா, எஸ். வி. ரங்காராவ் போன்ற தமிழர்கள் கொண்டாடும் நடிகர்களும் இருந்தார்கள். ஆனால் தமிழர்கள் இந்தப்படத்தைப் பேசுவதில்லை.

அண்மையில் ஜெயமோகன், தேர்வு என்ற நீண்ட பதிவில் மகன் அஜிதனின் பள்ளிவாழ்க்கை குறித்து எழுதியிருக்கிறார். இந்தப் படம் வந்தபோது நானும் அவரும் எங்களைப் போன்றவர்களும் மாணவர்களாக இருந்திருப்போம். மாணவனான நான் இந்தப்படம் பற்றி தமிழ்ப்பத்திரிகை ஒன்றில்தான் வாசித்து, நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மைலாப்பூரிலிருந்து சைக்கிளில் வடபழனிவரை போய்ப் பார்த்திருக்கிறோம். ஜெயமோகனும் எப்போதாவது பார்த்திருப்பார். எழுதியுமிருக்கலாம், தெரியவில்லை. இப்போது எழுதியிருப்பதிலிருந்து அஜிதனின் அனுபவத்தைவிட எங்களுடையது பரவாயில்லை என்று மாத்திரம் தெரிகிறது.

ஜானின் ஒரே தமிழ்ப்படம், அக்ரஹாரத்தில் கழுதை (1977). மறைந்த இசைக்கலைஞர் எம். பி. சீனிவாசன் நடித்த முக்கியப்படமும் இதுவாகத்தான் இருக்கும். வெங்கட் சாமிநாதன் ஜானுடன் இணைந்து திரைக்கதை எழுதினார். இந்தப்படத்தை சுந்தர ராமசாமி உள்ளிட்டவர்கள் விமர்சனமும் செய்திருக்கிறார்கள்.

அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்குக் கிட்டியது சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருது. எம்ஜியார் முதல்வராகப் பதவியேற்ற அநத ஆண்டில் தமிழ்நாடு அரசின் விருது யாருக்குக் கிடைத்திருக்கும் என்பது சுவாரசியமான விஷயமாக இருக்கலாம். தவிர, அக்ரஹாரத்தில் கழுதை படம் திரையிடப்படுவதை, தமிழ் மசாலா நாடகத்திரை மற்றும் அரசியலின் தூண்களில் ஒருவராக இருந்து அமைச்சரானவர் தடுக்க முயன்று வெற்றியும் பெற்றார். படத்தின் தூர்தர்ஷன் ஒளிபரப்பு தடுக்கப்பெற்றது. கைங்கர்யம், பிராமண ஆதிக்கவாதிகளுடையது. ஆக, பார்ப்பன-திராவிட மணிகள் இணைந்து தடுத்தாண்ட ஒரே படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

இப்போது வைணவ இலக்கியப்பரிசு வழங்கி வருபவர் இந்தத்தூண். அந்நாளில் கலையைச் சிதைக்கிற முயற்சியில் வெற்றி பெற்றவர் இவர் என்பதை, புளகாங்கிதத்துடன் இவர் கையிலிருந்து பரிசு வாங்கும் ஆழ்வார்க்கடியோர் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போதாவது நீங்கள் பார்த்தாக வேண்டும் என்பதால் கதையைக் கூறாமல் விடுகிறேன். DVD கிடைக்கிறது. அதில் 'ஜோண்' என மூன்றுசுழி 'ண்' போட்டிருக்கிறது.
நவீன ஃப்ரெஞ்சு இயக்குநர் ராபர் ப்ரெஸ்ஸோனின் Au Hazard Balthazar என்ற படம் ஜானை நிச்சயம் தாக்கியிருக்கிறது என, இருபடங்களிலும் இறந்துகிடக்கிற கழுதையின் மூக்கை வைத்துத் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஜானின் மீதி இரண்டு படங்கள் - செரியாச்சன்டே க்ரூர க்ருத்யங்ஙள் (1979), அம்ம அறியான் (1986) பற்றிப் பிறகு.

9 comments:

ஜமாலன் said...

ஜான் ஆப்ரஹாம் தனது இறுதிக் காலத்தில் மக்களிடம் வாங்கிய பணத்தில் மக்களுக்கான படம் எடுக்கப்பட வேண்டும் என்று அதற்கான முயற்சியல் இருந்தவர் என்று படித்திருக்கிறேன். அவருடன் ஆன உங்கள் அனுபவ அறிமுகம் நன்றாக உள்ளது. இருந்தாலும் உங்கள் பள்ளி வாழ்க்கை ஒப்பீட்டின் நகைச்சுவை அருமை.

மோகன்தாஸ் said...

பிரமீளைப் பற்றிய நினைவோடையில் சு.ரா இவரைப் பற்றி எழுதியிருந்த நினைவு.

குறிப்பிட்ட படம் எங்கே கிடைக்கும் என்பது போன்ற விவரங்கள் கொடுத்தால் இன்னும் தேடுவதற்கு வசதியாக இருக்கும்.

நன்றி.

நாகார்ஜுனன் said...

நான் வாங்கியது கொச்சி மட்டாஞ்சேரிப் பகுதியில் ஒரு DVD கடையில்.

நீங்கள் சென்னைவாசி என்றால், நிழல் திருநாவுக்கரசு அவர்களைத் தொடர்பு கொள்க. உதவி கிட்டலாம்.

முகவரி -
31/48, ராணி அண்ணாதுரை நகர்,
சென்னை 600078.
செல்பேசி: 94444 84868

நாகார்ஜுனன் said...

தம் அம்ம அறியான் படத்துக்கென மக்களிடமிருந்தே ஜான்
நிதி திரட்டியது பற்றி, ஒடெஸ்ஸா இயக்கம் பற்றி மேலும் வாசிக்க விரும்புவோர் ஜான் ஆப்ரஹாம் - கலகக்காரனின் திரைக்கதை
என்ற காஞ்சனை சீனிவாசன் எழுதிய புத்தகத்தை நாடலாம். நிழல் வெளியீடு.

sarwothaman said...

வெங்கட் சாமிநாதன் தன் அக்ரஹாரத்தில் கழுதை சினிமா பிரதியில் திரைப்படத்தை பார்த்த போது ஏமாற்றம் அடைந்ததாக குறிப்பிட்டிருப்பார்.தொழில்நுட்ப ரீதியில் இத்திரைப்படம் சிறப்பாக அமையவில்லை.அவர் இதை தெரிந்தேதான் செய்திருக்கிறார்.ஏன் அப்படி?

நன்றி,
சர்வோத்தமன்.

சன்னாசி said...

ப்ரெஸ்ஸோனின் au hasard balthazar பற்றி சில காலம் முன்பு எழுதிய ஒரு சிறு குறிப்பு...

கழுதைகளின் பார்வை மிகக் குழப்பமடையச் செய்யும் ஒன்று.

பைத்தியக்காரன் said...

அன்புள்ள நாகார்ஜுனன்,

இதுதான் என்றில்லாமல், பன்முகமாக நினைவுகளும், சிந்தனைகளும் அலைமோதுகிறது...

ஜான் ஆப்ரஹாம் குறித்து அங்கொன்றும், இங்கொன்றுமாக படித்தது, வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள டீ கடையில் தேனீர் அருந்தியபடி பிரமிள் பேசியது, வெங்கட் சாமிநாதனின் விமர்சனம், சு.ரா.வின் குறிப்பு... ஜானை போலவே ஒடெஸ்ஸா இயக்கம் ஆரம்பிக்கலாம் என நண்பர்களுடன் தீவிரமாக பேசியது...

என அனைத்துமே இந்தப் பதிவை வாசிக்கும்போது என்னை சூழ்கிறது.
ஏசி அறையின் குளிர்ச்சியில் ஒடெஸ்ஸா இயக்க கனவு கருகுவதை பார்த்துக் கொண்டிருப்பதை தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை.

நிமிர்ந்து நின்றவனுக்கும், முதுகெலும்பு வளைந்தவனுக்குமான இடைவெளி அதிகம்தான்.

நீங்கள் எப்படிப்பட்ட மனநிலையில் இதை எழுதியிருந்தாலும், வாசிக்கும் நான் நெகிழ்ச்சியடைந்தது உண்மை. ஒருவேளை அது பிம்பங்களின் அரசியல் சார்ந்ததாக இருக்கலாம்.

நாகார்ஜுனன் said...

சர்வோத்தமன்

ஜான் வரித்துக்கொண்டது, முழுமை தவறுகிற ஒருவகை கச்சா, கரட்டு அழகியல். செவ்வியல், நாட்டுப்புறம், பழங்குடி, நவீனத்துவம் எனப் பலவகையும் முட்டிமோதும் இந்தியப்பரப்பில் ரித்விக் கட்டக்கில் தொடங்கி ஜான் வரை இப்படி ஒரு பயணம் நிகழ்ந்திருக்கிறது. வெங்கட் சாமிநாதனும் இதை அறிந்தவர் என நினைக்கிறேன்.

ஆக, படத்தை இந்தக்கோணத்தில் மீண்டும் பார்க்கலாம்.

நாகார்ஜுனன்

நாகார்ஜுனன் said...

சன்னாசி

உங்கள் சிறுகுறிப்பை வாசித்தேன்.

கழுதையின் மௌனத்தின் பொருளை, மற்றவர் போல ஏசுநாதரின் தியாகமாக உடனே பாராமல், இடைநிறுத்தியிருப்பது நன்று.

திரை பற்றி எழுத கண்-செவி இரண்டுக்குமான சமன்பாட்டில்
பழக வேண்டும். நாடகத்திரை பழகிய தமிழராகிய நாமோ செவிப்புலன் அடிமைகள்.

இன்னொரு விஷயம் - அக்ரஹாரத்தில் கழுதை படம் போலவே பால்தஸார் படத்துக்கும் எழுத்தின் தொடர்பு உண்டு. படத்தில் மாரியை விரும்பும் கொடூரமான வணிகராக நடித்திருப்பவர் ஃப்ரெஞ்சு எழுத்தாளர் பியர் க்ளோஸ்ஸோவ்ஸ்கி. ஓவியரும் கூட. ழார் பத்தாய் போன்றவர்களுடன் இணைந்து இயங்கியவர். நீட்ஷ, ஹைடெக்கர் ஆகியோர் பற்றி நிறைய எழுதியவர் மற்றும் ஃபூக்கோவின் முன்னோடி. தமிழில் இவர் பற்றி வந்திருக்கிறதா தெரியவில்லை.

நாகார்ஜுனன்