பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுபெற்ற என் ஆசிரியர் தமிழவன் அளித்து, ஒன்பது ஆண்டுகள் முன்பு ஆறாம் திணை இணைய இதழில் வந்த் நேர்காணல் இது. இங்கே மறுபதிவாக இடப்படுகிறது.
எண்பதுகளில் என் பெங்களூர் வாசத்தின்போது அங்கு வந்து நண்பர் ப. கிருஷ்ணசாமியுடன் தங்கிய க.நா.சு.-வுடன் படிகள் குழுவினர் நடத்திய நீண்ட விவாதத்தைப் படிகள் பத்திரிகையில் வெளியிட்டோம். தமிழவன் அன்று கேட்ட முக்கிய கேள்விகள், க.நா.சு அளித்த பதில்கள், தமிழுக்கு "வெளியே" இலக்கியவாதிகள் இயங்க வேண்டிய தேவை பற்றி நாங்கள் விவாதித்த பல விஷயங்கள் ஆகியவற்றை இந்த நேர்காணலிலும் காண முடிகிறது -
க.நா.சு மூலம் பரவிய இலக்கியக்கல்வி பற்றிக் கூறுகிறீர்கள். இந்தக்கல்வியை நீங்கள் நாடியிருக்கிறீர்கள். அது போல் பிற மரபுத் தமிழ் ஆசிரியர்கள் ஏன் செய்யவில்லை?
இது முக்கியமான ஒரு விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஒருவகையில் பார்த்தால் க.நா.சு. மூலம் பரவிய இந்த இலக்கியக்கல்விக்குள், மெளனி (தம் படைப்புகள் மூலம்) பரப்பிய இலக்கியப்பார்வையும் புதுமைப்பித்தன் (தம் படைப்புகள் மூலம்) பரப்பிய இலக்கியப்பார்வையும் அடங்கும். மெளனி கூடுதலாய் நம் சித்தர்கள், திருமூலர் போன்ற தத்துவ மரபிலும் வருவார். மெளனி இன்றுவரை தமிழ்ச்சமூகத்தால் ஏற்கப்படாததுக்கு இன்றைய தமிழ்ச்சமூகம் பழமையில் உள்ள பூடகத்தன்மையை இழந்து அம்மணமாய் நிற்பதையே காட்டுகிறது.
புதுமைப்பித்தன், க.நா.சு. பிரதிநிதித்துவப்படுத்திய சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய இரு மரபுகளையும் பிரச்சாரம் செய்பவர். அப்புறம் நவீனத்துவம் என்ற மாடர்னிலும் கால் வைத்ததும் க.நா.சு. பரப்பிய இலக்கியக்கல்வியின் மூலமாகத்தான். 
இப்ப உங்க கேள்விக்கு வாரேன். தமிழாசிரியர்கள் இந்த நூற்றாண்டில் மறைமலை போன்றோர் பரப்பிய பழைமை + மேற்கத்திய + சமஸ்கிருத வெறுப்பு மரபில் வருபவர்கள். பூடகமான சங்க கால உள்ளுறை மரபை மறந்தவர்கள் என்று கருதுகிறேன். க.நா.சு.வின் சமஸ்கிருதத்தைத் தமிழாசிரியர்கள் ஏற்காமலேயே இலக்கியத்துக்கு வந்திருக்கலாம். ஓரளவு புதுமைப்பித்தனின் சமஸ்கிருத எதிர்ப்பு மரபுக்கும் உதாரணம் பார்க்கும் போது ஒரு விஷயம் துல்லியமாத் தெரியுது. அதாவது தமிழ்க்கல்வி மரபு மாடர்னிஸத்தை ஏற்கத்தயாராக இருக்கல்லே. மாடர்னிஸத்தின் வாழ்வு வெறுப்பு, துக்கம், நிராசை, உள்பார்வை போன்றவற்றை இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட நவீன தமிழ்க்கல்வி ஏற்கவில்லை...
இவைதான் காரணமா, இன்னும் வேறு ஏதாவது?
தமிழ்க்கல்வி இந்த இருபதாம் நூற்றாண்டில் இரண்டுவிதமாக அமைப்பு பெற்றிருக்கிறது. ஒன்று ஆங்கிலம் இல்லாத வித்வான் கல்வி. மற்றது இங்கிலாந்தின் ஆங்கிலக்கல்வி மாதிரியில் உருவான பட்ட வகுப்புக்கான நவீனமயப்படுத்தப்பட்ட தமிழ்க்கல்வி. எனக்கென்ன தோணுதுன்னா, வித்வான் கல்வியின் தோல்விதான் நம்மைப் பாழாக்கிட்டதா... அதாவது, வித்வான் படிப்புக்கான தமிழ்க்கல்வியை ஆங்கில மோகிகளான தமிழ்த்தலைவர்களும், திராவிட அரசியல் நிழலில் வந்த பதவியாசை பிடித்த பேராசிரியர்களும் கெடுத்ததோடு தமிழ்க்கல்வி வளத்தை இழந்தது.
நான் தமிழ்க்கல்வி என்று சொல்வது, எந்தக்கல்வி ஜோதி ராமலிங்கத்தை உருவாக்கியதோ அந்தக்கல்வியை. அந்தக்கல்வி வளமான தமிழ்க்கல்வி. அந்தக்கல்வி மேற்கையும் கிழக்கையும் சமமா கருதக்கூடியது. எஜமான மனப்பான்மை அற்றது. இந்த வளத்தை வித்வான் கல்வியிலிருந்து நீக்கி, வெறும் மனப்பாட மரபாகவும் தண்டியலங்காரம், யாப்பு, தொல்காப்பியம் என ஒரு உயிரோட்டம் இல்லாத பாடத்திட்ட மரபாகவும் ஆக்கிவிட்டவர்களை ஏழேழு தலைமுறைக்கும் தமிழ் மன்னிக்காது.
எனவேதான் இன்றுகூட தமிழ்க்கல்லூரிகள் கம்ப்யூட்டர் கல்வியை நாடுகின்றன. நவீனப்படுத்தலுக்கும் மேற்குமயப்படுத்தலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இவர்கள். இந்த நோய்க்கூறிலிருந்துதான் இலக்கிய அறியாமை தோன்றியது. இலக்கியம் இங்கிலீஷில்தான் உண்டு என்று மறைமலையைப் போல் தப்பாக நினைத்துவிட்டார்கள் எல்லோரும்.
க.நா.சு. போன்றோர் பழந்தமிழைத் தவறவிட்டுத் தவறுசெய்தாலும் இந்தியாவில் பெரும் பாரம்பரியம் கொண்ட சமஸ்கிருதத்தை ஏற்றதாலும் சுயப்பார்வையொன்றை வளர்த்ததாலும் தப்பிவிட்டார்கள். ஆனால் ஆங்கிலப் பேராசிரியர்கள் புதியதாய் வரும் ஆங்கில நூல்களை சுயமாக நல்லதா, கெட்டதா எனக் கூறத் தெரியாமல், யாரோ ஒருத்தருடைய மேற்கோளைக் காட்டிக் கட்டுரை எழுதுவதை க.நா.சு நேரில் சொல்லிச்சிரித்ததை அவரிடம் பரிச்சயம் உள்ளவர்கள் நினைத்துப் பார்க்கலாம். ஆனா, க.நா.சு.-வைத் தலைவரா ஏற்பதை - பிராமண எதிர்ப்பு தமிழகத்தில் நியாயத்துக்காகவே தோன்றிய சமூக இயக்கமாய் ஆனதால் - அது வந்து தடுத்து நிறுத்தியது.
இதனால் ஐம்பது அறுபதுகளில் அதாவது திமுக உச்சக்கட்டத்தை எட்டிய காலங்களில் - தற்காலத் தமிழ்ப் படைப்பில் பிராமணர்கள் மட்டுமே வளமான படைப்புகளைத் தரும்படியாயிற்று. இப்படிப் பார்க்கையில் திராவிடப்பரம்பரைதான் தற்காலத் தமிழிலக்கியத்தைப் பிராமணர்களுக்குரியதாக ஆக்கியது. தாங்கள் சினிமா, பத்திரிகை போன்ற அதிகம் பண வரவுள்ள ஊடகங்களுக்குப் போயினர். இவர்களோட சில பிராமணர்களும் இருக்கத்தான் செய்தனர். அது புறனடை. இந்தச் சமூக இயக்கம் எழுபதுகளின் பின்பாதியிலிருந்து சரியாயிற்று. தற்கால இலக்கிய விமரிசனம், படைப்பு போன்றவற்றில் பிராமணர் அல்லாதார் வந்தனர். இவர்கள் க.நா.சு. மூலம் இலக்கியம் கற்ற கசடதபற பத்திரிகைக்குப் பிந்தி அரங்குக்கு வந்தார்கள்.
இவ்வளவு நேரம் நான் சொன்ன வரலாற்றில் இருக்கிறது உங்களுக்கான பதில்.
க.நா.சு.விடம் இருந்து ஏன் தமிழாசிரியர்கள் தற்கால இலக்கியக் கல்வியைக் கற்கவில்லை என்பதற்கு...
க.நா.சு. போன்றோரின் மார்க்சிய அணிக்கெதிரான சில பார்வைகளும் மார்க்சியர்களின் அன்றைய முரட்டுத்தனமான சோவியத் வழிப்பட்ட இலக்கியப்பார்வையும் கூட க.நா.சு.வுக்கும் படைப்பிலக்கியத்துக்கும் எதிரான மனநிலையை உருவாக்கியுள்ளது. மார்க்சியர்கள் பொதுவாய் மாடர்னிசத்தை ஏற்பதில்லை என்ற தவறான சோவியத் கண்ணாடிப் பார்வையையும் இங்கே குறிப்பிட வேண்டும். அடோர்னோ மற்றும் ஃப்ராங்க்பர்ட் மார்க்சியர்கள், மாடர்னிஸத்தை ஏற்கும் மார்க்சியர்கள் என்ற விஷயம் இன்றுவரை தக்கமுறையில் வந்து சேரவில்லை. இப்படி மொத்தத்தில் க.நா.சு. தமிழ்ச் சூழலில் மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட வேண்டும். அதனால் நாம் மறந்த, அல்லது கவனிக்காத விஷயங்கள் சர்ச்சைக்குட்படும் என்பது என் கணிப்பு. அப்புறம் க.நா.சு. தேவையில்லை என்றால் வீசி விடலாம். ஏனென்றால் தனது இறுதிக் காலத்தில் மார்க்சியத்தோடு தனக்குச் சண்டையில்லை என்று படிகள் பத்திரிகைப் பேட்டியில் என்னிடம் சொல்லியுள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் இந்த மாதிரி சமஸ்கிருத மரபையும் ஏற்று உருவான க.நா.சு.வைத் தமிழ் இலக்கியக்கல்வி சுவீகரிக்க வேண்டும் என்று கூறுவது நீங்கள் தமிழ்க்கல்வி கற்ற சூழலா அல்லது பல ஆண்டுகளாய் வேறு மாநிலத்துச் சூழலில் பணியாற்றுவதாலா?
நான் தமிழ்க்கல்விக்குப் போனது, தி.மு.க.வின் இந்தி எதிர்ப்பு மனோநிலையில் பாதிக்கப்பட்டு இளங்கலையில் விஞ்ஞான பாடம், எம்.ஏக்குத் தமிழ். மதுரைப்பல்கலைக்கழகம் நான் தமிழ் எம்.ஏ. படிக்க லாயக்கில்லை என்று சொன்னதால் கேரளத்துக்குப் போனேன். அங்கு ச.வே.சு. வரவேற்றார். துறைத்தலைவராய் இருந்த வி.ஐ. சுப்ரமணியம் புதியமுறையில் தமிழ் ஆய்வைத் தனது மாணவர்கள் மூலம் செய்ய ஊக்கம் கொடுத்த சூழல். ப.ரா. சுப்பிரமணியம், தாமோதரன், இளவரசு, குளோரியா சுந்தரமதி இப்படி ஒவ்வொரு துறையில் புதிய ஆர்வம் கொண்டவர்கள் எனக்கு ஆசிரியர்கள் ஆனார்கள். கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, இளமையான இந்த ஆசிரிய-ஆய்வாளர்களையும் பெற்றதோடு, புதிய ஆராய்ச்சி பற்றிய அனைத்துலக ஆர்வத்தை வெளிநாட்டில் படித்து வந்த வி.ஐ.சு. தலைமையில் ஊக்கப்படுத்தியதால் தமிழகத்தில் அன்று இல்லாத புதிய பரிமாணத்தையும் பெற்றிருந்தது.
நாட்டுப்புறவியலில் மொழியியலில் தத்துவத்தில் தற்கால இலக்கியத்தில் விமரிசனத்தில் எல்லாம் புதிய விஷயங்கள் அன்று அங்கே கிடைத்தன. இது விஞ்ஞானப்பட்டதாரியான எனக்குக் கவர்ச்சியாகப்பட்டன. ஆனால் தமிழகத்தில் வெறும் திராவிட உற்சாகம் மட்டுமே பெருக்கெடுத்தோடியது. அன்றைய காலகட்டத்தில் தமிழ்த்துறைகள் ஓரிரு தனிநபர்களைத் தவிர எப்போதும் ஒரு வறண்ட பாலைவனம் தான். இந்தப்பாலைவனத்திலிருந்து தப்பக்கூடியவர்கள் ஒன்றில் மார்க்சிய ஈடுபாடு உள்ளவர்களாய் இருப்பார்கள். அல்லது தமிழ்த்துறைக்கு வெளியில் உள்ள சிறுபத்திரிகை அல்லது நாடகக் குழுக்களோடு சம்பந்தப்பட்டவர்களாய் இருப்பார்கள்.
ஆக, நான் சொல்ல வருவது, நான் தமிழ் இல்லாத இளங்கலையிலிருந்து வந்து, தமிழுக்கு வெளியில் உள்ளவர்களால் பாதிக்கப்பட்டு, தமிழகத்துக்கு வெளியில் உள்ள கலைஇலக்கியப் பார்வைகளால் உருவானவன்.
இந்த இடத்தில் தமிழ்ப்பண்பாட்டுத் தலைவர்கள் நின்று நிதானித்து யோசித்துப் பார்க்கணும்னு கேட்டுக்கறேன். மொத்தமாய்த் தமிழ்க்கல்வியின் மையம் சிருஷ்டிபரமானதில்லன்னு சொல்லலாமா? அப்படின்னா இந்தப்பெரும்பாரம்பரியம் - தமிழ் இலக்கிய வரலாறு - எப்படி சாத்தியமாச்சு. வெங்கட்சாமிநாதன் கோபமாக அந்தக்காலத்தில் சொன்னது போல தமிழ்மரபு வெறும் பாலைவனமா இல்ல; நான் சொல்றது ஆங்கில மாதிரியில் காலனியாதிக்க பிரமையால் தமிழ்க்கல்வியை எங்கேயோ நாம தவற விட்டிருக்கிறோம். என்னைப்போல் நாளை வரக்கூடிய இளைஞன், தமிழின் பிரதிக்குள்ளிலிருந்து நான் தப்பி விளிம்பில் சஞ்சரித்ததால் பிழைத்தேனென்று சொல்லக்கூடாது. கன்னடம், மலையாளம் போல, அவன்/அவள் தமிழ் படிச்சு நான் சிறந்த படைப்பாளியா, சிந்தனையாளனா வந்திருக்கேன்னு சொல்லணும்.
எனக்கு இந்திய மரபும் பிற மாநில, இலக்கிய மரபும் வாய்ச்சது. எனக்கு இன்று சுதந்திரமாக மூச்சுவிட முடியும். கன்னடத்தில் என் நூல் படிக்கிறாங்க. அவங்களுக்கு நான் அந்நியமாகவில்லை. அனைத்திந்தியாவும் பேசும் இலக்கிய பரிபாஷையை நான் ஏன் தமிழ்த்தன்மையை இழக்காமக் கையாள முடியும்.
இங்க விளக்கத்துக்கு என் அன்புநண்பர் ஜெயமோகனைப் பத்தி ஞாபகம் வருது. அவரும் என்னைப் போல, இன்னொரு மொழியைத்தான் பரிபாஷையாகப் பயன்படுத்தி மலையாளத்தில் தமிழ் பற்றியும் தமிழில் மலையாளத்தின் பரிபாஷை பயன்படுத்தியும் எழுதுகிறார். ஆனால் அவர் தமிழின் அனைத்திந்திய பரிபாஷையை வைதீக மரபுகளில் இருந்து மட்டும் இனம் காண்கிறார் போலுள்ளது. இந்த 'மட்டும்' என்பது முக்கியம். தமிழுக்கு அளவதிக மரபும் உண்டு. அத விட்டுட்டா தமிழ் அடையாளம் பாழாயிடும். இந்தத் தமிழ் அடையாளம் இன்று அனைத்திந்தியாவுக்கும் அளவதிக மரபு மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கு ரொம்பத் தேவை.
ஆக, ஒரு விஷயம் தெளிவாகத் தொடங்குது, பார்த்தீங்களா? அதாவது ஆங்கிலக் காலகட்டத்தில் தன்னைப் பாதுகாக்க அட்டை போல, அல்லது ஆமை போல உள்ளிழுத்துச் சுருங்கிப் போய் இறுகிவிட்டது, தமிழ். இந்த இறுக்கத்தை நாம் தளர்த்தணும். அத உடையாம மெதுவா, தட்டிக்கொடுத்து, அதே நேரத்தில் கொஞ்சம் கண்டித்துக் கொஞ்சம் உள்-ஆளாகவும் அதே நேரத்தில் வெளி-ஆளாயும் நின்றுதான் செயல்பட வேண்டியிருக்கு.
இப்ப தமிழ்த்துறைகள் ஏன் பயனற்றுப் போயிற்று தற்கால பிரக்ஞைக்கு என்பதை விளக்கிவிட்டேனா? ஏன், மொழியியல் போன்றது எல்லாம் வந்தாச்சேம்பாங்க. இப்ப நான் சொல்றது எந்த மொழியில் வந்தாலும் தமிழ்போல உள்சுருங்கும் ஒரு வஸ்துவாத்தான் மாறுது. தமிழின் அபார சக்தியும் அதன் கதிர்வீச்சும் வெளிப்படணும். தமிழின் உள்கரு, தீக்குழம்பு, அந்தத் தீச்சுவாலை பக்தி காலத்தில, சங்க காலத்தில, சிற்றிலக்கிய காலத்தில, பிழம்பா ஆயிருக்கு. கடந்த சிலகாலமா நமக்குள்ள ஆற்றல் மங்கிப் போயிட்டுது. தமிழ்க் கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், தமிழின் உயிர்த்துவத்தக் காப்பாத்தற நிறுவனங்களாக வரணும்.
நீங்கள் குறிப்பிடும் இந்தக் கடந்த காலம் என்பது எப்போதிலிருந்து ஆரம்பமாகுது?
இந்தக் கடந்த காலம் மேற்கத்தியர்கள் வரவிலிருந்து ஆரம்பமாவதாக நான் பார்க்கிறேன். அதாவது ஜி.யு.போப், கால்டுவெல் போன்ற ஐரோப்பியத் தமிழ்த் தொண்டர்கள் காலத்திலிருந்து ஆரம்பமாகுது. ஆங்கிலேயேர்கள் ஆட்சியும், அவர்களின் அறிவும் மிகவும் வலிமையாக வந்தவைகள். நம் மொழி போன்ற சாதாரண ஆட்சியதிகாரமற்ற மக்கள் மொழியை ஆட்சி மொழியான ஆங்கிலம் போல மாற்றிய இந்த சுமார் 150 ஆண்டுகாலம் ரொம்பவும் சிக்கலான காலகட்டம்.
தமிழ்மொழிக்கான அகராதிகள் எழுத ஆரம்பித்த உடனேயே இந்த அதிகாரக் கட்டமைப்புத் தொடங்கிவிட்டது. தமிழ், வெள்ளைக்கார ஆட்சியாளர்களுக்கானதாக ஆக்கப்படுகிறது. ஆக, நம் தமிழ் படிப்புமுறை வேறு. அது இன்று புலவர் கல்லூரிகளில் மங்குகிறது. ஆங்கிலத்துறைகளின் முறைக்கு முன்னால் நம் குடுமி வைத்த மாணவர்களுக்கு நிற்க முடியுமா? இதுதான் திராவிட ஆட்சி காலகட்ட, அதுக்கு முந்திய ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்குள்பட்ட, தமிழ் சார்ந்த நிலைமை.
இன்று தமிழ்மொழி, திராவிட மனோபாவத்தால் அழிக்கப்பட்டதற்கான பின்னணியை இங்கிருந்துதான் நாம் கண்டுபிடிக்கணும். திராவிட தத்துவத்துக்குள் வந்து சேர்ந்த ஆங்கில மோகம் களையப்படணும். கால்டுவெல்லுக்கு இதில் நிறைய பங்கு இருக்கிறது. திராவிட இன அடையாளத்தில் இருந்த சுயத்துவம் பாதுகாக்கப்பட வேண்டிய அதே நேரம்
ஆங்கிலத்துவம் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இங்கே நான் சொல்லும் காலம் என்பதை ஒரு போக்கானதாக - லீனியராக - எடுக்க வேண்டாம். ஏனென்றால் இக்காலத்திற்குப் பிந்தி வந்த பாரதியை ஒதுக்க முடியாது. பாரதி இந்தியப் பண்பாட்டின் பலத்தைத் தாங்க வைத்தவர். தமிழகம், பாரதம் என்பதை முரண்பட்டவைகளாய்ப் பார்க்காததால் அவருக்கு ஆங்கில மரபுக்குள் தஞ்சம்புகத் தேவையிருக்கல்லே. பாரதத் தொடர்பற்ற தமிழ் அடையாளம் கட்ட விரும்பியவர்களுக்கு, சங்ககாலம் என்ற பழைமையிலோ அல்லது ஆங்கிலத்திலோ போய் சார்ந்து நிற்க வேண்டியதாயிற்று. சுய பண்பாட்டை மறந்த வெளிச்சாய்வு மலட்டுத்தனமான விளைவுகளையே தரும்.
திராவிட மரபின் சங்க காலச் சாய்வு பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா?
ஒரு மண்ணில் சலனம் ஏற்படுது. ஆங்கிலம் வருது. எல்லோரும் வெள்ளைக்காரங்களாகவா மாற முடியும்? எனவே தனது சுயமரபு ஒன்று உள்ளே சக்தி பெறுது. ஆங்கிலம் என்ற தொடர்பு மூலம் நாம் பெற்ற உள்சக்திதான் சங்க இலக்கிய மரபை நாம் மீள் கண்டுபிடிப்பு செய்தது. உ.வே.சா. என்ற சமஸ்கிருத மரபில் வந்த ஒருவர் தான் இந்தக்காரியத்தச் செய்ய வேண்டியதாகிறது. பிராமணரல்லாதாருக்கு ஒரு மரபு வேண்டியதாகிறது. இதில் மறைமலையடிகள் சைவத்தையும் சங்க இலக்கியத்தையும் பற்றிக் கொள்ள, நாத்திகர்கள் சங்க இலக்கியத்தையும் ஆங்கிலத்தையும் பற்றினார்கள்.
இந்த இரண்டாவது குழுவினர் அரசியலில் சக்தி வாய்ந்தவர்களாக மாறியதால், இவர்கள் 'மரபற்றவர்கள்' ஆனார்கள். முதல் திமுக மந்திரிசபை தான் முந்தைய காங்கிரஸ் மந்திரிசபையை விட அதிகம் பண ஊழல் செய்தார்கள் என்பார்கள். அதாவது எந்த 'மரபிலும்' வராதவர்களுக்கு ஒழுக்கம் இருக்காது. திராவிட மரபால் சிறந்த தற்கால இலக்கியத்தைத் தர முடியாததற்கு இதுதான் காரணம்.
திராவிட மரபில் என்னை இனங்காணும் நான், திராவிடப் பண்பாடு பற்றிய அறுவைசிகிச்சையை இப்படித்தான் செய்து பார்க்கிறேன். திராவிடப் பண்பாட்டை மதிக்கும் நான் இதைச் செய்வது தவிர்க்க இயலாதது. தமிழ்க்கல்வி தெரிந்தோ தெரியாமலோ, நாத்திக மரபில் தொடர்ந்தது. தத்துவத்திலும் மரபிலும் சைவ மரபில் வந்திருந்தால் நாம் இன்னும் காணும் சோகை நோய் தமிழில் வராமல் இருந்திருக்குமோ என்று நினைத்துப்பார்க்கிறேன். திராவிட மரபு பழைமையை நாட, தற்காலத்தை அது இழந்தது. ஆங்கிலத்தை நாட, அது சுயத்தை இழந்தது. சங்ககால நாட்டம், தமிழ்க் கல்வியாளர்களுக்கு சடங்காக மாறிற்று.
இந்தப் பின்னணியில் தமிழ் ஆராய்ச்சியின் பாய்ச்சல்கள் யாவை?
வையாபுரிப்பிள்ளை, பாரதி போல பாரதத்தினைத் தன்னுடைய பண்பாட்டுப் பின்புலமாக வைத்ததால் அவரது ஆய்வுகள் - சில பொருந்தாமைகள் இருந்தாலும் - முக்கியமாயின. பிறகு கைலாசபதி மற்றும் சிவத்தம்பி நீங்கள் சொல்லும் பேரா. கணபதிப்பிள்ளை (இவர் பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை) சமீபத்தில் பாண்டிச்சேரி PILC வெளியிட்ட ஜி. சுப்பையாவின் சங்க இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சி போன்றவைதான் புதிய பாய்ச்சல்கள். பெரிய இழப்பு, திராவிடக்குழுவினர் இங்கு எந்தப் பங்களிப்பும் செய்யாமல் போனதுதான்.
இப்படியான உங்கள் பார்வைகளுக்கு உங்கள் கன்னடச்சூழல் எந்தளவு காரணம்?
கன்னடச்சூழலிலிருந்துதான் ஆங்கிலத்தின் எதிர்மறை பற்றி நான் தெரிந்து கொண்டேன். நண்பர் ஜெயமோகனும் இந்த ஆங்கில எதிர்ப்பைக் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன். அவர் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இதைக்கொண்டு வருகிறார். ஆக, ஒரு விஷயம் தெளிவாகிறது. தமிழின் மையத்தில் ஆங்கில எதிர்ப்பு ஆரோக்கியமான முறையில் சாத்தியமில்லை.
ஆட்சியில் இருக்கும் திராவிட மனோபாவம் கொண்டவர்கள் ஆங்கில மழலையர் பள்ளிக்கு ஆதரவாக ஏன் இருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா? திராவிட மனோபாவத்தை நாம் கட்டுடைப்புச் (காலனியாதிக்க உணர்வற்ற விதமாய்) செய்ய வேண்டும். ஆங்கிலச் சாய்வற்ற திராவிடம், தமிழின், இந்தியப்பிராந்தியங்களின் சிருஷ்டித் தன்மையைப் பெறும். மண்குணத்தை ஏற்கும். இந்தத் திராவிடம் க.நா.சு.வை ஏற்கும். மொத்தத் தமிழிலக்கியமும் சிருஷ்டித்தன்மை கொள்ளும். க.நா.சு.வை ஏற்கும் மார்க்சியம் சாத்தியமானதென்றால், க.நா.சு.-வை ஏற்கும் திராவிட உணர்வு ஏன் சாத்தியப்படாது?
இன்னொன்று திராவிட உணர்வில் மண்ணின் மணம் இல்லை. அதனால் தானோ என்னவோ, திராவிடக் கட்சிகள் குமரி மாவட்டத்தில் கால் வைப்பதில்லை. குமுதத்தைக் குமரி மாவட்டத்தின் 60 சதவிகிதம் படித்தவர்கள் ஏற்பதில்லை. நானும் குமரி மாவட்டத்தின் மண்ணில் பிறந்தவன் என்பதால் திராவிடத்தைச் சுத்திகரிப்பு செய்து மண்ணின் மணத்தை ஊட்ட உரிமை உண்டு.
குமரி மாவட்டத் தமிழ் கொச்சையும் மலையாளமும் கலந்தது. படைப்பு ஆற்றல் கொண்டது. திராவிடத்தின் எந்திரத் தமிழின் படைப்பாற்றலின்மையைக் குமரியின் மண்குணமான கலப்புத் தமிழ் மாற்ற முடியும். இதுபோல் கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் போன்ற பல தமிழ்கள் திராவிட எந்திரத்தனமான அடுக்குமொழித் தமிழுக்குள் நுழையும் போது நாம் விரும்பும் அனைத்துத் தமிழர்களின் திராவிடப் பண்பு தமிழ்க் கலாசாரத்தில் மலரும்.
எனவே, பழைய திராவிடக் கலாசாரவாதிகளில் இருந்து புதிய திராவிட கலாசாரவாதிகள் தோன்ற வேண்டும். எனவே நான் சொல்வது இதுதான். திராவிடத்தமிழ் என்ற வடக்குத் தமிழ்நாட்டு மரபை, அனைத்துத் தமிழர்களின் மரபாய் இன்னும் ஆக்கவில்லை. அப்படி ஆக்கும் போது பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நான் தமிழகத்திற்கு வெளியில் இருப்பதால் கண்டுபிடித்தது இதுதான்.
இந்த இடத்தில் தமிழ் என்பது இந்தியத் தமிழ் இலக்கியம் என்றே கணிக்கப்படுகிறது. ஆக, தமிழ் இலக்கிய வரலாறும் தமிழக இலக்கிய வரலாறாகவே ஆகி விடுகிறது.
இந்தப்பார்வையை ஏற்றுக் கொள்கிறீர்களா?
இல்லை. இது ஒரு குறுகிய பார்வைதான். தமிழ் என்றால் வடக்குத் தமிழ்நாட்டுத் தமிழ் என்ற பார்வைதான் பழைய திராவிடப் பார்வையில் இருந்தது. இதனுடன் பிராந்தியங்களின் நாட்டுப்புறக் கலாசாரங்கள், கிராம தெய்வங்கள், வழிபாடுகள், கதைகள், பாட்டுக்கள் என நாம் எல்லாத்தையும் இழந்தோம். கொச்சைத் தமிழ் என்ற புறக்கணிப்பால் வட்டாரத் தமிழின் அழகை தமிழ் இழந்தது. ஆக, திராவிட மாயையால் வட்டாரங்களையும் இழந்தோம். அது போல் அனைத்துலகத் தமிழ்ப் பரிமாணத்தையும் இழந்தோம். இதில் செழிப்பு ஈழத்தமிழ் வரலாறு. ஈழத் தமிழுக்கும் இந்தியத் தமிழுக்கும் நடுவில் உள்ள ஊடாட்டம் சரியாகக் கணிக்கப்படும் வரை அனைத்துலகத் தமிழ் என்ற சமீபகாலமாய் உருவாகி வரும் ஒரு புதிய உண்மையை அறிய முடிகிறது.
இப்படியான அனைத்துலக புது இலக்கியப் பார்வையை நாம் அங்கீகரிக்கிறோம் என்றால், அதற்கான இலக்கியப்பாடத்திட்டம் எப்படி அமையும்? கர்நாடகத்தில் கன்னட முதுகலைத்துறையில் பணியாற்றி பல கன்னட மாணவர்களுக்கு பிஎச்.டி. போன்ற பட்டங்களுக்கு மேற்பார்வையாளராய் இருக்கும் தாங்கள் மேற்குறித்த கேள்விக்கு என்ன பதில் தருகிறீர்கள்?
கன்னட எம்.ஏ. மாணவர்களுக்குப் பல முக்கியமான தற்கால மைல்கல்கள் என்று கணிக்கப்படும் அகில உலக இலக்கியவாதிகளின் படைப்புகள் பாடமாய் அமையும். தாமஸ் ஹார்டியின் Return of the Native என்ற நாவலில் இருந்து மார்க்வெஸின் சிறுகதைகள் வரை கற்பிக்கிறோம். மார்க்வெஸ் கதைகளை இரண்டு ஆண்டுகளாய் நான் கற்பிக்கிறேன். அதாவது 21, 22 வயது மாணவன் மார்க்வெஸ் கதையை அணுகும் விதம் அபாரமாக என்னைக் கவர்கிறது. தமிழ் எம்.ஏ. மாணவன் இந்த நோக்கில் கன்னட எம்.ஏ. மாணவனின் முன் சூனியம். இது ஏன் என்று யோசிக்க வேண்டும்.
இப்படி தற்காலத் தன்மையற்றவனாய் தமிழ் மாணவனும் அவனது பாடத்திட்டமும், அவனைக் கற்பிக்கும் ஆசிரியனும் ஆகிப்போனதற்கு இனி என்ன செய்ய வேண்டும் என்ற உங்கள் கேள்வி கவனத்தை, எதிர்காலத்தை நோக்கி திசைதிருப்புகிறது. இது சரிதான். இனி தமிழிலக்கியக் கல்வி, புதிய தமிழனின் அனைத்துலகப் பரிமாணத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தக் கவனம் :
1. தற்கால இலக்கியத் தன்மையை அறிவதோடு தற்காலப் படைப்புகளை உருவாக்கும் பயிற்சியையும் பெற வேண்டும். இதற்கு ஒரு சங்கேதமாக புதுமைப்பித்தன், க.நா.சு. போன்றோரை நம் மரபு உள்வாங்க வேண்டும். இந்த இருவரின் தாத்பரியங்களின் அடிப்படையில் மொத்த 2000 ஆண்டு தமிழ்ப்பிரதிகளும் மறுவாசிப்புக்குட்பட வேண்டும்.
2. உலக மொழிகளான ஃப்ரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய பிரதான மொழிகளோடும் இந்திய அளவில் சமஸ்கிருதம், இந்தி போன்றவற்றோடும் கொடுக்கல் வாங்கல் உறவை ஏற்படுத்த வேண்டும்.
3. தமிழின் மரபை, இறுக்கத்திலிருந்து விடுபட வைத்து வளர் மரபோடு இனம் காண வேண்டும். அதாவது மரபு வேண்டும்.
4. இலக்கியப்பயிற்சி இல்லாத தமிழாசிரியர்களைப் பயிற்சி பெற வைக்க வேண்டும்.
5. புலம் பெயர் இலக்கியத்தை அனைத்து மட்ட தமிழ் மாணவனும் கற்க வேண்டும்.
6. இதுவரையிலான இந்தியத் தமிழ் மையத்தை விமரிசித்து அதன் லாபங்களைப் பெற்று நஷ்டங்களை நிராகரிக்க வேண்டும்.
7. மொத்தத்தில் பிற எந்த உலக மொழிக்கும் சளைத்ததாய் இன்றைய தமிழ் இல்லை என்பதை இலக்கியம், விமரிசனம் என்ற இரு தரப்பிலும் நிலைநாட்ட வேண்டும்.
8. அனைத்துலக அளவில் பரவியுள்ள ஈழத்தமிழ் எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையும், பேராசிரியர்களையும் கொண்ட குழுவின் தலைமையில் இந்தியத் தமிழ் ஆர்வலர் ஒன்றிணைய வேண்டும்.''
இது ஒரு பண்பாட்டு இயக்கமாய் உருவம் கொள்வதாய்த் தெரிகிறதே...
ஆமா. இனி இலக்கியம் வெறும் ஒருதலைபட்சமான தூய இலக்கியம் என்ற சிமிழுக்குள் அடங்காது. இலக்கியம் பொதுவான பண்பாட்டுப் பரிமாணத்துடன், இலக்கிய நுட்பங்களைக் கொஞ்சமும் களையாத பார்வை கொள்கிறது இங்கே. இலக்கியம் எப்போதுமே ஒரு பண்பாட்டு இயக்கம்தான்; அதுவும் மூன்றாம் உலகமான நம் நாடுகளில் இலக்கியம் பண்பாட்டு வடிவங்களாகவே தொடர்ந்து செயல்படும். அந்த வகையில் மேற்கத்திய இலக்கியக் கருத்தாக்கம் இந்திய, தமிழ்ச்சூழலில் அல்லது பிற எந்தத் தென்னாசிய, ஆப்பிரிக்கச் சூழலிலும் மாறுபடும். நம் சூழலில் அது பண்பாட்டை விட்டுச் செயல்பட முடியாது.
இன்று இலக்கியத்தை மேற்கில் பண்பாட்டு ஆய்வு (Culture Studies) என்று நாமகரணம் சூட்டிப் பல்கலைக்கழகங்களில் ஆயும் புதுமுறையைக் கண்டுபிடித்துள்ளார்கள் என்றாலும், நம் இலக்கியப் பண்பாட்டு ஆய்வு புதுமுறையிலானது. தமிழிலக்கியக் கல்வியும் இந்த புதுமுறைமையைக் கைக்கொண்டால் தமிழின் குறைகள் நீங்கி, 21-ஆம் நூற்றாண்டுக்கான புது வாழ்க்கைக்குத் தகுதியான தமிழியல் கல்வி வடிவம் பெறும்.
இது நடக்கும் என்று கருதுகிறீர்களா?
தமிழகத்தில் ஆய்வைப் பொறுப்பெடுத்து நடத்தும் நிறுவனங்களின் தலைவர்களை அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கும் முறையைக் கவனித்தால் இது நடக்காது. ஆகையால், யாழ்ப்பாணம் அல்லது உப்ஸலா போன்ற புதுத்தமிழ் ஆய்வு வாய்ப்பு அதிகமாக இருக்கும் இடங்களில் இந்தப் புதிய தமிழ்க் கல்வியும் புதிய இலக்கியப் பார்வையும் போஷிக்கப்பட வேண்டும். ஈழப்போராட்டம் பண்பாட்டுத்தளத்தில் நடத்தும் போராட்டம் இது என்று கருதுகிறேன்.
அடுத்த நூற்றாண்டில் இந்திய மையத் தமிழ் மெல்லச் சாகும். பாரதி அன்று சொன்னது போல் புதிய தமிழிலக்கியம், புதிய தமிழ்க்கல்வி, புதிய விழிப்புணர்ச்சி, புதிய இலக்கிய விமரிசனம் போன்றவை உயிர்ப்பு கொள்ளும். இந்தியப் பல்கலைக்கழகங்களின் மூடிப்போன தமிழ் ஆராய்ச்சி, வரலாற்றுப்பார்வை, மேற்கத்திய அனுசரணை மொழியியல் இவை எல்லாம் வெறும் எச்சங்கள் ஆகும்.
படங்கள் - தமிழவன்.
க.நா.சு, மௌனி, புதுமைப்பித்தன், வையாபுரிப்பிள்ளை, சிதம்பரம் ராமலிங்கம், பிரமிள், நகுலன், சி. சு. செல்லப்பா.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
28.5.08
இலக்கியக்கல்வி அழிந்ததும் பரவியதும் - தமிழவன்
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(159)
-
▼
07
(11)
- இசையும் தொன்மமும் - 1 - க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ்
- லால்கர் - இடதுசாரிகளின் பதில் என்ன? - தலையங்கம்
- மறைந்த வ.அய்.சுப்பிரமணியன் பற்றி தமிழவன்
- இரவு முகம் மேலே - 4 - ஹூலியோ கொர்த்தஸர்
- இரவு முகம் மேலே - 3 - ஹூலியோ கொர்த்தஸர்
- இரவு முகம் மேலே - 2 - ஹூலியோ கொர்த்தஸர்
- இரவு முகம் மேலே - 1 - ஹூலியோ கொர்த்தஸர்
- கதையாடல்களின் சுழற்சியும் நிறங்களின் புதிர்மையும் ...
- புலிகளின் பொன் - ஜோர்ஜ் லூயி போர்ஹெ
- பதிவுகளும் நானும் ட்விட்டரும்
- பிறிதான புலி - ஜோர்ஜ் லூயி போர்ஹெ
-
►
06
(16)
- மீண்டும் சாரு நிவேதிதாவுக்குக் கடிதம்
- நெஞ்சத்து அவலம் இலர் - 2
- கனாப்புலிகள் - ஜோர்ஜ் லூயி போர்ஹெ
- இலங்கை அரசை ஆதரிக்கும் க்யூபா, பொலிவியாவுக்குக் கண...
- தமிழாக்கமும் ஆங்கில ஆக்கமும் - கடிதம்
- நெஞ்சத்து அவலம் இலர் - 1
- பூத சதுக்கம் புக்கனர் மயங்கி - 2
- நிலவின் உருமாற்றம் - ஸில்வியா ப்ளாத்
- சாவாளும் புலம் அறுக - டிலன் தோமஸ்
- பூத சதுக்கம் புக்கனர் மயங்கி - 1
- எங்கு? - பௌல் ஸெலான்
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு...
- நிலப்பரப்பு - பௌல் ஸெலான்
- குற்றமே போலாகும் காலம் - ப்ரெக்ஹ்டும் ஸெலானும்
- கறுப்பாய் - பௌல் ஸெலான்
-
►
05
(17)
- மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு ...
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்ட...
- ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
- மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை
- சரண்-பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகள் என்னிடம் கோ...
- இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்.....
- உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்
- கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
- குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
- ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா
- எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
- இன்றைய கொடூரத்திலிருந்து உருவாகும் தமிழ்-உண்மை - த...
- அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
- முகாம் என்பது யாது? - 2 - அகம்பென்
- பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்
- தூதுவர் - ஸில்வியா ப்ளாத்
-
▼
07
(11)
பகுப்பு
- ஃபூக்கோ (17)
- ஃப்ரெஞ்சு (141)
- அகம்பென் (4)
- அஞ்சலி (20)
- அணுசக்தி (9)
- அறிவியல் (39)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (13)
- இணையம் (10)
- ஈக்கோ (2)
- ஈழம் (45)
- உரைமொழி (4)
- ஊடகம் (43)
- ஓவியம் (2)
- கடிதம் (25)
- கண்டனம் (1)
- கவிதை (165)
- குறியியல் (2)
- சாம்ஸ்கி (4)
- சிந்தனை (106)
- சிற்பம் (2)
- சீனம் (3)
- சூழலியல் (20)
- செயல் (82)
- ஜெர்மன் (9)
- திரை (20)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (5)
- நடனம் (2)
- நட்பு (14)
- நேர்காணல் (9)
- பயணம் (11)
- போதலேர் (39)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (3)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (7)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (51)
- லண்டன் (10)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (4)
- வரலாறு (136)
- வரைமொழி (91)
- வானொலி (3)
- விழியின் கதை (6)
- ஸில்வியா (36)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸார் (2)
- ஸ்பானிஷ் (15)
1 கருத்துகள்:
ஒரு முக்கியமான தமிழ்பண்பாடு சாரந்த பிரச்சனையை இப்பேட்டியில் முன்வைக்கிறார் பேரா. தமிழவன். அவரது பார்வையில் உள்ள அக்கறை மற்றும் புதிய பண்பாட்டு ஆய்வுகளுக்கான புலம் பற்றிய பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக திராவிடம் தோல்வியடைந்து நீர்த்துப் போகச் செய்த தமிழ் பண்பாட்டை ஒரு காத்திரமான தளத்திற்கு நகர்த்த வேணடியதற்கான பார்வை இதில் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக
”ஒரு சங்கேதமாக புதுமைப்பித்தன், க.நா.சு. போன்றோரை நம் மரபு உள்வாங்க வேண்டும். இந்த இருவரின் தாத்பரியங்களின் அடிப்படையில் மொத்த 2000 ஆண்டு தமிழ்ப்பிரதிகளும் மறுவாசிப்புக்குட்பட வேண்டும்.”
இது ஒரு அவசியமான பணியாக உள்ளது புதிய தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு.
சரியான தருணத்தில் செய்யப்பட்ட இந்த மீள்பதிவிற்கு நன்றிகள்.
Post a Comment