பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

26.5.08

கோணங்கி இந்தியா டுடேவுக்கு எழுதுவது...


இந்தியா டுடே
தமிழ் தேசிய செய்திப்பத்திரிகை

Member of the Indian Newspaper Society

31. 8. 1996

அன்புள்ள கோணங்கி அவர்களுக்கு

வணக்கம்!

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா டுடேவின் சார்பில் இலக்கிய மலர் வெளியிடுவதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஆண்டுக்குரிய இலக்கிய மலரை அடுத்த மாதத்தில் வெளியிட இருக்கிறோம்.

இந்த ஆண்டு இலக்கிய மலரில் தங்களின் சிறுகதையை வெளியிட ஆவலாக உள்ளோம்.

தாங்கள் சிரமம் பாராது ஒரு வாரத்துக்குள் சிறுகதை ஒன்றை அனுப்ப விழைகிறோம்.

அன்புடன்

வாஸந்தி
ஆசிரியர்

Living Media India Limited, 98A, Dr. Radhakrishnan Salai II Floor, Mylapore, Madras 600 004. Tel 831605 (4 Lines) Telex 41-6175 INTOIN Cable LIVMEDIAMS Fax 832178.
---------------------------------------------------------------------------------------------------

இந்தியா டுடே ஆசிரியர் வாஸந்தி அவர்களுக்கு

எழுதும் கதையை என்றுமே இந்தியா டுடே வகையான பெரும்பத்திரிகைகளுக்கு அனுப்ப முடியாத கோணங்கி.

கைமூலம் எழுதப்பட்ட உங்கள் கடிதம் கிடைத்தது. என் கதையைப் பிரசுரிக்கும் ஆர்வம் இருந்தது கடிதத்தில். உளப்பூர்வ நன்றி.

மெக்கானிக்கல் க்ளேஸ் காட்டில் வெட்டப்பட்ட இந்தியா டுடேவின் பக்கங்களில் அச்சடித்த பின்னும் எழுத்துகள் மறைந்து வெற்றுக்காகிதங்களாக உருமாறும் மாயத்தை என் கதைகள் கொண்டிருப்பதால் அனுப்பமுடியவில்லை கதைமலருக்கு.

சமீபத்தில் மேட்டூரில் இலக்கிய அமைப்புகள் மூன்று இணைந்து நடத்திய நவீன சிறுகதைகளுக்கான திறந்த உரையாடலில், எழுதிய கட்டுரையை ரூபாய் ஐயாயிரம் செலவுசெய்து அச்சிட்டு விலையில்லா கதாச்சுருளாக விநியோகித்துவிட்டு, வழிச்செலவுக்கு ரூபாய் இருநூறு வாங்கி வருவதையே இலக்கியம் என்பேன்.

கிழக்கே வெகுதூரம் போய் சூனியக்காரிகளிடம் கேட்டும் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதால் அனுப்ப முடியவில்லை இலக்கிய மலருக்கு.

இதற்குமேலும் என் கதையைப் பிரசுரிக்கும் ஆர்வம் இருக்குமானால் வெளிவந்த என் நான்கு தொகுதிகளான மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் ஆகியவற்றிலிருந்து பிடித்த ஒன்றைப் பிரசுரிப்பதற்கு முன் தெரிவித்துவிட வேண்டும் எனக்கு.

ஆக,

கோணங்கி
கோவில்பட்டி
------------------------------------------------------------------------------------
படங்கள் - கோணங்கி, என் துணைவியார், மகளுடன்

சிற்றிதழ்களின் திசை - கேள்வியும் பதிலும்

4 கருத்துகள்:

சன்னாசி said...

என்விரலால் எழுதநேர்ந்த முன்கதைகளின் வார்த்தைகளைச் சிலுவையாகத் தூக்கிச்சென்றேன் பல சந்தர்ப்பங்களில். என் நிழலே விழாத கதையை முன்னும் பின்னும் எழுத நேர்ந்தது. எதார்த்த உருக்கள் கரைந்து வேறு ரூபம் கொள்ள இருந்ததும் என்னை விட்டு விலக நேரும் போது நடக்கிறது. அடைத்துக்கொண்ட எழுத்தாளனின் பிம்பமோ கதா மந்திரப் பரப்பை சிதைக்கவும் வசீகரம் இழக்கவும் பயன்படுகிறது. பிரதி முக்கியமென்றாலும் கற்பனையான ஒன்றிலிருந்து துவங்கி குருதியில் இறங்குகிற உப்புக்கத்திகளாக வார்த்தைகளை கவனமாக விட்டுச் செல்வது எழுத்தாளன் மட்டும்தான்.

நாகார்ஜுனன் said...

விரலற்றவனின் நிழல்ரூபம் நீள, இந்தக் கடிதம் பற்றிச் சொன்னேன், கிழக்கில் மறைந்த சூனியக்காரிகளிடம் கதைகேட்டு வந்தவரிடம். ஐந்து ராசிகளை சனிக்கிரகம் கடந்த இக்காலம் தாண்டி வெளிவந்த கடிதங்களை நினைத்துச் சிரித்தவர் சொன்னது - இருள்வ இந்த மௌத்திகம் வாசித்துப்பார், இல்லையேல் பரல் சிந்தும் கண்ணீர் மாரி உடலிலும் மூன்று வாரம் பயிராய் வரும்.

நாகார்ஜுனன்

RP RAJANAYAHEM said...

A chief event of life! Vaasanthi had stumbled upon a "MAN" who startled her!

Konangi has his own way!
I feel nostalgic now. How are you my dear Konangi!

R.P.RAJANAYAHEM

நாகார்ஜுனன் said...

ராஜநாயஹம்!

பார்த்து எவ்வளவு நாளாச்சு... திருப்பூரில்தான் இருக்கீங்க இல்லியா..

நீங்க அனுப்பியிருக்கிற இந்த இரண்டையும் போடுகிறேன். இனி தமிழில் எழுதுங்க... ஆங்கிலத்தில் அப்பப்போ வார்த்தைகள் வருவது பிரச்னையில்லை.

நாகார்ஜுனன்

பதிந்தவை