பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

4.5.08

எல்டொராடோ பற்றி கார்ஸியா-மார்க்வெஸ்

"எல்டொராடோ – தங்கம் கிடைப்பதாக மிகப்பல ஆண்டுகளாக பல்வேறுவகை வரைபடங்களில் இடம்பெற்று வந்திருக்கிறது இந்த இடம்.

இப்படியாகத்தான் மெக்ஸிகோ நாட்டின் வடக்குப்பகுதியில் அல்வார் நூனஸ் கபெஸ்ஸா தெ வாக்கா, தம்முடைய வாழ்க்கையின் இளமைப்பருவத்தை எட்டு ஆண்டுகள் வரை தேடியபோது, அவருடன் சென்ற அறுநூறு பேரில் பரஸ்பரம் புசித்து மீண்டவர்கள், ஐந்தே பேர்...

இதைவிட மர்மமான விஷயம், குஸ்கோ பகுதியிலிருந்து தலா நூறு பவுண்ட் தங்கத்தை அடஹூவல்பாவுக்கான பயணத்தொகையாக ஏற்றிக்கொண்டு கிளம்பிய பதினோராயிரம் கழுதைகள் காணாமல் போனது! கொஞ்சக்காலம் பிறகு அங்கிருந்த வண்டல் மண்ணில் வளர்ந்து கார்டெக்னா தெ இண்டியாஸ் பகுதியில் விற்பனையான கோழிகளின் குடலில் சிறு தங்கக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது வேறு விஷயம்...

இப்படியாகத்தானே இன்றுவரை தொடர்கிறது, எங்கள் மூதாதையர்களின் தங்கப்பைத்தியம். உதாரணமாக, கடந்த நூற்றாண்டில் அட்லாண்டிக் கடலிலிருந்து பசிபிக் சமுத்திரத்துக்கு பனாமா வழி செல்லும் ரயில்பாதையைக் கட்டுவதற்காகும் செலவைக் கணிக்கச்சொல்லிக் கேட்டுக்கொள்ளப்பட்டது ஜெர்மன் குழு ஒன்று. பாதை போட இப்பகுதியில் இரும்பு கிடைக்காததால் தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கே வந்தது இந்தக்குழு...

ஸ்பானியர் ஆதிக்கத்திலிருந்து நாங்கள் விடுதலை பெற்ற பிறகும் தெளியவில்லை எங்கள் பைத்தியம். மூன்றுமுறை மெக்ஸிக்கோ நாட்டின் சர்வாதிகாரியாக ஆன ஜெனரல் அந்தோனியோ லோபஸ் தெ சந்தானா, 'கேக்' யுத்தத்தில் தாமிழ்ந்த காலைப் புதைக்க ஏற்பாடு செய்தார், விமரிசையாக...

ஈக்வடார் நாட்டைப் பதினாறு வருடங்களாக ஆண்டுவந்த ஜெனரல் காப்ரியேல் கார்சியா மெரெனோ என்பவரின் உடல், ராணுவச் சீருடையில் மெடல்களுடன் ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்தவாறே புதைக்கப்பட்டது...

எல் ஸால்வடோர் நாட்டை ஆண்டு முப்பதாயிரம் விவசாயிகளைக் கொன்றுகுவிக்க உத்தரவிட்டவர், ஜெனரல் மாக்ஸ்மிலியானோ ஹெர்னாண்டஸ் மார்த்தினெஸ். புதிய இறையியல் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தம்முடைய உணவில் விஷம் இருக்கிறதா என்பதைச் சோதித்துப்பார்க்க ஒரு பெண்டுலத்தையே கண்டுபிடித்தவர். ஒருவகை மஞ்சள் ஜுரம் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் தெருவிளக்குகள் மீது சிவப்புக்காகிதத்தை ஒட்ட ஆணையிட்டவர்...

...ஆக, பைத்தியம் பிடித்த ஆண்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெண்களும் வசிக்கும் எல்லையற்ற களம் லத்தீன் அமெரிக்கா. லத்தீன் அமெரிக்காவின் முடிவற்ற முரட்டுத்தனம் தொன்மமாகக் கலைவது இப்படித்தான்."

- ஸ்டாக்ஹோம் நகரில் காப்ரியேல் கார்ஸியா-மார்க்வெஸ் ஆற்றிய நோபல் பரிசு ஏற்புரையிலிருந்து, 1982.


மொத்த உரையும் என்னால் ஆங்கிலவழி தமிழில் ஆக்கப்பெற்று வெளியானது - லத்தீன் அமெரிக்காவின் பெயர்பெற்ற தனிமை, பறை இதழ், 1990, கும்பகோணம்.

வாசிக்கும்போது, மனித எத்தனங்களின் பின்னால் உள்ள சங்கற்பம், அதன் அபத்தம் பற்றிய ஆர்தர் ஷோப்பன்ஹரின் தத்துவப்புரிதலை நினைப்பது இயல்பே! இன்றைய எத்தனங்களில் என்ன வித்தியாசமிருக்க முடியும்!

0 கருத்துகள்:

பதிந்தவை