
லத்தீன் அமெரிக்க நாவல் பற்றி குந்தெரா - 1
ப்ராக் நகரில் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுடன் நடந்த அந்த சந்திப்பின் சில ஆண்டுகள் கழித்து ஃப்ரான்ஸ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தேன். அப்போது ஃப்ரான்ஸுக்கான மெக்ஸிக்கோவின் தூதராக இருந்தவர், கார்லோஸ் ஃபுயன்டஸ். ரென் (Rennes) நகரில் வசித்த நான் அவ்வப்போது பாரீஸ் நகர் செல்லும்போது தூதரகத்தின் மாடியில் வசித்த ஃபுயன்டஸுடன் தங்குவது வழக்கம்.
அப்போதெல்லாம் ஃபுயன்டஸுடனான காலை-உணவு நேரம், முடிவற்ற உரையாடலாக நீண்டுவிடும். சட்டென்று என் மத்திய ஐரோப்பா, லத்தீன் அமெரிக்காவின் எதிர்பாராத அண்டைப்புலமாக மாறிவிடுவதைக் கண்டேன். மேற்கத்திய உலகின் எதிரெதிர்த் திசைகளில் அமைந்த இரு விளிம்புகள் மத்திய ஐரோப்பாவும் லத்தீன் அமெரிக்காவும் - புறக்கணிக்கப்பெற்ற, வெறுத்து ஒதுக்கப்பட்ட, கைவிடப்பட்ட புலங்கள் இவை. ஐரோப்பாவின் வேலைப்பாடு மிக்க 'பரோக்' (Baroque) கலையின் கட்டிடங்களின் ஆழமான தாக்கத்தை ரணமாக அனுபவித்தவை, உலகின் இந்த இருபுலங்களும்.
இங்கே ரணம் என்ற சொல்லை நான் பாவிப்பதற்குக் காரணம், லத்தீன் அமெரிக்காவை வென்றவர்களின் கலையாகவே 'பரோக்' அங்கு வந்தது. கிறித்தவத்தின் எதிர்-மறுசீரமைப்பு (1) என்பது, இதே 'பரோக்' கலையை ரத்தம் சொட்டச்சொட்டத்தான் மத்திய ஐரோப்பாவுக்கு எடுத்துவந்தது. தின்மையின் நகரம் ப்ராக் என்று மாக்ஸ் ப்ரோட் (2) அழைத்ததும் இதையொட்டியே. ஆக, தின்மையும் அழகும் கலந்த மர்மமாக, லத்தீன் அமெரிக்கா, மத்திய ஐரோப்பா என உலகின் இந்த இரண்டு பகுதிகளையும் காணத்தலைப்பட்டேன் நான்.
இப்படி எங்கள் உரையாடல் மாறும், என் சின்னஞ்சிறு மத்திய ஐரோப்பாவுக்கும் ஃபுயன்டஸின்
பரந்துவிரிந்த லத்தீன் அமெரிக்காவுக்கும் இடையில் 'பரோக்' நூற்றாண்டுக்காலத்தின்மீது வானவில்லாக அமைந்த பாலமாக. ஒளிர்ந்து மினுமினுத்து நடுநடுங்கும் வெள்ளிநிறப் பாலம் அது. ப்ராக் நகரில் அமைந்திருக்கும் மத்தியாஸ் ப்ரவுன் (3) வடிவமைத்த பரவசச் சிலைகளையும் மெக்ஸிக்கோவின் பித்தம்பிடித்த தேவாலயங்களையும் இணைக்கும் பாலம் அது. 
இந்த உரையாடலின் போது இருபதாம் நூற்றாண்டின் நாவலின் வளர்ச்சியின் இரு முக்கிய கட்டங்கள் நிகழ்ந்ததும் எம் தாயகங்களில்தான் என்றுணர்ந்தோம். இது எம் தாயகங்கள் இடையிலான இன்னொரு பந்தம்! இதில் ஒரு கட்டம் நிகழ்ந்தது, 1920-1930 காலகட்டத்தில் மத்திய ஐரோப்பாவில் எழுதப்பெற்ற நாவல்களில் (இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நாவல் என ஃபுயன்டஸ் குறிப்பிடுவது, அந்தக்காலகட்டத்து வியன்னா எழுத்தாளர் ஹெர்மன் ப்ரோச்ஹ் எழுதிய உறக்க நடையாளர்கள் நாவலையே). இருபது முப்பதாண்டுகள் கழித்து என் சம காலத்தவரான லத்தீன் அமெரிக்கர்கள் எழுதிய நாவல்களில் நடந்தது இன்னொரு கட்டம்.
பிறிதொருநாள் கண்டறிந்தேன், எர்னெஸ்தோ ஸபாட்டோ (4)வின் நாவல்களை. அழித்தொழிக்கும் தேவதை என்ற இவர் நாவலில் பொங்கிவழிவது, ப்ரோச்ஹ் மற்றும் வியன்னாவில் வசித்த இன்னொரு பெரும் எழுத்தாளர் ராபர்ட் ம்யூஸில் (Robert Musil) ஆகியோரின் நாவல்களின் சிந்தனையே. குறிப்பாக, "நவீன உலகில், தத்துவத்தால் கைவிடப்பட்டும் நூற்றுக்கணக்கான விசேட அறிவியல்-துறைகளால் சிதறுண்டும்போனது இவ்வுலகு. முழு மனித வாழ்வை நாம் தழுவக்கூடிய இறுதி இடமாக, இறுதி வானியல்-ஆய்வகமாகத் தெரிவது நாவலே" என வெளிப்படையாகவே கூறுகிறது இந்த நாவல்!
இவருக்கு அரை நூற்றாண்டுக்காலம் முன்பே, இந்தப் புவிப்பரப்பின் எதிர்ப்பகுதியில் - அந்தப்பாலம் என் தலைமேல் ஏற்கனவே அதிர - உறக்க நடையாளர்கள் நாவலை இயற்றிய ப்ரோச்ஹும் குணங்களற்ற மனிதன் நாவலை எழுதிய ம்யூஸிலும் சிந்தித்ததும் இதுவே. அதாவது, கவிதைதான் அதிஉயர் கலைவடிவம் என ஸர்ரியலிஸ்ட்கள் தூக்கிய அதே காலத்தில் இந்த இருவர் அதே உயர்நிலையை வழங்கியதோ நாவல்-வடிவத்துக்கு.
ஃப்ரெஞ்சிலிருந்து மொழியாக்கம் - 2008.

அடிக்குறிப்புகள்
(1) எதிர்-சீரமைப்பு - கிறித்தவத்தில் புரோட்டஸ்டன்ட் அமைப்பினர் செய்த சீரமைப்புக்கு இணையாகக் கத்தோலிக்கத் திருச்சபை, பதினாறாம்-பதினேழாம் நூற்றாண்டுகளில் செய்த சீரமைப்பு - Counter-Reformation என அறியப்படுவது.
(2) மாக்ஸ் ப்ரோட் (1884-1968) - செக் மொழி எழுத்தாளர், ஃப்ரான்ஸ் காஃப்காவின் நண்பர், அவர் எழுத்துக்களைத் தொகுத்தவர்.
(3) மத்தியாஸ் ப்ரவுன் - 'பரோக்' காலகட்ட சிற்பி.
(4) தொண்ணூற்றெட்டு வயதாகும் அர்ஜென்டினிய எழுத்தாளர் எர்னெஸ்தோ ஸபாட்டோ. அணுபௌதிக ஆய்வாளாரகப் பணியாற்றிய இவர், இரண்டாம் உலகப்போருக்குப் பின் அறிவியலிலிருந்து விலகி எழுத்தில் ஈடுபட்டவர். தமிழில் இவர் பற்றிய விரியான அறிமுகம் வரவில்லை என்று நினைக்கிறேன்.
ஸபாத்தோவின் முதல் நாவல், சுரங்கப்பாதை (El Túnel,1948) - ஆல்பெர் காம்யுவால் வரவேற்கப்பெற்றது. குந்தெரா குறிப்பது, இவருடைய Abaddón el Exterminador (1974) என்ற பெயர்பெற்ற நாவலை. விஞ்ஞானிகள் வாசிக்க வேண்டியது, இந்த நாவல்.
படங்கள்
ப்ராக் நகரில் மத்தியாஸ் ப்ரவுன் வடித்த சிலை
மெக்ஸிக்கோ நாட்டில் ஸகாடகாஸ் நகரின் பிரதான கிறித்தவ ஆலயம்
ஸபாத்தோ நாவலின் முகப்பு
லத்தீன் அமெரிக்க நாவல் பற்றி குந்தெரா - 1
0 கருத்துகள்:
Post a Comment