பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

5.5.08

நாற்பதாண்டு முன்பான மாணவர் புரட்சி - 2

ஃப்ரான்ஸ் நாட்டில் அன்று மே மாதம் நடந்த மாணவர் புரட்சி, அரசியல்-நிகழ்வுகள் பற்றிய விபரங்கள், நாற்பதாண்டுத்திரை தூக்க, இதோ.

1968 மே மாதம் முன்பாக

ஜனவரி 8 - பாரீஸ் நகர் நாந்தெர் பல்கலைக்கழக மாணவர் போராட்டம். நீச்சல் குளம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் வெளியேறினார்.

ஜனவர் 26 - மாணவர் போராட்டத்தில் வன்முறை.

பிப்ரவரி 7 - வியத்நாமில் அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்பை ஆதரிப்போருக்கு எதிரான போராட்டம். மாணவர்-காவல்துறை மோதல்.

பிப்ரவரி 14 - கருத்து சுதந்திரம் வேண்டி ஃப்ரான்ஸ் நெடுகிலும் மாணவர் போராட்டம்.

பிப்ரவரி 22 - பல்கலைக்கழக நுழைவுக் கொள்கை தளர்த்தப்படுதல்.

மார்ச் 19 - கல்வித்துறை சீர்திருத்தம் பற்றிய மாணவர் கருத்தரங்கு.

மார்ச் 22 - நாந்தெர் பல்கலைக்கழக வளாகம் மாணவர் கையில். பாடங்கள் நிறுத்தம்.

ஏப்ரல் 12 - ஜெர்மன் மாணவர் தலைவர் ரூடி டட்ச்க மீது தாக்குதல். ஃப்ரான்ஸ் நெடுகிலும் மாணவர் போராட்டம்.

ஏப்ரல் 27 - நாந்தெர் மாணவர் தலைவர், இருபத்துமூன்று வயதான டானியல் கோஹ்ன்-பெண்டிட் கைது/

மே மாதத்தில்

மே 2 - பிரதமர் ழார் பாம்பிடு ஈரான், ஆஃப்கானிஸ்தான் பயணம். நாந்தெர் பல்கலைக்கழகத்தில் பாடங்கள் நிறுத்தம்.

மே 3 - பாரீஸ் ஸோர்பான் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாணவர்களைக் காவல்துறை வெளியேற்றியது. லத்தீன் சதுக்கத்தில் வன்முறை - 100 பேர் காயம், 596 பேர் கைது.

மே 4 - ஸோர்பான் பல்கலைக்கழகத்தில் பாடங்கள் நிறுத்தம். மாணவர் அமைப்புக்களின் வேலைநிறுத்த அறைகூவல்.

மே 5 - போராடிய மாணவர்கள் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு. நால்வருக்கு சிறைத்தண்டனை.

மே 6 - பாரீஸ் லத்தீன் சதுக்கத்தில் மாணவர்-காவல்துறை மோதல். 422 பேர் கைது. 345 காவல்துறையினர், 600 மாணவர்கள் காயம். பாரீஸ் மாணவர் போராட்டத்துக்கு ஃப்ரான்ஸ் நெடுகிலும் சக மாணவர் ஆதரவு.

மே 7 - பெயர்தெரியா ஃப்ரெஞ்சு சிப்பாய் நினைவகம் அருகே ஃப்ரெஞ்சு தேசிய கீதம் மார்ஸெய்யைஸ் பாடினர், 30,000 மாணவர்கள்.

மே 9 - பல்கலைக்கழகத் துறைகள் மீண்டும் திறக்க, கல்வி அமைச்சகம் தடை.

மே 10 - இரவு நெடுகிலும் லத்தீன் சதுக்கத்தில் மோதல்கள். 60 தடைகள் மீது காவல்துறை தாக்குதல். 116 மாணவர், 251 காவல்துறையினருக்கு மருத்துவமனையில் சிகிச்சை. மேலும் 720 பேர் காயம். 468 பேர் கைது. 60 கார்கள் தீக்கிரை. 188 பிற கார்கள்ள் சேதம். போராடும் மாணவர்கள், சட்டவிரோதக் கும்பல் என அமைச்சர் கண்டனம்.

மே 11 - வேலைநிறுத்தம் செய்வோம் என, தொழிற்சங்கங்கள் அறைகூவல்.

மே 13 - பொதுவேலைநிறுத்தம். ஸோர்போன் பல்கலைக்கழக வளாகம் மாணவர் கையில்.

மே 14 - மாணவர் போராட்டம் பற்றி தேசியப்பேரவையில் விவாதம். ஃப்ரெஞ்சு அதிபர் தெ கால், ருமானியா பயணம். நாந்தெஸ் நிறுவனங்கள், தொழிலாளர் கையில்.

மே 15 - ஓடியன் அரங்கம், மாணவர் வசம். ரேனோ கார் தொழிற்சாலை, தொழிலாளர் வசம்.

மே 16 - ஃப்ரான்ஸ் நெடுகிலும் வேலைநிறுத்தம். போக்குவரத்து சேவையில் வேலைநிறுத்தம். தினசரி ஏடுகள் வெளியாவதும் நின்றது.

மே 18 - ருமானியா சென்ற அதிபர் தெ கால் அவசரமாக நாடு திரும்பினார். கான் விழா வளாகம், திரைப்படத்துறைத் தொழிலாளர் வசம். விழாவிலிருந்து முக்கிய ஃப்ரெஞ்சு இயக்குநர்கள் விலகல். விழா நிறுத்தப்பட்டது.

மே 19 - வேண்டும் சீர்திருத்தம், வேண்டாம் ஊர்வலம் என்கிறார், தம் எலிஸீ மாளிகையிலிருந்தவாறே உரையாற்றும் அதிபர் தெ கால்.

மே 20 - ஒரு கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம். ஸ்தம்பித்தது ஃப்ரான்ஸ்.

மே 22 - நாடாளுமன்றத்தின் அரசு மீதான கண்டனத்தீர்மானம் 11 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி.

மே 24 - அரசுமீதான கருத்து வாக்கெடுப்பை அறிவிக்கிறார் அதிபர் தெ கால். மீண்டும் போராட்டத்தில் வன்முறை. 795 பேர் கைது. பாரீஸ் பங்குச்சந்தையைக் கொளுத்திவிட முயற்சி.

மே 25 - ஃப்ரெஞ்சு தேசிய வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் வேலைநிறுத்தம். பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதமர் பாம்பிடு அறிவிப்பு.

மே 27 - தொழிலாளர்-முதலாளிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு. குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டது. மீண்டும், மாணவர்-தொழிலாளர் கூட்டு ஆர்ப்பாட்டங்கள்.

மே 28 - கல்வி அமைச்சர் பதவி விலகல்.

மே 29 - ஃப்ரெஞ்சு ராணுவம் தயார் நிலையில்.

மே 30 - அதிபர் தெ கால், தேசியப்பேரவையைக் கலைத்தார். தேர்தல் வருமென அறிவிப்பு. பாரீஸ் நகரில் ராணுவப்பேரணி.

மே 31 - ஜூன் 23-30 நாட்களில் தேர்தல் என அறிவிப்பு.

ஜூன் 3 - தொழிற்சாலைகள் திறப்பு. கைதான மாணவர்களுக்குப் பொதுமன்னிப்பு.

ஜூன் 13 - மீண்டும் வன்முறை. ஓடியன் அரங்கம், ஸோர்போன் பல்கலைக்கழக வளாகங்களிலிருந்து மாணவர் வெளியேற்றம்.

ஜூலை 10 - தேர்தலில் வலதுசாரிகள் வெற்றி. ஆனால் பிரதமர் பாம்பிடு பதவி விலகல்.
102 பத்திரிகையாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுதல்.

1969 ஏப்ரல்-ஜூன் - அதிபர் தெ கால் பதவி விலகல். பாம்பிடு அடுத்த அதிபராகத் தேர்வு.

படங்கள் - பாரீஸ் புரட்சி, டானியல் கோஹ்ன்-பெண்டிட், மாணவர்களுடன் சார்த்தர்.

0 கருத்துகள்:

பதிந்தவை