பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

17.5.08

லத்தீன் அமெரிக்க நாவல் பற்றி குந்தெரா - 1


செக்கோஸ்லோவாக்கியா நாட்டை ருஷ்யப்படைகள் ஆக்கிரமித்ததை அடுத்த மூன்றுமாதக் காலம் அது. அதேவேளை செக் சமுதாயத்தின்மேல் ருஷ்யாவால் முழுவதும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை. நிரம்பப் பதற்றத்துடன் அதே நேரம் கணிசமான சுதந்திரத்துடன் செக் சமுதாயம் வாழ்ந்தது அந்த மாதங்களில். எதிர்ப்புரட்சி கருக்கொண்டு வளரும் இடம் என குற்றம்சாட்டப்பெற்ற செக் எழுத்தாளர் சங்கத்தால் இன்னமும் இயங்க முடிந்தது அப்போது. அதன் பிரிவுகள் இன்னமும் இருந்தன, சிற்றிதழ்கள் வெளியாயின, பிறமொழி எழுத்தாளர்களை விருந்தினராய் அழைக்கவும் முடிந்தது....

அப்படி செக் எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பின்பேரில் வந்தவர்கள், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மூவர்: ஹூலியோ கொர்த்தஸர், காப்ரியேல் கார்ஸியா-மார்க்வெஸ் மற்றும் கார்லோஸ் ஃபுயன்டஸ் (1). அதிகம் சலனமின்றி, எழுத்தாளர்களாக, நிலைமையைப் பார்க்க, சக எழுத்தாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தார்கள். மறக்கமுடியாத ஒருவாரம் அவர்களுடன் இருந்தேன் நான். நண்பர்களும் ஆனோம். அவர்கள் சென்றவுடனே, கார்ஸியா-மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டுகாலத் தனிமைவாசம் (2) நாவலின் செக் மொழியாக்கம் அச்சாகும்போதே வாசிக்கிற வாய்ப்பும் வந்தது எனக்கு.

நாவல்-கலை மீது ஸர்ரியலிஸ்ட்கள் இட்டிருந்த சாபம் என் நினைவில் வந்தது - கவித்துவத்துக்கு, மட்டற்ற கற்பனைக்கு எதிரானது நாவல் என்றார்கள் ஸர்ரியலிஸ்ட்கள். ஆனால், கார்ஸியா-மார்க்வெஸின் இந்த நாவலே ஓர் மட்டற்ற கற்பனை. நானறிந்ததில் அதிதீவிரக் கவிதை இந்த நாவலே. இதன் வாக்கியம் ஒவ்வொன்றும் கற்பனையென ஒளிர்வது, அற்புதமாக மிளிர்வது, நம்மைத் திடுக்குறச் செய்வது. ஆக, நாவல்-வடிவத்தைப் புறக்கணிக்கிற ஸர்ரியலிஸ அறிக்கையைத் திகைக்கச்செய்யும் சரியான பதிலடி, இந்த நாவல். அதே நேரம், கடந்த நூற்றாண்டு நெடுகிலும் எழுச்சிகொண்டு வீசிய ஸர்ரியலிஸத்துக்கான பிரமாதமான காணிக்கையாகவும் இருப்பது, இந்த நாவல்.

கவிதையும் உணர்வெழுச்சிவாதமும் சகோதரத்தன்மை கொண்டவை அல்ல, மாறாக உண்மையில் தனித்தனியே நன்கு பிரித்துவைக்கப்பட வேண்டியவை என்பதற்கு இந்த நாவல் அருமையான எடுத்துக்காட்டு. கார்ஸியா-மார்க்வெஸின் கவிதை, எவ்விதத்திலும் உணர்வெழுச்சியாகத் தெரிவதில்லை. ஆசிரியர் என்பவர் நடந்ததை ஒப்புக்கொள்ளும் தொனி இதில் வருவதேயில்லை. தம் ஆன்மாவை அம்பலத்துக்குக் கொண்டுவரும் தொனியுமில்லை. ஆக, எவ்வித போதையும் இதில் இருப்பதில்லை. மாறாக, புறவுலகை வேறொரு மண்டலத்துக்கு எடுத்துச்செல்கிறார் - அதில் எல்லாமே ஒரே சமயத்தில் எதார்த்தமாக, நம்ப இயலாததாக, மாயக்கற்பனையாக இயங்குகின்றன.

இன்னும் ஒரு விஷயம் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல்-வடிவம், தன்னை இயற்றுவதற்கான அடிப்படைக்கூறாகக் கைக்கொண்டது, காட்சியை, சித்தரிப்பை, சம்பவத்தை, நிகழ்வை. இதற்கு எதிர்த்திசையில் செல்கிறது, கார்ஸியா-மார்க்வெஸின் நாவல். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் காட்சிகளே இல்லை! அவை, கதையாடலின் போதையில், அதன் வெள்ளச்சுழல்களில், மூழ்கிப்போய்விடுகின்றன. வேறு எந்த நாவலையும் இப்படியான நடைக்கான எடுத்துக்காட்டாகக் கண்டதில்லை நான்.

அதாவது, பல நூற்றாண்டுகள் பின்னியங்கிச் சென்று, எதையும் விவரிக்க முயலாமல் அனுவதிப்பதை (3) மாத்திரமே - ஆனால் நாம் முன்கண்டிராத ஒரு சுதந்திரத்துடன் அனுவதிக்க மாத்திரமே - செய்யும் ஒரு கதைசொல்லியை (4), அடைகிறது இந்த நாவல்.

- Milan Kundera, Aller dans l'âme des choses, Le Rideau, 2005.
ஃப்ரெஞ்சிலிருந்து மொழியாக்கம் - 2008.

(இன்னும் வரும்)


அடிக்குறிப்புகள்

(1) ஹூலியோ கொர்த்தஸாருக்கான அஞ்சலியில் இந்தப்பயணம் பற்றிக் குறிப்பிடுகிறார் கார்ஸியா-மார்க்வெஸ். கதைசொல்ல வந்த மிருக ஆவியின் கதை என்ற தலைப்பில் என் மொழியாக்கத்தில் இது வெளியானது, கல்குதிரை 12 கார்ஸியா-மார்க்வெஸ் சிறப்பிதழில், 1995.

(2) Cien años de soledad, 1967. அந்த ஆண்டிலேயே செக் மொழியாக்கம் தொடங்கிவிட்டது.

(3) அனுவதிப்பது, அனுவாதம் - recount என்கிற பொருளில்.

(4) கதைசொல்லி - story-teller or narrator என்ற பொருளில். இவர் நாவலின் பரப்பில் செயல்படும் உரைமொழிக்குரல்; ஆசிரியரான கார்ஸியா-மார்க்வெஸோ நாவலில் வரும் "பாத்திரப்படைப்போ" அல்லர்!

இருபதாண்டுகள் முன்பு கோணங்கியின் தொடக்கக்கால சிறுகதைகள் அடங்கிய மதினிமார்கள் கதை (1988) குறித்து உடன் எழுதும்போதே இதை வலியுறுத்தி எழுதியிருக்கிறேன். ஆனால் ஆசிரியர், கதை-எழுத்தில் உருவாவோர் (word-beings) என்ற இருதரப்பையும் கதைசொல்லி எனப் போட்டுக்குழப்பிக்கொள்ளும் போக்கு இன்றுவரை தமிழில் எழுதுவோரிடம் தொடர்கிறது!

எடுத்துக்காட்டாக யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் குறித்து ஜெயமோகன் எழுதியிருக்கிற கட்டுரை - சொல்லிச்சொல்லி எஞ்சியவை. இந்தக் கட்டுரையில், கதைசொல்லி என்று ஓரிடத்தில் ஆசிரியரையும் இன்னோர் இடத்தில் கதையில் வரும் எழுத்துருக்களையும் மூன்றாவது இடத்தில் நாவலின் பரப்பில் செயல்படும் குரலையும் குழப்பி எழுதப்பெற்றிருக்கிறது. இதில் மூன்றாவது இடம் மாத்திரமே சரி.

நாவல்-கலை பற்றி மிலன் குந்தெரா - 1

0 கருத்துகள்:

பதிந்தவை