
என் நினைவு சரியென்றால் - என் வாழ்க்கை ஒருகாலம் விருந்தாய் இருக்க, அதில் திறந்தவை இதயம் பல, பாய்ந்தவை திராட்சை ரஸம் பலவகை ஒவ்வொன்றாய்.
ஒருமாலை அழகை வாரி எடுத்தேன். கசப்பாய் அவளை எண்ணி இகழ்ந்தேன்.
நீதிக்கெதிராய் எடுத்தேன் ஆயுதம்.
தப்பித்து ஓடினேன். துயரே, செறுவே, மாயக்கள்ளி நீவிர்! என் ஏமம் வைத்தேன் உம் காவலில்.
நசை என்னில் உலர வைத்தேன் நானாய், சினத்தில் மூகாத்த மிருகமாய், கம்மெனப் பாய்ந்து, அடக்கி நெரித்துக்கொன்றேன், ஆனந்தம் ஒவ்வொன்றையும்.
கூவியழைத்தேன் கொலைஞரை. அவர்தம் துவக்குப் பிடங்கு பல சவைத்து மாண்டேன். கூவியழைத்தேன் கொள்ளைநோய் பல - மணலில் குருதியில் என் மூச்சுத்திணற வேண்டி. துயரே என் இறை. சேறுபுரண்ட நான் காய்ந்தேன், குற்றம் கவ்விய காற்றில். கோமாளியாய்க் கூத்தாடினேன் பித்தின்மீதே ஆடினேன் ஆட்டம்.
வந்தது வசந்தம். பேதையின் திகிலான கெக்கலிப்பைத் தந்தது என்னிடம்.
இப்போது இறுதியாய்க் கரையவும் நான் தயார்! மீண்டும் ஒருவேளை நான் பசியுற, அந்தப் பழம்விருந்தைத் திறக்க விழைந்தேன்.
அதன் திறவுகோல், கொடையே – படைப்பின் இந்த ஒளிர்வால் நான் கண்டது கனவெனத் தெரிகிறது.
"நீ எப்போதும் கழுதைப்புலியே" என்று அலறியது, ஒருகாலம் கவின்குருக்கு பலதை என் முடியாய்ச் சூடியதொரு கூளி. "அறாத உன் பசி பலதுடன், தன்னலத்துடன், மாபாதகம் ஏழுடன் நாடு நீ மரணத்தை!" எனக்கூவியது.
ஆ! நிரம்பக்கேட்டுவிட்டேன் இவற்றை. அன்புச்சாத்தானே! விசனப்பார்வை வேண்டாமுனக்கு. கோழைச்செயல் சிலதின் இறுதிச் சிறுதருணங்களுக்கென நாம் காத்திருக்கும்போது. எழுத்தாளனில் விவரிப்பு, அறன்வலியுறுத்தல் என்ற திறன்கள் அற்றிருப்பதையே மதிக்கிறாய் நீ. எனவே, இதோ சபிக்கப்பட்டவர்களுக்கான என் புத்தகத்தினின்று பக்கங்கள் சிலதைக் கிழிக்கிறேன் உனக்கென.
6.5.08
நரகத்தில் ஒரு பருவம் - ஆர்தர் ரைம்போ - 1
- Arthur Rimbaud, Jadis, si je me souviens bien..., Une Saison en Enfer, 1873.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"ஒரு மாலை அழகு என் கையில் அமர்ந்தாள். அவள் கசப்பாய் இருக்கக் கண்டேன். அவளை அவமானப் படுத்தினேன்" என்ற ரைம்போவின் வரிகள் ஒருவேளை ஆத்மாநாமுக்கு inspiration-ஆக இருந்திருக்கலாம் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு.
கவனிக்க: நான் ஆத்மாநாம் காப்பியடித்ததாகச் சொல்லவில்லை.
வரிகள் ஏறக்குறைய இவைதாம்:
"கடவுளைப் பார்த்தேன். எதுவும் கேட்கத் தோன்றவில்லை. புன்னகைத்தார். போய்விட்டார்."
சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. ஆத்மாநாம் வரிகள் நான் வாசித்தவைதாம். ஆனால் ரைம்போவைத் தமிழாக்கும்போது உறைக்கவில்லை. அந்த அளவு போதலேரும் ரைம்போவும் புதுக்கவிதைக்குள் நுழைந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது...
Post a Comment