பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

3.5.08

மிஷெல் ஸெர் பற்றி - 2

சமகால ஃப்ரெஞ்சு சிந்தனையாளர் மிஷெல் ஸெர்ரின் ஆக்கங்களில் கலை-தத்துவம்-அறவியல்-அறிவியல் இணையும் புள்ளிகள் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

பத்தாண்டுகள் முன்பு மிஷெல் ஸெர் தம் துணைவியாருடன் சென்னை வந்திருந்த போது இவர் நீண்ட உரையை முதன்முதலாகக் கேட்க முடிந்தது. அதற்கு நானும் எழுத்தாளர் கோணங்கியும் சென்றிருந்தோம்.

அன்று, பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெப்ப-இயக்கவியலை ஓவியக்கலை பின்தொடர்ந்தது பற்றித் துல்லியமாக விவரித்தார் மிஷெல் ஸெர். அக்கால ஆங்கிலேய ஓவியர் ஜே. எம். டபிள்யூ. டர்னரின் ஓவியங்களை அலசிய அவர், தொழிற்புரட்சி கொண்டுவந்த மாற்றங்களைத் தீட்டிய ஓவியர் டர்னர் மேகம், மழை, கடல், ஐஸ், மூடுபனி ஆகியவற்றைக் கிரகித்துக்கொண்டது எவ்வாறு என்பதை விளக்கினார். இவ்வகையில் வெப்ப-இயக்கவியலின் இரண்டாவது விதியை (Second Law of Thermodynamics) ஓவியர் டர்னர் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது மிஷெல் ஸெர்ரின் கண்டுபிடிப்பு. அதாவது இந்த இடத்தில் கலை, அறிவியலைப் பின்தொடர்ந்து செல்கிறது என்பார் மிஷெல் ஸெர்.

அப்போது மிஷெல் ஸெர்ரின் சிந்தனை எனக்குக் கொஞ்சம்தான் பரிச்சயம். ஆனால் அதை ஏற்பதான கூறுகள் ஏற்கனவே என்னுள் இருந்தன. குறிப்பாக 1974 ஆண்டு புத்த பூர்ணிமா (வைகாசி விசாகம்) அன்று, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய அணுசக்தித்துறையினர் வெடித்த அணுகுண்டின் சப்தத்தை இந்திய விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் இசையாகக் கருதினார்கள் எனபேன்! ஆனால், என்னைப்போன்றவர்களோ மாணவப்பருவத்தில் இயற்பியல் படித்தபோது அந்தச்சப்தத்தைக் "கேட்டுக்" கலவரமடைந்தவர்கள். எண்பதுகளின்போது அக்னி ஏவுகணை, போபால் விஷவாயுத் தாக்குதல் ஆகியவற்றை வெகுஜனக்குறியீடுகளாக வாசித்த அனுபவமும் எனக்கிருந்தது.

தவிர ஃபூக்கோவின் நெருங்கிய நண்பராக மிஷெல் ஸெர் குறித்து நான் அறிந்திருந்தேன். சென்னையில் அன்று இவர் நிகழ்த்திய அந்த உரையையும் ஏற்கனவே ஒரு புத்தகக்கட்டுரையாக வாசித்திருந்தேன். அதையொட்டி இவருடைய ஒரு சிறிய நேர்காணலைச் செய்து நான் அப்போது பணியாற்றிய ஆங்கிலச் செய்திநிறுவனத்துக்காக வெளியிட்டேன். அதில் மிஷெல் ஸெர் கூறினார்:

"கலையும் அறிவியலும் தத்துவமும் ஒன்றையொன்று தொடர்வது காலாகாலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. நம் காலத்தில் தான் அறிவியல் முன்னே இருப்பது போன்ற தோற்றத்தைக் காண்கிறோம். உண்மையில் கலை இல்லையேல் அறிவியல் இல்லை!"

இந்தக் கடைசி வாக்கியத்தைத் தலைப்பில் வைத்தே அந்த நேர்காணலை அமைத்திருந்தேன். அதற்குப்பிறகு லண்டன் வாசத்தில் மிஷெல் ஸெர்ரின் புத்தகங்களைத் தேடி வாசிக்க முடிந்தது. சில புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஆக்கப்பட்டிருந்தன, பல ஃப்ரெஞ்சு மொழியில் மாத்திரமே இருந்தன. இவற்றை வாசிக்க வாசிக்க கலை, தத்துவம், விஞ்ஞானம், கணிதம், வரலாறு என துறைகளைச் சார்ந்து சிந்திக்காமல் அவற்றின் எல்லைகளை எளிதாக மீறிச் சிந்திப்பவர் மிஷெல் ஸெர் என்பது உதாரணங்களுடன் கொஞ்சம்கொஞ்சமாகப் புரிந்தது. இவருடைய சிந்தனைக்களத்தின் எல்லைகள் பல நூற்றாண்டுகள் கடந்தது என்பதும் கூடப் புரிந்து, இந்தச் சிந்தனைமுறை மீது ஏற்பட்ட லயிப்பு அடங்கவில்லை இன்னும் எனக்கு!

எடுத்துக்காட்டாக, அறிவியல் மாணவர்களுக்கு, குறிப்பாக வெப்ப-இயக்கவியலின் இரண்டாம் விதியை அறிந்தவர்களுக்குத் தெரியும், அது entropy, அதாவது பிரபஞ்சத்தின் ஒழுங்கீனம் எப்போதுமே அதிகரித்துவருவதைப் பேசும் விதியென்று. ஓவியர் டர்னர் இதைக் கலையில் ஏற்றது ஒரு முக்கிய நிகழ்வு. இதற்கு முன்பான கலை, வெப்ப இயக்கவியலுக்கு முன்பான ஐஸக் ந்யூட்டனின் எந்திர-இயக்கவியலைத்தான் ஏற்றிருந்தது, ந்யூட்டனின் எந்திர-இயக்கவியல், காலத்தில் முன்நோக்கியும் பின்நோக்கியும் இயங்க வல்லது. ஆனால், வெப்ப-இயக்கவியலோ பின்நோக்கிச் செல்ல இயலாதது. இதனாலேயே பிரபஞ்சத்தின் ஒழுங்கீனம் கூடுகிறது.

ஆக, இங்கே கலை அறிவியலை, தொழில்நுட்பத்தைப் பின்தொடர்கிற வரலாற்றைக் காண முடிகிறது. ஆக, தொழிற்புரட்சி கொணர்ந்த மாற்றங்களைக் கிரகித்த கலை, அதே வேளை அறிவியலின், தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பிரச்னைப்பாடுகளையும் உணர்ந்த வரலாறு இதுதான் என நிறுவுகிறார் மிஷெல் ஸெர். இங்கேதான் கலை, அறிவியலை முந்துகிறது.

மிஷெல் ஸெர்ரின் அன்றைய சென்னை உரைக்கு வந்தவர்கள் பலர். தமிழ் எழுத்தாளர்களில் கௌதம சித்தார்த்தன், லட்சுமி மணிவண்ணன் ஆகியோரையும் காண முடிந்தது. இன்னொருவர் வெ. ஸ்ரீராம். சில ஆண்டுகள் முன்பு காலச்சுவடு இதழில் காட்டுப்பன்றியா, நரியா என்ற தலைப்பில் மிஷெல் ஸெர் பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார் ஸ்ரீராம். அதில் மிஷெல் ஸெர், தம்முடைய தலைமுறை இரண்டாம் உலகப்போர், பிறகு இந்தோ-சீன, அல்ஜீரியக் காலனியாதிக்கப்போர்கள் என்று போரின் தலைமுறையாக வளர்ந்தது குறிக்கபபடுகிறது: "என் வாலிபப்பருவம் (பிக்காஸோவின் ஓவியமான) குவர்னிகாவில் தொடங்கியது - ஸ்பானியப் போரின் கொடுமைகளைச் சித்தரிக்கும் பிக்காஸோவின் பிரபல ஓவியமான குவர்னிகாவை இப்போதும் என்னால் பார்க்க முடிவதில்லை – அந்தப் பருவம் (ஹிரோஷிமா) நாகஸாகி (அணுகுண்டுகள்) வரை தொடர்கிறது."

மிஷெல் ஸெர், அறிவியலின் வரலாறு பற்றி ஆராயப் புறப்பட்ட தருணம் முக்கியமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய காலகட்டத்தில் அறிவியலின் கை ஓங்கிவிட்டது என்பதால், humanities எனப்படும் மனித-இயல்களின் முக்கியத்துவம் குறைந்துவிடுகின்றன என்கிறார் மிஷெல் ஸெர். எடுத்துக்காட்டாக, "ஹிரோஷிமா, நாகஸாகியின் (அணுகுண்டுச்) சப்தத்தை அன்றைய இயற்பியல் (physics) எப்படிக் கேட்டது?" என்ற கறாரான வினாவை மிஷெல் ஸெர் முன்வைக்கிறார். இதன் பொருள், நவீன அறிவியலின் வரலாறு போரின் பக்கமாகச் சாய்ந்துவிட்டது என்பதே. இதிலிருந்து இன்றைய அறிவியல் எவ்வாறு மீள்வது என்ற கேள்வி பெரிதாக எழுந்து நிற்கிறது. மிஷெல் ஸெர்ரைப் பொறுத்தவரை, இது இன்னும் தீர்க்கப்படாத ஒரு கேள்வி. இந்த நிலை மாற, கலை-இலக்கியம் மற்றும் அறிவியல் இடையிலான உறவும் விலகலும் வரலாற்றில் எப்படி அமைந்திருக்கிறது என்பதைப் புதிய கோணங்களில் காட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது மிஷெல் ஸெர்ரின் முடிபு.

மிஷெல் ஸெர், தம் சிந்தனை அமைப்பியல்ரீதியானது என்று கூறுகிறார். இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் மொழியியல் அறிஞர் பெர்டினாண்ட் தெ ஸஸ்ஸூர் (Ferdinand de Saussure) கொணர்ந்த அமைப்பியல் என்பதைவிட, அதற்குப் பிறகாக உயர்கணிதம் கொணர்ந்த அமைப்பியல் என்பதே இங்கு சரி என்கிறார் மிஷெல் ஸெர். குறிப்பாக, நிக்கோலா பூர்பாக்கி (Nikola Bourbaki) என்ற கூட்டுப்புனைபெயரில் பல ஃப்ரெஞ்சு கணித நிபுணர்கள் புதிய சிந்தனைமுறையில் உயர்-கணித முறைகளை உருவாக்கினார்கள். ஒருசில காலம் வரை, பூர்பாக்கி என்ற தனிப்பட்ட ஒரு நிபுணர் இருக்கிறார் என்றே கணித உலகம் நம்பிக்கொண்டிருந்தது. இந்தக் கூட்டுப்பெயரில் பல துறைகளில் - அதாவது, கண-இயல் (set theory), உயர்-இயல்கணிதம் (algebraic analysis), இயல்கணித இடவியல் (algebraic topology) உள்ளிட்ட பல துறைகளில் – புதிய பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டன. இதைச் செய்தது பாரீஸ் நகரின் Ecole Normale Supérieure என்ற பிரதான கல்வி-அமைப்பின் பேராசிரியர்கள் சிலரே. உயர்-கணிதவியலில் வந்த இந்த மாற்றத்தை ஆராய்ந்தவர் மிஷெல் ஸெர். உயர்-கணிதவியல் மட்டுமின்றி ஜியோமிதி என்ற பண்டைய கிரேக்கக் கணிதவியலையும் நவீன கால இலக்கிய கர்த்தாக்கள் என அறியப்படும் ழூல்ஸ் வெர்ன் (Jules Verne), எமில் ஸோலா (Emile Zola) ஆகியோரிலிருந்து பண்டைய கிரேக்க எழுத்தாளர் லுக்ரீஷியஸ் வரையும் பல துறைகளின் எல்லைகளை உடைத்து அலசி எழுதுகிறார், மிஷெல் ஸெர்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இவரும் மிஷெல் ஃபூக்கோவும் அறிவியலின் வரலாறு பற்றி ஆராய்ந்த கஸ்த்ன் பாச்சலார்டின் (Gaston Bachelard) மாணவர்கள். பிறகு அறுபதுகளின் பிற்பகுதியில் இருவரும் பாரீஸ் நகரில் ஒன்றாகப் பணியாற்றியவர்களும்கூட. இதே காலகட்டத்தில் ஒப்பிலக்கணம், உயிரியல், அரசியல்-பொருளாதாரம் ஆகியவற்றின் தோற்றம் பற்றி தம்முடைய பொருட்களின் ஒழுங்கு (Les Mots et les Choses) புத்தகத்தில் ஆராய்கிறார் மிஷெல் ஃபூக்கோ. இந்த இருவரின் கண்ணோட்டங்களும் ஆச்சர்யகரமாக ஒருசில இடங்களில் இணைகின்றன.

இன்னொரு விஷயத்துக்காகவும் ஃபூக்கோவை நன்றியுடன் நினைவுகூர்கிறார் மிஷெல் ஸெர் – அதாவது தொன்மங்களை – குறிப்பாக இந்திய-ஐரோப்பியத் தொன்மங்களின் ஒப்பியல்புகளை ஆராய்ந்த ழார் தூமஸில் (Georges Dumezil) என்ற வயதான சிந்தனையாளரை தமக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் ஃபூக்கோ என்கிறார் மிஷெல் ஸெர். தூமஸில்லின் சிந்தனை, பிறகு மிஷெல் ஸெர்ருக்குப் பெரும் எழுச்சிதருவதாக ஆனது (தூமஸில் பற்றித் தனியாக எழுத வேண்டும்). இவ்வகையில், அமைப்பியல்வாதம் தொடங்கிவைத்த போக்கின் பிரபலமான ஒரு முகம் மொழியியல்-மூலமாக, குறிப்பாக க்ளாட் லெவி-ஸ்ட்ராஸின் மானுடவியல் சிந்தனை வழிவந்தது என்றால் இன்னொரு முகம் அறிவியலின் வரலாற்றை எழுதிப்பார்ப்பது மூலமாக – அதாவது ஃபூக்கோ மற்றும் மிஷெல் ஸெர் வழிவந்தது எனலாம்.

மிஷெல் ஸெர்ரின் ஆய்வுகள் பெரும்பாலும் ஹெர்மெஸ் என்ற பண்டைய கிரேக்கக் கடவுளை உருவகமாகக் கொண்டு அமைந்தவை. 1969-ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இருபது ஆண்டுகளில் ஹெர்மஸ் புத்தகத்தின் ஐந்து பகுதிகள் வெளியாகின. ஹெர்மெஸ் என்பவர், பண்டைய கிரேக்கதில் தகவல்-தொடர்பு, வர்த்தகம், போக்குவரத்து ஆகியவற்றின் தொடர்ச்சியை உறுதிசெய்த கடவுள். அதாவது, 1980-களில் தகவல்-தொடர்புப் புரட்சி என்பது உலகை மாற்றும் நிலையில் அதற்கு முன்னரே தத்துவத்தின் வழியாக அதைக் கணித்தும் அதன் பிரச்னைகள அனுமானித்தும் அலசி ஆராய்ந்துமிருக்கிறார் மிஷெல் ஸெர்.

தொடர்பு-நிலை (communication) குறித்த மிஷெல் ஸெர்ரின் கண்ணோட்டம் அலாதியான, சிக்கலான ஒன்று. தொடர்பு என்பதற்கு மூன்று கூறுகள் உண்டு என்பது தொடர்பியல் ஏற்கனவே கண்ட ஒன்று. அதாவது ஓர் அடிப்படைச்செய்தி (message), இந்தச்செய்திக்கான ஊடகம் (message), இந்தச்செய்தியில் ஊடகம் தலையிடுவதால் அதில் வரும் ஒருவித ஓசை/இரைச்சல் (noise) ஆகியவை இவை. ஆக, ஓசை/இரைச்சல் இடையிடுவதால் செய்தி சீர்குலைகிறது. இதையே மாற்றிச் சொன்னால், ஓசை என்பது ஒருவித வடிவச்சீர்குலைவு எனலாம். இந்த ஓசையை விலக்கியே கோட்பாட்டு-வடிவங்கள், பாய்ச்சல்கள் அறிவியலில் உருவாக்கப்படுகின்றன. இப்படி உருவாக்கப்பெறும் வடிவங்களை வைத்து வரலாற்றில் ஜ்யோமிதிக்கணிதம் தொடங்கி இன்றைய உயர்கணித அறிவியல் வரை இப்படித்தான் தம்மைப் படைத்துக்கொள்கின்றன, இதுவே துறை-அறிவியலின் முன்னேற்றமாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது என்கிற மிஷெல் ஸெர், ஆக இந்த ஓசை என்பது அறிவியலின் நிழலாக நிஜ உலகில் தொடர்வது என்கிறார்.

தம்முடைய ஹெர்மெஸ் புத்தகங்களை எழுதிமுடித்த மிஷெல் ஸெர் அடுத்து எழுதிய முக்கியப்புத்தகம், Le Parasite. இது ஃப்ரெஞ்சு மொழியில் இருபொருட்சொல் – ஒட்டுண்ணி என்பதும் ஓசை என்பதும் இதன் பொருள். அதாவது ஓசை/இரைச்சல் என்பது, செய்தி வருகிற ஊடகத்தில் ஒருவித ஒட்டுண்ணியாகச் செயல்படுகிறது. இதைக் களைய முடியாது. இதை வைத்துக்கொண்டுதான் செயல்பட முடியும், ஹெர்மெஸ் என்பதும் இப்படிப்பட்ட தொடர்புக்கான ஊடகம்தான் என்கிறார் மிஷெல் ஸெர்.

தம்முடைய ஹெர்மெஸ் புத்தகங்களின் ஐந்தாம் பகுதியை Le Passage du Nord-Ouest - அதாவது வடமேற்கு-வழி என்று அழைக்கிறார் மிஷெல் ஸெர். அட்லான்டிக், பசிபிக் மாக்கடல்களுக்கு இடையில், அலாஸ்கா பகுதியின் ஊடாக, ஒருவழி தெரிகிறது. பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு ஆர்க்டிக் பகுதியைத்தாண்டி அமெரிக்கக் கண்டங்களுக்கு மனித இனம் பரவிய வழியும் இப்படித்தானே இருந்தது! இவ்வழி ஊடே சில வேளை செல்லலாம், சில வேளை செல்லவும் முடியாமல் போகலாம். இத்தகைய வழிகள் இன்னும் தென்படத்தான் செய்கின்றன. அறிவியலுக்கும் humanities எனப்படும் மனித-இயல்களுக்கும் இடையில் உள்ள வழியும் இத்தகையதே. வரலாற்றின் சில கட்டங்களில் இவற்றைத் தாண்ட முடிகிறது, சிலவேளை தாண்ட முடிவதில்லை. சொல்லப்போனால் இந்த ஊடக வழியே ஓசையைத் தாண்டி செய்தி சிலவேளை போய்ச்சேருகிறது, சிலவேளை ஓசை ஒட்டுண்ணியாகப் பெருகி செய்தியைத் தடுத்துவிடுகிறது. தம்முடைய சிந்தனை, இந்த வழியைத் திறப்பதுதான் என்கிறார் மிஷெல் ஸெர்.

அறிவியலின் கை ஓங்கியிருக்கும் நம்முடைய தகவல்-தொடர்பு யுகத்தில், கலையும் அறிவியலும் மின்னெலென மிஷெல் ஸெர் என்ற வழியின் ஊடே இணங்குவதைக் காணமுடிகிறது. ஆனால் அது எப்போதும் திறந்திருக்கும் வழியல்ல என்ற செய்தியும் ஊடே வருவதைக் காண்கிறோம்.


- திணை இசை சமிக்ஞை, தீராநதி, மே 2008.


0 கருத்துகள்:

பதிந்தவை