பாரீஸ் நகரில் இயங்கும் Collège de France என்ற பிரத்யேக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் 1969-ஆம் ஆண்டு தொடங்கி தம்முடைய வாழ்நாள் இறுதிவரை - அதாவது 1984-ஆம் ஆண்டு வரை - பேராசிரியாரகப் பணியாற்றினார் மிஷெல் ஃபூக்கோ. "சிந்தனை-அமைப்புக்களின் வரலாறு குறித்து ஆராயும் பேராசிரியர்" என அவருடைய பொறுப்பு வர்ணிக்கப்பெற்றது.
Collège de France கல்வி-அமைப்பில் பேராசிரியர்கள், தங்கள் ஆய்வுகளை, ஆண்டுக்கு ஒரு முறை என விரிவுரையாற்ற வேண்டும். வேறு பணி என ஏதுமில்லை. விரிவுரைகள் சில வாரங்கள் வரை செல்லும். அதை யாரும் கேட்கலாம்.
ஆண்டுதோறும் முக்கிய மாணவர்கள் சிலரை வைத்துக்கொண்டு தாம் நடத்திய ஆய்வுகளை, இந்த விரிவுரைகளின் போதே முன்வைத்துவந்தார் ஃபூக்கோ. இந்த விரிவுரைகளைக் கேட்பதற்கென பலரும் திரண்டனர் - இதேபோல Collège de France அமைப்பில் விரிவுரைகளை நிகழ்த்தியவர், ரோலான் பார்த்.
ஃபூக்கோவின் இந்த விரிவுரைகள் கடந்த சில ஆண்டுகளாக ஃப்ரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்களாக வரத்தொடங்கியிருக்கின்றன. இந்த விரிவுரைகளின் வரிசை ஆச்சர்யமான ஒரு செய்தியை நமக்குச் சொல்கிறது - அதாவது, தம்முடைய புதிய சிந்தனைக்கூறுகளை இந்த விரிவுரைகள்வழி உரசிப்பார்த்து அதில் வரும் feedback என்பதைப் பிரமாதமாக உபயோகித்து அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஒரு புத்தகத்தை எழுதிவிடுகிற அசாத்தியப் பணியைச் சாதித்திருக்கிறார் ஃபூக்கோ என்று தெரிகிறது. அதே சமயத்தில் தம்முடைய அடுத்த பரிசோதனையை முன்வைக்கும் களமாக அடுத்த விரிவுரை என இவருடைய பணி சென்றிருக்கிறது.
1970-ஆம் ஆண்டு ஃபூக்கோ நிகழ்த்திய முதல் உரை - L'Ordre du Discours அதாவது சொல்லாடலின் ஒழுங்கு. (இதன் சில பக்கங்களை நேரடியாக ஃப்ரெஞ்சிலிருந்து தமிழில் ஆக்கியிருக்கிறார், வெ. ஸ்ரீராம். சுமார் பத்தாண்டுகள் முன்பு என நினைக்கிறேன். இந்த உரை க்ரியா வெளியீடாக வரவும் இருந்தது. என்ன காரணத்தினாலோ நடக்கவில்லை). இதற்கு அடித்தளமாக அமைந்த ஃபூக்கோவின் L’Archéologie du savoir - அறிவுக்கான தொல்பொருளியல் புத்தகத்தின் சில பகுதிகளை, நான் ஆங்கில வழி தமிழாக்கியிருந்தேன் - பதினெட்டு ஆண்டுகள் முன்பே.
1971-ஆம் ஆண்டு ஃபூக்கோ நிகழ்த்திய உரை - La volonté de savoir - அறிவுக்கான சங்கற்பம். இதன் அடிப்படையில் 1976-ஆம் ஆண்டு வெளியானதே Histoire de la Sexualité - பாலியல்நிலையின் வரலாறு புத்தகத்தின் முதல்பாகம்.
1972, 1973-ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திய உரைகள் முறையே - Théories et institutions pénales - தண்டனை குறித்த கோட்பாடுகள், தண்டனை நிறுவனங்கள் மற்றும் La société punitive - தண்டிக்கும் சமுதாயம். இவற்றின் அடிப்படையில் 1975-ஆம் ஆண்டு வெளியானது Surveillir et punir - கண்காணிப்பதும் தண்டிப்பதும் புத்தகம்.
1974, 1975-ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திய உரைகள் முறையே - Le pouvoir psychiatrique -மனோவியலின் அதிகாரம் மற்றும் Les anormaux - இயல்பு-மீறியவர்கள்/மீறியவை. இவை ஃபூக்கோ ஏற்கனவே எழுதியிருந்த Histoire de la Folie - பைத்தியமும் நாகரீகமும் புத்தகத்தின் சிந்தனையை மறுவரையறை செய்கிற முயற்சி.
1976, 1977, 1978-ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திய உரைகள் முறையே - Il faut défendre la société - சமுதாயத்தைப் பாதுகாக்கும் உறுதி, La gouvernementalité - அரசாங்கத்துவம் மற்றும் Sécurité, territoire et population - பாதுகாப்பு, பிரதேசம், மக்கட்தொகை. ஃபூக்கோ ஏற்கனவே எழுதியிருந்த Histoire de la Sexualité - பாலியல்நிலையின் வரலாறு புத்தகத்தின் முதல் பாகத்தின் முக்கிய நீட்சி இவை எனக் கொள்ளலாம். குறிப்பாக, நவீன அரசு-எந்திரத்தின் உருவாக்கம், அத்துடன் அறிவுத்துறைகளுக்குள்ள உறவு பற்றி ஃபூக்கோ ஆராய்கிறார்.
1979, 1981-ஆம் ஆண்டுகளில் முறையே Naissance de la biopolitique - உயிர்-அரசியலின் தோற்றம் மற்றும் Du gouvernement des vivants - உயிர்வாழ்வோரின் அரசாங்கம் குறித்து என விரிகின்றன ஃபூக்கோவின் உரைகள்.
1980-ஆம் ஆண்டில் சாலை விபத்தில மரணமடைந்த தம் நண்பர் ரோலான் பார்த் குறித்து ஃபூக்கோ உரையாற்றியிருக்கிறார்.
இறுதியாக, 1982-ஆம் ஆண்டில் Subjectivité et vérité - தன்னிலையும் உண்மையும், பிறகு 1983-ஆம் ஆண்டில் L’herméneutique du sujet - தன்னிலையின் வரலாற்றுப்பொருள் கொள்ளல் என நிகழ்த்தப்பட்ட உரைகளும் உண்டு. இவை, பாலியல்நிலையின் வரலாறு புத்தகத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களுக்கு அடித்தளமாக அமைந்தவை. பண்டைய கிரேக்கத்தின் தன்னிலை, உண்மை, பாலியல்நிலை குறித்த ஆய்வுகள் இவை.
தமிழில் எழுதவேண்டியவற்றின் பட்டியலில் ஃபூக்கோவின் விரிவுரை-உத்திகள் பற்றிய கட்டுரையையும் சேர்க்கவேண்டியதுதான்.
உயிர்-எழுத்து இதழில் மூன்று பகுதிகளாக் என் மொழியாக்கத்தில் வந்த கட்டுரை
ஃபூக்கோவும் சையதும் – சந்திப்பும் விவாதமும் - தீராநதியில் வந்த என் கட்டுரை
0 கருத்துகள்:
Post a Comment