திணை இசை சமிக்ஞை என்ற இந்த என் பதிவின் பின்னூட்டங்கள் கடந்த ஒரு மாதமாய் அனுமதிக்கப்பட்டு வருகின்றன்.
இதை ஒரு பரிசோதனை முயற்சியாகவே மேற்கொண்டேன். இதனால் பிரச்னை எழவில்லை என்பதால் பின்னூட்டங்கள் இனியும் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.
"பிரபல எழுத்தாளர்கள்" பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை ஏன் என்பது பற்றி வெங்கட் தொடங்கிய பதிவில் நடந்த விவாதத்தை அடுத்து, அவர் எழுப்பிய கேள்விகளை சவாலாக ஏற்று, இந்தப் பரிசோதனையைத் தொடங்கினேன்.
இந்த ஒரு மாதத்தில், மட்டுறுத்தல் என்பதைப் பயன்படுத்தி நான்கு பின்னூட்டங்களை மட்டுமே நிராகரிக்க வேண்டியிருந்தது. அதில் வருத்தமுண்டு. நான்குமே பெயரற்ற நண்பர்களிடமிருந்து வந்தவை. அவற்றில் மூன்று ஆங்கிலத்தில் இருந்தன; இரண்டு நல்ல கருத்துள்ளவை, தமிழில் எழுதியிருந்தால் நிச்சயம் வெளியாகியிருக்கும், எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன், பதிலில்லை. ஆக, நிராகரித்தவை இரண்டே. காரணம், எழுதியோர்ககுத் தெரியும்.
இந்தப் பதிவைப் பொறுத்தவரை மட்டுறுத்தல் என்பது இப்போதைக்குத் தொடரும். ஒருகட்டத்தில் அதுவும் நீக்கப்படலாம்.
பிப்ரவரி ஆறாம் நாள் தமிழில் பதிவுகள் எழுதத்தொடங்கி மூன்று மாதங்கள் ஆகப்போகின்றன். கடந்த 88 நாட்களில் 88 பதிவுகளை எழுதியிருக்கிறேன். ஆக, நாளுக்கு ஒரு பதிவு என்ற விகிதம் தொடர்கிறது. பல பணிகளுக்கிடையில் இப்படி அயராமல் தினமும் எழுதுவதில் எனக்கே ஆச்சர்யம்.
என் முந்தைய ஆக்கங்களில் நான்கை மாத்திரமே இந்தப்பதிவில் வாசிக்க முடியும். பிறர் எழுதியது ஒரேமுறைதான் மறுபதிவாக வந்திருக்கிறது. ஆக, இணையத்துக்காகப் பிரத்யேகமாக நிறைய எழுதுவது தொடர்கிறது - அரசியல், இலக்கியம், அறிவியல், தத்துவம், இசை, ஊடகம் என துறைச்சட்டகங்களை மீறி எழுதுகிறேன். கவிதையாககங்கள் நிறைய - குறிப்பாக ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து.
கடந்த 66 நாட்களில் இநத்பபதிவுகளை 2,500 பேருக்கு மேல் வாசித்திருக்கிறீர்கள், வாசகருக்கு தலா மூன்று பக்கங்களுக்கு மேல் என 8,100 முறை இந்தப்பக்கங்கள் காணப்பெற்றிருக்கின்றன. ஆக, பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கும் அது முன்பு மூடியிருந்த காலகட்டத்துக்கும் வாசிப்பு-அளவு என்ற வகையில், பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை! அதே நேரம், எந்தப்பதிவுக்குப் பின்னூட்டம் வரும் அல்லது வராது, வந்தால் அதில் என்ன இருக்கலாம் என்பதைக் கணிக்காமல் எழுதத்தொடங்குவதே நலம்.
பதிவு எழுதும் மற்ற "பிரபல எழுத்தாளர்களிடம்" பின்னூட்டங்களை அனுமதிக்கச் சொல்வீர்களா என்று பொய்யன் கேட்டிருந்தார். இந்த என் பரிசோதனையின் நோக்கில் பார்த்தால் அவர்களும் செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன். அழுத்தம் கூடினால் காலப்போக்கில் நடக்கும்.
இந்த மூன்று மாதங்களாக என் பதிவை வாசித்துவருவோர்க்கும் பின்னூட்டம் எழுதுவோருக்கும் தமிழில் எழுதும் யாருக்கும் நான் இன்னும் இணைப்புத்தரவில்லை என்றாலும் என் தளத்துக்கு இணைப்புக் கொடுத்திருப்போருக்கும் நன்றி.
நான் அவ்வப்போது வாசிக்கும் தமிழ்த்தளங்கள் பற்றித் தனியாக எழுதுகிறேன்.
பகுப்பு -ஊடகம்
பதிவுகளும் நானும் இதுவரை - 3
பதிவுகளும் நானும் இதுவரை - 2
பதிவுகளும் நானும் இதுவரை - 1
4 கருத்துகள்:
ஒருமாதகால சோதனை முயற்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். தினமும் எழதப்படும் உங்கள் பதிவுகள் உங்களது பல்துறை அறிவை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு என்பதுடன் பதிவுலகில் இதுபோன்ற பலதுறை கருத்தாக்கங்கள் வருவது வாசக பரப்பில் ஒரு ஆழத்தை ஏற்படுத்தும்.
பின்னூட்டம் தொடர்வது அறிந்து மகிழ்ச்சி. உரையாடல்தான் எதையுமே முன்னகர்த்தும் ஆக்க சக்தி.
லண்டன் டேப்லாய்ட் பத்திரிகைகளைப் பற்றி நீங்கள் எழுத வேண்டும் என விரும்புகிறேன். அதன் வாசக ஆதரவு, எதிர்வினை, மனோபாவம் அறிய ஆவல். ஏனென்றால் இங்கு தமிழகத்தில் எல்லா இதழ்களும், நாளிதழ்களும் டேப்லாய்ட் பரபரப்பு, கிசுகிசுக்களிலே மூழ்கித் திளைக்கின்றன. அதன் உளவியலை அறிந்துகொள்ள முடியுமா என்பதற்காகவே.
பின்னூட்டத்தை அனுமதிக்கும் நேர்மைக்கும், தரமான எழுத்தை இணையத்தில் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதற்கும் எனது பாராட்டுக்கள். உங்கள் எழுத்துக்கு பின்னூட்டம் இடும் அளவுக்கு வாசிப்பனுபவம் எனக்கு இல்லை. தொடர்ந்து உங்கள் பக்கங்களை வாசிப்பது மட்டுமே இப்போதைக்கு என்னால் முடிகிறது.
வாழ்த்துக்கள்.
ஜமாலன், நன்றி.
பொய்யன், பார்க்கலாம்.
முருகேஷ், நான் எழுதுவது பற்றிக் கவலைப்படாமல் எழுதலாம்!
Post a Comment