பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

17.4.08

மிஷெல் ஸெர் கட்டுரை - 1

"வேகத்துக்கு செய்மதி, சக்திக்கு அணுகுண்டு, வெளிக்கு இணையம், காலத்துக்கு அணுக்கழிவு என இவை நான்கும் world-objects, அதாவது உலகுதழுவும் பொருட்கள் என்க."

- மிஷெல் ஸெர்


இந்தக் கட்டுரையைப் படிக்கும் முன்பாக, உலகுதழுவும் மேற்கண்ட நம்காலத்திய பொருட்கள் தெற்காசிய-, இந்திய-, தமிழ்ப்பரப்புக்களில் எப்படி இயங்குகின்றன என்பதை ஒருமுறை நினைத்துக்கொள்வோம்.

இன்று செய்கோள்கள்/மதிகள் ஏராளம். அடுத்த மதியை விடப்போவது யார், எப்போது என்பது செய்தியல்ல, தவறி விழுந்தால் செய்தியதிர்ச்சி; பேரழிவு என்பது ஒருபுறமும் தேசப்பெருமை என்பது மறுபுறமுமாகப் பரவும் அணுகுண்டின் அழிவுமகிழ்ச்சி; கழிவெனும் கதிரியக்க எதிர்காலக் கவலை தவிர்த்த அணுசக்தி என்ற கடனட்டைப் புளகாங்கிதம்; இணையப்பரப்பில் இயங்கும் virtual எசப்பாட்டு அல்லது இரைச்சல் (நன்றி - வெங்கட்) எனப்போய்க்கொண்டிருக்கிறது பலருக்கு.

இந்த இருபத்தோராவது நூற்றாண்டின் – அதாவது மனிதம்-தாண்டிய கலாச்சாரம் குறித்த காலகட்டத்தின் - முக்கிய சிந்தனையாளர் மிஷெல் ஸெர் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சிந்தனைப்படைப்பின் விளிம்பில் நின்றவாறே தீவிர, புவி-தழுவும் தளத்தில் எழுதி, விவாதிப்பவர் மிஷெல் ஸெர். தம்முடைய பல புத்தகங்களில் இத்தகைய புவி-தழுவும் பொருட்களின் வரலாற்றை (history of world-objects) எழுதத் தொடங்கியவர் மிஷெல் ஸெர் எனலாம்.

இரண்டு ஆண்டுகள் முன்பு கனடா நாட்டில் இவர் ஆற்றிய ஓர் உரை ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து இங்கே பகுதிபகுதியாகத் தமிழாக்கப்படுகிறது. C-Theory என்ற இணையத் தத்துவ இதழில் முதலில் வெளியானது (1). 1990-ஆம் ஆண்டு வெளியான தம்முடைய இயற்கை-ஒப்பந்தம் என்ற புத்தகத்தின் (2) மீள்பார்வை என்று இந்தக் கட்டுரையைக் கூறுகிறார்.

இனி மேற்கொண்டு படிக்கலாம். குறிப்பாக, விஞ்ஞானிகள், சட்டவியல் நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என யாரும் பின்வரும் கட்டுரையைப் படிக்கலாம்!


இயற்கை-ஒப்பந்தம் புத்தகம் - ஒரு மீள்பார்வை

1. Ecology:

Ecology - அதாவது சூழல்/சூழலியல். Écologie என்ற இந்தச்சொல் ஃப்ரெஞ்சு மொழியில் புழக்கத்துக்கு வந்தது 1874-ஆம் ஆண்டு வாக்கில். இதற்கு எட்டாண்டுகள் முன்பு oekologie என ஜெர்மன் மொழியில் பாவித்தவர் இயற்கை-விஞ்ஞானி எர்னெஸ்ட் ஹாக்கல் என்று தெரிகிறது. ஆனால் 1852-ஆம் ஆண்டே, அமெரிக்க எழுத்தாளர்-சிந்தனையாளர் ஹென்றி டேவிட் தோரோ இந்தச் சொல்லைக் கண்டறிந்தார் என்று தோன்றுகிறது.

Ecology என்ற சொல்லுக்குப் பொருள் இரண்டு:

1. Ecology என்பது உயிரினங்கள் சிலதின் தொகுதிகள் அவற்றின் சூழலுடன் இடையிடுவம் செயல்பாட்டை ஆராயத் தலைப்படும் விஞ்ஞானத்துறை. ஃப்ரான்ஸ் நாட்டில் இது வென்டூ மலைப்பகுதியின் (Mount Ventoux) ஒட்டுமொத்தமான ஆய்வுடன் தொடங்கியது எனலாம். அதே காலகட்டத்தில் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தின் பக்கமுள்ள ஏரிகளின் ஆய்வுடன் வளர்ந்தது என்ற துறை. அதாவது, உயிரினங்கள் மற்றும் அஃறிணைப்பொருட்கள் இணைகிற முழுமையை ஆராயப்புகுந்த இந்தப் புதியதுறை, ஏற்கனவே செயல்பட்ட மரபான துறைகள் மற்றும் அண்மைக்காலத் துறைகள், கணிதம் (அதாவது, வகையீட்டுச் சமன்பாடுக் கணிதம்), வெப்ப-இயக்கவியல், மூலக்கூற்று-உயிரியல் போன்றவற்றை இணைத்து இயங்க முயல்கிறது.

2. சுற்றுச்சூழலைப் பல்வேறு வழிகளில் பாதுகாக்க முற்படும் மனிதர்/கள் குழு/க்களுக்கேற்றவாறு மாறுபடும் சர்ச்சைக்குரிய அரசியல்-சித்தாந்தமும் Ecology என்றே அழைக்கப்படுகிறது.

சட்டவியலின் வரலாறு மற்றும் தத்துவம்

எண்பதுகளின் எழுதப்பெற்று 1990-ஆம் ஆண்டு வெளியான என் இயற்கை-ஒப்பந்தம் புத்தகத்தில் சூழலியல் என்ற சொல் ஒருமுறைகூட இடம்பெறவில்லை! இதற்குக் காரணம் என்ன? என் புத்தகம், சட்டவியலின் வரலாறு மற்றும் தத்துவம் பற்றிப் பேசுவதுதான் காரணம். இன்னும் குறிப்பாக, "தன்னிலை" என்ற நிலையை எய்த யாருக்கு உரிமை இருக்கிறது என்பதே என் புத்தகத்தின் கேள்வி.

சட்ட நடவடிக்கையொன்றை முன்னெடுக்கிற, அதற்காக வாதிடுகிற உரிமையைப் பெற்றிருந்தவர்கள், மேற்கத்திய உலகின் உயர் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த வயதுவந்த ஆண்கள் மாத்திரமே - அதாவது, பண்டைய கிரேக்க, ரோமாபுரி அரசுகளின் குடிமகன் அந்தஸ்து பெற்றவர்கள், பிரபுக்கள், பூர்ஷ்வா வர்க்கத்தினர் ஆகியோர். அடிமைகள், அந்நிய நாட்டவர், பெண்கள், சிறார், வறியவர், கதியற்றவர் போன்றவர்க்கு இந்த உரிமை இருக்கவில்லை. வரலாற்றுப்போக்கில் கட்டம்கட்டமாக நிகழ்ந்த விடுதலையின் பேரில், இவர்களுக்கெல்லாம் சட்டரீதியில் "தன்னிலைகள்" ஆகிற இந்த உரிமை கிடைத்தது. அதாவது, சட்டத்தின் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பார்வையில் இவர்கள் "வயதுவந்தோராகக்" கருதப்படுவது நிகழ்ந்தது மெதுவாகவே எனலாம்.

என்னைப் பொறுத்தவரை, எல்லோருக்கும் வாக்குரிமை பற்றி பள்ளியிலே எனக்குக் கற்பிக்கப்பட்டது என்றாலும் 1944-ஆம் ஆண்டில்தான் என் நாட்டின் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது என்பதைக் கூற வெட்கப்படுகிறேன். பெண்ணொருவர் வங்கியில் கணக்கு வைக்கக்கூட கணவர் கையொப்பமிட்டு ஒப்புதல் தரவேண்டிய நிலைமை இருந்தது.

1789-ஆம் ஆண்டு ஃப்ரெஞ்சுப்புரட்சியை ஒட்டி வெளியான மனித உரிமை, குடியுரிமைப் பிரகடனத்துடன் இந்த வரலாறு முடிவுக்கு வந்திருக்க வேண்டும் - குறைந்த பட்சம் கோட்பாட்டுரீதியாக முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஒருவழியாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரகடனத்துடன் இந்தக் கோட்பாட்டுரீதியான மாற்றம் உணரப்பட்டது. ஆக, இன்று மனிதத்தன்னிலைகள் அனைவரும் சட்டரீதியில் தன்னிலைகளாக உணரப்பட்டாக வேண்டும்.

இயற்கை-ஒப்பந்தம் என்ற என் புத்தகத்தில் இதைத் தாண்டி ஒரு வாதத்தை முன்வைத்திருக்கிறேன். - அதாவது இந்தப் பிரகடனம் பொதுப்படையாக இன்னும் ஆகவில்லை, ஆக வேண்டுமென்றால் இயற்கையின் அத்தனை உயிரினங்கள், அஃறிணைப்பொருட்களும் தன்னிலைகளாக சட்டரீதியாக ஏற்கப்பட்டாக வேண்டும் என்கிறேன்.

அப்படியானால், இயற்கையின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் யார் கையொப்பமிடுவது, அதாவது இயற்கையின் பிரதிநிதியாக யாரை, எப்படி ஏற்பது என்ற கேள்வி வருகிறது. அப்படி ஒப்பமிட இயற்கைக்குக் கையென்று ஒன்றுமில்லையே, அந்த நோக்கத்துக்கான புரிதலும் இல்லையே என்பது என் புத்தகம் மீது வைக்கப்பெற்ற முக்கிய விமர்சனம், எதிர்ப்பு.

இயற்கையை ஒரு நபராகக் கருதும் அளவுக்குப் பித்தமில்லை எனக்கு. முன்னோரின் ஆவிகள் உலவுவது இயற்கையின் வடிவில் என்று கருதும் மரபும் எனதல்ல!

இப்போது என் புத்தகம் மீது வைக்கப்படும் இதே விமர்சனம், ஃப்ரெஞ்சுப் புரட்சிக்காலத்துக்கு முற்பட்ட ழான்-ழாக் ரூஸ்ஸோவின் சமுதாய-ஒப்பந்தம் என்ற புத்தகத்தின் (3) மீதும் வைக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட என்னால் முடியும். அதாவது, சமுதாய-ஒப்பந்தம் என்ற அந்த ஒப்பந்தத்தில், நாள்-இடம் குறித்த ஒரு சடங்கில் வைத்து யாரும் கையொப்பமிடவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததான ஆவணமும் வரலாற்றில் இல்லை! ரூஸ்ஸோ எடுத்தாண்ட சமுதாயத்தின் பொது-சங்கற்பம் அல்லது பொது விருப்ப-உறுதி (General Will) என்பதன் சார்பிலும் அன்று கையொப்பமிட யாரும் இருந்திருக்கவில்லைதான். ஆக, இன்று நான் கூறும் இயற்கை-ஒப்பந்தம் போலத்தான் அன்றைய சமுதாய-ஒப்பந்தமும்!

எனவே இந்த ஒப்பந்தங்கள் முன்நிபந்தனைகளாகக் கருதப்பட வேண்டியிருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட முறைகளின்படி நாம் கூட்டாக வாழ்கிறோம் என்றால், இந்தச் சமுதாய- ஒப்பந்ததத்தில் நாம் கையொப்பமிட்டது போலவே அனைத்தும் நடக்கிறது. இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் சில உயிரினங்களைக் காக்க நாம் முற்படுகிறோமென்றால், அவற்றின் வாழ்வுரிமையை அங்கீகரிக்கிறோம் என்று பொருள்; சில இடங்களில் செயலளவிலும் பல இடங்களில் தோற்ற அளவிலும் இது சாத்தியமாகியிருக்கிறது.

ப்ரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்தை எடுத்துக்கொண்டால், அவர்கள் வங்கப்பகுதியில் புலி-இனம் அழிவின் விளிம்புக்குச் செல்கிறவரை, அதை வேட்டையாடிக் கொன்றார்கள். ஆக, புலிகளின் வாழ்வுரிமை என்பது அந்த இன-அழிவு ஏற்படும்வரை அங்கீகரிக்கப்படவேயில்லை. இப்போதோ, குறிப்பிட்ட ஒரு வனப்பகுதியைப் பாதுகாக்க் வேண்டும், ஒரு சதுப்புநிலப்பகுதியைக காக்க வேண்டும், அதை மாசுபடுத்துவோரை எதிர்க்க வேண்டும் ஆகிய காரணங்களை முன்வைத்து வழக்குகள் போடப்படுகின்றன. இந்த வழக்குகள் சாத்தியமாகிற பட்சத்தில் புலி-இனம், வனம், சதுப்புநிலம் போன்றவை சட்டத்தன்னிலைகளாக அங்கீகரிக்கப்படுகின்றன - சொல்லப்போனால், இந்த மறைமுக அங்கீகாரம் இருப்பதால்தான் வழக்குகளே சாத்தியமாகின்றன.

ஆக, நம்முடைய இந்த செயல்பாடுகளை நோக்கும்போது - குறிப்பாக சூழல்கள் பல அழிந்துவிடலாம் எனபதைக் கருத்தில் கொண்டு நாம் செயல்படுவதைக் கவனிக்கும்போது - இயற்கை என்பதே கொஞ்சம்கொஞ்சமாக் ஒரு சட்டத்தன்னிலையாக மாறிவருவதை முன்நிபந்தனையாக ஏற்றிருக்கிறோம் என்பது தெரியும்.

அடிக்குறிப்புகள்

1. Michel Serres, Revisiter le Contrat Naturel, paper presenté à l'Institute des Humanities de l'université Simon Fraserm Vancouver, Canada, 4 mai 2006.
2. Michel Serres, Le Contrat Naturel, Paris, 1990.
3. Jean-Jacques Rousseau, Du Contrat Social, Principes du droit politique, 1762.


(இன்னும் வரும்)

0 கருத்துகள்:

பதிந்தவை